திருநெடுந்தாண்டகம்
திருநெடுந்தாண்டகம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் இயற்றிய பிரபந்தம். இது தாண்டகம் என்ற செய்யுள் வகையில் இயற்றப்பட்டது. திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாவது ஆயிரத்தில் 2052 முதல் 2081 வரையிலான பாடல்களாக இடம்பெறுகிறது. திருமங்கையாழ்வாரின் பிரபந்தங்களில் இறுதியானது. உருக்கமான அகத்துறைப் பாடல்களைக் கொண்டது. அரையர் சேவை என்னும் நிகழ்த்துகலையில் திருநெடுந்தாண்டகம் முக்கிய இடத்தை வகிக்கிறது.
ஆசிரியர்
திருநெடுந்தாண்டகத்தை இயற்றியவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார். நீலன், பரகாலன், கலியன் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டவர். அடியார் சேவைக்காக வழிப்பறி செய்தபோது பெருமாளால் எட்டெழுத்து மந்திரம் உபதேசிக்கப்பட்டு ஆட்கொள்ளப்பட்டார் என்று குருபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் இயற்றிய மற்ற பிரபந்தங்கள் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறிய திருமடல், திருவெழுகூற்றிருக்கை ஆகியவை.
நூல் அமைப்பு
திருநெடுந்தாண்டகம் தாண்டகம் என்னும் யாப்பு வகையால் ஆனது. அறுசீரடி அல்லது எண்சீரடி அமைந்த செய்யுளால் அரசனையோ கடவுளரையோ பாடுவதற்குரியது தாண்டகம். எண்சீரடிகளைக் கொண்டது நெடுந்தாண்டகம். பொ.யு. 6-ம் நூற்றாண்டுக்குப் பின் எழுந்த இலக்கியங்களில் இச்செய்யுள் வகையைக் காணலாம். பல திவ்யப் பிரபந்த பதிப்புகளில் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. திருநெடுந்தாண்டகத்தில் முப்பது பாசுரங்கள் உள்ளன
பாடுபொருள்
முதல் பத்துப் பாடல்களில் திருமாலின் ஆதி அந்தமில்லா, எங்கும் நிறைந்து அனைத்தும் ஆன தன்மை சொல்லப்படுகிறது. 'நீரகத்தாய்!நெடுவரையி னுச்சி மேலாய்!' என்ற ஏழாவது பாடலில் காஞ்சிபுரம் உலகளந்த பெருமான் கோவிலின் உள்ளே அமைந்த ஊரகம், நீரகம், காரகம், காா்வானம் என்ற நான்கு திவ்யதேசங்களையும் திருமங்கையாழ்வாா் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளாா். திருநீரகம் என்ற திவ்யதேசம் குறிப்பிடப்பட்ட ஒரே திவ்யப்பிரபந்த பாசுரம் இது.
இரண்டாம் பத்துப் பாடல்கள் மகளின் துன்பத்தைக் கண்டு இரங்கும் தாய் சொல்பவையாக அமைந்தவை. 'பட்டுடுக்கும்' என்று தொடங்கும் 11-ம் பாடலில் கட்டுவிச்சியிடம் குறி கேட்கப்படுகிறது. கட்டுவிச்சி சோழிகளுக்குப் பதிலாக முத்துக்களை வைத்துக் குறி பார்த்து 'கடல் வண்ணன் இந்த நோயைத் தந்தான். அவனே காத்துக் கொள்வான்' என்று சொல்கிறாள். இந்நிகழ்வு அரையர் சேவையில் முத்துக்குறி என்ற பெயரில் இடம்பெறுகிறது. பரகால நாயகி( 'தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்பாடி') பல திருத்தலங்களின் பெருமையையும் பாடி ஏங்குவதை இப்பாடல்கள் சொல்கின்றன.
மூன்றாம் பத்துப் பாடல்கள் பரகால நாயகி தோழியிடம் சொல்பவையாக அமைந்தவை. "தன் அழகிய உருவத்தைக் காட்டி என் மனத்தைக் கவர்ந்து சென்றான். அவன் ஊர் ஏது? அவன் என் கனவில் வந்தால் அவனைப் போக விடமாட்டேன். நான் அவனையே நினைத்திருப்பேன்" என உருக்கமாக அமைந்தவை.
இலக்கிய/பண்பாட்டு இடம்
திருநெடுந்தாண்டகம் திருமங்கையாழ்வார் கடைசியாகப் பாடிய பிரபந்தம். பக்தியில் கனிந்த தன்மையும், உருக்கமும் காணக்கிடைக்கின்றன. இதை ஆழ்வாரின் சரம பிரபந்தம் எனக் குறிப்பிடுவதுண்டு (இறப்பதற்கு முன் இயற்றியவை). திவ்ய தேசங்களையும், திருமாலின் அவதாரங்களையும் பாடுவதைத் தாண்டி எங்கும் நிறைந்த பரம்பொருளாய்க் காணும் தன்மை மிகுந்துள்ளது. அரையர் சேவையில் திருநெடுந்தாண்டகம் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது.
பகல் பத்தின் ஒன்பதாம் நாள் அரையர் சேவையில் திருநெடுந்தாண்டகத்திலிருந்து முதல் 11 பாடல்கள் பாடி அபிநயிக்கப்படுகின்றன. திருமால் மேல் காதல் கொண்டு உருகும் தலைவிக்கு, கட்டுவிச்சி எனும் குறிசொல்பவள் முத்துக்குறி சொல்லும் நிகழ்ச்சியில் அரையர் சுவாமிகளே தலைவி, தாய், கட்டுவிச்சி ஆகிய பாத்திரங்களை மாறி மாறி அபிநயிப்பார். 'பட்டுடுக்கும்' எனத் தொடங்கும் பாடலின் இறுதியில் சோழிகளுக்குப் பதிலாக முத்துக்களை வைத்துக் குறி சொல்வதால் இது முத்துக்குறி எனப்பட்டது. இறுதியில் கட்டுவிச்சி தலைவியை கடல் வண்ணன் காத்துக் கொள்வான் என்று குறி சொல்லி முடிப்பாள். பத்தாம் நாள் மீண்டும் திருநெடுந்தாண்டகம் முழுவதும் பாடப்படும். 29-ம் பாடலில் (அன்றாயர் குலமகளுக் கரையன்) அரையர் ராவண வதத்தை நடிப்பார். 30-ம் பாடலுடன் (மின்னுமா மழைதவழும் மேகவண்ணா) பகல்பத்து உற்சவம் முடிவுபெறும்.
பாடல் நடை
எங்கும் நிறைந்தவன்
மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னருவில் நின்ற எந்தை
தளிர்புரையும் திருவடியென் தலைமே லவே
(திருமாலின் உலகப் பெருவடிவம் சொல்லப்பட்டது. பிறப்பு, இறப்பற்றவன், முதலும் முடிவும் இல்லாதவன், ஐம்பூதங்களால் ஆனவன். பொன்னிலும், மணியிலும் இருப்பவன். அறியாமை போக்கும் விளக்காக இருப்பவன்.)
பரகால நாயகி வருந்துதல்-தாய் கூறுவது
கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய்! என்னும்
காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்னும்
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்னும்
மல் அடர்த்து, மல்லரை அன்று அட்டாய்! என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்னும்
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலைமேல் துளி சோர, சோர்கின்றாளே
(கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்தவனே, கச்சி ஊரகத்தில் கோவில் கொண்டவனே, திருவெஃகாவில் தூங்கும் கோலத்தில் இருந்தவனே, மல்லரை வென்றவனே என்றெல்லாம் அவனைப் பாடி, தன் கிளியையும் சொல்லவைத்து, கண்ணீர் மார்பின்மேல்விழ என் மகள் சோர்ந்து அவன் நினைவில் வருந்துகிறாளே! என்று தாய் இரங்குகிறாள்.)
கடல்வண்ணர் இது செய்தார்
பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள்
பணிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,
எட்டனைப்போ தென்குடங்கால் இருக்க கில்லாள்
'எம்பெருமான் திருவரங்க மெங்கே?'என்னும்
'மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்
மடமானை இதுசெய்தார் தம்மை, மெய்யே
கட்டுவிச்சி சொல்', என்னச் சொன்னாள் 'நங்காய்!
கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே?'
(தலைவி பட்டு உடுத்தாமல், தன் பாவையுடன் விளையாடாமல், திருவரங்கம் எங்கே என்று புலம்பும் தன் மகளுக்காக கட்டிவிச்சியிடம் குறி கேட்கிறாள் தாய். கட்டுவிச்சி "இதைச் செய்தவன் கடல்வண்ணனான திருமால். அவரே காத்துக் கொள்வார்" என்று குறி சொல்கிறாள்.)
உசாத்துணை
வைணவமும் தமிழும்-ந. சுப்புரெட்டியார், தமிழ் இணைய கல்விக் கழகம்
வைணவ இலக்கிய வகைகள், ம.பெ.சீனிவாசன்
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
18-Jun-2023, 07:09:14 IST