under review

திருவெழுகூற்றிருக்கை (திருமங்கையாழ்வார்)

From Tamil Wiki

திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை எழுகூற்றிருக்கை என்னும் சிற்றிலக்கியம் அல்லது யாப்பு வகையால் ஆன பாடல். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் மூன்றாம் ஆயிரமான இயற்பாவில் எட்டாம் பிரபந்தமாக 2672-ம் பாடலாக இடம்பெறுகிறது.திருமாலின் பெருமையைக் கூறும் முகமாக எண்கள் ஒன்று முதல் ஏழு வரை ஏற்றியும் இறக்கியும் பாடப்பட்டுள்ளன. குடந்தை சாரங்கபாணி ஆலயத்தில் ரதபந்தமாகப் பின்னாட்களில் பளிங்கில் பொறிக்கப்பட்டது. திருமால் ஆலயங்களில் தேரோட்டத்தில் தேர் வடம் பிடிக்கும் முன் திருவெழுகூற்றிருக்கை ஓதப்படுகிறது.

ஆசிரியர்

திருவெழுகூற்றிருக்கையை இயற்றியவர் திருமங்கையாழ்வார். நீலன், பரகாலன், கலியன் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டவர். அடியார் சேவைக்காக வழிப்பறி செய்தபோது பெருமாளால் எட்டெழுத்து மந்திரம் உபதேசிக்கப்பட்டு ஆட்கொள்ளப்பட்டார் என்று குருபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் இயற்றிய மற்ற பிரபந்தங்கள் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறிய திருமடல் ஆகியவை.

இலக்கணம்

திருவெழுகூற்றிருக்கை பாடல் அமைப்பு முறையும் இலக்கணமும் -பார்க்க: திருவெழுகூற்றிருக்கை

திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை திருவெழுகூற்றிருக்கை என்னும் இலக்கியவகைமையாக அல்லாமல் ரதபந்தமாகவும், சித்திரக்கவியாகவும் சிலரால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த வழக்கம் பிற்காலத்தில் வந்தது என வைணவ இலக்கிய அறிஞர் ம.பெ. ஶ்ரீனிவாசன் கருதுகிறார். திருவெழுகூற்றிருக்கையின் பாயிரம்(தனியன்) இதைச் சித்திரகவி எனக் குறிப்பிடவில்லை. இதற்கு இரு உரைகள் எழுதிய பெரியவாச்சான் பிள்ளையும் அவ்வாறு தம் உரையில் குறிப்பிடவில்லை. காலப்போக்கில் இது ரதபந்தமாக ஏற்கப்பட்டிருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர். கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பளிங்கில் திருவெழுகூற்றிருக்கை ரதபந்தமாக வடிக்கப்பட்டுள்ளது.

நூல் அமைப்பு

சாரங்கபாணி கோவிலில் ரதபந்தனமாக திருவெ ழுகூற்றிருக்கை http://gmbat1649.blogspot.com/

திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை 46 அடிகள் கொண்ட நிலைமண்டில ஆசிரியப்பாவால் ஆனது. ஒன்று முதல் ஏழு வரை ஏறி, பின் இறங்கி 'ஒன்றாய் விரிந்து நின்றனை' என ஒன்றில் முடிகிறது. முதலடி முதல் 37-ம் அடியின் முதல் சீர் வரை எழுகூற்றிருக்கையின் இலக்கணப்படி அமைந்தது. 37-ம் அடியில் கூற்றிருக்கை முடிவுபெற்று மற்ற அடிகள் துதியாக அமைந்தன.

எம்பெருமானார் திருவெழுகூற்றிருக்கைக்கு இரண்டு தனியன்கள்(பாயிரங்கள்) இயற்றியிருக்கிறார்.

குடந்தை சாரங்கபாணி ஆலயத்தை மங்களாசாசனம் செய்து பாடப்பட்ட திருவெழுகூற்றிருக்கையின் மூலம் திருமங்கையாழ்வார் குடந்தை ஆராவமுதனைச் சரணடைகிறார். பிரபஞ்சப் படைப்பு, பிரம்மாவின் படைப்பு, தசாவதாரங்கள் எனத் திருமாலின் பெருமையைக் கூறும் முகமாக எண்கள் ஒன்று முதல் ஏழு வரை ஏற்றியும் இறக்கியும் பாடப்பட்டுள்ளன. சில இடங்களில் எண்களைக் குறிக்கும் சொற்கள் எண்ணாகப் பொருள்படாமல் அந்த ஒலியில் வேறு பொருட்களைக் குறிக்கின்றன. அஞ்சிறை (அழகிய சிறகு) அஞ்சு எனப் பொருள் தராமல் அஞ்சு என்ற ஒலிக்கான பொருளைத் தருகிறது நால்வாய் யானை எனப் பொருள்படுகிறது.

எண்களும் பொருளும் -பொருள் கொள்ளும் முறை
  • ஒருபேருந்தி(1) இருமலர்த் தவிசில்(2), ஒருமுறை(1) அயனை ஈன்றனை,
  • ஒருமுறை(1) இருசுடர்(2) மீதினில் இயங்கா மும்மதிள்(3) இலங்கை இருகால்(2) வளைய, ஒருசிலை(1)
  • ஒன்றிய(1) ஈரெயிற்று(2) அழல்வாய் வாளியில் அட்டனை மூவடி(3) நானிலம்(4) வேண்டி, முப்புரிலொடு(3) மானுரி யிலங்கும் மார்வினில், இருபிறப்பு (2) ஒருமாணாகி(1),
  • ஒருமுறை(1) ஈரடி(2), மூவுலகு(3) அளந்தானை, நாற்றிசை(4) நடுங்க, அஞ்சிறைப் பறவை(5) ஏறி, நால்வாய்(4) மும்மதத்து(3) இருசெவி(2) ஒருதனி(1) வேழத் தரந்தையை

உரை

திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கைக்கு பெரியவாச்சான் பிள்ளை இரு உரைகள் எழுதியிருக்கிறார்.

இலக்கிய இடம்/சிறப்புகள்

திருவெழுகூற்றிருக்கையில் ஒன்று முதல் ஏழு வரை எண்கள் தேரைச்சுற்றி ஒன்றாய் மாலையாக அமைந்திருத்தலும் அந்த எண்கள் முறையே திருமாலின் பெருமையைச் சொற்களாக அமைத்துப் பொருள் கொள்ளும் வண்ணம் அமைந்ததும் அதன் சிறப்புகள். 'ஒருபேருந்தி' என பிரம்மனைப் படைத்ததில் தொடங்கி, 'ஒன்றாய் விரிந்து நின்றனை' என்று புடவியெங்கும் நிறைந்து நிற்கும் பரம்பொருளின் தன்மை சொல்லப்படுகிறது. வைணவக் கோவில் உற்சவங்களில், தேரோட்டம் துவங்கும் முன் திருவெழுகூற்றிருக்கையை இருமுறை பாடும் வழக்கம் உள்ளது.

பாடல் நடை

ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில்,
ஒருமுறை அயனை யீன்றனை, ஒருமுறை
இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள்
இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை
ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில்
அட்டனை, மூவடி நானிலம் வேண்டி,
முப்புரி _லொடு மானுரி யிலங்கும்.
மார்வினில், இருபிறப் பொருமா ணாகி,
ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை,
நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை
ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி
ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள்
இருநீர் மடுவுள் தீர்த்தனை, முத்தீ
நான்மறை ஐவகை வேள்வி, அறுதொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை,ஐம்புலன்
அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி
முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில்
ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர்
அறியும் தன்மையை, முக்கண் நாற்றோள்
ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன்
அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,
ஏழுல கெயிற்றினில் கொண்டனை,

(எம்பெருமானே! இவ்வுலகைப் படைப்பதற்காக உன் ஒரு திருநாபியில் தாமரை மலரின் இரு இதழ்களான ஆசனத்தில் ஒரு தரம் பிரமனைப் படைத்தாய்;

ஒருமுறை இரண்டு சுடர்களாகிய சந்திர சூரியர்கள் இலங்கையின் மீது சஞ்சரிக்கவும் அஞ்சுகிற ஒரு காலத்தில் மூவகை அரண் வாய்ந்த இலங்கை அழியுமாறு உன்னுடைய ஒப்பற்ற சார்ங்கத்தின் இரண்டு முனைகளை இணைத்து நாண் பூட்டி ஒரு வில்லால் வளையச் செய்து

ஒருமுறை இரண்டு பற்களை உடையதும் நெருப்பை கக்குகிற வாயை உடையதுமான அம்புகளை எய்தாய். மூன்று அடியால் நானிலம் வேண்டி, முப்புரி நூலோடு, ருபிறப்பாளனான (அந்தணன்), ஓர் பிரம்மச்சாரியாகி

ஒருமுறை ஈரடியால், மூவுலகு அளந்தாய், நான்கு திசைநடுங்க, அஞ்சிறைப் பறவை (கருடன் மீது) ஏறி, நால்வாய்(யானை) மும்மதத்து (மூன்று மதம்) உடைய இருசெவிகளுடைய ருதனி யானையின் துன்பத்தை

ஒருநாள் இருநீர்ப்பரப்பில்(பெரும் நீர்ப்பரப்பில்) தீர்த்தாய்(முதலையிடமிருந்து காத்தாய்) மூவகை அனல் வளர்த்து, நான்குவேதங்களை ஓதி, ஐந்து வகை வேள்விகள் செய்து ஓதுதல் முதலிய ஆறு தொழில்களைச் செய்யும் அந்தணர் வணங்கும் உன்னை ,ஐம்புலன்களை அடக்கி, நான்கு செயல்கள் (உண்ணுதல் உறங்குதல் அஞ்சுதல் விஷய போகம் செய்தல்), மூன்று குணங்களில்(சத்வம், ரஜஸ், தமஸ்) இரு குணங்களை (ரஜஸ், தமஸ்) ஒதுக்கி, சத்வமாகிய ரு குணத்தில்

உன் ஒருவனை மட்டுமே நினைப்பவர் இரு பிறப்பு அறுத்து(உலக வாழ்வின் பந்தங்கள் நீங்கி) வாழ்வர். மூன்று கண்களும், நான்கு தோள்களும் உடையவரும், ஐந்து நா கொண்ட பாம்பையும், கங்கை என்னும் ஆறையும் தலையில் தரித்த சிவனும் அறிவதற்கரியவனாக உள்ளவன் நீயே.வராகப்பெருமானாய் அவதரித்து ஏழு உலகங்களையும் வெள்ளத்தினின்றும் பெயர்த்தெடுத்து பூமிப் பிராட்டியை கொம்பினில் கொண்டு விளங்கினாய்!)

உசாத்துணை


✅Finalised Page