under review

சித்திரக்கவிகள்

From Tamil Wiki
அட்ட நாக பாந்தம். ஆ.ப.சுவாமிநாத சர்மா

தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று 'சித்திரக் கவி.' "மிறைக்கவி" என்றும் இது அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர், பகழிக் கூத்தர், பாம்பன் சுவாமிகள், பிச்சு ஐயங்கார் போன்ற பலரது பாடல்கள் 'சித்திரக்கவி’ வடிவில் அமைந்துள்ளன. திருஞானசம்பந்தர் இயற்றிய 'திருவெழுகூற்றிருக்கை’ என்பதே தமிழின் முதல் சித்திரக்கவியாகக் கருதப்படுகிறது. இவ்வகைச் சித்திரக்கவிகளை இயற்றுவதற்கு செய்யுள் பாடுமறிவு மட்டுமல்லாமல், துல்லியமான இலக்கண அறிவும், கணித அறிவும் தேவை.

சித்திரக்கவி இலக்கணம்

ஒரே எழுத்து திரும்பத் திரும்ப எத்தனை முறை வரவேண்டும், அது எந்த வகையில் பொருள் கொள்ளப்பட வேண்டும், எத்தனை எழுத்துக்கள் ஒரு பாடலில் இருக்க வேண்டும், மாலை மாற்றாக அந்தச் செய்யுள் வரும்போது எழுத்துக்களை எந்தெந்த வகையில் அமைக்க வேண்டும் என்பதற்கெல்லாம் இலக்கண விதிமுறைகள் உள்ளன. சித்திரக்கவிகளை எப்படி அமைப்பது, அதனை எப்படிப் பாடுவது என்பதற்கான இலக்கண விளக்கங்கள் "தண்டியலங்காரம்", 'மாறனலங்காரம்", "குவலயானந்தம்" போன்ற நூல்களில் காணப்படுகின்றன.

சித்திரக்கவியின் வகைகள்

சித்திரக்கவியின் வகைகள் பற்றி,

- என்று மிக விரிவான விளக்கத்தைத் தருகிறது பிங்கல முனிவர் எழுதிய 'பிங்கல நிகண்டு.
<poem
>
ஏக பாத மெழுகூற் றிருக்கை
காதை கரப்புங் கரந்துறைச் செய்யுள்
கூட சதுக்கங் கோமூத் திரிமுதல்
தெரிந்து பாடுவோன் சித்திரக் கவியே

- என்கிறது இலக்கண நூலான முத்து வீரியம் (பாடல் - 1019)

மயில் வாகன பந்தம் - புலவர் பி.வி.அப்துல்கபூர் சாஹிப்

சித்திரக் கவி - பெயர் விளக்கம்

சித்திரம் என்பதற்கு ஓவியம், சிறப்பு, அழகு, அலங்காரம், அதிசயம் என்னும் பல பொருள்களைத் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது. இவை அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாக அதற்கென உள்ள இலக்கண அமைப்பின் படி அமைவதே சித்திரக்கவி. சித்திரக் கவியின் இலக்கணத்தை அடிப்படையாக வைத்துப் பலர் பலவிதமான சித்திரக்கவிகளை இயற்றியுள்ளனர். சிலர் இதனை அடிப்படையாகக் கொண்டு, இலக்கணங்களில் கூறப்படாத புதுப் புது வகையிலும் சித்திரக்கவிகளை எழுதியுள்ளனர். சித்திரக்கவிகள் தமிழில் மட்டுமல்லாது சம்ஸ்கிருதத்திலும் பிற மொழிகளிலும் இயற்றப்பட்டுள்ளன.

சித்திரக் கவி - பிரிவுகள்

சித்திரக் கவியில் இரண்டு பிரிவுகள் உள்ளன. 1. சொற் சித்திரம் 2. வடிவச் சித்திரம்

1. சொற் சித்திரம்

சொல் விளையாட்டுக்களாய் அமைவது சொற் சித்திரக் கவி ஆகும். ககரம், சகரம், தகரம், என ஒரே வர்க்கமாக அமையும் செய்யுள், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை மட்டுமே கொண்டதாக அமையும் செய்யுள், உதடு ஒட்டாமல் பாடப்படும் செய்யுள், உதடு குவிந்து பாடப்படும் செய்யுள், போன்றவை சொற் சித்திரக்கவிகளுக்கு உதாரணங்களாகும்.

வர்க்கப்பாட்டு (தகரம்)

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது.

ஓரினப் பாட்டு (வல்லினம்)

தெறுக தெறுக தெறுபகை தெற்றால்
பெறுக பெறுக பிறப்பு

இதழ் ஒட்டாதது

சீரார் செகத்தில் திகழ்சார சரத்தைத்
தேரார் கரத்தாற் செய்தளித் தாண்ட
தண்ணளித் தடங்கடற் றனியிணை யடி தனை
எண்ணி ஏத்தி இறைஞ்சினன் சித்திரஞ்
சேரணி இலக்கணம் செழித்திட யானே

இதழ் குவிவது

பம்மும்பம் மும்பம் முமம்மம் மமைமாமை
பம்முமம்ம மும்மேமம் பாம் (மாறனலங்காரம் - 772)

2. வடிவச் சித்திரம்
மாலைமாற்று - லிங்க பந்தம் : ஒரே சித்திரத்தில் இரண்டு வேறு வேறு செய்யுள்கள்.

செய்யுட்களை இவ்வகைச் சித்திரங்களில் பொருத்த ஒவ்வொரு வகைச் சித்திரங்களுக்கும் தனித் தனி விதிமுறைகள் உள்ளன. ஒரே எழுத்து, செய்யுளின் வேறு வேறு இடங்களில் திரும்பத் திரும்ப வரும். அப்படி வரும் எழுத்துக்களின் எண்ணிக்கை, செய்யுளின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை, சித்திரத்தில் அவை வந்து பொருந்தும் வகை என்பதையெல்லாம் அடிப்படையாக வைத்துத்தான் செய்யுள் இயற்றப்படும். இல்லாவிட்டால் செய்யுள் சித்திரத்தில் பொருந்தாது. ரதம், பாம்பு, மயில், சேவல், வேல், லிங்கம் போன்ற ஓவியங்களில் செய்யுட்களைப் பொருத்திப் பாடப்படுவதை வடிவச் சித்திரக்கவிகளுக்கு உதாரணமாகக் கொள்ளலாம். கூடச்சதுக்க பந்தம், ஏக நாக பந்தம், சதுர் நாக பந்தம், ரத பந்தம், விதான ரத பந்தம், முரச பந்தம், மயில் பந்தம், தேள் பந்தம், லிங்க பந்தம், வேல் பந்தம், சேவல் பந்தம், விளக்கு பந்தம், மலைப் பந்தம், அன்ன பந்தம், சுழிகுளம், கோமூத்திரி, ஏக பாதம், மாலைமாற்று எனப் பல நூற்றுக் கணக்கில் வடிவச் சித்திரக் கவிகள் உள்ளன. ஒரே சித்திரத்தில் இரண்டு வேறு வேறு செய்யுள்கள் வரும் வகையில் பாடப்படுவதும் உண்டு.

சித்திரக்கவி இலக்கண நூல்கள்

சித்திரக் கவி இலக்கணம் பற்றித் தமிழில் பல நூல்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தகுந்த நூலாகத் திவாகர நிகண்டு கருதப்படுகிறது. பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு போன்றவற்றிலும் சித்திரக் கவி வகைகள் பற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. யாப்பருங்கலம், வீரசோழியம், தண்டியலங்காரம், மாறனலங்காரம், இலக்கண விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், குவலயானந்தம் போன்ற இலக்கண நூல்களில், சித்திரக் கவிகளின் வகைகள், அவை பாடப்பட வேண்டிய முறைகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

தமிழின் முன்னோடி சித்திரக் கவிஞர்கள்

மற்றும்பலர்

சித்திரக்கவி நூல்கள்

  • சித்திரக்கவி விளக்கம் (வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்)
  • சித்திரக்கவிகள் (வே.இரா.மாதவன்)
  • சித்திரக்கவி களஞ்சியம் (பதிப்பாசிரியர் வ.ஜெயதேவன்; தொகுப்பாசிரியர் கி.காவேரி)
  • சித்திரக் கவித்திரட்டு (குலாம் காதிறு நாவலர்)
  • சித்திர கவி மாலை (புலவர் பி.வி.அப்துல்கபூர் சாஹிப் )
  • சித்திரச் செய்யுள் (கவிஞர் இக்குவனம், சிங்கப்பூர்)
  • சித்திரக் கவித்திரட்டு (ஞானம் பாலச்சந்திரன்)
  • சித்திரகவி (பாவலர் க.பழனிவேலன்)

வரலாற்று இடம்

சித்திரக்கவிகளை இயற்றுவதும், அவற்றைச் சித்திரங்களுக்குள் பொருத்துவதும் சவாலாக இருந்த காரணத்தாலும், இந்த இந்த வகைகளில், இன்ன இன்ன தன்மை உடையவர்களைப் பற்றி மட்டுமே சித்திரக் கவிகளை எழுத வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்ததாலும், சித்திரக்கவிகள் எழுதுவதில் பலரும் ஆர்வம் இழந்தனர். சித்திரக் கவிகள் படைப்பிலக்கியம் சார்ந்தவை அல்ல; அது ஒரு வகைப் புலமை விளையாட்டு என்ற கருத்து நிலைபெற்றது. சித்திரக்கவிகள் மூளைக்குச் சவாலாக இருந்தனவே அன்றி, அவற்றில் இலக்கிய நயங்களோ, சிறப்புக்களோ இல்லை எனப் பல புலவர்கள் கருதியதால் பிற்காலத்தில் அவை ஒதுக்கப்பட்டன. நாளடைவில் மெல்ல மெல்லச் செல்வாக்கை இழந்தன.

இன்றைய சித்திரக் கவிஞர்கள்

இலந்தை சு.ராமசாமி, இராச.தியாகராசன், பேராசிரியர் முனைவர் எஸ்.பசுபதி, கவிஞர் வே.ச.அனந்தநாராயணன், புனிதா கணேசன், முனைவர் இரஹமத் பீவி, முனைவர் அண்ணா கண்ணன், விவேக் பாரதி, A.ராஜகோபாலன், கோ. செல்வமணி எனச் சிலர் மட்டுமே இன்றைக்குச் சித்திரக்கவிகளை எழுதி வருகின்றனர்.

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Mar-2023, 08:52:22 IST