ந. பிச்சமூர்த்தி
To read the article in English: Na. Pichamurthy.
ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 - டிசம்பர் 4, 1976) தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அறியப்படுபவர். கட்டுரையாளர், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கியத் திறனாய்வுகள் எழுதியுள்ளார்.வாழ்விலும் படைப்பிலும் கு.ப.ராஜகோபாலனுடன் இணைந்து செயல்பட்டு, அவருடைய இரட்டையர் என்று கூறப்பட்டவர். கு.ப.ராஜகோபாலனின் கதைகளுக்குரிய அதே தளத்தில் ஆனால், சற்று தத்துவார்த்தச் சாயலுடன் எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி.
பிறப்பு கல்வி
வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட ந. பிச்சமூர்த்தி ஆகஸ்ட் 15, 1900 அன்று கும்பகோணத்தில் நடேச தீட்சிதர், காமாட்சியம்மாள் தம்பதிக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவர். இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்து விடவே, பெற்றோர் இவருக்கு பிச்சை என்று பெயரிட்டுஅழைத்தனர். இந்த பெயரே பின்னாளில் ந. பிச்சமூர்த்தி ஆகியது.
நடேச தீட்சிதரின் முன்னோர் தெலுங்கு பிராமணர்கள், தஞ்சை மராட்டியர் அவையில் பண்டிதர்களாகப் பணியாற்றியவர்கள். நடேச தீட்சிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டி மொழிகளில் ஹரிகதா சொற்பொழிவு செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப் புராணப் பிரசங்கங்கள் செய்தவர். ந. பிச்சமூர்த்தியின் தந்தை பிச்சமூர்த்திக்கு ஏழு வயதாகும்போது இறந்து விட்டார். தாயின் பராமரிப்பில் வளர்ந்த பிச்சமூர்த்தி, கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் உயர்கல்வி கற்று பின் நேட்டிவ் கலாசாலையில் தத்துவத்தில் பி.ஏ பட்டம் பெற்றார். அதன்பின் சென்னையில் சட்டம் படித்தார்
தனிவாழ்க்கை
ந.பிச்சமூர்த்தி 1924-ம் ஆண்டு முதல் கும்பகோணத்தில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டிருந்தார். வழக்கறிஞர் தொழில் தனக்கு பொருந்தவில்லை என கருதி, அத்தொழிலை 1938-ல் விட்டு விட்டார். 1938-ம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் ஏழு மாத காலம் ஹனுமான் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராக பணியாற்றினார். சுமார் ஆறு மாத காலம் கும்பகோணம் நகர சபை அங்கத்தினராகவும் பதவி வகித்துள்ளார். பின் அப்பணியிலிருந்தும் விலகி, 1939-ல் இந்து அறநிலையத்துறையில் அதிகாரியாக சேர்ந்தார். திருத்தணி, ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம், வேதாரண்யம், செட்டிகுளம், ஸ்ரீபெரும்புதூர், திருத்துறைப்பூண்டி ஆலயங்களில் பணியாற்றினார்.
1956-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பின் நவ இந்தியா தினசரியில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். நவ இந்தியாவில் டெலிபிரிண்டரில் வரும் செய்திகளை உடனுக்குடன் மொழியாக்கம் செய்யும் கடுமையான வேலையை அவர் குறைந்த ஊதியத்தில் செய்துவந்ததாக அசோகமித்திரன் குறிப்பிடுகிறார்.
1924-ம் ஆண்டு, சாரதா அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். (ஆய்வாளர் மீனாகுமாரியின் நூலில் 1922 என குறிப்பிடப்படுகிறது) இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் உண்டு. ஒரு பெண்குழந்தை இளமையில் இறந்துவிட்டது. அலமேலு, ராஜலட்சுமி, மீனாட்சி என மூன்று மகள்கள் .
ஆன்மிக ஈடுபாடு
ந.பிச்சமூர்த்தி ஆன்மிக ஈடுபாடு கொண்டிருந்தார். திருமணம் செய்த பின்னும் துறவு வாழ்க்கையை விரும்பி அலைந்திருக்கிறார். 1925-ம் ஆண்டு, திருவண்ணாமலையில் ரமண மகிரிஷியையும் 1930-ல் சித்தர் குழந்தைசாமியையும் சந்தித்து துறவு நிலை அருளுமாறு வேண்ட, அவர்கள் இவருக்கு மண வாழ்வே ஏற்றது என்று கூறிவிட்டனர்.1936-ல் திருச்சி பொக்கத்துறையில் வெங்கட்ராமையர் என்னும் ஆன்மிக குருவை கண்டடைந்து மந்திர உபதேசம் பெற்றார். அதன்பின் உப்பில்லாத உணவுண்டு பிரம்மசரிய நோன்பை கடைப்பிடித்தார்.
திரைப்படம்
ந.பிச்சமூர்த்தி 1938-ம் ஆண்டு வெளி வந்த ஸ்ரீ ராமானுஜர் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடத்தில் நடித்திருக்கிறார். இது வ.ராமசாமி ஐயங்கார் எழுதிய கதையை ஏ.நாராயணன் இயக்கி தயாரித்து வெளியிடப்பட்ட படம்.
இலக்கிய வாழ்க்கை
தொடக்கம்
1925-ல் பாரதியின் கண்ணன் பாட்டை படித்து தமிழிலேயே இலக்கியம் படைக்கவேண்டும் என்னும் ஆர்வத்தை அடைந்ததாக ந.பிச்சமூர்த்தி கூறியிருக்கிறார். ந. பிச்சமூர்த்தியின் முதல் கதை 'சயன்ஸுக்கு பலி’ கலைமகள் இதழில் 1932-ம் ஆண்டு வெளி வந்தது. 1933ல் கலைமகள் நடத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற இவரது சிறுகதையான 'முள்ளும் ரோஜாவும்’ தான் ந.பிச்சமூர்த்திக்கு பரவலான அறிமுகத்தை பெற்று தந்தது.இதற்கும் முன் 1922-ம் ஆண்டிலேயே 'இளைஞன்’ மற்றும் ’நாஸ்திகன் கடிதம்’ என்னும் இரு கதைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.பின்னர் 1933-ல், இவ்விரு கதைகளையும் ’மோஹினி’ மற்றும் 'ஆராய்ச்சி’ என்ற பெயர்களில் தமிழில் வெளியிட்டார். முதல் கவிதை ’காதல்’ 1934-ம் ஆண்டு வெளியானது. இதன் பின் மணிக்கொடி, கலைமகள், சுதந்திரச் சங்கு ஆகிய இதழ்களில் பல கதை, கவிதை, கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ரேவதி, பிக்ஷு (bikshu) போன்ற புனை பெயர்களிலும் எழுதியுள்ளார்.
இலக்கியச்சூழல்
ந.பிச்சமூர்த்தி தாகூரின் எழுத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தாகூரின் கவிதைகள், கதைகள் இரண்டின் செல்வாக்கும் அவரிடமுண்டு. அவருடைய தோற்றமே தாகூரில் இருந்து அவர் பெற்றுக்கொண்டதுதான். ந.பிச்சமூர்த்தி கு.ப.ராஜகோபாலனை கும்பகோணத்தில் 1933-ல் நடைபெற்ற மாமாங்கம் கதர்க்கண்காட்சியில் சந்தித்தார். அதன்பின் அவருடன் நெருக்கமான நட்பு இருந்தது. பெரும்பாலும் திருச்சியிலும் ஸ்ரீரங்கத்திலும் வாழ்ந்த ந.பிச்சமூர்த்தி திருலோக சீதாராமையும் அவருடைய சிவாஜி இதழையும் மையமாக்கி திருச்சியில் இருந்த இலக்கியக் குழுவில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார். கு.ப.ராஜகோபாலன் திருச்சிக்கு வந்து ந.பிச்சமூர்த்தியைச் சந்திக்கும் வழக்கம் இருந்தது. ஸ்ரீரங்கத்திலும் கும்பகோணத்திலும் அறநிலையத்துறை அதிகாரியாகப் பணியாற்றிய காலகட்டத்தில் அங்கிருந்த முறைகேடுகளுக்கு உடன்படாமையால் கடுமையான உள அழுத்தம் அவருக்கு இருந்தது. பலவகையான ஆன்மிக சாதனைகளிலும் ஈடுபட்டிருந்தார். ஆகவே பதினெட்டாண்டுகள் அவர் ஏதும் எழுதவில்லை. மீண்டும் தினசரியில் வேலைக்குச் சேர்ந்தபின்னரே எழுதினார்.
மணிக்கொடி
ந.பிச்சமூர்த்தி மணிக்கொடி இலக்கிய இதழுடன் சேர்த்து அடையாளம் காணப்படுகிறார். சிவாஜி, கிராம ஊழியன் போன்ற அக்காலத்தைய இதழ்களில் அவர் எழுதியிருக்கிறார். மணிக்கொடி இலக்கியத்திற்கான தனி வரையறையையும் தன்னடையாளத்தையும் உருவாக்கி கொண்டிருந்த இதழ் என்பதும் அதையொட்டி இணையான உலகப்பார்வையும் அழகியலும்கொண்டவர்கள் அதில் இணைந்துகொண்டார்கள் என்பதுமே காரணம். புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி மூவரும் மணிக்கொடியின் முகங்கள் என அறியப்படுகிறார்கள். மணிக்கொடி தேசியப்பார்வை கொண்டிருந்த இதழ். ஆனால் இலக்கியத்தில் அது புதியவடிவங்களையும் மீறல்பார்வைகளையும் அனுமதித்தது. புதுமைப்பித்தன் சீற்றமும் எள்ளலும் கொண்ட கதைகளை எழுதினார். கு.ப.ராஜகோபாலன் பாலியல் உசாவல்கள்கொண்ட கதைகளை எழுதினார். ஆனால் ந.பிச்சமூர்த்தியின் கதைகள் அன்றிருந்த சமூகப்பிரச்சினைகளையும், அவற்றைக் கடந்துசெல்வதற்கான ஆன்மிக உந்துதல்களையுமே பேசின.
சிறுகதை
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகளாலேயே புகழ்பெற்றார். பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் நேரடியான யதார்த்தத்தை எளிய மொழியில் முன்வைப்பவை. அடித்தள மக்களின் வாழ்க்கையை அனுதாபத்துடன் சித்தரிக்கும் கதைகளையும் ஆன்மிகமான வினாக்கள் கொண்ட கதைகளையும் எழுதியிருக்கிறார். ந.பிச்சமூர்த்தியின் எழுத்துமரபுக்கு தமிழில் வலுவான பிற்காலத் தொடர்ச்சி உண்டு. கு. அழகிரிசாமி, கந்தர்வன் போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம்.
ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை தொகுப்பு ’பதினெட்டாம் பெருக்கு’ 1944-ல் வெளி வந்தது.
நாவல்
ந.பிச்சமூர்த்தி எழுதிய 'குடும்ப ரகசியம்' என்னும் நீள்கதையை நாவல் என அசோகமித்திரன் அவருடைய நூலில் வகைப்படுத்துகிறார். ஐந்து அத்தியாயங்களும் அறுபது பக்கங்களும் கொண்டது இந்நூல். கலைமகள் இதழில் வெளியாகி பின்னர் 1959-ல் கலைமகள் காரியாலயத்தால் இது நூல் வடிவாக வெளியிடப்பட்டது. ந.பிச்சமூர்த்தி ’வீடும் வெளியும்’ என இன்னொரு நாவலும் எழுதியிருக்கிறார் என்றும், அதை ஆனந்த விகடன் நாவல்போட்டிக்கு அனுப்பியபோது மூன்றாம் பரிசு கிடைத்தமையால் அதை திரும்பப்பெற்றுக்கொண்டார் என்றும், அதன் கைப்பிரதி தொலைந்துபோய்விட்டது என்றும் ந.பிச்சமூர்த்தியின் உறவினர் பி.வி.சுப்ரமணியன் ஒரு கட்டுரையில் தெரிவித்ததாக அசோகமித்திரன் குறிப்பிடுகிறார்.
புதுக்கவிதை
ந.பிச்சமூர்த்தி பாரதியின் வசனகவிதைகளாலும் தாகூரின் கவிதைகளின் ஆங்கில (வசன) மொழியாக்கங்களாலும் கவரப்பட்டு வசனகவிதைகள் எழுதினார். அவை அப்போது பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. ஆனால் சி.சு. செல்லப்பா பின்னர் ஜனவரி 1959-ல் எழுத்து சிற்றிதழைத் தொடங்கியபோது அதில் ந.பிச்சமூர்த்தி எழுதிய பெட்டிக்கடை நாரணன் என்னும் கவிதையை மறுபிரசுரம் செய்தார். அப்போது சூழல் மாறி புதுக்கவிதையில் ஆர்வம்கொண்ட ஓர் இளைஞர் குழு உருவாகியிருந்தது. அவர்கள் தொடர்ச்சியாக வசனகவிதைகளை எழுத்து இதழுக்கு அனுப்பினர். எழுத்து இதழில் புதுக்கவிதை இயக்கம் உருவாகியது. தொடக்கத்தில் இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர், மரபுசார் அறிஞர்களின் கடும் எதிர்ப்பு இருந்தாலும் புதுக்கவிதை இயக்கம் வேரூன்றியது. பாரதியிடம் தமிழ் வசனகவிதை தோன்றியதென்றாலும் புதுக்கவிதை இயக்கத்தின் பிதாமகராக ந.பிச்சமூர்த்தியே கருதப்படுகிறார். (எழுத்து கவிதை இயக்கம்)
கவிதையின் (கலைகளின்) சித்தாந்தம் பற்றி எழுதும்போது ந.பிச்சமூர்த்தி அழகுத்தெய்வமும் அன்புத்தெய்வமும் அகத்துள் அடிவைத்துச்செல்லும்கால் கலையுணர்ச்சி பொங்குகிறது’ (காவியத்தின் மூன்று கிளைகள்). இலக்கியம் பற்றிய அவருடைய பார்வை இதுவே
மறைவு
ந. பிச்சமூர்த்தி இறுதிக்காலத்தில் சென்னை பெரம்பூர் சங்கராச்சாரியார் மடத் தெருவில் தன் மகள் மீனாட்சி, அவள் கணவர் பாலசுப்ரமணியத்துடன் வாழ்ந்தார். நவம்பர் 15, 1976 அன்று நோய்வாய்ப்பட்டு சென்னையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூன்று வார கால தீவிர சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 4, 1976 அன்று நினைவு திரும்பாமலேயே காலமானார்.
நாட்டுடைமை
ந. பிச்சமூர்த்தியின் படைப்புகள் தமிழக அரசால் 2004-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
வாழ்க்கை வரலாறுகள், நூல்கள்
- ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் - சுந்தர ராமசாமி
- இந்திய இலக்கிய சிற்பிகள், ந. பிச்சமூர்த்தி - அசோகமித்திரன், சாகித்ய அகாடமி (இணையநூலகம்)
- ந.பிச்சமூர்த்தி நினைவாக- பி.வி.சுப்ரமணியம், தீபம் இதழ்
இலக்கிய இடம்
ந.பிச்சமூர்த்தி தமிழில் அடக்கமான, குறைத்துச்சொல்லும் யதார்த்தவாத அழகியலை முன்வைத்த சிறுகதையாசிரியர். அவருடைய சிறுகதைகள் மூன்று தளங்களில் முக்கியமானவை. அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதைகள். ஆன்மிகமான தேடலைச் சொல்லும் கதைகள். எளிய மனிதாபிமானத்தை முன்வைக்கும் கதைகள். இக்கதைகள் பின்னர் வந்த எழுத்தாளர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்தன. தலித் இலக்கியத்திற்கு முன்னுதாரணமாகச் சொல்லக்கூடிய கதைகளையும் பிச்சமூர்த்தி எழுதியிருக்கிறார். தமிழில் கு. அழகிரிசாமி ,அடுத்த தலைமுறையில் கந்தர்வன் என ந.பிச்சமூர்த்தி மரபு என ஒன்றை சுட்டிக்காட்ட முடியும்
தமிழ்ப்புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தி ஒரு முன்னோடி. புதுக்கவிதை எழுத்து இதழ் வழியாக புதிய வடிவம் எடுத்தபோது அவர் தொடர்ச்சியாக எழுதி படிமக்கவிதைக்கு உதாரணமான முக்கியமான படைப்புக்களை எழுதினார். அவருடைய கவிதை பாணியை பின்பற்றும் தி.சொ.வேணுகோபாலன் போன்ற கவிஞர்கள் எழுத்து இதழிலேயே உருவானார்கள். அதன்பின் மூன்று தலைமுறையாக எழுதும் பல கவிஞர்களில் பிச்சமூர்த்தியின் மரபு தொடர்கிறது. காட்சிவடிவமான படிமங்கள், உறுத்தாமல் குறிப்புணர்த்தும் பாணி ஆகியவை அவருடைய கவிதைகளின் இயல்புகள். கிளிக்குஞ்சு, ஆத்தூரான் மூட்டை, கொக்கு போன்றவை உதாரணம்.
"பிச்சமூர்த்தியின் கதைகள் தமிழ்ச்சிறுகதையின் வளர்ச்சியில் இதுவரை காணப்படாத ஞானநிலை உணர்வினைக் காட்டி நிற்கின்றன" என்கிறார் கார்த்திகேசு சிவத்தம்பி. "தம்முடைய கலைப்படைப்பில் கலையம்சத்துக்குச் சிறப்பிடம் கொடுக்கும் பிச்சமூர்த்தி உணர்ச்சிகளை மிகவும் லாவகமாக வெளிப்படுத்துவதில் வல்லவர்." என்கின்றனர் சிட்டி- சோ.சிவபாதசுந்தரம்.
"தமிழ் இலக்கியத்தில் இலட்சியவாத எழுத்தின் முகமாகவும் ந.பிச்சமூர்த்தி அறியப்படுகிறார். அவருடைய இலட்சியவாத யுகம் ஐம்பதுகளிலேயே மெல்லமெல்ல காலாவதியாகியது" என்று சுந்தர ராமசாமி 'ந.பிச்சமூர்த்தி மரபும் மனிதநேயமும்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார். "அவர் நன்னம்பிக்கை மனிதநேயம் இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கை ஆகிய விழுமியங்களை முன்வைக்கும் படைப்பாளியாகவே நீடிக்கிறார். இலக்கியம், அது தோன்றும் காலத்தின் கண்ணாடியாக நின்று, அக்காலத்திற்குரிய மேன்மைகளையும் பிரதிபலிக்க வேண்டும் என்று நம்பிச் செயல்பட்டவர். மென்மை, தாழ்ந்த சுருதி, தொனி, சிக்கனம் ஆகிய சிறுகதைப் பண்புகளை முதலில் உறுதிப்படுத்திய கலைஞர்" என்று சுந்தர ராமசாமி 'கலைகள் கதைகள் சிறுகதைகள்’ என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்*. 'ந.பிச்சமூர்த்தியை ஆன்மிக கற்பனைவாதி (spiritual romanticist) எனலாம். எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த் அனுதாபத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி. பிற்காலத்தில் உருவான இத்தகைய கதைகளுக்கு அவரே முன்னோடி எனலாம்’ என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
படைப்புகள்
சிறுகதைகள்
- பதினெட்டாம் பெருக்கு
- ராகு கேது
- தாய்
- வானம்பாடி
- ஆராய்ச்சி
- மருதாணி விரலெங்கே? அழகெங்கே?
- விழிப்பு
- முள்ளும் ரோஜாவும்
- சொக்கு
- மீனி
- புருஷன் எழுதின கதை
- காபூலிக் குழந்தைகள்
- அடகு
- அரைப்பைத்தியம்
- மீனலோசனி
- ஜம்பரும் வேஷ்டியும்
- மோஹினி
- குடும்ப ரகசியம் (குறு நாவல்)
- மாங்காய் தலை
- இரட்டை விளக்கு
- காக்கைகளும் கிளிகளும் (சிறுவர் கதைகள்)
- வானம்பாடி
- தரிசனம்
- பலூன் பைத்தியம்
- நெருப்புக் கோழி
- புலியின் வரிகள்
- முதல் பிடில்
- காவல்
- வெறும் செருப்பு
- ஞானப்பால்
கவிதைகள்
- காட்டு வாத்து (1962)
- வழித்துணை (1964)
- குயிலின் சுருதி (1970)
நாவல்
- குடும்ப ரகசியம்
கட்டுரைகள்
- மனநிழல் (1977)
நாடகங்கள்
- காளி (1946)
உசாத்துணை
- இந்திய இலக்கிய சிற்பிகள் , ந. பிச்சமூர்த்தி - அசோகமித்திரன், சாகித்ய அகாடமி, புது தில்லி, 2002.
- எனது இலக்கிய நண்பர்கள், எம்.வி.வெங்கட்ராம்
- புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், வல்லிக்கண்ணன்
- இலக்கிய முன்னோடிகள் - ந.பிச்சமூர்த்தி சுமையாகும் தரிசனம், ஜெயமோகன்
- ந.பிச்சமூர்த்தியின் கலை- மரபும் மனிதநேயமும்- சுந்தர ராமசாமி
- ந.பிச்சமூர்த்தி ஆய்வடங்கல், மீனாகுமாரி
- ந. பிச்சமூர்த்தி படைப்புகள் - ஓர் ஆய்வு, மீனாகுமாரி
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
- ந.பிச்சமூர்த்தி கவிதைகள், க்ரியா
- ந.பிச்சமூர்த்தி- சாரு நிவேதிதா
- ந.பிச்சமூர்த்தி அழியாச்சுடர்கள்
- ந.பிச்சமூர்த்தி பேட்டி- சி.சு.செல்லப்பா
- ந.பிச்சமூர்த்தி கதைகள்
- மகாகவி ந.பிச்சமூர்த்தி
- ந.பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்
- ந.பிச்சமூர்த்தி- கீற்று கட்டுரை
- ந.பிச்சமூர்த்தி, தென்றல் கட்டுரை
- ந.பிச்சமூர்த்தி- சுப்ரமணியம் ரமேஷ்
- யாருடைய சொத்து? ந. பிச்சமூர்த்தி பற்றி
- ந பிச்சமூர்த்தி கதைகளின் இடம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:35 IST