under review

சின்னப்பூ

From Tamil Wiki

சின்னப்பூ தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் என்பவை அரசனுக்கு உரிய பத்து உறுப்புக்கள். அவற்றின் சிறப்புத் தோன்ற நூறு, தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது பாடல்களால் பாடுவது சின்னப்பூ. சின்னப்பூ அரசர்களைப் பாடுவதற்கு உரியது.

வேந்தருடைய சின்னங்களைப் பற்றிய சிற்றிலக்கியம் என்பதால் இது சின்னப்பூ எனப்படுகிறது. இதே கருப்பொருளைக் கொண்டு பத்துப் பாடல்களில் பாடப்படுவது தசாங்கப்பத்து.

நேரும் தசாங்கத்தை நேரிசை வெண்பாவின் ஈரைம்பது
சேர ஓர் தொள் நூறு எழுபதோடு ஐம்பது செப்பிடும்கால்
ஆரியர் சின்னப்பூ என்றே உரைப்பர் அவை ஒருபான்
சாரில் தசாங்கம் என உரையாநிற்பர் சான்றவரே. 3.15 - 43

என்று நவநீதப் பாட்டியல் இதன் இலக்கணத்தைக் குறிப்பிடுகிறது.

தேவர்களுக்கும் அரசர்க்கும் சின்னப் பூ உகந்தது என்று முள்ளியார் கவித்தொகை குறிப்பிடுகிறது.

உரைத்த தசாங்க மாவன பத்தாக
நிரைத்து வருவது நேரிசை வெண்பா
அமரரைச்
செங்கோல் வேந்தரைச் செப்புதல் சின்னப் பூவாம்
ஏனை யோர்க்குத் தசாங்கமல் லாதன
என்ப இயல்புணர்ந் தோரே

மன்னர்தம் சின்னங்களின் சிறப்பெல்லாம் தோன்றக்கூறுவதனால் ‘சின்னப்பூ’ என்ற பெயராயிற்று என்று மு.அருணாசலம் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

தத்துவராயர் இயற்றிய சின்னப்பூ வெண்பா இவ்வகைமையைச் சார்ந்த சிற்றிலக்கியம். தத்துவராயர் சிவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு தார், படை, முரசு, கொடி, மா, மலை, ஆறு, ஊர், நாடு, பெயர் என்னும் பத்து உறுப்புகளையும் பத்து பத்து பாடல்களில் பாடியிருக்கிறார்.

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page