under review

அரசன் சண்முகனார்

From Tamil Wiki
அரசன் சண்முகனார்

அரசன் சண்முகனார் (செப்டம்பர் 15, 1868 - ஜனவரி 11, 1915) தமிழறிஞர், மரபுப் புலவர், உரையாசிரியர், கட்டுரையாளர், தமிழாசிரியர். தன் சமகாலத்தில் நிலவிய மரபு வழியான கருத்துக்களை மறுத்து எழுதியதால் பெரும் எதிர்ப்பிற்கும் விமர்சனத்திற்கும் ஆளான தமிழ் இலக்கணவாதி.

பிறப்பு, கல்வி

மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் என்னும் ஊரில் செப்டம்பர் 15, 1868 அன்று அரசப்பிள்ளைக்கும் பார்வதியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். சைவவேளாளர் குலத்தைச் சார்ந்தவர். இயற்பெயர் சண்முகம். தந்தை பெயரிலிருந்து 'அரசன்' என்ற சொல்லை எடுத்து தன் பெயருக்கு முன்னால் வைத்துக் கொண்டதால் "அரசன் சண்முகனார்" என்று அழைக்கப்பட்டார்.

12 வயது வரை ஊர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அழகர்சாமி தேசிகரிடம் படித்தார்.சோழவந்தானில் இருந்த கிண்ணிமங்கலம் மடத்தைச் சார்ந்த சிவப்பிரகாச சுவாமிகளிடம் இலக்கணம், இலக்கியம், தருக்கம், சோதிடம் ஆகியவற்றை கற்றார். பதினான்காம் வயதில் ஆசிரியருக்காக ’சிதம்பர வினாயகர் மாலை’ என்னும் சிறு நூலை பாடினார். பதினாறு வயதில் தந்தை காலமாகவே கல்வி நின்றது.

அரசன் சண்முகனார்

தனி வாழ்க்கை

1885-ஆம் ஆண்டு காளியம்மாளை மணம் புரிந்தார். சிறிதுகாலம் வேளாண்மைத்தொழில் செய்தார். 1890 முதல் 1902 வரை மதுரை சிம்மக்கல் சேதுபதி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். தலைமை ஆசிரியர் நாராயண ஐயர் தமிழ்ப்பாடத்திற்கான பாடவேலையை குறைத்ததால் தன் பணியைத் துறந்தவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட சேதுபதி செந்தமிழ் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்து 1906 வரை பணியாற்றினார். எப்போதும் நோயும் வறுமையும் கொண்டிருந்தார். பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாருக்கு தொல்காப்பியம் கற்பித்த ஆசிரியர் இவர். பண்டிதமணி இவருக்கு பொருளுதவி செய்திருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

அரசன் சண்முகனார்

விவேகபாநு இதழாசிரியர் மு.ரா.கந்தசாமிக் கவிராயருடன் உருவான தொடர்பால் இலக்கிய ஆய்வுக்குள் நுழைந்தார். ’மாலைமாற்று மாலை’ என்னும் நூலை இக்காலகட்டத்தில் எழுதினார். இது இறுதியில் இருந்து தொடக்கம் வரை படித்தாலும் பொருள் மாறுபாடு அளிக்காத வகை செய்யுள்.

தொல்காப்பியப் பாயிர விருத்தி, திருக்குறள் ஆராய்ச்சி என்ற அவரது இரண்டு நூல்களும் எதிர்ப்புக்குள்ளாகின. அவற்றை தடைசெய்ய வேண்டும் என்று புலவர்கள் கோரினர்.

இவரது வாழ்நாளில் பெரும்பகுதி தொல்காப்பிய ஆராய்ச்சியிலேயே கழிந்திருக்கிறது. 1900-இல் தொல்காப்பியத்திற்கு புதிய உரை எழுதத் தொடங்கினார். எழுத்ததிகாரத்தில் பாயிரம், நூல் மரபு, மொழி மரபு ஆகிய மூன்றுக்கும் உரை எழுதினார். இதன் பிறகு அப்பணியைத் தொடர முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமானது. எழுதியவற்றிலும் பாயிர விருத்தி மட்டும் அச்சில் வந்தது. அந்நூலில் மேற்கோள் கூறப்பட்ட நூல்களே ஐம்பது உள்ளன. இதில் நச்சினார்க்கினியர், இளம்பூரணர் போன்ற உரையாசிரியர்களையும் நன்னூலாரையும் மறுத்துச் சொல்கிறார். முக்கியமாக, இவர்கள் சொற்களை விளக்கும் பகுதிகளில் மறுதலிக்கிறார்.

நூல்கள்

சிதம்பர விநாயக மாலை, மாலை மாற்று மாலை ஆகிய இரண்டும் ஆரம்பகால நூல்கள். மதுரையில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது எழுதியவை இன்னிசை இருநூறு, வள்ளுவர் நேரிசை, பஞ்சதந்திர வெண்பா, மதுரைச் சிலேடை, நவமணிக்காரிகை நிகண்டு, நுண்பொருள் கோவை ஆகியன. இவற்றில் இன்னிசை இருநூறு என்ற சிறுநூலை உ.வே.சா. அச்சிட்டு உதவியிருக்கிறார்.

இந்த நூல்கள் தவிர முருகனைப் போற்றி பாடப்பட்ட ஏகபாத நூற்றந்தாதி, மதுரை மீனாட்சியம்மை சந்தத் திருவடி மாலை, திருவடிப்பத்து போன்ற சிறு கவிதை நூல்களையும் இயற்றியுள்ளார். சைவ சித்தாந்தப் பற்றின் காரணமாக சைவத் தலங்களைப் பாடுதல், தீவிர விவாதத்திற்குரிய சைவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுதல் ஆகியவற்றை மேற்கொண்டார். அவரது 'அன்மொழித் தொகை' என்ற ஆராய்ச்சிக் கட்டுரை செந்தமிழ்ச்செல்வி இதழில் வெளிவந்தபோது தமிழறிஞரிடையே எதிர்ப்புக் குரல் எழுந்தது.

விவாதங்கள்

திருக்குறள்

"அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலு மென் நெஞ்சு" என்ற குறளில் வரும் ’கனங்குழை’ என்ற சொல்லுக்கு ஆகுபெயர் என இலக்கணக் குறிப்பு கூறுகிறார் பரிமேலழகர். இதே சொல்லுக்கு இலக்கணம் அன்மொழித்தொகை என்பார் சிவஞான முனிவர். அரசன் சண்முகனார் இதைப் பற்றிய விவாதத்தை முதலில் துவங்கி பரிமேலழகரின் உரையை நிலைநாட்டி சிவஞானமுனிவரை மறுத்தார். இவர் திருக்குறளில் பரிமேலழகரின் உரையை காண்டிகை உரையாகக் கொண்டு எழுதிய விருத்தி உரை ஆராய்ச்சி 'செந்தமிழ்’ இதழில் வந்தது. பரிமேலழகரை ஒட்டியும் வெட்டியும் எழுதிய இவரது கருத்துகளுக்கு, சி.வை. தாமோதரம்பிள்ளை 'ஞானசித்தி' இதழில் பதில் எழுதினார்.

தொல்காப்பியம்

தொல்காப்பியம் சொல்லதிகாரம் எச்சவியல் 416-ஆம் நூற்பாவின்படி ஆகுபெயரும் அன்மொழியும் ஒன்று என்றார் சேனாவரையர். இதை மறுத்து இரண்டும் வேறு என்றார் நச்சினார்க்கினியர். அரசன் சண்முகனார் நச்சினார்க்கினியர் சொன்னதை ஏற்று இதை வேறு சான்றுகளுடன் நிறுவினார். இந்தக் கட்டுரை வெளிவந்த காலத்தில் சண்முகனார் கருத்தை மறுத்து கட்டுரைகள் வந்தன. யாழ்ப்பாணத்திலிருந்து இ.கணேசபிள்ளை என்பவர் மறுத்து எழுதினார். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் 'செந்தமிழ்ச் செல்வி' இதழில் வந்தன. இவற்றிற்கு எல்லாம் மறுப்புரையாக 'நுணங்கு வெளிப்புலவர்க்கு வணங்குமொழி விண்ணப்பம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார் சண்முகனார். மறைமலையடிகள் மட்டும் இவரை ஆதரித்தார். 15 வரிகள் கொண்ட தொல்காப்பியப் பாயிரத்திற்கு அரசன் சண்முகனார் எழுதிய விளக்க உரை 246 பக்கங்களுக்கு நீண்டது. அதில் 164 குறட்பாக்களைப் பயன்படுத்தி பல நுட்பங்களை விளக்கியிருக்கிறார்.

பிறவிவாதங்கள்

'கொழுத்துன்றூசியுரை விளக்கமும் மறுதலைக் கடாமாற்றமும்' என்ற கட்டுரை விவாதத்திற்குள்ளானது. 'கொழு சென்ற வழி துன்னூசி இனிது செல்லுமாறு போல' என்ற உவமை தமிழ் இலக்கியத்தில் அதிகமாக புழங்கக் கூடிய உவமை. இது முதலில் நக்கீரர் உரையில் இடம்பெற்றது. தமிழாசிரியர்கள் இந்த உவமைக்கு கலப்பைக் கொழுவின் கூர்மையான பகுதி சென்ற வழியில் ஏர் செல்வது போல் என்று பொருள் சொல்வது வழக்கமாயிருந்தது. அரசன் சண்முகனார் கொடி என்பது தோற்கருவி செய்யும்போது அந்தத் தோலைத் தைப்பதற்கு ஊசி செல்லும் வழியை உண்டாக்கும் கருவி, துன்னூல் என்பது அந்தக் கொழுவால் வழியாக்கிய இடத்தின் வழி சென்று தோலைத் தைக்கும் கருவி என்று விளக்கம் கொடுத்தார். இந்தக் கருத்தை மு. சாம்பசிவனார் தவிர மற்றவர்கள் மறுத்தனர். சண்முகனார் எல்லா மறுப்புக்களுக்குமான பதிலை விவேகபானு இதழில் எழுதினார்.

வள்ளுவத்தின் பொருட்பெண்டிர் பொய்ம்மை எனத் தொடங்கும் பாடலுக்கு அ. மாதவையா எழுதிய விளக்கத்துக்கு சண்முகனாரின் 'பொருட்பெண்டிர்' என்ற கட்டுரை மறுப்புரையாக வந்தது.

நினைவகங்கள், வாழ்க்கை வரலாறுகள்

 • சோழவந்தானிலுள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது
 • சோழவந்தான் அரசஞ்சண்முகனார் என்னும் நூலை பு.அறிவுடைநம்பி இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசைக்காக எழுதியிருக்கிறார்

இலக்கிய இடம்

சண்முகனாரின் தனித்துவம் என்பது முந்தைய உரையாசிரியர்களை, மரபுவழி இலக்கியங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை விரிவாக ஆய்ந்து, தான் மாறுபடும் இடங்களில் தன் மறுப்புக் கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்தது. இதனால் இவர் வாழ்நாள் முழுவதும் கடுமையான விவாதங்களைச் சந்தித்தார். தொடர்ந்து விவாதங்களில் ஈடுபட்டு தன் கருத்தை ஆதாரங்களுடன் வலியுறுத்தி வந்தார்.

படைப்புகள்

 • சிதம்பர விநாயக மாலை
 • மாலை மாற்று மாலை
 • ஏக பாத நூற்றந்தாதி
 • இன்னிசை இருநூறு
 • மதுரை மீனாட்சி அம்மன் சந்தத் திருவடிமாலை
 • திருவடிப் பத்து
 • நவமணிக் காரிகை நிகண்டு
 • வள்ளுவர் நேரிசை
 • இசை நுணுக்கச் சிற்றுரை
 • தொல்காப்பியப் பாயிர விருத்தி
 • திருக்குறள் ஆராய்ச்சி
 • திருக்குறட் சண்முக விருத்தி
 • நுண் பொருட் கோவை

இறுதிக்காலம்

45 வயதுக்குப் பிறகு தொடர்ந்து வாதநோயால் துன்புற்றார். ஜனவரி 11, 1915 அன்று சோழவந்தானில் காலமானார்.

உசாத்துணை

 • அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்