under review

பெரிய திருமொழி

From Tamil Wiki

பெரிய திருமொழி நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இரண்டாம் ஆயிரத்தில் இடம்பெறும் பிரபந்தம். திருமங்கையாழ்வார் இயற்றிய 1084 பாசுரங்களைக் கொண்டது. பல வைணவ திவ்யதேசங்களுக்கு சென்று அங்கு கோவில் கொண்ட தெய்வத்தைப் பாடிய பாசுரங்களும், பரகால நாயகியாகத் தன்னை பாவித்துப் பாடிய அகத்துறைப் பாடல்களும் , கண்ணனைக் குழந்தையாய் நினைத்துப் பாடிய பிள்ளைத்தமிழ் மற்றும் பல சிற்றிலக்கிய வகைகளும், யாப்பு வகைகளும் கொண்டது.

ஆசிரியர்

பெரிய திருமொழியை இயற்றியவர் திருமங்கையாழ்வார். நீலன், பரகாலன், கலியன் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டவர். அடியார் சேவைக்காக வழிப்பறி செய்தபோது பெருமாளால் எட்டெழுத்து மந்திரம் உபதேசிக்கப்பட்டு ஆட்கொள்ளப்பட்டார் என்று குருபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் இயற்றிய மற்ற பிரபந்தங்கள் திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறிய திருமடல் , திருவெழுகூற்றிருக்கை ஆகியவை.

பெயர்க்காரணம்

திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழி, பெருமாள் திருமொழி, நாச்சியார் திருமொழி, திருவாய்மொழி என ஐந்து திருமொழிகள் உள்ளன. நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் பாசுரங்களைக் கொண்டதால் பெரிய திருமொழி எனப் பெயர் வந்தது என அறிஞர்கள் கருதுகின்றனர்.

நூல் அமைப்பு

பெரிய திருமொழி நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இரண்டாம் ஆயிரத்தில் 948 முதல் 2031 வரையிலான பாடல்களாக இடம்பெற்றுள்ளது. 11 பத்துகளைக் கொண்டது. ஒவ்வொரு பத்தும் பத்து பாசுரங்களைக்கொண்ட பத்து திருமொழிகளால் ஆனது. பதினோராம் பத்து மட்டும் 8 திருமொழிகளைக் கொண்டது.

108 திருமொழிகள் ஒவ்வொன்றிலும் 10 பாசுரங்கள்.பத்தாம் பத்தின் ஏழாவது திருமொழியில் மட்டும் 14 பாசுரங்கள். 108*10 +4 =1084 பாசுரங்கள்.

ஒவ்வொரு திருமொழியின் இறுதிப் பாடலிலும் திருமங்கையழ்வார் இயற்றியதைப் பற்றிய குறிப்பும் அப்பாசுரங்களின் பலனும் கூறப்படுகின்றன.

பாயிரங்கள் (தனியன்)

திருக்கோட்டியூர் நம்பி, எம்பெருமானார், கூரத்தாழ்வார் மூவரும் பெரிய திருமொழிக்கு பாயிரம் (தனியன்) எழுதியுள்ளனர்.

எம்பெருமானார் இயற்றிய தனியன்

வாழிபரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்

முதல் பத்து

முதல்பத்தில் முதல் திருமொழி எட்டெழுத்து மந்திரத்தின், நாராயண நாமத்தின் பெருமையைப் பாடுகிறது. ஒவ்வொரு பாடலும் நாராயணா எனும் நாமமே என முடிவடைகிறது. அடுத்த ஒன்பது திருமொழிகள் திருப்பிரிதி(மானசரோவர்), திருவதரி, திருவதரிஆசிரமம், திருச்சாளக்கிராமம், நைமிசாரண்யம், சிங்கவேள் குன்றம், திருவேங்கடம்(4 திருமொழிகள்) ஆகிய திவ்யதேசங்களையும், அங்கு கோவில் கொண்ட பூசைத்திருமேனியயையும் பாடுபவை.

இரண்டாம் பத்து

இரண்டாம் பத்தில் உள்ள திருமொழிகள் திருவேங்கடம், திருஎவ்வுளூர்(திருவள்ளூர்), திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருக்கடல்மல்லை (2 திருமொழிகள்), திருவிடந்தை (தலைவியின் ஆற்றாமை கண்டு தாய் இரங்கல்), திருவட்டபுயகரம் (தலைவனின் உருவெளிப்பாடு கண்ட தலைவி தோழிக்கும், தாய்க்கும் சொல்வது), திருப்பரமேசுவர விண்ணகரம், திருக்கோவலூர் ஆகிய திருநான்காத்தலங்களைப் பாடுகிறார். அகத்துறைப் பாடல்களில் தன்னை பரகால நாயகியாகப் பாவித்து, நாயகி பாவத்தில் தன் பக்தியை வெளிப்படுத்துகிறார்.

மூன்றாம் பத்து

மூன்றாம் பத்தில் திருவயிந்திபுரம், தில்லைச் திருச்சித்ரகூடம்(2 திருமொழிகள்), திருக்காழிச் சீராம விண்ணகரம், திருவாலி (3 திருமொழிகள்), திருநாங்கூர் மணிமாடக்கோவில், திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம், திருநாங்கூர் அரிமேய விண்ணகரம் ஆகிய திருத்தலங்களைப் பாடியுள்ளார்.

நான்காம் பத்து

நான்காம் பத்தில் திருநாங்கூர் திருதேவனார்த்தொகை, திருநாங்கூர் வண்புருடோத்தமம், திருநாங்கூர் செம்பொன்செய்கோவில், திருநாங்கூர் தெற்றியம்பலம், திருநாங்கூர் திருமணிக்கூடம், திருநாங்கூர் காவளம்பாடி, திருநாங்கூர் திருவெள்ளக்குளம், திருநாங்கூர் பார்த்தன்பள்ளி (தலைவியின் செயல் கண்டு ஆற்றாது நற்றாய் கூறல்) , திருஇந்தளூர், திருவெள்ளியங்குடி ஆகிய தலங்கள் பாடப்பட்டுள்ளன.

ஐந்தாம் பத்து

ஐந்தாம் பத்தில் திருப்புள்ளப்பூதங்குடி, திருவரங்கம் (ஐந்து திருமொழிகள்), திருப்பேர்நகர், திருநந்திபுர விண்ணகரம் ஆகிய தலங்கள் பாடப்பட்டுள்ளன.

ஆறாம் பத்து

ஆறாம் பத்தில் திருவிண்ணகரம்(3 திருமொழிகள்), திருநறையூர் (7 திருமொழிகள்) ஆகிய திவ்ய தேசங்களைப் பாடியிருக்கிறார் திருமங்கையாழ்வார்.

ஏழாம் பத்து

ஏழாம் பத்தில் திருநறையூர்(3 திருமொழிகள்), திருச்சேறை, திருவழுந்தூர்(4 திருமொழிகள்), திருபுலியூர் சலசயனம், திருக்கண்ணமங்கை ஆகிய தலங்கள் பாடப்பட்டுள்ளன.

எட்டாம் பத்து

எட்டாம் பத்து முழுவதும் திருக்கண்ணபுரம் தலமும் அங்கு கோவில் கொண்ட பக்தவத்ஸலப் பெருமாளும் மட்டுமே பாடப்பட்டுள்ளனர். முதல் ஐந்து திருமொழிகள் அகப்பொருள் சார்ந்தவை. அவ்ற்றின் பாடுபொருள்கள்:

  • தலைவன் பால் ஈடுபட்ட தலைவியின் செயல்களைக் கேட்டவர்க்கு நற்றாய் கூறுதல்
  • தலைவியின் நிலைகண்ட தாய் தலைவனைப் பழித்தும், தலைவியில் இளமைக்கு இரங்கியும் கூறல்
  • தலைவனைப் பிரிந்த தலைவியின் இரங்கல்
  • கோத்தும்பி
  • தலைவி மாலைப்பொழுது கண்டு இரங்கல்
ஒன்பதாம் பத்து

ஒன்பதாம் பத்தில் திருக்கண்ணங்குடி, திருநாகை (பிள்ளைத்தமிழ்-அச்சோப்பதிகம்), திருப்புல்லாணி (தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுந்து தலைவனைத் தேடிப் போகத் துணிந்து நெஞ்சையும், தோழியையும் துணை வேண்டுதல்), திருப்புல்லாணி (தலைவி பறவைகளைத்‌ தாதுவிட்டும்‌, பிறை, தென்றல்‌ முதலியவற்‌றால்‌ வருந்தியும்‌ கூறுதல்‌), திருக்குறுங்குடி (பிறிவு ஆற்றாத தலைவி, தலைவன்‌ இருக்கும்‌ இடத்தில்‌ தன்னைக்‌ கொண்டு சேர்க்குமாறு, தாயார்‌ தோழியரை வேண்டுதல்‌), திருக்குறுங்குடி (தலம்), திருவல்லவாழ், திருமாலிருஞ்சோலை(தலம்), திருமாலிருஞ்சோலை(பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச்‌ சென்ற தலைவியின்‌ நிலையைக்‌ குறித்துத்‌ தாய்‌ இரங்கிக்‌ கூறுதல்‌), திருக்கோட்டியூர்‌) ஆகிய தலங்கள் பாடப்பட்டுள்ளன.

பத்தாம் பத்து

பத்தாம் பத்தில் உள்ள திருமொழிகளின் பாடுபொருள்கள் :

  • பதினெண் திருப்பதிகள்,
  • பொங்கத்தம் பொங்கோ (தோல்வியுற்ற அரக்கர்‌ அபயம்‌ வேண்டுதல்‌-ஓர் யாப்பு வகை)
  • குழமணிதரம்‌- தோல்வியுற்ற அரக்கர் அபயம்‌ வேண்டி ஆடும்‌ கூத்து-ஓர் யாப்பு வகை)
  • கண்ணனை அம்மம்‌ உண்ண அழைத்தல்
  • கண்ணனை சப்பாணி கொட்ட வேண்டுதல்‌
  • மற்றை அவதாரங்களின்‌ மேன்மையோடு கிருஷ்ணாவதாரத்தின்‌ எளிமையை அனுபவித்தல்‌
  • கண்ணனைப் பற்றி யசோதை கேட்டதும், ஆய்ச்சியர் முறையிடுதலும்‌
  • ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்‌
  • பழமொழியால்‌ பணிந்து உரைத்த பாட்டு-- தலைவியின்‌ ஆற்றாமை கண்டு இரங்கிய தாய்‌ தலைவனை வேண்டுதல்‌ தலைமகனைப்‌ பிரிந்த தலைமகள்‌ துன்பம் மீற உரைத்தவை
பதினோராம் பத்து

பதினோராம் பத்திலுள்ள திருமொழிகளின் பாடுபொருள்கள் :

  • பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறல்( 3 திருமொழிகள்)
  • திருமாலின்‌ திருஅவதாரங்களில்‌ ஈடுபடுதல்‌
  • திருச்சாழல்‌--எம்‌ பெருமானது எளிமையையும்‌ உயர்‌வையும்‌ இரண்டு பெண்கள்‌ பாடுதல் (சாழல் அம்மானை போன்ற ஓர் விளையாட்டு)
  • உலகத்தைப்‌ பிரளயத்திலிருந்து எம்‌பெருமான்‌ காத்ததைக் கூறி, உலகிற்கு உபதேசித்தல்
  • இறைவனின் சேவைக்கு உதவாத உடல் அவயவங்கள்‌ பயனற்றவை எனக் கூறல்
  • பிறப்பைப்‌ போக்கி அருளுமாறு ஆழ்வார்‌ எம்‌பெருமானைப்‌ பிரார்த்தித்‌தல்‌

உரைகள்

பெரிய திருமொழிக்கு பெரியவாச்சான் பிள்ளை, பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் (பெரிய திருமொழி-திவ்யார்த்த தீபிகை) ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.

சிறப்புகள்

பெரிய திருமொழி திருவாய்மொழியை அடுத்து அதிக எண்ணிக்கையில் பாசுரங்களைக் கொண்ட பிரபந்தம். திருமங்கையாழ்வார் அடியவராய், தாயாய், காதலியாய் பல நிலைகளில் தன் பக்தியை வெளிப்படுத்துகிறார். தன் தவறுகளுக்கு வருந்துதலும், சரணாகதி பாவமும், நாராயண நாமத்தைக் கண்டுகொண்ட நிறைவும் பெரிய திருமொழிப் பாசுரங்களில் விரவியுள்ளன. திருக்கண்ணபுரம்(8-8) திருமொழியில் திருமாலின் பத்து அவதாரங்களும் தொடர்ச்சியாகப் பாடப்பட்டுள்ளன. திவ்யப் பிரபந்தத்தில் பத்து அவதாரங்களும் பாடப்பட்ட ஒரே பதிகம் இதுவே[1]. நரசிம்மர் கோயில் கொண்டுள்ள சிங்கவேள் குன்றம் பற்றிய பாசுரங்கள் பத்தும் நரசிம்ம அவதாரத்தை மட்டும் பேசுகின்றன. இறைவனை அடையத் துடிக்கும் ஜீவாத்மாவின் தாபம் பெரிய திருமொழியின் அகத்துறைப் பாடல்களில் வெளிப்படுகிறது. பரகாலர் தாய் நிலையில் பாடுகையில் தம் மகளைக் கண்டு பேசுவதாகவும், அவள் நோய் பற்றி அறிய விரும்புவதாகவும் திருமாலிடம் தம் மகளின் நிலையை எடுத்துப் பேசுவதாகவும், திருமாலோடு சென்ற மகளைக் குறித்து இரங்குவதாகவும் பல நிலைகளில் பாடுகின்றார்.

பெரிய திருமொழியில் பல அரிய யாப்பு வகைகள் பயின்று வருகின்றன. பெருமானின் எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிர் எதிராகக் கூறி விளயாடும் திருச்சாழல் (பார்க்க : சாழல்) என்னும் பாவகை பக்தி இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியம் பயின்று வருவதற்கான சான்று. பொங்கத்தம் என்ற போரில் தோற்றவர் பறையடித்து ஆடும் கூத்தின் வகைமையில் வரும் பெரியதிருமொழிப் பதிகத்தின் 10 பாசுரங்களும் ‘தடம் பொங்கத்தம் பொங்கோ’ (ஒரு வகை சங்கேத ஒலிக்குறிப்பு) என முடிகின்றன. தோற்றவர் ஆடிப் பாடும் இவ்வகை கூத்து பற்றி சங்க இலக்கியத்தில் குறிப்புகள் இல்லை என்றும், இக்கூத்து பறை முரசு ஒலிக்க நிகழ்ந்ததாகவும், உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். இலங்கைப் போருக்குப் பின் மீண்டுள்ள அரக்கர்கள் தங்கள் உயிருக்காக இராமனிடம் மன்றாடுகிறார்கள். அப்போது இராமனின் வெற்றிச் சிறப்பைப் பாடுவதாக இத்திருமொழி அமைந்துள்ளது. 'குழமணி தூரம்' என்னும் பதிகமும் இதே போன்ற கூத்தைக் குறிக்கிறது.

பாடல் நடை

நாடி வந்து உன் திருவடி அடைந்தேன்

கோடியமனத்தா சினத்தொழில்புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு
ஒடியும்உழன்றும் உயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால். நமனார்
பாடியைப்பெரிதும் பரிசழித்தேட்டேன் பரமனே! பாற்கடல் கிடந்தாய்
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்!

(கோணலான நெஞ்சோடு பிறர்க்கு விரோதமான காரியங்களைச் செய்து துஷ்டர்களோடு கூடித்திரிந்து வேட்டையாடிக்களித்து இங்குமங்கும் ஓடித்திரிந்தும் உயிர்களே கொன்றேன். அதனால் நரகம் கிடைத்திருக்க வேண்டியது! மனம் திருந்தி உன்னிடம் சரண் அடைந்ததால் இப்போது அந்த நரகமென்னும் பரிசை பெரிதும் அழித்துவிட்டேன். பரமனே! நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்.)

யசோதை கண்ணனைப் பற்றிக் கோபியரிடம் கூறல்

தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள்
  உறிமேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை
  வாரி விழுங்கியிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்
  கை எல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரம் அன்று இவ் ஏழ் உலகும் கொள்ளும்
  பேதையேன் என் செய்கேனோ?

(உறியில் இருந்த வெண்ணையெல்லாம் விழுங்கிவிட்டு உறங்குகிறான் கள்ளன், வந்து பாருங்கள் என்று யசோதை கோபியரிடம் சொல்கிறாள்)

பொங்கத்தம் பொங்கோ

ஓத மா கடலைக் கடந்து ஏறி
  உயர்கொள் மாக் கடி காவை இறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
  கடி இலங்கை மலங்க எரித்து
தூது வந்த குரங்குக்கே உங்கள்
  தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது அந்தோ
  அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ

(போரில் தோற்ற அரக்கர்கள் இராவணன் சீதையை அனுமன் தூதுக்கு இணங்கி ராமனிடம் அனுப்பாததால் இன்று எங்கள் சுற்றம் அழிந்தது; உயிருக்கு அஞ்சினோம் என்று உயிர்பிச்சை வேண்டிக் கூத்தாடுகிறார்கள்)

நற்றாய் தலைவனிடம் கூறுவது

ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள்
      உருகும் நின் திரு உரு நினைந்து
காதன்மை பெரிது கையறவு உடையள்
      கயல் நெடுங் கண் துயில் மறந்தாள்
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது
      தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்?-
      இடவெந்தை எந்தை பிரானே

(தலைவியின் துன்பம் கண்டு நற்றாய் தலைவனிடம் கூறல்- பிரிவாற்றாமையினால் உன் பெயரன்றி எதையும் கூறாள். தன்னை அணி செய்ய மறந்தாள். நீ என்ன எண்ணியிருக்கிறாய்)

திருச்சாழல்

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே!

முதல் பெண்: உன் கண்ணன் வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியான யசோதையின் கையால் அடிபட்டு, கயிற்றில் கட்டப்பட்டான், பாரடீ

இரண்டாமவள்: சிறுகயிறால் கட்டப்பட்டாலும் தேவர்களுக்குக் கூட நினைப்பதற்கு அரியவன் அவன்.

(தேவர்களுக்கும் எண்ணற்கரியவன் யசோதையால் உரலில் கட்டபட்டு, அடி வாங்குகிறான். கண்ணனின் எளிமையும், பெருமையும் கூறப்பட்டுள்ளன)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page