தேவநேயப் பாவாணர்
தேவநேயப் பாவாணர் (பிப்ரவரி 7, 1902- ஜனவரி 15, 1981) ஞா. தேவநேயப் பாவாணர். தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுனர், பன்மொழி அறிஞர். தமிழ் மொழியின் வேர்ச்சொற்கள் மற்றும் சொற்களின் வளர்ச்சிமாற்றம் குறித்த ஆய்வுகளுக்காக புகழ்பெற்றவர். பல்வேறு இந்திய மொழிகளில் பயிற்சி கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்திற்கு பங்காற்றியவர். 'தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி (Etymological Dictionary) இவரால் உருவாக்கப்பட்டது. மொழிஞாயிறு என்னும் பட்டத்துடன் அறியப்படுகிறார். தமிழியம் என அறியப்படும் பண்பாட்டு இயக்கத்தின் முதல்வர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
தேவநேயப் பாவாணர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் வட்டம் கரிவலம் வந்த நல்லூர்க்கருகில் இருக்கும் புறக்கடையான்பட்டி எனும் சிற்றூரில் தேவேந்திரகுல வேளாளர் மரபில், வாத்தியார் கூட்டம் என்னும் வகையறாவில், முத்துசாமிக் குடும்பனார் - வள்ளியம்மையின் குருதி மரபில் வந்தவர். அவர் சங்கரன்கோயில் - திருநெல்வேலி சாலையிலுள்ள பனைவடலி என்னும் ஊரில் குடியேறி வசித்து வந்தார். அங்கிருந்து திருநெல்வேலியில் இருந்து கோயில்பட்டி செல்லும் சாலையிலுள்ள வாகைக்குளம் என்ற ஊரில் சமயப்பணியாற்றி வந்த தோக்கஸ் (Rev Stokes) என்பவரின் பண்ணையில் தோட்டக்காரராக முத்துசாமிக் குடும்பனார் பணியாற்றினார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. சிலநாட்களிலேயே முத்துசாமிக் குடும்பனாரும் வள்ளியம்மையாரும் மறைந்தனர். தோக்கஸ் துரை அந்தக் குழந்தையை ஞானமுத்து தோக்கஸ் என்று பெயரிட்டு வளர்த்தார். ஞானமுத்து அங்கேயே கல்வி பயின்று சங்கரன்கோயிலில் ஆசிரியரானார். அவருடைய முதல் மனைவி சொக்கம்மாள் இலங்கையைச் சேர்ந்தவர், அவர் இலங்கைக்கே திரும்ப விரும்பி ஞானமுத்துவை பிரிந்து சென்றார். தோக்கஸ் துரை கோயில்பட்டி அருகே உள்ள பாண்டவமங்கலத்தில் உபதேசியாராக இருந்த குருபரம் என்பவரின் மகள் பரிபூரணம் அம்மையாரை ஞானமுத்துவுக்கு மறுமணம் செய்து வைத்தார்.
பெப்ரவரி 7, 1902-ல் ஞானமுத்து ஆசிரியருக்கும், பரிபூரணம் அம்மையாருக்கும் பத்தாவது குழந்தையாகவும் நான்காவது மகனாகவும் சங்கரன்கோவிலில் பிறந்தார். இயற்பெயர் ஜி. தேவநேசன். இவருடைய ஐந்து வயதில் தந்தை இறந்து போனார். தொடர்ந்து அன்னையும் மறைந்தார். தேவநேயர் வட ஆர்க்காடு மாவட்டத்தில்-ம்பூரில் மணம்முடித்து வாழ்ந்துகொண்டிருந்த தன் அக்காளின் பொறுப்பில் வளர்ந்தார்.-ம்பூர் மிசௌரி இவாஞ்சலிக்கல் லுத்தரன் மிஷன் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் சங்கரன்கோயில் சாலையில் முறம்பு என்னும் இடத்தில் மதப்பணியாற்றி வந்த ரெவெ யங் (Rev Young) என்னும் மதபோதகரின் உதவியால் பாளையங்கோட்டை சி. எம். எஸ் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். பள்ளியிறுதி முடித்ததும் தேவநேயர் ரெவெ யங் நடத்தி வந்த முறம்பு சீயோன்மலை பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர்-ம்பூரில் தான் படித்த உயர்நிலைப் பள்ளியிலேயே 1921-ல் ஆசிரியராகச் சேர்ந்தார். அங்கிருந்துகொண்டு 1924-ல் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழ்ப் பண்டிதர் தேர்வு எழுதினார். அதிலுள்ள மூன்று படிநிலைகளில் மூன்றாம் படிநிலை தேர்வை நேரடியாகவே எழுதி இரண்டாம் வகுப்பில் வெற்றிபெற்றார், அவர் மட்டுமே அத்தேர்வில் வென்றிருந்தார்.
திருநெல்வேலி தமிழ்ச்சங்க தனித்தமிழ்ப்புலவர் தேர்வை 1926-ல் மூன்றாம் வகுப்பில் வென்றார், வென்றவர் இவர் மட்டுமே. சென்னை பல்கலை கழகத்தில் பி. ஓ. எல் படிப்பை முடித்தார். எம். ஓ. எல் படிப்புக்கு திராவிடமரபு தோன்றிய இடம் கடல்கொண்ட தென்குமரி நிலம்தான் என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தபோது போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அதை பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ளவில்லை. 1952-ல் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
தேவநேயப் பாவாணர் தன் அக்கா முடிவுசெய்த எஸ்தர் (எசுத்தர்) என்னும் பெண்ணை முதலில் மணந்தார். நெல்லை அருகே கரிவலம்வந்த நல்லூரின் அருகே உள்ள புறக்கடையான்பட்டி என்னும் ஊரைச்சேர்ந்தவர் அவர். அழகிய மணவாள தாசன் என்னும் மகன் பிறந்து ஓராண்டுக்குள் எஸ்தர் மறைந்தார். பாவாணர் அதன்பின் தன் அக்காவின் மகளான நேசமணியை 1930-ல் மணந்துகொண்டார். நச்சினார்க்கினிய நம்பி, சிலுவைவென்ற செல்வராசன், அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான், மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி, மணிமன்ற வாணன், பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் ஆகியோர் இவரின் பிள்ளைகள். இவர்களில் பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் ஓராண்டிலேயே மறைந்தான். 1963-ல் பாவாணர் காட்பாடியில் சிறிதுகாலம் பணியில்லாமல் இருந்த காலகட்டத்தில் அவர் மனைவி இறந்தார்.
ஆம்பூர் நடுநிலைப்பள்ளி, பெரம்பூர் கலவல கண்ணன் உயர்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப்பள்ளி, தாம்பரம் கிறிஸ்தவக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி, மன்னார்குடி ஃபின்லே பள்ளி ஆகியவற்றில் பணியாற்றினார். மன்னார்குடி பள்ளியில் பொருளியல் நெருக்கடி மிகுந்து வேலையில் இருந்து நிற்கவேண்டியிருந்தபோது தன்னை விட வறுமையில் இருந்த கோபாலகிருஷ்ணன் என்பவருக்காக வேலையை விட்டார். அதன் பின் பிஷப் ஹீபர் பள்ளியில் தமிழாசிரியரானார். 1943-முதல் ஓராண்டுக்காலம் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1944-ல் தொடங்கி 12 ஆண்டுகள் சேலம் நகராட்சிக் கல்லூரியில் ஆசிரியர் ஆனார். சேலத்தில் பணியாற்றியபோதுதான் பெருஞ்சித்திரனார் தேவநேயப் பாவாணரின் மாணவரானார். 1956 முதல் 1961 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையில் பணியாற்றினார்.
இலக்கியப்பணிகள்
இளமையிலேயே மறைமலையடிகள் மீது தேவநேயப் பாவாணர் பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரை தமிழை மீட்கவந்தவராகவே கருதினார். மறைமலையடிகளின் தனித்தமிழியக்கத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்தார்.
ஸ்கீட் (Skeat, Walter W) எழுதிய Principles of English etymology[1] என்னும் நூலைப் படித்த தேவநேயப் பாவாணர் அந்த நூலின் அடிப்படையில் தமிழ்ச் சொற்களின் பிறப்பு பற்றி ஆய்வு செய்து "செந்தமிழின் சொற்பிறப்பியல் நெறிமுறை" என்ற கட்டுரையை திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவந்த செந்தமிழ்ச் செல்வி இதழில் ஜூன் ,1931-ல் எழுதினார். தமிழுக்கும் திராவிட மொழிகளுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் சொல் பிறப்பியல் பற்றியும் ஆய்வு செய்தார்.
பாவாணர் தமிழ்மொழி ஆய்வு, தமிழ்ப் பண்பாட்டாய்வு தொடர்பாக 26- நூல்களை எழுதியுள்ளார். 1934-ல் பள்ளியாசிரியராய் இருந்தபோது மாணவர்களுக்காக உரைநடையில் இலக்கண நூல் ஒன்றை வெளியிட்டார். இது எழுத்து, சொல், பொருள், யாப்பு, இலக்கணங்களைப் பற்றிய எளிய அறிமுக நூல். கட்டுரை எழுதுவது எப்படி, பிழைகள் இல்லாமல் இலக்கண முறைப்படி எழுதுவது எப்படி என்னும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூலை 1936-ல் வெளியிட்டார்.
பழந்தமிழாட்சி (1952), தமிழ்நாட்டு விளையாட்டுகள் (1959) தமிழர் திருமணம் (1956) ஆகிய மூன்று நூல்களும் வரலாறு, நாட்டார் வழக்காற்றியல், சமூகவியல் தொடர்பானவை. தமிழக நாட்டுப்புற விளையாட்டுகள் பற்றிய முழுமையான முதல் நூல் இவருடையதுதான். பொதுவாகச் சொல்லின் அமைப்பை வைத்தே வேர்ச்சொல்லைக் கண்டுபிடித்தது மாதிரியே விளையாட்டின் பெயரை வைத்துத் தோற்றத்தை ஆராய்கிறார் விளையாட்டுகளின் தோற்றத்தைப் பழைய இலக்கியங்களில் தேடுவது எனும் முயற்சியை இந்நூலில் காணலாம்.
தமிழரின் திருமணம் என்னும் நூலில் தமிழரின் திருமண நிகழ்வில் ஆரியரின் செல்வாக்கு புகுந்ததையும் தமிழரின் பழைய திருமண முறையையும் ஆராய்கிறார். இதே நூலில் பாவாணர் நடத்திவைத்த திருமணம் தொடர்பான அனுபவத்தகவல்களும் உள்ளன. பிற்காலத்தில் இந்த நூல் விமர்சனத்துக்கு உள்ளாயிருக்கிறது. குறிப்பாக ம. பொ. சி. தமிழரசுக் கட்சிக் கூட்டங்களில் இதை விமர்சித்தார். 1967-ல் வரலாற்றையும் மொழிநூலையும் இணைத்து எழுதப்பட்ட முயற்சி தமிழர் வரலாறு என்ற தலைப்பில் நூலாக வந்தது. குமரிக்கண்டம், தமிழரின் பெருமை, மதி நுட்பத்தை இதில் விளக்குகிறார்.
தமிழர் மதம் என்னும் நூல் (1972) கில்பர்ட் ஸ்லேட்டர் என்ற திராவிடவியல் ஆராய்ச்சியாளரின் கருத்தை ஒத்துச் செல்வது. ஸ்லேட்டர் கூறிய While the Aryans were Dravidanised in Culture, the Dravidians were Aryanised in Language என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தமிழர் மதம். தமிழ் இலக்கிய வரலாறு (1979) என்ற நூல், தமிழ் இலக்கியப் பின்னணியைத் தலைக்காலம் (கி. மு. 50000 முதல் கி. மு. 1500 வரை), இடைக்காலம் (கி. மு. 1500 முதல் கி. பி. 18-ம் நூற்றாண்டு வரை, ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் (கி. பி1 9-ம் நூற்றாண்டு), இக்காலம் (கி. பி. 20-ம் நூற்றாண்டு) எனப் பகுத்துக் கூறுகிறது. தலித் இலக்கியங்களை வரலாறாக எழுதத்தக்கவர் யாவர் என்ற விவாதக் குறிப்பும் இந்நாலில் உள்ளது.
சொற்பிறப்பியல் அகரமுதலி
தேவநேயப் பாவாணரின் பங்களிப்புகளில் முதன்மையானது சொற்பிறப்பியல் அகரமுதலி. தமிழ்ச்சொற்களுக்கு தமிழ்ப்பண்பாட்டு வெளியில் இருந்தே வேர்ச்சொற்களைக் கண்டறியும் பெருமுயற்சி இது. தமிழ்ப்பண்பாட்டின் வரலாற்றையும் மெய்யியலையும் அறிவதற்கு ஆதாரமான முதற்பார்வைகள் நிறைந்த இந்த ஆக்கம் தமிழ் ஆய்வின் அடிப்படை நூல்களில் ஒன்று (பார்க்க சொற்பிறப்பியல் அகரமுதலி )
அமைப்புப்பணிகள்
- 1968-ல் தனித்தமிழ்க் கழகம் நிறுவப்பட்டபோது அதன் தலைவராகப் பாவாணர் இருந்தார்.
- 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றவர்.
ஆய்வுகள்
- 1944-ல் பாவாணர் எம். ஓ. எல். ஆய்வுக்காக 'திராவிட மரபு தோன்றிய இடம் குமரிநாடே' என்ற தலைப்பில் ஓர் ஆய்வேட்டைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
- 1956, 1957-களில் பாவாணர் சொல்பிறப்பியல் அகர முதலி குறித்த ஆய்வை முறைப்படி செய்தார். ஆனால் ஆய்வு முழுமை பெறத் தடை இருந்தது.
- 1930-ம் ஆண்டிலிருந்து தமிழ் மொழியின் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் பாவாணர் ஈடுபட ஆரம்பித்தார்.
- 1940-ல் வெளிவந்த ஒப்பியல் மொழிநூல் பண்டைத் தமிழகம், தமிழரின் தோற்றம் பற்றி விளக்குகிறது.
- 1944-ல் திராவிடத்தாய் என்னும் நூல் தமிழைத் திராவிட மொழிகளின் தாயாக உருவகித்து, அதை நிலைநாட்டுவதற்காக எழுதப்பட்டது. இதில் பிற திராவிட மொழிச் சான்றுகளும் உண்டு.
- 1949-ல் சொல்லாராய்ச்சிக் கட்டுரை என்னும் நூல் தமிழ் வடமொழிக்குக் கடன்பட்டதல்ல என்று கூறுவதற்காகவே எழுதப்பட்டது.
விவாதங்கள்
பாவாணர் ஒரு மொழியடிப்படைவாதி என்று எதிர்த்தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டார். அவருடையது தீவிரமான நம்பிக்கை அடிப்படையிலான ஆய்வு என்று சுட்டிக்காட்டப்பட்டது. தமிழிலுள்ள திசைச்சொற்களைக் கூட செயற்கையாக வேர்ச்சொல் கண்டடைந்து தமிழ்ச்சொல்லாக்குவது, பிறமொழிச்சொற்களின் ஒலியை திரித்து அவை தமிழ்ச்சொற்களே என நிறுவ முயல்வது ஆகியவை அவருடைய ஆய்வின் குறைபாடுகள் என்று குறிப்பிடப்படுகிறது. எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஆய்வு மரபு பாவாணர் மரபுக்கு நேர் எதிரானது.
தேவநேயப் பாவாணர் எஸ். வையாபுரிப் பிள்ளை உருவாக்கிய தமிழ் பேரகராதியை முழுமையாக நிராகரித்தார். அதில் தமிழ்ச்சொற்கள் பல வடமொழிச் சொற்களாக சுட்டப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டினார். தமிழ் வேர்ச்சொல் அகரமுதலி அதன்பொருட்டே பாவாணரால் உருவாக்கப்பட்டது. கஜபாகு காலம்காட்டி முறைமைப்படி தமிழ்நூல்களின் காலத்தை கணிப்பதை தேவநேயப் பாவாணர் கண்டித்தார். தமிழ் நூல்கள் மேலும் தொன்மையானவை என வாதிட்டார். தமிழ் நூல்களின் காலத்தை சொற்களின் தொன்மை, அவை ஒன்றோடொன்று கொண்டுள்ள உறவு ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடவேண்டும் என்றார்.
விருதுகள்
- பாவாணர் 1971-ல் 'செந்தமிழ் ஞாயிறு' என்ற பட்டத்தைப் பெற்றார்.
- 1980-ல் எம். ஜி. ஆர். இவருக்கு 'செந்தமிழ்ச் செல்வர்' என்ற பட்டத்தைக் கொடுத்தார்.
மரபு
தேவநேயப் பாவாணர் தமிழில் மூன்றாம் தலைமுறையாக தொடர்ந்து வேகத்துடன் இயங்கும் ஓர் ஆய்வுமரபை உருவாக்கிய முன்னோடி. அதன் அடிப்படைகள்
- தமிழ்மொழியை உலகின் தலைமொழியாகவோ அல்லது தலைமொழிகளில் ஒன்றாகவோ கொள்ளுதல்
- தமிழின் பண்பாடு அயலவர்களால் ஊடுருவப்பட்டு சிதைக்கப்பட்ட வடிவிலேயே கிடைக்கிறது. ஆகவே அதன் வேர்ச்சொற்கள் மட்டுமே அதன் அடிப்படைகளை அறிய உறுதியான ஆதாரமாக அமைபவை என்னும் நிலைபாடு. அவற்றைக்கொண்டு தமிழைப் புரிந்துகொள்ள முயலுதல்
- தமிழ் மொழியின் உலகளாவிய பரவலை தமிழுடன் தொடர்புள்ள சொற்களைக் கொண்டே வகுத்தல்.
- தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சி நிலையை அறிய தமிழ்ச் சொற்களின் மாற்றத்தை மட்டுமே கருத்தில்கொள்ளுதல்
- தமிழ் மொழியின் தனித்துவம் கொண்ட இலக்கண அமைப்பே இதன் தொன்மைக்குச் சான்று. ஆகவே இலக்கணத்தை பேணிக்கொள்ளும் முயற்சியை உறுதியாக முன்னெடுத்தல்.
இம்மரபில் இலக்குவனார் தேவநேயப்பாவாணரின் இணையறிஞர். பெருஞ்சித்திரனார் இரா. இளங்குமரனார் போன்றவர்கள் தேவநேயப் பாவாணரின் முதன்மை மாணவர்கள். அடுத்த தலைமுறையில் மு. அருளி, குமரிமைந்தன் நெடுஞ்செழியன் பொற்கோ போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அதற்கடுத்த தலைமுறையிலும் மு. இளங்கோவன் போன்ற ஆய்வாளர்கள் உள்ளனர்.
மறைவு
ஜனவரி 5,1981-ல் உடல் நலம் சரியில்லாது அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே ஜனவரி 15, 1981-ல் காலமானார்.
நினைவுகள்
நினைவகங்கள்
- சென்னையில் தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம் செயல்படுகிறது
- மதுரையில் பாவாணருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது
நூல்கள்
- தேவநேயப் பாவாணர் -இரா. இளங்குமரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)(2000)
- பாவாணர் நினைவலைகள் -தேவநேயப் பாவாணரின் மகன் தே. மணி (2006)
இலக்கிய இடம்
தேவநேயப் பாவாணரின் முதன்மைப் பங்களிப்பு தமிழின் தனித்தன்மையை பொதுவிவாதக் களத்தில் நிறுவியது. அவருடைய ஆய்வுகள் தொடங்கிய காலகட்டத்தில் இந்திய மொழிகளை சம்ஸ்கிருதத்தை மையமாக்கி அணுகும் போக்கு ஓங்கியிருந்தது. பின்னர் திராவிட மொழிக்குடும்பம் என்னும் பார்வை உருவானது. பாவாணர் இவ்விரண்டுக்கும் மாற்றாக தமிழை மையமாக்கி இந்திய மொழியியல் ஆய்வை நிகழ்த்தும் அணுகுமுறையை உருவாக்கினார். இது இன்று தமிழாய்வாளார்கள் நடுவே வலுவான ஒரு தரப்பாக நீடிக்கிறது. பெருஞ்சித்திரனார் பாவாணரின் பார்வையை முன்னெடுத்த அடுத்தகட்ட தமிழறிஞர்.
பாவாணரின் சொற்பிறப்பியல் அகரமுதலி தமிழ்ச் சொற்களுக்கு தமிழ்மரபில் இருந்தே வேர்ச்சொற்களைக் கண்டறியும் முயற்சி. அதனூடாக பல்லாயிரம் தமிழ்ச்சொற்களின் பண்பாட்டு தொடக்கங்களை கண்டறிய அவரால் இயன்றது. அது தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுகளில் முக்கியமான அடிப்படைத்தளமாக இன்று அமைந்துள்ளது. தமிழ்ப்பண்பாட்டின் பல கூறுகளை சொற்களின் வேர்கள் வழியாகவே சென்றடைய முடியும் என்று காட்டியது பாவாணரின் கொடை. சொற்களின் ஒலியமைப்பு, சொற்கள் வேரிலிருந்து கிளைப்பதன் வளர்மாற்றம், சொற்புணர்ச்சிகள் ஆகியவற்றில் ஒரு பண்பாட்டின் உலகப் பார்வையும் அதன் கூட்டு நனவிலியும் வெளிப்படுகின்றன என்று பாவாணரின் ஆய்வுகள் காட்டுகின்றன. பாவாணரின் ஆய்வுகள் தமிழர் மெய்யியலை வகுக்கவும் விளக்கவும் மிக உதவியானவை.
பாவாணரின் அணுகுமுறை பெரும்பற்றில் இருந்து உருவாவது. வழிபாட்டுத்தன்மை கொண்டே அவர் தமிழை அணுகுகிறார். அவருடைய ஆய்வுகள்மேல் அதை ஒரு குறைபாடாக அறிஞர் கூற முடியும். ஆனால் ஒரு மொழியின், பண்பாட்டின் நுண்ணிய உள்ளுறைகளை நோக்கிச் செல்ல புறவயமான ஆய்வுமுறைகளைக் காட்டிலும் உள்ளுணர்வு சார்ந்த தீவிரமே உதவக்கூடியது. தமிழ் மெய்யியல், தமிழ் பண்பாட்டாய்வு ஆகியவற்றில் பாவாணரின் சொற்பிறப்பியல் அகரமுதலி அளிக்கும் திறப்புகள் மிகமிக அடிப்படையானவை.
நாட்டுடைமை
தேவநேயப் பாவாணரின் படைப்புகளை தமிழக அரசு 1996-ம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கியது.
நூல்களும் முதன்மைக்கட்டுரைகளும்
இலக்கணக் கட்டுரைகள்
- தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை
- இலக்கணவுரை வழுக்கள்
- உரிச்சொல் விளக்கம்
- ஙம் முதல்
- தழுவு தொடரும் தழாத் தொடரும்
- நிகழ்கால வினை
- படர்கை 'இ' விகுதி
- காரம்,காரன்,காரி
- குற்றியலுகரம் உயிரீறே (1)
- குற்றியலுகரம் உயிரீறே (2)
- ஒலியழுத்தம்
- தமிழெழுத்துத் தோற்றம்
- நெடுங்கணக்கு (அரிவரி)
- தமிழ் எழுத்து மாற்றம்
- தமிழ் நெடுங்கணக்கு
- ஐ,ஔ' 'அய்,அவ்' தானா?
- எகர ஒகர இயற்கை
- உயிர்மெய் வரிவடிவுகளின் ஒரியலின்மை
தமிழியற் கட்டுரைகள்
- செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு
- தென்மொழி
- தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும்
- தமிழ் தனித்தியங்குமா?
- தமிழும் திரவிடமும் சமமா?
- திராவிடம் என்பதே தீது
- மொழி பெயர்முறை
- நிகழ்கால வினைவடிவம்
- நிகழ்கால வினை எச்சம் எது?
- கால்டுவெல் கண்காணியாரின் சறுக்கல்கள்?
- ஆய்தம்
- மூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள்
- பாயிரப் பெயர்கள்
- திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும்
- சிந்தாமணியின் செவ்விய வனப்பியல்
- ஆவுந் தமிழரும்
- கற்புடை மனைவியின் கண்ணியம்
- அசுரர் யார்?
- கோசர் யார்?
- முருகு முதன்மை
- மாந்தன் செருக்கடக்கம்
- தற்றுடுத்தல்
- தலைமைக் குடிமகன்
- மாராயம்
- முக்குற்றம்
- திருவள்ளுவர் காலம்
- வள்ளுவர் கோட்டக் கால்கோள்விழா வாழ்த்துரை விளக்கம்
மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்
- மொழியாராய்ச்சி
- உலக மொழிகளின் தொடர்பு
- முதற்றாய் மொழியின் இயல்புகள்
- வாய்ச் செய்கை யொலிச் சொற்கள்
- சொற்குலமும் குடும்பமும்
- சொற்பொருளாராய்ச்சி
- சொல்வேர்காண் வழிகள்
- ககர சகரப் பரிமாற்றம்
- மொழியாராய்ச்சியும் மொழியகழ்வராய்ச்சியும் ஒன்றே
- மேலை மொழிநூலாரின் மேலோட்டக் கொள்கைகள்
- சேயும் சேய்மையும்
- ஆலமரப் பெயர்மூலம்
- கருப்பும் கறுப்பும்
- தெளிதேனும் களிமதுவும்
- கலைச்சொல்லாக்க நெறிமுறைகள்
மொழிநூற் கட்டுரைகள்
- ஒப்பியல் இலக்கணம்
- சொற்பொருள் வரிசை
- வண்ணனை மொழிநூல்
- பொருட்பாகுபாடு
- உலக வழக்கு கொச்சை வழக்கன்று
- எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும்
- வடசொல் தென்சொல் காணும் வழிகள்
- பாவை என்னுஞ் சொல் வரலாறு
- திரு என்னும் சொல் தென்சொல்லா, வடசொல்லா?
- 'உத்தரம்', 'தக்கணம்' எம்மொழிச் சொற்கள்?
- 'மதி' விளக்கம்
- 'உவமை' தென்சொல்லே
- திரவிடம் தென்சொல்லின் திரிபே
- தமிழ் முகம்
- வள்ளுவன் என்னும் பெயர்
- கழகமெல்லாம் சூதாடுமிடமா?
- இந்திப் பயிற்சி
பண்பாட்டுக் கட்டுரைகள்
- புறநானூறும் மொழியும்
- வனப்புச் சொல்வளம்
- அவியுணவும் செவியுணவும்
- 501-ம் குறள் விளக்கம்
- அரசுறுப்பு
- பாவினம்
- அகத்தியர் ஆரியரா? தமிழரா?
- தமிழ்மன்னர் பெயர்
- வேளாளர் பெயர்கள்
- பாணர்
- குலப்பட்ட வரலாறு
- கல்வி (Culture)
- நாகரிகம்
- வெடிமருந்து
- பண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை
தென்சொற் கட்டுரைகள்
- வடமொழிச் சென்ற தென்சொற்கள்
- வடமொழித் தென்சொற்கள்
- வடசொல்லென மயங்குந் தொல்காப்பியத் தென்சொற்கள்
- இலக்கியம்', 'இலக்கணம்'
- இலக்கணம்', 'இலக்கியம்' எம்மொழிச் சொற்கள்?
- திருவென்னும் சொல் தென்சொல்லே
- காலம்' என்னுஞ் சொல் எம்மொழிக்குரியது?
- மாணவன்' தென்சொல்லா? வடசொல்லா?
- என் பெயர் என்சொல்?
- சிலை என்னுஞ் சொல் வரலாறு
- கருமம் தமிழ்ச் சொல்லே!
- எது தேவமொழி?
- சமற்கிருதவாக்கம்சொற்கள்
- சமற்கிருதவாக்கம்-எழுத்து
- சமற்கிருதவாக்கம் - இலக்கணம்
- ஆரியப் பூதம் அடக்கம் எழும்புதல்
செந்தமிழ் சிறப்பு
- மதிப்படைச் சொற்கள்
- தமிழின் தனிப்பெருந்தன்மைகள்
- தமிழின் தனியியல்புகள்
- தமிழ் பற்றிய அடிப்படை உண்மைகள்
- தமிழின் தொன்மையும் முன்மையும்
- தமிழும் திராவிடமும் தென்மொழியும்
- தமிழ் வேறு திரவிடம் வேறு
- செந்தமிழும் கொடுந்தமிழும்
- திசைச்சொல் எவை?
- மலையாளமும் தமிழும்
- இசைத்தமிழ்
- கடிசொல் இல்லை காலத்துப்படினே'
- புதுமணிப் பவளப் புன்மையும் புரைமையும்
- போலித் தமிழ்ப்பற்று
- மதுரைத் தமிழ்க் கழகம்
- உலகத் தமிழ்க் கருத்தரங்க மாநாடு
- தமிழனின் பிறந்தகம்
- தமிழன் உரிமை வேட்கை
- உரிமைப் பேறு
மறுப்புரை
- குரலே சட்சம்
- குரல் சட்சமே; மத்திமமன்று
- நன்னூல் நன்னூலா?
- நன்னூல் நன்னூலா - மறுப்பறுப்பு
- சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே
- பேரா. தெ. பொ. மீ. தமிழுக் கதிகாரியா?
- தெ. பொ. மீ. யின் திரிபாராய்ச்சி
- பாணர் கைவழி` மதிப்புரை (மறுப்பு)
- சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்புரை மறுப்பு
தமிழ் வளம்
- வேர்ச்சொற் சுவடி
- போலிகை யுருப்படிகள்
- அகரமுதலிப் பணிநிலை
- தமிழ் அகரமுதலித் தொகுப்பாளர் தகுதி
- உலகத் தமிழ்க் கழகக் கொள்கை
- பதவி விடுகையும் புத்தமர்த்தமும்
- உ. த. க. உறுப்பினர்க்கு அறிவிப்பு
- உ. த. க. உறுப்பினர் உடனடியாய்க் கவனிக்க
- உ. த. க. மாவட்ட அமைப்பாளர்க்கு உடனடி வியங்கோள்
- பாவாணரின் மூன்று அறிக்கைகள்
- தமிழா விழித்தெழு!
- தமிழ் ஆரியப் போராட்டம்
- கோலாலம்பூரில் கொண்டான்மார் கூத்து
- தமிழ்ப் பேராசிரியரின் தவறான மொழிக் கொள்கை
- பல்குழுவும் உட்பகையும் கொல்குறும்பும்
- உண்மைத் தமிழர் அனைவர்க்கும் உரைத்த எச்சரிக்கை
- அந்தோ! வெங்காலூர்த் தமிழர் படும்பாடு
- தி. மு. க அரசிற்குப் பாராட்டு
- மனோன்மணிய ஆசிரியர் சுந்தரனார் தமிழ்வார்த்தை இனிப்பாட வேண்டிய முறை
- தனித் தமிழ் இதழாசிரியர் தவறு
- வாழ்நாட் பல்லாண்டு வரம்பு விழாக்கள்
- மறைமலையடிகள் நூல்நிலைய மாண்பு
- ஆங்கிலத்தை அகற்றுவது அறிவுடைமையா?
- தேசியப் படை மாணவர் பயிற்சி ஏவல்கள்
- திருக்கோவில்களில் தமிழ்ச் சொற்கள்
- மதிப்புரைமாலை
- கேள்விச் செல்வம்
- ஈ. வே. இரா. பெரியாருக்கு விடுத்த வெளிப்படை வேண்டுகோள்
- பிறந்த நாட்செய்தி
பாவாணர் நோக்கில் பெருமக்கள்
- மறைமலை யடிகளின் மும்மொழிப் புலமை
- நாவலர் பாரதியார் நற்றமிழ்த் தொண்டு
- நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்றமிழ்த் தொண்டு
- பழந்தமிழ் புதுக்கும் பாரதிதாசன்
- தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தவப்பெருஞ் சிறப்பியல்புகள்
- தமிழ் எழுத்து மாற்றம் தன்மானத் தந்தையார் கொள்கையா?
- தமிழ்நாடு ஆளுநர் உயர்திரு. கே. கே. சா அவர்கட்குப் பாராட்டு
- என் தமிழ்த் தொண்டு இயன்றது எங்ஙனம்?
- ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு அடிப்படை எவர் பட்ட அரும்பாடு?
- செந்தமிழ்ச் செல்விக்கு உட்கரணம் கெட்டதா?
- வரிசை யறிதல்
- மகிழ்ச்சிச் செய்தி
- துரைமாணிக்கத்தின் உரைமாணிக்கம்!
- வல்லான் வகுத்த வழி
- தீர்ப்பாளர் மகாராசனார் திருவள்ளுவர்
- திருவள்ளுவரும் பிராமணீயமும் - மதிப்புரை
பாவாணர் உரைகள்
- மொழித் துறையில் தமிழின் நிலை
- இயல்புடைய மூவர்
- தமிழ்மொழியின் கலைச்சொல்லாக்கம்
- தமிழ் வரலாற்றுத் தமிழ்க் கழக அமைப்பு - மாநாட்டுத் தலைமையுரை
- பாவாணர் சொற்பொழிவு
- தமிழின் தொன்மை
- தமிழன் பிறந்தகம்
- வ. சு. பவளவிழா
- தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை விழா
- கலைஞர் நூல் வெளியீட்டு விழா
- பாவாணர் இறுதிப் பேருரை
நூல்கள்
- இசைத்தமிழ்க் கலம்பகம் (1966) 303 இசைப்பாக்களைக் கொண்ட நூல்
- இசையரங்கு இன்னிசைக் கோவை (1969) இசைப்பாடல்கள் 34 உள#. 31 பக்கங்கள்#.
- இயற்றமிழ் இலக்கணம் (1940) 148 பக்கங்கள்
- இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் (1968) 89 பக்கங்கள்
- உயர்தரக் கட்டுரை இலக்கணம் (1950) 284 பக்கங்கள்
- உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் (1951) 251 பக்கங்கள்
- ஒப்பியன்மொழி நூல் (1940) 378 பக்கங்கள்
- கட்டாய இந்திக் கல்விக் கண்டனம் என்னும் இசைநூல், இசைப்பாடல்கள் 35 கொண்டது#. பக்கங்கள் 33 1937#.
- கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் (1937) 84 பக்கங்கள்
- கட்டுரை வரைவியல் என்னும் இடைத்தரக் கட்டுரை இலக்கணம் (1939, 1952) 160 பக்கங்கள்
- கட்டுரை எழுதுவது எப்படி? 36 பக்கங்கள்
- கடிதம் எழுதுவது எப்படி? (1984) 36 பக்கங்கள்
- கிறித்தவக் கீர்த்தனம் (1981?) 25 இயற்பாக்கள், 50 இசைப்பாக்கள் கொண்டது
- சிறுவர் பாடல் திரட்டு (1925) கதை, விளையாட்டு கைவேலை பற்றிய 29 பாடல்கள் கொண்டது#.
- மருத நிலப் பாடல், 1925
- சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து (1943) 104 பக்கங்கள்
- சென்னை பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு (1961) 46 பக்கங்கள்
- சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949) 120 பக்கங்கள்
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - முதன் மண்டலம்- முதற்பகுதி (1985) 574 பக்கங்கள்#.
- தமிழ் இலக்கிய வரலாறு (1979) 326 பக்கங்கள்
- தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் (1954) 144 பக்கங்கள்
- தமிழ் வரலாறு (1967) 319 பக்கங்கள்
- தமிழர் திருமணம் (1956) 96 பக்கங்கள்
- தமிழன் எப்படிக் கெட்டான் 1940
- தமிழர் மதம் (1972) 200 பக்கங்கள்
- தமிழர் வரலாறு (1972) 382 பக்கங்கள்
- தமிழின் தலைமை நாட்டும் தனிச்சொற்கள் (1977) செந்தமிழ்ச் செல்வியில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு (தனி நூல் அல்ல)
- திராவிடத்தாய் (1944, 1956) 112 பக்கங்கள்#. முன்னுரை, மலையாளம், கன்னடம், துளு, முடிவு ஆகிய 6 பாகமுடையது#.
- திருக்குறள் தமிழ் மரபுரை (1969) 812 பக்கங்கள் கொண்டது#.
- தொல்#. எழுத்து - குறிப்புரை (1946)
- தொல்#. சொல் - குறிப்புரை (1949)
- பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் (1966) 240 பக்கங்கள்
- பழந்தமிழராட்சி (1952) 170 பக்கங்கள்#.
- பாவாணர் பாடல்கள், பாவாணர் பல்வேறு காலங்களில் இயற்றிய 320க்கும் மேலான பாடல்களைத் தொகுப்பசிரியர் இரா#. இளங்குமரன் தொகுத்து#.
- பாவாணர் மடல்கள், பாவாணரின் கடிதங்கள் சுமார் 600ஐத் தொகுத்து 1988ல் வெளியானது#. தொகுப்பு#. இரா#. இளங்குமரன்#. #.
- மண்ணில்விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை (1978) 250 பக்கங்கள்
- முதல்தாய்மொழி அல்லது தமிழாக்கவிளக்கம் (1953) 344 பக்கங்கள்#. குறிப்பொலிக் காண்டம், சுட்டெலிக் காண்டம் என இரு பகுதிகள் கொண்டது
- வடமொழி வரலாறு (1967) 350 பக்கங்கள் கொண்டது#.
- வண்ணணை மொழி நூலின் வழுவியல் (1968) 122 பக்கங்கள்#.
- வேர்ச்சொற் கட்டுரைகள் (1973) 298 பக்கங்கள்#.
- என் அண்ணாமலை நகர் வாழ்க்கை (1988) பதிப்பாசிரியர் பேரா#. கு#. பூங்காவனம்#. பக்கங்கள்??
- The Primary Classical Language of the World (1966) 312 பக்கங்கள்
- The Lemurian Language and its Ramifications (1984) 400 பக்கங்கள் (வெளியீடு தெரியவில்லை)
ஆங்கிலம்
- The Manifold Defects of the Madras University Tamil Lexicon (1961)
- The Primary Classical Language of the World (1966)
- The Language Problem of Tamilnad and Its Logical Solution என்ற (1967)
- The Lemurian Language and its Ramifications (1984)
உசாத்துணை
- அ. கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்
- Principles of English etymology: Skeat, Walter W. (Walter William), 1835-1912 : Free Download, Borrow, and Streaming : Internet Archive
- பாவாணரின் படைப்புகள்
- தேவநேயப் பாவாணர் 10 | தேவநேயப் பாவாணர் 10 - hindutamil. in
- `நம்மிடம் எஞ்சி நிற்கும் ஒரே கருவி மொழி!’ - தேவநேயப் பாவாணர் பிறந்த தினப் பகிர்வு | Devaneya Pavanar Birthday Special Article - Vikatan
- https://www. dinamani. com/specials/kதேவநேயப்பாவாணர்
- தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வுகள் இரா இளங்குமரன். இணைய நூலகம்
- http://www. tamilonline. com/thendral/article. aspx?aid=7858
- தேவநேயப் பாவாணர் நினைவகம் காணொலி
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:31 IST