under review

கு.ப. ராஜகோபாலன்

From Tamil Wiki
கு.ப. ராஜகோபாலன்

கு.ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) தமிழ் எழுத்தாளர். தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதியுள்ளார். மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆண் பெண் உறவை மையமாக்கிய கதைகளை சொற்சிக்கனத்துடனும் வடிவ ஒருமையுடனும் எழுதியவர் என விமர்சகர்களால் கருதப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

கு.ப.ரா. என்று அறியப்பட்ட கு.ப. ராஜகோபாலன் (கும்பகோணம் பட்டாபிராமையர் ராஜகோபாலன்) பட்டாபிராமையர், ஜானகி அம்மாள் தம்பதிக்கு கும்பகோணத்தில் ஜனவரி 1902-ல் பிறந்தார். இவர் தங்கை கு.ப.சேது அம்மாள் அறியப்பட்ட ஒரு எழுத்தாளர். ராஜகோபாலனுக்கு ஆறு வயதான போது அவர்களது குடும்பம் திருச்சிக்கு குடிபெயர்ந்தது. அங்குள்ள திருச்சி கொண்டையம்பேட்டைப் பள்ளியில் ஆரம்ப கல்வியும், தேசியக் கல்லூரியில் இடைநிலை (இண்டர்மீடியட்) கல்வியும் பெற்றார். தந்தையார் மறையவே குடும்பம் மீண்டும் கும்பகோணத்துக்கு குடிபெயர்ந்தது.

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சம்ஸ்கிருதத்தைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றார். இந்த காலகட்டத்தில் அவர் ஆங்கிலத்தில் கீட்ஸ், ஷெல்லி, ஷேக்ஸ்பியர் முதலானவர்களின் கவிதைகளையும், வடமொழியில் வால்மீகி, காளிதாசர், பவபூதி முதலியவர்களின் படைப்புகளையும், வங்காளத்தில் தாகூர், பங்கிம் சந்திரர் முதலானோரின் நூல்களையும் கற்றார். ரவீந்திரநாத் தாகூர், கு.ப.ரா. படித்த கல்லூரிக்கு வருகை புரிந்த போது அவருடைய கவிதைகள் அறிமுகமாயின. வங்க மொழியின் மேல் பற்று கொண்டு அதைப் பயின்றார். வங்கமொழிப் பயிற்சியால் இந்தியையும் கற்றார்.

பாரதமணியில் குபரா

தனிவாழ்க்கை

கு.ப.ராஜகோபாலன் 1926-ல் தனது 24-ம் வயதில் அம்மணி அம்மாளை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகன், பெயர் பட்டாபிராமன்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணக்கராகப் பணியாற்றினார். 1934-ல் தன் 32-ம் வயதில் கண்புரை நோயின் காரணமாக கண் பார்வை குன்றியதால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.ஆர். மஹாலிங்கம், என்ற கண் மருத்துவர் செய்த சிகிச்சையால், ஒரளவு கண் பார்வை மீண்டது. 1936-ல் சென்னைக்கு சென்று வ.ராமசாமி ஐயங்கார் ஆசிரியராக இருந்த தமிழ்நாடு நாளிதழிழில் பணியாற்றினார். 1937 இறுதியில் கும்பகோணத்தில் இருந்த தன் குடும்பத்தையும் சென்னைக்கு அழைத்துக்கொண்டார்.

தமிழ்நாடு நாளிதழ் நின்ற பின்னர் 1939-ம் ஆண்டு வெளிவந்த ’பாரததேவி’ என்ற வார இதழிலும் துணையாசிரியராகப் பணியாற்றினார். அவற்றில் அதில் அவரது இயற்பெயரிலும், பாரத்வாஜன், கரிச்சான், சதயம் என்னும் புனைபெயர்களிலும் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். பின்னர் கா.சி.வேங்கடரமணி நடத்திய ’பாரதமணி’ என்னும் இதழில் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது சென்னையிலிருந்து குடும்பத்துடன் கும்பகோணத்துக்கே திரும்பினார். அங்கு ’மறுமலர்ச்சி நிலையம்' என்னும் பெயரில் புத்தக நிலையம் ஒன்றைத் தொடங்கினார். வானொலியில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவருடைய சிறுகதைகள் பல வானொலியில் ஒலிபரப்பாயின. 1943-ம் ஆண்டு துறையூர் என்ற சிற்றூரில் இருந்து வெளிவந்த `கிராம ஊழியனில் கௌரவ ஆசிரியராகச் சேர்ந்தார். திருலோக சீதாராமை ஆசிரியராகக்கொண்ட அவ்விதழுக்கு கும்பகோணத்தில் இருந்தவாறே எழுதினார். முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தார். இறுதிக்காலத்தில் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் இருந்தார்.

கும்பகோணத்தில் கு.ப. ராஜகோபாலனுக்கு பக்கத்து வீட்டுக்காரராக கவிஞர் ந. பிச்சமூர்த்தி இருந்தார். பிறகு கல்லூரியிலும், வாழ்விலும், ரசனையிலும், இலக்கியத்திலும் தொடர்ந்து 20 ஆண்டு காலம் `கும்பகோணம் இரட்டையர்கள்’ என்று மற்றவர்கள் கூறும்படி இணைபிரியாதவர்களாய் இவர்கள் இருவரும் இருந்தனர். கும்பகோணத்தில் இருந்தபோது கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம் இருவரும் அவருக்கு நெருக்கமாக இருந்து பல உதவிகளைச் செய்தனர்.

சுதேசமித்திரன் குபரா
ந.பிச்சமூர்த்தியும் கு.ப.ராஜகோபாலனும் அமர்ந்திருக்கிறார்கள். பின்னால் சி.சு.செல்லப்பா

இலக்கிய வாழ்க்கை

கல்லூரியில் படிக்கும் போது பிச்சமூர்த்தி மற்றும் பல நண்பர்களுடன் சேர்ந்து `ஷேக்ஸ்பியர் சங்க’த்தைத் தொடங்கி கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதி வாசித்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும் பிச்சமூர்த்தியுடன் சேர்ந்து கும்பகோணத்தில் `பாரதி சங்கம்’ நிறுவினார். இக்காலகட்டத்தில் சுதந்திரச் சங்கு, மணிக்கொடி இரண்டு பத்திரிகைகளில் தொடர்ந்து கு.ப.ராஜகோபாலனின் கதைகள், கவிதைகள் வெளிவந்தன.

கு.ப.ராஜகோபாலன் முதன்மையாக மணிக்கொடி இதழின் எழுத்தாளராகவே அறியப்படுகிறார். மணிக்கொடி நின்றபின் கலைமகள், கலாமோகினி ஆகிய இதழ்களில் எழுதினார். சுதந்திரச் சங்கு, சூறாவளி, ஹனுமான், ஹிந்துஸ்தான் போன்ற இதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகின. கண் பார்வை மங்கியிருந்தபோது அவர் சொல்ல அவர் தங்கை கு.ப.சேது அம்மாள் அவற்றை எழுதினார்.

சிறுகதை

கு.ப.ராஜகோபாலன் சிறுகதை என்னும் வடிவின் மேல் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்தார். சிறுகதையின் வடிவ ஒருமையை பற்றி புரிதலும், அதற்கான தொடர்ந்த கவனமும் உடைய முதல் தமிழ் எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் என க.நா.சுப்ரமணியம், சி.சு. செல்லப்பா போன்ற விமர்சகர்கள் கூறியிருக்கின்றனர். கு.ப.ராஜகோபாலனின் 'விடியுமா', 'ஆற்றாமை' என்னும் இரு சிறுகதைகளும் சிறுகதையின் வடிவ ஒருமைக்கான முன்னுதாரணமான கதைகளாக குறிப்பிடப்படுகின்றன. கு.ப.ராஜகோபாலனின் சிறுகதைகள் கனகாம்பரம் என்னும் பெயரில் கலைமகள் காரியாலயம் வெளியீட்டாளர்களால் 1942-ல் வெளியிடப்பட்டன.

குபரா சிவாஜி
நாடகம்

சுதந்திரச் சங்கு, மணிக்கொடி, பாரத தேவி ஆகிய இதழ்களில் ஓரங்க நாடகங்களை எழுதியுள்ளார். எழுதிய 13 ஓரங்க நாடகங்களின் தொகுப்பான ’அகலியை' அவர் மறைந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 1964-ல் வெளிவந்தது. அவர் வானொலிக்காக எழுதிய நாடகங்கள் எழுத்துவடிவம் பெறவில்லை

கட்டுரை

'எதிர்கால உலகம் ' என்னும் நூலில் உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணும் பெரியோர்களில் முக்கியமான ஆறு பேரைப் பற்றிச் சுருக்கமாக எழுதியுள்ளார். ’ஸ்ரீஅரவிந்த யோகி’, ’டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும்’ என்னும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் இரண்டு படைத்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும், பல கட்டுரைகளையும் மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். அவை நூல் வடிவம் பெறவில்லை.

மொழியாக்கம்

ஆங்கில மொழியிலிருந்து ஸ்டீவன்ஸனின் ’டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட்' என்னும் நாவலை தமிழில், 'இரட்டை மனிதன்' என்ற தலைப்பில் கொண்டுவந்தார். ரஷ்ய மொழியிலிருந்து டால்ஸ்டாய் சிறுகதைகளையும், வங்க மொழியில் இருந்து பங்கிம் சந்திரர், சரத் சந்திரர் ஆகியோரின் நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சரத் சந்திர சட்டர்ஜியின் 'கிரஹ தாகம்' நாவலை அ.கி. ஜெயராமன் தமிழில் மொழியாக்கம் செய்தார். அம்மொழியாக்கத்திற்கு கு. ப. ராஜகோபாலன் எழுதிய முன்னுரையில் சரத் சந்திர சட்டர்ஜியின் 'கிரஹ தாகம்' நாவலுடன் வேறு மொழிகளில் புகழ்பெற்ற ஐந்து நாவல்களைப்பற்றிய அறிமுகத்தையும் ( சியாராம் சரண குப்தர் -'பெண்', வி.ச. காண்டேகர்-'சுகம் எங்கே', லியோ டால்ஸ்டாய் -'அன்ன கரீனினா', ரமேச சந்திர தத்தர்-'ரஜபுத்ர ஆதிக்கத்தின் அஸ்தமனம்', 'மஹாராஷ்டிர ஜீவன் உதயம்') 'ஆறு நவயுக நாவல்கள்' என்ற பெயரில் எழுதினார்[1].

நாவல்

கு.ப.ராஜகோபாலன் இறுதிக்காலத்தில் வேரோட்டம் என்ற நாவலை எழுதத் தொடங்கி, ஐந்து அத்தியாயங்கள் வரை எழுதினார். அந்நாவல் முடிவதற்குள் மறைந்தார்

கு.ப.ரா.வாழ்க்கை வரலாறு

இதழியல்

கு.ப.ராஜகோபாலன் 1936-ம் ஆண்டு தொடங்கி சிறிது காலம் `தமிழ்நாடு’ என்ற தினசரியில் வ.ராமசாமி ஐயங்கார் ஆசிரியராக இருந்தபோது உதவி ஆசிரியராக பணியாற்றினார். அவருடன் அப்போது சி.சு. செல்லப்பாவும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

1939 முதல் சிலகாலம் வ.ராமசாமி ஐயங்கார் ஆசிரியராக இருந்த பாரததேவி வார இதழில் துணை ஆசிரியராக பணியாற்றினார்.

1940-ல் கா.சி.வேங்கடரமணி நடத்திய ’பாரதமணி’ என்னும் இதழில் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார்.

திருச்சி துறையூரிலிருந்து வெளிவந்த 'கிராம ஊழியன்' என்ற இதழின் சிறப்பாசிரியர் பொறுப்பை 1943-ம் ஆண்டு ஏற்றார். அடுத்த ஆண்டு அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றபோது ’காங்கரின்' நோய் கு.ப.ரா.வின் கால்களைத் தாக்கியது. ஆகவே அப்பணியை தொடரவில்லை

விவாதங்கள்

பாலியல் எழுத்து விவாதம்

கு.ப.ராஜகோபாலன் பாலியலை எழுதுவதனால் விவாதத்திற்கு உள்ளானார். அவருடைய ஆற்றாமை கதை பெண்களின் வேட்கையை சித்தரிக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. கனகாம்பரம் தொகுப்பு வெளிவந்தபோது சி.ராஜகோபாலாச்சாரியார் அவ்வகை எழுத்தை கண்டித்து எழுதினார்

பாரதி மகாகவியே விவாதம்

கல்கி ஒரு கட்டுரையில் சி.சுப்ரமணிய பாரதியார் சிறந்த கவிஞர், ஆனால் மகாகவி அல்ல என்றார். அதை மறுத்து கு.ப.ராஜகோபாலனும் சிட்டியும் சேர்ந்து எழுதிய கட்டுரைகள் 'கண்ணன் என் கவி' என்ற பெயரில் வெளிவந்தன. இந்நூல் தமிழ்த் திறனாய்வு வரலாற்றில் முக்கியமான ஒன்று என கருதப்படுகிறது.

மறைவு

ஏப்ரல், 1944-ல் தஞ்சாவூரில் கலாமோஹினி ஆசிரியரான `சாலிவகனன்’ திருமணத்திற்குச் சென்று திரும்பும் வழியில் கு.ப.ரா.வுக்கு காங்கரின் நோயால் கால்கள் செயலிழக்க தொடங்கின. இரு கால்களையும் உடனடியாக எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு உடன்படாமல் உடல் நலிவுற்று ஏப்ரல் 27, 1944 அன்று காலமானார்.

வாழ்க்கை வரலாறு

கு.ப.ராஜகோபாலனின் வாழ்க்கை வரலாற்றை இரா.மோகன் சாகித்ய அகாதமி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசைக்காக எழுதியிருக்கிறார்.

இலக்கிய இடம்

தமிழ் நவீனச் சிறுகதைகளில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, மௌனி ஆகியோர் முன்னோடிகளாக கருதப்படுகிறார்கள். கு.ப.ராஜகோபாலன் புதுமைப்பித்தனுக்கு நேர் எதிரான போக்குகள் கொண்டவர். சிறுகதை வடிவம், இலக்கியத்தின் அடிப்படை நோக்கம் ஆகியவை சார்ந்த பல முக்கியமான விவாதங்கள் கு.ப.ரா.வுக்கும் புதுமைப்பித்தனுக்கும் இடையேதான் நடைபெற்றுள்ளன. சுந்தர ராமசாமி எழுதிய 'ந.பிச்சமூர்த்தியின் கலை, மரபும் மனிதநேயமும்’ என்னும் நூலில் அவர் உருவாக்கும் ஒரு உருவகச்சித்திரத்தில் பாரதியும் புதுமைப்பித்தனும் எதிரெதிரே அமர்ந்திருக்கிறார்கள். பாரதிக்குப்பின் அணிவகுத்திருப்பவர்களில் ந.பிச்சமூர்த்தியும் கு.ப.ராஜகோபாலனும் முக்கியமானவர்கள். பாரதி முன்வைத்த இலட்சியவாதம், தேசியப்பெருமிதம் ஆகியவை கு.ப.ராஜகோபாலனில் வெளிப்பட்டன. கலை என்பதை இலட்சியவாதத்தின் கருவியாகவே கண்டார். புதுமைப்பித்தன் அதை ஏற்காமல் எதிர்மனநிலை கொண்டவராக இருந்தார். பின்னர் உருவான பெரும்பாலான படைப்பாளிகள் புதுமைப்பித்தனுக்குப் பின்னால்தான் அணிவகுத்தனர் என்று சுந்தர ராமசாமி சொல்கிறார். ஆகவே புதுமைப்பித்தனுக்கும் கு.ப.ராஜகோபாலனுக்குமான விவாதங்கள் தமிழிலக்கியத்தில் முக்கியமானவை. அவை இலட்சியவாத காலகட்டத்திற்கும் நவீனத்துவ காலகட்டத்திற்குமான விவாதங்கள்.

"மணிக்கொடி காலத்துச் சிறுகதை எழுத்தாளர்களில் அதிக கவனத்தைக் கவர்ந்த படைப்பாளிகள் கு.ப.ரா வும் புதுமைப்பித்தனும். கு.ப.ரா வின் கதைகள் ஒவ்வொன்றும் அதன் கட்டுக்கோப்பிலும் பொருள் அமைப்பிலும் வடிவத்திலும் உத்தியிலும் லட்சணக் கதையாக இருக்கக் காணலாம்" என சிட்டி-சிவபாதசுந்தரம் இரட்டையர் மதிப்பிடுகின்றனர்.

கு.ப.ராஜகோபாலன் பெரும்பாலும் அகவுலகம் சார்ந்து எழுதினார். அவர் காலகட்டத்தில் பெண்கள் கல்விகற்கவும், வேலைபார்க்கவும் வீட்டைவிட்டு வெளியே வரத்தொடங்கியிருந்தனர். பெண்விடுதலைக் கருத்துக்கள் பேசப்பட்டன. கு.ப.ராஜகோபாலன் பெண்களின் கல்வி மற்றும் உரிமைகளை ஆதரித்தாலும் குடும்பம் மற்றும் ஒழுக்கம் சார்ந்து மரபான இலட்சியவாதப் பார்வை கொண்டிருந்தார். அகவுலக வெளிப்பாட்டுக்குரிய குறைவான சொற்கள் கொண்ட, அடக்கமான உணர்ச்சிவெளிப்பாடுள்ள மொழிநடையை கு.ப.ராஜகோபாலன் உருவாக்கிக்கொண்டார். உட்குறிப்புகள் வழியாகவே தொடர்புறுத்தும் சிறுகதை வடிவத்தையும் அடைந்தார். கு.ப.ராஜகோபாலனின் எழுத்துக்களில் ஃபிராய்டிய உளவியலாய்வின் தாக்கம் இருந்தது. வங்காளத்து பிரம்மசமாஜச் சிந்தனைகளின் செல்வாக்கு அவரிடமிருந்தது என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார் [2]

கு.ப.ரா தன் கதைகளைப் பற்றிச் சொல்லும்போது, "என் கதைப்புத்தகத்தை விமரிசனம் செய்தவர்களில் யாரோ ஒருவர் நான் உடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் இவற்றைப் பற்றி தான் எழுதுகிறேன் என்று எழுதிய ஞாபகம். இது குற்றச்சாட்டானால் நான் குற்றவாளிதான். நான் கவனித்த வரையில் என் அனுபவத்திலும், வாழ்க்கையிலும் அவைதாம் எங்கே திரும்பினாலும் கண்ணில் படுகின்றன" என்கிறார்.

கு.ப.ராஜகோபாலன் தமிழிலக்கியத்தில் ஆண் பெண் உறவை உளவியல் சார்ந்து ஆராய்வதில் ஒரு முன்னோடி. அவரை தொடர்ந்து தி.ஜானகிராமன் அவ்வகையில் விரிவாக எழுதினார் .அவர்களின் செல்வாக்கு தமிழ் நவீன இலக்கியத்தில் வண்ணதாசன் வண்ணநிலவன் பாலகுமாரன் வரை தொடர்ந்தது.

நூல்கள்

நாவல்
சிறுகதைத் தொகுதி
  • ஆத்மசிந்தனை (1986)
  • ஆற்றாமை (1990)
  • கனகாம்பரம் முதலிய கதைகள் (1944)
  • காணாமலே காதல் (1943)
  • புனர்ஜன்மம் சிறுகதைகள் (1943)
கட்டுரைத் தொகுதி
  • கண்ணன் என் கவி (1937)
  • எதிர்கால உலகம் (1943)
  • ஸ்ரீ அரவிந்த யோகி (1940)
  • டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும்(நெடுங்கட்டுரை) (1985)
  • பக்தியின் சரிதை (1992)
மொழிபெயர்ப்புகள்
  • அனுராதா (சரத்சந்திரர் - நாவல்)
  • இரட்டை மனிதன் (ஆர்.எல். ஸ்டீவன்ஸன் - நாவல்)
  • டால்ஸ்டாய் சிறுகதைகள் - I, (ரா. விசுவநாதனுடன் இணைந்து, 1942, மூன்றாம் பதிப்பு 1950)
  • துர்க்கேஸநந்தினி (பங்கிம் சந்திர சாட்டர்ஜி - நாவல்)
  • தேவி செளதுராணி (பங்கிம் சந்திர சாட்டர்ஜி - நாவல்)
  • ஹரிலட்சுமி (சரத்சந்திரர் - நாவல்)
  • ஹிரண்மயி (சரத்சந்திரர் - நாவல்) (1949)
நாடகங்கள்
  • அகலியை (1964)
படைப்புத் தொகுதிகள்
  • கு.ப.ரா. கட்டுரைகள் (2012)
  • கு.ப.ரா. கதைகள் (2009)
  • கு.ப.ரா. சிறுகதைகள் (2014)
  • கு.ப.ரா. படைப்புகள் (நாடகங்களும் கவிதைகளும்) (2010)
  • சிறிது வெளிச்சம் (தொகுப்பில் வராத கதை, குறுநாவல்கள், கவிதைகள்) (1969)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:22 IST