being created

சிற்றிலக்கியங்கள்

From Tamil Wiki

சிற்றிலக்கியங்கள் : (பிரபந்தங்கள்) தமிழில் பொயு சங்க காலத்திலேயே தோன்றி படிப்படியாக வளர்ந்து ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் தனி வடிவமாக இலக்கணம் அமைக்கப்பட்ட ஓர் இலக்கிய ம்வகை. வடிவ அடிப்படையில் அடையாளங்காணப்படும் பலவகையான நூல்களின் தொகுப்புப் பெயரே சிற்றிலக்கியமாகும். அந்த இலக்கணம் முழுமையானதோ, திட்டவட்டமானதோ அல்ல. காலந்தோறும் அது வளர்ந்து மாற்றமடைகிறது. பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள், புராணங்கள் ஆகியவை அல்லாத சிறியவகை நூல்களை இவை குறிக்கின்றன. இவற்றுக்கான இலக்கணங்களை குறிக்கும் நூல்கள் பாட்டியல் என்று கூறப்படுகின்றன. அவற்றில் பழைய பாட்டியல் நூல் பன்னிரு பாட்டியல். அது முந்தைய பாட்டியல் நூல்களில் இரு உருவாக்கப்பட்ட தொகுப்பு

சிற்றிலக்கியம் எனும் சொல்

சிற்றிலக்கியம் என்னும் பெயர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவானது. அதற்கு முன்பிருந்த பெயர் பிரபந்தங்கள். மு.அருணாச்சலம் ’பிரபந்தம் என்ற சொல் வடமொழி. செம்மையாக்கப்பட்டது என்பது இதன் பொருள்.இக்காலத்தில் இதைச் சிற்றிலக்கியம் என்று சொல்கிறோம். காப்பியங்களை பேரிலக்கியங்கள் என்று சொல்லி இதனால் பிரபந்தத்தை சிற்றிலக்கியம் என்று சொல்கின்ற மரபு புதிதாகப் படைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.’

சிற்றிலக்கிய இலக்கணம்

சிற்றிலக்கியங்களை வகைப்படுத்தி இலக்கணம் வகுக்கும் நூல்கள் பல உள்ளன. அவை பொதுவாக பாட்டியல் நூல்கள் எனப்படுகின்றன. பன்னிரு பாட்டியல் அவற்றில் தொன்மையானது. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இலக்கண நூல்கள் வந்துகொண்டிருந்தன. இவை பொதுவாக ஒவ்வொரு நூல்களின் அமைப்பையும் வரையறை செய்கின்றன. பிள்ளைத்தமிழ் தான் பெரும்பாலானவற்றில் முதலில் சொல்லப்படுகிறது. கலம்பகமும் தெளிவான இலக்கண வடிவமைப்பு கொண்டது. உலா, தூது, மாலை, அந்தாதி போன்ற பிறவகைகள் பொதுவான இலக்கண வரையறை கொண்டவை. சிற்றிலக்கியங்கள் அனைத்துக்கும் பொதுவானதாக ஒரு வரையறை இல்லை. இன்று கிடைக்கும் நூல்களைக் கொண்டு அவற்றை கீழ்க்கண்டவாறு வகுக்கலாம்

  • சிற்றிலக்கியங்கள் குறிப்பிடத்தக்க நூலமைப்பு, பேசு பொருள் கொண்டவையாக இருக்கும். உதாரணமாக பிள்ளைத் தமிழ் பாட்டுடைத்தலைவனை குழந்தையாக உருவகித்து பாடுவது. பத்து பருவங்கள் கொண்டது.
  • சிற்றிலக்கியங்கள் கதைசொல்லும் இயல்பு கொண்டவை அல்ல. ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அமைந்த தனிப்பாடல்களின் தொகுதிகள் அவை. உதாரணம் உலா என்னும் வடிவம் பாட்டுடைத் தலைவனின் ஊர்க்கோலம் கண்டு வெவ்வேறு பெண்கள் கொள்ளும் வியப்பு, காதல் முதலிய மெய்ப்பாடுகளை விவரிப்பவை
  • சிற்றிலக்கியங்கள் காப்பியங்களைப் போல அடிப்படையான தத்துவப்பார்வையையோ அறநோக்கையோ முன்வைப்பவை அல்ல. உதாரணம், சிலப்பதிகாரம் அந்நூலின் பேசுபொருள் என ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்     ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்’ அந்நூல் வலியுறுத்தும் கருத்து என்கிறது. அப்படி ஒரு மையத்தரிசனம் சொல்லப்படாவிடினும் பெருநூல்களில் இருக்கும். சிற்றிலக்கியங்களில் அப்படி ஒரு தத்துவமோ மெய்யியல் வெளிப்பாடோ இருக்காது
  • காப்பியங்கள் அறம் பொருள் இன்பம் வீடு என நான்கு மானுடநிலைகளைச் சொல்லுவது, ஐந்து நிலங்களை விவரிப்பது, நகரங்கள் ஆறுகள் போர்கள் முதலியவற்றை விவரிப்பது என ஒரு தொகுப்புத்தன்மை கொண்டிருக்கும். சிற்றிலக்கியங்களில் அவை இருப்பதில்லை.

சிற்றிலக்கிய எண்ணிக்கை

பிரபந்தங்கள் 96 என்பது பிற்காலத்துக் கணக்கு. ’தொண்ணூற்றாறு கோல பிரபந்தங்கள் கொண்ட பிரான்’ என படிக்காசுப்புலவர் தன்னை ஆதரித்த சிவந்தெழுந்த பல்லவராயன் என்னும் சிற்றரசனைப்பற்றி பொயு 1686 ல் பாடிய உலாவில் குறிப்பிட்டிருப்பதை உ.வே.சாமிநாதய்யர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் அதற்கு முந்தைய சிற்றிலக்கிய இலக்கணங்களை வகுக்கும் தொன்மையான பாட்டியல் நூல்களில் அவ்வெண்ணிக்கை இல்லை என மு.அருணாசலம் சொல்கிறார். மிகப்பழைய பாட்டியல் நூலான பன்னிரு பாட்டியலில் சொல்லப்படும் நூல்வகை 81 தான். பின்னர் வந்த பாட்டியல்நூல்கள் சொல்லும் நூல்வகைகள் பின்னர் உருவானவை.

வீரமாமுனிவர் எழுதிய சதுரகராதி (பொயு 1732) யில்தான் 96 பிரபந்தங்களின் எண்ணிக்கையும் பட்டியலும் வருகிறது. ஆனால் சதுரகராதி சொல்லும் சில பிரபந்த வகைகள் பிற்காலத்தைய பாட்டியல் நூல்களில் இல்லை. அவற்றில் வேறு நூல்வகைகள் குறிப்பிடப்படுகின்றன.

பிள்ளைக் கவி முதல் புராணம் ஈறாக

தொண்ணூற்றாறெனும் தொகையதான

முற்பகரியல்பு முன்னுற கிளர்க்கும்

பிரபந்த மரபியல்

என்று 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனப்படும் பிரபந்த மரபியல் 96 என்னும் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது. இந்நூல் முழுமையும் சிதைந்த நிலையில் கிடைக்கின்றது

96 என்ற எண் சாத்திரங்களின் எண்ணிக்கையாக பொதுவாகச் சொல்லப்பட்டு வந்தது என்று மு.அருணாசலம் சொல்கிறார். மணிமேகலையில் பாசண்ட சாத்தன் “பண்ணாற் திறத்திற் பழுதின்றி மேம்பட்ட தொண்ணூற்றாறு வகை கோவையும் வல்லவன்” என்று சொல்கிறான். 96 என்னும் எண் முக்கியமாதலால் எழுதப்பட்ட எல்லாவகை பாடல் வகைகளையும் இணைத்து அந்த பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது மு.அருணாச்சலம் கூற்று

சிற்றிலக்கியங்களின் காலம்

சங்க காலம்

சிற்றிலக்கியம் என பிற்காலகட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட இலக்கிய வகைமையின் வடிவங்கள் சங்க காலத்திலேயே தோன்றிவிட்டன. சங்க இலக்கியத்தை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப் பிரிப்பதுண்டு. இவற்றுள், பத்துப்பாட்டில் 10 நூல்கள் உள்ளன. அவற்றுள் 5 நூல்கள் ஆற்றுப்படை என்ற சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தவை. ஒரு வள்ளலை நோக்கி செல்லும்படி புலவன் பிற புலவர்களை அழைப்பது ஆற்றுப்படை என்னும் வடிவம். சங்க காலத்துப் பாடல்கள் தனிப்பாடல்களே. பின்னாளில் அவை தொகுக்கப்பட்டன. ஆற்றுப்படை நூல்கள் சங்க காலத்தின் இறுதியில் தோன்றியவை. இவை தொடர்செய்யுள்கள். காவியம் என்பதன் தொடக்க கால வடிவங்கள். இவற்றுக்கு நிலையான ஒரு வடிவம் உள்ளது. இதுவே சிற்றிலக்கியம் என பின்னர் வளர்ந்த வடிவமுறை.

சங்கம் மருவிய காலம்

சங்கம் மருவிய காலத்து நூல்களின் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கில் மேலும் சில சிறு நூல்வடிவங்கள் காணப்படுகின்றன. நாநூறு,நாற்பது என நூல்களை தொகுப்பது சமணர்களின் வழிமுறை. அவ்வகையில் அவர்களால் பொதுவான பேசுமுறை, பொதுவான கருத்துநிலை ஆகியவற்றுடன் நிலையான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்ட நூல்கள் இவை

பக்தி காலகட்டம்

பக்தி இலக்கியக் காலத்தில் நாயன்மார்கள் இயற்றிய திருமுறைகள், பன்னிரு ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றுள் பல்வேறு சிற்றிலக்கியங்கள் காணப்படுகின்றன.

சிற்றிலக்கியக் காலம்

பல்வேறு சிற்றிலக்கிய வகைகள் உருவாகிக்கொண்டே இருந்தாலும் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை சிற்றிலக்கிய வகைகள் மேலோங்கி நின்றன. இக்காலத்தைச் சிற்றிலக்கியக் காலம் என்று அழைக்கின்றனர்.

சிற்றிலக்கிய வகைகள்

  1. அகப்பொருட்கோவை
  2. அங்கமாலை
  3. அட்டமங்கலம்
  4. அரசன்விருத்தம்
  5. அலங்காரபஞ்சகம்
  6. ஆற்றுப்படை
  7. இணைமணி மாலை
  8. இயன்மொழி வாழ்த்து
  9. இரட்டைமணிமாலை
  10. இருபா இருபது (சிற்றிலக்கிய வகை)
  11. உற்பவமாலை
  12. உலா (இலக்கியம்)
  13. உலாமடல்
  14. உழத்திப்பாட்டு
  15. உழிஞைமாலை (பாட்டியல்)
  16. ஊசல்
  17. ஊரின்னிசை
  18. ஊர் நேரிசை
  19. ஊர் வெண்பா
  20. எண்செய்யுள்
  21. ஐந்திணைச் செய்யுள்
  22. ஒருபா ஒருபது
  23. ஒலியந்தாதி
  24. கடைநிலை
  25. கண்படைநிலை
  26. கலம்பகம் (இலக்கியம்)
  27. காஞ்சிமாலை (பாட்டியல்)
  28. காப்புமாலை
  29. குறத்திப்பாட்டு
  30. குழமகன் (பாட்டியல்)
  31. கேசாதிபாதம்
  32. கைக்கிளை (சிற்றிலக்கியம்)
  33. கையறுநிலை
  34. சதகம்
  35. சாதகம்
  36. சின்னப்பூ
  37. சிறுகாப்பியம்
  38. செருக்களவஞ்சி
  39. செவியறிவுறூஉ
  40. தசாங்கத்தயல்
  41. தசாங்கப்பத்து
  42. தண்டகமாலை
  43. தாண்டகம்
  44. தானைமாலை
  45. தாரகைமாலை
  46. திருவெழுகூற்றிருக்கை
  47. தும்பைமாலை (பாட்டியல்)
  48. துயிலெடை நிலை
  49. தூது (பாட்டியல்)
  50. தொகைநிலைச் செய்யுள்
  51. நயனப்பத்து
  52. நவமணிமாலை
  53. நானாற்பது (பாட்டியல்)
  54. நான்மணிமாலை
  55. நாமமாலை
  56. நாழிகைவெண்பா
  57. நூற்றந்தாதி
  58. நொச்சிமாலை (பாட்டியல்)
  59. பதிகம் (சிற்றிலக்கியம்)
  60. பதிற்றந்தாதி
  61. பன்மணிமாலை
  62. பரணி
  63. பல்சந்தமாலை
  64. பாதாதிகேசம்
  65. பிள்ளைத்தமிழ்
  66. புகழ்ச்சி மாலை
  67. புறநிலை
  68. புறநிலைவாழ்த்து
  69. பெயரின்னிசை
  70. பெயர் நேரிசை
  71. பெருங்காப்பியம்
  72. பெருமகிழ்ச்சிமாலை
  73. பெருமங்கலம்
  74. போர்க்கெழுவஞ்சி
  75. மங்கலவள்ளை
  76. மணி மாலை
  77. முதுகாஞ்சி
  78. மும்மணிக்கோவை
  79. மும்மணிமாலை
  80. முலைப்பத்து
  81. மெய்க்கீர்த்திமாலை
  82. வசந்தமாலை
  83. வரலாற்று வஞ்சி
  84. வருக்கக் கோவை
  85. வருக்கமாலை
  86. வளமடல்
  87. வாகைமாலை (பாட்டியல்)
  88. வாதோரணமஞ்சரி
  89. வாயுறைவாழ்த்து
  90. விருத்தம்
  91. விளக்குநிலை
  92. வீரவெட்சிமாலை
  93. வெட்சிக்கரந்தை மஞ்சரி
  94. வேனில் மாலை

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.