பாட்டியல்
- பாட்டியல் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாட்டியல் (பெயர் பட்டியல்)
பாட்டியல் பாடலின் இலக்கணத்தை விளக்கும் துறை. பொதுவாக பிற்காலத்தைய சிற்றிலக்கியங்கள் தொடர்பான இலக்கணத்தை வரையறை செய்யும் நூல்களே இத்துறைக்குள் வருகின்றன.சிற்றிலக்கியங்களின் வகை, அவற்றின் இலக்கணங்கள், அவற்றைப் பாடவேண்டிய முறை, வெவ்வேறு வர்ணத்தாருக்குரிய பாடல்கள், அவ்வர்ணத்தார் இயல்புகள், பாட்டுடைத்தலைவர் நூல் கேட்கவேண்டிய முறை, நூல் அரங்கேற்றம் செய்வதற்குரிய அவையின் இயல்பு, புலவர்களின் வகை போன்றவை பாட்டியலுள் அடங்குகின்றன. பாட்டியல் நூல்களில் பன்னிரு பாட்டியல் என்னும் தொகைநூல் முக்கியமானது.
பாட்டியலும் எழுத்தியலும்
பாட்டியல் என்பது தொல்காப்பியத்தில் இருந்து தொடங்கும் பண்டைத்தமிழின் யாப்பியலில் இருந்து வேறுபட்டது. யாப்பியல் செய்யுள்களின் உறுப்புகளையும் அவற்றின் இனங்களையும் விளக்குவது. புலம் எனத் தொல்காப்பியப் பாயிரம் கூறும் இலக்கணமுறை மொழியை அவற்றின் சொல் மற்றும் பொருளின் அடிப்படையில் வகைப்படுத்துவது. பேசுபொருட்களின் அடிப்படையில் நூல்களை தொகுப்பது. தொல்காப்பியம், நன்னூல், இறையனார் களவியல், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பி அகப்பொருள் முதலானவை புலனெறி இலக்கணங்கள் எனப்படுகின்றன. பாட்டியல் நூல்கள் பிற்கால பிரபந்தங்கள் என்னும் சிற்றிலக்கியங்களுக்குரிய இலக்கணத்தை வகுக்கின்றன. அவை எழுத்து, சொல், நூல் எனப் பகுத்துக்கொண்டு பாடல்களை அணுகுகின்றன. பேசுவோர், பேசப்படுவோர்,கேட்போர் ஆகியவற்றையும் அவை வரையறை செய்ய முற்படுகின்றன
பாட்டியல் நூல்கள்
சிற்றிலக்கியங்கள் தோன்றிய பின்னரே அவற்றுக்கு இலக்கணம் வகுக்கப் பாட்டியல் நூல்கள் தோன்றின. தமிழில் அறியவந்துள்ள பாட்டியல்நூல்கள்
- இந்திரகாளியம் ஆசிரியர் பெயர் தெரியவில்லை - பொ.யு. 9-ம் நூற்றாண்டு
- இலக்கணவிளக்கப் பாட்டியல் வைத்தியநாததேசிகர் - பொ.யு. 17-ம் நூற்றாண்டு
- சிதம்பரப் பாட்டியல் பரஞ்சோதிமுனிவர் - பொ.யு. 16-ம் நூற்றாண்டு
- தாத்தாத்திரேயர் பாட்டியல்
- நவநீதப் பாட்டியல் நவநீதநடனார் - பொ.யு. 14-ம் நூற்றாண்டு
- பண்டாரப் பாட்டியல்
- பன்னிரு பாட்டியல் ஆசிரியர் பெயர் தெரியவில்லை - பொ.யு. 13-ம் நூற்றாண்டு
- பிரபந்த தீபம் ஆசிரியர் பெயர் தெரியவில்லை - பொயு. 19-ம் நூற்றாண்டு
- பிரபந்த தீபிகை முத்துவேங்கட சுப்பையர் - பொ.யு. 19-ம் நூற்றாண்டு
- பிரபந்த மரபியல் ஆசிரியர் பெயர் தெரியவில்லை - பொ.யு. 16-ம் நூற்றாண்டு
- பிரபந்தத் திரட்டு ஆசிரியர்பெயர் தெரியவில்லை - பொ.யு. 19-ம் நூற்றாண்டு
- முத்துவீரியப் பாட்டியல்
- வரையறுத்த பாட்டியல் ஆசிரியர் பெயர் தெரியவில்லை - பொ.யு. 14-ம் நூற்றாண்டு
- வெண்பாப் பாட்டியல்/வச்சணந்திமாலை குணவீர பண்டிதர் - பொ.யு. 13-ம் நூற்றாண்டு
இவற்றுள், முதலாவது நூல் இன்று இல்லை. பண்டாரப் பாட்டியலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஏனைய இன்று கிடைக்கக்கூடியதாக உள்ளன.
பாட்டியல் நூல்களின் கால வரிசை
எண் | நூல் | யாப்பு | நூற்றாண்டு |
---|---|---|---|
1 | பன்னிரு பாட்டியல் | நூற்பா | 11 |
2 | வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியல் | வெண்பா | 12 |
3 | நவநீதப் பாட்டியல் | கட்டளைக் கலித்துறை | 14 |
4 | வரையறுத்த பாட்டியல் (ஒருபகுதி மட்டும்) | கட்டளைக் கலித்துறை | 14 |
5 | சிதம்பரப் பாட்டியல் | விருத்தம் | 16 |
6 | இலக்கணவிளக்கப் பாட்டியல் | நூற்பா (பிற்காலம்) | 18 |
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:07 IST