under review

கஜபாகு காலம்காட்டி முறைமை

From Tamil Wiki

To read the article in English: Gajabahu Synchronism. ‎


கஜபாகு காலம்காட்டி முறைமை (கயவாகு காலம்காட்டி) (Gajabahu Synchronism) தமிழ் ஆய்வாளர் வி.கனகசபைப் பிள்ளையால் சங்ககால தமிழக வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை வரிசைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுமுறை. இதை கனகசபைப் பிள்ளை 1904ல் தான் எழுதிய ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர் என்னும் நூலில் விளக்கினார். இதையே பின்வந்த வரலாற்றறிஞர்கள் சங்ககால தமிழக வரலாற்றை கணிக்கும் முறையாக கையாண்டனர்.

காலம் கணித்தல்

இக்காலக்கணிப்பு முறை சிலப்பதிகார வரிகளில் வரும் செங்குட்டுவன் எடுத்த கண்ணகி விழாவுக்கு வந்த இலங்கையை ஆண்ட கயவாகு என்னும் மன்னனையும் பௌத்த மதவரலாற்று நூலான மகாவம்சம் குறிப்பிடும் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட கஜபாகு என்னும் மன்னனையும் ஒருவன் என வகுக்கிறது. (கஜபாகுவின் காலம் பொ.யு. 113 - 134 என மகாவம்சம் தெளிவாக வரையறை செய்கிறது.) மகாவம்சத்தின் அரசகுலக் காலப்பதிவுகள் நம்பகமானவை என ஏற்கப்பட்டுள்ளது. இதன்படி சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலம் பொயு இரண்டாம் நூற்றாண்டு. சேரன் செங்குட்டுவனின் காலம் இது. இந்தப் புள்ளியில் இருந்து முன்னும் பின்னும் நகர்ந்து தமிழக வரலாற்றை வி.கனகசபைப் பிள்ளை வரையறை செய்தார்.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்ததை பாடும் சிலப்பதிகாரம் "பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து நித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப் பூவும் புகையும் மேவிய விரையும் தேவந் திகையைச் செய்கென் றருளி வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவ னின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர்" (சிலப்பதிகாரம் 151 - 163) என்று சொல்கிறது. பதிற்றுப்பத்து கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு உடை திரைப் பரப்பின் படு கடல் ஓட்டிய வெல் புகழ்க் குட்டுவன் (பதிற்றுப்பத்து 46) என்கிறது.

சேரன் செங்குட்டுவனின் காலம் கஜபாகுவின் காலத்துடன் இணைந்தால் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் இரண்டும் இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என ஆகும். அவை சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தவை. இக்கணிப்பின்படி சங்ககாலத் தமிழக மன்னர்களின் வரலாற்றை பொ.யு. 250-க்கும் முன்னர் வி. கனகசபைப் பிள்ளை எடுத்துச் சென்றார். செங்குட்டுவன் சிலப்பதிகாரத்தில் நூற்றுவம் கண்ணன் என்னும் அரசனைச் சந்தித்ததாக சொல்லப்படுகிறது. அது சதகர்ணி என பொருள்படும் சொல் என வி.கனகசபைப் பிள்ளை ஊகிக்கிறார். பொயு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ள சாதவாகன அரசர் சதகர்ணி என்பவனை செங்குட்டுவன் சந்தித்தான் என்பது இம்முறைக்கு மேலும் வலுவூட்டுவதாய் அமைந்துள்ளது என்கிறார்.

கஜபாகு என்ற பெயர் கொண்ட மன்னர்கள் மகாவம்சத்தின்படி இரண்டு பேர் மட்டுமே. ஒருவன் இரண்டாம் நூற்றாண்டில் ஆண்டவன். மற்றொருவன் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஆண்டவன். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர்களின் கல்வெட்டுகளும் சாசனங்களும் ஏராளமாக வரத்தொடங்கிவிட்டன. ஆகவே செங்குட்டுவன் அப்போது சேரநாட்டரசனாக இருக்க வாய்ப்பில்லை. இம்முறைப்படி சங்ககாலம் பொ.யு. 250-க்கும் முற்பட்டது எனபதை பொதுவாக தமிழறிஞர்கள் ஏற்கின்றனர். எஸ். வையாபுரிப் பிள்ளை இது உகந்த கணக்கீட்டுமுறை என கூறுகிறார்.

ஏற்பும் மறுப்பும்

இதை மொழியியலாளரும் இலக்கியவியலாளருமான கமில் சுவெலபில் சங்கத்தமிழர் வரலாற்றை கணிக்க உதவும் கால நங்கூரம் என்று புகழ்ந்துள்ளார். ஆனால் இலங்கை ஆய்வாளரான கணநாத ஒபயசேகர (Gananath Obeyesekere) என்பவர் இம்முறை காலம் கணிக்க ஏற்றுக்கொள்ள முடியாத முறை என்று மறுத்துள்ளார். ஆய்வாளர் ஹெர்மன் டிக்கென் (Herman Tieken) இது ஒன்றுக்கு இன்னொன்றை சான்றாக்கும் ஆய்வுமுறை என மறுக்கிறார்.

மேற்கோள்களும் குறிப்புகளும்

  • V., Kanakasabhai (1997). The Tamils Eighteen Hundred Years Ago. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0150-5.
  • Zvelebil, Kamil (1973). The smile of Murugan: On Tamil literature of south India. Brill Academic Publishers. பக். 37–39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-03591-5. "The opinion that the Gajabahu Synchronism is an expression of genuine historical tradition is accepted by most scholars today"
  • Pillai, Vaiyapuri (1956). History of Tamil Language and Literature; Beginning to 1000 AD. Madras, India: New Century Book House. பக். 22. "We may be reasonably certain that chronological conclusion reached above is historically sound"
  • Gananath Obeyesekere in his The Cult of the Goddess Pattini (1984)



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:10 IST