ந. சுப்புரெட்டியார்
ந. சுப்புரெட்டியார் (ஆகஸ்ட் 27, 1916 - மே 1, 2006) தமிழறிஞர், தமிழ் பயண எழுத்துக்களில் முன்னோடி எழுத்தாளர். தமிழக வைணவ ஆலயங்களைப் பற்றி விரிவாக எழுதியவர்.
பிறப்பு, இளமை
சுப்புரெட்டியார் தமிழ்நாடு, திருச்சி மாவட்டம், பெரகம்பி என்ற ஊரில் வேளாண் குடும்பத்தில் ஆகஸ்ட் 27, 1916 அன்று பிறந்தார்.
தந்தை நல்லப்ப செட்டியார் 'ஞானியார்' என்ற பரம்பரையை சேர்ந்தவர். சுப்புரெட்டியாருக்கு மூன்று வயது நிறைவடையும் முன்னரே தந்தை மறைந்தார். தாயார் காமாட்சி அம்மாள். தந்தையின் மறைவுக்குப் பின்னர் சுப்புரெட்டியார் தாயார் ஊரான பெரகம்பியில் தாய்மாமன் பண்ணை நல்லப்ப ரெட்டியாரின் வீட்டில் வளர்ந்தார். திண்ணைப் பள்ளியில் இலிங்கச் செட்டியார் என்பவரிடம் தொடக்கக் கல்வி பயின்றார்.
பின்னர் தந்தையின் ஊராகிய கோட்டாத்தூரில் கழகத் தொடக்கப் பள்ளியிலும் துறையூரிலும் முசிறியில் கழக உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். திருச்சி புனித சூசைய்யர் கல்லூரியில் வேதியியல் இளங்கலைப் பட்டப் படிப்பையும் சென்னை சைதாப்பேட்டை அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஒராண்டு ஆசிரியர் பயிற்சியையும் பயின்றார். ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டே தமிழில் பி.ஏ மற்றும் எம்.ஏ பட்டங்களைப் பெற்றார்.
அவருடைய வாழ்க்கையில் அவர் திண்ணைப் பள்ளிக்கூடம் தொடங்கி வெவ்வேறு ஆசிரியர்களிடம் தமிழ் பயின்ற பால பருவம் முதல் கல்லூரி காலகட்டம் வரை அவரது ஆசிரியர்கள் குறித்தும் கல்வி முறை குறித்தும் பாடத்திட்டங்கள் குறித்தும் மிக விரிவாக "நினைவுக் குமிழிகள்" என்னும் தன்வரலாற்று நூலில் எழுதியிருக்கிறார்.
தனிவாழ்க்கை
ந. சுப்புரெட்டியாருக்கு செப்டம்பர் 1936-ல் செல்லப்பாப்பாவுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்னர் பன்னிரு ஆண்டுகள் குழந்தைகள் இல்லை. மைத்துனன் மகனை சிலகாலம் வளர்த்தார், அவர் சிறு வயதிலேயே இறந்து விட்டார். அதன் பிறகு இராமலிங்கம் (அக்டோபர் 13, 1949), இராமகிருஷ்ணன் (நவம்பர் 22, 1953) என இரு மகன்கள் பிறந்தனர். இராமலிங்கம் பாரத் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்தவர். இராமகிருஷ்ணன் எலும்புருக்கி நோய் ஆய்வு மருத்துவமனையில் மருத்துவராக இருந்தார்.
ஆசிரியப் பணி
ஜூன் 4, 1941-அன்று துறையூர் பெருநிலக் கிழவர் நடுநிலைப் பள்ளியில் அதன் முதல் தலைமை ஆசிரியராக பணியேற்று ஒன்பது ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் 1950-ல் புதிதாகத் திறக்கப்பட்ட காரைக்குடி அழகப்பச் செட்டியார் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக சேர்ந்தார். இக்காலகட்டத்தில் அழகப்பா மாதிரி உயர்நிலைப்பள்ளி, அழகப்பா தொடக்கநிலைப் பள்ளி, அழகப்பா முன்னேற்பாட்டுப் பள்ளி, மாண்டிசரிப் பள்ளி என பல பள்ளிகளைத் தொடங்கி அவற்றை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார்.
1960-ம் ஆண்டு திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை நிறுவி 17 ஆண்டுகள் பணியாற்றி அக்டோபர் 25, 1977 வரை அங்கு பணிபுரிந்தார். அப்பல்கலைகழகத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆராய்ச்சி செய்து நம்மாழ்வார் தத்துவத்தை ஆய்வு நூலாக வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
கல்வியியல்
ந.சுப்புரெட்டியார் தன் ஆசிரியப் பயிற்சி அனுபவத்தை பிறருக்கு உதவும் வகையில் 1957-ல் ’தமிழ் பயிற்றும் முறை’ என்னும் நூலாக வெளியிட்டார்.
இலக்கிய ஆய்வு
ந.சுப்புரெட்டியார் எழுதி 1958-ல் பன்னிரண்டு கட்டுரைகளின் தொகுப்பான ’காலமும் கவிஞர்களும்’ என்னும் நூல் வெளிவந்தது. பின்னர் தினமணியில் தமிழ் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளைத் தொடராக எழுதினார். மதுரையில் இருந்து வெளிவந்த ’தமிழ்நாடு’ என்ற நாளேட்டின் ஞாயிறு மலரில் சங்க இலக்கியத்தை அறிமுகம் செய்யும் வகையில் 30 கட்டுரைகள் தொடராக எழுதினார். இவ்விரண்டு கட்டுரைத் தொடர்களும் தொகுக்கப்பட்டு ’கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி’ என்ற பெயரில் காரைக்குடி செல்வி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது.
பயண இலக்கியம்
1948 கோடை விடுமுறையில் ராமேஸ்வரம் துவங்கி 40 நாட்கள் திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொண்டார். பாண்டியநாட்டுக் கோவில்களில் துவங்கி வடக்கே திருப்பதி வரை பயணம் மேற்கொண்டார். தேவிபட்டணம், திருப்புல்லாணி, தனுஷ்கோடி, மதுரை, திருப்பரங்குன்றம், அழகர்கோவில், திருமாலிருஞ்சோலை, நெல்லை, திருச்செந்தூர், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், நவதிருப்பதிகள், கன்னியாகுமரி, வானமாமலை (நான்குநேரி), சுசீந்திரம், திருவனந்தபுரம், பழநி, திருப்பேரூர், திருப்பதி, திருவண்ணாமலை, திருத்தணி, மயிலை(சென்னை), திருவல்லிக்கேணி, திருச்சி என நீண்ட அப்பயணம் ஆலயங்களைப் பற்றி எழுதும் ஆர்வத்தை உருவாக்கியது. பிஎச்.டி ஆய்வுக்கு பதிவு செய்து கொண்ட அன்று ஆழ்வார்கள் பாடிய 108 தலங்களையும் (திவ்யதேசங்கள்) சென்று காண வேண்டுமென முடிவு செய்து, 1965 செப்டம்பரில் குடும்பத்துடன் இப்பயணம் சென்றார். அவற்றையே சோழநாட்டுத் திருப்பதிகள் என்ற நூலாக இரண்டு பகுதிகளாக வெளியிட்டார்.
இதேபோல 1969-ம் ஆண்டு அவர் செய்த மலைநாட்டு திவ்ய தேச யாத்திரையின் அனுபவம் "மலைநாட்டுத் திருப்பதிகள்" என்ற பெயரில் மார்ச் 1971-ல் வெளிவந்தது. தொண்டை நாடு மற்றும் நடு நாட்டில் உள்ள 24 திவ்ய தேசங்களை 1966-ல் தரிசித்த பயணம் "தொண்டை நாட்டு திருப்பதிகள்" என்னும் பெயரில் 1973-ல் வெளியிட்டார். வடநாட்டுத் திருப்பதிகள் என்னும் நூல் 1980-ல் வெளியானது.
விருதுகள்
- திரு. வி. க. விருது - 1985
- திருக்குறள் விருது - 1992
- டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - 1994
- ராஜா சர் முத்தையா செட்டியார் விருது - 1994
- ஆதித்தனார் விருது - 2001
இலக்கிய முக்கியத்துவம்
பயண நூல்களில் ந.சுப்புரெட்டியாரின் அவதானங்கள் மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோயில்களின் சிற்பங்கள் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். இந்த நூல்கள் வழியாக தமிழக ஆலயங்களைப்பற்றி விரிவாக எழுதி ஒரு தொடர்கவனத்தை நிலைநிறுத்தியது இவரது முக்கியமான பங்களிப்பாகும்.
மறைவு
ந.சுப்புரெட்டியார் மே 1, 2006 அன்று சென்னையில் மறைந்தார்.
வாழ்க்கைப் பதிவுகள்
ந.சுப்புரெட்டியார் எழுதிய தன் வரலாற்று நூல் "நினைவுக் குமிழிகள்" நான்கு தொகுதிகளாக 1988-ல் வெளியானது.
இது தவிர பல துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுடனான நினைவுக்குறிப்புகளை 'மலரும் நினைவுகள்' (1989), 'நீங்காத நினைவுகள்' (1999) என்ற இரு புத்தகங்களாக வெளியிட்டார்.
படைப்புகள்
தமிழ் இலக்கியம் தவிர, சமயம், அறிவியல் சார்ந்தும் ஏராளமான நூல்களை இவர் எழுதியுள்ளார். ந.சுப்புரெட்டியார் எழுதியுள்ள 135 நூல்களையும் தமிழக அரசு 2008-ல் நாட்டுடைமையாக்கியது.
- அகத்திணைக் கொள்கைகள்
- அண்ணல் அனுமன்
- அணுக்கரு பௌதிகம்
- அணுவின் ஆக்கம்
- அதிசய மின்னணு
- அம்புலிப் பயணம்
- அர்த்த பஞ்சகம்
- அறிவியல் தமிழ்
- அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்
- அறிவியல் பயிற்றும் முறை
- அறிவியல் பயிற்றும் மூல முதல் நூல் (மொழிபெயர்ப்பு)
- அறிவியல் விருந்து
- அறிவுக்கு விருந்து
- ஆழ்வார்களின் ஆரா அமுது
- இராக்கெட்டுகள்
- இராமலிங்க அடிகள்
- இல்லற நெறி
- இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்
- இளைஞர் தொலைக்காட்சி
- இளைஞர் வானொலி
- என் அமெரிக்கப் பயணம்
- கண்ணன் பாட்டுத் திறன்
- கம்பனின் மக்கள் குரல்
- கல்வி உளவியல்
- கல்வி உளவியல் கோட்பாடுகள்
- கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி
- கலியன்குரல்
- கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி – ஒரு மதிப்பீடு
- கவிஞன் உள்ளம்
- கவிதை பயிற்றும் முறை
- கவிமணியின் தமிழ்ப்பணி – ஒரு மதிப்பீடு
- காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்
- காலமும் கவிஞர்களும்
- குயில் பாட்டு – ஒரு மதிப்பீடு
- சடகோபன் செந்தமிழ்
- சி.ஆர்.ரெட்டி (மொழிபெயர்ப்பு)
- சைவ சமய விளக்கு
- சைவ சித்தாந்தம் – ஓர் அறிமுகம்
- சைவமும் தமிழும்
- சோழ நாட்டுத் திருப்பதிகள் – 1
- சோழ நாட்டுத் திருப்பதிகள் – 2
- ஞானசம்பந்தர்
- தந்தை பெரியார் சிந்தனைகள்
- தம்பிரான் தோழர்
- தமிழ் இலக்கியத்தில் அறம், நீதி, முறைமை
- தமிழ் பயிற்றும் முறை
- தமிழ்க்கடல் இராய.சொ.
- தமிழில் அறிவியல் செல்வம்
- தமிழில் அறிவியல் – அன்றும் இன்றும்
- தாயுமானவர்
- திருக்குறள் தெளிவு – உரைநூல்
- திருவேங்கடமும் தமிழிலக்கியமும்
- தொண்டைநாட்டுத் திருப்பதிகள்
- தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை
- தொலை உலகச் செலவு
- நமது உடல்
- நவவித சம்பந்தம்
- நாவுக்கரசர்
- நினைவுக் குமிழிகள் – பாகம்-1
- நினைவுக் குமிழிகள் – பாகம்-2
- நினைவுக் குமிழிகள் – பாகம்-3
- நினைவுக் குமிழிகள் – பாகம்-4
- நீங்காத நினைவுகள் – 1
- நீங்காத நினைவுகள் – 2
- பட்டினத்தடிகள்
- பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்
- பரகாலன் பைந்தமிழ்
- பரணிப் பொழிவுகள்
- பல்சுவை விருந்து
- பாஞ்சாலி சபதம் – ஒரு நோக்கு
- பாட்டுத்திறன்
- பாண்டிநாட்டுத் திருப்பதிகள்
- பாண்டியன் பரிசு – ஒரு மதிப்பீடு
- பாரதீயம்
- பாவேந்தரின் பாட்டுத்திறன்
- புதுவை(மை)க் கவிஞர் பாரதியார் – ஒரு கண்ணோட்டம்
- மலரும் நினைவுகள்
- மலைநாட்டுத் திருப்பதிகள்
- மாணிக்கவாசகர்
- மானிட உடல்
- முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
- முத்தொள்ளாயிர விளக்கம்
- மூவர் தேவாரம் – புதிய பார்வை
- வடநாட்டுத் திருப்பதிகள்
- வடவேங்கடமும் திருவேங்கடமும்
- வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்
- வாய்மொழியும் வாசகமும்
- வாழும் கவிஞர்கள்
- வாழையடி வாழை
- விட்டுசித்தன் விரித்த தமிழ்
- வேமனர் (மொழிபெயர்ப்பு)
- வைணமும் தமிழும்
- வைணவ உரைவளம்
- வைணவ புராணங்கள்
உசாத்துணை
- நினைவுக் குமிழிகள் - பாகம் - 2 pdf
- பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்-தமிழ் மரபு நூலகம்
- ந. சுப்புரெட்டியார் விருதுகள்-
- புகைப்படங்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
12-Dec-2022, 20:06:26 IST