அங்கமாலை
To read the article in English: Angamaalai.
அங்கமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது ஆண்மகன், பெண்மகள் இருசாராரின் உடல்உறுப்புக்களை வெண்பாவாலும், விருத்தத்தாலும், பாதத்தில் இருந்து தலைமுடி வரை, தலைமுடியில் இருந்து பாதம் வரை முறை பிறழாது தொடர்வுறப் பாடுவதாகும். கேசாதிபாதம் பாதாதிகேசம் என சம்ஸ்கிருதத்தில் வர்ணிக்கப்படும் பாடல்முறை.[1]
எடுத்துக்காட்டு
- திருஅங்கமாலை திருப்பதிகம் (நான்காம் திருமுறை 09 வது திருப்பதிகம்) - திருநாவுக்கரசர்
உடலின் உள்ள உறுப்புகளை வரிசையாக குறிப்பிட்டு, அவற்றை இறை பணியில் ஈடுபடுத்துவதைக் கூறுவதால், இந்த பதிகத்திற்கு அங்கமாலை என்று பெயர்.
தலையே நீ வணங்காய் - தலை மாலை தலைக்கு அணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய்.
கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சு உண்ட கண்டன் தன்னை
எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னை கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள
எரி போல் மேனிப் பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்மின்களோ.
தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் பிச்சை எடுத்து உலவும், தலைவனைத் தலையே நீ வணங்குவாயாக.
கண்களே, பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்டதால் நீலநிறம் கொண்ட கழுத்தை உடையவனும், எட்டு தோள்களை வீசி நின்றாடுபவனும் ஆகிய சிவபிரானை நீங்கள் காணுங்கள்.
செவிகளே, எமது தலைவனாகிய சிவபெருமான், செம்பவளம் போன்றும் தீயினைப் போன்றும் சிவந்த நிறம் கொண்டவர். பெருமைக்குரிய அவரது பண்புகளையும், செயல்களையும் எப்போதும் நீங்கள் கேளுங்கள்.
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
- ↑ முத்துவீரியம் பாடல் 1046
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:05:43 IST