under review

உ.வே.சாமிநாதையர்

From Tamil Wiki

To read the article in English: U.V. Swaminatha Iyer. ‎

உ.வே.சாமிநாதையர்

உ.வே.சாமிநாதையர் (பிப்ரவரி 19, 1855 – ஏப்ரல் 28, 1942) உ.வே.சாமிநாத ஐயர். உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாத ஐயர். சுருக்கமாக உ.வே.சா. தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் ஆய்வாளர், உரையாசிரியர். வாழ்க்கை வரலாற்றெழுத்திலும் முன்னோடியாகக் கருதப்படுபவர்.

ஏடுகளில் இருந்து பழந்தமிழ் நூல்களை கண்டெடுத்து ஒப்பிட்டு ஆராய்ந்து உரையெழுதி அச்சில் பதிப்பிக்கும் பதிப்பியக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கியது. பேரறிஞர்களின் முயற்சியால் தமிழிலக்கியத்தின் பெரும்பகுதி அச்சேறினாலும் ஒருபகுதி எப்போதைக்குமாக அழிந்தும் போயிற்று. அந்தப் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளாக உ.வே.சாமிநாதையர், சி.வை. தாமோதரம் பிள்ளை, சௌரிப்பெருமாள் அரங்கன் போன்றவர்கள் கருதப்படுகிறார்கள். உ.வே.சாமிநாதையர் தன் வாழ்நாளின் இறுதியில் தன் வாழ்க்கையையும் தன் ஆசிரியர் வாழ்க்கையையும் ஏடுதேடி அலைந்த கதைகளையும் எளிய நவீன உரைநடையில் எழுதினார். அதன்வழியாக தமிழ் நவீன உரைநடை இலக்கியத்திலும் முன்னோடியின் இடத்தை அடைந்தார்.

பிறப்பு,கல்வி

சாமிநாதையர் பிப்ரவரி 19, 1855-அன்று தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் - சரசுவதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் வெங்கடராமன். வேங்கடசுப்பையர் இசையுடன் கதைசொல்லும் ஹரிகதா கலாட்சேபம் என்னும் கலையை நிகழ்த்துபவர். உ.வே.சாமிநாதையர் தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் தந்தையிடமும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடமும் கற்றார். மேற்கொண்டு கற்க ஆவலிருந்தும் உத்தமதானபுரத்தில் அதற்கான வாய்ப்பின்றி இருந்தார். தமிழறிஞர் என எவர் வந்தாலும் ஏதேனும் கற்பிக்கும்படி கோரினார். அவ்வண்ணம் திருமணத்திற்கு வந்த ஒரு பண்டிதரிடம் கோர அவர் மறுத்துவிட்டார். துயருற்று நின்ற சாமிநாதையரிடம் ஒருவர் திருவாவடுதுறை ஆதீனவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் சென்று கற்கும்படி ஆலோசனை சொன்னார்.

உ.வே.சாமிநாதையர் வாழ்க்கை

கல்விகற்பதற்காக வெளியே தங்குவதற்குரிய பொருளியல் புலம் இல்லாத காரணத்தால் கும்பகோணத்திலேயே கல்வி கற்க உ.வே.சாமிநாதையரின் தந்தை ஏற்பாடு செய்தார். அரியலூர் சடகோப ஐயங்கார், திருவிளையாடற் புராண அறிஞர் குன்னம் சிதம்பரம் பிள்ளை, கம்ப ராமாயாணத்தில் தேர்ந்த கஸ்தூரி ஐயங்கார் போன்ற அறிஞர்களிடம் உ.வே.சாமிநாதையர் தமிழ் பயின்றார். சின்னப்பண்ணை விருத்தாசலம் ரெட்டியார் என்ற தமிழறிஞரிடம் இலக்கணங்களை கற்றார். இக்காலகட்டத்தில் நந்தனார் கீர்த்தனை எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார் அவர்களிடம் உ.வே.சாமிநாதையர் சிலகாலம் இசையும் பயின்றார்.

விருத்தாசலம் ரெட்டியார் சிபாரிசின் பேரில் தன் 17-ம் வயதில் 1870-ல் தந்தையுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாவடுதுறை சைவஆதீனத்திற்குச் சென்றார். அங்கே மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தன்னை அறிமுகம் செய்யும்போது அவர் சைவராகையால் தன் வைணவப்பெயரைக்கொண்டு தன்னை நிராகரித்துவிடக்கூடாது என எண்ணி சாமிநாதன் என்னும்பெயரை தன் பெயராகச் சொன்னார். அதன்பின் சாமிநாதையர் என்ற பெயரையே தன் பெயராகக் கொண்டிருந்தார்.

திருவாவடுதுறை ஆதீனத்தின் பொருளுதவியைக் கொண்டு ஐந்து ஆண்டுகள் ஆசிரியருடனேயே குருகுல முறைப்படி தங்கி தமிழ்கற்றார். திருநாகைக்காரோண புராணம், நைடதம், திருக்குடந்தைத் திரிபந்தாதி, பழமலை திரிபந்தாதி, மறைசையந்தாதி, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் வினாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், அஷ்டப்பபிரந்தங்கள், சீர்காழிக்கோவை, கண்ணப்பநாயனார் புராணம் போன்ற நூல்களை அவரிடம் கற்றார். அக்கால முறைப்படி நன்னூல், பாட்டியல் இலக்கணம், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றையே அவர் கற்றார்.

ஆதீனச்சூழலில் அங்கு வந்த பல அறிஞர்களுடன் விவாதித்துக் கற்கும் வாய்ப்பு உ.வே.சாமிநாதையருக்கு அமைந்தது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சந்திரசேகர கவிராஜபண்டிதா், திரிசிரபுரம் கோவிந்தபிள்ளை, ராவ்பகதூர் திரு.பட்டாபிராம் பிள்ளை போன்றவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள் என அவர் தன் வாழ்க்கைவரலாற்றில் குறிப்பிடுகிறார்..

உ.வே.சாமிநாதையர் சிலை அடித்தளம்

தனிவாழ்க்கை

உ.வே.சாமிநாதையர் தன் பதிமூன்றாவது வயதில் 1868-ல் மதுராம்பாளை மணந்தார். மகன் கல்யாணசுந்தர ஐயர்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிப்ரவரி 1, 1876-ல் மறைந்தார். உ.வே.சாமிநாதையர் குடும்பம் அப்போது பொருளியல் இடரில் இருந்தது. அவர் தந்தை வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று கதைசொல்லியும், செல்வந்தர்களிடம் கொடைபெற்றும் வாழ்ந்தார். உ.வே.சாமிநாதையரும் அவருடன் கதைசொல்லச் சென்றார். பணம்கேட்டு நிலப்பிரபுக்களுக்கு சீட்டுகவிகளும் எழுதினார். திருவாவடுதுறை ஆதீனம் கோரியதற்கு ஏற்ப உ.வே.சாமிநாதையர் தன் மனைவியுடன் ஆதீனத்திற்கே வந்து தங்கியிருந்தார். ஆதீனகர்த்தராகிய சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்டும் அங்கிருந்த மாணவர்களுக்கு பாடம் சொல்லியும் வாழ்ந்தார்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு நெருக்கமானவரும் கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியருமான தியாகராஜ செட்டியார் அடிக்கடி ஆதீனத்திற்கு வருகையில் அவருடன் சாமிநாதையருக்கு பழக்கம் ஏற்பட்டிருந்தது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருந்தகாலத்தில் சாமிநாதையர் ஆசிரியர் வேலைக்குச் செல்லலாம் என தியாகராஜ செட்டியார் பரிந்துரை செய்ய, சாமிநாதையரை பிரியமனமில்லாத மீனாட்சிசுந்தரம் பிள்ளை அதை மறுத்துவிட்டார். பிப்ரவரி 12, 1880-ல் தியாகராஜச் செட்டியார் கும்பகோணம் கல்லூரியில் தமது வேலையைத் விட்டுவிட முடிவுசெய்து அந்த வேலைக்கு உ.வே.சாமிநாதையரைப் பரிந்துரைத்த செய்தியை சுப்பிரமணிய தேசிகரிடம் கூறினார். தேசிகருக்கு சாமிநாதையரை அனுப்பும் எண்ணம் இருக்கவில்லை, உ.வே.சாமிநாதையரும் ஆதீனத்தை விட்டுச்செல்ல நினைக்கவில்லை. தியாகராஜ செட்டியார் வலியுறுத்தி தேசிகரிடம் அனுமதி பெற்றார். உ.வே.சாமிநாதையர் பிப்ரவரி 16, 1880 முதல் கும்பகோணம் கல்லூரி தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். 1880 முதல் 1903 வரை 23 ஆண்டுகள் உ.வே.சாமிநாதையர் கும்பகோணம் கல்லூரி தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

உ.வே.சாமிநாதையர் சிலை

சென்னை மாகாணக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த பூண்டி அரங்கநாத முதலியார் அழைப்பின் பேரில் 1903 முதல் 1919 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றினார். சென்னையில் மாநிலக் கல்லூரிக்கு அருகே திருவல்லிக்கேணி திருவேட்டீசுவரன் பேட்டையில் மாதம் 20 ரூபாய்க்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். 1909-ம் ஆண்டு வாடகைக்குக் குடியிருந்த அந்த வீட்டையே விலைக்கு வாங்கினார். வீட்டின் அப்போதைய விலை ரூ. 4,400/-.தமக்குக் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியர் பணி கிடைக்கக் காரணமாகயிருந்த தியாகராச செட்டியாரின் நினைவாக அந்த வீட்டிற்குத் 'தியாகராச விலாசம்’ என்று பெயரிட்டார்.

சென்னையில் தொழுவூர் வேலாயுத முதலியார் புரசபாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சோடசாவதானம் சுப்பராய செட்டியார், கதிர்வேற் கவிராயர், காஞ்சீபுரம் இராமசுவாமி நாயுடு, கோமளீசுவரன் பேட்டை இராசகோபாலபிள்ளை, சூளை அப்பன் செட்டியார், சூளை சோமசுந்தர நாயகர், திருமயிலை சண்முகம் பிள்ளை போன்றவர்கள் உ.வே.சாமிநாதையரின் தோழமையில் இருந்தனர்.

ராஜா அண்ணாமலை செட்டியார் சிதம்பரத்தில் தாம் தொடங்கிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் (இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) முதல்வராகப் பொறுப்பேற்க உ. வே. சாமிநாதையரை அணுகினார். சென்னை மாநிலக் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்றிருந்த உ. வே. சாமிநாதையர் மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வராக 1924-ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். சென்னை, அண்ணாமலைநகர், மைசூர், ஆந்திரா, காசி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலுள்ள பல்கலைத் தமிழ்க் குழுக்களில் உறுப்பினராயிருந்த உ.வே.சாமிநாதையர் சென்னைப் பல்கலைக்கழகப் புலவர் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலும் பலஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

பதிப்புப்பணி

பாண்டி நாட்டில் செவந்திபுரத்தில் வேணுவனளிங்கத்தம்பிரான் கட்டிய மடாலயத்திற்குச் சுப்பிரமணிய தேசிக விலாசம் என்னும் மடாலயத்தைச் சிறப்பித்துப் புலவர்கள் பாடிய 86 பாடல்கள் இருந்தன. உ.வே.சா. எட்டு பாடல்கள் இயற்றி வேறு சில பாடல்களும் சேர்த்து திருநெல்வேலி முத்தமிழாகரமென்னும் அச்சுக்கூடத்தில் அப்பாடல் திரட்டை பதிப்பித்தார். அது முதன்முதலாக உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த நூல்.

சீவகசிந்தாமணி
உ.வே.சாமிநாதையர்

கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றுகையில் உ.வே.சாமிநாதையருக்கு அரியலூரிலிருந்து கும்பகோணத்திற்கு முன்சிபாக மாற்றம் பெற்று வந்த சேலம் இராமசாமி முதலியாரிடம் அறிமுகம் ஏற்பட்டது. அவர் உ.வே.சாமிநாதையருக்கு ஐம்பெருங்காப்பியங்களைப் பற்றிச் சொல்லி சீவகசிந்தாமணியின் ஓர் இலம்பகத்தையும் அளித்தார். அதை ஆராயத்தொடங்கிய உ.வே.சாமிநாதையர் அதுவரை அவர் வாழ்ந்து வந்த சிற்றிலக்கியங்கள் மற்றும் பக்தி இலக்கியங்களின் உலகில் இருந்து காப்பியங்களின் உலகுக்கும் சங்கத்தமிழ் படைப்புகளின் உலகுக்கும் சென்றார். சீவகசிந்தாமணியின் ஒருபகுதியை பிழைநோக்கி பதிப்பிக்க முயன்றார். சமண நண்பர்களின் உதவியுடன் சமணமதத்தின் கருத்துக்களையும், திருத்தக்கதேவரின் வாழ்க்கையையும் பற்றி அறிந்துகொண்டார். சமணக் காப்பியத்தை பதிப்பிப்பதை சைவர்கள் எதிர்த்தபோது தமிழ்ப்பணியே முதன்மையானது, மதநம்பிக்கை அல்ல என்று தன் முடிவை முன்வைத்தார்

சிந்தாமணி பதிப்பே சாமிநாதையரின் முதல் பதிப்பு முயற்சி. ஏற்கனவே பவர் என்னும் ஆங்கிலேயர் பதிப்பித்த சிந்தாமணி நாமகளிலம்பகம் அச்சுநூல் இருந்தது. தியாகராசசெட்டியார் தம்மிடமிருந்த பிரதியை அனுப்பி வைத்தார். சுப்பிரமணிய தேசிகர் திருநெல்வேலியிலிருந்து சில ஏட்டுப்பிரதிகளை வருவித்துக் கொடுத்தார். பல பிரதிகளையும் ஒப்பிட்டு, பாடபேதங்களைக் குறித்து நூலை செம்மைசெய்தார். சிந்தாமணியை முழுமையாக அச்சிடும்பொருட்டு சுவடிகளை மேலும் தேடி விருஷபதாச முதலியாரிடம் சுவடிகளைப் பெற்றார். அவ்வாறாக சிந்தாமணியின் 23 நகல்களை உ.வே.சா. சேர்த்தார்

உ.வே.சாமிநாதையர்

அன்றைய பதிப்புமுறை என்பது பதிப்பிக்கவிருக்கும் நூலை வாங்குவதாக செல்வந்தர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு நூலை அச்சிடுவது. உ.வே.சாமிநாதையர் தமிழார்வம் கொண்ட செல்வந்தர்களைச் சந்தித்து ஆதரவு பெற்று நூலை அச்சிட்டார். சோடசவதானம் சுப்பராய செட்டியாரும், ராஜ பாலாச்சாரியாரும் வேலுச்சாமிப் பிள்ளையும் அதில் உதவினர். அச்சிடுவதற்காகச் சென்னை சென்று ராமசாமி முதலியார் இல்லத்தில் தங்கியிருந்தார். சென்னைக்கும் கும்பகோணத்திற்குமாக பயணம் செய்து அச்சுப்பணியை நிகழ்த்தினார்.

உ.வே.சாமிநாதையர் சீவகசிந்தாமணியை விரிவான முன்னுரை, நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, கதைச்சுருக்கம் ஆகியவற்றுடன் அக்டோபர் 1887-ல் பதிப்பித்தார். தமிழ்ப்பதிப்பியக்கத்தில் முன்னோடியான முயற்சியாக அது அமைந்தது.

(பார்க்க சீவகசிந்தாமணி, உ.வே.சா.பதிப்பு)

பத்துப்பாட்டு

சீவகசிந்தாமணியை பதிப்பிக்கும்போதே பத்துப்பாட்டு சுவடிகளையும் உ.வே.சாமிநாதையர் சேர்த்திருந்தார். 1889-ம் வருடம் உ.வே.சா.வின் 34-வது வயதில் பத்துப்பாட்டும் பதிப்பிக்கப்பட்டது. இதில் முகவுரையும், நூலின்மூலம் நச்சினார்க்கினியர் உரை, உரைச்சிறப்பு, பாயிரம், அரும்பதவிளக்கம் அருந்தொடர்விளக்கம், பிழைதிருத்தம் என்பனவற்றை உ.வே.சா. சேர்த்திருந்தார். சீவக சிந்தாமணி பதிப்பிலும் பத்துப்பாட்டுப் பதிப்பிலும் திருமானூர் கிருஷ்ணையர் சென்னையில் தங்கி மேற்பார்வையிட்டு உ.வே.சாமிநாதையருக்கு உதவினார்

உ.வே.சாமிநாதையர்

திருகச்சியப்ப முனிவர் இயற்றிய ஆநந்தருத்திரேசர் வண்டு விடுதூது, மாயூரம் ராமையர் இயற்றிய மயிலையந்தாதி முதலிய நூல்களையும் உ.வே.சா. பதிப்பித்து வெளியிட்டார்கள்.

சிலப்பதிகாரம்

சேலம் இராமசாமி முதலியார் சிலப்பதிகாரம் மூலமும் உரையும் அடங்கிய நூல் ஒன்றை உ.வே.சாமிநாதையரிடம் கொடுத்தார். ஏற்கனவே தியாகராச செட்டியார் கொடுத்த நூலும் உ.வே.சாமிநாதையரிடம் இருந்தது. சௌரிப்பெருமாள் அரங்கன் சிலப்பதிகாரத்தை பதிப்பித்திருந்தார். அடியார்க்கு நல்லார் உரையுடன் முழுமையாக சிலப்பதிகாரத்தை அச்சிட உ.வே.சாமிநாதையர் முயன்றார். சேலம், திருநெல்வேலி திருவைகுண்டம், பெருங்குளம், ஆறுமுகமங்கலம், நாங்குநேரி, களக்காடு, குன்றக்குடி, மிதிலைப்பட்டி போன்ற ஊர்களுக்குச் சென்று ஏட்டுச்சுவடிகளைத் தேடினார். அரசர்கள், நாடுகள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், தெய்வங்கள், புலவர்கள், ஆகிய பெயர்களுக்குத் தனித்தனியாக அகராதியும் அடியார்க்கு நல்லார் உரையில் கண்ட நூல்களுக்கு அகராதியும், தொகையகராதியும், விளங்கா மேற்கோளகராதியும், அபிதான விளக்கமும் எழுதினார். ஜூன் 1891-ல் கோடை விடுமுறையில் சென்னை சென்று சிலப்பதிகாரத்தை அச்சிட்டார்

புறநானூறு

புறநானூறு பதிப்பிக்கும் முயற்சியை உ.வே.சாமிநாதையர் தொடங்கியபோது கும்பகோணம் கல்லூரியில் சாித்திர ஆசிரியர் வைத்திருந்த பைபிளைக் கண்டு அதில் ஒரே மாதிரியான கருத்துள்ள பகுதிகளை ஆங்காங்கே சுட்டிக்காட்டிப் பதிப்பித்திருப்பதை கவனித்து புறநானூறையும் அதைப்போல பதிப்பிக்க முடிவுசெய்தார். செப்டம்பர் 1894-ல் புறநானூறு நூல் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. உ.வே.சாமிநாதையர் திப்பித்த எட்டுத்தொகை நூல்களுள் இதுவே முதலானது. இதன் முகவுரையில் எட்டுத்தொகை வரலாற்றையும், அகம் புறம் என்னும் இருவகைப் பொருளின் இயல்பையும் விளக்கி எழுதினார்

மணிமேகலை
உ.வே.சாமிநாதையர் ஓவியம்

மணிமேகலையை முன்னரே 1894ல் திருமயிலை சண்முகம் பிள்ளை மூலம் மட்டுமாக பதிப்பித்திருந்தார். உரையுடன் அதைப் பதிப்பிக்கும்பொருட்டு உ.வே.சா புத்தரைப் பற்றி படித்தார். ஜூன் 5, 1896-ல் மணிமேகலையை அச்சுக்குக் கொடுத்தார். ஜூலை 1898-ல் மணிமேகலை மூலமும், அரும்பதவுரையும் வெளியாகியது. முகவுரை, புத்தசரித்திரம், பெளத்ததருமம், பெளத்தசங்கம் மணிமேகலைக் கதைச்சுருக்கம் ஆகியவை இணைக்கப்பட்டிருந்தன. அந்நூலில் 59 தமிழ் நூல்களிலிருந்தும் 29 வடமொழிநூல்களிலிருந்தும் குறிப்புரையில் மேற்கோள்கள் காட்டியிருந்தார். .

பிறநூல்கள்

உ.வே.சாமிநாதையர் சீவகசிந்தாமணிக்குப்பின் பதிப்பித்த நூல் திருக்குடந்தை புராணம். சிந்தாமணி ஆராய்ச்சியோடு திருக்குடந்தை புராணப் பதிப்பும் நடைபெற்றுவந்தது. புறநாநூறுக்கு முன் புறப்பொருள் வெண்பா மாலையை பதிப்பித்தார். 1903-ம் ஆண்டில் ஐங்குறுநூறு நூலையும், 1904-ல் பதிற்றுப்பத்து நூலையும், 1918-ம் ஆண்டில் பரிபாடலையும் சாமிநாதையர் பதிப்பித்து வெளியிட்டார்.

கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எழுதிய சிற்றிலக்கியங்களை திருப்பனந்தாள் காசிமடம் சுவாமிநாத தேசிகர் கோரிக்கையின்படி பதிப்பித்தார்.

இலக்கியப்பணி

உ.வே.சாமிநாதையரின் முதல் படைப்பு. உ.வே.சாமிநாதையர் பழைய செய்யுள் மரபைச் சேர்ந்த பிரபந்தங்களையும் தனிப்பாடல்களையும் இயற்றியிருக்கிறார். பதிப்பியக்கத்தின் தொடக்கத்தில் மிகக்கடுமையான சொற்றொடர்கள் கொண்ட மொழிநடை அவரிடமிருந்தது. மணிமேகலை உரை முதல் நடை எளிதாகத் தொடங்கியது. இறுதிக்காலத்தில் எழுதிய தன்வரலாறு, ஏடுதேடிய அனுபவங்கள் போன்றவை நவீன உரைநடையில் அமைந்திருந்தன. அன்றைய முதன்மையான புனைவெழுத்தாளர்களின் நடைக்கு நிகரான சொற்சிக்கனமும், புதிய சொற்றொடரமைப்பும் கொண்டிருந்தன. அதற்கு உ.வெ.சாமிநாதையர் தொடர்ந்து ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டிருந்தது முதன்மைக் காரணம் என குறிப்பிடப்படுகிறது.

என் சரித்திரம்

உ.வே.சாமிநாதையரின் உரைநடைநூல்கள் இரண்டுவகையில் முதன்மையான இலக்கியப்படைப்புகளாக கருதப்படுகின்றன. உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950-ம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது. இந்நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டு தஞ்சாவூர் பகுதி கிராமத்து வாழ்க்கையை, குடும்ப அமைப்பை, அக்காலத்து கல்விமுறையை மிகநுட்பமாக விவரிக்கிறது. பலபகுதிகள் பெரும்புனைவுக்கு நிகரான நுட்பம் கொண்டவை. தன் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றி உ.வே.சாமிநாதையர் எழுதிய வாழ்க்கைவரலாறு ஓர் ஆளுமையை சித்தரிப்பதில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படைப்பு. இலக்கிய விமர்சகரான க.நா.சுப்ரமணியம் தமிழில் நிகழ்ந்த இலக்கியச் சாதனை என அவ்விரு நூல்களையும் குறிப்பிடுகிறார். உ.வே.சாமிநாதையர் அவர் ஏடுதேடி அலைந்த அனுபவங்களை எழுதிய நினைவுமஞ்சரி என்னும் நூல் தமிழின் தலைசிறந்த சிறுகதைகளுக்கு நிகரான நிகழ்வுக்குறிப்புகள் அடங்கியது. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நடைச்சித்திரங்கள் அவை என விமர்சகர் வெங்கட் சாமிநாதன் கருதுகிறார்.

நவீன இலக்கியத்திலும் ஆழமான ரசனை கொண்டிருந்த உ.வே.சாமிநாதையர் பல நவீன நூல்களுக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார். சித்தி ஜுனைதா பேகம் எழுதிய நாவலுக்கு அவர் அளித்த முன்னுரை அவர் புதிய எழுத்துக்களையும் கவனித்தார் என்பதற்கான சான்று.

பேச்சுத்திறன்

உ.வே.சாமிநாதையர் நகைச்சுவையுடனும் செறிவாகவும் மேடையில் பேசுபவர் என அறியப்பட்டிருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா. ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.

உ.வே.சாமிநாதையர்

விருதுகள்

  • 1906-ல் ஆங்கில அரசு வழங்கிய ஆண்டில் மகாமகோபத்யாயர் பட்டம் .
  • 1917-ல் காசியிலுள்ள 'பாரத தர்ம மகா மண்டலம்’ வழங்கிய 'திராவிட வித்யாபூஷணம்’
  • 1925-ல் மதுரைத் தமிழ்ச் சங்க விழாவில் காஞ்சி காமகோடிபீடத் தலைவர் 'தாஷிணாத்யகலாநிதி’ பட்டம்..
  • 1932-ல் சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் (டி.லிட்) பட்டம் (ஆகஸ்ட் 3, 1932)

மறைவு

  • உ.வே.சாமிநாதையர் ஏப்ரல் 28, 1942-ல் மறைந்தார்.
உ.வே.சாமிநாதையர்

நினைவுகள், வாழ்க்கை வரலாறுகள்

நினைவுச்சின்னங்கள்
  • இந்திய அரசு, பிப்ரவரி 18, 2006 அன்று நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
  • உத்தமதானபுரத்தில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.
  • 1942-ல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
  • உ.வே.சாமிநாதையர் பணியாற்றிய மாநிலக் கல்லூரி வாயிலில் மார்ச் 7, 1948-ல் உ.வே.சா. வின் உருவச்சிலை நிறுவப்பட்டது
  • சென்னையில் உ.வே.சா நூலகம் 1943-ல் நிறுவப்பட்டது
  • தமிழக அரசின் உ.வே.சா விருது 2012 முதல் வழங்கப்படுகிறது
நூல்கள்
  • தமிழ்த் தாத்தா (டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் வாழ்வும் இலக்கியப் பணியும்), கி. வா. ஜகந்நாதன், 1983, சாகித்திய அக்காதெமி,
  • "என் ஆசிரியப்பிரான்", கி. வா. ஜகந்நாதன், 1983
  • தமிழ்த்தாத்தா, பேராசிரியர். வே. இரா.மாதவன்

இரு கவிஞர்களின் வாழ்த்துக்கள்

உ.வே.சாமிநாதையர் அஞ்சல்தலை

உ.வே.சாமிநாதையர் இந்தியாவின் இரண்டு பெரும் கவிஞர்களின் வாழ்த்துக்களைப் பெற்றவர்

சி.சுப்ரமணிய பாரதியார்

மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்ற உ.வே.சாமிநாதையருக்கு அவர் பணியாற்றிய சென்னை மாநிலக் கல்லூரியில் 1906-ல் நடந்த பாராட்டுக் கூட்டத்திற்கு சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியர் பொறுப்பில் இருந்த சி.சுப்ரமணிய பாரதியார் வந்து மூன்று செய்யுள்களை வாழ்த்துப் பாடலாக அளித்தார்.

மகாமகோபாத்யாயர் வாழ்த்து

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

செம்பரிதி ஒளிபெற்றான் பைந்நறவு சுவைபெற்றுத் திகழ்ந்தது ஆங்கண்

உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று எவரேகொல் உவத்தல் செய்வார்?

கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநாதப்புலவன் குறைவில் சீர்த்தி

பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல் பேருவகை படைக்கின்றீரே?

உ.வே.சா கல்லூரியில்

அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி யறியாதார் இன்றெம்மை ஆள்வோ ரேனும்

பன்னியர்சீர் மகாமகோ பாத்தியாயப்பதவி பரிவின் ஈந்து

பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநாதன் தனக்குப் புகழ்செய் வாரேல்,

முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின் இவன்பெருமை மொழிய லாமோ?

நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடிஇன்பவகை நித்தம் துய்க்கும்

கதியறியோம் என்றுமனம் வருந்தற்க; குடந்தைநகர்க் கலைஞர் கோவே!

பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில்

துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்கு வாயே.

ரவீந்த்திரநாத தாகூர்

ஏப்ரல் 1, 1919-அன்று சென்னைக்கு வந்த தாகூர் உ.வே.சாமிநாதையர் இல்லத்திற்கே வந்து அவர் பதிப்பித்த நூல்களைப் பார்வையிட்டுப் பாராட்டி ஒரு கவிதை எழுதினார்.

தேசிகோத்தம தேமாகரிப்ரணாம்

(வங்காளி மூலம்)

ஆதிஜூகேர் ஆந்தாரே தாலபத்ரே ச்சிலோ

த்ராவிட தேசேர் புராதன கீர்த்தி,

ஸேஇ மஹத்நிதி, ஹே தேசிகோத்தம

தோமார் த்வாரா நா கி பாஹிர்ஹயில்?

ஸே காலேர் அகஸ்த்யேர் மதஏஸே தோமார்மாகே

ஸிம்ஹாஸனே ரேகே திலே நாகிதுமிஸ ஸம்மானே?

ஆர் பாஞ்ச மஹா காவ்யேர் மாஜ்ஜே

சிந்தாமணி, நூபுரகாதா, மணிமேகலா இத்யாதி

ஸம்சோதன கரே தாஹார் பத ஜூகலே

ஸமர்ப்பணகரிலே நா கிதுமி?

ஸங்கே ஸங்கே ஸங்ககால ஸாஹித்யகே

ஜ்யோத்ஸ்னாய் ஃபுடித நித்ய மல்லிகார்மத

சோபித கரிலே நாகிதுமி? தேமாகரிப்ரணாம்

(தமிழாக்கம் )

ஆதியுகத்து இருளில் பனையோலைச் சுவடிகளில்

இருந்தது திராவிட நாட்டின் புராதன கீர்த்தி -

அந்தப் பெருநிதி, பேராசானேஉன்னால் அன்றோ வெளிப்பட்டது?

அந்தக் காலத்து அகஸ்தியனைப் போல நீயன்றோ வந்து

உன் அன்னையினைச் சிம்மாசனத்தில் பெரு மதிப்புடன் வீற்றிருக்க வைத்தாய்?

அம்மட்டோ ஐம்பெருங் காப்பியங்களுள்

சிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை முதலானவற்றை

அந்த அன்னையின் இணையடியில்

சமர்ப்பித்தவன் நீ அன்றோ?

அவற்றுடன் சங்க இலக்கியத்தையும்

நிலவில் மலர்ந்த முல்லை என

ஒளிர வைத்தவனும் நீஅன்றோ? உன்னை வணங்கு கிறேன்."

(தமிழாக்கம் செய்தவர், த.நா.சேனாபதி)

உ.வே.சாமிநாதையர் வாழ்க்கை ஆண்டு வரிசை

பார்க்க உ.வே.சாமிநாதையர் வாழ்க்கை ஆண்டுவரிசை

இலக்கிய இடம்

உ.வே.சாமிநாதையர் தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, மழவை மகாலிங்கையர், சௌரிப்பெருமாள் அரங்கன், வித்வான் தாண்டவராய முதலியார், களத்தூர் வேதகிரி முதலியார், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், திருவேங்கட முதலியார், ராஜகோபாலப் பிள்ளை என அவருக்கு சமகாலத்திலும் முன்பும் பல பதிப்பாளர்கள் இருந்தாலும் தமிழ் பதிப்பியக்கத்தின் தலைமகனாக உ.வே.சாமிநாதையர் கருதப்படுகிறார். அவர் முதன்முதலாக பதிப்பித்த பல நூல்கள் தமிழிலக்கியத்திற்கும் தமிழ்பண்பாட்டுக்குமே அடிப்படையானவை என்பது முதன்மைக் காரணம்.

அத்துடன் உ.வே.சாமிநாதையர் முற்றிலும் அறிவியல் முறைமைப்படி பிழைநோக்கி, பாடவேறுபாட்டுப் பட்டியல்களுடன், விரிவான உரைகள் மற்றும் ஆய்வுக் குறிப்புகளுடன் தன்நூல்களை பதிப்பித்தார். தமிழின் முதன்மைநூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி ஆகியவற்றை அச்சேற்றியவர் என்பதனால் தமிழிலக்கியத்தின் மறுபிறப்புக்கு காரணமானவர்.

நவீனத் தமிழ் உரைநடை உருவாகி வந்த காலத்தில் எழுதிய உ.வே.சாமிநாதையரின் பங்களிப்பு வாழ்க்கை வரலாற்றெழுத்து மற்றும் நடைச்சித்திர எழுத்து ஆகியவற்றில் முன்னோடியானது. தமிழின் உரைநடையில் அவருடைய தமிழ்நடையின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. நவீனத்தமிழ் விமர்சகர்களான க.நா.சுப்ரமணியம், வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி ஆகியோர் அதை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நூல்கள்

சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டைமணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4

நூல் வெளியான ஆண்டு
நீலி இரட்டை மணிமாலை 1874
வேணுவனலிங்க விலாசச் சிறப்பு 1878
திருக்குடந்தைப் புராணம் 1883
மத்தியார்ச்சுன மான்மியம் 1885
சீவக சிந்தாமணி 1887
கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது 1888
திருமயிலைத் திரிபந்தாதி 1888
பத்துப் பாட்டு மூலமும் உரையும் 1889
தண்டபாணி விருத்தம் 1891
சிலப்பதிகாரம் 1892
திருப்பெருந்துறைப் புராணம் 1892
புறநானூறு 1894
புறப்பொருள் வெண்பா மாலை 1895
புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம் 1898
மணிமேகலை 1898
மணிமேகலைக் கதைச் சுருக்கம் 1898
ஐங்குறுநூறு 1903
சீகாழிக் கோவை 1903
திருவாவடுதுறைக் கோவை 1903
வீரவனப் புராணம் 1903
சூரைமாநகர்ப் புராணம் 1904
திருக்காளத்தி நாதருலா 1904
திருப்பூவண நாதருலா 1904
பதிற்றுப் பத்து 1904
திருவாரூர்த் தியாகராச லீலை 1905
திருவாரூருலா 1905
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 1906
தனியூர்ப் புராணம் 1907
தேவையுலா 1907
மண்ணிப்படிக்கரைப் புராணம் 1907
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் 1908
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு 1910
திருக்காளத்திப் புராணம் 1912
திருத்தணிகைத் திருவிருத்தம் 1914
பரிபாடல் 1918
உதயணன் சரித்திரச் சுருக்கம் 1924
பெருங்கதை 1924
நன்னூல் சங்கர நமச்சிவாயருரை 1925
நன்னூல் மயிலை நாதருரை 1925
சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் 1928
தக்கயாகப் பரணி 1930
தமிழ்விடு தூது 1930
பத்துப் பாட்டு மூலம் 1931
மதுரைச் சொக்கநாதர் உலா 1931
கடம்பர் கோயிலுலா 1932
களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை 1932
சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் 1932
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது 1932
பழனி பிள்ளைத் தமிழ் 1932
மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை 1932
வலிவல மும்மணிக் கோவை 1932
சங்கரலிங்க உலா 1933
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா 1933
பாசவதைப் பரணி 1933
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 1 1933
சங்கர நயினார் கோயிலந்தாதி 1934
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 2 1934
விளத்தொட்டிப் புராணம் 1934
ஆற்றூர்ப் புராணம் 1935
உதயண குமார காவியம் 1935
கலைசைக் கோவை 1935
திரு இலஞ்சி முருகன் உலா 1935
பழமலைக் கோவை 1935
பழனி இரட்டைமணி மாலை 1935
இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை 1936
கனம் கிருஷ்ணயைர் 1936
கோபால கிருஷ்ண பாரதியார் 1936
திருநீலகண்டனார் சரித்திரம் 1936
திருமயிலை யமக அந்தாதி 1936
திருவள்ளுவரும் திருக்குறளும் 1936
நான் கண்டதும் கேட்டதும் 1936
புதியதும் பழையதும் 1936
புறநானூறு மூலம் 1936
பெருங்கதை மூலம் 1936
மகாவைத்தியநாதையைர் 1936
மான் விடு தூது 1936
குறுந்தொகை 1937
சிராமலைக் கோவை 1937
தமிழ்நெறி விளக்கம் 1937
திருவாரூர்க் கோவை 1937
நல்லுரைக் கோவை பகுதி 1 1937
நல்லுரைக் கோவை பகுதி 2 1937
நினைவு மஞ்சரி - பகுதி 1 1937
அழகர் கிள்ளை விடு தூது 1938
சிவசிவ வெண்பா 1938
திருக்கழுக்குன்றத்துலா 1938
திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை 1938
திருமலையாண்டவர் குறவஞ்சி 1938
நல்லுரைக் கோவை பகுதி 3 1938
குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு 1939
தணிகாசல புராணம் 1939
நல்லுரைக் கோவை பகுதி 4 1939
புகையிலை விடு தூது 1939
மகரநெடுங் குழைக்காதர் பாமாலை 1939
கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1940
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 1940
வில்லைப் புராணம் 1940
செவ்வைச் சூடுவார் பாகவதம் 1941
நினைவு மஞ்சரி - பகுதி 2 1942
வித்துவான் தியாகராச செட்டியார் 1942

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:30:12 IST