மும்மணிக்கோவை
- மும்மணிக்கோவை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மும்மணிக்கோவை (பெயர் பட்டியல்)
மும்மணிக்கோவை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இதில், ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளில் அமைந்த பாடல்கள் மாறி மாறி வரும். மும்மணிக்கோவை 30 பாடல்களைக் கொண்டு அந்தாதி வடிவில் இருக்கும். நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர, முப்பது செய்யுள்கள் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக்கோவை
சில மும்மணிக்கோவை நூல்கள்
- திருவாரூர் மும்மணிக்கோவை (சேரமான் பெருமாள் நாயனார்)
- திருமும்மணிக்கோவை(இளம்பெருமான் அடிகள்)
- பண்டார மும்மணிக்கோவை(குமரகுருபரர்)
- மும்மணிக்கோவை(வேதாந்த தேசிகர்)
- திருவிடைமருதூர் மும்மணிக்கோவை(பட்டினத்தார்)
- மதுரை மும்மணிக்கோவை
- வலிவல மும்மணிக்கோவை
- திருக்கழுமல மும்மணிக்கோவை
- சிதம்பர மும்மணிக்கோவை
- திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
எடுத்துக்காட்டு
குமரகுருபரர் எழுதிய பண்டார மும்மணிக்கோவையில் இருந்து 3-ம் பாடலும் (நெரிசை வெண்பா) , 4-ம் பாடலின் ஒரு பகுதியும் (கட்டளைக் கலித்துறை), 5 (நேரிசை ஆசிரியப்பா)மற்றும் ஆறாம் பாடலும்( நேரிசை வெண்பா) கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா என்று தொடர்ச்சியாக மூன்று மணிகள் கோர்த்ததுபோல் அமைந்திருக்கின்றன. பாடல்கள் அந்தாதித்தொடையில் அமைந்திருப்பதைக் காணலாம்.
நேரிசை வெண்பா
என்வடிவ நின்வடிவாக் கொண்டா யௌியேற்குன்
றன்வடிவ நல்கத் தகுங்கண்டாய் - மன்வடிவால்
வெம்பந்த நீக்கும் விமலநீ மெய்ஞ்ஞான
சம்பந்த னென்பதனாற் றான். (3)
கட்டளைக் கலித்துறை
தானின் றெனைத்தனக் குள்ளே யொளிக்குமென் றன்மைநிற்க
யானின்ற போதெனக் குள்ளே யொளித்திடு மிப்பரிசே
வானின்ற சின்மய மாமாசி லாமணி மன்னுந்தன்மை
நானின்று கண்டனன் காணே னிதற்கொத்த நன்மணியே.(4)
நேரிசை ஆசிரியப்பா
மணிவடஞ் சுமந்த புணர்முலைக் கொதுங்கி
ஈயா மாக்க டீமொழி கவர்ந்த
சிற்றிடை படைத்த பேரமர்க் கண்ணியர்
கரைகொன் றிரங்குந் திரைசெய்நீர்ப் பட்டத்து
மைவிழி சேப்பச் செவ்வாய் விளர்ப்பக் .....(5)
கருங்குழல் சரிய வெள்வளை கலிப்பச்
சீராட் டயரு நீராட் டயர்ந்து
புலவியிற் றீர்ந்து கலவியிற் றிளைக்கும்
நீரர மகளிர் பேரெழில் காட்ட (5)
..........................................................
திருவமு தார்ந்து தெருக்கடை யெறிந்த .....(40)
பரிகல மாந்தியிப் பவக்கட லுழக்கும்
வரனுடை ஞமலி யாகிநின்
அருளையு மயரா தவதரிப் பதுவே.
நேரிசை வெண்பா
அவமாசி லாமனத்தார்க் காருயிரா ஞானோற்
பவமாசி லாமணிச்சம் பந்தா - தவமார்
ததியருளத் தானேநின் சந்நிதிப்பட் டேற்குக்
கதியருளத் தானே கடன்(6)
உசாத்துணை
- கலியாண சுந்தரையர், எஸ்., கணபதி ஐயர், எஸ். ஜி. (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல் நவநீத நடனார் இயற்றியது.
- மும்மணிக்கோவை-நாஞ்சில் நாடன்
- பண்டார மும்மணிக்கோவை-சைவம்.ஆர்க்
வெளி இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2023, 16:39:17 IST