வேரோட்டம்
To read the article in English: Verottam.
வேரோட்டம் (1944) கு.ப.ராஜகோபாலன் எழுதிய முழுமைசெய்யப்படாத நாவல். ஆண்பெண் உறவை கருப்பொருளாகக் கொண்டு எழுதியவர் கு.ப.ராஜகோபாலன். இந்நாவல் ஓர் இலட்சிய ஆண்பெண் உறவையும் அதற்கு எதிர்விசையாக அமையும் காமத்தையும் சித்தரிக்க முயல்கிறது
எழுத்து,பிரசுரம்
இந்நாவலை கு.ப.ராஜகோபாலன் கலாமோகினி இதழில் தொடராக எழுதினார். யௌவனக்கலக்கம், சந்திப்பு, வேரோட்டம், எதிர்ப்பு என்னும் தலைப்புகளில் ஐந்து அத்தியாயங்கள் வெளிவந்தன. ஏப்ரல், 1944 இதழில் இந்நாவலின் கடைசி அத்தியாயம் வெளியானது. அதேமாதம் 27-ம் தேதி கு.ப.ராஜகோபாலன் தன் நாற்பத்திரண்டாம் வயதில் காலமானார். இந்நாவல் முடிக்கப்படவில்லை. 1969-ல் கு.ப.ராஜகோபாலனின் சிறிதுவெளிச்சம் என்னும் தொகுப்பில் இந்த கதை சேர்க்கப்பட்டது.
கதைச்சுருக்கம்
இந்நாவல் கதைமாந்தர் கூற்று, கடிதங்கள் என வெவ்வேறு கோணங்களில் கதைசொல்கிறது. கதையை விட கதைமாந்தரின் உள்ள ஓட்டத்துக்கே முதலிடமளிக்கிறது. கல்லூரி மாணவன் சந்திரசேகரனின் அறிவாற்றலைக் கண்டு அவனை லலிதா காதலிக்கிறாள். இருவரும் மணம்புரிய முடிவுசெய்து ஒரே இல்லத்தில் வாழ்கிறார்கள். ஆனால் லலிதாவின் வைதிகமான பெற்றோர் மணவுறவை ஏற்கும்வரை ஒரே வீட்டில் உடலுறவில்லாமல் வாழ்வது என முடிவெடுக்கிறார்கள். லலிதாவின் தோழி சுலோச்சனா சந்திரசேகரனின் நண்பன் சுந்தரம் ஆகியோர் உடனிருக்கிறார்கள். சுலோச்சனா தன் அக்கா பத்மாசனிக்கு இதை கடிதத்தில் எழுத திருவழுந்தூரிலுள்ள சந்திரசேகரனின் பெற்றோர் இவர்களின் வாழ்க்கையை தெரிந்துகொள்கிறார்கள். சந்திரசேகரனின் பெற்றோர் நேரில்வந்து லலிதாவைச் சந்திக்கும்போது லலிதாவின் ஆசாரம், பண்பு ஆகியவற்றைக் கண்டு நிறைவடைகிறார்கள். சந்திரசேகரனின் தந்தை ஊர் திரும்பி திருவழுந்தூரிலேயே திருமணத்தை நடத்த முடிவெடுக்கிறார். ஊரிலுள்ள வைதிகர்கள் சீற்றமடைகிறார்கள். லலிதாவின் அம்மா கிருமணத்தை ஆதரிக்க அவள் தமையன் எதிர்க்கிறான். காரணம் சந்திரசேகரனின் அம்மா கொடுமைக்காரி என பரப்பப்பட்ட ஒரு வதந்தியை அவன் நம்புவது. சந்திரசேகரனின் தங்கை தன் அண்ணனுக்கு அன்புடன் மன்னியை அழைத்துக்கொண்டு திருவழுந்தூர் வரும்படி கடிதம் எழுதும் இடத்தில் நாவல் நின்றுவிட்டது
இலக்கிய இடம்
இந்நாவல் தமிழில் மனித அகம் செயல்படும் விதத்தைச் சொல்லமுற்பட்ட தொடக்ககால ஆக்கம். உளநிகழ்வுகளைச் சொல்ல கடிதம் உட்பட்ட உத்திகளையும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் வெவ்வேறு கோணத்தில் ஒரே சிக்கலை அணுகுவதையும் எழுதியிருக்கிறார் கு.ப.ராஜகோபாலன்.
உசாத்துணை
- வேரோட்டம் -கு.ப. ரா குறுநாவல், archive.org
- படித்த பெண்ணால் களேபரமாகும் கல்யாணம்! - வேரோட்டம் - கு.ப.ரா
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:51 IST