under review

புதுக்குரல்கள்

From Tamil Wiki

புதுக்குரல்கள் (1962) சி.சு.செல்லப்பா தொகுத்த புதுக்கவிதைகளின் தொகுதி. தமிழில் தொகுக்கப்பட்ட முதல் புதுக்கவிதை தொகுதி இது. தமிழில் புதுக்கவிதைகள் நிலைகொள்வதற்கான அடித்தளம் அமைத்தது. 1973-ல் இதன் இரண்டாவது பதிப்பு வெளிச்சம் என்ற பெயரில் கல்லூரிகளுக்குப் பாடமாக அமைந்தது. அது புதுக்கவிதை இயக்கத்தை கல்வித்துறை ஏற்பு பெறச்செய்தது,

தொகுப்பு

எழுத்து இதழ் முதல் இதழிலேயே க.நா.சுப்ரமணியம் மயன் என்ற பெயரில் எழுதிய கவிதையை வெளியிட்டது. தொடர்ந்து பல இளம் கவிஞர்கள் எழுதினர். 1962-ல் எழுத்து இதழ் அதுவரையிலான 200 கவிதைகளில் இருந்து 63 கவிதைகளை செல்லப்பா தேர்ந்தெடுத்து புதுக்குரல்கள் என்னும் பெயரில் நூலாக்கினார்.ந.பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், சி.மணி உள்ளிட்ட பலரை கலந்தாலோசித்து இந்த தெரிவை அவர் நிகழ்ந்த்தினார். எழுத்து வெளியிட்டாக புதுக்குரல்கள் வெளியாகியது

24 கவிஞர்களின் 63 கவிதைகள் இத்தொகுதியில் இருந்தன. இவர்களில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், மயன், வல்லிக்கண்ணன் ஆகியோர் முன்னரே எழுதிக்கொண்டிருந்தவர்கள். மற்றவர்கள் எழுத்து இதழின் வழியாகக் கவிதையுலகில் நுழைந்தவர்கள். இத்தொகுதிக்கு சி.சு. செல்லப்பா 'நுழைவாசல்’ என்ற பெயரில் ஒரு விரிவான முன்னுரை எழுதினார். அதில் புதுக்கவிதையை அழகியல் ரீதியாக வரையறை செய்தார். அதன் மீதான விமர்சனங்களுக்கு பதில் உரைத்தார்.

கவிஞர்கள்

மறுபதிப்பு

புதுக்குரல்கள் விரிவான விமர்சனங்களைப் பெற்றது. புதுக்கவிதை மீதான எதிர்ப்புகள் அத்தொகுப்பில் குவிந்தன. ஆனால் அந்த விவாதங்கள் வழியாக புதுக்கவிதை குறித்த தெளிவு உருவானது. புதுக்குரல்களின் இரண்டாம்பதிப்பு 1973 ஜூலையில் வெளியாகியது. இதில் சுந்தர ராமசாமியின் 'மேஸ்திரிகள்’ உட்பட சில கவிதைகள் நீக்கப்பட்டிருந்தன. அவை கல்வித்துறையாளர்களை விமர்சனம் செய்பவை. அது செல்லப்பா மீது கண்டனத்தை உருவாக்கியது. ஆனால் செல்லப்பாவின் அம்முயற்சி வழியாக புதுக்கவிதை கல்வித்துறை ஏற்பை அடைந்தது

எதிர்வினை

புதுக்குரல்கள் நூலுக்கு எதிர்வினையாக வந்த நூல் என வானம்பாடி கவிதை இயக்கம் வெளியிட்ட வெளிச்சங்கள் என்னும் நூலைச் சொல்லலாம். கவிதையில் எழுத்து இயக்கம் முன்வைத்த அகவயப்பார்வை, சொற்சிக்கனம், மிகையுணர்ச்சி தவிர்த்தல் ஆகிய அனைத்துக்கும் நேர் எதிரான கவிதைகளின் தொகுப்பு அது. (பார்க்க வெளிச்சங்கள்)

இலக்கிய இடம்

புதுக்குரல்கள் தமிழில் தொகுக்கப்பட்ட முதல் புதுக்கவிதை தொகுதி. வெவ்வேறு வகையான கவிதைகளை தொகுத்தளித்ததன் வழியாக புதுக்கவிதை என்பது வெறும் வடிவச்சோதனை அல்ல, அது புதியவகையான எழுத்துமுறை, அதில் வெவ்வேறு வகையான வெளிப்பாடுகளுக்கு இடமுண்டு என அத்தொகுதி காட்டியது. எழுத்து கவிதை இயக்கம் தன் முகம் என காட்டியது இத்தொகுதியைத்தான். பின்னர் பல தொகுதிகள் இதேபோல வர இது முன்னுதாரணமாக ஆகியது

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:23 IST