வரையறுத்த பாட்டியல்
வரையறுத்த பாட்டியல் (1854) பாட்டியல் இலக்கணம் கூறும் நூல்களுள் ஒன்று. பொருத்தச் செய்திகளை மட்டும் கூறுகிறது. இந்நூலை இயற்றியவர் சம்பந்த முனிவரின் மாணவர்களில் ஒருவர். இதன் காலம் பதினான்காம் நூற்றாண்டு.
பதிப்பு
வரையறுத்த பாட்டியல் நூல், அளவில் சிறியதாக இருந்ததால் தனியாகப் பதிப்ப்பிக்கப்படவில்லை. வெண்பாப் பாட்டியலுடன் இணைந்து 1854-ல், தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதரால் பதிப்பிக்கப்பட்டது. இதன் அடுத்த பதிப்பை, திரிசிரபுரம் தி. சபாபதி பிள்ளை 1896-ல் பதிப்பித்தார். தொடர்ந்து ஈ. இரத்தினவேலு முதலியார் உள்ளிட்ட பலர் பதிப்பித்தனர். 1936-ல், கொ. இராமலிங்கத் தம்பிரானை விளக்கவுரையாசிரியராகக் கொண்டு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் பதிப்பித்து வெளியிட்டனர்.
ஆசிரியர் குறிப்பு
சம்பந்த முனிவர் என்பவர் சிற்றம்பல நாடிகளின் மாணவர். பழுதை கட்டிச் சம்பந்த பண்டாரம் என்ற பெயரோடு சீர்காழியில் வாழ்ந்தவர். 'சிவானந்த மாலை' என்ற நூலின் ஆசிரியர். வரையறுத்த பாட்டியல் நூல் சம்பந்த முனிவர் இயற்றிய நூல் என்றும், அவரது மாணவர்களில் ஒருவர் இயற்றிய நூல் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இந்நூலின் காலம் பதினான்காம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.
நூல் அமைப்பு
பாட்டியல் நூல்கள், பாட்டியல் பொருத்தங்களையும், இலக்கிய வகைக்கான இலக்கணங்களையும் நூல், கவி குறித்த பொதுச் செய்திகளையும் கூறும். ஆனால், வரையறுத்த பாட்டியல் நூல், சண்முகப் பாட்டியல், பொருத்த விளக்கம், பொருத்த வினா விடை போன்று பொருத்தச் செய்திகளை மட்டும் கூறும் நூலாக அமைந்துள்ளது.
பாட்டியல் நூல்களுள் கூறப்பட்ட பத்துப் பொருத்தங்களுள் 'மங்கலப் பொருத்தம்' ஒன்றை மட்டுமே எடுத்துக் கொண்டு, வரையறுத்துக் கூறுவதால், இந்நூலுக்கு 'வரையறுத்த பாட்டியல்' என்ற பெயர் வந்தது. நூலின் யாப்புப் பெயரால் இந்நூலுக்குக் கலித்துறைப் பாட்டியல் என்ற பெயரும் உண்டு.
கட்டளைக் கலித்துறையால் ஆன, 14 நூற்பாக்கள் இந்நூலில் இடம்பெற்றன.
உள்ளடக்கம்
பிற பொருத்தப் பாட்டியல் நூல்கள் பத்துப் பொருத்தங்களைக் கூற, 'வரையறுத்த பாட்டியல்' நூல், 'பிரபந்த தீபிகை' போல் 'மங்கலப் பொருத்தம்' ஒன்றை மட்டுமே கூறுகிறது. பிற பாட்டியல் நூல்களைப் போன்ற இயலமைப்பு இப்பாட்டியல் நூலில் இல்லை. கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பால் 10 காரிகைகளைக் கொண்டுள்ளது. அந்தாதியாய் அமைந்து உள்ளது.
நூலின் முதல் செய்யுள், நூல் இயற்றப்பட்டதற்கான காரணத்தைக் கூறுகிறது. இரண்டாம் செய்யுள் அவையடக்கச் செய்யுளாகவும், மூன்றாம் செய்யுள் நூலினால் விளையும் பயனைக் கூறுவதாகவும் அமைந்துள்ளது. நான்காம் செய்யுள் சீர், எழுத்து என்னும் இரண்டு மங்கலச் சொல்லிற்குப் பொருந்திய பெயர்களை உணர்த்துகிறது. ஐந்தாம் செய்யுள் பொன், பூ என்னும் இரண்டு மங்கலச் சொல்லிற்கும் பொருந்திய பெயர்களைக் கூறுகிறது. ஆறாம் செய்யுள் திரு, திங்கள், மணி, நீர் என்னும் நான்கு மங்கலச் சொல்லிற்குப் பொருந்திய பெயர்களையும், ஏழாம் செய்யுள் சொல், கங்கை, வாரணம் என்னும் மங்கலச் சொற்களுக்குப் பொருந்திய பெயர்களையும் கூறுகிறது.
எட்டாம் செய்யுள் குஞ்சரம், உலகு, பார் என்னும் மங்கலச் சொல்லிற்குப் பொருந்திய பெயர்களையும், ஒன்பதாம் செய்யுள் தேர் என்னும் மங்கலச் சொல்லிற்குப் பொருந்திய பெயர்களையும் கூறுகிறது. இறுதியில் உள்ள பத்தாம் செய்யுள் நூலின் ஒழிபுச் செய்யுளாக உள்ளது.
மங்கலப் பொருத்தம் கூறும் பாட்டியல் நூல்கள் அனைத்தும், மங்கலச் சொற்களைத் தொகுத்துக் கூறினவேயன்றி இன்ன இன்ன எழுத்துக்களை முதலாக உடைய பெயர்களுக்கு இன்ன இன்ன சொற்கள் தாம் வர வேண்டும் என்று பிரித்துக் கூறவில்லை. அந்த வகையில் வரையறுத்த பாட்டியலே முதல் நூலாக அறியப்படுகிறது. ' பிரபந்த தீபிகை' இதனைப் பின்பற்றி அமைந்த நூலாகக் கருதப்படுகிறது.
பாடல்
திரு, திங்கள், மணி, நீர்
வெளவுந் திருத்திங்க ளென்சொற்கள் கொக்கோவரும் பெயர்க்காம்
செவ்வுண் மணிச்சொற்கெக் கேப்பெ யர்க்காஞ் செழுநீர்ச் சொற்கையோ
டிவ்வுண்சிச்சீயொடு தித்தீத்தை நொந்நோ வுடனிசையக்
கெளவும்பைகா ரப் பெயர்க்குநன் றாம்படி கட்டுரையே
தேர்
உரைதரு தேர்கொடு ஊ௭ஏஐ யுவந்தநைன்ம
விரைதரு பேர்கட்கு கேரே விளம்புகமேவு தண்ணீர்த்
திரைதரு வேலை யுடனேசெஞ்சேலையுஞ் சேரவென்று
வரைதரு மஞ்சனந் நோய்ந்தரி சிந்திய வாள்விழியே
மதிப்பீடு
வரையறுத்த பாட்டியல் நூல், பதினான்காம் நூற்றாண்டில் தோன்றிய பாட்டியல் விளக்க நூல்களுள் ஒன்றாகவும், பொருத்தச் செய்திகளை மட்டும் கூறும் பாட்டியல் இலக்கண நூலாகவும் அறியப்படுகிறது.
உசாத்துணை
- வெண்பாப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல் மூலமும் உரையும், ஆர்கைவ் தளம்
- இலக்கண வரலாறு, இரா. இளங்குமரன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: 2009.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Apr-2025, 19:14:29 IST