under review

சித்தி ஜுனைதா பேகம்

From Tamil Wiki
சித்தி ஜுனைதா பேகம்

சித்தி ஜுனைதா பேகம் (ஆச்சிமா) (1917 - மார்ச் 19, 1998). தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். முதல் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்.

பிறப்பு

சித்தி ஜுனைதா பேகம் 1917-ல் நாகூர் தெற்குத் தெருவில் எம். ஷெரிப் பெய்க் மற்றும் முத்துகனிக்கும்பிறந்தார். முத்துகனி இளமையில் மறைய இற்றன்னை கதிஜா நாச்சியாரால் வளர்க்கப்பட்டார்.ஷெரிப் பெய்க் ஓர் ஆங்கிலேயக் கப்பலில் கேப்டனாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்தார்

சித்தி ஜுனைதா பேகம் கையெழுத்து

தனிவாழ்க்கை

சித்தி ஜுனைதா பேகம் பனிரெண்டு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டார். கணவர் பெயர் ஏ. ஃபகீர் மாலிமார். இவர் ஆச்சிமாவின் தந்தையாரின் இரண்டாவது மனைவியின் சகோரதரர். அவர் நாகூரிலேயே ஒரு மளிகை கடைவைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். மலேசியாவில் உள்ள பூலோசாம்பு என்ற தீவுக்கு சென்றார். ஓரிரு முறை வெளிநாட்டிலிருந்து திரும்பியும் வந்திருக்கிறார். அவர் அங்கேயே இரண்டாவது உலகப்போரின்போது பெரிபெரி என்ற நோய்வாய்ப் பட்டு இறந்து போனார்.சித்தி ஜுனைதாவுக்கு நான்கு பெண் குழந்தைகள். மூத்தவர் பொன்னாச்சிமா என்றழைக்கப்பட்ட சித்தி ஜபீரா. இரண்டாவது சித்தி ஹமீதா. மூன்றாவது சித்திமா என்றழைக்கப்படும் சித்தி மஹ்மூதா. நான்காவது சித்தி சாதுனா. குழந்தைகளை 11-வது வகுப்புவரை படிக்க வைப்பதற்காக, நாகூரில் இருந்த தனது வீட்டை விட்டுவிட்டு நாகப்பட்டினம் அங்கிருந்த பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளியில் படிக்கவைத்தார்.

சித்தீக் என்றால் அரபியில் உண்மையாளர் என்று பொருள். அதன் பெண்பால்தான் சித்தி. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள்களுக்கு இந்த பெயர் இருந்தது. சித்தி ஜைனப், சித்தி உம்மு குல்சும் என்று இரண்டு மகள்கள் அவருக்கு இருந்தனர் என்று சஹீஹில் புகாரி கூறுகிறது என ஆய்வாளர் நாகூர் ரூமி கூறுகிறார்[1].

சித்தி ஜுனைதா பேகத்தின் தாத்தா தென் தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் குழுத் தலைவராக இருந்த மு.யூ. நவாபு சாகிபு மரைக்காயர். சகோதரர் ஹுசைன் முனவர் பெய்க் தமிழில் சிறந்த சொற்பொழிவாளர்.இன்னொரு சகோதரர் முஜின் பெய்க் "பால்யன்" என்ற பத்திரிகையை காரைக்காலில் இருந்து நடத்தியவர். அவர்களின் குடும்பம் வண்ணக்களஞ்சியப் புலவர் (சையது ஹமீது இப்ராஹீம்) மரபைச் சேர்ந்தது. இறைநேசர் ஷாஹ் ஒலியுல்லாஹ் தெஹ்லவி அவர்களின் வழிவந்தவர் என்று தன்னை ஜுனைதா பேகம் கூறுகிறார் (1999-ல் முஸ்லிம் முரசு பொன்விழா மலர்)

இலக்கியவாழ்க்கை

சித்தி ஜுனைதா பேகம் எழுதிய முதல் சிறுகதை, 1929-ல் தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்தது. தன் 21-ம் வயதில் முதல் நாவலை எழுதினார். காதலா கடமையா என்னும் நாவலும் 1938-ல் தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்தது. அந்நாவலுக்கு உ.வே. சாமிநாதையர் முன்னுரை வழங்கியிருக்கிறார்."என் இளம் வயதிலிருந்தே சாதிசமய வேறுபாடுகள் என் உள்ளத்தில் இடம் பெற்றதில்லை. எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஓர் இனம் என்ற மனப்பான்மையே என் உள்ளத்தின் ஆணிவேர்" என்று தன் படைப்புக் கொள்கையை சித்தி ஜுனைதா பேகம் சொல்கிறார்[2].

மறைவு

1979-ல் சித்தி ஜுனைதா பேகமுக்கு மார்பகப் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. 1998 வரை வாழ்ந்த சித்தி ஜுனைதா தனது நோய்க்காக ஆங்கில மருத்துவத்தை நாடவில்லை. சித்த மருத்துவம் செய்து கொண்டார். புகழ்பெற்ற ஓய்வுபெற்ற நீதிபதி பலராமய்யா வைத்தியம் பார்த்தார். மார்ச் 19, 1998 அன்று இரவு 10 மணி அளவில் (ஹிஜ்ரி 1418, துல்காயிதா மாதம், பிறை 19ஃ20 ) சித்தி ஜுனைதா பேகம் மறைந்தார்.

நினைவுகள், ஆய்வுகள்

  • பேராசிரியர் நத்தர்ஷா சித்தி ஜுனைதா பேகம் பற்றி எம்.ஃபில். ஆய்வு செய்துள்ளார்
  • நாகூர் ரூமி விரிவான ஆய்வுக்குறிப்புடன் சித்தி ஜுனைதா பேகம் நூல்களை வெளியிட்டுள்ளார்

நூல்கள்

  • காதலா கடமையா - நாவல் (1938)
  • செண்பகவல்லிதேவி அல்லது தென்னாடு போந்த அப்பாஸிய குலத்தோன்றல் - நாவல் (1947)
  • வனஜா அல்லது கணவனின் கொடுமை
  • மகிழம்பூ -நாவல்
  • இஸ்லாமும் பெண்களும் - கட்டுரைத் தொகுப்பு (1995)
  • மலைநாட்டு மன்னன் - தொடர்கதை
  • ஹலிமா அல்லது கற்பின் மாண்பு
  • பெண் உள்ளம் அல்லது சுதந்திர உதயம்
  • திரு நாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு - வாழ்க்கை வரலாறு (1946)
  • காஜா ஹஸன் பசரீ (ரஹ்) - முஸ்லிம் பெருமக்கள் வரலாறு

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page