under review

திருமங்கையாழ்வார்

From Tamil Wiki
திருமங்கையாழ்வார், குமுதவல்லி நாச்சியார், திருவாலி

திருமங்கையாழ்வார் (பொ.யு. எட்டாம் நூற்றாண்டு) (பரகாலன், கலியன், கலிகன்றி, அருள்மாரி) (பொ.யு. எட்டாம் நூற்றாண்டு) பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். நாலாயிரதிவ்யப் பிரபந்தத்தில் நம்மாழ்வருக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் இவரது 1253 பாடல்கள் இடம்பெறுகின்றன. 108 திவ்ய தேசங்களில் 86 திருத்தலங்களுக்கு யாத்திரை சென்று அவற்றைப் பாடினார். திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து உற்சவங்களை ஏற்படுத்தினார். பல்வேறு யாப்பு, சிற்றிலக்கிய,சித்திரக்கவி வகைகளில் பாடல்கள் இயற்றினார். மடல் என்னும் சிற்றிலக்கிய வகைமையின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் உள்ள திருவாலிக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் கள்ளர் குடியில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார். தந்தை சோழ மன்னனின் படைத்தளபதியான ஆலிநாடான், தாயார் வல்லித்திரு. பெற்றோர் இட்ட பெயர் நீலன். ஆழ்வார்களில் சிலர் திருமாலின் ஆயுதங்களின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்ற வைணவக் கோட்பாட்டின்படி திருமாலின் சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாகப் பிறந்தார். இளமையில் கல்வி கற்று ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என நான்கு வகைக் கவிகளையும் பாடும் திறமை பெற்றார். நீலன் இளவயதிலேயே ஆயுதப்பயிற்சி பெற்று மற்போரில் தேர்ச்சி பெற்றார். ஆலிநாடார் மறைந்த பின் சோழமன்னன் அவரை திருமங்கை என்ற நாட்டின் குறுநில மன்னனாக்கினான். பரகாலன்(எதிரிகளுக்குக் காலன்) என அழைக்கப்பட்டார்.

திருவெள்ளக்கோவிலில் ஒரு வைணவ வைத்தியனின் மகளாக வளர்ந்து வந்த குமுதவல்லியின் அழகைக் கண்டு, அவளை மணம் செய்ய விரும்பினார். குமுதவல்லியின் நிபந்தனைகளை ஏற்று பரகாலன் திருநறையூரில் (நாச்சியார்கோவில்) பஞ்ச சம்ஸ்காரம்[1] செய்துகொண்டார். அங்கு கோவில் கொண்ட திருநறையூர் நம்பியே பரகாலனுக்கு குருவாக நல்வினைச்சடங்கு செய்து வைத்ததாகக் குருபரம்பரைக் கதை கூறுகிறது. குமுதவல்லியின் இரண்டாவது நிபந்தனையான ஒரு வருடம் 1008 வைணவ அடியவர்களுக்கு உணவளித்தலையும் நிறைவேற்றினார். அதனால் அரசனுக்குக் கப்பம் கட்ட முடியாமல் போகவே, அரசனால் சிறையில் அடைக்கப் பட்டார்.

குருபரம்பரைக் கதைகள் /தொன்மம்
பெருமாள் புதையலைக் காட்டல்

பரகாலன் சிறையில் இருந்தபோது தேவப்பெருமாள் கனவில் தோன்றி காஞ்சியில் புதையல் இருப்பதைக்கூறி மறைந்தார். மன்னன் பரகாலனோடு தன் படையைக் காஞ்சிக்கு அனுப்பினார். வேகவதிக்கரையில் கிடைத்த பெரும்புதையலைக்கொண்டு, மன்னனின் கப்பத்தைக் கட்டி, சிறையிலிருந்து விடுதலை பெற்றார்.

திருமங்கையாழ்வார் அடியார் சேவையையே தனது குறிக்கோளாகக் கொண்டு தனக்குக் கிடைத்த செல்வத்தை அடியார் சேவையில் செலவிட்டார். செல்வம் தீரவே செல்வந்தர்களிடமிருந்து திருடியும், நீர்மேல்நடப்பான்', 'நிழலில்ஒதுங்குவான்', 'தாள்ஊதுவான்', 'தோலாவழக்கன்' ஆகிய நால்வரின் துணை கொண்டு வழிப்பறி செய்தும் தன் சேவையைத் தொடர்ந்தார். '

பெருமாள் பரகாலனைத் திருத்தி ஆட்கொள்ளல்

பெருமாள் பரகாலனை ஆட்கொள்ள வேண்டி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். திருமணங்கொல்லையில் ஒரு புதுமணம் புரிந்த இணையரை வழிமறித்து, நகைகளை வழிப்பறி செய்தார். மணமகன் காலில் உள்ள நகையைக் கழற்ற இயலாமல் பல்லால் கடித்து எடுத்தார். ஆனால் கொள்ளையிட்ட நகைகள் இருந்த பொதியைத் தூக்க முடியவில்லை, அதற்கான காரணத்தை அந்தணர் வடிவில் வந்த பெருமானிடம் கேட்க, பரகாலனின் காதில் அந்தணராக வந்த பெருமாள் கலியா(பலம் மிக்கவன்) என்று அழைத்து எட்டெழுத்து மந்திரத்தை (ஓம் நமோ நாராயணாய) உபதேசித்தார். பரகாலன் தன் முதல் பாடலைப் பாடினார்.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்தம்மோடு அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.

திருமங்கையாழ்வார்-ஆன்மிகப் பணிகள்

திவ்யதேச யாத்திரை

திருமங்கை ஆழ்வார் பல வைணைவ தலங்களுக்கு பயணம் சென்று தலத்தையும், அங்கு கோவில் கொண்ட பெருமாளையும் மங்களாசாசனம்( போற்றிப் பாடுதல்) செய்தார். இமயமலையிலுள்ள பத்ரிநாத், நைமிசாரண்யம் தொடங்கி திருக்குறுங்குடி வரை 86 திவ்ய தேசங்களைப் பாடியிருக்கிறார். பல சிறிய தலங்களின் அழகிய தமிழ்ப்பெயர்கள் அவரது பாசுரங்களில் காணக் கிடைக்கின்றன (திருக்காவளம்பாடி, திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன்பள்ளி, திருவெள்ளியம்பாடி, திருப்புள்ளம்பூதங்குடி, திருநாங்கூர் செம்பொன்சேய்கோயில், திருநந்திபுரவிண்ணகரம்). கேரள மாநிலத்தின் திருவெள்ளா தலத்தை திருவல்லவாழ் என்று குறிப்பிடுகிறார். திருநிறையூர், திருக்கண்ணபுரம், திருவரங்கம் போன்ற தலங்களை அதிகம் பாடியிருக்கிறார்.

திருவரங்கத்தில் திருப்பணிகள்

திவ்ய தேசப் பயணத்திற்குப்பின் திருவரங்கம் வந்து அங்குள்ள பெரிய பெருமாளுக்கும் அழகிய மணவாளனுக்கும் விமானம், மண்டபம், திருத்தளிகை, திருமதில், கோபுரம் முதலியவற்றை அமைத்தார். தொண்டரடிப்பொடி ஆழ்வார், மலர் பறிக்கும் தமது ஆயுதத்துக்கு திருமங்கை மன்னருடைய பெயர்களுள் ஒன்றான அருள்மாரி என்று பெயரிட்டார். திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் நம்மாழ்வார் பரமபதம் அடைந்த வைகுண்ட ஏகாதசித் திருவிழாவையும் ராப்பத்து உற்சவத்தையும் ஏற்படுத்தினார். ராப்பத்து உற்சவத்தில், நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாடல்களை இசையுடன் ஓதி பத்து நாட்கள் விழா எடுத்தார். அதற்காக தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரில் கோயில் கொண்டுள்ள நம்மாழ்வார் திருமேனியை ஸ்ரீரங்கத்துக்கு ஊர்வலமாகக் கொணர்ந்து மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடினார். பின்னர் ஸ்ரீரங்கத்திலேயே ஆழ்வார்களுக்கு விக்கிரகங்கள் அமைத்துக் கோயில் எழுப்பப்பட்டது. திருவாலி நகரத்தில் திருமங்கையாழ்வார்-குமுதவல்லி க்கு தனி சன்னதி உள்ளது துணையுடன் கோவில் கொண்ட ஒரே ஆழ்வார் திருமங்கையாழ்வார்.

திருமங்கையாழ்வாரின் வேறு பெயர்கள்

ஆழ்வார் பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்ஶன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி ஶிகாமணி ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பெயர்களால் அறியப்பட்டார்.

உற்சவங்கள்

வேடுபறி உற்சவம்

ஶ்ரீரங்கத்திலும் மற்ற வைணவ ஆலயங்களிலும் ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாள் இரவு திருமங்கையாழ்வார் பெருமாளை வழிப்பறி செய்தபோது பெருமாள் எட்டெழுத்தைக் காதில் ஓதி அவரை ஆட்கொண்ட நிகழ்ச்சி வேடுபறி என்ற பெயரில் நடத்தப்படுகிறது. பெருமாள் தங்கக் குதிரையில் மணமகனாக வருவார். திருமங்கையாழ்வாரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சிலம்பாட்டம் ஆடி வழிப்பறி நிகழ்த்தும் உற்சவம் நடைபெறும். திருவாலி நகரில் பங்குனி உற்சவத் திருவிழா பத்தாம் நாளன்று வேதராஜபுரத்தில் வேடுபறி உற்சவம் நடைபெறுகிறது. இங்கு திருமங்கையாழ்வார் தங்கக் குதிரையில் வழிப்பறி செய்ய வருகிறார். 1000 தீவட்டிகளின் வெளிச்சத்தில் இந்த உற்சவம் நடைபெறுகிறது.

திருநாங்கூர் பதினோரு கருட சேவை

தைமாதம் அமாவாசை அன்று திருநாங்கூரைச் சுற்றி கோயில் கொண்டிருக்கும் பதினொரு பெருமாள்களையும் தன் பாசுரங்களால் பாடி மங்களாசாசனம் செய்வதற்காகத் திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு வருகிறார். பதினொரு பெருமாள்களும்[2] தங்கக் கருட வாகனத்தில் வந்து காட்சி கொடுத்து, ஆழ்வாரிடம் மங்களாசாசனம் பெற்றுச் (பாடல்களை ஏற்று) செல்கிறார்கள்.

திருமங்கையாழ்வார் வாழ்ந்த காலம்

திருமங்கையாழ்வாரின் காலம் பொ.யு. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர் நந்திவர்ம பல்லவன் காலத்தில் வாழ்ந்தவர் என்பது

இலகிய நீள்முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள்
சலமொடு மாநிலம் கொண்டவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மா மதிள் சூழ் கருஊர் வெருவ
பல்படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே

என்ற பாடலில் பல்லவமன்னன் இரண்டாம் நந்திவர்மனுக்கும் பாண்டியன் வரகுணனுக்கும் கருவூரில் நடந்த போரைப் பற்றிக் குறிப்பிடுவதால் அறியப்படுகிறது. தளவாய்புரம் செப்பேடுகளும் இப்போரைப்பற்றிக் குறிப்பிடுகின்றன.

மன்னவன் தொண்டையர்கோன் வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி '

என்று பெரியதிருமொழி அட்டபுயகரம் பாசுரத்திலும் நந்திவர்மனைக் குறிப்பிடுகிறார். நந்திவர்மன் வயிரமேகன் என்றும் அறியப்பட்டான்.

இந்தப் பாடல்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் சான்றுகளாகக் கொண்டு மு. இராகவய்யங்கார் திருமங்கையழ்வார் பொ.யு. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என்று கருதுகிறார். ந. சுப்புரெட்டியார் திருமங்கையாழ்வார் வாழ்ந்தது பொ.யு. 776 முதல் -881 வரையான காலகட்டத்தில் என்று குறிப்பிடுகிறார்.

இலக்கியம்/ இயற்றிய பிரபந்தங்கள்

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் எண்ணிக்கையில் நம்மாழ்வருக்குப் பின் அதிக பாசுரங்கள் இயற்றியவர் திருமங்கையாழ்வார். தன் பிரபந்தங்களில் பல்வேறு யாப்பு வகைகளைப் பயன்படுத்தினார். இறைவன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் தோற்றத்தில்(அர்ச்சாவதாரம்) ஈடுபாடு கொண்டிருந்தார். உற்பவமாலை, திருச்சாழல், பொங்கத்தம் பொங்கோ,வெண்துறை எனப் பல அரிய வகையான சிற்றிலக்கிய வகைகளில் பாடல்கள் பாடினார். திருமங்கையாழ்வாரின் காலத்தில் யாப்பில் பல புது வடிவங்கள் தோன்றின.

திருமங்கையாழ்வாரின் பாசுரங்களின் அடிநாதம் நாராயணன் என்னும் நாமத்தைக் கண்டு கொண்டது. இளமையில் செல்வங்களையும் சுகங்களையும் தேடி அலைந்து பின் நாராயணனைக் கண்டு கொண்ட வியப்பும், கடந்தகாலத் தவறுகளுக்கான வருத்தமும் பாசுரங்களில் தொனிக்கின்றன. திருமால் அருள் பாலிக்கும் ஐந்து நிலைகளில் (பரம், வியுஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை) அர்ச்சை என்னும் கோவிலில் பூசைகொள் உருவத்தையே பாடி, அதிலேயே ஆழ்ந்திருந்தார். அகப்பொருளில் பரகால நாயகியாகத் தன்னை பாவித்து தலைவி கூற்றாகவும், தாயின் கூற்றாகவும் தோழி கூற்றாகவும் தன் பக்தியையும், பிரிவாற்றாமையையும் பாடுகிறார். மடல்கள் பாடி, திருநெடுந்தாண்டகம் பாடிய பின் திருக்குறுங்குடியில் பரமபதம் அடைந்தார். பக்தியின் கனிந்த நிலையில் பாடப்பட்ட திருநெடுந்தாண்டகம் அவர் இறுதியாகப் பாடிய பிரபந்தம் (சரமப் பிரபந்தம்) என சில அறிஞர்கள்களும் பெரிய திருமடலே இறுதியில் பாடப்பட்டது என வேறு சில அறிஞர்களும் கருதுகின்றனர்.

திருமங்கையாழ்வார் பாடல்களில் திருமாலை முழுமுதல் தெய்வமாக உயர்த்தி மற்ற தெய்வங்களைக் குறைத்துக் காட்டும் போக்கும், பிற சமய வெறுப்பும் காணப்படுகின்றன.

பெரிய திருமொழி

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி 1084 பாசுரங்களைக் கொண்டது. பெரும்பாலும் வைணவத் தலங்களைப் பாடிய பாடல்களையும், நாயகி பாவத்தில் உள்ள பாடல்களையும் கொண்டது. பாசுரங்கள் பண்ணிசைக்கும் வகையில் பாடப்பட்டவை. தன் தவறுகளுக்கு வருந்தும் பாவனையும் சரணாகதியும் பல பாடல்களில் காணப்படுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களையும் ஒரே பதிகத்தில் பாடினார்( பெரிய திருமொழி, எட்டாம் பத்து. திருக்கண்ணபுரம்).

தாண்டகங்கள்

தாண்டகம் ஓர் யாப்பு வகை. ஒவ்வொரு அடியிலும், அறுசீர் அல்லது எண்சீர் அமைய, ஆடவர் அல்லது கடவுளரை நான்கு அடியால் போற்றிப் பாடுவது தாண்டகம். திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்), திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்) என்ற இரு தாண்டகங்களை இயற்றினார். இவை இசைப்பாடல்களாகவும் பாடப்படுகின்றன.

திருவெழுகூற்றிருக்கை

திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது. குடந்தை ஆராவமுதப் பெருமாளைப் பாடும் இப்பாடலில் திருமாலின் பெருமையை ஒன்று முதல் ஏழு வரை எண்களில் பொருள் வருமாறு ஏற்றியும் இறக்கியும் அமைத்திருக்கிறார். தேர் வடிவத்தில் கோலம் போல வடிவமைக்கும் வகையில் உள்ளது.

மடல் இலக்கியங்கள்

திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமடல், சிறிய திருமடல் இரண்டும் தமிழில் மடல் வகை சிற்றிலக்கியங்களின் முன்னோடிகள். சங்க இலக்கியங்களில் பெண்கள் மடலேறும் மரபு இல்லை. இம்மரபை மாற்றி திருமங்கை ஆழ்வார் திருமாலைத் தலைவனாகவும் தன்னைப் பரகால நாயகியாகவும் பாவித்து மடலேறுவதாகக் கூறுவதாக அமைந்துள்ளவை பெரிய திருமடல் (78 பாசுரங்கள்) மற்றும் சிறிய திருமடல் (40 பாசுரங்கள்). கடவுள் தலைவனாக இருந்தால் பெண்கள் மடலேறலாம் என்கிற விதியை இவ்விரண்டு திருமடல்களில் அடிப்படையில் பன்னிரு பாட்டியல் வகுத்தது. பெரிய திருமடல் கண்ணன் என்ற பெயர் விளங்கும்படியும் , சிறிய திருமடல் நாராயணன் என்ற பெயர் விளங்கும்படியும் அனைத்து வரிகளிலும் எதுகை பயின்று வருகிறது.

முக்கியமான பாசுரங்கள்

கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமமே

  குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்
 நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
 வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்
 நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
                                    பெரிய திருமொழி

(நற்குலமும், செல்வமும் தரும்; துன்பமெல்லாம் தீர்க்கும்; வீடுபேறையும் அளிக்கும்; பெற்ற தாயைவிட அதிகமாகப் பரிந்தூட்டும் நாராயணன் என்ற ஒரே ஒரு சொல்லை நான் கண்டுகொண்டேன்)

கொன்றேன் பல்லுயிரை

கொன்றேன் பல்லுயிரை குறிக்கோள் ஒன்றிலாமையால்
என்றேனும் இறந்தார்க்கு இனிதாக உறைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர் மாமலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே (பெரிய திருமொழி)

(வாழ்வில் நல்ல நோக்கம் இல்லாமல் பல உயிர்களைக் கொன்றேன். துன்பப்பட்டவர்களுக்கு இதமான சொல் ஒன்றும் சொல்லி அறியேன். வேங்கடவா, என்னை ஆட்கொள்வாய்)

திருமாலின் பரந்து நின்ற உருவம்

பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி
பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
விமையவர் தம் திரு வுரு வேறு எண்ணும் போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ
யொன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி
முகிலுருவம் எம் அடிகள் உருவம் தானே திருநெடுந்தாண்டகம்

(இந்திரன் சந்திரன் வருணன் குபேரன் என்று பலப்பல தெய்வங்கள் இருந்தாலும் விஷ்ணு, பிரமன், சிவன் என்கிற மூன்று மூர்த்திகளே முக்கியமானவை.அம்மூன்று மூர்த்திகளின் உருவங்களை ஆராய்ந்தால், பிரம்மன் பொன்னிறமானவன்; சிவன் செந்நிறமானவன்; திருமாலின் வடிவம் கருங்கடல் போன்றுள்ளது. மேற்சொன்ன மும்மூர்த்திகளையும் பரிசீலனை செய்யுமிடத்து, பஞ்சபூதங்களை உண்டாக்கி, பலவகைப்பட்ட சமயங்களையுயை உலகை உருவாக்கி எங்கும் நிறைந்து நின்ற பரஞ்சோதியான மேக வண்ணனே முழுமுதற்கடவுள் . )

சிறப்புகள்

திருமங்கையாழ்வார் நம்மாழ்வருக்கு இணையான அளவில் திவ்யப் பிரபந்தத்தில் பாசுரங்கள் இயற்றியிருக்கிறார். கவிதையின் வீச்சிலும் ஆழ்வார்களில் நம்மாழ்வாருக்கு அடுத்தவர் என கருதப்படுகிறார். திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாம் ஆயிரம் முழுவதும் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களால் ஆனது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 86 தலங்களுக்குப் பயணம் செய்து மங்களாசாசனம் செய்திருக்கிறார்[3]. "அவரால் பாடப்படவில்லையென்றால், அந்தக் கோவில் பிற்காலத்தையது என்று கொள்ளலாம்" என்று சுஜாதா குறிப்பிடுகிறார்.

திருமாலின் அர்ச்சாவதாரத்தில் ஆழ்ந்து அதிலேயே பரம், விபவம், வியூகம், அந்தர்யாமி என அனைத்து நிலைகளையும் கண்டவர் திருமங்கையாழ்வார். அவரது வாழ்வின் பிற்குதியில் பக்தியின் கனிந்த நிலையில் எங்கும் நிறைந்த பரம்பொருளின் தன்மையே பாடுபொருளாகிறது. நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்கள் நான்கு வேதங்களுக்கு சமமாகவும்,வேதங்களின் ஆறு அங்கங்களுக்குச் சமமாக திருமங்கையாழ்வாரின் பிரபந்தங்களும் வைணவர்களால் கருதப்படுகின்றன. இதை உபதேச ரத்தின மாலையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் குறிப்பிடுகிறார். அகப்பொருளில் தன்னை பரகால நாயகியாகப் பாவித்து எழுதப்பட்ட பாசுரங்களில் பரம்பொருளை அடைய ஜீவாத்மாவின் தவிப்பு வெளிப்படுகிறது.

மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த – வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்றென்று காதலிப்பார்
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து

ஆழ்வார்களில் மிக அதிக வகையான யாப்புகளையும் சிற்றிலக்கிய வகைகளையும் கையாண்டவர் திருமங்கையாழ்வார். தனது மடல் இலக்கியங்கள் மூலம் மரபை மாற்றி வளமடல் என்னும் சிற்றிலக்கிய வகைக்கு முன்னோடியானார்.

நம்மாழ்வாரின் பிரபந்தங்களின் பொருள் ஆழத்தை உணர்ந்து, அவற்றைக் கொண்டாடும் முகமாக திருவரங்கத்தில் பகல்பத்து உற்சவத்தைத் துவங்கினார். திருநெடுந்தாண்டகத்தை அபிநயத்துடன் திருவரங்கத்தில் திருமங்கையாழ்வார் பாடியதே அரையர் சேவை என்னும் நிகழ்த்துகலையின் துவக்கம். இன்றும் திருவரங்கத்தில் பகல்பத்து உற்சவத்தில் திருநெடுந்தாண்டகப் பாசுரங்கள் அரையர் சேவையில் பாடப்படுகின்றன. வைணவ ஆலயங்களில் இன்றும் ஆன்மிக, பண்பாடு நிகழ்வுகளாக அனுசரிக்கப்படும் பகல்பத்து, அரையர் சேவை போன்றவற்றை நடத்தி, வழிமுறைகளை வகுத்தவர் என்ற முறையிலும் திருமங்கையாழ்வாரின் இடம் முக்கியமானது.

உசாத்துணை

இணைப்புகள்

திருநாங்கூர் 11 கருட சேவை, தினமணி, பிப்ரவரி,2014

அடிக்குறிப்புகள்

  1. வைணவ வழிமுறைகளில் வைணவ நெறியைப் பின்பற்ற விரும்புபவர்களுக்கு தகுதியுடைய குருவிடம் ஐந்து சடங்குகள்

    சங்கு சக்கர முத்திரை பதித்தல்(தாப சம்ஸ்காரம்)
    12 திருமண் காப்பிடுதல் (புண்ட்ர சம்ஸ்காரம்),
    அடியவன், அடியவள் எனப் பெயர் சூட்டுதல் (தாஸ்ய சம்ஸ்காரம்),
    மந்திர தீட்சை பெறுதல் (மந்த்ர சம்ஸ்காரம்)
    யாகம், வழிபாட்டு முறைகளைக் கற்றல் (யக்ஞ சம்ஸ்காரம்)

    செய்விக்கப்படுகின்றன.

  2. *மணிமாடக் கோயிலின் நாராயணப் பெருமாள்
    • அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்
    • செம்பொன்செய்கோயிலின் செம்பொன் அரங்கர்
    • திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்
    • திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள்
    • திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்
    • திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள்
    • வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள்
    • திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள்
    • திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன்
    • திருக்காவளம்பாடியின் கோபால கிருஷ்ணன்
  3. திருமங்கையாழ்வார் மங்களாசாசனப் பாடல்கள்


✅Finalised Page