under review

சுந்தர ராமசாமி

From Tamil Wiki

To read the article in English: Sundara Ramaswamy. ‎

சுந்தர ராமசாமி - புகைப்படம் இளவேனில்
சுந்தர ராமசாமி, கமலா ராமசாமி

சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர். புனைவிலக்கியம், கவிதை, இலக்கிய விமர்சனம் ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். பசுவய்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதினார். காலச்சுவடு இலக்கிய இதழின் நிறுவனர். இலக்கிய ஆளுமையாகவும், அழகியல் சார்ந்த இலக்கியப்பார்வையை முன்வைக்கும் சிந்தனைமரபின் தனது காலகட்டத்தின் மையமாகவும் திகழ்ந்தார்.

சுந்தர ராமசாமி 1950 முதல் நாற்பதாண்டுக்காலம் சிறுபத்திரிகைகளை களமாகக் கொண்டு நிகழ்ந்த நவீனத்தமிழிலக்கியச் செயல்பாட்டின் வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் திகழ்ந்த ஆளுமை. மைய ஓட்டமாக இருந்த வணிக எழுத்து, அரசியல் எழுத்து இரண்டுக்கும் மாற்றாக தூய இலக்கியத்தை முன்வைத்தவர்.காகங்கள் என்னும் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். காலச்சுவடு என்னும் சிற்றிதழை தொடங்கி நடத்தினார். இலக்கிய உரையாடல் வழியாக அடுத்த தலைமுறையினருக்கு இலக்கியத்தின் அடிப்படைகளையும் நெறிகளையும் கற்பித்தார். தமிழ் நவீன இலக்கியத்தில் அழகியலை மையமாகக் கொண்டு இயங்கிய மரபில் க.நா.சுப்ரமணியத்திற்குப் பிறகு மையமான ஆளுமையாக திகழ்ந்தார். நவீனத்துவ அழகியல் கொண்ட யதார்த்தவாத எழுத்துக்களை உருவாக்கியவர். எள்ளலும் சொற்செட்டும் புதிய கவித்துவமும் கொண்ட மொழிநடை கொண்டவர். நவீனத்தமிழிலக்கியத்தில் சுந்தர ராமசாமி சிந்தனைப்பள்ளி என்று ஒரு மரபை அடையாளப்படுத்த முடியும்.

பிறப்பு, கல்வி

சுந்தர ராமசாமி (நன்றி காலச்சுவடு)

சுந்தர ராமசாமி அவருடைய தாயின் ஊரான நாகர்கோவில் அருகே ஒழுகினசேரி கிராமத்தில் தழுவிய மகாதேவர் கோவில் அக்ரஹாரத்தில் பிறந்தார். அன்று நாகர்கோயில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது.

சுந்தர ராமசாமி முறையான பள்ளிக்கல்வியை அடையவில்லை. அவர் ஆறாம் வகுப்பு படிக்கையில் மூட்டுவீக்க நோய்க்கு ஆளானார். அதன் விளைவான இதயநாளப் பலவீனம் வாழ்நாள் முழுக்க அவருக்கு இருந்தது. பல ஆண்டுகள் படுக்கையில் இருந்த அவரை அவர் அன்னையின் தோழியின் மைந்தரான மருத்துவர் ஒருவர் தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் வழியாக குணப்படுத்தினார். இச்சித்திரங்கள் அவருடைய ஜன்னல் போன்ற கதைகளில் உள்ளன.

சுந்தர ராமசாமி நாகர்கோயில் எஸ்.எல்.பி பள்ளியில் பள்ளியிறுதி வரை பயின்றார். அங்கே மலையாளமும் சம்ஸ்கிருதமும் கற்றார். தமிழை தன் அன்னையிடமிருந்துதான் கற்றுக்கொண்டார். தன் பதினெட்டு வயதுவரை தமிழில் தேர்ச்சி பெறவில்லை என்று பதிவுசெய்திருக்கிறார். பள்ளியில் பின்னாளில் கால்பந்து குழுவில் இடம்பெறும் அளவுக்கு உடல்நலம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சுந்தர ராமசாமி (நன்றி காலச்சுவடு)

சுந்தர ராமசாமியின் தந்தை சுந்தரம் ஐயர் பர்மா ஷெல் நிறுவனத்தின் முகவராக கோட்டயத்தில் வணிகம் புரிந்தார். எட்டுவயதுவரை சுந்தர ராமசாமி கோட்டயத்தில்தான் வளர்ந்தார்.1939-ல் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது சுந்தர ராமசாமியின் குடும்பம் நாகர்கோயிலுக்கு குடியேறியது. சுந்தர ராமசாமிக்கு கோட்டயத்துடன் அணுக்கம் எப்போதும் இருந்தது. ஜே.ஜே.சிலகுறிப்புகள், குழந்தைகள் ஆண்கள் பெண்கள் ஆகிய நாவல்களில் அவருடைய கோட்டயம் வாழ்க்கையின் சித்திரங்கள் உள்ளன. முதிர்ந்த வயதில் அவர் தான் வளர்ந்த கோட்டயம் இல்லத்தை தேடி கண்டுபிடித்தார். அது மலையாள மனோரமா இதழில் ஒரு செய்திக்கட்டுரையாக வெளிவந்தது.

சுந்தர ராமசாமியின் தந்தை நாகர்கோயிலில் துணிக்கடை ஒன்றை உறவினர் உதவியுடன் தொடங்கி நடத்தினார். அது பின்னர் சுதர்சன் துணிக்கடை என்னும் பெயர் பெற்றது. தந்தை இருக்கையிலேயே சுந்தர ராமசாமி அந்த துணிக்கடைக்குப் பொறுப்பேற்று வெற்றிகரமாக அதை நடத்தினார். நாகர்கோயில் கோட்டார்- பார்வதிபுரம் சாலையில் ராமவர்மபுரம் பகுதியில் சுந்தரம் ஐயர் கட்டிய இல்லத்தை விரிவு படுத்தி அங்கேயே இறுதிக்காலம் வரை வாழ்ந்தார்.

சுந்தர ராமசாமி இளமையிலேயே மணம்புரிந்துகொண்டார். அவர் மனைவி கமலா திருக்கணங்குடியைச் சேர்ந்தவர். அவருக்கு சௌந்தரா, தைலா, தங்கு என மூன்று மகள்களும் சுந்தரம் கண்ணன் என்னும் மகனும் பிறந்தனர். சௌந்தரா காலமாகிவிட்டார். சுந்தரம் கண்ணன் காலச்சுவடு இதழையும் பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். திருமதி கமலா ராமசாமி சுந்தர ராமசாமியின் மறைவுக்கு பின் அவரைப் பற்றி ஒரு நினைவுநூலையும் தன் அன்னை பற்றி இன்னொரு நினைவுநூலையும் எழுதியிருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

சுந்தர ராமசாமியின் அன்னை இளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டவர். தினமலர் நிறுவனரான ராமசுப்பையரின் தங்கை முறை கொண்டவர். இளமையில் அவர்கள் கையெழுத்து இதழ் நடத்தியிருக்கிறார்கள். அன்னையிடமிருந்து சுந்தர ராமசாமி இலக்கிய ஆர்வத்தை அடைந்தார். கடைசிவரை தன் இலக்கிய ஆர்வங்களை அன்னையுடன் பகிர்ந்துகொள்வதுண்டு என்று அவர் பதிவுசெய்திருக்கிறார்.

சுந்தர ராமசாமி (நன்றி காலச்சுவடு)

சுந்தர ராமசாமியின் இளமைக்காலத்தில் முக்கியமான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. அவருக்கு பதினாறு வயதிருக்கும்போது இந்தியா சுதந்திரம் பெற்றது. சுதந்திரப்போராட்டத்தை அவர் நேரில் பார்த்திருக்கிறார். நாகர்கோயிலின் சுதந்திரப்போராட்ட வீரர்களான எம்.வி.நாயிடு, தேரூர் சிவன்பிள்ளை போன்றவர்களை அவர் பார்த்திருக்கிறார். 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைந்தபோது இன்றைய குமரிமாவட்டத்தை தமிழ்நாட்டுடன் சேர்ப்பதற்காக நிகழ்ந்த போராட்டங்களை அவர் அணுக்கமாக பார்த்தார். அப்போராட்டத்தில் ஈடுபட்ட கொடிக்கால் செல்லப்பா [பின்னாளில் கொடிக்கால் அப்துல்லா] ஆகியோருடன் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது. இச்சித்திரங்கள் அவருடைய ஒரு புளியமரத்தின் கதை நாவலில் உள்ளன.

சுந்தர ராமசாமி 1950-ல் கிருஷ்ணன் நம்பி என்ற பெயரில் எழுதிய அழகிய நம்பியை சந்தித்தார். அவர்கள் நெருக்கமான நண்பர்களாக ஆனார்கள். இலக்கிய இரட்டையர் என்றே அழைக்கப்பட்டனர். 1974-ல் கிருஷ்ணன் நம்பி மறைவது வரை இருபத்தைந்து ஆண்டுக்காலம் அந்நட்பு நீடித்தது.

சுந்தர ராமசாமி (1991)
சுந்தர ராமசாமி மனைவி கமலாவுடன்

சுந்தர ராமசாமியின் இலக்கிய வாசிப்பு முதன்மையாக மலையாளத்திலேயே நிகழ்ந்தது. திருவனந்தபுரத்தில் இருந்து வெளியான கௌமுதி வார இதழ் அவருடைய பார்வையில் பெரும் செல்வாக்கு செலுத்தியது. கௌமுதி பாலகிருஷ்ணன் என அழைக்கப்பட்ட கே.பாலகிருஷ்ணன் நடையின் நேரடியான செல்வாக்கு சுந்தர ராமசாமியில் உண்டு. எம்.கோவிந்தன், சி. ஜே. தாமஸ் ஆகியோராலும் அவர் பெரிதும் கவரப்பட்டார்.

தமிழில் வல்லிக்கண்ணனின் ’கோயிலை பூட்டுங்கள்’ என்னும் துண்டுப்பிரசுரம் வழியாக தன் பதினேழாம் வயதில் நவீன இலக்கியம் நோக்கி ஈர்க்கப்பட்டார். வல்லிக்கண்ணன், தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோரின் எழுத்துக்கள் வழியாக புதுமைப்பித்தன் சுந்தர ராமசாமிக்கு அறிமுகமானார். கு. அழகிரிசாமியும் அக்காலகட்டத்தில் அறிமுகமானவர்தான். கு.அழகிரிசாமியுடன் தொடர்ச்சியான கடிதத் தொடர்பு சுந்தர ராமசாமிக்கு இருந்தது

இக்காலகட்டத்தில் டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி அமைப்பில் சுந்தர ராமசாமி அவ்வப்போது பங்கெடுத்தார். அ.சீனிவாசராகவன் ஆகியோருடன் குறுகியகாலம் உரையாடலில் இருந்திருக்கிறார். முதியவயதினராக இருந்த கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையுடனும் அறிமுகம் இருந்தது. அவரை ஒரு பேட்டி எடுத்திருக்கிறார்.

புதுமைப்பித்தன் நினைவுமலர்

புதுமைப்பித்தன் மீதான தீவிர ஈடுபாடு காரணமாக 1951-ல் தன் பத்தொன்பதாம் வயதில் புதுமைப்பித்தன் நினைவுமலர் ஒன்றை நாகர்கோயிலில் இருந்து வெளியிட்டார். பல முக்கியமான ஆளுமைகளிடமிருந்து கட்டுரைகள் வாங்கி அதில் வெளியிட்டார். அதில் சுந்தர ராமசாமி எழுதிய ' முதலும் முடிவும்' என்னும் கதையே அவருடைய முதல் படைப்பு.

சரஸ்வதி, சாந்தி

தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகக் கொண்டு 1954 முதல் 1956 வரை வெளிவந்த சாந்தி என்னும் இடதுசாரி இதழில் சுந்தர ராமசாமியின் தொடக்ககாலச் சிறுகதைகள் வெளிவந்தன. 1954-ம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. வ.விஜயபாஸ்கரனை ஆசிரியராகக் கொண்டு 1955 முதல் 1962 வரை வெளிவந்த சரஸ்வதியில் சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் தொடர்ச்சியாக எழுதினர். தமிழக முற்போக்கு இலக்கியத்தின் முகங்களாக அவர்கள் அறியப்பட்டார்கள். சரஸ்வதியில் சுந்தர ராமசாமியின் முதல் நாவலான ஒரு புளியமரத்தின் கதை தொடராக வெளிவந்தது. நாவல் முடிவுறும் முன்னரே சரஸ்வதி நின்றுவிடவே சில ஆண்டு இடைவெளிக்குப்பின் 1966-ல் அதை முழுமை செய்து நூலாக வெளியிட்டார். அதற்கு முன்னரே சென்னையில் கே.சி.எஸ்.பணிக்கர் தொடங்கிய கலைக்கிராமமான சோழமண்டலத்தில் நடைபெற்ற ஒரு கொலையை அடிப்படையாக்கி ஒரு நாவலை எழுதி முழுமை செய்யும் முன்னரே நிறைவுறாமல் கைப்பிரதியை அழித்துவிட்டிருந்தார்.

க.நா.சுப்ரமணியம், நவீனத்துவம்

சுந்தர ராமசாமி 1966-ல் கம்யூனிஸ்டுக் கட்சியின் மீது விமர்சனம் கொண்டவராக ஆனார். விமர்சகரும் இலக்கிய ஆளுமையுமான க.நா.சுப்ரமணியத்துடன் சுந்தர ராமசாமிக்கு முன்னரே தொடர்பு இருந்தாலும் இடதுசாரி இயக்கங்களுடன் கொண்ட விலக்கம் அவரை க.நா.சுப்ரமணியம் நோக்கி கொண்டுசென்றது. முற்போக்கு இலக்கியத்தில் இருந்து அவர் நவீனத்துவம் நோக்கிச் சென்றார். க.நா.சுப்ரமணியத்தின் ஒருநாள் என்னும் நாவல் அவருக்கு முன்னுதாரணமான ஒரு படைப்பாகத் தோன்றியது. க.நா.சுப்ரமணியம் நாகர்கோயிலுக்கு வந்து சுந்தர ராமசாமியுடனும் கிருஷ்ணன் நம்பியுடனும் பலநாட்கள் தங்கி உரையாடினார்.

இலக்கியம் என்பது ஆர்வமும் பயிற்சியும் கொண்ட சிறிய வட்டத்திற்குள்ளேயே எழுதி வாசிக்கப்பட முடியும் என்னும் எண்ணம் க.நா.சுப்ரமணியத்துக்கு இருந்தது. அன்று தமிழில் வணிக எழுத்து மிகப்பெரிய இயக்கமாக ஆகியிருந்தது. அதில் கல்கி, தேவன், கொத்தமங்கலம் சுப்பு போன்ற நட்சத்திரங்கள் உருவாகியிருந்தனர். இன்னொரு பக்கம் திராவிட இயக்கம் பரப்பியக்கமாக வேரூன்றிக்கொண்டிருந்தது. அவர்களும் இடதுசாரிகளும் பிரச்சார எழுத்தை உருவாக்கிக்கொண்டிருந்தனர். அந்தப் பெரும்போக்குகளுக்கு எதிராக சிற்றிதழ்கள் வழியாகச் செயல்படும் ஒரு மாற்று இலக்கிய இயக்கத்தை க.நா.சுப்ரமணியம் உருவாக்க முனைந்தார். அவரும் அவர் நண்பர் சி.சு.செல்லப்பாவும் சிலநூறு பிரதிகள் மட்டுமே அச்சிடப்படும் சிற்றிதழ் இயக்கத்தை தொடங்கினர். க.நா.சுப்ரமணியம் சூறாவளி, இலக்கியவட்டம் போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். சி.சு. செல்லப்பா தன் ஆசிரியப்பொறுப்பில் எழுத்து இதழை நடத்தினார். சிற்றிதழ் இயக்கத்தில் ஆர்வம் கொண்ட சுந்தர ராமசாமி இறுதிவரை சிற்றிதழ் இயக்கம் சார்ந்தவராகவே தன்னை நிறுத்திக்கொண்டார். அதன் முகமாகவே அறியப்பட்டார்.

நவீனக் கவிதை

எழுத்து இதழில் இயல்பாக புதுக்கவிதை இயக்கம் உருவாகி வந்தபோது சுந்தர ராமசாமி பசுவய்யா என்ற பெயரில் அதில் கவிதைகள் எழுதினார். 1959-ல் ’உன் கை நகம்’ என்னும் அவருடைய முதல் புதுக்கவிதை எழுத்து இதழில் வெளியானது. ஏற்கனவே எஸ்ரா பவுண்டின் புதுக்கவிதை இலக்கணத்தை அடியொற்றி க.நா.சுப்ரமணியம் தமிழில் புதுக்கவிதை எப்படி இருக்கவேண்டும் என ஒரு வரையறையை உருவாக்கியிருந்தார். சுப்ரமணிய பாரதியின் வசனகவிதைகளை தொடர்ந்து ந. பிச்சமூர்த்தி சில வசனகவிதைகளை எழுதியிருந்தார். ந.பிச்சமூர்த்தியின் பெட்டிக்கடை நாரணன் என்னும் கவிதை எழுத்து முதல் இதழில் வெளியானது சுந்தர ராமசாமியை புதுக்கவிதை எழுதும் தூண்டுதலைப் பெறச்செய்தது. எழுத்து மூன்றாம் இதழிலேயே அவருடைய கவிதை வெளியாகியது. சி.சு.செல்லப்பா, க.நா.சுப்ரமணியம் [மயன்] நகுலன், தி.சொ.வேணுகோபாலன், சி.மணி, நாரணோ ஜெயராமன், கே.கஸ்தூரிரங்கன்,இரா. மீனாட்சி, பிரமிள் ஆகியோர் தமிழ்ப் புதுக்கவிதையின் முன்னோடிகளாக அறியப்படுகிறார்கள். சி.சு.செல்லப்பா தொகுத்த இவர்களின் கவிதைகள் அடங்கிய புதுக்குரல்கள் என்னும் கவிதைத் தொகுதி முன்னோடியான ஒரு நூல். ( பார்க்க எழுத்து கவிதை இயக்கம் )

எழாண்டு இடைவெளி

1966 முதல் சுந்தர ராமசாமி ஏழாண்டு காலம் ஏதும் எழுதவில்லை. அவருடைய தந்தையின் மறைவும் அதையொட்டி தொழிலையும் குடும்பத்தையும் கவனிக்கவேண்டியிருந்ததும் காரணம். கூடவே அவர் தன்னுடைய அரசியல், அழகியல் பார்வைகளை மறுபரிசீலனை செய்துகொண்டும் இருந்தார். இக்காலகட்டத்தில்தான் அவருக்கு இலங்கையைச் சேர்ந்த கவிஞரான பிரமிள் அறிமுகமானார். அப்போது டெல்லியில் இருந்து எழுதிக்கொண்டிருந்த வெங்கட் சாமிநாதனும் நெருக்கமானவர் ஆனார். வெங்கட் சாமிநாதனின் முதல் கட்டுரைத் தொகுதிக்கு சுந்தர ராமசாமி முன்னுரை எழுதினார். ஓவியர் ஆதிமூலம், திரை இயக்குநர் ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் அறிமுகமானதும் இக்காலத்திலேயே.

க.நா.சுப்ரமணியம் டெல்லி சென்றுவிட சுந்தர ராமசாமி சென்னையில் வாழ்ந்த எம்.கோவிந்தனிடமும் நேரடியான தொடர்பை அடைந்தார். இவர்கள் அனைவரிடமும் தொடர்விவாதங்கள் நடந்தன. நீண்ட கடிதங்கள், நேர்ச்சந்திப்புகள் வழியாக அந்த விவாதங்கள் வளர்ந்தன. எம்.கோவிந்தன் வழியாக எம்.என்,ராய் சிந்தனைகளில் ஈடுபாடு உருவாகியது. பிரமிள் வழியாக ஜே.கிருஷ்ணமூர்த்தியின் எண்ணங்களை அறிந்துகொண்டார். சுந்தர ராமசாமியின் முக்கியமான பரிணாமக் காலகட்டம் இது.

1973-ல் வெளிவந்த சவால் என்னும் கவிதை சுந்தர ராமசாமி மௌனம் கலைத்து எழுதிய முதல் படைப்பு. இது ஞானரதம் என்னும் சிற்றிதழில் வெளிவந்தது. அதன்பின் அவர் எழுதிய சிறுகதைகள் பல்லக்குதூக்கிகள் என்னும் தொகுப்பாக வெளிவந்தன. முந்தைய சிறுகதைகளில் இருந்த புதுமைப்பித்தனின் சாயல் மறைந்துவிட்டிருந்தது.நடையில் இருந்த எள்ளல் மறைந்து சொற்சிக்கனம் உருவாகியிருந்தது. கதைகள் பெரிதும் உருவகத்தன்மை கொண்டவையாக இருந்தன. அதன்பின் வந்த பள்ளம் என்னும் சிறுகதைத் தொகுதியில் உருவகத்தன்மை கொண்ட கதைகளும் முந்தைய பாணியான யதார்த்த வாத அழகியல் கொண்ட கதைகளும் கலந்திருந்தன. இறுதிக்காலம் வரை இருவகையான சிறுகதைகளையும் எழுதிவந்த சுந்தர ராமசாமியின் இறுதிக்காலக் கதைகள் நேரடியான யதார்த்தவாதச் சித்தரிப்பும் சொற்சிக்கனம் கொண்ட இறுக்கமான நடையும் கொண்டவையாக அமைந்தன. அவருடைய இறுதி நாவலான குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998)லும் அதே நடையில் அமைந்திருந்தது

படைப்புலகம்

நாவல்கள்

சுந்தர ராமசாமி மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். அவருடைய முதல் நாவலாகிய ஒரு புளியமரத்தின் கதை 1966-ல் நூல் வடிவில் வெளிவந்தது. ஒரு புளியமரத்தை மையமாகக் கொண்டு நாகர்கோயில் என்னும் சிறுநகரில் மன்னராட்சிக் காலத்தில் இருந்து ஜனநாயகக் காலம் வரை வாழ்க்கைமாற்றம் நிகழ்வதைச் சித்தரித்த நாவல் இது.

சுந்தர ராமசாமியின் இரண்டாவது நாவலான ஜே.ஜே. சில குறிப்புகள் 1981-ல் வெளிவந்தது. இது மலையாள நாடக ஆசிரியர் சி.ஜெ.தாமஸின் செல்வாக்கு கொண்ட புனைவுக்கதாபாத்திரமான ஜே.ஜே [ஜோசப் ஜேம்ஸ்] என்னும் எழுத்தாளரின் வாழ்க்கையை அவர்மேல் ஆர்வம் கொண்ட இளம் எழுத்தாளராகிய பாலுவின் பார்வையில் முன்வைப்பது. ஜே.ஜே எழுதிய நாட்குறிப்புகள் இரண்டாம் பகுதியாக அமைந்துள்ளன. எம்.கோவிந்தனின் சாயல் இதில் எம்.கே.ஐயப்பன் என்னும் கதாபாத்திரத்திற்கு உள்ளது

வழக்கமான கதைசொல்லும் வடிவில் இருந்து வேறுபட்டிருந்தது ஜே.ஜே.சிலகுறிப்புகள். ஏற்கனவே நகுலனின் நினைவுப்பாதை நாட்குறிப்பு வடிவில் இருந்தாலும் பரவலாக இலக்கியச் சூழலில் வாசிக்கப்பட்ட நாவல் இதுவே. ஆகவே இலக்கியச் சூழலில் ஓர் அதிர்வலையை இது உருவாக்கியது. இதில் உணர்ச்சிகள் இல்லை, மாறாக மெல்லிய பகடியே உள்ளது. கதைமாந்தர்கள் முழுமையாக இல்லை, அவர்களின் கோட்டுச்சித்திரங்களே உள்ளன. பெரிதும் சிந்தனைகளை முன்வைப்பது இது.

சுந்தர ராமசாமியின் மூன்றாவது நாவல் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 1998-ல் வெளிவந்தது. பெரிதும் தன்வரலாற்றுத் தன்மை கொண்ட இந்நாவல் ஒரு குடும்பத்தின் பரிணாமத்தையும் அதில் கதைநாயகனின் வளர்ச்சியையும் சித்தரிக்கிறது.

சிறுகதைகள்

சுந்தர ராமசாமியின் முதல் சிறுகதைத் தொகுதி அக்கரைச் சீமையிலே 1959-ல் வெளிவந்தது. தொடர்ந்து 1964-ல் அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுதியான பிரசாதம் வெளிவந்தது. ஏழாண்டு இடைவெளிக்குப்பின் அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுதி பல்லக்கு தூக்கிகள் 19ந்ல் வெளிவந்தது. குறுநாவல் தொகுதி திரைகள் ஆயிரம் 1975-ல் வெளிவந்தது. 1981-ல் பள்ளம் என்னும் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. இறுதியாக மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் என்னும் சிறுகதைத் தொகுதி வெளியாகியது. அவருடைய முழுச்சிறுகதைகளும் சுந்தர ராமசாமி சிறுகதைகள் என்னும் பெருநூலாக வெளிவந்துள்ளன.

கவிதைகள்

சுந்தர ராமசாமி 1959-ல் எழுத்து இதழில் பசுவய்யா என்ற பேரில் உன் கை நகம் என்னும் கவிதையை எழுதினார். புதுக்கவிதை இயக்கம் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்டது அக்கவிதை. தொடர்ந்து பசுவய்யா என்ற பேரில் கவிதைகளை எழுதினார்

கட்டுரைகள்

சுந்தர ராமசாமியின் கட்டுரை நடை கௌமுதி பாலகிருஷ்ணன், எம்.கோவிந்தன் ஆகியோரின் செல்வாக்கு கொண்டது. அவருடைய தமிழ் முன்னோடிகளான புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமணியம் ஆகியோரின் கட்டுரைகளில் இருக்கும் கட்டுக்கோப்பின்மையோ தாவிச்செல்லும்போக்கோ அவற்றில் இல்லை. அவை கூரிய, ஒழுங்கான நடையில், உள்ளடங்கிய அங்கதத்துடன் எழுதப்பட்டவை. சுந்தர ராமசாமியின் இரண்டு கட்டுரைகள் வெளிவந்த காலத்தில் பெரிதும் பேசப்பட்டவை. 1963-ல் க.நா.சுப்ரமணியத்தின் கோரிக்கையின்படி சுந்தர ராமசாமி எழுதிய ’பாரதியும் நானும்’ என்னும் கட்டுரை நவீன உரைநடையாசிரியரான தன்னிடம் பாரதியின் செல்வாக்கு என பெரும்பாலும் ஏதுமில்லை என அறிவித்தது. அது அன்று அதிர்ச்சியலைகளை உருவாக்கியது. பி.ஜீவானந்தம் மறைந்தபோது எழுதிய 'காற்றில் கரைந்த பேரோசை’ என்னும் கட்டுரை ஆளுமைச்சித்தரிப்பின் முன்னுதாரணம் என்று கருதப்படுகிறது. பி.கே. பாலகிருஷ்ணன் ஆளுமைகளைப் பற்றி எழுதிய மாயாத்த சந்த்யகள் என்னும் நூலின் செல்வாக்கு இக்கட்டுரையில் உண்டு. 1975-ல் அகிலனுக்கு ஞானபீடப் பரிசு அளிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி எழுதிய 'போலி முகங்கள்' என்னும் கடுமையான கட்டுரையும் பெரிதும் விவாதிக்கப்பட்டது. இறுதிவரை சுந்தர ராமசாமி இம்மூன்று பாணிகளிலும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்

நினைவோடை நூல்கள்

சுந்தர ராமசாமி தன் இறுதிக்காலத்தில் பிறரிடம் உரையாடி பதிவுசெய்து நூலாக்கும் வடிவில் தன் இலக்கிய நண்பர்களைப் பற்றி சிறிய நூல்களை வெளியிட்டார். க.நா.சுப்ரமணியம், கிருஷ்ணன் நம்பி, ஜி. நாகராஜன், பிரமிள், சி.சு. செல்லப்பா, கு. அழகிரிசாமி, தி.ஜானகிராமன் ப. ஜீவானந்தம் ஆகியோரைப்பற்றிய தன் நினைவுகளையும் மதிப்பீடுகளையும் தொகுத்து சொல்லியிருக்கிறார்.இந்நூல்களை அரவிந்தன், பி.ஆர்.மகாதேவன் ஆகியோர் உருவாக்கினார்கள்

மொழியாக்கங்கள்

சுந்தர ராமசாமி மலையாளத்தில் இருந்து தகழி சிவசங்கரப்பிள்ளையின் 'தோட்டியின் மகன்’ நாவலை 1950-ல் மொழியாக்கம் செய்தார். அது சரஸ்வதி இதழில் தொடராக வெளியாகியது. ஆனால் அது 2000-த்திலேயே நூல் வடிவில் வெளிவந்தது. தகழி சிவசங்கரப்பிள்ளையின் செம்மீன் நாவல் அவர் மொழியாக்கத்தில் 1962-ல் வெளிவந்தது. வைக்கம் முகமது பஷீர், காரூர் நீலகண்டபிள்ளை, எம் கோவிந்தன் ஆகியோரின் சிறுகதைகளை தமிழாக்கம் செய்திருக்கிறார். சுந்தர ராமசாமி சீனமொழிக் கவிதைகளையும் அரபு மொழிக் கவிதைகளையும் ஆங்கிலம் வழியாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அவை தொலைவில் இருக்கும் கவிதைகள் என்ற பேரில் நூலாகியிருக்கின்றன

அரசியல்

சுந்தர ராமசாமி இளமையிலேயே தன் தாய்மாமன் பரந்தாமன் வழியாக கம்யூனிஸ்டுத் தலைவர் ப.ஜீவானந்தத்தின் நட்பைப் பெற்றார். அந்த அணுக்கம் அவரை கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளராக ஆக்கியது. அப்போது நாகர்கோயிலில் கட்சிப்பணி ஆற்றிக்கொண்டிருந்த ஸ்டீபன் ராஜ், பா.விசாலம், நட்டாலம் சோமன் நாயர், டி.மணி, சி.பி.இளங்கோ ஆகியோருக்கு அணுக்கமானவராக ஆனார். கம்யூனிஸ்டுக் கட்சி ஈடுபாடு அவரை முற்போக்கு இலக்கியம் நோக்கிக் கொண்டுசென்றது. சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜி. நாகராஜன் ஆகியோர் ஐம்பதுகளில் முற்போக்கு இலக்கியத்தின் முகங்களாக அறியப்பட்டார்கள்.

1956-ல் ஹங்கேரியில் சோவியத் யூனியனின் ஆதிக்கத்துக்கு எதிராக உருவான எழுச்சி சுந்தர ராமசாமியை கம்யூனிசம் பற்றி ஐயம் கொள்ளச் செய்தது. மாஸ்கோ விசாரணைகள் பற்றி ஆர்தர் கோஸ்லர் [Arthur Koestler] எழுதிய நடுப்பகலில் இருள் [Darkness at Noon] என்னும் நாவலும் ரிச்சர்ட் கிராஸ்மான் [Richard Crossman] தொகுக்க வெளிவந்த தோற்றுப்போன கடவுள் [The God that Failed] என்னும் நூலும் அவருடைய கம்யூனிச நம்பிக்கையை நிலைபெயரச் செய்தன. கம்யூனிஸ்டுக் கட்சியில் நிகழ்ந்த உடைவும், அதைத்தொடர்ந்து இரு பக்க தலைவர்களும் ஒருவரை ஒருவர் பழிசுமத்தி எழுதியவையும் அவரை கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்து விலகச் செய்தன. 1963-ல் ஜீவானந்தத்தின் மறைவு சுந்தர ராமசாமியை கம்யூனிஸ்டுக் கட்சியுடனான எல்லா தொடர்புகளையும் முறித்துக்கொள்ளச் செய்தது.

1960-ல் தொடங்கப்பட்டு 1966-ல் முழுமைசெய்யப்பட்டு வெளிவந்த ஒரு புளியமரத்தின் கதையின் முற்பகுதிக்கும் பிற்பகுதிக்கும் நடுவே இந்த மாற்றம் நிகழ்ந்தது. முற்பகுதியில் நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியை உற்சாகத்துடன் விவரிக்கும் ஆசிரியர் பிற்பகுதியில் ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் மீதான ஏமாற்றத்தை பதிவுசெய்து முடிக்கிறார். ஒரு புளிய மரத்தின் கதையின் முன்னுரையில் தன்னுடைய பார்வை மாற்றத்தைப் பற்றி பதிவுசெய்திருக்கிறார்.

சுந்தர ராமசாமி கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்த ஏகாதிபத்திய அணுகுமுறை மற்றும் இயந்திரத்தனமான இலக்கியப் பார்வை ஆகியவற்றை எதிர்த்தாலும் இறுதிவரை தன்னை ஒரு முற்போக்கு இலக்கியவாதியாகவே முன்வைத்தார். ப.ஜீவானந்தம் பற்றிய நினைவோடை நூலில் அதை அவர் ஜீவானந்தத்திடம் சொன்னதாகவும் பதிவுசெய்துள்ளார்.

அமைப்புப் பணிகள்

சுந்தர ராமசாமி தன் வீட்டு மாடியில் 1973 முதல் தொடர்ச்சியாக காகங்கள் என்ற பெயரில் ஒர் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்திவந்தார். ராஜமார்த்தாண்டன், எம். வேதசகாயகுமார், அ.கா. பெருமாள் போன்றவர்கள் அந்த களத்தில் இருந்து உருவானவர்கள்.

சுந்தர ராமசாமி பிற்காலத்தில் நாகர்கோயில் பாம்பன்விளை என்னும் இடத்தில் தொடர்ச்சியாக இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைத்தார்.

2000 ஆண்டில் சுந்தர ராமசாமியின் காலச்சுவடு இதழ் சார்பில் நவீனத் தமிழிலக்கியத்திற்கான தமிழ் இனி 2000 என்னும் பொதுமாநாடு சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்டது

இதழியல்

சுந்தர ராமசாமி சதங்கை, கொல்லிப்பாவை இனி முதலிய சிற்றிதழ்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். அவற்றுக்கு புரவலராகவும் திகழ்ந்தார்.

காலச்சுவடு
காலச்சுவடு முதல் இதழ்

சுந்தர ராமசாமி 1987-ல் காகங்கள் என்ற பெயரில் ஒரு சிற்றிதழ் தொடங்க எண்ணினார். பின்னர் அந்தப் பெயர் காலச்சுவடு என்று மாற்றப்பட்டது. காலச்சுவடு எட்டு இதழ்கள் வெளிவந்ததும் நிதி நெருக்கடியால் அதை நிறுத்த நேர்ந்தது. சந்தாதாரகளுக்காக இறுதி நான்கு இதழ்களும் ஒரே இதழாக, மலர் வடிவில் வெளியிடப்பட்டன.

1994-ல் சுந்தர ராமசாமியின் மகன் கண்ணன் சுந்தரம் காலச்சுவடு இதழை புதிய வடிவில் மீண்டும் பிரசுரிக்கத் தொடங்கினார். தொடக்கத்தில் மனுஷ்யபுத்திரன், லக்ஷ்மி மணிவண்ணன் ஆகியோர் அதன் ஆசிரியர் குழுவில் இருந்தனர். பின்னர் சிலகாலம் மனுஷ்யபுத்திரனை ஆசிரியராகக்கொண்டு அவ்விதழ் வெளிவந்தது. பின்னர் கண்ணன் சுந்தரம் அதன் ஆசிரியராக ஆனார். 1995-ல் காலச்சுவடு பிரசுரமும் தொடங்கப்பட்டது.

விவாதங்கள்

சுந்தர ராமசாமி சுதந்திரமாகக் கருத்துக்களை தெரிவிப்பவர் என்பதனால் தொடர்ந்து விவாதங்களில் இருந்துகொண்டிருந்தார்.

 • 1963-ல் க.நா.சுப்ரமணியம் நடத்திய இலக்கியவட்டம் இதழில் பாரதியும் நானும் என்னும் தலைப்பில் சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரையில் நவீன இலக்கியத்தில் பாரதியின் செல்வாக்கு குறைவுதான் என்றும், பாரதிக்கு நேர் எதிர்திசையில் சென்ற புதுமைப்பித்தனே நவீன இலக்கியத்தின் முன்னோடி என்றும் குறிப்பிட்டார். இது அன்றைய விமர்சகர்களின் கண்டனத்திற்கு ஆளாகியது
 • 1966-ல் ஒரு புளியமரத்தின் கதை நாவலின் முன்னுரையில் கம்யூனிச இயக்கத்தின் சரிவுகளையும், அதன்மேல் தான் கொண்ட அவநம்பிக்கையையும் பதிவுசெய்தார். அது முற்போக்கு விமர்சகர்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
 • 1975-ல் அகிலன் ஞானபீட விருதுபெற்றதைக் கண்டித்து அவ்விருது தமிழிலக்கியத்தை பிற மொழிகளில் சிறுமைப்படுத்திக் காட்டும் என்று எழுதினார். அதற்கு வல்லிக்கண்ணன், பூவை எஸ்.ஆறுமுகம் போன்றவர்கள் கடுமையான எதிர்வினைகளை பதிவுசெய்தனர்
 • 1979-ல் எம்.ஜி.ஆரை 'கோமாளி’ என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தமைக்காக உள்ளூர் அ.தி.மு.க கட்சியாளர்களால் மிரட்டப்பட்டார்.
 • 1992-ல் ஜெயலலிதா கும்பகோணம் மகாமகத்தில் நீராடியபோது நிகழ்ந்த உயிரிழப்புகளை படுகொலைகள் என விவரித்து கண்டித்திருந்தார். அக்கட்டுரையும் விவாதத்தை உருவாக்கியது (மகாமகப் படுகொலைகள். கணையாழி 1992)
 • 2004-ல் ஜெயேந்திர சரஸ்வதி கைதுசெய்யப்பட்டபோது ஜெயேந்திரரை கண்டித்து அவர் பாரபட்சமின்றி விசாரிக்கப்படவேண்டும் என்று காலச்சுவடு இதழில் எழுதிய கட்டுரை விவாதத்தை உருவாக்கியது
 • 2005-ல் சுந்தர ராமசாமி எழுதிய பிள்ளைகெடுத்தாள் விளை என்னும் கதை தலித்துகளுக்கு எதிரானது என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து, சுந்தர ராமசாமி தீண்டாமை ஒழிப்புச் சட்டப்படி கைதுசெய்யப்படவேண்டும் என்று கோரினர். ஆனால் தலித் இயக்கத்தவர்களான ரவிக்குமார் போன்றவர்கள் அந்த வாசிப்பு பிழையானது, சுந்தர ராமசாமி அவ்வாறு எழுதவில்லை என்று அவரை ஆதரித்தனர்.

விருதுகள்

தமிழிலக்கியத்தின் பெரும்படைப்பாளியாக திகழ்ந்தபோதிலும்கூட அவருடைய தீவிரமான கருத்துகள் உருவாக்கிய சர்ச்சைகளினால் சுந்தர ராமசாமி தமிழில் வழங்கப்படும் முக்கியமான விருதுகள் எதற்கும் பரிசீலிக்கப்பட்டதில்லை. அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள் மூன்று

 • ஆசான் நினைவு விருது [1988] - சென்னையில் செயல்படும் குமாரன் ஆசான் நினைவு பள்ளியின் ஆசான் அறக்கட்டளையால் வழங்கப்பட்டது. இவ்விருது ஒரே ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பின் செயல்படவில்லை
 • இயல்விருது [2001] - கனடாவில் செயல்படும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு யார்க் பல்கலையுடன் இணைந்து வழங்கும் விருது இது
 • கதா விருது [2004] - புதுடெல்லியில் இயங்கிய கதா அறக்கட்டளையால் வழங்கப்பட்ட விருது. இவ்விருது நான்கு முறை மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பின் செயல்படவில்லை.

சுந்தர ராமசாமி பெயரிலான விருதுகள்

தமிழ்க் கணிமைக்கான விருது

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும்.

இளம் படைப்பாளர் விருது

சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி விருது அளித்து வருகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள்.

மறைவு

சு.ரா.நினைவின் நதியில்-ஜெயமோகன்
சு,ரா நினைவுகள்- சி.மோகன்
சுரா குடும்பத்தாரின் நினைவுகள்

சுந்தர ராமசாமி அக்டோபர் 1, 2005 அன்று அமெரிக்காவில் மூச்சுக்குழல் அழற்சி [pulmonary fibrosis] நோயால் காலமானார். அவருடைய உடல் இந்தியா கொண்டுவரப்பட்டு நாகர்கோயிலில் எரியூட்டப்பட்டது. தமிழிலக்கியத்தின் எல்லா தரப்பினரும் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

நினைவுநூல்கள்

 • சுந்தர ராமசாமி நினைவின் நதியில் ஜெயமோகன்
 • சுந்தர ராமசாமி சில நினைவுகள்- சி.மோகன்
 • எங்கள் நினைவில் சு.ரா, குடும்பத்தினர் நினைவில்
 • நெஞ்சில் ஒளிரும் சுடர்- கமலா ராமசாமி
 • காலம்- சுந்தர ராமசாமி மலர் ( இணையநூலகம்)

படைப்புகள்

சிறுகதைகள் பட்டியல்
சிறுகதைகள் இதழ் வருடம்
1.முதலும் முடிவும் புதுமைப்பித்தன் மலர் 1951
2.தண்ணீர் சாந்தி 1953
3.அக்கரை சீமையிலே சாந்தி 1953
4.பொறுக்கி வர்க்கம் சாந்தி 1953
5.உணவும் உணர்வும் 1955
6.கோவில் காளையும் உழவு மாடும் சாந்தி 1955
7.கைக்குழந்தை சரஸ்வதி 1957
8.அகம் சரஸ்வதி 1957
9.அடைக்கலம் சரஸ்வதி 1958
10.செங்கமலமும் ஒரு சோப்பும் சரஸ்வதி 1958
11.பிரசாதம் சரஸ்வதி 1958
12.சன்னல் சரஸ்வதி 1958
13.லவ்வு சரஸ்வதி 1958
14.ஸ்டாம்பு ஆல்பம் சரஸ்வதி 1958
15.கிடாரி சரஸ்வதி ஆண்டு மலர் 1959
16.சீதைமார்க் சீயக்காய்த்தூள் தாமரை பொங்கல் மலர் 1959
17.ஒன்றும் புரியவில்லை கல்கி தீபாவளி மலர் 1960
18.வாழ்வும் வசந்தமும் நவசக்தி வார இதழ் 1960
19.ரயில் தண்டவாளத்தில் ஓடும் கல்கி தீபாவளி மலர் 1961
20.மெய்க்காதல் கல்கி 1961
21.மெய்+பொய்=மெய் எழுத்து 1962
22.எங்கள் டீச்சர் கல்கி தீபாவளி மலர் 1962
23.பக்த துளசி இலக்கிய வட்டம் 1964
24.ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு இலக்கிய வட்டம் 1964
25.தயக்கம் சுதேசமித்திரன் தீபாவளி மலர் 1964
26.லீலை கல்கி 1964
27.தற்கொலை கதிர் 1965
28.முட்டைக்காரி தீபம் 1965
29.திரைகள் ஆயிரம் தீபம் ஆண்டுமலர் 1966
30.இல்லாத ஒன்று கல்கி வெள்ளிவிழா ஆண்டுமலர் 1966
31.காலிப்பெட்டி உமா
32.அழைப்பு ஞானரதம் 1973
33.போதை சதங்கை 1973
34.பல்லக்குத் தூக்கிகள் ஞானரதம் 1973
35.வாசனை ஞானரதம் 1973
36.அலைகள் கொல்லிப்பாவை 1976
37.ரத்னாபாயின் ஆங்கிலம் அக் 1976
38.குரங்குகள் யாத்ரா 1978
39.ஓவியம் யாத்ரா 1979
40.பள்ளம் சுவடு 1979
41.கொந்தளிப்பு மீட்சி 1985
42.ஆத்மாராம் சோயித்ராம் 1985
43.மீறல் இனி 1986
44.இரண்டு முகங்கள் வீடு 1986
45.வழி கொல்லிப்பாவை 1986
46.கோலம் கொல்லிப்பாவை 1987
47.பக்கத்தில் வந்த அப்பா புதுயுகம் 1987
48.எதிர்கொள்ளல் காலச்சுவடு 1988
49.காணாமல் போனது காலச்சுவடு 1989
50.விகாசம் இந்தியா டுடே 1990
51.காகங்கள் காலச்சுவடு ஆண்டுமலர் 1991
52.மேல்பார்வை இந்திய டுடே இலக்கிய ஆண்டுமலர் 1994-1995
53.பட்டுவாடா காலச்சுவடு 1995
54.நாடார் சார் தினமணி பொங்கல் மலர் 1996
55.நெருக்கடி சதங்கை 1996
56.இருக்கைகள் காலச்சுவடு 1997
57.டால்ஸ்டாய் தாத்தாவின் கதை தினமணி தீபாவளி மலர் 1999
58.மயில் ஆனந்த விகடன் பவழவிழா மலர் 2002
59.பையை வைத்துவிட்டு போன மாமி 2003
60.தனுவும் நிஷாவும் காலம் 2004
61.களிப்பு 2004
62.நண்பர் ஜி.எம் காலச்சுவடு 2004
63.ஒரு ஸ்டோரியின் கதை காலச்சுவடு 2004
64.கூடி வந்த கணங்கள் 2004
65.கதவுகளும் ஜன்னல்களும் புதியபார்வை 2004
66.மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் 2004
67.அந்த ஐந்து நிமிடங்கள் 2004
68.ஈசல்கள் 2004
69.கிட்னி 2004
70.பிள்ளை கெடுத்தாள் விளை காலச்சுவடு 2005
71.கொசு, மூட்டை, பேன் புதியபார்வை 2005
72.ஜகதி காலம் 2005
நாவல்
சிறுகதை தொகுதிகள்
 • அக்கரை சீமையிலே
 • பிரசாதம்
 • திரைகள் ஆயிரம்
 • பல்லக்கு தூக்கிகள்
 • பள்ளம்
 • மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
 • சுந்தர ராமசாமி சிறுகதைகள் (முழுத்தொகுப்பு)
சுந்தர ராமசாமி, கமலா ராமசாமி நினைவில்
விமர்சனம்/கட்டுரைகள்
 • ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991)
 • ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004)
 • காற்றில் கரைந்த பேரோசை
 • விரிவும் ஆழமும் தேடி
 • தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000)
 • இறந்த காலம் பெற்ற உயிர்
 • இதம் தந்த வரிகள் (2002)
 • இவை என் உரைகள் (2003)
 • வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)
 • வாழ்க சந்தேகங்கள் (2004)
 • புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம் (2006)
 • புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு (2005)
 • மூன்று நாடகங்கள் (2006)
 • வாழும் கணங்கள் (2005)
கவிதை
 • 107 கவிதைகள்
 • சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு (2005)
மொழியாக்கப் படைப்புகள்
 • செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை (1962)
 • தோட்டியின் மகன் (நாவல்) - தகழி சங்கரப்பிள்ளை (2000)
 • தொலைவிலிருக்கும் கவிதைகள் (2004)
நினைவோடைகள்
 • க.நா.சுப்ரமண்யம் (2003)
 • சி.சு. செல்லப்பா (2003)
 • கிருஷ்ணன் நம்பி (2003)
 • ஜீவா (2003)
 • பிரமிள் (2005)
 • ஜி.நாகராஜன் (2006)
 • தி.ஜானகிராமன் (2006)
 • கு.அழகிரிசாமி

மொழியாக்கங்கள்

ஆங்கிலம்

சுந்தர ராம்சாமியின் சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட்டிருக்கின்றன.

 • Tale of a Tamarind Tree [Tr. S. Krishnan] Penguin India, New Delhi
 • JJ: Some Jottings [Tr A.R. Venkatachalapathy] Penguin India, New Delhi
 • Waves [Tr Lakshmi Holmstrom & Gomathi Narayanan] Penguin India, New Delhi
 • Children, Women, Men [Tr Lakshmi Holmstrom] Penguin India, New Delhi
 • Tamarind History [Tr Blake Wentworth] Penguin India, New Delhi
 • Our teacher [Tr Malathi Mathur] Katha Books
மலையாளம்
 • ஜே.ஜே.சிலகுறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை இரண்டு நூல்களும் ஆற்றூர் ரவிவர்மா மொழியாக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்தன.
கன்னடம்
 • ஒரு புளியமரத்தின் கதை ஹுனிசெ மரத கதெ (Huṇise marada kate: Kādambari) என்ற பெயரில் கே. நல்லதம்பி [Tr Nallatambi K] மொழியாக்கத்தில் வெளிவந்தது. Lankesh Prakashana
இந்தி
 • ஒரு புளியமரத்தின் கதை இம்லி புராண் (Imli Puran) என்ற பெயரில் மீனாக்ஷி புரி [Tr. Meenakshi Puri] என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. Harpercollins Publications
ஹீப்ரூ
 • ஒரு புளியமரத்தின் கதை ரோனித் ரிச்சி (Ronit Ricci) என்பவரால் ஹீப்ரூ மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. Hakibbutz Hameuchad Publishing House, Tel Aviv.

இணைப்புகள்✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:02 IST