under review

சி.சு. செல்லப்பா

From Tamil Wiki

To read the article in English: Si.Su. Chellappa. ‎

சி.சு.செல்லப்பா
சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன்
கி.வா.ஜ- செல்லப்பா
கி.வா.ஜ- செல்லப்பா
செல்லப்பா
செல்லப்பா அழகிரிசாமியுடன்
செல்லப்பா சிறுவனாக

சி.சு.செல்லப்பா (செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998) தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். அமெரிக்க புதுத்திறனாய்வு முறைப்படி இலக்கியப்பிரதியை நுணுகி ஆராயும் அணுகுமுறை கொண்ட விமர்சகர். தமிழில் இலக்கிய அலை ஒன்றை உருவாக்கிய எழுத்து சிற்றிதழின் நிறுவனர், ஆசிரியர். எழுத்து வெளியீடாக நூல்களை பிரசுரித்தவர். தமிழ்ப் புதுக்கவிதையின் உருவாக்கத்தில் எழுத்து இதழும் சி.சு.செல்லப்பாவின் கருத்துக்களும் காரணமாயின. காந்தியக் கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.

பிறப்பு, கல்வி

சி.சு.செல்லப்பா தேனி மாவட்டம் சின்னமனூரில் செப்டெம்பர் 29, 1912-ல் பிறந்தார். தந்தை சுப்ரமணிய ஐயர் அரசு அதிகாரி. தந்தையின் பணியிட மாற்றலுக்கேற்ப பாளையங்கோட்டை, தூத்துக்குடி, திண்டுக்கல், ஆகிய ஊர்களில் பள்ளிப் படிப்புகளை முடித்தார். மதுரைக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டார். ஆங்கிலேய அரசு அதிகாரியான தந்தை ஒரு தேசியவாதி. தந்தையிடமிருந்து தேசிய ஊக்கம் பெற்ற இவர் சிறு வயதிலேயே ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும் தேசியப் பாடல்களைப் பாடியிருக்கிறார். அப்போது நூறு தேசியப் பாடல்களுக்கு மேல் மனப்பாடம் செய்துவைத்திருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று சி. மோகன் குறிப்பிடுகிறார்.[1]

சி.சு.செல்லப்பா

தந்தையின் இடமாறுதல்களால் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார். இலக்கிய ஆர்வம் கொண்டவரான தாய்மாமாவிடமிருந்து அன்றைய நாவல்களையும் இதழ்களையும் படித்தார். மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தபோது காந்திய ஈடுபாடு உருவாகியது. 1931-ல் கல்லூரி நாட்களிலேயே சி.சு.செல்லப்பா உப்புசத்யாக்கிரகத்தில் பங்கு கொண்டு சிறை சென்றமையால் பி.ஏ.படிப்பை முடிக்கவில்லை. பின்னரும் பலமுறை முயன்றும்கூட பி.ஏ.படிப்பில் தேற இயலவில்லை. அவ்வனுபவங்களை சுதந்திர தாகம் நாவலில் எழுதியிருக்கிறார்.

தனிவாழ்க்கை

சி.சு.செல்லப்பா 1937-ல் மீனாட்சி அம்மாளை மணந்துகொண்டார். அவர்களுக்கு ஒரே மகன், சி.மணி. அவர் வங்கி ஊழியராக இருந்தார். செல்லப்பா காகிதத்தில் பூக்கள், பொம்மைகள் செய்வதில் ஆர்வம் கொண்டவர். கையால் காகிதம் செய்வது, கதர் நூற்பது, காகிதப்பொம்மைகள் செய்து விற்பது போன்ற கைத்தொழில்களை சி.சு.செல்லப்பா செய்துவந்தார் என வல்லிக்கண்ணன் குறிப்பிடுகிறார்.[2]

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா என்பதன் சுருக்கம் சி.சு.செல்லப்பா. சங்கு சுப்ரமணியம் நடத்திவந்த சுதந்திரச் சங்கு இதழில் கட்டுரைகள் மற்றும் செய்திக்குறிப்புகளை எழுதினார். 'சுதந்திரச் சங்கு’ வாரப் பதிப்பில் இவருடைய முதல் சிறுகதை 'மார்கழி மலர்’ பிரசுரமானது. கும்பகோணத்தில் நிகழ்ந்த மகாமகத்திற்குச் சென்றவர் அங்கே மௌனி, கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி ஆகியோரை அறிமுகம் செய்துகொண்டார். பி.எஸ். ராமையாவுக்கு நெருக்கமானவரானார்.

சிறுகதைகள்

மணிக்கொடி இதழின் இரண்டாம் கட்டத்தை பி.எஸ்.ராமையா முழுக்கமுழுக்கச் சிறுகதைக்காக நடத்தியபோது வெளிவந்த முதல் இதழில் 'சரஸாவின் பொம்மை’ என்னும் சிறுகதை வெளிவந்து சி.சு.செல்லப்பாவை சிறந்த எழுத்தாளராக அறிமுகம் செய்தது. மணிக்கொடி ஆசிரியர்களில் ஒருவராக அறியப்படலானார். 'சரஸாவின் பொம்மை’ (கலைமகள் பிரசுரம்), 'மணல் வீடு’ (ஜோதி நிலையம்) என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் 'எழுத்து’ இதழ் வெளிவருவதற்கு முன்னரே வெளிவந்திருக்கின்றன.

சி.சு.செல்லப்பா
நாவலாசிரியர்

சி.சு.செல்லப்பாவின் புகழ்பெற்ற நாவலாகிய வாடிவாசல் 1947-ல் எழுதப்பட்டது. ஜல்லிக்கட்டை களமாக கொண்ட இந்நாவலை எழுதுவதற்காக ஜல்லிக்கட்டை பதிவு செய்யும் நோக்குடன் ஒரு காமிரா வாங்கி புகைப்படக்கலையை பழகி ஜல்லிக்கட்டை புகைப்படங்கள் எடுத்தார். ஜீவனாம்சம் என்னும் அவருடைய நாவல் 1960-ல் எழுத்து இதழில் தொடராக வெளிவந்தது. நனவோடை முறையில் அமைந்த நாவல் இது. தன் இறுதிக்காலத்தில் பல ஆண்டுகள் முயன்று சுதந்திரதாகம் என்னும் பெருநாவலை எழுதி முடித்தார். அவருடைய மறைவுக்குப்பின் அதற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

கவிஞர்

சி.சு.செல்லப்பா வசன கவிதை இயக்கத்தில் நம்பிக்கை கொண்டவர். க.நா.சுப்ரமணியம் முன்வைத்த புதுக்கவிதை குறித்த கருத்துக்களை ஏற்றவர். எழுத்து இதழில் ந. பிச்சமூர்த்தி எழுதிய பெட்டிக்கடை நாரணன் என்னும் வசனகவிதை முதல் இதழில் வெளியானது. தொடர்ந்து சி.மணி, நகுலன், பசுவய்யா (சுந்தர ராமசாமி), பிரமிள் உள்ளிட்ட பலர் அதில் புதுக்கவிதைகள் எழுதினர். எழுத்து புதுக்கவிதையை ஓர் இயக்கமாக ஆக்கியது. சி.சு.செல்லப்பாவும் புதுக்கவிதைகள் எழுதினார். அவை இரு தொகுதிகளாக வெளிவந்தன. ஆனால் அவருடைய கவிதைகள் கவித்துவத்தன்மை அற்றவை, வெறும் வடிவச்சோதனைகள். கவிஞராக அவரை விமர்சகர் கருத்தில் கொள்வதில்லை. (பார்க்க எழுத்து கவிதை இயக்கம்)

நாடகம்

சி.சு.செல்லப்பா எழுதிய முறைப்பெண் என்னும் நாடகம் புகழ்பெற்றது. யதார்த்தநாடகமான இது டெல்லி பெண்ணேஸ்வரன் குழுவினரால் மேடையில் நடிக்கப்பட்டது. செல்லப்பா ஐந்து நாடகங்களை எழுதியிருக்கிறார்.

சி.சு.செல்லப்பா- வெங்கட் சாமிநாதன்
விமர்சனம்

மணிக்கொடி நின்றபின் சி.சு.செல்லப்பா சிலகாலம் இலக்கியச் செயல்பாடுகளில் இருந்து அகன்றிருந்தார். மணிக்கொடி எழுத்தாளர்கள் ஒருங்கு கூடிய தேனீ, கலாமோகினி, கலைமகள் உள்ளிட்ட எந்த இதழிலும் செல்லப்பா பெரிதாக தொடர்பு கொள்ளவில்லை. அக்காலகட்டத்தில் அவருடைய கவனம் இலக்கிய விமர்சனம் மீது திரும்பியது. புதுத் திறனாய்வாளர்கள் (New Critics[3]) என அழைக்கப்பட்ட அமெரிக்க வடிவவியல் திறனாய்வாளர்கள் அவரைக் கவர்ந்தனர்.

1955-ல் சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் க.நா.சுப்ரமணியமும் சி.சு.செல்லப்பாவும் 'சிறுகதையில் தேக்கமா-வளப்பமா?’ என்னும் தலைப்பில் எழுதினர். மணிக்கொடி உருவாக்கிய சிறுகதை அலையில் தேக்கம் உருவாகியிருப்பதாக அவர்கள் சொன்னதை எதிர்த்து ஆர்வியும் அகிலனும் எழுதினர். அவர்களுக்குப் பதிலாக சி.சு.செல்லப்பா சிறுகதையின் வடிவம் பற்றி எழுதினார். 'நல்ல சிறுகதை எப்படி இருக்கும்?’ என்னும் தலைப்பில் தொடர்கட்டுரை எழுதினார். கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா சிறுகதைகளை முன்னுதாரணமாக வைத்து அவர் அக்கட்டுரையை எழுதினார்.

சி.சு.செல்லப்பா

செல்லப்பா படைப்புகளை கூர்ந்து ஆராய்ந்து ஒவ்வொரு கூறுகளாக எடுத்து விவாதித்து ஆதாரம் காட்டி எழுதும் அமெரிக்க விமர்சனமுறையை மேற்கொண்டார். க.நா.சுப்ரமணியத்தின் வழி என்பது இலக்கியப் பரிந்துரை, பட்டியலிடுவது மட்டும்தான். அதை சி.சு.செல்லப்பா ஏற்கவில்லை. திறனாய்வு என்பது தனிமனிதனின் அபிப்பிராயங்கள் என்ற எல்லையை மீறி, பொதுமைக்கு வந்தாக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துப் பகுப்புமுறைத் திறனாய்வு (இதனை 'அலசல் முறை’ என்று குறிப்பிடுவார் செல்லப்பா) என்பதை முதன்முதலில் வலியுறுத்தியவர் சி.சு.செல்லப்பா. சி.சு.செல்லப்பாவுக்கு ஈடாகச் சொல்லக்கூடிய வடிவநோக்குத் திறனாய்வாளர்கள் இன்றுவரை இல்லை என்று சொல்லலாம்." என்று விமர்சகர் க.பூரணசந்திரன் கருதுகிறார்.[4]

இதழியல்

1937-ல் இதழாளராகும் நோக்கத்துடன் சென்னைக்கு வந்த சி.சு.செல்லப்பா பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்து வேலையை இழக்கும்போது வத்தலக்குண்டு சென்றார். மணிக்கொடி, பாரததேவி இதழ்களில் வேலைபார்த்தார். 1947 முதல் 1953 வரை 'தினமணி கதிர்’-ல் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

எழுத்து

இக்காலகட்டத்தில் க.நா.சுப்ரமணியத்துடன் அணுக்கம் ஏற்பட்டது. க.நா.சுப்ரமணியம் 1945 முதல் 1947 வரை நடத்திய சந்திரோதயம் சிற்றிதழில் இணைந்து செயல்பட்டார். முன்னர் இருந்த இதழ்கள் அன்றிருந்த அச்சு-வினியோக முறையால் குறைவான பிரதிகள் அச்சிடப்பட்டவையே ஒழிய அவை தொடர்ந்து விற்பனையைப் பெருக்கவே முயன்றன. எழுத்து தன்னை சிற்றிதழ் என அறிவித்துக்கொண்ட இதழ். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பிரதிகளை அச்சிடுவதில்லை, வாசகர்களை கவரும்படி எதையும் வெளியிடுவதில்லை, தீவிர இலக்கியத்திற்கே இடம் என தெரிவித்தபடி வெளிவந்தது. 1959 முதல் 1970 வரை மொத்தம் 119 இதழ்களை சி.சு.செல்லப்பா வெளியிட்டார். 1968-ல் 112-வது இதழ் வரை எழுத்து மாத இதழாக வெளிவந்தது. பின்னர் காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119-வது இதழுடன் எழுத்து நிறுத்தப்பட்டது. (பார்க்க எழுத்து )

சி.சு.செல்லப்பா- மனைவி
சி.சு.செல்லப்பா

எழுத்து இதழில் சி.சு.செல்லப்பா இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதினார். இலக்கிய விவாதங்களுக்காகவே எழுத்து தொடங்கப்பட்டது. ஆனால் முதல் இதழில் ந.பிச்சமூர்த்தியின் பெட்டிக்கடை நாரணன் என்னும் வசன கவிதை பிரசுரமாகியது. அது ஒரு தொடக்கமாக அமையவே தொடர்ச்சியாக புதுக்கவிதைகள் வெளியாயின. புதுக்கவிதை விவாதங்கள் நிகழ்ந்தன. எழுத்து இன்று தமிழில் நவீன கவிதைகளை உருவாக்கிய இதழாக அறியப்படுகிறது.

பார்வை

எழுத்து இதழ் நின்றபின் 1974-ல் செல்லப்பா பார்வை என்னும் சிற்றிதழை முழுக்கமுழுக்க இலக்கிய விமர்சனத்திற்காகவே நடத்தினார். ஆனால் மூன்று இதழ்களுடன் அது நின்றுவிட்டது.

சுவை

சி.சு.செல்லப்பா 1983-ல் சுவை என்னும் சிற்றிதழை தொடங்கினார். அதுவும் மூன்று இதழ்கள் மட்டுமே வெளிவந்தது.

வெளியீட்டாளர்

சி.சு.செல்லப்பா எழுத்து வெளியீடாக தன் படைப்புக்களை தானே வெளியிட்டார். 1970-ல் எழுத்து இதழ் நின்ற பின்னரும் 1977 வரை எழுத்து பிரசுரம் நீடித்தது. 56 நூல்களை எழுத்து பிரசுரம் வெளியிட்டது. அவற்றை அவரே ஊர் தோறும் கொண்டுசென்று விற்றார். அதன்பொருட்டு கல்லூரிகளுக்குச் சென்றார். வெவ்வேறு நினைவுக் குறிப்புகளில் அழுக்கான வேட்டி சட்டையுடன் நூல்களை விற்கும்பொருட்டு கல்லூரிக்கு வரும் சி.சு.செல்லப்பாவின் சித்திரம் பதிவாகியுள்ளது. சி.மோகன் எழுதியுள்ளார். பி.ஆர். ராஜம் ஐயர் எழுதிய Rambles In Vedanta[5] ஆங்கில நூலையும் சி.சு.செல்லப்பா வெளியிட்டிருக்கிறார்.

செயல்பாட்டாளர்

சி.சு.செல்லப்பா இலக்கியக் களச்செயல்பாட்டாளராகவே திகழ்ந்தார். நூல்களை வெளியிடுவது, ஊர் ஊராகச் சென்று விற்பது ஆகியவற்றைச் செய்தார். பி.ஆர்.ராஜம் ஐயரின் பெருமையை அவர் பிறந்த வத்தலக்குண்டு ஊரார் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் வத்தலக்குண்டு ஊரில் ஒரு விழா நடத்தினார். அதற்கு அன்றைய புகழ்பெற்ற ஆளுமைகளான நா. பார்த்தசாரதி, எஸ்.வி.சகஸ்ரநாமம் ஆகியோரை அழைத்துவந்து பேசவைத்தார். ராஜம் ஐயரின் வீட்டில் ஒரு நினைவுப்பலகை வைக்கச் செய்தார்.

மறைவு

சி.சு.செல்லப்பா டிசம்பர் 18, 1998 அன்று மறைந்தார்.

விருதுகள்

சுதந்திர தாகம் நாவலுக்கு 2001-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.

நினைவுநூல்கள், வாழ்க்கை வரலாறுகள்

 • எழுத்து சி.சு.செல்லப்பா - வல்லிக்கண்ணன் (தொகைநூல்)
 • சி.சு.செல்லப்பா - நினைவோடை, சுந்தர ராமசாமி
 • சி.சு.செல்லப்பா - திருப்பூர் கிருஷ்ணன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
 • சாதனைச் செம்மல் சி.சு.செல்லப்பா - வி.ராமமூர்த்தி

இலக்கிய இடம்

தமிழிலக்கிய மரபில் நவீன் இலக்கிய முன்னோடி என்னும் இடம் சி.சு.செல்லப்பாவுக்கு அளிக்கப்படுகிறது. நான்கு களங்களில் அவர் முன்னோடி என கருதப்படுகிறார்.

தெளிவான கோட்பாட்டுப் புரிதலுடன் சிற்றிதழ் என்னும் இயக்கத்தை தொடங்கி வைத்தவர் சி.சு.செல்லப்பா. அவருடைய எழுத்து இதழ் தன் பிரதி எண்ணிக்கையை முன்னரே முடிவுசெய்துகொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதழ். அதன் அட்டையிலேயே வாசிப்புக்கான தலைப்புகள் தொடங்கப்பட்டிருக்கும். தன் வாசகர்களையும் அவ்விதழ் வரையறை செய்துகொண்டது. பின்னாளில் உருவான ஏராளமான சிற்றிதழ்கள் எழுத்து இதழை முன்மாதிரியாகக் கொண்டவையே.

செல்லப்பா

சி.சு.செல்லப்பா ஓர் இலக்கியச் செயல்பாட்டாளராகவும் முக்கியமானவர். செல்லப்பா செயல்படத் தொடங்கிய காலகட்டத்தில் வணிக எழுத்தும், அரசியல் சார்ந்த எழுத்தும் உச்சகட்ட பரவலை அடைந்திருந்தன. நவீன இலக்கியத்தை வாசிக்க வாசகர்கள் அனேகமாக இல்லை. புதுமைப்பித்தன், மௌனி போன்ற முன்னோடிகளே மறக்கப்பட்டுவிட்டிருந்தனர். கல்வித்துறையிலும் நவீன இலக்கியத்திற்கு இடமில்லாமல் இருந்தது. சி.சு.செல்லப்பா அதை எவ்வகையிலும் பொருட்படுத்தாமல் நவீன இலக்கியத்திற்கான தன் போராட்டத்தை தொடர்ந்தார். நூல்களை பதிப்பித்தார். கல்லூரிகள் தோறும் தானே சுமந்து சென்று விற்றார். அவர் நடத்திய எழுத்து இதழில் புதிய கவிஞர்களை அறிமுகம் செய்தார். ஓர் இலக்கிய இயக்கமாகவே எழுத்து இதழை மாற்றினார்.

சுந்தர ராமசாமி நினைவோடை

இலக்கிய விமர்சகராக தமிழில் பிரதிநுண்ணோக்கு விமர்சனத்தை உருவாக்கியவர் சி.சு.செல்லப்பா. அலசல் விமர்சனம் என அவர் அதை அழைத்தார். அமெரிக்க புதுத்திறனாய்வாளர்களை அதற்கு முன்னுதாரணமாகக் கொண்டார். செவ்வியல், கற்பனாவாதம் போன்ற அழகியல் இயக்கங்களை விரிவாக அறிமுகம் செய்தார். கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, பி.ஆர்.ராஜம் ஐயர், லா.ச.ராமாமிர்தம், மௌனி ஆகிய இலக்கிய முன்னோடிகளை பற்றி விரிவாக எழுதி நிலைநாட்டினார்

செல்லப்பா

சிறுகதை ஆசிரியராக கச்சிதமான சிறுகதைவடிவம் கொண்ட கதைகளை சி.சு. செல்லப்பா எழுதினார். அவை கவித்துவம் அல்லது உணர்ச்சிகர ஆழம் அரிதாகவே அமையப்பெற்றவை என்பதனால் செல்லப்பா சிறந்த சிறுகதையாசிரியராகக் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் சிறுகதை வடிவத்திற்கு உதாரணமாக அவருடைய கதைகள் சுட்டிக்காட்டப்படுவதுண்டு.

நூல்கள்

சி. சு. செல்லப்பா 29 நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

சிறுகதைத் தொகுதிகள்
 • சரஸாவின் பொம்மை
 • மணல் வீடு
 • சி.சு.செல்லப்பாவின் கதைகள் 7 தொகுதிகள்
நாவல்
நாடகம்
 • முறைப்பெண்
 • கவிதைத் தொகுதி
 • மாற்று இதயம்
 • குறுங்காப்பியம்
 • இன்று நீ இருந்தால்
கட்டுரைகள், விமர்சனம்
 • காற்று உள்ளபோதே
 • எல்லாம் தெரியும்
 • ஏரிக்கரை
 • குறித்த நேரத்தில்
 • தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது
 • தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள்
 • ஊதுவத்திப்புல்
 • பி.எஸ்.இராமையாவின் சிறுகதைப் பாணி
 • எனது சிறுகதைப் பாணி
 • பி.எஸ்.ராமையாவின் கதைக் களம்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:33:35 IST