under review

கு.ப.சேது அம்மாள்

From Tamil Wiki

To read the article in English: Ku.Pa. Sethu Ammal. ‎

கு.ப.சேது அம்மாள்
கல்கியில் வெளிவந்த கதை

கு.ப.சேது அம்மாள் (1908 - நவம்பர் 5, 2002) தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதியவர். தமிழில் சிறுகதை தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் என அறியப்படுகிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனின் தங்கை. நாவல்கள், நாடகங்கள், திரைப்பட வசனங்கள் எழுதியுள்ளார். பெண் புனைக்கதையாளர்களில் முக்கியமானவர். பெண்ணியம், காந்தியச் சிந்தனைகள் சார்ந்த கதைகளை அதிகம் எழுதியுள்ளார். இவரின் படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.

பிறப்பு, கல்வி

கு.ப.சேது அம்மாள் (கும்பகோணம் பட்டாபிராமையர் சேது அம்மாள்) 1908-ல் கும்பகோணத்தில் பட்டாபிராமையர் - ஜானகியம்மாள் இணையருக்கு பிறந்தார். இவருடைய மூத்த சகோதரர் எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலன். பதினொரு வயதில் திருமணமாகியது. கணவர் இல்லத்தில் இருந்து பள்ளியிறுதி வரை படித்தார். இளமையிலேயே கணவனை இழந்த இவருக்கு கு.ப.ரா மிகவும் உறுதுணையாக இருந்தார்.

திரைவாழ்க்கை

கு.ப.சேது அம்மாள் 1949-ல் பி.யூ.சின்னப்பா நடித்து நியூடோன் ஸ்டுடியோ தயாரித்த ’கிருஷ்ணபக்தி’ படத்திற்காக, ஆர்.எஸ். மணியன் கதைக்கு சுத்தானந்தபாரதி, சாண்டில்யன், ச.து.சு.யோகி ஆகியோருடன் இணைந்து கதைவசனத்தில் பங்களிப்பாற்றினார்.

இலக்கியவாழ்க்கை

புதுக்குடி வாழ்க்கை (சிறுகதை)

கு.ப.சேது அம்மாள் கு.ப.ராஜகோபாலனுக்கு உதவியாக இருந்தார். ராஜகோபாலனுக்கு கண்புரை நோய் வந்து பார்வை மங்கலான போது அவர் கதைகளைச் சொல்ல சேது அம்மாள் எழுதினார். அவ்வாறாக இலக்கியப் பயிற்சி பெற்று தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். 1935-ல் 'செவ்வாய்தோஷம்' என்னும் முதல் சிறுகதை காந்தி இதழில் வெளிவந்தது. கு.ப.சேது அம்மாள் மணிக்கொடி இதழில் 'கருகிய காதல்', 'சாவித்ரியின் கடிதம்', 'லலிதா', 'குணவதி' ஆகிய கதைகளை எழுதியிருக்கிறார். 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். 'ஒளி உதயம்' என்னும் முதல் சிறுகதைத் தொகுதி 1946-ல் வெளியாகியது. 13 சிறுகதைகள் கொண்ட இத்தொகுதியை தன் அண்ணன் கு.ப.ராஜகோபாலனுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். 1962-ல் இவருடைய முதல் நாவல் 'அம்பிகா' வெளியாகியது. வசந்தம், பாரதமணி, மங்கை, கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி, காவேரி, கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன், அமுதசுரபி போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் எழுதினார். காந்தியக் கருத்துக்களைக் கொண்ட சிறுகதைகளையும் நிறைய எழுதினார். மூன்று நாடகங்கள் எழுதியுள்ளார். 'பில்ஹண காவியம்’ குறிப்பிடத்தகுந்த நாடகம். வானொலியைல் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியுள்ளார்.இதழ்கள் நடத்திய பல்வேறு சிறுகதை, நாவல் போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார்.

புதுமைப்பித்தனின் அகலிகை சிறுகதைக்கு மாற்றாக அதே சம்பவத்தை மையமாக வைத்து இந்திரனின் மனைவி, இந்திராணியின் பார்வையில் அவரது உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பிடுன் கதையை எழுதி அக்காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். "அகலிகை கல்லான கதையின் காரணகர்த்தா தேவேந்திரன். அவனைப் பற்றி அவன் மனைவி இந்திராணியின் எண்ண அலைகளைச் சித்தரிக்கும் இக்கதை அகலிகை கதையை பல்வேறு விதமாகப் பேசியும் பாடியும் தீர்த்து வருவதற்கு ஒரு மாற்று" என்கிறார் இரெ.மிதிலா.

கு.ப.சேது அம்மாள் வீணைக்கலைஞர். சமையல்கலை நூல்களை எழுதியிருக்கிறார். சுஜாதா ஆசிரியராக இருந்த அம்பலம் மின்னிதழில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சமையல் தொடரை எழுதினார்.

மறைவு

கு.ப.சேது அம்மாள் நவம்பர் 5, 2002-ல் தனது 94-வது வயதில் சென்னையில் காலமானார்.

விருதுகள்

  • கு.ப.சேது அம்மாளின் படைப்புகள் 2002-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இலக்கிய இடம்

கு.ப.சேது அம்மாள் பொதுவாசகர்களுக்குரிய எழுத்துக்களில் பெண் எழுத்தாளர்கள் எழுதிய அதே கதைக்கருக்களையே எழுதினார். பெண்கள் மீதான அடக்குமுறை, குடும்ப அமைப்பின் இறுக்கமான பிடியில் அவர்கள் சிக்கி அழிவது ஆகியவை. ஆனால் மிகையில்லாத நம்பகமான சித்தரிப்பினால் அவை இலக்கியத்தன்மை கொள்கின்றன. தமிழில் நவீன இலக்கியச் சூழலின் முதற்கட்ட பெண் இலக்கியவாதி என அவரைச் சொல்லமுடியும். அவர் ஆர்.சூடாமணி போன்ற பிற்கால எழுத்தாளர்களுக்கு முன்னோடியானவர்.

பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண் விடுதலை, காந்தியச் சிந்தனைகளை தனது படைப்புகளில் வலியுறுத்தியிருக்கிறார். அக்கால மத்தியத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாது உள்ளது உள்ளபடிச் சித்தரிப்பதாக இவரது படைப்புகள் உள்ளன. சமூகம், குடும்பம், வாழ்க்கை, முரண்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார். கதைமாந்தர்களின் நுண்ணிய உணர்ச்சிகளை தனது பாத்திர வார்ப்புகள் மூலம் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். நேர்மறைச் சிந்தனைகள் கொண்டதாகவே இவரின் படைப்புகள் அமைந்துள்ளன.

இலக்கிய விமர்சகர் அ.ராமசாமி ’தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர் கு.ப.சேது அம்மாள். தமிழ்ப்புனைகதை வரலாற்றில் பெண்ணெழுத்து என ஒன்றை உருவாக்கிப் பேசும் நூலில் கட்டாயம் இடம்பெற வேண்டிய பெயர் அவருடையது. கு.ப.சேது அம்மாளின் சிறுகதைகள் வடிவச்செம்மையும், தூக்கலாக எதையும் சொல்லாமல் உரையாடல்கள் வழி நடப்பதைக் காட்டிவிட்டு ஒதுங்கிவிடும் தன்மையும் கொண்டவை’ என்கிறார். அன்றைய பெண் எழுத்தாளர்களுக்கு இருந்த குடும்ப எல்லைகளை கடந்து சினிமா உள்ளிட்டதுறைகளிலும் அவர் ஈடுபட்டது முன்னோடியான முயற்சி.

நூல்கள்

நாவல்கள்
  • அம்பிகா
  • மைதிலி
  • உஷா
  • தனி வழியே
  • ஓட்டமும் நடையும்
  • கல்பனா
  • குரலும் பதிலும்
  • உண்மையின் உள்ளம்
சிறுகதை
  • ஒளி உதயம்
  • தெய்வத்தின் பரிசு
  • வீர வனிதை
  • உயிரின் அழைப்பு
கட்டுரைகள்
  • சமையற்கலை (இருபாகங்கள்)
  • பாரதப்பெண்
  • போதி மாதவன் (புத்தர் வரலாறு)

உசாத்துணை


✅Finalised Page