under review

சிறிய திருமடல்

From Tamil Wiki

சிறிய திருமடல் திருமங்கையாழ்வார் இயற்றிய மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த நூல். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் மூன்றாம் ஆயிரத்தின் இயற்பா தொகுதியில் ஒன்பதாவது பிரபந்தமாக 2673 - 2712 எண்ணுள்ள பாசுரங்களாக இடம் பெறுகிறது. பெண்கள் மடலேறுவதில்லை என்னும் சங்ககால மரபை மீறிய முதல் மடல் இலக்கியம்.

ஆசிரியர்

சிறிய திருமடலை இயற்றியவர் திருமங்கையாழ்வார். நீலன், பரகாலன், கலியன் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டவர். அடியார் சேவைக்காக வழிப்பறி செய்தபோது பெருமாளால் எட்டெழுத்து மந்திரம் உபதேசிக்கப்பட்டு ஆட்கொள்ளப்பட்டார் என்று குருபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் இயற்றிய மற்ற பிரபந்தங்கள் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், பெரிய திருமடல் , திருவெழுகூற்றிருக்கை ஆகியவை.

பெயர்க்காரணம்

மடலேறுதல் என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. தன் காதலியை அடைய முடியாத தலைவன் கடைசி முயற்சியாக ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு பனை மடல்களால் செய்யப்பட்ட குதிரை அல்லது யானை ஒன்றில் ஊர்ந்து தலைவியின் பெயரைப் பாடிக் கொண்டே செல்வது மடலூர்தல். பெண்கள் மடலேறும் மரபு சங்க இலக்கியங்களில் இல்லை. திருமங்கையாழ்வார் இந்த மரபை மீறி சிறிய திருமடலில் தன்னைப் பரகால நாயகியாகப் பாவித்து, நாராயணனை அடையவில்லையென்றால் மடலேறுவேன் எனப் பாடுகிறார். திருமங்கையாழ்வாரின் மடல்களைப் பின்பற்றி, பின்னாட்களில் மடல் இலக்கியம் எனும் வகைமை உருவானது.

நூல் அமைப்பு

பாடல்களின் எண்ணிக்கை குறித்த விவாதம்

சிறிய திருமடல் பிள்ளை திருநறையூரர் இயற்றிய பாயிரம் தவிர 155 அடிகளைக் கொண்ட கலி வெண்பாவால் ஆனது. எண்ணிக்கைக்காக 40 பாசுரங்களாகப் பிரிக்கப்பட்டது. திவ்யப் பிரபந்தத்தின் பாசுரங்களின் தொகை வேதாந்த தேசிகர் காலத்தில் வரையறுக்கப்பட்டது. வேதாந்த தேசிகர் இதை 40 பாடல்களாகக் கணக்கிட்டார். மடல்களை ஒரு பாடலாகக் கணக்கிட்டபோது இராமானுச நூற்றந்தாதியைச் சேர்த்து திவ்யப் பிரபந்த பாசுரங்கள் 3882 இருந்தன. நாலாயிரம் என்ற எண்ணிக்கைக்காக பெரிய திருமடலை 78 பாடல்களாகவும், சிறிய திருமடலை 40 பாடல்களாகவும் கணக்கிட்டனர். தேசிகரின் பிரபந்த சாரத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிய திருமடற் பாட்டு முப்பத்தெட்டு இரண்டும்
சீர்பெரிய மடல் தனிப்பாட்டு எழுபத் தெட்டும் - பிரபந்தசாரம்

அப்பிள்ளையாசிரியர் மடலில் அமைந்த ஒரு கண்ணியை (இரண்டு அடிகள்)ஒரு பாசுரமாகக்கொண்டு சிறிய திருமடலை 771/2 பாசுரங்கள் என்றும், பெரிய திருமடலை 1481/2 பாசுரங்கள் என்றும் கணக்கிட்டு மொத்தம் 226 பாசுரங்களாகக் கொண்டார். அப்பிள்ளையின் கணக்கின்படி 'இராமாதுச நூற்றந்தாதி' இன்றியே 4000 என்ற தொகை நிறைவு பெறுகின்றது.

திவ்யப் பிரபந்தத்தில் வெண்பாவின் இலக்கணம் பொருந்தி, கடைசி அடி மூன்று சீரும் மற்ற அடிகள் நான்கு சீரும் பெற்று 12 அடிகளுக்கு மிகுவதால் இது கலிவெண்பா. திருமடல்களிரண்டையும் கலிவெண்பாவாகக்கொண்டு ஒவ்வொரு மடலையும் ஒவ்வொரு பாட்டாகவே கொள்ளவேண்டும் என்பது பெரியவாச்சான் பிள்ளை போன்ற உரையாசிரியர்களின் கருத்து. திருமடல் முழுவதும் ஒரே எதுகையாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. "யாப்பிலக்கணப்படி திருமடலை ஒரே பாட்டாகக் கொள்வதே பொருத்தம். காரணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலிவெண்பாவாலான பிரபந்தம்" என்று ந. சுப்புரெட்டியார் 'வைணவமும் தமிழும்' நூலில் குறிப்பிடுகிறார்.

பரகால நங்கை தான் மடலேறுவதற்கான காரணத்தைச் சொல்லல்

பரகால நங்கை தன் கதையை " நான் என் தோழியருடன் பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது கண்ணன் குடங்கூத்து காண் அழைத்தான். கண்ணன் குடங்கூத்தாடும் அழகைக் கண்டு என் மனத்தைப் பறிகொடுத்தேன். அவன் நினைவில் மேனிநிறமிழந்தேன், கைவளைகள் கழன்றன. தோழியர் பேச்சைக் காதுகொடுத்தும் கேட்கவில்லை. , அறிவென்பது அடியோடே போயிற்று, பேதமை மிகுந்த என் நிலை கண்டு தாய் பல பரிகாரங்கள் செய்தாள். அத்தனை செய்தும் என் மனோ வியாதி தீரவில்லை, ஒரு குறத்தி வந்து நெல்மணிகள் எடுத்து நோக்கி குறிநோக்கி மெய்சிலிர்த்தாள்.

அன்னையே! உன் மகளைப் புதுதெய்வமோ அணங்கோ தீண்டவில்லை.இவ்வுலகத்தை அளந்தவனும், குன்றைக் குடையாக எடுத்தவனும் எவனோ அவன் ஊரிலுள்ள பசுக்களையெல்லாம் மேய்த்தும் உலகங்களையெல்லாம்உண்டு, உமிழ்ந்து திருப்திபெறாதவனாய் ஆயர்படியில் வெண்ணெய் திருடி, கண்ணிக் குறுங்கயிற்றால் உரலோடே கட்டுண்ட திருமால் உன் மகளைப் படுத்துபவன் என்று கூற தாய் "இந்த நோய் தந்தது அவனென்றால் தன் அடியாளின் துன்பம் தீர்க்கமலிருக்க மாட்டானல்லவா" என்று ஆறுதல் கொண்டாள். துன்பம் தாளாமல் என் நெஞ்சைத் தூது போகச் சொன்னேன். அதுவும் என் வசமில்லை. நாயகன் வரும் வரைக்கும் ஆற்றியிருக்கச் சொல்கிறீர்கள். கடல் போல வளர்ந்து காம நோய் பெருகியவர்கள் அடங்கியிருப்பார்களா?

அறம், பொருள், இன்பம், வீடு என மானிடர் அடையத்தக்க நான்கில் இன்பத்தை அடைந்தால் அறமும், பொருளும் தானே வரும். வீடுபேறை அறிந்தவர் யார்? தரையில் இருக்கும் முயலை விட்டு வானில் பறக்கும் காக்கையின் பின் ஓடுவதேன்?

திருக்கண்ணமங்கை, திருவரங்கம், திருமாலிருஞ்சோலை போன்ற அனைத்து திருத்தலங்களுக்கும் சென்று, அவனுடைய ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி, அவன் எனக்குத் தந்த துன்பத்தை அங்குள்ள மக்களிடம் சொல்லி, இகழ்பவர்களுடைய பேச்சுக்களை மதியாமல் பெண்ணைமடல் மேல் மடலூர்ந்து செல்வேன்.

சிறப்புகள்/இலக்கிய இடம்

சிறிய திருமடல் நாயகன் நாயகி பாவத்தில் மனிதன் இறைவன்மேல் கொள்ளும் காதலையும், தாபத்தையும் தன் பாடுபொருளாகக் கொண்டது. மரபை மீறிய புரட்சி இலக்கியமாகக் கருதப்படுகிறது. திருமங்கையாழ்வாரின் இரு மடல்களும் மடல் இலக்கியத்திற்கு முன்னோடிகள். முதன்முதலில் இயற்றப்பட்ட மடல்நூல் சிறிய திருமடல். கடவுள் தலைவனாக இருந்தால் பெண்கள் மடலேறலாம் என்கிற விதியை இம்மடல்களின் அடிப்படையில் பன்னிரு பாட்டியல் வகுத்தது.

திருமங்கையாழ்வார் உலகில் ஆண் என்ற புருஷாகாரம் (பேராண்மை) திருமாலுக்கே உரியது என்பதால் அவனைத் தவிர அனைவரும் பெண்களே என்ற கோட்பாட்டைத் திருமடலுக்கு மூலமாகக் கொள்கிறார் . அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களுள் இன்பம் சிறந்தது என்று பரகால நாயகி நாயகனுடன் கூடும் இன்பத்தை வேண்டுவதன் பொருள் இம்மனித உடலினைக் கொண்டு இறையனுபவத்தைப் பெற வேண்டும் என்பதன்றி வீடுபேறை மறுப்பது அல்ல என உரையாசிரியர்கள் கருதுகின்றனர். 'ஏரார் முயல்விட்டுக் காக்கைப்பின் போவதே?' என்பதில் முயல் அர்ச்சாவதாரத்தையும்(கோவில்களில் உள்ள திருவுருவம்) காக்கை மோட்சத்தையும் குறிக்கும். எளிதாகக் கண்டு அனுபவிக்கக்கூடிய திருவுருவத்தை விட்டுவிட்டு எங்கோ இருக்கும் மோட்சத்தைத் தேடுவதேன்? -என்று பெரியவாச்சான் பிள்ளை தன் உரையில் குறிப்பிடுகிறார்.

கட்டுவிச்சி கூற்றாக திருமாலின் அவதாரங்களும், தலைவி கூற்றாகப் பல திருத்தலங்களின் சிறப்பும் கூறப்படுகின்றன.

பாடல் நடை

முயலைவிட்டுக் காக்கையைத் தொடர்வதா?

பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே-அம்மூன்றும்
ஆராயில் தானே அறம்பொருள் இன்பமென்று,
ஆரார் இவற்றின் இடையதனை எய்துவார்,
சீரார் இருகலையும் எய்துவர்-சிக்கெனமற்று
ஆரானு முண்டென்பார் என்பது தானதுவும்,
ஓராமை யன்றே உலகத்தார் சொல்லுஞ்சொல்,
ஓராமை யாமா றதுவுரைக்கேன் கேளாமே,
காரார் புரவியேழ் பூண்ட தனியாழி,
தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டுபுக்கு,
ஆரா அமுதமங் கெய்தி-அதினின்றும்
வாரா தொழிவதொன் றுண்டே?, அதுநிற்க,
ஏரார் முயல்விட்டுக் காக்கைப்பின் போவதே?

(அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கிலும் வீடுபேறு என்பதை யாரறிந்தார்? மற்ற மூன்றிலும் இன்பமே மனிதர் அடையத்தக்கது. அதை அடைந்தால் அறமும், பொருளும் தானே வரும். அருகில் உள்ள இன்பத்தை நாடாமல் வீடுபேறத் தேடுவது அருகில் உள்ள முயலை விட்டுவிட்டு பறக்கும் காகத்தைப் பிடிப்பது போன்றது. )

மடலூர்வேன்

ஓரானைக் கொம்பொசித்து ஓர்ஆனை கோள்விடுத்த
சீரானைச் செங்கண் நெடியானைத் தேன்துழாய்த்
தாரானை தாமரைபோல் கண்ணானை-எண்ணரும்சீர்ப்
பேரா யிரமும் பிதற்றி - பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார்பூம் பெண்ணை மடல்

(ஒரு யானையின் தந்தத்தை ஒடித்து, மற்றொரு யானையை முதலையிடமிருந்து காத்த செங்கண்மாலை அவன் ஆயிரம் நாமமும் சொல்லி அவன் எனக்குத் தந்த துன்பத்தை சொல்லி மடலூர்வேன்)

உசாத்துணை

திருமங்கையாழ்வார் வளர்த்த பக்திப் பெரும் பயிர்-முனைவர் லோகநாயகி, தமிழ் இணையக் கல்விக் கழகம்

சிறிய திருமடல்

வைணவமும், தமிழும்-ந.சுப்புரெட்டியார், ஆர்கைவ் வலைத்தளம்


✅Finalised Page