under review

திருக்குறள்

From Tamil Wiki
திருவள்ளுவர்

திருக்குறள், உலகப் பொதுமறை என வழங்கப்படும்தமிழ் மொழி நூல். சங்கம் மருவிய கால நூல் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. குறள் வெண்பா என்னும் பா வகையிலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்ட திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறள், நீதி நூலாகவும் கவிதை நூலாகவும் வாசிக்க இடம் கொடுக்கும் வண்ணம் இயற்றப்பட்டுள்ளது.

திருக்குறள் தமிழின் தலைசிறந்த நூல்களில் ஒன்றாக, உலகின் குறிப்பிடத்தக்க நீதி நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ் நீதி நூல். சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூலான திருக்குறள் தமிழில் மிகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்ட, அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட, 1812 முதல் இடையறாது அச்சில் இருக்கும் நூலாகத் திகழ்கிறது. குறள் வெண்பா என்னும் பா வகையிலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்ட திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறள், நீதி நூலாகவும் கவிதை நூலாகவும் வாசிக்க இடம் கொடுக்கும் வண்ணம் இயற்றப்பட்டுள்ளது.

பெயர்க் காரணம்

திருக்குறள் என்ற பெயரிலுள்ள "திரு" என்பது தமிழில் மரியாதையையும் மேன்மையையும் குறிக்கும் ஒரு சொல். இது இந்திய அளவில் பொதுவான "புனித, புனிதமான, சிறந்த, கௌரவமான, அழகான" என்று பலவாறு பொருள்படும் சமஸ்கிருத சொல்லான "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல்லாகும். குறள் என்றால் "குறுகிய, சுருக்கமான, சுருக்கப்பட்ட" என்று பொருள். தொல்காப்பியம் கூறும் இரு பாவகைகளான குறுவெண்பாட்டு மற்றும் நெடுவெண்பாட்டு ஆகியவற்றில் குறுவெண்பாட்டுதான் சுருங்கிக் "குறள் பாட்டு" என்றாகி பின்னர் "குறள்" என்றானது. அதாவது "குறுகிய செய்யுள்" என்பதே "குறள்". திருக்குறளில் உள்ள செய்யுள்கள் அனைத்துமே, குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. குறள் வெண்பாக்களால் ஆனமையால், "குறள்" என்றும் அதன் உயர்வு கருதித் "திரு" என்ற அடைமொழியுடன் "திருக்குறள்" என்றும் பெயர் பெறுகிறது. சுருக்கமாக, திருக்குறள் என்பதை "தெய்வீக ஈரடிப்பாக்கள்" 'சிறப்பு பொருந்திய ஈரடிப்பாக்கள்' என்று பொருள் கொள்ளலாம்.

ஆசிரியர் குறிப்பு

திருக்குறள்

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவரைப் பொய்யில் புலவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நாயனார், தேவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதகர், பெருநாவலர் போன்ற வேறு பெயர்களாலும் அழைப்படுகிறார். திருவள்ளுவரைப் பற்றிய நம்பகப்பூர்வமான தகவல்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கப்பெறுகின்றன. இவரது இயற்பெயரையோ அவர் இயற்றிய நூலான திருக்குறளின் உண்மைப் பெயரையோ இன்றுவரை யாராலும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. திருக்குறள் கூட அதன் ஆசிரியரின் பெயரையோ அவரைப் பற்றிய விவரங்களையோ எங்கும் குறிப்பிடுவதில்லை. திருக்குறளுக்கு அடுத்து சில நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றிய நூலான திருவள்ளுவமாலை நூலில்தான் முதன்முறையாக திருவள்ளுவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலில் கூட வள்ளுவரின் பிறப்பு, குடும்பம், பின்புலம் போன்ற எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. வள்ளுவரின் வாழ்வைப் பற்றிக் கூறப்படும் செய்திகள் யாவையும் நிரூபிக்கும்படி பண்டைய நூல் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. 19- ஆம் நூற்றாண்டில் அச்சகங்கள் தோன்றிய பின்னர் திருவள்ளுவரைப் பற்றிய பல செவிவழிச் செய்திகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் கதைகளாக அச்சிடப்பட்டன ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் தோன்றிய நூல்களில் திருவள்ளுவரைப் பற்றிப் பழங்கால ஏடுகளிலிருந்தும் மரபுவழியும் கிடைக்கப்பெற்றதும் திருவள்ளுவரது நூலிலிருந்தே அறியப்பட்டதுமான பலதரப்பட்ட தகவல்கள் காணப்படுகின்றன. திருவள்ளுவர் குறித்து மரபுவழி வந்த தகவல்கள் அவர் பறையர் குலத்து நெசவாளர் என்றும், அவர் உழவினைப் போற்றியதால் விவசாயத் தொழில் புரிந்த குலத்தவர் என்றும், அவர் ஒரு பறையர்குலத் தாய்க்கும் அந்தணர்குலத் தந்தைக்கும் பிறந்தவர் என்றும் பலவாறு உரைக்கின்றன. மு. இராகவ ஐயங்காரது கருத்துப்படி "வள்ளுவர்" என்ற பெயர் "வல்லபா" என்ற ஓர் அரச அலுவலரது பதவியைக் குறிக்கும் சொல்லின் திரிபாகும். எஸ். வையாபுரிப் பிள்ளை தனது கருத்தாக "வள்ளுவன்" என்பது அரசவையில் பறை முழங்குவோரைக் குறிக்கும் சொல் என்றும் அதனால் அவர் அரசனின் படையில் முரசு கொட்டுபவராகப் பணிபுரிந்தவர் என்றும் உரைக்கிறார். மரபுவழி வந்த தகவல்கள் இவ்வாறு ஒன்றுக்கொன்று முரணாகவும் சில நம்பகத் தன்மையற்றவையாகவும் விளங்குகின்றன. திருவள்ளுவரது பிறப்பு பற்றிய பலதரப்பட்ட செய்திகளுள் ஒன்றில் திருவள்ளுவர் ஒரு மலைக்குப் பயணமாகச் சென்று அகத்தியரையும் இன்னபிற முனிவர்களையும் சந்தித்ததாகவும் கூறுகின்றன. அவர்களைச் சந்தித்துத் திரும்பி வரும் வழியில் திருவள்ளுவர் ஒரு மரத்தடியில் அமர அவரது நிழலானது அவர் மீது ஒரு நாள் முழுவதும் அசையாமல் நிலைகொண்டது என்றும் அங்கு அவர் ஓர் அரக்கனைக் கொன்றார் என்றும் பலதரப்பட்ட புராணத் தகவல்களும் காணப்படுகின்றன. இவற்றிற்கு வரலாற்றுப் பதிவுகள் கிடையாது என்றும் இவையாவும் இந்திய மற்றும் உலகப் புராண இலக்கியங்களில் காணப்படுவதைப் போன்ற புனையப்பட்ட கதைகளாகும் என்றும் அறிஞர்கள் உரைக்கின்றனர். திருவள்ளுவரைப் பற்றிய குல வரலாறுகளும் நம்பகத்தன்மையற்றவை என்றே அவர்களால் கருதப்படுகிறது. திருவள்ளுவருக்கு வாசுகி என்ற மனைவியும், ஏலேலசிங்கன் என்ற பெயரில் ஒருவர் உற்ற நண்பனாகவும் சீடனாகவும் இருந்தார் என்றும் கருதப்படுகிறது.

திருவள்ளுவர் தனது நூலினைப் பொதுப்படையாகவும் எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிடாமலும் இயற்றியுள்ளதால், அதனை பல விதங்களில் பொருள்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. இதன் விளைவாக திருக்குறளானது பண்டைய இந்திய சமயங்களால் தங்கள் வழிநூலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. திருவள்ளுவரைப் பற்றிய பலதரப்பட்ட செய்திகளைப் போல் அவரது சமயத்தைப் பற்றியும் பலதரப்பட்ட செய்திகள் வரலாற்றுச் சான்றுகளின்றி விரவிக்கிடக்கின்றன. ஆங்கிலேயப் படையெடுப்புக்குப் பின்னர் கிறிஸ்தவ சமயமும் திருவள்ளுவரைத் தனது வழித் தோன்றலாகக் கருத முயன்றதைக் காணமுடிகிறது. உதாரணமாக, 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்துவ போதகரான ஜி. யு. போப் தனது நூலில் வள்ளுவர் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் அலெக்ஸாண்டிரியவைச் சேர்ந்த கிறிஸ்துவ போதகரான பான்டேனசுடன் தொடர்பிலிருந்தவர் என்றும் அதன் மூலம் அலெக்ஸாண்டிரிய கிறிஸ்துவ அறிஞர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு இயேசுநாதரின் மலைப் பிரசங்கத்தின் சாரமாகத் தனது "அழகிய திருக்குறளை" படைத்தாரென்றும் தனது திருக்குறள மொழிபெயர்ப்பு நூலில் குறிப்பிட்டுள்ளார். ஜி. யு. போப்பின் இக்கூற்றுகள் யாவும் தவறானவை, ஆதாரமற்றவை என்று அறிஞர்களால் விலக்கப்பட்டன. வள்ளுவர் கூறும் அறங்கள் யாவும் கிறிஸ்துவ அறநெறிகளல்ல என்று கமில் வாச்லவ் சுவெலபில் (Kamil Vaclav Zvelebil)நிறுவுகிறார். "கால மதிப்பீட்டில் குறளானது ஏனைய இந்திய இலக்கியங்களைப் போலவே சரியாக வரையறுக்கப்பட முடியாததாகவே உள்ளது" என்றும், குறிப்பாக "சிறந்த கருத்துகளைக் கொண்ட இலக்கியங்கள் யாவும் கிறிஸ்துவ மத போதகர்களால் அவற்றின் காலமதிப்பீட்டினை கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பிந்தையதாக்கும் நோக்குடன் பலவாறு சிதைக்கப்பட்டுள்ளது" என்றும் ஆல்பர்ட் சுவைட்சர் (Albert Schweitzer) தனது நூலில் குறிப்பிடுகிறார்.

வள்ளுவர் சமண சமயத்தையோ இந்து சமயத்தையோ சார்ந்தவராக இருந்திருப்பார் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்விரு சமயங்களின் பிரதான தர்மமான அகிம்சை அல்லது இன்னா செய்யாமை என்ற அறத்தை வள்ளுவர் தனது நூலின் மைய அறமாகக் கொண்டு மற்ற அறங்களைக் கையாண்டிருப்பதிலிருந்து இது புலனாகிறது. வள்ளுவர் இந்துவா சமணரா என்ற கேள்வி தமிழ்ச் சமூகத்தால் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது என்று தனது 1819- ஆம் ஆண்டு குறள் மொழிபெயர்ப்பு நூலில் எல்லீசன் (பிரான்ஸிஸ் வயிட் எல்லீஸ் Francis Whyte Ellis 1777-1819) குறிப்பிடுகிறார். வள்ளுவரது தார்மீக சைவம் மற்றும் கொல்லாமை ஆகிய அறங்களைப் பற்றிய அதிகாரங்கள் சமண மதச் சிந்தனைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன என்று கூறும் கமில் வாச்லவ் சுவெலபில், கடவுளுக்கு திருவள்ளுவர் தரும் அடைமொழிகளும் அருள்சார்ந்த அறங்களுக்கு அவர் தரும் முக்கியத்துவமும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றன என்று விளக்குகிறார். திருவள்ளுவர் தமக்கு முந்தைய தமிழ், வடமொழி ஆகிய இரு இலக்கிய அறிவினையும் சாலப்பெற்ற "சிறந்தவற்றை மட்டும் தேரும் சிந்தையுள்ள ஒரு கற்றறிந்த சமண அறிஞராகவே" இருந்திருக்கக்கூடும் என்பது கமில் வாச்லவ் சுவெலபில்லின் கருத்து. ஜைன மரபானது திருக்குறளைத் தமிழ் நிலத்தில் ஏலாச்சாரியார் என்றும் அழைக்கப்படும் பொ.மு. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பொ.யு. முதல் நூற்றாண்டின் முந்தைய பாதியிலும் வாழ்ந்த தென் பாடலிப்புத்திர திராவிட சங்கத்தின் தலைவரும் ஜைன ஆச்சாரியருமான குந்தகுந்த ஆச்சாரியருடன் தொடர்புபடுத்துகிறது என்று ஏ. சக்ரவர்த்தி கூறுகிறார். எனினும், பண்டைய திகம்பர சமண நூல்களிலோ சுவேதாம்பர சமண நூல்களிலோ திருவள்ளுவரைப் பற்றியோ திருக்குறளைப் பற்றியோ எந்த ஒரு குறிப்பினையும் காணமுடிவதில்லை. இந்து சமய பக்தி இலக்கியங்களில் சுமார் 8-ம் நூற்றாண்டு வாக்கில் வள்ளுவரும் திருக்குறளும் குறிப்பிடப்பட்டிருக்கையில் சமண நூல்களில் வள்ளுவர் முதன்முதலாகக் குறிப்பிடப்படுவது 16- ஆம் நூற்றாண்டில்தான்.

வள்ளுவர் இந்து சமயத்தைச் சேர்ந்தவராக இருந்திருப்பார் என்ற கருத்தும் அறிஞர்களிடையே சம அளவில் இருந்து வருகிறது. திருக்குறளில் காணப்படும் போதனைகள் பலவும் இந்து தர்ம நூல்களில் காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டுகின்றனர். அறம், பொருள், இன்பம் என்ற வீடு பேற்றினை நோக்கிய திருக்குறளின் பகுப்புமுறைகள் முறையே இந்து தர்ம புருஷார்த்த பகுப்பு முறையின் முதல் மூன்றின் அடிப்படையில் அமைந்திருப்பதும், அகிம்சையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குறள் பொருட்பாலில் இந்து தர்ம நூல்களில் ஒன்றான அர்த்த சாஸ்திரத்தினை ஒத்ததாய் அரசியல் மற்றும் போர்முறைகளைக் கூறியிருப்பதும் அவர்கள் காட்டும் சான்றுகளில் சில. தனிமனிதனாகத் தன் அன்றாட வாழ்வில் கொல்லாமையைக் கடைப்பிடித்த பின்னரே ஒருவனுக்குப் படைவீரனாகப் போரில் கொல்லும் விதிவிலக்கு அளிக்கப்படுவதும் மன்னனாக ஒருவன் அரியணையில் அமர்ந்த பின்னரே குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அளிக்கும் உரிமை அவனுக்கு வழங்கப்படுவதும் இந்து தர்ம முறையினை வலியுறுத்துகிறது. திருவள்ளுவர் 610[1] மற்றும் 1103[2]- குறட்பாக்களில் திருமாலைக் குறிப்பிடுவதும் குறட்பாக்கள் 167, 408, 519, 565, 568, 616, மற்றும் 617-களில் திருமகளைக் குறிப்பிடுவதும் வைணவ தத்துவங்களைக் குறிக்கின்றன. இந்து சமயத்திலிருந்து தோன்றிய சுமார் 24 வெவ்வேறு தொடர்களை திருக்குறள் முழுவதும் குறைந்தபட்சம் 29 இடங்களில் திருவள்ளுவர் எடுத்தாண்டிருப்பதை பி.ரா. நடராசன் பட்டியலிடுகிறார். தருக்க ரீதியான முறையில் திருக்குறளை அலசினால் திருவள்ளுவர் இந்து என்பதும் அவர் சமணரல்லர் என்பதும் புலப்படும் என்று பிராமணீய மறுப்பு அறிஞரான மு. சி. பூர்ணலிங்கம் பிள்ளை கூறுகிறார்.

காலம்

திருவள்ளுவர் அஞ்சல் தலை

திருக்குறளின் காலம் பொ.மு. 300 முதல் பொ.யு. 450 வரை என்று பலவாறு கருதப்படுகிறது. தமிழ் மரபின் வாயிலாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசி நூலாக அறியப்படுகிறது. சோமசுந்தர பாரதியார், மா. இராசமாணிக்கனார் முதலானோர் இக்கருத்தை நிறுவி, திருக்குறளின் காலம் பொ.மு. 300 என்று உரைக்கின்றனர். வரலாற்று அறிஞர் கே.கே. பிள்ளை திருக்குறளின் காலம் பொ.மு. முதலாம் நூற்றாண்டு என்று நிறுவுகிறார். செக் நாட்டுத் தமிழ் ஆய்வாளர் கமில் வாச்லவ் சுவெலபில் இவற்றை ஏற்க மறுக்கிறார். அவரது கணிப்பின்படி வள்ளுவரது காலம் சங்கப் புலவர்களுக்குப் பின்னரும் பக்திப் புலவர்களுக்கு முன்னருமான பொ.யு. 2-ம் நூற்றாண்டுக்கும் பொ.யு. 5-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகும். நூலின் நடை, இலக்கணம், சொல்லமைப்பு போன்றவை பொ.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் பொ.மு. முதலாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இல்லாதிருப்பதும், வள்ளுவரது சொல்லாடலில் காணப்படும் வடமொழிச் சொற்களின் பயன்பாடும், தம் காலத்திற்கு முந்தைய நூல்களிலிருந்து வள்ளுவர் எடுத்தாண்டுள்ளதையும் கமில் வாச்லவ் சுவெலபில் தனது கணிப்பிற்கு காரணமாகச் சுட்டுகிறார். எஸ். வையாபுரிப்பிள்ளை தனது ஆய்வின் முடிவாகத் திருக்குறள் பொ.யு. 6-ம் நூற்றாண்டைச் சார்ந்ததோ அல்லது அதற்குப் பிற்பட்டதோவாகும் என்று 1959-ம் ஆண்டு குறிப்பிட்டார். திருக்குறளில் வடமொழிச் சொற்கள் விரவியிருப்பதையும், நூலில் திருவள்ளுவர் சுட்டும் வடமொழி நூல்கள் பொ.யு. முதல் ஐந்து நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட நூல்களாக இருக்க வாய்ப்புள்ளது என்பதையும், அதற்கு முன்புவரை இல்லாத இலக்கணங்களைக் திருக்குறளில் திருவள்ளுவர் பயன்படுத்தியிருப்பதையும் எஸ். வையாபுரிப்பிள்ளை தனது கருத்திற்கு ஆதாரமாகக் காட்டுகிறார். இதன் ஒரு பகுதியாகக் திருக்குறளில் காணப்படும் 137 வடமொழிச் சொற்களின் பட்டியலையும் அவர் பதிப்பித்தார். பின்னர் வந்த தாமஸ் பரோ, முர்ரே பார்ன்ஸன் எமீனோ உள்ளிட்ட அறிஞர்கள் இப்பட்டியலிலுள்ள சொற்களில் 35, வடமொழிச் சொற்களல்ல என்று கருதினர். இவற்றில், மேலும் சில சொற்களின் தோற்ற வரலாறு சரியாகத் தெரியவில்லையென்றும் வரவிருக்கும் ஆய்வுமுடிவுகள் இவற்றில் சில தமிழ்ச் சொற்கள் என்றே நிறுவ வாய்ப்புள்ளது என்றும் சுவெலபில் கருதுகிறார். ஆயினும் மீதமுள்ள 102 வடமொழிச் சொற்களை ஒதுக்கிவிட முடியாதென்றும் வள்ளுவர் கூறும் கருத்துகளில் சில ஐயப்பாடின்றி அர்த்தசாஸ்திரம், மனுதர்ம சாஸ்திரம் முதலிய வடமொழி இலக்கியங்களிலிருந்து வந்தவையே என்றும் சுவெலபில் கூறுகிறார்.

திருக்குறள் சங்ககாலத்தைச் சேர்ந்தன்று, அதன் காலம் பொ.யு. 450 முதல் பொ.யு. 500 வரை இருக்கலாம் என்றும் 1974-ல் வெளிவந்த தமிழ் இலக்கிய வரலாற்றைப் பற்றிய தனது ஆய்வில் கமில் வாச்லவ் சுவெலபில் நிறுவுகிறார். நூலின் மொழியமைப்பையும், அதில் வரும் முந்தைய நூல்களைப் பற்றிய குறிப்புகளையும், வடமொழி இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட சில கருத்துகளையும் தனது கூற்றுக்குச் சான்றாக அவர் காட்டுகிறார். திருக்குறளில், திருவள்ளுவர் சங்கநூல்களில் காணப்படாத பல புதிய இலக்கண நடைகளைப் படைத்துள்ளார் என்று குறிப்பிடும் கமில் வாச்லவ் சுவெலபில், திருக்குறள் இதர பண்டைய தமிழ் நூல்களைவிட அதிகமாக வடமொழிச் சொற்பயன்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறார். திருக்குறளின் தத்துவங்கள் பண்டைய இந்தியாவில் பரவலாகக் காணப்பட்ட மெய்யியலின் ஒரு பகுதி என்பதைச் சுட்டும் கமில் வாச்லவ் சுவெலபில், வள்ளுவர் தமிழ் இலக்கிய மரபுடன் மட்டும் தொடர்புடையவர் அல்லர் என்றும் அவர் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் வியாபித்திருந்த ஒருங்கிணைந்த பண்டைய இந்திய அறநெறி மரபையும் சார்ந்தவர் என்றும் நிறுவுகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் சில ஐரோப்பிய அறிஞர்களும் கிறிஸ்தவ மதபோதகர்களும் திருக்குறளின் காலத்தை பொ.யு. 400-ல் தொடங்கி பொ.யு. 1000 வரை பலவாறு வரையறை செய்தனர். தற்காலத்தைய அறிஞர்கள் குறளின் காலம் என்று ஒருமித்தமாக ஏற்பது சுமார் பொ.யு. 5-ம் நூற்றாண்டு என்றே பிளாக்பர்ன் கருதுகிறார்.

இந்த வாதங்களுக்கிடையில் 1921-ம் ஆண்டு தமிழக அரசு மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியினை ஏற்று பொ. மு. 31-ம் ஆண்டினை வள்ளுவர் பிறந்த ஆண்டாக அறிவித்தது. இதன் விளைவாக அன்று தொடங்கி தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்கத் திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றது. தமிழக நாட்காட்டிகளில் ஜனவரி 18, 1935 அன்று முதல் வள்ளுவர் ஆண்டு சேர்க்கப்பட்டது.

நூல் அமைப்பு

திருக்குறளின் பெரும் பிரிவு பால் எனவும்,சிறு பிரிவு இயல் எனவும், அதனினும் சிறிய பிரிவு அதிகாரம் என்று வகுக்கப் பெற்றுள்ளது. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று மூன்று பால்களாகவும், அவை முறையே 4, 3,2 இயல்களாகவும், இயல்கள் அதிகாரங்களாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதிகாரத்திற்குப் பத்து குறட்பாக்கள் வீதம் மொத்தம் 1,330 குறட்பாக்களைக் கொண்டுள்ளது. அனைத்துப் பாக்களும் குறள் வெண்பாக்களாக அமைந்தன. மேலும் ஒவ்வொரு அதிகாரத்தின் பத்துப் பாக்களும் அவ்வதிகாரத்தின் கருப்பொருளாக விளங்கும் அறநெறியினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன.

 • அறத்துப்பால் -ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் பற்றி கூறுவது.
 • பொருள்பால்-ஒருவர் தன் சமூக வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களை, அதாவது சமூகம், பொருளாதாரம், அரசியல், மற்றும் நிர்வாகம் ஆகிய விழுமியங்களைப் பற்றிக் கூறுவது (அதிகாரங்கள் 39–108)
 • இன்பத்துப்பால்- காமம்/ இன்பம்: ஒருவர் தன் அகவாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் பற்றிக் கூறுவது. (அதிகாரங்கள் 109-133)

அறத்துப்பாலில் 380 பாக்களும், பொருட்பாலில் 700 பாக்களும், இன்பத்துப்பாலில் 250 பாக்களும் உள்ளன. ஒவ்வொரு பா அல்லது குறளும் சரியாக ஏழு சீர்களைக்( சொற்கள் ) கொண்டுள்ளது. ஒவ்வொரு குறளும் முதல் அடியில் நான்கு சீர்களும் இரண்டாவது அடியில் மூன்று சீர்களும் பெற்றிருக்கிறது. ஒரு சீர் என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்களின் கூட்டுச்சொல். எடுத்துக்காட்டாக, "திருக்குறள்" என்ற சொல் "திரு" மற்றும் "குறள்" என்ற இரண்டு சொற்களை இணைப்பதன் மூலம் உருவாகும் ஒரு சீராகும். திருக்குறளை மொத்தம் 9,310 சீர்கள் அல்லது 14,000 சொற்களைக் கொண்டு வள்ளுவர் பாடியுள்ளார். திருக்குறளில் மொத்தல் 42,194 எழுத்துக்கள் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. திருக்குறளிலுள்ள 1,330 குறள்களில் முதல் 40 குறள்கள் கடவுள், மழை, சான்றோரது பெருமை மற்றும் அறத்தின் பெருமை ஆகியவற்றையும், அடுத்த 340 குறள்கள் அன்றாட தனிமனித அடிப்படை நல்லொழுக்க அறங்களைப் பற்றியும், அடுத்த 250 குறள்கள் ஆட்சியாளரின் ஒழுக்கங்கள் குறித்த அறங்களைப் பற்றியும்; அடுத்த 100 குறள்கள் அமைச்சர்களின் அறங்களைப் பற்றியும், அடுத்த 220 குறள்கள் நிர்வாக அறங்களைப் பற்றியும், அடுத்த 130 குறள்கள் நேர்மறை மற்றும் எதிர்மறையான சமூக ஒழுக்கங்கள் குறித்த அறங்களைப் பற்றியும், கடைசி 250 குறள்கள் இன்ப வாழ்வு குறித்த அறங்களைப் பற்றியும் பேசுகின்றன.

பகவத் கீதை உள்ளிட்ட இந்திய மெய்யியலின் மிகப் பழமையான படைப்புகளில் ஒன்றாகத் திருக்குறள் கருதப்படுகிறது. திருக்குறளின் பகுப்பு முறை தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய நான்கு வாழ்வியல் நோக்கங்களை உள்ளடக்கிய பண்டைய இந்திய தத்துவமான "புருஷார்த்த தத்துவத்தின்" முதல் மூன்றினை முறையே அறம், பொருள், இன்பம் எனப் பிரதிபலிப்பதாக உள்ளது. நான்காவது நோக்கமான மோட்சம் அல்லது வீடுபேறு திருக்குறளில் வெளிப்படையாகக் கூறப்படாமல் அறத்துப்பாலின் கடைசி ஐந்து அதிகாரங்களில் உள்ளார்ந்து வைக்கப்பட்டுள்ளது. அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் கூறுகள் தமிழ் இலக்கிய மரபின் அகம், புறம் என இருவகைகளின் பாற்படும் என்பது தொல்காப்பியத்தின் கூற்று. தர்மம் அல்லது அறம் என்பது ஒரு முழுமையான வாழ்க்கைக்குத் தேவையான நெறிமுறைகளையும், அர்த்தம் அல்லது பொருள் என்பது அறத்தால் வழிநடத்தப்பட்ட முறையில் பெறப்படும் செல்வத்தையும், காமம் அல்லது இன்பம் என்பது அறத்தின் வழிநடத்தலால் நிறைவேற்றப்படும் ஆசைகளையும் குறிக்கின்றன. பொருளும் இன்பமும் நாடப்பட வேண்டியவைதான் என்றாலும் இவை இரண்டும் அறத்தின் வாயிலாக மட்டுமே நாடப்படுபவையாக இருத்தல் வேண்டும். இந்தியத் தத்துவ மரபின்படி, செல்வமும் உடமைகளும் முற்றிலுமாகத் துறக்கப்படவோ அல்லது பற்றற்ற விழிப்புணர்வோடு நாடப்படவோ வேண்டும். அப்படி நாடப்படும் பட்சத்தில் ஒருவர் அவற்றோடு பிணைப்பின்றி இருக்க வேண்டும். இன்பமானது உணர்வுப்பூர்வமாகவும் யாருக்கும் தீங்கு விளைவிக்காத வண்ணமும் நாடப்படுதல் வேண்டும். பொருளிற்கும் இன்பத்திற்கும் இடையில் இயல்பாகவே ஒரு உள்ளார்ந்த பதற்றம் இருப்பதாக இந்திய தத்துவங்கள் கூறுகின்றன. ஆகவே, இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு பொருளும் இன்பமும் "பற்றற்ற மனதுடன்" (நிஷ்காம கர்மா) அவற்றிற்கு ஏங்காது அடையப்படுதல் வேண்டும் என்று இந்திய மரபு கூறுகிறது. அறத்துப்பாலின் கடைசி ஐந்து அதிகாரங்கள் இவற்றை வலியுறுத்துவதாக உள்ளன. திருக்குறள் நூற் பிரிவு அட்டவணை

அறத்துப்பால் (1-38)

1. கடவுள் வாழ்த்து

2. வான் சிறப்பு

3. நீத்தார் பெருமை

4. அறன் வலியுறுத்தல்

5. இல்வாழ்க்கை

6. வாழ்க்கைத் துணைநலம்

7. மக்கட்பேறு

8. அன்புடைமை

9. விருந்தோம்பல்

10. இனியவை கூறல்

11. செய்ந்நன்றி அறிதல்

12. நடுவுநிலைமை

13. அடக்கம் உடைமை

14. ஒழுக்கம் உடைமை

15. பிறன் இல் விழையாமை

16. பொறை உடைமை

17. அழுக்காறாமை

18. வெஃகாமை

19. புறங்கூறாமை

20. பயனில சொல்லாமை

21. தீவினை அச்சம்

22. ஒப்புரவு அறிதல்

23. ஈகை

24. புகழ்

25. அருள் உடைமை

26. புலால் மறுத்தல்

27. தவம்28. கூடா ஒழுக்கம்

29. கள்ளாமை

30. வாய்மை

31. வெகுளாமை

32. இன்னா செய்யாமை

33. கொல்லாமை

34. நிலையாமை

35. துறவு

36. மெய் உணர்தல்

37. அவா அறுத்தல்

38. ஊழ்

பொருட்பால் (39-108)

39. இறைமாட்சி

40. கல்வி

41. கல்லாமை

42. கேள்வி

43. அறிவுடைமை

44. குற்றம் கடிதல்

45. பெரியாரைத் துணைக்கோடல்

46. சிற்றினம் சேராமை

47. தெரிந்து செயல்வகை

48. வலி அறிதல்

49. காலம் அறிதல்

50. இடன் அறிதல்

51. தெரிந்து தெளிதல்

52. தெரிந்து வினையாடல்

53. சுற்றம் தழால்

54. பொச்சாவாமை

55. செங்கோன்மை

56. கொடுங்கோன்மை

57. வெருவந்த செய்யாமை

58. கண்ணோட்டம்

59. ஒற்றாடல்

60. ஊக்கம் உடைமை

61. மடி இன்மை

62. ஆள்வினை உடைமை

63. இடுக்கண் அழியாமை

64. அமைச்சு

65. சொல்வன்மை

66. வினைத்தூய்மை

67. வினைத்திட்பம்

68. வினை செயல்வகை

69. தூது

70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

71. குறிப்பு அறிதல்

72. அவை அறிதல்

73. அவை அஞ்சாமை

74. நாடு

75. அரண்

76. பொருள் செயல்வகை

77. படைமாட்சி

78. படைச்செருக்கு

79. நட்பு

80. நட்பு ஆராய்தல்

81. பழைமை

82. தீ நட்பு

83. கூடா நட்பு

84. பேதைமை

85. புல்லறிவாண்மை

86. இகல்

87. பகை மாட்சி

88. பகைத்திறம் தெரிதல்

89. உட்பகை

90. பெரியாரைப் பிழையாமை

91. பெண்வழிச் சேறல்

92. வரைவில் மகளிர்

93. கள் உண்ணாமை

94. சூது

95. மருந்து

96. குடிமை

97. மானம்

98. பெருமை

99. சான்றாண்மை

100. பண்புடைமை

101. நன்றியில் செல்வம்

102. நாண் உடைமை

103. குடி செயல்வகை

104. உழவு

105. நல்குரவு

106. இரவு

107. இரவச்சம்

108. கயமை

இன்பத்துப்பால் (109-133)

109. தகையணங்குறுத்தல்

110. குறிப்பறிதல்

111. புணர்ச்சி மகிழ்தல்

112. நலம் புனைந்து உரைத்தல்

113. காதற் சிறப்பு உரைத்தல்

114. நாணுத் துறவு உரைத்தல்

115. அலர் அறிவுறுத்தல்

116. பிரிவாற்றாமை

117. படர் மெலிந்து இரங்கல்

118. கண் விதுப்பு அழிதல்

119. பசப்பு உறு பருவரல்

120. தனிப்படர் மிகுதி

121. நினைந்தவர் புலம்பல்

122. கனவு நிலை உரைத்தல்

123. பொழுது கண்டு இரங்கல்

124. உறுப்பு நலன் அழிதல்

125. நெஞ்சொடு கிளத்தல்

126. நிறை அழிதல்

127. அவர் வயின் விதும்பல்

128. குறிப்பு அறிவுறுத்தல்

129. புணர்ச்சி விதும்பல்

130. நெஞ்சொடு புலத்தல்

131. புலவி

132. புலவி நுணுக்கம்

133. ஊடல் உவகை

நூலின் கட்டமைப்பு

திருக்குறள் ஒரு தனி ஆசிரியரின் படைப்பாகும். இக்கூற்றை நிரூபிக்கும் வகையில் இந்நூலானது "ஒரு நிலையான மொழியமைப்பையும் முறையான கட்டமைப்பையும் சீரான பொருளமைப்பையும் கொண்டுள்ளது" என்று கமில் வாச்லவ் சுவெலபில் கூறுகிறார். திருக்குறள் பலரால் இயற்றப்பட்ட ஒரு தொகுப்பு நூல் அல்ல என்றும் அதன் உள்ளடக்கத்தில் எந்த ஒரு பிற்சேர்க்கைகளும் இல்லை என்றும் அவர் கூறுகிறார். இந்நூலினை மூன்று பால்களாகப் பகுத்தது இதன் ஆசிரியரே ஆகும். ஆனால் திருக்குறளின் உரைகளில் காணப்படும் துணைப் பிரிவுகளான "இயல்" பாகுபாடுகள் பின்னர் வந்த உரையாசிரியர்களால் செய்யப்பட்டவை. திருக்குறள் உரைகளில் இயல் பாகுபாடுகள் உரைக்கு உரை வேறுபட்டிருப்பதும் அதிகாரங்கள் இயல் விட்டு இயல் மாறி அமைந்துள்ளதுமே இதற்குச் சான்றுகளாகும். உதாரணமாக, பரிமேலழகரின் உரையில் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ள இயல் பிரிவுகள் மணக்குடவரின் உரையிலிருந்து பெரிதும் மாறுபடுகின்றன

 • அதிகாரங்கள் 1–4: பாயிரம்
 • அதிகாரங்கள் 5–24: இல்லறவியல்
 • அதிகாரங்கள் 25–38: துறவறவியல்
 • அதிகாரங்கள் 39–63: அரசியல்
 • அதிகாரங்கள் 64–95: அங்கவியல்
 • அதிகாரங்கள் 96–108: ஒழிபியல்
 • அதிகாரங்கள் 109-115: களவியல்
 • அதிகாரங்கள் 116-133: கற்பியல்

இவ்வாறான இயல் பாகுபாடுகள் பிற்காலச் சேர்க்கைகளாகவே அறியப்பட்டாலும், குறட்பாக்கள் அனைத்தும் பலதரப்பட்ட உரைகளுக்கிடையிலும் பிற்சேர்க்கைகள் ஏதுமின்றி அவற்றின் உண்மை வடிவம் மாறாது பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அறத்துப்பாலிலுள்ள அதிகாரங்கள் இல்லறம், துறவறம் என இரு இயல்களாக இடைக்கால உரையாசிரியர்களால் பகுக்கப்பட்டாலும், இவை நூலாசிரியரது பகுப்பன்று என்பதால் அவற்றில் இருக்கும் அனைத்துமே நூலாசிரியரால் இல்லறத்தானுக்கு அல்லது சாமானியனுக்கு சொல்லப்பட்டவைதான் என்பது புலப்படுகிறது. ஒரு மனிதன் பல நிலைகளில் மகனாக, தந்தையாக, கணவனாக, நண்பனாக, குடிமகனாக ஆற்ற வேண்டிய கடமைகளை திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். திருக்குறளில் உள்ள "துறவறம்" என்பது இல்லற வாழ்க்கையைக் கைவிட்டுத் துறவறம் மேற்கொள்வதைக் குறிப்பதோ துறவிகளுக்காகக் கூறப்பட்டவையோ அல்ல. மாறாக, தனிநபர் ஒவ்வொருவரும் தனது அளவற்ற ஆசைகளைக் கைவிடுவதையும் அறநெறி பிறழாது சுயக்கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதையுமே "துறவற" அதிகாரங்கள் கூறுகின்றன.

முப்பால் எனும் பகுப்பைப் போல் குறள்களை அதிகாரங்களாகத் தொகுத்ததும் நூலாசிரியர்தான். இயல் எனும் பகுப்பு மற்றும் அதிகார வைப்புமுறையினை மட்டுமே உரையாசிரியர்கள் மாற்றியுள்ளனர். ஒவ்வொரு அறத்தையும் பத்துக் குறட்பாக்களாகப் பாடி அவற்றின் தொகுப்பினை அதிகாரம் என்று பெயரிடும் மரபு வள்ளுவரிடம் காணப்படுவதாகவும் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் தலைப்பினை அவரே வழங்கியுள்ளார் என்றும் சோ. ந. கந்தசாமி கூறுகிறார். மேலும் அந்தந்த அதிகாரத்தில் பொதிந்துள்ள குறட்பாக்களில் பயின்றுவரும் தொடரினையே பெரிதும் பேணி அதிகாரத் தலைப்பாக வள்ளுவர் அமைத்துள்ளதாகவும் அவர் உரைக்கிறார். இதற்கு விதிவிலக்காக ஒவ்வொரு பால்களிலும் ஓர் அதிகாரம் உண்டு: அறத்துப்பாலில் வரும் "கடவுள் வாழ்த்து" அதிகாரமும் (முதல் அதிகாரம்), பொருட்பாலில் வரும் "படைச் செருக்கு" அதிகாரமும் (78- ஆம் அதிகாரம்), காமத்துப்பாலில் வரும் "படர்மெலிந்திரங்கல்" அதிகாரமும் (117-வது அதிகாரம்) அவற்றில் வரும் குறள்களில் பயின்றுவராத சொல்லை அதிகாரத் தலைப்பாகக் கொண்டுள்ளன. இவ்வாறு முரணாக இருப்பினும் இவையனைத்துமே திருவள்ளுவரால் சூட்டப்பட்ட பெயர்களேயாம்.

குறளானது ஐயத்திற்கிடமின்றி சீரான அமைப்போடும் கவனத்தோடும் இயற்றப்பட்ட ஒரு நூலாகும். கருத்துகளில் இடைவெளியோ வெற்றிடமோ இன்றிக் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் தத்தம் அதிகாரத்தினின்று பிரித்தெடுக்க இயலா வண்ணம் கோர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறட்பாவும் அமைவுப் பொருள், மூதுரைப் பொருள் என இரு வகையான பொருட்களைத் தரவல்லது. குறட்பாக்களை அவை பயின்றுவரும் அதிகாரத்திலிருந்து தனியே நீக்கிப் பார்த்தால் அவை தங்களது அமைவுப் பொருளை இழந்து, தங்களுக்கே உரிய மூதுரைப் பொருளை மட்டும் தந்து ஒரு தனிப் பழமொழி போல் ஒலிக்கவல்லவை. தனித்து நிற்கையில் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் குறுகிய வெண்பாக்களுக்கே உரிய அனைத்து இலக்கணங்களையும் வெவ்வேறு வகைகளில் கொண்ட நன்னெறிப் பாக்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன. அதிகாரங்களுக்குள் பயின்று வருகையில் குறட்பாக்கள் தங்களது இயல்பான மூதுரைப் பொருளோடு தாங்களிருக்கும் அதிகார அமைப்பின் வழி வரும் அமைவுப் பொருளையும் சேர்த்து உரைத்து நூலாசிரியரின் உள்ளப்பாங்கினை வெளிப்படுத்துவதாய் அமைகின்றன. இவ்வகையில் குறள்கள் வெறும் நீதிக்கருத்துகளைக் கூறும் தனிப்பாக்களாக மட்டும் இருந்துவிடாமல் நூல் முழுதும் இழைந்தோடும் அடிப்படை அறத்தின் ஆழ்பொருளை முழுமையாக அகழ்ந்தெடுத்துத் தரும் பாக்களாக உருமாறுகின்றன. இவ்வகையில் நூலின் நடையானது ஒரு முழுமையற்ற மனிதனை அறங்கள் கொண்டு செதுக்கி அவனை உணர்வு, சிந்தனை, சொல், செயல் என அனைத்து அளவிலும் அகவாழ்விலும் தினசரி வாழ்விலும் அறம் பிறழாத நல்ல இல்லறத்தானாகவும் புற வாழ்வில் சிறந்த குடிமகனாகவும் மாற்று முயல்கிறது.

இலக்கிய அளவில், திருக்குறள் நடைமுறை அறநெறிக் கருத்துகளைச் செய்யுள் வடிவில் சுருக்கமாகவும், நேர்த்தியாகவும், தெளிவாகவும், வலுவுடனும் அனைவரும் ஏற்குமாறும் தரும் ஒரு நூலாகும். இந்நூல் முழுவதும் செய்யுளின் அழகு, ஓசைநயம், கூறல் முறை போன்றவற்றில் கவனம் செலுத்தாது கூற வந்த அறத்திற்கே முழுமையாக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

இயல் பாகுபாடுகள்

திருவள்ளுவர் முப்பாலாக மட்டுமே இயற்றிய நூலினை உரையாசிரியர்கள் இயல்களாகப் பல்வேறு வகையில் பகுத்துள்ளனர். இதன் விளைவாகக் குறளின் அதிகாரங்களின் வாிசை உரையாசிரியர்களால் பலவாறு மாற்றப்பட்டுள்ளன. அறத்துப்பாலினைச் சிறுமேதாவியார் "பாயிரம்," "அறம்", "ஊழ்" என்று மூன்று இயல்களாகவும், பரிமேலழகர் முதலானோர் "பாயிரம்," "இல்லறம்," "துறவறம்" என மூன்று இயல்களாகவும் ஏனையோர் "பாயிரம்," "இல்லறம்," "துறவறம்," "ஊழ்" என நான்கு இயல்களாகவும் பிரித்துள்ளனர். பொருட்பாலினை, உரையாசிரியர்கள் மூன்று முதல் ஆறு இயல்களாகப் பிரித்துள்ளனர். பரிமேலழகர் "அரசியல்," "அங்கவியல்," "ஒழிபியல்" என மூன்றாகப் பகுக்கையில் ஏனையோர் ஆறு இயல்கள் வரை பகுத்துள்ளனர். காமத்துப்பாலினை உரையாசிரியர்கள் இரண்டு முதல் ஐந்து இயல்களாகப் பகுத்துள்ளனர். பரிமேலழகர் "களவியல்," "கற்பியல்" என இரண்டாகவும், காலிங்கர், பரிப்பெருமாள், மோசிகீரனார் முதலானோர் "ஆண்பால் கூற்று," "பெண்பால் கூற்று," "இருபாலர் கூற்று" என மூன்றாகவும், மணக்குடவர், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகவும் பகுத்துள்ளனர். இப்பகுப்புகள் யாவும் நூலாசிரியரதன்று என்பதால் இவை உரைக்கு உரை பெரிதும் மாறுபட்ட வகையில் அமைந்திருக்கின்றன. இன்றைய அறிஞர்களும் பதிப்பகத்தார்களும் பெரும்பாலும் பரிமேலழகரின் பகுப்பு முறையினைத் தழுவியே உரைகளை வெளியிடுவதால் அதிகார அமைப்பும், இயல் பாகுபாடும், குறள் வரிசைகளும் பரிமேலழகரைத் தழுவியே பெரிதும் பின்பற்றப்படுகின்றன.

நூலின் சாரம்

திருக்குறள் ஒரு நடைமுறை அறவழி வாழ்வுக்கான படைப்பாகும். அஃது ஒரு மனிதனுக்கு இந்த உலகோடும் அதில் வாழும் பல்லுயிரோடும் உள்ள அறவழித் தொடர்பினைக் கூறும் நோக்குடன் எழுதப்பட்ட ஒரு நூல். ஆகச்சிறந்த ஒரு அறநூலாக இருந்தாலும், கவிநயம் மிக்க ஒரு படைப்பாக இது இயற்றப்படவில்லை. ஒரு சிறந்த செய்யுள் நூலாகவோ படைப்பிலக்கியமாகவோ திகழும் நோக்கோடு இந்நூல் எழுதப்படவில்லை என்றும் இந்நூலில் கவிரசம் ததும்பும் இடங்கள் ஏதேனும் உண்டென்றால் அவற்றைக் காமத்துப்பாலில் மட்டுமே பார்க்கமுடியும் என்றும் கமில் வாச்லவ் சுவெலபில் கூறுகிறார். இவ்வாறு நூலின் அழகையோ பாநயத்தையோ விடுத்து அறங்களை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டும் வழக்கிலிருந்தே வள்ளுவரின் நோக்கம் ஒரு சிறந்த அறநூலினைப் படைப்பது தானேயன்றிச் சிறந்த இலக்கியப் படைப்பினை நல்குவதன்று என்பது புலப்படுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். "குறளை நீதி நூல் என்றே எடுத்துக்கொண்டு அந்த நீதியை அது கவிதையாக முன்வைக்கிறது என்று புரிந்துகொள்வதே குறளை உள்வாங்குவதற்கான ஆகச்சிறந்த வழிமுறை. அதாவது, குறள் சொல்வது ஒரு மாபெரும் மானுட நீதியை என்று எடுத்துக்கொண்டு அந்த நீதியின் பல்வேறு சாத்தியங்களுக்குள் செல்வதாக அதன் வரிகளை வாசிப்பது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கருதுகிறார்.

தமிழ் மரபிற்கிணங்க கடவுள் வாழ்த்தைக் கொண்டு நூலினைத் தொடங்கும் திருவள்ளுவர், அதன் பின்னர் அனைத்துயிருக்கும் அமிழ்தமாய்த் திகழும் மழையின் பெருமையையும் சான்றாண்மையும் அறமும் பிறழாத சான்றோரது பெருமையையும் கூறிவிட்டு அதன் பின் நூலின் மையக் கருத்தான அறத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பின்னரே தனிமனித அறங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் போதிக்கத் தொடங்குகிறார். அறமானது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வலியுறுத்தப்பட்டு அதோடு ஊழ்வினை என்பதும் விளக்கப்படுகிறது. மானிட சமூகத்தின் மிக அடிப்படைத் தொழிலாக உழவினைப் பொருட்பாலில் வலியுறுத்தும் வள்ளுவர், இதன் காரணமாகவே உழவிற்கு அச்சாணியாகத் திகழும் மழையினைக் கடவுளுக்கு அடுத்தபடியாக வைத்துள்ளார்.

முழுவதும் அறத்தை மையமாக வைத்தே இயற்றப்பட்டதால் திருக்குறள் "அறம்" என்ற பெயராலும் வழங்கப்படுகிறது. தனது காலத்தில் காணப்பட்ட மற்ற நூல்கள் இன்னவர்க்கு இன்ன அறம் என்று அறத்தைப் பிரித்துக் கூற முற்படுகையில், திருவள்ளுவர் மட்டும் "அறம் அனைவருக்கும் பொது" என்று மாறுபாடின்றிக் கூறுகிறார். பலனுக்காக அன்றி அறம் செய்யும் நோக்குடன் மட்டுமே அறம் செய்தல் வேண்டும் என்று தனது நூல் முழுவதும் திருவள்ளுவர் கூறுகிறார். இந்த நோக்குடனேயே திருக்குறளானது அடிப்படை அறங்களை முதற்பாலிலும், சமூக அரசியல் அறங்களை இரண்டாம் பாலிலும், அக உணர்வுகளைக் கவிதைகளாக மூன்றாம் பாலிலும் கொண்டு திகழ்கிறது. அளவில் முதற்பாலைவிட இரு மடங்காகவும், மூன்றாமதை விட மும்மடங்காகவும் இயற்றப்பட்டுள்ள இந்நூலின் இரண்டாம் பாலானது இராஜதந்திரங்களை உரைக்கும் இடங்களில் கூட சற்றும் அறம் பிறழாது உரைக்கிறது. திருவள்ளுவரது காலத்திற்கு முன்பு வரை இயற்றப்பட்ட சங்க இலக்கியங்கள் யாவும் புலால் உண்ணுதல், கள் அருந்துதல், பலதார மணம், மற்றும் பரத்தையரோடு கூடுதல் போன்றவற்றை குற்றங்களாகக் கருதாது அவற்றை ஏற்றும் போற்றியும் பாடி வந்தன. தமிழரிடையே காணப்பட்ட இவ்வழக்கங்களை திருவள்ளுவர் தனது நூலின் வாயிலாக முற்றிலுமாக எதிர்த்தார். அதுமட்டுமல்லாமல், தமிழக வரலாற்றில் பண்பாட்டுக்கு முரண்பட்ட இம்மறச் செயல்களை முதன்முறையாக மறுத்த நூல் திருக்குறள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருக்குறளானது அகிம்சை என்னும் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். திருக்குறள் கொல்லாமையையும் இன்னா செய்யாமையையும் அறிவுறுத்துகிறது. அதன்படியே திருவள்ளுவர் இல்லறத்தானை அருட்குணத்தோடு திகழவேண்டும் என்று வலியுறுத்தி ஒவ்வொரு தனிமனிதனையும் புலால் மறுக்கச் சொல்லிக் கட்டளையிடுகிறார். திருக்குறள் கூறும் தனிநபர் அடிப்படை அறங்களில் மிக முக்கியமானவையாக கொல்லாமையும் வாய்மையும் திகழ்கின்றன. விவிலியமும் மற்ற ஆபிரகாமிய நூல்களும் மனித உயிரைப் பறிப்பதை மட்டுமே கண்டிக்கையில், திருக்குறள் மனிதன் விலங்கு என்று வேறுபாடின்றி "எவ்வுயிரையும் கொல்லாமை வேண்டும்" என்று வலியுறுத்துகிறது. திருவள்ளுவர் வன்மையாக எதிர்க்கும் ஒழுக்கக்கேடுகளில் செய்ந்நன்றி மறத்தலும், புலால் உண்ணுதலும் முதன்மையானவை ஆகும். தலைவன் தலைவிக்கு இடையே காணப்படும் அகப்பொருளைக் கூறும் காமத்துப்பாலில் கூட திருவள்ளுவரது அறம் இயைந்துள்ளது. அறத்துப்பாலில் "பிறன்மனை நோக்காமை" என்ற அறத்தையுரைத்த வள்ளுவர் காமத்துப்பாலில் ஆசை நாயகிகள் எவரையும் நாடாது "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற மரபின் வழி நின்று தலைவியை மட்டும் நாடும் ஒரு தலைவனைச் சித்திரிப்பதன் வாயிலாகக் "காமத்துப்பாலைப் போன்ற கவிச்சுதந்திரம் மிக்க இடங்களில் கூட திருவள்ளுவரது அறம் சற்றும் தொய்வடையாமல் ஒலிப்பதே அவரது அறச்சிந்தனைக்கு சான்று. புறவாழ்வின் ஒழுக்கங்களைக் கூறும் பொருட்பாலில் போர்க்களத்து வெற்றியையும் வீரத்தின் பெருமையையும் போற்றும் நூலாசிரியர் அறத்தையும் நீதியையும் நிலைநாட்டும் பொருட்டு மட்டுமே மரண தண்டனையை விதிக்கும் உரிமையினை ஆட்சியாளனுக்கு வழங்குகிறார்.

திருக்குறள் வெறும் இரகசியம் மிகுந்த தத்துவங்களைப் போதிக்கும் நூலன்று. அஃது உலகியல் சார்ந்த நடைமுறைக் கோட்பாடுகளை நிறுவும் மெய்யியல் நூல். திருவள்ளுவர் தனது அரசியல் கோட்பாட்டினைப் படை, குடிமக்கள் (குடி), கையிருப்புப் பொருளாதாரம் (கூழ்), அமைச்சர்கள், நட்புவட்டம், அரண் ஆகிய ஆறு கருக்களைக் கொண்டு நிறுவுகிறார். பாதுகாப்பு அரண்களின் முக்கியத்துவத்தில் தொடங்கி எதிரியின் அரணைப் பற்றத் தேவையான முன்னேற்பாடுகள் வரை திருவள்ளுவரது பரிந்துரைகள் நீள்கின்றன. நாடாளும் ஒருவன் தனது படைகளோடு எப்பொழுதும் போருக்கு ஆயத்த நிலையில் இருக்கவேண்டும் என்பதையும் இடம், காலம், சூழல் ஆகியற்றை ஆராய்ந்து அறம் தாழ்ந்த எதிரி நாட்டை வீழ்த்தவேண்டும் என்பதையும் உரைக்கும் திருக்குறள், அறம் தவறாத நாடாயின் அஃது அரண் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டியது என்பதையும் வலியுறுத்துகிறது. படையின் சிறப்பினைக் கூறும் அதிகாரங்கள் அச்சம் தவிர்த்து அறத்தைக் காக்கும் பொருட்டு உயிர்த்துறக்கவும் முற்படும் படைவீரர்களைக் கொண்ட ஒழுங்குடன் நிறுவப்பட்ட படையே சிறந்த படை என்ற இந்துதர்ம போராயத்த முறையினைப் பிரதிபலிப்பதாக உள்ளன.

தனிமனிதருக்கு ஒழுக்கங்களைப் போதிக்கும் திருக்குறளானது மக்களாட்சியை வலியுறுத்தவில்லை. மாறாக ஆட்சியாளர் ஒருவர் தம் அமைச்சர்களோடு கலந்தாய்ந்து அறவழியில் நீதியினை நிலைநிறுத்தும் வகையில் நாடாள்வதன் மூலக்கூறுகளைக் திருக்குறள் உரைக்கிறது. நாடாள்பவர் ஒருவருக்குச் சட்டங்களை இயற்றல், செல்வங்களை ஈட்டல், மக்களையும் வளங்களையும் காத்தல், பொருளாதாரத்தை முறையாகப் பங்கீடு செய்தல் ஆகியவையே பிரதானத் தொழில்கள் என திருக்குறள் கூறுகிறது. நீதி தவறாத ஆட்சி, நடுநிலை தவறாத நிலைப்பாடு, குடிகளைக் காக்கும் திறன், நீதியும் தண்டனையையும் தவறாது வழங்கும் மாண்பு முதலியன நாடாள்வோரின் கடமைகளாகும் என்கிறது. இதன் காரணமாகவே அறத்துப்பாலில் ஒவ்வொரு தனிமனிதனும் இடையறாது கடைபிடிக்க வேண்டிய அடிப்படை அறமாக கொல்லாமையை முதலில் வலியுறுத்திய பின்னரே பொருட்பாலில் மரணதண்டனை வழங்கும் அதிகாரத்தை நீதியினை நிலைநாட்டும் பொருட்டு மட்டும் அரசனுக்கு அளிக்கிறது. கூடவே கொடுங்கோண்மை, வெருவந்த செய்தல், அற்றாரைத் தேறுதல் போன்ற தீய செயல்களை நாடாள்வோர் தவிர்க்காவிட்டால் அவை அனைவருக்கும் துன்பத்தைத் தந்து செல்வத்தைக் கரைத்து அரசையே கலைத்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்.

திருக்குறள் நூல் முழுவதும் அறங்களைக் குறிப்பாகக் கூறாது பொதுப்படையாகவே கூறுவதை திருவள்ளுவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒவ்வொரு மனிதனுக்கும் அறங்களின் அடிப்படையினை அறியவைப்பதன் வாயிலாக, குறிப்பிட்ட சூழ்நிலை ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட தீர்வை நல்காது அனைத்து சூழ்நிலைகளையும் அந்நபரால் கையாள இயலுமாறு பொதுப்படையாகவே போதிக்கிறார். திருவள்ளுவரது இந்த நிலைப்பாட்டினைக் திருக்குறள் முழுவதிலும் காணலாம். உதாரணமாக, கடவுளை வழிபடுமாறு கூறும் திருவள்ளுவர், வழிபாட்டு முறையைப் பற்றிக் கூறுவதில்லை; கடவுளை "வாலறிவன்", "அந்தணன்", "ஆதிபகவன்", "எண்குணத்தான்", "தனக்குவமை இல்லாதான்", "பொறிவாயில் ஐந்தவித்தான்", "வேண்டுதல் வேண்டாமை இலான்", "மலர்மிசை ஏகினான்" என்றெல்லாம் அழைக்கும் ஆசிரியர், கடவுளின் பெயரை எங்கும் குறிப்பிடுவதில்லை; அறநூல்களையும் மறைநூல்களையும் குறிப்பிடும் வள்ளுவர், அவற்றை அவற்றின் பெயர் கொண்டு அழைப்பதில்லை; ஈகை வேண்டும் என்று வலியுறுத்தும் அவர், எவற்றையெல்லாம் தானமாகக் கொடுக்கவேண்டும் என்று உரைப்பதில்லை; கற்றல் வேண்டும் என்று கூறும் அவர், எவற்றைக் கற்க வேண்டும் என்று பட்டியலிடுவதில்லை; வரிகளைப் பரிந்துரைக்கும் அவர், மன்னன் மக்களிடமிருந்து எவ்வளவு தொகையை வரிப்பணமாகப் பெறவேண்டும் என்று குறிப்பிடுவதில்லை; அரசன், நிலம், நாடு எனக் குறிக்கும் அவர், எந்த ஒரு அரசனின் பெயரையோ நாட்டின் பெயரையோ குறிப்பதி்ல்லை. திருக்குறள் "உலகப் பொதுமறை" என்றும் வள்ளுவர் "பொதுப்புலவர்" என்றும் அழைக்கப்படுவதற்கு இவையே காரணங்களாக அமைகின்றன.

உவமைகள், உருவகங்கள், முரண் தோற்றங்கள்

உவமைகளுக்கும் உருவகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காது அறங்களை வலியுறுத்தும் நோக்குடன் மட்டுமே திருவள்ளுவர் அவைகளைப் பயன்படுத்தியிருப்பதை திருக்குறள் முழுவதிலும் காணமுடிகிறது. ஓர் அதிகாரத்தில் நேர்மறையாகவோ புகழ்ந்தோ பயன்படுத்திய அதே உவமைகளையும் உருவகங்களையும் மற்றொரு அதிகாரத்தில் எதிர்மறையாகவோ இகழ்ந்தோ பயன்படுத்த அவர் தயங்கவில்லை. இவ்வகையில் அறங்களை விளக்க முரண்போல் தோன்றும் கருத்துகளையும் வேண்டுமென்றே அவர் பல இடங்களில் பயன்படுத்துகிறார். உதாரணமாக, "கள்ளுண்ணாமை" அதிகாரத்தில் கள்ளின் தீமையை உரைக்கும் வள்ளுவர், "தகையணங்கு உறுத்தல்" அதிகாரத்தில் உள்ளன்பானது கள்ளைக் காட்டிலும் மகிழ்ச்சியைத் தரவல்லது (குறள் 1090) என்று உள்ளன்பின் மேன்மையை உரைக்கக் கள்ளை உவமையாகப் பயன்படுத்துகிறார்.

"செல்வத்துள் செல்வம் எது?" என்ற கேள்விக்கு "அருளுடைமை" அதிகாரத்தில் அருள் (குறள் 241) என்றும் "கேள்வி" அதிகாரத்தில் கேட்டல் (குறள் 411) என்றும் வள்ளுவர் பதிலுரைக்கிறார்.

பிற அறங்களைக் கைவிட நேர்ந்தாலும் எந்நிலையிலும் கைவிட முடியாத அறங்கள் என்று பிறன்மனை நோக்காமை (குறள் 150), புறங்கூறாமை (குறள் 181) வாய்மை (குறள் 297), என்று பலவற்றைச் சுட்டும் வள்ளுவர் முடிவாக வாய்மையைக் கூட இரண்டாம் நிலைக்குத் தள்ளி கொல்லாமையை வலியுறுத்துகிறார். (குறள் 323).

"ஊழ்" அதிகாரத்தில் தமக்குரிய ஒன்றை ஒருவர் நீக்க முயன்றாலும் நீங்காது (குறள் 376) என்றுரைக்கும் வள்ளுவர், "மடியின்மை" அதிகாரத்தில் தம் குடியோடு வந்த குற்றமும் மடி (சோம்பல்) நீங்கின் நீங்கும் (குறள் 609) என்கிறார்.

"மக்கட்செல்வம்" அதிகாரத்தில் ஒரு மனிதன் பெறக்கூடிய பெரும் பேறாகச் சான்றாண்மை மிக்க நன்மக்கட் செல்வங்களைக் கூறும் வள்ளுவர், "அடக்கமுடைமை" அதிகாரத்தில் அது தன்னடக்கத்தால் பெறப்படும் ஒன்று என்கிறார்.

முரண்போல் தோன்றும் இவ்விடங்களுக்கிடையிலுள்ள அறத்தொடர்பினை உரையாசிரியர்கள் பதின்மரில் தொடங்கி அதன் பின் வந்த பலரும் தங்களது உரைகளில் தெளிவுபடுத்தியுள்ளனர். குறட்பாக்கள் 380 மற்றும் 620, 481 மற்றும் 1028, 373 மற்றும் 396, 383 மற்றும் 672 ஆகியவற்றிற்கு இடையிலுள்ள அறத்தொடர்பினை பரிமேலழகர் தனது உரையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

உரைகள்

வ.உ.சி. உரை

தமிழ் இலக்கிய வரலாற்றில் அதிகமாக அலசப்பட்ட நூலான திருக்குறள், அனேகமாகத் தமிழின் அனைத்து அறிஞர்களாலும் கையாளப்பட்டு இவர்களுள் பலரால் ஏதோ ஒரு வகையில் உரையெழுதப்பட்டுள்ளது. குறட்பாக்களைக் தங்கள் பாக்களில் எடுத்தாண்ட சிலப்பதிகாரம், மணிமேஎலை, கம்பராமயணம், பெரியபுராணம் உள்ளிட்ட பண்டைய தமிழிலக்கியங்கள் யாவும் திருக்குறளுக்குச் செய்யுள் வடிவில் எழுந்த முதல் உரைகள் ஆகும். உரைநடையில் திருக்குறளுக்கான பிரத்தியேக உரைகள் எழத் தொடங்கியது சுமார் 10-ம் நூற்றாண்டு வாக்கில்தான். 10-ம் நூற்றாண்டு தொடங்கி 13-ம் நூற்றாண்டு வரை இருந்த காலகட்டத்தில் குறைந்தபட்சம் பத்து அறிஞர்கள் திருக்குறளுக்கு முதன்முறையாக உரைநடை பாணியில் உரை வரைந்தனர். பதின்மர் என்றழைக்கப்படும் இவர்கள் மணக்குடவர், தருமர், தாமத்தர், தச்சர், பரிதியார், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காலிங்கர் மற்றும் பரிமேலழகர் முதலானோர் ஆவர். இவர்களில் மணக்குடவர், பரிதியார், காலிங்கர், பரிபெருமாள், பரிமேலழகர் ஆகியோரது உரைகள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன. தருமர், தாமத்தர், நச்சர் ஆகியோரது உரைகளின் ஒரு சில பகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன. திருமலையர் மற்றும் மல்லரது உரைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. பதின்மரது உரைகளின் வாயிலாகவே திருக்குறள் இன்று நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது. பதின்மர் உரைகளில் சிறப்பாகக் கருதப்படுவது பரிமேலழகர், மணக்குடவர், மற்றும் காலிங்கர் ஆகியோரது உரைகள்தான். பதின்மர் உரைகளில் 900 குறட்பாக்களில் அறிஞர்கள் பாடபேதங்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றுள் 217 இடங்கள் அறத்துப்பாலிலும், 487 இடங்கள் பொருட்பாலிலும், 196 இடங்கள் காமத்துப்பாலிலும் இடம்பெற்றிருக்கின்றன.

திருக்குறள் உரைகளில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அறிஞர்கள் கருதுவது பரிமேலழகர் விருத்தியுரை ஆகும். இது பொ.யு. 1272-ம் ஆண்டு இயற்றப்பட்டது. குறளின் மூலத்திற்கு இணையாகப் பரவலாகப் பதிப்பிக்கப்பட்டு பயிலப்படும் இவ்வுரை தமிழிலக்கிய நூல்களுள் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் ஆராய்ச்சித் தொகுப்பு ஒன்று 1965-ம் ஆண்டு வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. பரிமேலழகர் தனது வைணவ இந்து சமய நெறிகளின் பார்வையின் அடிப்படையில் உரையினைக் கொண்டு சென்றுள்ளார். தாம் வாழ்ந்த 13-ம் மற்றும் 14-ம் நூற்றாண்டின் தமிழகத்து இலக்கிய, சமய, கலாச்சாரக் கட்டமைப்புகளைத் தழுவியவாறு திருக்குறள் கூறும் அறங்களை வழுவாது தனது உரையில் பரிமேலழகர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், பல்வேறு கோணங்களில் ஆராயவும், விளங்கிக் கொள்ளவும் ஏதுவான ஓர் உரையாக அவரது உரை உள்ளது

திருக்குறளுக்கு, பதின்மர்களின் உரைகளைத் தவிர மேலும் மூன்று உரைகளேனும் இடைக்காலத்தில் இயற்றப்பட்டுள்ளன. இவற்றின் ஆசிரியர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இவற்றில் ஒன்று "பழைய உரை" என்ற பெயரிலும் மற்றொன்று பரிதியாரின் உரையைத் தழுவியும் இயற்றப்பட்டுள்ளன. மூன்றாவது "ஜைன உரை" என்ற பெயரில் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தால் 1991-ம் ஆண்டு பதிப்பிக்கப் பெற்றது. தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளின் காலகட்டத்தில் சோமேசர் முதுமொழி வெண்பா, முருகேசர் முதுநெறி வெண்பா, சிவசிவ வெண்பா, இரங்கேச வெண்பா, வடமாலை வெண்பா, தினகர வெண்பா, ஜினேந்திர வெண்பா உள்ளிட்ட சுமார் 21 வெண்பா உரைகள் இயற்றப்பட்டன. இவையாவும் திருக்குறளுக்கான செய்யுள் வடிவ உரைகளாகும். திருமேனி இரத்தினக் கவிராயர் (16-ம் நூற்றாண்டு), இராமானுஜ கவிராயர் (19-ம் நூற்றாண்டு) ஆகியோரது உரைகள் இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சிறந்த உரைகளில் அடக்கம்.

19-ம் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டிலும் பல புதிய உரைகள் திருக்குறளுக்கு இயற்றப்பட்டன. இவற்றுள் கவிராச பண்டிதர் மற்றும் உ.வே. சாவாமிநாதய்யர் ஆகியோரது உரைகள் நவீனகால சிறப்பான உரைகளாகக் கருதப்படுகின்றன. 20-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூற்றுக்கணக்கான உரைகளில் கோ. வடிவேலு செட்டியார், கிருஷ்ணாம்பேட்டை கி. குப்புசாமி முதலியார், அயோத்தி தாசர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, திரு. வி. க, பாரதிதாசன், மு. வரதராசன், நாமக்கல் கவிஞர், திருக்குறளார் வே. முனுசாமி, தேவநேயப் பாவாணர், மு. கருணாநிதி, சாலமன் பாப்பையா ஆகியோரது உரைகள் குறிப்பிடத்தக்கவையாகும்.1949- ஆம் ஆண்டு முதன்முதலில் அச்சிடப்பட்ட மு. வரதராசனின் "திருக்குறள் தெளிவுரை" என்ற உரை ஒரே பதிப்பகத்தாரால் 200-க்கும் அதிகமான பதிப்புகளில் வெளிவந்து மிக அதிகமாக அச்சிடப்பெற்ற நவீன உரையாகத் திகழ்கிறது.

10-ம் நூற்றாண்டில் மணக்குடவர் உரையில் தொடங்கி 2013-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 382 அறிஞர்களால் இயற்றப்பட்ட சுமார் 497 திருக்குறளுரைகள் தமிழில் வெளிவந்துள்ளன. இவற்றில் 277 அறிஞர்களேனும் குறளுக்கு முழுமையாக உரையெழுதியுள்ளனர்.

மொழிபெயர்ப்புகள்

ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு

திருக்குறளின் இலத்தீன் மொழிபெயர்ப்பினை வில்லியம் ஜெர்மன் என்பவரது ஆங்கிலக் குறிப்புகளுடன் 1856-ம் ஆண்டு காரல் கிரவுல் (Karl Graul) பதிப்பித்தார். திருக்குறளின் முதல் ஜெர்மானிய மொழிபெயர்ப்பினையும் கார்ல் கிரவுல் பதிப்பித்தார். தமிழ் இலக்கியங்களில் மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் உலகின் மிக அதிக மொழிபெயர்ப்புகளைக் கண்ட நூல்களில் ஒன்றாகவும் திருக்குறள் திகழ்கிறது. 1975-ம் ஆண்டின் முடிவில் திருக்குறள் 20 மொழிகளுக்குக் குறையாமல் மொழிபெயர்க்கப்பட்டிருந்ததாக கமில் வாச்லவ் சுவெலபில் தனது நூலில் குறிப்பிட்டிருந்தார். சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, மராத்தி, குஜராத்தி, உருது ஆகிய இந்திய மொழிகளிலும், பர்மீயம், மலாய், சீனம், ஃபிஜியன், இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மானியம், ரஷ்யன், போலிஷ், ஸ்வீடிஷ், தாய், ஆங்கிலம் ஆகிய அயல் மொழிகளிலும் 1975-ம் ஆண்டு வரை திருக்குறளானது மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இடைக்காலங்களில் திருக்குறளுக்கு உரைகள் எழுந்த காலகட்டத்தில் திருக்குறள் வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆயினும் இக்கூற்றினை நிரூபிக்கும் விதமான மொழிபெயர்ப்பு ஓலைச்சுவடிகள் மிக அரிதாகவே கிடைக்கப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னைப் பல்கலைக்கழக நூலகராக இருந்த எஸ். ஆர். ரங்கநாதன் என்பவர் திருக்குறளின் மலையாள மொழிபெயர்ப்பு ஓலைச்சுவடி ஒன்றைக் கண்டெடுத்தார். மலையாள நாட்காட்டி ஆண்டு 777 என்று குறிக்கப்பட்டிருந்த அந்த ஓலைச்சுவடியின் இயற்றப்பட்ட ஆண்டினை கமில் வாச்லவ் சுவெலபில் பொ.யு.1595 என்று அறுதியிடுகிறார்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் திருக்குறள் பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. குறிப்பாகக் கிறிஸ்தவ மதபோதகர்கள் தங்களது மதப் பிரச்சார செயல்களின் ஒரு பகுதியாக திருக்குறள் உள்ளிட்ட இந்திய இலக்கியங்களை மொழிமாற்றம் செய்யத் துவங்கினர். இதன் விளைவாக திருக்குறளின் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு எண்ணிக்கை மேலும் கூடியது. 1730-ம் ஆண்டு 'வீரமாமுனிவர்' என்றழைக்கப்படும் கான்ஸ்டான்டினோ கியூசெப்பே பெச்கி (Constantino Giuseppe Beschi) என்பவரால் இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இது திருக்குறளின் முதல் ஐரோப்பிய மொழி, மொழிபெயர்ப்பு ஆகும். ஆனால், வீரமாமுனிவர் திருக்குறளின் முதல் இரண்டு பால்களை மட்டுமே மொழிபெயர்த்தார். இன்பத்துப்பாலை படிப்பதென்பதும் மொழிபெயர்ப்பதென்பதும் ஒரு கிறிஸ்தவ மதபோதகருக்கு உகந்ததல்ல என்று அவர் கருதியதால் அதை மொழிமாற்றம் செய்யாமல் விட்டுவிட்டார். திருக்குறளின் முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1767-ம் ஆண்டு பெயர் தெரியாத ஒரு அறிஞரால் செய்யப்பட்டது. எனினும் இது விரைவில் வழக்கின்றி போய்விட்டது. வழக்கிலுள்ள முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1848-ம் ஆண்டு இ. எஸ். ஏரியல் ( E. S. Ariel) என்பவரால் 1848-ம் ஆண்டு செய்யப்பட்டது. இவரும் திருக்குறளினை முழுவதுமாக மொழிமாற்றம் செய்யாமல் சில பகுதிகளை மட்டுமே மொழிபெயர்த்தார்.

ஆங்கிலத்தில் திருக்குறள் முதன்முறையாக 1794-ம் ஆண்டு ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவன அதிகாரியான என். இ. கின்டர்ஸ்லி (Nathaniel Edward Kindersley)என்பவராலும் 1812- ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு அதிகாரியான எல்லீசன் (பிரான்சிசு வைட் எல்லிசு (Francis Whyte Ellis )) என்பவராலும் மொழிபெயர்க்கப்பட்டது. இவை இரண்டுமே பகுதி மொழிபெயர்ப்புகள் மட்டுமே. என். இ. கின்டர்ஸ்லி குறளின் ஒரு பகுதியை மட்டும் மொழிபெயர்க்கையில் எல்லீசன் 69 குறட்பாக்களை செய்யுள் நடையிலும் 51 குறட்பாக்களை உரைநடையிலும் என மொத்தம் 120 குறட்பாக்களை மொழிபெயர்த்தார். எட்வர்டு ஜெவிட் ராபின்சன் ( Edward Jewitt Robinson) என்ற மதபோதகர் 1873-ம் ஆண்டில் பதிப்பித்த 'தி டமில் விஸ்டம்(The Tamil Wisdom)' என்ற நூலிலும் அதன் பின்னர் 1885-ம் ஆண்டில் விரிவாக்கிப் பதிப்பித்த 'தி டேல்ஸ் அன்ட் போயம்ஸ் ஆஃப் செளத் இன்டியா' என்ற நூலிலும் திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் மட்டும் மொழிபெயர்த்திருந்தார். மற்றுமொரு மதபோதகரான வில்லியம் ஹென்றி ட்ரூ ( William Henry Drew) 1840-ம் ஆண்டு அறத்துப்பாலையும் 1852-ம் ஆண்டு பொருட்பாலின் ஒரு பகுதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். நூலில் தனது உரைநடை மொழிபெயர்ப்புடன் சேர்த்து குறளின் மூலத்தையும் பரிமேலழகரின் உரையையும் இராமானுஜ கவிராயரின் விளக்கவுரையையும் பதிப்பித்தார். ஆனால் பொருட்பாலில் காணப்படும் குறளின் 63-வது அதிகாரம் வரை மட்டுமே வில்லியம் ஹென்றி ட்ரூ மொழிபெயர்த்திருந்தார். வீரமாமுனிவரைப் போலவே வில்லியம் ஹென்றி ட்ரூவும் இன்பத்துப்பாலை மொழிபெயர்க்காது இருந்துவிட்டார். இவற்றை 1885-ம் ஆண்டு ஜான் லாசரஸ் என்ற மதபோதகர் மெருகேற்றி கூடவே வில்லியம் ஹென்றி ட்ரூ மொழிபெயர்க்காது விட்டிருந்த பொருட்பாலின் மீதமிருந்த அதிகாரங்களையும் இன்பத்துப்பால் முழுவதையும் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதுவே திருக்குறள் முழுவதற்குமான முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாக உருவானது.

1886-ம் ஆண்டு ஜி.யு. போப் (ஜார்ஜ் யுக்ளோ போப்- George Uglow Pope) என்ற மதபோதகர் செய்த செய்யுள் நடை மொழிபெயர்ப்பு திருக்குறள் முழுவதற்கும் ஒரே நபரால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாக மாறியது. இதுவே திருக்குறளை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய நூலாகவும் அமைந்தது.

20-ம் நூற்றாண்டில் திருக்குறள் பல தெற்காசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றில் சில அதுவரை வெளிவந்த திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தழுவியே செய்யப்பட்டவை ஆகும். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் திருக்குறளுக்கு சுமார் 24 ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருந்தன. இவற்றில் சில ஆங்கிலேய அறிஞர்களாலும் மற்றவை இந்திய அறிஞர்களாலும் செய்யப்பட்டவையாகும். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்திய அறிஞர்களில் வ. வே. சு. ஐயர், கே. எம். பாலசுப்பிரமணியம், சுத்தானந்த பாரதியார், ஆ. சக்கரவர்த்தி, மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, சி. இராஜகோபாலசாரி, பி. எஸ். சுந்தரம், வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், ஜி. வான்மீகநாதன், கஸ்தூரி சீனிவாசன், எஸ். என். ஸ்ரீராமதேசிகன், கே. ஆர். சீனிவாச ஐயங்கார் ஆகியோர் முக்கியமானவர்களாவர். கிட்டு சிரோமனி என்பவரால் திருக்குறள் நரிக்குறவர்களின் மொழியான வாக்ரி போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு வரை குறள் 42 உலக மொழிகளுக்குக் குறையாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் வெளிவந்த மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கை இதுவரை 100-ஐத் தாண்டியுள்ளது. 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திருக்குறளை 102 மொழிகளில் மொழிபெயர்க்கத் துவங்கிவிட்டதாக அறிவித்தது.

மொழிபெயர்ப்பு- சிக்கல்களும் திரிபுகளும்

ஏழு சீர்களுக்குள் கூறவந்த அனைத்தையும் அடக்கியுள்ள திருக்குறள், தன்னியல்பிலேயே மிகவும் நுட்பம் வாய்ந்ததாகவும் விளங்குகிறது. குறள்வெண்பா பா வகைகளில் மிகவும் பொருளடர்த்தி கொண்டதாகவும் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இப்பாவகையிலான செய்யுள்களை மொழிபெயர்க்கும் முயற்சிகள் இன்றுவரை மிகவும் சிக்கல் வாய்ந்ததாகவே அறிஞர்களால் கருதப்படுகிறது. திருக்குறளை மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்வதைக் குறித்துக் கூறுகையில், "நடையழகிலோ சொல்வன்மையிலோ எந்த ஒரு மொழிபெயர்ப்பும் திருக்குறளின் தமிழ் மூலத்திற்கு இணையாக இருக்க இயலாது" என்று ஹெர்பர்ட் ஆர்தர் பாப்லி உரைக்கிறார். திருக்குறளின் ஒரு பகுதியை மொழிபொயர்த்து முடித்தவுடன் கார்ல் கிரவுல் "திருக்குறளின் வசீகரத் தன்மையினை எந்த ஒரு மொழிபெயர்ப்பாலும் நல்க இயலாது. திருக்குறள் வெள்ளி இழைகளுக்கிடையில் பதிக்கப்பட்ட தங்கக் கனி" என்று கூறினார். திருக்குறள் கூறும் உண்மையான பொருளை எந்த ஒரு மொழிபெயர்ப்பைக் கொண்டும் அறிய முடியாது என்றும் குறளின் தமிழ் மூலத்தைப் படிப்பதன் வாயிலாக மட்டுமே திருவள்ளுவர் கூறிய ஆழ்பொருளை அறிய முடியும் என்றும் சுவெலபில் கூறுகிறார்.

திருக்குறளின் மொழிபெயர்ப்புக்கே உரிய இதுபோன்ற சிக்கல்களுக்கிடையில் சில அறிஞர்கள் திருக்குறளுக்கு ஒவ்வாத தங்களது சொந்தக் கருத்துக்களை திருக்குறளின் சிந்தனைகளில் ஏற்றியும், வலிந்து பொருள்கொண்டும் மொழிபெயர்த்து விடுகின்றனர். இதனால், திருக்குறள் கூறும் சிந்தனைகள் பலவாறு திரிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் பொருள் காணப்படுகின்றன. குறிப்பாக வீரமாமுனிவர் முதலான கிறித்தவ மதபோதகர்களது மொழிபெயர்ப்புகளில் இதுபோன்ற திரிபுகளை பல இடங்களில் காணமுடிகின்றது. வி. இராமசாமி தனது ஆய்வுநூலில் கூறுகையில், "பிற மொழிபெயர்ப்பாளர்கள் 'பிறவிப்பெருங்கடல்' என்பதை 'பல பிறவிகளாகிய கடல்' என்று மொழிபெயர்க்கையில் வீரமாமுனிவர் அச்சொல்லை 'இப்பிறப்பின் கடல்' என்றும் 'பிறவாழி' என்ற சொல்லை 'துயரமான வாழ்க்கைக் கடல்' என்றும் மொழிபெயர்ப்பதன் மூலம் திருக்குறள் கூறும் சிந்தனையை வீரமாமுனிவர் வேண்டுமென்றே திரிக்க முயல்கிறார்". மேலும் "இதன் மூலம் வீரமாமுனிவர் கூற வரும் பொருள் 'துன்பப் பெருங்கடலை நீந்துவோர்' என்றாகும்" என்றும் "கிறிஸ்தவத் தத்துவத்தில் மறுபிறவி மற்றும் ஒரே ஆத்மாவுக்குப் பல பிறவிகள் போன்ற சிந்தனைகள் கிடையாது என்பதே இதற்குக் காரணம்" என்றும் வி. இராமசாமி கூறுகிறார்.

"அன்றிலிருந்து இன்றுவரை திருக்குறளுக்கு உரை எழுதும்போதும், மொழிமாற்றம் செய்யும் போதும் பல அறிஞர்கள் திருக்குறள் கூறும் சிந்தனைகளோடு தங்களது கலாச்சார சிந்தனைகளையும் சேர்த்து நூல்களைச் செய்து விடுகின்றனர்" என்று நார்மன் கட்லர் கூறுகிறார். 13-ம் நூற்றாண்டில் பரிமேலழகர் திருக்குறளின் சிந்தனைகளை அன்றைய பிராமணீய சிந்தனைகளோடு இணைத்துப் பொருள்கண்டார். 19-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதபோதகர்கள் திருக்குறளின் சிந்தனைகளை கிறிஸ்தவக் கொள்கைகளுக்கேற்றார் போல் திரித்துப் பொருள்தர முயன்றனர். இன்று திராவிடக் கழகங்கள் தங்களது சொந்த சமூக மற்றும் அரசியல் சிந்தனைகளுக்கு ஏற்றார் போல் தங்களது தனிப்பட்ட குறிக்கோள்களை முன்னெடுக்க வேண்டி திருக்குறளின் பொருளை பலவாறு திரித்து உரை தருகின்றன.

பதிப்பு

திருக்குறள் முதன்முதலில் தாளில் அச்சிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டது 1812-ம் ஆண்டில் ஆகும். தஞ்சை ஞானப்பிரகாசர் மரத்தால் செய்யப்பட்ட அச்சுகளைக் கொண்டு ஓலைகளிலிருந்து எடுக்கப்பட்ட. திருக்குறள் மற்றும் நாலடியாரின் மூலப் பிரதிகளை அச்சிட்டார். 1835-ம் ஆண்டில்தான் ஆங்கிலேய அரசு இந்தியர்களுக்கு அச்சிட அனுமதி வழங்கியது என்பதால் திருக்குறள் தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூலாகவும், நாலடியார் இரண்டாவது நூலாகவும் ஆயின. ஆங்கிலேய அரசு அதிகாரியும் தமிழ் மற்றும் வடமொழி ஆர்வலருமான எல்லீசன் 1825-ம் ஆண்டு சென்னையில் தமிழ் சங்கமொன்றை நிறுவி மக்களைப் பழைய தமிழ் ஓலைச்சுவடிகளை அச்சிட தன்னிடம் எடுத்து வருமாறு அழைப்பு விடுத்தார். மதுரையில் ஐரோப்பிய அரசு அதிகாரியான ஜார்ஜ் ஹார்ங்டன்னிடம் சமையல் பணிபுரிந்த கந்தப்பன் என்பவர் 1825 மற்றும் 1831-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் திருக்குறள், திருவள்ளுவமாலை, நாலடியார் ஆகியவற்றின் ஏடுகளைச் சமையலுக்கு எரிக்கப்படவிருந்த விறகுகளுக்கு மத்தியில் கண்டெடுத்து எல்லீசனிடம் கொடுத்தார். 1831- ஆம் ஆண்டு இவையாவும் எல்லீசனின் மேலாளர் முத்துசாமி பிள்ளை மற்றும் தமிழறிஞர் தாண்டவராய முதலியார் ஆகியோரது உதவியுடன் பதிப்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1833, 1838, 1840, மற்றும் 1842 ஆகிய ஆண்டுகளில் திருக்குறள் அடுத்தடுத்து அச்சிடப்பட்டது. மகாலிங்க ஐயர் திருக்குறளின் 24 அதிகாரங்களுக்கு மட்டும் உரையினைப் பதிப்பித்தார்., அதன் பின்னர் பல திருக்குறளுரைகள் அச்சுக்கு வரத் தொடங்கின. அப்போது முதல் திருக்குறள் தொடர்ந்து அச்சிடப்பட்டு வந்துள்ளது. 1925- ஆம் ஆண்டு காலகட்டம் வரை திருக்குறள் சுமார் 65 பதிப்புக்கு மேல் வெளிவந்துள்ளது. 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது.

திருக்குறளின் முதல் ஆராய்ச்சியுரை இந்து சமய மடங்களில் கண்டெடுக்கப்பட்ட சுவடிகளிலிருந்தும் தனியே கிடைக்கப்பெற்ற சுவடிகளிலிருந்தும் 1861-ம் ஆண்டு ஆறுமுக நாவலரால் பதிப்பிக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருக்குறள் மற்றும் இதர தமிழிலக்கிய நூல்களை பலதரப்பட்ட ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து அவற்றிலிருந்து சந்திப்பிரித்த வெண்பாக்களை முறைப்படுத்தி அச்சிடுவதில் ஆறுமுக நாவலர் அனைவருக்கும் முன்னோடியாக விளங்கினார்.

திருக்குறளுக்கான பரிமேலழகர் உரை முதன் முதலில் 1840-ம் ஆண்டு அச்சிடப்பட்டது. 1850-ம் ஆண்டு வேதகிரி முதலியாரின் உரையோடு திருக்குறள் அச்சிடப்பட்டது. இதன் மறுபதிப்பு 1853-ம் ஆண்டு வெளிவந்தது. இப்பதிப்பே திருக்குறள் முழுவதும் முதன்முறையாக உரையோடு வெளிவந்த பதிப்பாகும். 1917-ம் ஆண்டு முதன்முறையாக மணக்குடவரின் அறத்துப்பால் வரையான உரை வ. உ. சிதம்பரம் பிள்ளையால் தொகுத்து வெளியிடப்பட்டது. மணக்குடவர் உரை முழுவதும் முதன்முதலாக கே. பொன்னுசாமி நாடாரால் 1925-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு வரை பரிமேலழகர் உரை 30-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்களால் 200-க்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளிவந்துள்ளன. முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது முதல் இதுவரை அதிகமாக அச்சிடப்பட்ட குறளுரையாக பரிமேலழகர் உரை திகழ்கிறது.

திருக்குறள் 1970-களில் தொடங்கி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கிட்டு சிரோமணி என்பவரால் தமிழ் பிராமி எழுத்துகள், பல்லவர் கால எழுத்துகள், வட்டெழுத்து உள்ளிட்ட பல்வேறு பண்டைய தமிழெழுத்துகளில் உருவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது

பிற இலக்கியங்களுடனான ஒப்பீடு

திருக்குறள் பண்டைய தமிழ் இலக்கிய மரபினைச் சேர்ந்த நூல் மட்டுமன்று; அது "பண்டைய இந்திய ஒருங்கிணைந்த அறநெறி மரபினைச் சேர்ந்த" ஓர் அற இலக்கியப் படைப்பு ஆகும். திருக்குறளில் காணப்படும் சிந்தனைகளும் மேற்கோள்களும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம், நித்திசாரா, காமசூத்திரம் போன்ற பண்டைய இலக்கியங்கள் பலவற்றையும் பல இடங்களில் ஒத்து இருக்கிறது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

திருக்குறள் தனக்கு முந்தைய தமிழிலக்கிய நூல்களிலிருந்து பெரிய அளவில் சிந்தனைகளையும் செய்யுள் வரிகளையும் பெற்றுள்ளது. உதாரணமாக, திருக்குறளின் காலத்துக்கு முந்தைய குறுந்தொகை மற்றும் நற்றிணையில் உள்ள பல சொல்லமைப்புகளையும், வரிகளையும் திருக்குறளில் காணலாம். அதுபோலவே திருக்குறளுக்குப் பிந்தைய நூல்கள் பலவும் திருக்குறளின் சொல்லாட்சியினைப் பெரிதும் பின்பற்றுவதையும் காணமுடிகிறது. 10- ஆம் நூற்றாண்டுக்கு முன் திருக்குறளைப் போற்றிப் பல புலவர்களால் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலையும் ஏனைய பிரபந்தங்களும் திருக்குறள் வரிகளைத் தன்னுள் கொண்டுள்ளன. 9-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட காதல் இலக்கியமான பெருங்கதை பல இடங்களில் குறளின் வரிகளையும் சிந்தனைகளையும் சுட்டுகிறது. 6-ம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட பெளத்த இலக்கியமான மணிமேகலை தனது 22.59- 61 பாடல்களில் திருக்குறளை மேற்கோள் காட்டுகிறது.

திருக்குறளின் பொருட்பாலிலுள்ள கருத்துகள் பலவும் அர்த்தசாஸ்திரத்தை ஒத்து இருந்தாலும் சில முக்கிய அம்சங்களில் திருக்குறள் அர்த்தசாஸ்திரத்திலிருந்து வேறுபடுகிறது. அர்த்தசாஸ்திரம் கூறுவதைப் போலல்லாது திருக்குறள் ஒரு நாட்டின் முக்கிய அம்சமாக அதன் படையினைக் கருதுகிறது. எப்பொழுதும் போரினை எதிர்கொள்ளும் ஆயத்த நிலையில் சீராகவும் சிறப்பாகவும் பயிற்றுவிக்கப்பட்டு, திறன்பட ஒழுகுவோரது தலைமையில் நடத்தப்படும் ஒரு படையானது ஒரு நாட்டின் இன்றியமையா அங்கமாகும் என்று திருக்குறள் கருதுகிறது.

திருக்குறளின் பொருட்பால் என்பது தார்மீக சிந்தனையின் அடிப்படையில் நன்னெறிகளை உள்ளடக்கியது. நாடாளும் அமைச்சர்களில் துவங்கி அரசு அலுவலர்கள் வரை மக்கள் அனைவரும் அறம் சார்ந்த வாழ்வினில் மட்டுமே பயணப்பட வேண்டும் என்று குறள் கூறுகிறது. மனுஸ்ருமிருதியைப் போலன்றி திருக்குறள் எவ்விதமான பாகுபாட்டு முறைகளுக்கோ ஒரு குறிப்பிட்ட நாட்டை ஆள்பவர்களுக்கோ முக்கியத்துவம் தருவதில்லை. அருளும் அறமும் கொண்ட எவரும் அந்தணரே என்று திருக்குறள் உரைக்கிறது. தனது காலத்தைய மற்ற நூல்களைப் போலல்லாது திருக்குறள் பெண்களை தாழ்த்தியோ, பிறரைச் சார்ந்த நிலையிலோ இருத்தாமல் அவர்களின் தனிதன்மைகளை போற்றுகிறது.

உலக இலக்கியங்கள்

குறளின் சிந்தனைகள் பண்டைய உலக இலக்கியங்கள் பலவற்றோடும் பல இடங்களில் ஒத்து இருக்கிறது. பகவத்கீதை, பஞ்சதந்திரக் கதைகள், மனுஸ்மிருதி, திருமந்திரம், கன்பியூசியஸின் லுன் யூ, ஆதி கிரந்தம், விவிலியத்தின் நீதி மொழிகள், புத்தரின் தம்மபதம், பாரசீக நூல்களான குலிஸ்தான் மற்றும் புஸ்தான் உள்ளிட்ட பல புனித நூல்களோடும் திருக்குறளை அறிஞர்கள் ஒப்பீடு செய்துள்ளனர்.

திருக்குறளும் கன்பியூசியஸின் லுன் யூ என்றழைக்கப்படும் கன்பியூசிய அனலெக்டுகளும் பல ஒத்த கருத்துகளைப் பகிர்வது கவனிக்கத்தக்கது. திருவள்ளுவர், கன்பியூசியஸ் இருவருமே தனிநபரின் அறங்களுக்கும் நன்னடத்தைகளுக்கும் முதலிடம் தருபவர்கள். திரருவள்ளுவரைப் போலவே கன்பியூசியஸும் தனிமனித அறநெறிகள், கண்ணோட்டம், பெரியோரைப் பேணுதல் ஆகியவற்றைப் போதித்து நீதியைத் தழுவிய சட்டதிட்டங்களைப் போற்றியும் அருள், அறம், நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றை வாழ்வின் அடிப்படைகளாகக் கொண்டும் தனது போதனைகளைத் தந்துள்ளார். அகிம்சையையும் அன்பையும் அடித்தளமாகக் கொண்டு வள்ளுவம் இயற்றப்பட்டுள்ளதைப் போல் ஜென் என்னும் அடித்தளத்தைக் கொண்டு இயற்றப்பட்டவை கன்பியூசியத் தத்துவங்களாகும். இவற்றிக்கு அப்பால் கன்பியூசியஸிலிருந்து திருவள்ளுவர் இரு வகைகளில் வேறுபடுகிறார். முதலாவதாக, கன்பியூசியஸ் போல் திருவள்ளுவர் ஒரு தத்துவ மேதை மட்டுமின்றி ஒரு புலவருமாவார். இரண்டாவதாக, கன்பியூசியஸ் இன்பம் குறித்து ஏதும் கூறாதிருக்கையில் வள்ளுவர் இன்பத்திற்கு ஒரு பாலையே ஒதுக்கியுள்ளார். கன்பியூசியஸ் தத்துவத்தில் குழந்தை வளர்ப்பு என்பது வாழ்வின் நீட்சிக்கும் சமூகத்தின் நலனுக்கும் ஒரு முக்கியமான அங்கமாகும். "ஒரு மனிதன் தனக்கு மேலுள்ள பெரியோர்களான பெற்றவர்களையும் தனக்குக் கீழுள்ள மனைவி மற்றும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாப்பதற்குத் தேவையானவற்றை ஒரு அறிவிற் சிறந்த அரசன் தனது ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்க வேண்டியது அவசியம்" என்கிறது லுன் யூ. வள்ளுவத்தின் "மக்கட் செல்வம்", "இறைமாட்சி" ஆகிய அதிகாரங்கள் இக்கருத்துகளை நினைவுறுத்துவதாக அமைகின்றன.

சமூகத்தின் ஏற்பு

இயற்றப்பட்ட காலம் முதலாக திருக்குறள் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்டு வந்துள்ளது. சங்கம் மருவிய காலத்துப் புலவர்களும் இடைக்காலப் புலவர்களும் பலவாறு திருக்குறளையும் திருவள்ளுவரையும் புகழ்ந்து பாடியுள்ளனர். "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்று ஔவையார் திருக்குறளின் நுண்மையைப் போற்றுகிறார். திருவள்ளுவமாலை என்ற பெயரில் தனிப் புலவர்கள் பலரால் போற்றி எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட பாக்களால் பாடப்பெற்ற ஒரே தமிழ் இலக்கியமும் திருக்குறளே ஆகும். சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமுறைகள், பெரியபுராணம், கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கியங்கள் திருக்குறளை எடுத்தாண்டுள்ளன.

எச்சமயத்தையும் சாராது அறங்களைப் பொதுப்படக் கூறுவதால் இந்தியாவிற்குள்ளும் வெளியிலும் என இருநிலையிலும் திருக்குறள் பரவலாகப் போற்றப்படுகிறது. ரஷ்ய அறிஞர் அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி (Alexander Pyatigorsky) திருக்குறளை "இந்திய மற்றும் அகில உலக இலக்கியங்களின் தலையான படைப்பு" என்று பாராட்டுகிறார். இதற்குக் காரணம் திருக்குறளில் காணப்படும் இலக்கியச் சுவை மட்டுமல்ல என்றும் உலகிலுள்ள அனைவருக்கும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் அறச் சிந்தனைகளை வள்ளுவம் தன்னுள் கொண்டுள்ளதுமே ஆகும் என்றும் அவர் கூறுகிறார். உலகப் பொது அறங்களை உரைப்பதால் திருவள்ளுவரை "பிரபஞ்சப் புலவர்" என்று போற்றுகிறார் ஜி. யு. போப். "திருக்குறளைப் போல் தலைசிறந்த அறங்களை மூதுரைகளாக உரைத்த நூலொன்றை உலகில் வேறெங்கும் காண்பதரிது" என்று ஆல்பர்ட் சுவைட்சர் (Albert Schweitzer) கருதுகிறார். ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) திருக்குறளை "இந்துக் குறள்" என்று போற்றுகிறார். மகாத்மா காந்தி திருக்குறளை "அறவாழ்வுக்கு தலையாய வழிகாட்டும் இன்றியமையா நூல்" என்றும் "வள்ளுவரின் வரிகள் என் உயிர்வரை சென்று ஊடுருவியுள்ளன. அவரைப் போல் அறப் பொக்கிஷத்தை நல்கியவர் எவருமில்லை" என்றும் கூறியுள்ளார்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வந்த கிறிஸ்தவ மதபோதகர்கள் குறளின் சிந்தனைகளைப் படித்து அவற்றை கிறிஸ்தவ போதனைகளுடன் ஒப்பீடு செய்யத் துவங்கினர். அதன் விளைவாக அவர்களுள் பலர் திருக்குறளை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய முற்பட்டனர். சீர்திருத்தத் திருச்சபை போதகரான எட்வர்டு ஜெவிட் ராபின்சன் (Edward Jewitt Robinson) "திருக்குறளில் அனைத்தும் உள்ளன; அதில் இல்லாதது எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார். ஆங்கிலிக்க மதபோதகர் ஜான் லாசரஸ் "வேறெந்தத் தமிழ் நூல்களாலும் குறளின் தூய்மையை நெருங்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார். "உலகின் அனைத்து தலை சிறந்த அறச் சிந்தனைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பே திருக்குறள்" என்று அமெரிக்க கிறித்தவ மதபோதகர் இம்மான்ஸ் இ. வயிட் ( Emmons E. White) போற்றுகிறார்.

வரலாறு முழுவதிலும் அரசியல், ஆன்மீகம், சமூகவியல் என அனைத்துத் தரப்பினராலும் போற்றப்பட்ட நூலாகத் திருக்குறள் இருந்து வந்திருக்கிறது. "திருக்குறள் அன்பின் நெறியாகவும் ஆத்மார்த்த வாழ்வின் வரையறையாகவும் திகழ்கிறது" என்றும் "அனைத்து காலத்திற்கும் பொருந்தும் அழிவற்ற இந்நூலானது மனிதகுலத்தின் அனைத்துச் சிந்தனைகளையும் தன்னுள் நீக்கமறக் கொண்டுள்ளது" என்றும் இராஜாஜி கருதுகிறார். "வாழ்வியலை போதிக்கும் அறநூல்களில் திருக்குறள் நிகரற்றது" என்று கே. எம். முன்ஷி கூறுகிறார். "குறு வெண்பாக்களைக் கொண்ட திருக்குறள் திட்டமிட்ட சிந்தனைகளிலும் அவற்றை சிறப்பாக வெளிப்படுத்தும் விதத்திலும் இதுவரை வந்த நூல்கள் அனைத்திலும் சிறந்தது" என்று தேசியவாதியும் யோகியுமான அரவிந்தர் கருதுகிறார். "தமிழின் தலையாய நூலான திருக்குறள் மனித சிந்தனைகளின் தூய்மையான வெளிப்பாட்டின் உச்சம்" என்று திருக்குறளை 1848-ம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த இ. எஸ். ஏரியல் வர்ணிக்கிறார். "உலகின் ஒட்டுமொத்த சிந்தனைகளின் உறைவிடமாகவும் அறங்களின் வழிகாட்டியாகவும் ஆன்மீக அறிவின் புதைவிடமாகவும் திகழும் நூல் திருக்குறள்" என்று முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் தெரிவித்துள்ளார்.

வரலாற்று ஆவணங்கள்

குறளைப் பற்றிய கல்வெட்டுகள், செப்பேடுகள், மேலோலைகள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களைத் தமிழகத்தில் பரவலாகக் காணலாம். இடைக்காலத் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் பிரதான ஆட்சி நூலாகத் திருக்குறள் திகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம் மல்லூர் அருகிலுள்ள பொன்சொரிமலையில் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் கல்வெட்டு ஒன்றில் "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா னெங்ஙன மாளு மருள்" என்ற புலால் மறுத்தல் அதிகாரத்துக் குறட்பா காணப்படுகிறது. இது அக்காலத்து கொங்கு நாட்டு மக்கள் அகிம்சையையும் கொல்லாமையையும் தங்கள் வாழ்வியல் நெறிகளாகக் கடைபிடித்து வந்ததைக் காட்டுவதாக உள்ளது. 1617-ம் ஆண்டின் கொங்கு நாட்டு பூந்துறை நாட்டார் மேலோலை, 1798-ம் ஆண்டின் கொங்கு நாட்டுப் நாரணபுரத்து பல்லடம் அங்காள பரமேசுவரி கொடைச் செப்பேடு, நாமக்கல் மாவட்டம் கபிலக்குறிச்சிப் பகுதியில் காணப்படும் 18- ஆம் நூற்றாண்டின் கபிலமலைச் செப்பேடு, பழனி வீரமுடியாளர் மடத்துச் செப்பேடு, கொங்கு நாட்டு காரையூர் செப்பேடு, பழையகோட்டை ஏடு, மற்றும் சென்னை இராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் காணப்படும் 1818-ம் ஆண்டின் எல்லீசன் கல்வெட்டுகள் போன்றவை திருக்குறளைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட மேலும் சில வரலாற்று ஆவணங்களாகும்.

சமூகத் தாக்கம்

திருவள்ளுவரின் உருவப்படங்கள் நெடுங்காலமாக சைவர்களாலும் சமணர்களாலும் வரையப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. கொண்டை வைத்த உருவம் துவங்கி தலைமுடி மழித்த உருவம் வரை பல்வேறு வகையில் இப்படங்கள் காணப்பபடுகின்றன. 1960-ம் ஆண்டு கே. ஆர். வேணுகோபால சர்மா என்ற ஓவியர் வரைந்த கொண்டை முடியும் தாடியுடனுமான உருவப்படம் ஒன்று தமிழ்நாடு மற்றும் இந்திய அரசாங்களால் ஏற்கப்பட்டு பயன்படுத்தப்படத் தொடங்கியது. பின்னர் இதுவே அரசு அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 1964-ம் ஆண்டு இப்படத்தினை இந்திய பாராளுமன்றத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் திறந்து வைத்தார். 1967-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வள்ளுவரது உருவப்படம் ஒன்று இருக்க வேண்டும் எ்னறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

20-ம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு பலர் இசையமைத்து, பாடி அரங்கேற்றியுள்ளனர். இவர்களுள் மயூரம் விஸ்வநாத சாஸ்திரி மற்றும் ரமணி பரத்வாஜ் ஆகியோர் குறிப்பிட தக்கவர்கள். திருக்குறளை முழுமையாகப் பாடி குறள் கச்சேரி நடத்தியவர்களுள் எம்.எம். தண்டபாணி தேசிகர் மற்றும் சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன் ஆகியோர் முதன்மை வாய்ந்தவர்கள். மதுரை சோமசுந்தரம் மற்றும் சஞ்ஜய் சுப்பிரமணியன் ஆகியோரும் திருக்குறளை இசையாகப் பாடியுள்ளனர். 2016- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சித்திரவீணா என். ரவிகிரண் திருக்குறள் முழுவதற்கும் 16 மணி நேரத்திற்குள் இசையமைத்து சாதனை படைத்தார்.

1818-ம் ஆண்டு அப்போதைய சென்னை நகர ஆட்சியராக இருந்த எல்லீசன் திருவள்ளுவரின் உருவம் பதித்த தங்க நாணயங்களை வெளியிட்டார். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் வள்ளலார் ராமலிங்க அடிகளார் திருக்குறள் அறங்களைப் பரப்பும் பொருட்டு பொதுமக்களுக்கான தினசரி திருக்குறள் வகுப்புகளை நடத்தத் துவங்கினார். 1968-ம் ஆண்டு அரசுப் பேருந்துகளில் அனைவரும் பார்க்கும்படியாக குறட்பாவை ஏந்திய பலகை ஒன்றை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. திருக்குறளின் நினைவாகக் கன்னியாகுமரியில் இருந்து புதுடில்லிவரை 2,921 கிலோமீட்டர் தூரம் இயக்கப்படும் தொடர்வண்டிக்கு இந்திய இரயில்வே "திருக்குறள் அதிவிரைவு வண்டி" என்று பெயரிட்டுள்ளது.

திருக்குறள் தமிழ் மக்களின் தினசரி வாழ்வோடு ஒன்றிய ஒரு இலக்கியமாகும். குறளின் பாக்கள் எல்லாத் தருணங்களிலும் அனைத்துத் தரப்பு மக்களாலும் கையாளப்படுகின்றன. இயக்குனர் கே. பாலச்சந்தரின் படத் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா தனது படங்களின் தொடக்கத்தில் திருக்குறளின் முதற்பாவினைப் பாடித் துவங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பலவற்றிலும் திருக்குறளின் வரிகளும் சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளன. 20-ம் நூற்றாண்டில் திருக்குறள் சார்ந்த மாநாடுகள் நடத்தும் வழக்கம் தொடங்கியது. முதன்முதலாகத் திருக்குறள் மாநாடு 1941-ம் ஆண்டு திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களால் சேலத்தில் நடத்தப்பட்டது. திருக்குறள் மாநாடு 1949-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-16-ம் நாள்களில் பெரியார் ஈ.வெ. ராமசாமி தலைமையில் சென்னையில் நடத்தப்பட்டது. இம்மாநாடுகளில் பல அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். அதன்பிறகு, பல திருக்குறள் மாநாடுகள் தொடர்ந்து நடந்தேறியுள்ளன. ஓவியக்கலை, இசை, நடனம், தெருக்கூத்து மற்றும் தெரு நிகழ்ச்சிகள், ஒப்புவித்தல் மற்றும் முற்றோதல், செயற்கூட்ட நிகழ்ச்சிகள், விடுகதைகள் மற்றும் புதிர்ப்போட்டிகள் எனப் பலவற்றிலும் திருக்குறளின் பாக்களும் சிந்தனைகளும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் தாங்கள் ஆற்றும் மேடை உரைகளனைத்திலும் குறட்பாக்களை மேற்கோள் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் குறளைப் பரவலாக எடுத்தாள்கின்றனர். இதுபோல் பேசிய தலைவர்களில் ராம்நாத் கோவிந்த், ப. சிதம்பரம், நிர்மலா சீதாராமன் ஆகியோர் அடங்குவர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2020-ம் ஆண்டு இந்தியப் படைகளிடம் ஆற்றிய உரை உட்பட பல நிகழ்வுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார். இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய அரசின் அறிக்கையான "2020 இந்தியப் பொருளாதார மதிப்பாய்வு" தனது அறிக்கையில் திருக்குறளையும் அர்த்த சாஸ்திரத்தையும் அதிகமாகச் சுட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உசாத்துணை

 • திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் [Tirukkural Original Text and Parimelalhagar Commentary]. Compiled by V. M. Gopalakrishnamachariyar. Chennai: Uma Padhippagam.
 • திருக்குறள், மூலமும் பரிமேலழகர்,மணக்குடவர், மு. வரதராசன, தேவநேயப் பாவாணர் மற்றும் கலைஞர் உரைகள், ஜி.யு. போப் மற்றும் யோகி சுத்தானந்ததாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் அரபிக் மற்றும் சீன மொழி மொழிபெயர்ப்புகள்; https://www.tamilvu.org/library/l2100/html/l2100ind.htm
 • Kamil Zvelebil (1973). The Smile of Murugan: On Tamil Literature of South India. Leiden: E. J.Brill.
 • S. N. Kandasamy திருக்குறள்: ஆய்வுத் தெளிவுரை (அறத்துப்பால்) [Tirukkural: Research commentary: Book of Aram]. Chennai: Manivasagar Padhippagam(2017).
 • S. N. Kandasamy . திருக்குறள்: ஆய்வுத் தெளிவுரை (பெருட்பால், பகுதி 1) [Tirukkural: Research commentary: Book of Porul, Part 1]. Chennai: Manivasagar Padhippagam(2020).
 • Manakkudavar திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை—அறத்துப்பால் [Tiruvalluvar Tirukkural Manakkudavar Commentary—Book of Aram]. V. O. C. Pillai (Ed.) (1 ). Chennai: V. O. Chidambaram Pillai (1917).
 • Manavalan, A. A. (in English). A Compendium of Tirukkural Translations in English. 4 vols.. Chennai: Central Institute of Classical Tamil.(2010).
 • திருவள்ளுவரின் வேறு பெயர்கள், தமிழ் இணையக் கல்விக் கழகம்;
 • https://www.tamilvu.org/library/l2100/html/l2102tvp.htm
 • 102 மொழிகளில் திருக்குறள்: செம்மொழி நிறுவனம் முயற்சி". Dinamalar (Chennai: Dinamalar). 20 October 2021.
 • John Lazarus (1885). Thirukkural (Original in Tamil with English Translation). W.P. Chettiar.
 • India Today Webdesk (27 April 2016), "Madras High Court makes in-depth study of Tirukkural compulsory in schools", India Today
 • Edward Jewitt Robinson (1873). Tamil Wisdom; Traditions Concerning Hindu Sages, and Selections from their writings. London: Wesleyan Conference Office.
 • PTI (3 July 2020). "PM Modi quotes from 'Tirukkural’ again, now for soldiers in Ladakh". Business Line(Chennai: Kasturi & Sons)

அடிக்குறிப்புகள்

 1. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு
 2. தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Feb-2023, 22:35:04 IST