வெண்பாப் பாட்டியல்
- பாட்டியல் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாட்டியல் (பெயர் பட்டியல்)
வெண்பாப் பாட்டியல் (வச்சணந்திமாலை) ஒரு பாட்டியல் நூல். குணவீர பண்டிதரால் இயற்றப்பட்டது.
ஆசிரியர், காலம்
வெண்பாப் பாட்டியலை இயற்றியவர் குணவீர பண்டிதர். இவர் நேமிநாதம் என்னும் இலக்கண நூலையும் இயற்றினார்.. குணவீர பண்டிதரின் ஆசிரியரான வச்சணந்தியின் (வஜ்ர நந்தி) பெயரைத் தழுவியே இந்நூலுக்கு வச்சணந்திமாலை என்னும் பெயர் ஏற்பட்டது எனக் கருதப்படுகிறது. பாயிரம், இந்நூலுக்கு முதல் நூல் இன்று முழுமையாகக் கிடைக்காத இந்திரகாளியம் எனக் குறிப்பிடுகின்றது. இது சிலப்பதிகார அடியார்க்குநல்லார் உரையில் குறிப்பிடும் இசைத்தமிழ் நூலாகிய இந்திரகாளியம் அல்ல, அதே பெயரில் உள்ள வேறு நூல் எனக் கருதப்படுகிறது. வெண்பாப்பட்டியலின் காலத்தை உறுதியாக அறியமுடியவில்லை. பொ.யு. பதிமூன்றாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இதன் உரையின் மூலம் இந்நூல் திரிபுவனத்தேவன் என்னும் அரசன் காலத்தில் எழுதப்பட்டது என அறிய வருகிறது.
நூல் அமைப்பு
வெண்பாப் பாட்டியல் பாட்டியல் நூல்களில் ஒன்று. 100 வெண்பாக்களால் அந்தாதித் தொடையாக அமைந்தது. முதன் மொழியியல் (22 பாடல்கள்), செய்யுளியல் (40 பாடல்கள்), பொதுவியல்(38 பாடல்கள்) என்ற மூன்று இயல்களைக் கொண்டது.
முதன் மொழியியல்
- சொல், எழுத்து, தானம், பால், உணா, வருணம், நட்சத்திரம், கதி, கணம், முதலான பொருத்தங்கள் 22 வெண்பாக்களில் கூறப்பட்டுள்ளன.
செய்யுளியல்
- ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி, பிள்ளைக்கவி, பல்சந்தமாலை, அந்தாதி, கலம்பகம், ஒலியந்தாதி, மும்மணிக்கோவை, ஊர்நேரிசை, ஊர்இன்னிசை, கோவை, கைக்கிளை, மும்மணிமாலை, நான்மணிமாலை, இருபா இருபது, இரட்டைமணி மாலை (இரண்டு வகை), இணைமணி மாலை, தசாங்கம், சின்னப்பூ, தசாங்கப்பத்து, விருத்தவகை நூல்கள், ஊர்வெண்பா, அலங்கார பஞ்சகம், ஊசல், நாழிகை வெண்பா, அட்டமங்கலம், நவமணிமாலை, தசப்பிராதுற்பவம், நயனப்பத்து, பயோதரப்பத்து, பெண்கள் பருவம், உலா, குழமகன், வளமடல், அங்கமாலை, பாதாதிகேசம், கேசாதிபாதம், ஆற்றுப்படை, தானைமாலை, வஞ்சிமாலை, வாகைமாலை, தாரகமாலை, மங்கலவள்ளை, யானைவஞ்சி, மெய்க்கீர்த்தி, கையறமோதரப்பா, புகழ்ச்சிமாலை, நாம மாலை, வருக்கமாலை, செருக்கள வஞ்சி, வரலாற்று வஞ்சி, பரணி முதலான சிற்றிலக்கியங்களுக்கும், பெருங்காப்பியத்துக்கும் இப்பகுதியில் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
- அகலக்கவி, கமகன், வாதி, வாக்கி, புன்கவிஞன் ஆகிய கவிஞர்களுக்கும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
பொதுவியல்
- இதில் நால்வகைப் பாக்களுக்கும் சாதி, நிறம், இடம், நாள், இராசி, தேவதை போன்றவை கூறப்பட்டுள்ளன. மேலும் அந்தணர், மன்னர், பூவைசியர், தனவைசியர், சூத்திரர் முதலானோர் இயல்புகளும் கூறப்பட்டுள்ளன.
பாடல் நடை
மங்கலப் பொருத்தம்
சீரெழுத்துப் பொன்பூ திருமணிநீர் திங்கள்சொற்
கார்பரிதி யானை கடலுலகம் - தேர்மலைமா
கங்கை நிலம்பிறவுங் காண்டகைய முன்மொழிக்கு
மங்கலமாஞ் சொல்லின் வகை.
சித்திரகவி
யாப்புடைய மாலைமாற் றாதியா வேனையவும்
வாய்ப்புடைய சொல்லின் வகுத்தமைத்து - நீப்பிலா
வண்ணமுந் தொன்னூன் மரபு வழுவாமற்
பன்னுவது சித்திரத்தின் பா.
நாற்பா நாள் இராசி
கார்த்திகை மாசிபனை குன்றாதி காட்டுகநாள்
மூத்த விராசிநான் மூன்றினையும் - நீர்த்தசீர்
மேதினிமே லாசிரியம் வஞ்சிகலி வெள்ளையென
ஓதியமே டாதியா லோட்டு.
உசாத்துணை
இலக்கண வரலாறு பாட்டியல் நூல்கள்-மருதூர் அரங்கராசன், தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Sep-2023, 10:13:54 IST