under review

பெரிய திருமடல்

From Tamil Wiki

பெரிய திருமடல் திருமங்கையாழ்வார் இயற்றிய மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த நூல். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் மூன்றாம் ஆயிரத்தின் இயற்பா தொகுதியில் 2713 - 2790 எண்ணுள்ள பாசுரங்களாக இடம் பெறுகிறது. பெண்கள் மடலேறுவதில்லை என்னும் சங்ககால மரபை மீறிய பிரபந்தம்.

ஆசிரியர்

பெரிய திருமொழியை இயற்றியவர் திருமங்கையாழ்வார். நீலன், பரகாலன், கலியன் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டவர். அடியார் சேவைக்காக வழிப்பறி செய்தபோது பெருமாளால் எட்டெழுத்து மந்திரம் உபதேசிக்கப்பட்டு ஆட்கொள்ளப்பட்டார் என்று குருபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் இயற்றிய மற்ற பிரபந்தங்கள் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், சிறிய திருமடல் , திருவெழுகூற்றிருக்கை ஆகியவை.

பெயர்க்காரணம்

மடலேறுதல் சங்ககால வழக்கங்களில் ஒன்று. தன் காதலியை அடைய முடியாத தலைவன் கடைசி முயற்சியாக ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு பனை மடல்களால் செய்யப்பட்ட குதிரை அல்லது யானை ஒன்றில் ஊர்ந்து தலைவியின் பெயரைப் பாடிக் கொண்டே செல்வது மடலூர்தல். பெண்கள் மடலேறும் மரபு சங்க இலக்கியங்களில் இல்லை. திருமங்கையாழ்வார் இந்த மரபை மீறி பெரிய திருமடலில் தன்னைப் பரகால நாயகியாகப் பாவித்து, நாராயணனை அடையவில்லையென்றால் தமிழ்மரபு அனுமதிக்காத்தால் வடநாட்டின் நெறியைப் பின்பற்றி மடலேறுவேன் (மன்னும் வடநெறியே வேண்டினேன்) எனப் பாடுகிறார். திருமங்கையாழ்வாரின் மடல்களைப் பின்பற்றி, பின்னாட்களில் மடல் இலக்கியம் எனும் வகைமை உருவானது.

நூல் அமைப்பு

பாடல்களின் எண்ணிக்கை குறித்த விவாதம்

பெரிய திருமடல் 297 அடிகளைக் கொண்ட கலி வெண்பாவால் ஆனது. எண்ணிக்கைக்காக 78 பாசுரங்களாகப் பிரிக்கப்பட்டது. திவ்யப் பிரபந்தத்தின் பாசுரங்களின் தொகை வேதாந்த தேசிகர் காலத்தில் வரையறுத்துக் கூறப்பெற்றது. வேதாந்த தேசிகர் இதை 78 பாடல்களாகக் கணக்கிட்டார். மடல்களை ஒரு பாடலாகக் கணக்கிட்டபோது இராமானுச நூற்றந்தாதியைச் சேர்த்து திவ்யப் பிரபந்த பாசுரங்கள் 3882 இருந்தன. நாலாயிரம் என்ற எண்ணிக்கைக்காக பெரிய திருமடலை 78 பாடல்களாகவும், சிறிய திருமடலை 40 பாடல்களாகவும் கணக்கிட்டனர். தேசிகரின் பிரபந்த சாரத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிய திருமடற் பாட்டு முப்பத்தெட்டு இரண்டும்
சீர்பெரிய மடல் தனிப்பாட்டு எழுபத் தெட்டும் - பிரபந்தசாரம்

அப்பிள்ளையாசிரியர் மடலில் அமைந்த ஒரு கண்ணியை (இரண்டு அடிகள்)ஒரு பாசுரமாகக்கொண்டு சிறிய திருமடலை 771/2 பாசுரங்கள் என்றும், பெரிய திருமடலை 1481/2 பாசுரங்கள் என்றும் கணக்கிட்டு மொத்தம் 226 பாசுரங்களாகக் கொண்டார். அப்பிள்ளையின் கணக்கின்படி 'இராமாதுச நூற்றந்தாதி' இன்றியே 4000 என்ற தொகை நிறைவு பெறுகின்றது.

திவ்யப் பிரபந்தத்தில் வெண்பாவின் இலக்கணம் பொருந்தி, கடைசி அடி மூன்று சீரும் மற்ற அடிகள் நான்கு சீரும் பெற்று 12 அடிகளுக்கு மிகுவதால் இது கலிவெண்பா. திருமடல்களிரண்டையும் கலிவெண்பாவாகக்கொண்டு ஒவ்வொரு மடலையும் ஒவ்வொரு பாட்டாகவே கொள்ளவேண்டும் என்பது பெரியவாச்சான் பிள்ளை போன்ற உரையாசிரியர்களின் கருத்து. திருமடல்முழுவதும் ஒரே எதுகையாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. "யாப்பிலக்கணப்படி திருமடலை ஒரே பாட்டாகக் கொள்வதே பொருத்தம். காரணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலிவெண்பாவாலான பிரபந்தம்" என்று ந. சுப்புரெட்டியார் 'வைணவமும் தமிழும்' நூலில் குறிப்பிடுகிறார்.

பாடுபொருள்

மடல் இலக்கியம் பாட்டுடைத் தலைவனின் பல்வேறு பெருமைகளை எடுத்துக் காட்டுகின்றது. மடல் ஏறத் துணியும் தலைவியின் நிலை விளக்கப்படுகின்றது.மடல் ஏறத் துணிவதற்கான காரணம் சுட்டப்படுகின்றது.

பரகால நாயகி, திருநறையூரிலுள்ள கோவிலில் திருமாலைக் கண்டு காதல் கொள்கிறாள். அவன் பக்கத்தில் திருமகள் நிற்பதைக் கூடக் காணவில்லை. திருமாலின் அழகில் மயங்கினாள். அவள் மனமும் அறிவும் திருமாலிடம் சென்றன. அவள் கை வளையல்களும் மேகலை என்ற அணிகலனும் கழன்று வீழ்ந்தன. காதல் நோயால் வருந்தி பலவாறு துன்பம் அடைகின்றாள். அவனை அடைவதற்காக மடல் ஏற முற்படுகின்றாள். அப்போது தான் மடல் ஏறுவதற்கு உரிய காரணங்களைக் கூறுகின்றாள்.

"அவனை நான் திருநறையூரில் கண்டேன். அவனை வணங்கினேன். என் நிலையை எடுத்துக் கூறினேன். இருந்தும் கூட அவன் தன் மார்பையும் திரு அருளையும் தரவில்லை. இதை எல்லா இடமும் சென்று கூறுவேன். பெண்கள் மடல் ஏற மாட்டார்கள். அவர்கள் அவ்வாறு மடல் ஏறுவது பழிக்கு இடம் ஆகும் என்பது தமிழ் மரபு. இம்மரபை நான் ஏற்கவில்லை. ஆகவே வடநூல் மரபைப் பின்பற்றுவேன்" என மரபை மீறத் துணிகிறாள்.

சீதை தன் கணவன் வனவாசம் சென்றபொது பிரிந்திருக்க முடியாமல் கூடே செல்லவில்லையா, வேகவதி என்ற பெண் தன் தமையனின் தடையை மீறி தன் காதலனை அடையவில்லையா, உலூபி அர்ஜுனன்மேல் காதல் கொண்டு மணம் புரியவில்லையா, பாணாசுரனின் மகள் உஷை அநிருத்தனைக் கவர்ந்து வந்து மணம் புரியவில்லயா? என தான் விரும்பிய கணவனை நாடிச் சென்றபெண்களை புராணங்களிலிருந்து உதாரணங்கள் காட்டுகிறாள்.

தலைவனாகிய திருமால் எழுந்தருளும் இடங்களையும் சிறப்புகளையும் , அவதாரப் பெருமைகளையும் கூறுகிறாள். திருவிண்ணகரில் பொன்மலைபோல் எழுந்தருளியவன், திருக்குடந்தையில் போர்செய்த காளையைப் போல் சாய்ந்து பள்ளி கொண்டவன் என்று திருமாலின் 25 திவ்ய தேசங்களின் சிறப்புகளையும், வராகம்,, வாமனம் போன்ற அவதாரப் பெருமைகளையும் கூறுகிறாள்.

"அவன் என்னை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் மக்கள் கூடும் இடங்களில் நான் அவனைப் பழி சொல்வேன். குடங்கள் வைத்துக் கூத்தாடியவன், தன்னை விழைந்த பெண்ணின் மூக்கை சிதைத்தவன், பெண்ணைக் கொன்றவன், வெண்ணையை திருடித் தின்று தன் வயிற்றை வளர்த்தவன், பாண்டவர்கள் ஆணையை ஏற்று வேலைக்காரன் போல் தூது சென்றவன் போன்ற பழிகளைச் சொல்லி மடலூர்வேன்" என்று தன் முடிவைச் சொல்கிறாள். மடலூறும் நிகழ்வு பாடப்படவில்லை.

சிறப்புகள்/இலக்கிய இடம்

பெரிய திருமடல் நாயகன் நாயகி பாவத்தில் மனிதன் இறைவன்மேல் கொள்ளும் காதலையும், தாபத்தையும் தன் பாடுபொருளாகக் கொண்டது. மரபை மீறிய புரட்சி இலக்கியமாகக் கருதப்படுகிறது. திருமங்கையாழ்வாரின் இரு மடல்களும் மடல் இலக்கியத்திற்கு முன்னோடிகள். கடவுள் தலைவனாக இருந்தால் பெண்கள் மடலேறலாம் என்கிற விதியை இம்மடல்களின் அடிப்படையில் பன்னிரு பாட்டியல் வகுத்தது.

திருமங்கையாழ்வார் உலகில் ஆண் என்ற புருஷாகாரம் திருமாலுக்கே உரியது என்பதால் அவனைத் தவிர அனைவரும் பெண்களே என்ற கோட்பாட்டை பெரிய திருமடலுக்கு மூலமாகக் கொள்கிறார் . அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களுள் இன்பம் சிறந்தது என்று பரகால நாயகி நாயகனுடன் கூடும் இன்பத்தை வேண்டுவதன் பொருள் இம்மனித உடலினைக் கொண்டு இறையனுபவத்தப் பெற வேண்டும் என்பதாகும் என உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.

உரை

பெரிய திருமடலுக்கு பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகியோர் உரை எழுதியிருக்கின்றனர்.

பாடல் நடை

பாட்டுடைத் தலைவனின் பெருமை

பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியைத்
தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை யிடவெந்தை ஈசனை
மன்னும் கடன்மலை மாயவனை வானவர்தம்
சென்னி மணிச் சுடரைத் தண் கால் திறல் வலியைத்
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை யரியை யருமறையை
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியைக் கோவலூர்
மன்னு மிடை கழி எம்மாயவனைப் ...

(நப்பின்னையின் கணவன், பிறப்பற்றவன், பாற்கடலில் கிடக்கும் மணிச்சுடர், தேவர்கள் தலையால் ஏந்தும் மணி, எவரும் அறியவியலா தத்துவம், முத்து, அருமறை, உலகை உண்ட பெருமான், திருக்கோவலூரில் இடைகழியில் தோன்றியவன் )

பரகால நாயகி காதல் நோயால் வருந்தல்

இன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே,
முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து,
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும்,
என்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன்

(காதல் நோயால் வாடும் பரகால நாயகிக்கு தென்றலும் தீயாய்ச் சுடுகிறது, பறவைகளின் ஒலி நெஞ்சை வாள்கொண்டு போழ்வது போல் இருக்கிறது)

வடநெறியே வேண்டுவோம்

அன்ன நடையார் அலர்ஏச, ஆடவர்மேல்
மன்னும் மடல்ஊரார் என்பதுஓர் வாசகமும்
தென்உரையில் கேட்டுஅறிவது உண்டுஅதனை
யாம்தெளியோம்;
மன்னும் வடநெறியே வேண்டினோம்

(மடலூர்தல் தமிழ்மரபில் இல்லை. நான் வடநெறியைப் பின்பற்றுவேன்)

அவனைப் பழி சொல்லி மடலூர்வேன்

மின்இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்இடத்தும்
தன்அடியார் முன்பும் தரணி முழுதுஆளும்
கொல்நவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன்நிலைமை எல்லாம் அறிவிப்பேன்
.............................................................
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து
மன்னிய திண் எனவும் – வாய்த்த மலை போலும்
தன்னிகரொன் றில்லாத தாடகையை, மாமுனிக்காகத்
தென்னுலகம் ஏற்றுவித்த திண்டிறலும்-மற்றிவைதான்
உன்னி யுலவா வுலகறிய வூர்வன்நான்,
முன்னி முளைத்தெழுந் தோங்கி யொளிபரந்த,
மன்னியம்பூம் பெண்ணை மடல்.

நாட்டில் எல்லோரிடமும் அவனைப் பற்றிப் பழி சொல்வேன். தன்னை நாடிய பெண்ணின் மூக்கை அறுத்தவன். நிகரில்லாத தாடகையைக் கொன்றவன் என்றெல்லாம் சொல்லி பெண்பனை மடலில் ஊர்வேன்)

உசாத்துணை

பெரிய திருமடல், தமிழ் இணைய கல்விக் கழகம் பெரிய திருமடல், அண்ணங்கராச்சாரியார் உரை


✅Finalised Page