under review

மு. கருணாநிதி

From Tamil Wiki
மு. கருணாநிதி
மு. கருணாநிதி

மு. கருணாநிதி (ஜூன் 3, 1924 - ஆகஸ்ட் 7, 2018) தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர், நாடக நடிகர், நாடக ஆசிரியர், பேச்சாளர், திரைக்கதையாசிரியர், அரசியல்வாதி. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்துமுறை பதவி வகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் இறக்கும் வரை பதவி வகித்தார்.

பிறப்பு, கல்வி

மு. கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் ஜூன் 3, 1924-ல் முத்துவேல், அஞ்சுகம் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் பெரியநாயகம், சண்முகவடிவு என இரு சகோதரிகள். ஆரம்பக் கல்வியை திருக்குவளையில் பயின்றார். திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். சி. இலக்குவனார் இவரின் ஆசிரியர்.

தனிவாழ்க்கை

மு. கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி. இவர்களின் மகன் முத்து. பத்மாவதி ஏப்ரல் 12, 1948-ல் காலமானார். செப்டம்பர் 15, 1948-ல் தயாளு அம்மாளை மணந்தார். இவர்களின் மகன்கள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, மகள் செல்வி. கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராசாத்தி அம்மாள். இவர்களின் மகள் கனிமொழி.

அமைப்புப் பணிகள்

மு. கருணாநிதி
இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு

மு. கருணாநிதி தன்னுடன் பயின்ற பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து, ‘இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்தி எதிர்ப்புப் பேரணிகளையும் இந்த அமைப்பின் மூலம் நடத்தினார். போராட்டத்துக்கு மாணவர்களைத் திரட்டுவதற்காக, 1941-ல் தனது பதினாறாவது வயதில், ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார்.

தமிழ்நாடு மாணவர் மன்றம்

மு. கருணாநிதி பதினேழு வயதில், ‘தமிழ்நாடு மாணவர் மன்றம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். அமைச்சராக கே.வெங்கிடாசலம் இருந்தார். மு. கருணாநிதி உருவாக்கிய தமிழ்நாடு மாணவர் மன்றம், திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அணி. க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மதியழகன் உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகள் இந்த அணியில் இணைந்து செயல்பட்டனர். இவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக ஆனது.

அரசியல் வாழ்க்கை

மு. கருணாநிதி பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபாடு கொண்டார். பதினான்கு வயதில் 1938-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். ஈ.வெ. ராமசாமி திருவாரூர் சுயமரியாதை கூட்டத்திற்கு வந்தபோது மு. கருணாநிதி நடத்திய ‘முரசொலி’ இதழைப் பாராட்டினார். பாரதிதாசன், திரு.வி. கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் காங்கிரஸ்காரர்கள் நடத்த விடாமல் செய்தனர். இந்தக் கூட்டத்தில் மு. கருணாநிதி தாக்கப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டார். ஒரு முஸ்லீம் பெரியவர் காப்பாற்றி அவரை ஈ.வெ.ராமசாமியிடம் அழைத்துச் சென்றார். அவர் மு. கருணாநிதியை ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று ‘குடியரசு’ இதழில் துணையாசிரியராக்கினார். குடியரசு இதழில் கருணாநிதி எழுதிய கட்டுரைகள் பெரிதும் பேசப்பட்டன.

கருணாநிதி தன் பதினான்காம் வயதில் ஆரம்பித்த அரசியல் பயணத்தை இறக்கும் வரை தொடர்ந்தார். ஐம்பது ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவராக இருந்தார். ஐந்து முறை (1969-1971; 1971-1976; 1989 – 1991; 1996-2001; 2006 – 2001) தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தார். பதினைந்து ஆண்டுகள் எதிர்கட்சித்தலைவராக இருந்தார்.

மு. கருணாநிதி, அண்ணாத்துரை
திராவிட முன்னேற்ற கழகம்

’திராவிட முன்னேற்ற கழகம்’ செப்டம்பர் 17, 1949-ல் அண்ணாத்துரை தலைமையில் ஆரம்பிக்கப்பட்டபோது மு. கருணாநிதி அதன் பிரச்சாரக் குழு உறுப்பினரானார். 1950-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். 1951-ல் ராஜகோபாலாச்சாரியாரின் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து கறுப்பு கொடி போராட்டம் நடத்தினார். 1952-ல் புயல் நிவாரண நிதியாக 25,000 ரூபாய் திரட்டி வழங்கினார். 1953-ல் தி.மு.க மும்முனை போராட்டம் நடத்த முடிவு செய்தது. டால்மியாபுரத்தை ‘கல்லக்குடி’ எனப் பெயர் மாற்றம் செய்யும் போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தினார் மு. கருணாநிதி. டால்மியாபுரம் என்ற இரயில்வே பெயர் பலகையின் எழுத்தை அழித்து, ‘கல்லக்குடி’ என எழுதினார். ரயில் தண்டவாளத்தில் படுத்து மறியல் செய்த அவரை கைது செய்து, அரியலூர் சிறையில் அடைத்தது காங்கிரஸ் அரசு.

1955-ல் நடந்த பொது தேர்தலில் தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அதன் பிறகு 2016 வரை பதின்மூன்று முறை நடந்த சட்டசபைத் தேர்தல்களில் அவர் போட்டியிட்ட இடங்களில் வெற்றி பெற்றார். 1984-ல் மட்டும் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. அண்ணாத்துரை தன் கணிப்பிற்கு மாறாக சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிக வேட்பாளர்களை நிற்கச் செய்து வெற்றி பெறச் செய்ததால் மு. கருணாநிதிக்கு கணையாழி வழங்கினார். அது மு.கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் முக்கிய தருணமாக கருதப்படுகிறது. 1960-ல் மூன்றாவது தலைமைக் கழகத் தேர்தலில் கழகப் பொருளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-ல் நடந்த சட்டசபை தேர்தலில் தஞ்சைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, எதிர்க்கட்சி துணைத் தலைவரானார். நேரு சீனப் போருக்கான நிதி மக்களிடம் பெற வேண்டுகோள் விடுத்தபோது கழகத்தின் சார்பில் தீவிரமாய் நிதி திரட்டி வழங்கினார்.

1963-ல் தமிழ் நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு போராடினார். சட்ட எரிப்பு போராட்டத்தில் கைதானார். 1965-ல் இந்தியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றார். 1967 தேர்தலில் தி.மு.க 138 இடங்களை வென்றது. மு. கருணாநிதி பொதுப்பணித் துறை மந்திரி ஆனார். 1968-ல் போக்குவரத்து மந்திரியானார். தனியார் வசம் இருந்த போக்குவரத்தை தேசியமயமாக்கினார். 1969-ல் அண்ணாத்துரை காலமானபின் நெடுஞ்செழியன், மு. கருணாநிதி, கே.ஏ.மதியழகன் ஆகியோருக்கு இடையே நிகழ்ந்த போட்டிக்கிடையில் தி.மு.க வின் தலைவரானார். இறக்கும் வரை தி.மு.க -வின் தலைவராக இருந்தார்.

நாடக வாழ்க்கை

மு. கருணாநிதி சிவாஜி கணேசனுடன்

1944-ல் மு. கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய ‘சாந்தா என்ற பழனியப்பன்’ என்ற நாடகம் திருவாரூர் பேபி டாக்கீஸில் அரங்கேறியது. பின்னர் இந்த நாடகம் ‘நச்சுக்கோப்பை’ என்ற பெயரில், தமிழகம் முழுவதும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. 1945-ல் புதுவையில் நடந்த நாடகத்தில் ‘சிவகுரு’ பாத்திரத்தை ஏற்று நடித்தார். மதுரையில் நடந்த முதல் தி.மு.க. மாநில மாநாட்டில் ‘வாழ முடியாதவர்கள்’ என்ற நாடகத்தை நடத்தினார். நிதி திரட்டும் பொருட்டு ‘காகிதப்பூ’ நாடகத்தை அரங்கேற்றினார். ‘தூக்குமேடை’, ‘பரப்பிரம்மம்’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமகுடம்’, ‘ஒரே ரத்தம்’, ‘காகிதப்பூ’, ‘நானே அறிவாளி’, ‘வெள்ளிக்கிழமை’, ‘உதயசூரியன்’, ‘திருவாளர் தேசியம்பிள்ளை’, ‘அனார்கலி’, ‘சாம்ராட் அசோகன்’, ‘சேரன் செங்குட்டுவன்’, ‘நாடகக் காப்பியம்’, ‘பரதாயணம்’ உட்பட 21 நாடகங்களை எழுதினார்.

மு. கருணாநிதி 'தூக்குமேடை', 'மகான் பெற்ற மகான்' போன்ற சமூகசீர்திருத்த நாடகங்கள் எழுதினார். 'நச்சுக்கோப்பை', 'சாக்கிரட்டீஸ்' போன்ற நாடகங்கள் மூடநம்பிக்கைக்கு எதிராக எழுதப்பட்டன. 'சிலப்பதிகாரம்', 'சேரன் செங்குட்டுவன்', ராமாயணத்தை கிண்டல் செய்து எழுதிய ’பரதாயனம்’, தேர்தல் பிரச்சாரத்திற்காக எழுதிய ’திருவாளர் தேசியம்பிள்ளை’ நாடகம் போன்றவற்றை எழுதி அரங்கேற்றம் செய்தார்.

திமுகவிற்கு உதயசூரியன் சின்னமாக கிடைத்த பிறகு அதனை பிரபலப்படுத்துவதற்காக “உதயசூரியன்” என்ற பெயரிலேயே 1957-ல் நாடகம் ஒன்றை இயற்றினார். ‘பராசக்தி’ திரைப்படம் வெளியானபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஓர் இதழில், பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது. ‘பரப்பிரம்மம்’ என்ற பெயரில் நாடகம் எழுதி அதை மாநிலம் முழுவதும் அறங்கேற்றம் செய்தார். புறநானூற்றுப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாடகத்தின் மூலம் வசூலான தொகையை தஞ்சை புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

நாடகத்தை சமூக மாற்றம், பகுத்தறிவு, போன்றவற்றுடன் தேர்தல் அரசியல் பிரச்சாரத்திற்கான கருவியாகவும் கையாண்டார். சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கை ஒழிப்பு, அரசியல் செய்திகள் போன்றவை அவரது நாடகங்களில் கதைக்களமாக இருந்தது. தன் நாடகங்களைப் பற்றி மு. கருணாநிதி கூறுகையில் “நாடக இலக்கியம் போல விரைந்து மனமாற்றம் உண்டாக்கக் கூடிய ஆற்றல் வேறு எதற்கும் இல்லை அதனால்தான் அரசியல் கருத்துக்களை பண்பாடு கெடாமல் தரம் தாழாமல் அள்ளி தெளிப்பதற்கு நாடக இலக்கியத்தை கருவியாக பயன்படுத்திக் கொண்டேன்” என்றார்.

எழுதி நடித்த நாடகங்கள்
  • சாந்தா (அ) பழனியப்பன்(1943); நச்சுக்கோப்பை (1985)
  • மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) (1953)
  • மணிமகுடம் (இரண்டாம் பதிப்பு) (1956)
  • தூக்கு மேடை (1951)
  • உதயசூரியன் (இரண்டாவது பதிப்பு) (1959)
  • ஒரே முத்தம் (இரண்டாவது பதிப்பு) (1964)
  • திருவாளர் தேசியம்பிள்ளை(இரண்டாவது பதிப்பு) (1967)
  • சிலப்பதிகார நாடகக் காப்பியம் (1967)
  • பரதாயணம் (1978)
  • புனித இராஜ்யம் (1979)
  • நான்மணிமாலை (குறு நாடகங்கள்)
  • காகிதப்பூ (1966)
  • பரப்பிரம்மம் (1953)
  • நானே அறிவாளி (1971)
  • அனார்கலி (1967)
  • சாக்ரடீஸ் (1967)
  • உன்னைத்தான் தம்பி
  • சேரன் செங்குட்டுவன் (1978)

இதழியல்

மு. கருணாநிதி முரசொலி அலுவலகத்தில்

இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பின் மூலம் மாணவர்களிடையே எழுத்தாற்றலை வளர்க்க, ‘மாணவர் நேசன்’ என்ற கையெழுத்து மாத இதழைத் துவக்கினார். அதன் முதலாவது ஆண்டு விழாவை 1942-ல் நடத்தினார். 1951-ல் மாலைமணி பத்திரிக்கையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

முரசொலி

1942-ல் முரசொலி எனும் துண்டு பத்திரிக்கையை வெளியிட்டார். அதில் ‘சேரன்’ என்ற பெயரில் சமூக விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதினார். இதன் முதலாமாண்டு விழாவை அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரை அழைத்துக் கொண்டாடினார். இடையில் சில காலம் இவ்விதழ் தடைபட்டது. 1946 முதல் 1948 மாத இதழாக முரசொலி வெளிவந்தது. 25 இதழ்களுக்குப் பின் மீண்டும் இதழ் தடைபட்டது. 1953-ல் சென்னையில் மாத இதழாகத் தொடங்கினார். 1960-ல் நாளிதழாக மாற்றினார். தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இதழின் ஆசிரியராக செல்வம் உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

மு. கருணாநிதி

மு. கருணாநிதி 1942-ல் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ இதழில் 'இளமை பலி' என்ற கட்டுரையை எழுதினார். தொடர்ந்து அரசியல், சமூக கட்டுரைகள் பல எழுதினார். ’நண்பனுக்கு’, ’உடன்பிறப்பே’ என்னும் தலைப்புகளில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதினார். கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில்கள் எழுதினார். தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்கள் எழுதினார். தனது வாழ்க்கைவரலாற்றை ’நெஞ்சுக்கு நீதி’ என்னும் தலைப்பில் தினமணி கதிர் (முதலாவது பகுதி), முரசொலி, குங்குமம் ஆகிய இதழ்களில் தொடர்கட்டுரையாக எழுதினார். பின்னர் அக்கட்டுரைத்தொடர் அதேபெயரில் 4165 பக்கங்களில் ஆறு பாகங்களைக் கொண்ட நூலாக வெளிவந்தது. 1957 முதல் 2018-ம் ஆண்டு வரை கருணாநிதி சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்தன. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் என பல வடிவங்களில் புனைவுகள் எழுதினார். ‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பிய உரை’, ‘இனியவை இருபது’, ‘மேடையிலே வீசிய மெல்லியப் பூங்காற்று’, ‘மலரும் நினைவுகள்’, ‘கலைஞரின் கவிதை மழை’, ‘இளைய சமுதாயம் எழுகவே’ உட்பட 178 நூல்களை எழுதினார். ‘குறளோவியம்’ என்ற தலைப்பில், திருக்குறளுக்கு விளக்க உரை எழுதினார்.

கவிதை

1938-ல் தனது பதினான்காம் வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். ’கவிதை மழை’ என்னும் கவிதைத் தொகுப்பு நூல் 1707 பக்கங்களைக் கொண்டது. 1988முதல் 2004வரை 68 ஆண்டுகள் மு. கருணாநிதி எழுதிய கவிதைகளை 210 தலைப்புகளில் இடம்பெற்றது.

நாவல்

மு. கருணாநிதி பதினாறு நாவல்கள் எழுதினார். பகுத்தறிவு, சாதிமதபேத ஒழிப்பு, போலித்தனமான வாழ்க்கையைச் சாடுதல், தமிழரின் பழம் பெருமைகளைப் போற்றுதல், மண வாழ்க்கையில் ஆண் பெண் சமத்துவம் ஆகியவற்றை பேசு பொருளாகக் கொண்ட நாவல்கள் எழுதினார்.

முதல் நாவலான 'புதையல்' மூடத்தனத்தில் முக்கிய மனிதர்கள் புதையலை அடைவதற்காக செய்யும் மிருகத்தனமான உயிர் பலிகள், போலிச்சாமியார்களின் கயமை போன்றவற்றை எடுத்துக்காட்டி பகுத்தறிவு சிந்தனைகளைப் பேசுவதாக அமைந்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் துன்பங்களையும், அந்த மக்கள் தங்கள் தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டிய அவசியத்தையும், கலப்புமணம் பெருகவேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்துவது 'ஒரே ரத்தம்' நாவல். ’ஒரு மரம் பூத்தது’ என்ற நாவல் விதவை மறுமணம் பற்றி எழுதப்பட்டது.

கடித இலக்கியம்

தமிழில் கடித வடிவத்தை ஒரு உத்தியாக கொண்டு கட்டுரை வரைவதை முதலில் தொடங்கியவர் மு. வரதராசன். அதன்பின் அண்ணாத்துரை. அந்த மரபை மு. கருணாநிதி பின்பற்றினார். கட்சித் தொண்டர்களுக்கு எழுதும்போது ’உடன்பிறப்பே’ என்ற விளிப்புடன் கடிதத்தைத் தொடங்கினார். ’பழைய நண்பனே’, ’மாஜி நண்பா’ என்ற விளிப்புடனும் சில கடிதங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு எழுதினார்.

மு. கருணாநிதியின் கடிதங்கள் அரசியல் செய்திகளோடு நாட்டு நிகழ்வுகளையும் பொருளாதார, கலாச்சார, சமுதாய துறைகளின் போக்குகளையும் பேசியவை. சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, மொழி உணர்வு ஆகியவையுடன் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியத்தின் மேற்கோள்கள் காட்டிக் கடிதங்கள் எழுதினார். குட்டிக்கதைகள், உருவகக்கதைகள், உவமை உருவகம், பண்பாட்டுத் தலைவர்கள் வரலாற்று நாயகர்கள், இலக்கியவாதிகள், போன்றோரின் வாழ்க்கை நிகழ்வுகள்’ போன்றவற்றின் மூலம் தன் கருத்துக்களை விளக்குவதை கடித உத்தியாகக் கையாண்டார்.

’வீரத்தின் திருவுருவே! மான மரபின் குலவிளக்கே!’ என தொண்டர்களை போராட அழைக்கும் தொனியும், கட்டளையிடும் போதும் அணுக்கமான தொனியும் கொண்ட விளிச்சொற்களைப் பயன்படுத்தினார். இக்கடிதங்கள் தொகுக்கப்பட்டு, பன்னிரெண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன.

இலக்கிய இடம்

மு. கருணாநிதி எழுதிய அபுனைவுகள், புனைவுகள், நாடகம், திரைப்படம் என கலை சார்ந்த யாவும் அவரின் சிந்தனைகள், நம்பிய கொள்கைகள், அரசியல் வாழ்க்கை ஆகியவற்றை பிரதிபளிக்கும் ஊடகமாக மாற்றிக் கொண்டார்.

மு. கருணாநிதியின் கவிதைகளைப் பற்றி மு.மேத்தா கூறுகையில் ”அவரது கவிதைகள் மரபும் அல்ல புதியதும் அல்ல ’புதுமரபுக் கவிதைகள்’. ஏனெனில் அவரது கவிதைகளில் யாப்பு, எதுகை, மோனை என மரபுக் கவிதைகள் போன்று அனைத்து இலக்கண நயமும் பொருந்தி இருக்கும். அதேசமயம் புதுமையான பேசுபொருட்களையும் கையாண்டார்” என மதிப்பிட்டார். அவரது கடித இலக்கியப் படைப்புகள் மு. வரதராசன், அண்ணாத்துரை ஆகியோரின் கடித இலக்கியத்தின் நீட்சியாக அமைந்தவை.

திரை வாழ்க்கை

மு. கருணாநிதி 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 1947-ல் வெளியான ‘ராஜகுமாரி’ திரைப்படத்தில் மு. கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதினார். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம். அதன்பின் மு. கருணாநிதியின் கதை–வசனத்தில் ஒன்பது திரைப்படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். 1950-ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் ஐநூறு ரூபாய் ஊதியத்தில் எழுத்தாளராக பணியில் சேர்ந்தார். அங்கு சில திரைப்படங்களில் பணியாற்றினார். இருபது வயதில் ஜுபிடர் பிக்சர்ஸ்-ன் திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றினார். 1952-ல் மு. கருணாநிதி கதை, வசனம் எழுதி வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தின் சமூகநோக்கு வசனத்திற்காக கவனத்திற்குள்ளானார். சிவாஜி கணேசனின் முதல் படம் இது. மு. கருணாநிதி வசனம் எழுதிய பராசக்தியும் மனோகராவும் சிவாஜிக்கும்; மந்திரி குமாரியும் மலைக்கள்ளனும் எம்.ஜி.ஆருக்கும் திருப்புமுனையாகவும் அமைந்தன.

திரைத்துறையில் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். திரைத்துறையில் தனக்கென ஒரு இலக்கியம் கலந்த தனி நடையை உருவாக்கினார். தமிழுணர்ச்சி, சமுதாயக் கண்ணோட்டம், திராவிட இயக்கத்தின் லட்சியங்கள் ஆகியவை கொண்ட பாடல்களை எழுதினார்.

பகுத்தறிவு பற்றி பேசுபவையாக ‘பராசக்தி, ராஜகுமாரி, மலைக்கள்ளன்’ ஆகிய திரைப்படங்களும்; அரசியல் பற்றி பேசுபவையாக ‘புதுமைப்பித்தன், குறவஞ்சி, அரசிளங்குமரி வண்டிக்காரன் மகன்’ ஆகிய திரைப்படங்களும்; சமூக முன்னேற்றம் பற்றி பேசுபவையாக ’மருதநாட்டு இளவரசி, பணம், நாம், திரும்பிப் பார்’ ஆகிய படங்களும்; பெண்ணுரிமை பற்றி பேசுபவையாக ’மணமகள், ராஜா ராணி, இருவர் உள்ளம், பாசப்பறவைகள்’ போன்ற படங்களும்; இலக்கியம் பற்றிப் பேசுபவையாக ’அபிமன்யு பூம்புகார், உளியின் ஓசை’ ஆகிய படங்களும் அமைந்தன. தன் தொண்ணூற்றியிரண்டாவது வயதில் இறுதியாக வசனம் எழுதிய தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘ஸ்ரீ ராமானுஜர்’.

திரைக்கதை, வசனம், பாடல்
  • ராஜகுமாரி (வசனம்) (1946)
  • அபிமன்யூ (வசனம்) (1948)
  • மருதநாட்டு இளவரசி (கதை, வசனம்) (1950)
  • மந்திரி குமாரி (கதை, வசனம், பாடல்) (1950)
  • தேவகி(கதை, வசனம்) (1951)
  • மணமகள் ( திரைகதை, வசனம்) (1951)
  • பராசக்தி (திரைக்கதை, வசனம், பாடல்) (1952)
  • பணம் (திரைக்கதை, வசனம்) (1952)
  • நாம் (கதை வசனம்) (1953)
  • திரும்பிப் பார் (கதை, வசனம்) (1953)
  • மனோகரா (திரைக்கதை, வசனம்) (1954)
  • மலைக்கள்ளன் (திரைக்கதை, வசனம்) (1954)
  • அம்மையப்பன் (கதை, வசனம்) (1954)
  • ராஜா ராணி (கதை, வசனம்) (1956)
  • ரங்கோன்ராதா(திரைக்கதை, வசனம், பாடல்) (1956)
  • புதையல் (கதை வசனம்) (1957)
  • புதுமைப்பித்தன் (கதை, வசனம்) (1957)
  • குறவஞ்சி (கதை, வசனம், பாடல்) (1960)
  • எல்லாரும் இந்நாட்டு மன்னர் (வசனம்) (1960)
  • அரசிளங்குமரி (கதை, வசனம்) (1961)
  • தாயில்லாப் பிள்ளை (திரைக்கதை, வசனம்) (1961)
  • இருவர் உள்ளம்(திரைக்கதை, வசனம்) (1963)
  • காஞ்சித் தலைவன் (கதை, வசனம், பாடல்) (1963)
  • பூம்புகார் (திரைக்கதை, வசனம், பாடல்) (1964)
  • பூமாலை (கதை, வசனம், பாடல்) (1965)
  • அவன் பித்தனா?(திரைக்கதை, வசனம், பாடல்) (1966)
  • மறக்க முடியுமா (திரைக்கதை, வசனம், பாடல்) (1966)
  • மணிமகுடம்(கதை, வசனம்) (1966)
  • தங்கத்தம்பி (கதை, வசனம்) (1967)
  • வாலிப விருந்து (கதை, வசனம்) (1967)
  • எங்கள் தங்கம் (கதை) (1970)
  • பிள்ளையோ பிள்ளை(கதை, வசனம்) (1972)
  • அணையாவிளக்கு ( கதை) (1975)
  • வண்டிக்காரன் மகன் (திரைக்கதை, வசனம்) (1978)
  • நெஞ்சுக்கு நீதி (கதை, வசனம், பாடல்) (1979)
  • ஆடு பாம்பே (கதை, வசனம்) (1979)
  • குலக்கொழுந்து (கதை, வசனம்) (1981)
  • மாடிவீட்டு ஏழை (திரைக்கதை, வசனம்) (1981)
  • தூக்குமேடை (கதை, வசனம் பாடல்) (1982)
  • காகித ஓடம் (திரைக்கதை, வசனம்) (1986)
  • பாலைவன ரோஜாக்கள் (திரைக்கதை, வசனம்) (1986)
  • நீதிக்குத் தண்டனை (1987)
  • ஒரே ரத்தம் (கதை, வசனம், பாடல்) (1987)
  • மக்கள் ஆணையிட்டால் (திரைக்கதை, வசனம், பாடல்) (1988)
  • பாசப்பறவைகள் (திரைக்கதை, வசனம்) (1988)
  • இது எங்கள் நீதி (திரைக்கதை, வசனம், பாடல்) (1988)
  • பாடாத தேனீக்கள் (திரைக்கதை, வசனம், பாடல்) (1988)
  • தென்றல் சுடும் (திரைக்கதை, வசனம்) (1989)
  • பொறுத்தது போதும் (திரைக்கதை, வசனம்) (1989)
  • நியாயத் தராசு (திரைக்கதை, வசனம்) (1989)
  • பாசமழை (கதை, வசனம்) (1989)
  • காவலுக்குக் கெட்டிக்காரன் (திரைக்கதை, வசனம்) (1990)
  • மதுரை மீனாட்சி (திரைக்கதை, வசனம், பாடல்) (1993)
  • புதிய பராசக்தி (திரைக்கதை, வசனம்) (1996)
  • மண்ணின் மைந்தன் (திரைக்கதை, வசனம்) (2005)
  • பாசக்கிளிகள் (திரைக்கதை, வசனம்) (2006)
  • உளியின் ஓசை (திரைக்கதை, வசனம்) (2008)
  • பெண்சிங்கம் (திரைக்கதை, வசனம்) (2010)
  • இளைஞன் (திரைக்கதை, வசனம்) (2011)
  • பொன்னர் சங்கர் (திரைக்கதை, வசனம்) (2011)
தொலைக்காட்சித் தொடர்
  • தென்பாண்டிச் சிங்கம்
  • இராமானுஜர்

விருதுகள்

  • 1970-ல் பாரிஸில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் கெளரவ உயர் பதவியாளராக இருந்தார்.
  • மதுரைப்பல்கலைக் கழகம் ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.
  • தென்பாண்டிச் சிங்கம் நாவலுக்கு மு. கருணாநிதிக்கு தமிழ்ப் பல்கலைகழகத்தின் படைப்பிலக்கியம் பரிசு வழங்கப்பட்டது.
  • 2009-ல் உலகக் கலைப் படைப்பாளி விருது பெஃப்சி மாநாட்டில் மு. கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.
மு. கருணாநிதி இறுதி ஊர்வலம்

மறைவு

மு. கருணாநிதி தன் 94வது வயதில் ஆகஸ்ட் 7, 2018-ல் காலமானார்

நூல்கள் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • கவிதையல்ல 1945
  • முத்தாரம்(சிறையில் எழுதிய கவி வசனங்கள் தொகுப்பு)
  • அண்ணா கவியரங்கம் 1968
  • Pearls (Translation) 1970
  • கவியரங்கில் கலைஞர் 1971
  • கலைஞரின் கவிதைகள் 1977
  • வாழ்வெனும் பாதையில், கவியரங்கக் கவிதை
  • கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989
  • கலைஞரின் கவிதை மழை 2004
நாவல்
  • இரத்தக்கண்ணீர்
  • சுருளிமலை
  • பெரிய இடத்துப்பெண் (1948)
  • வெள்ளிக்கிழமை (1956)
  • புதையல் (1975)
  • வான்கோழி (1978)
  • அரும்பு (1978)
  • ஒரே ரத்தம் (1980)
வரலாற்று நாவல்
  • பலிபீடம் நோக்கி 1947
  • ரோமாபுரிப் பாண்டியன் 1974
  • பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு 1988
  • பாயும் புலி பண்டாரக வன்னியன் 1991
  • தென்பாண்டிச் சிங்கம் 1983
  • தாய் – காவியம்
குறுநாவல்
  • சாரப்பள்ளம் சாமுண்டி
  • நடுத்தெரு நாராயணி (1953)
சிறுகதைத் தொகுப்பு
  • ஒருமரம் பூத்தது (1979)
  • கண்ணடக்கம் (1957)
  • கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் (1977, 1982, 1991)
  • கிழவன் கனவு (1945)
  • சங்கிலிச்சாமியார் (1945)
  • தப்பிவிட்டார்கள் (1952)
  • தாய்மை (1956)
  • தேனலைகள் (1958)
  • நளாயினி (1956, திராவிடப்பண்ணை)
  • பழக்கூடை 1979
  • பதினாறு கதையினிலே
  • பிள்ளையோ பிள்ளை (1948, விந்தியம் வெளியீடு)
  • மு.க.வின் சிறுகதைகள் (முத்துவேல் பதிப்பகம்)
  • முடியாத தொடர்கதை (1982)
நாடகங்கள்
  • அனார்கலி (1957)
  • உதயசூரியன் (1959)
  • உன்னைத்தான் தம்பி
  • இளைஞன் குரல் (1952)
  • ஒரே முத்தம்
  • காகிதப்பூ (1966)
  • சாக்ரடீஸ் (1957)
  • சாம்ராட் அசோகன்
  • சிலப்பதிகாரம் - நாடகக்காப்பியம்
  • சேரன் செங்குட்டுவன் (1978)
  • திருவாளர் தேசியம்பிள்ளை
  • தூக்கு மேடை (1957) (முத்துவேல் பதிப்பகம், திருச்சி)
  • நச்சுக் கோப்பை
  • நான்மணிமாலை
  • நானே அறிவாளி (1971)
  • பரதயாணம் (1978)
  • பரப்பிரம்மம் (1953)
  • பலிபீடம் நோக்கி (1948, எரிமலைப் பதிப்பகம்)
  • பிரேத விசாரணை
  • புனித இராஜ்யம் 1979
  • மணிமகுடம் (1955, முத்துவேல் பதிப்பகம்)
  • மகான் பெற்ற மகன் (1953)
  • மந்திரிகுமாரி
  • வாழமுடியாதவர்கள்
உரைநூல்கள்
  • குறளோவியம் (குறுநூல்) 1956
  • குறளோவியம் (முதல் பதிப்பு) 1985
  • தேனலைகள் மூன்றாம் பதிப்பு 1982
  • சங்கத் தமிழ் (கவிதை நடை விளக்கம்) (முதல் பதிப்பு) 1987
  • திருக்குறள் கலைஞர் உரை (முதல் பதிப்பு) 1996
  • தொல்காப்பியப் பூங்கா 2003
இலக்கிய மறுஆக்கங்கள்
  • குறளோவியம் 1968, 1985
  • சிலப்பதிகாரம் - நாடகக்காப்பியம் 1967
  • தாய்
  • பூம்புகார் (முரசொலி மலர்களில் வெளிவந்த தொடர்)
தன்வரலாறு
  • இனியவை இருபது (முதல் பதிப்பு) 1973
  • இந்தியாவில் ஒரு தீவு 1978
  • ஆறுமாதக் கடுங்காவல் 1985
  • நெஞ்சுக்கு நீதி 1975
  • கையில் அள்ளிய கடல் (பேட்டிகளின் தொகுப்பு) 1998
நேர்காணல்
  • கையில் அள்ளிய கடல் 1998
சொற்பொழிவுகள்
  • தலைமையுரை
  • போர்முரசு
  • மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று
  • பெரியார் பிறவாதிருந்தால்
கட்டுரைகள்
  • அகிம்சாமூர்த்திகள் (1953, பாரிநிலையம்)
  • அல்லிதர்பார் (1953, பாரி நிலையம்)
  • ஆறுமாதக் கடுங்காவல் (திராவிடப்பண்ணை)
  • இந்தியாவில் ஒரு தீவு (1978)
  • இளைய சமுதாயம் எழுகவே
  • இருளும் ஒளியும்
  • இலங்கைத் தமிழா, இது கேள்! (1981)
  • இனமுழக்கம்
  • உணர்ச்சிமாலை (1951)
  • உண்மைகளின் வெளிச்சத்தில் (1983)
  • உரிமையின் குரலும் – உண்மையின் தெளிவும்
  • கருணாநிதியின் வர்ணனைகள் (1952, கருணாநிதி பதிப்பகம்)
  • களத்தில் கருணாநிதி (1952)
  • சரித்திரத் திருப்பம்
  • சுழல்விளக்கு (1952, கருணாநிதி பதிப்பகம்)
  • மயிலிறகு (1993)
  • மலரும் நினைவுகள் (1996)
  • முத்துக்குவியல்
  • பூந்தோட்டம் (திராவிடப்பண்ணை)
  • பெருமூச்சு (1952)
  • பேசுங்கலை வளர்ப்போம் (1981)
  • பொன்னாரம் (கே.ஆர். நாராயணன் வெளியீடு)
  • தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் (1985)
  • திராவிடசம்பத்து (1951)
  • துடிக்கும் இளமை
  • நாடும் நாடகமும் (1953, திராவிடப்பண்ணை)
  • யாரால்? யாரால்? யாரால்? (1981)
  • விடுதலைக்கிளர்ச்சி (1952, திராவிடப்பண்ணை)
  • பேசும்கலை வளர்ப்போம்
  • இனியவை இருபது (பயணம்)
  • சட்டமன்ற உரைகள் (1957 முதல் 2018)
சிறுகுறிப்புகள்
  • சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் (1978)
  • வைரமணிகள்
  • கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் (1996)
  • கலைஞரின் நவமணிகள் (1984)
  • சிந்தனை ஆழி (1953)
  • கருணாநிதியின் கருத்துரைகள் (1967)
  • கலைஞரின் கருத்துரைகள் 1971)
  • கலைஞரின் குட்டிக்கதைகள்
  • கலைஞரின் உவமைக் களஞ்சியம் (1978)
  • கலைஞரின் சொல்நயம் (1984)
  • கலைஞரின் சின்ன சின்ன மலர்கள் (1994)
  • கலைஞரின் முத்தமிழ் – சிந்தனைத்துளிகள்
  • கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்
  • கலைஞரின் உவமை நயங்கள் (1972)
  • கலைஞரின் முத்துக்குவியல்
  • கலைஞரின் நவமணிகள்

உசாத்துணை


✅Finalised Page