under review

சிட்டி

From Tamil Wiki
சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்)

சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) (ஏப்ரல் 15, 1910 - ஜூன் 24, 2006) நவீனத்தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இதழாசிரியர், இலக்கிய ஆய்வாளர், இலக்கிய, திரைப்பட விமர்சகர், இலக்கியச் செயற்பாட்டாளர். இணைத்தயாரிப்பு முறையில் எழுதுவதன் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். சோ.சிவபாதசுந்தரம், கு.ப.ராஜகோபாலன், பெ.சு. மணி, தி. ஜானகிராமன் ஆகியோருடன் இணைந்து எழுதினார். மணிக்கொடி காலகட்ட எழுத்தாளர்களில் ஒருவர். நாவல், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதினார்.

பிறப்பு, கல்வி

சிட்டியின் இயற்பெயர் பெ.கோ. சுந்தரராஜன். இவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் நத்தம் கிராமத்தில் பி.எஸ்.கோவிந்தசுவாமி, வெங்கலெட்சுமி இணையருக்கு ஏப்ரல் 15, 1910-ல் பிறந்தார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்.

சிட்டி பள்ளிக்கல்விக்குப்பின் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று வரலாற்றில் பி.ஏ.எல்.டி பட்டம் பெற்றார். அங்கு சி.என்.அண்ணாத்துரை அவரது சக மாணவ நண்பராக இருந்தார். கல்லூரியின் வரலாற்றுக்கழகத்தின் தலைவராக அண்ணாத்துரையும் செயலராக சிட்டியும் செயல்பட்டனர்.

தனி வாழ்க்கை

சிட்டி அகில இந்திய வானொலியின் முதுநிலை நிருபராக சென்னையில் பணியாற்றினார்.

சிட்டியின் மனைவி பெயர் ஜானகி. இவர்களுக்கு ஐந்து மகன்கள், ஒரு மகள். சிட்டியின் மூத்த புதல்வர் விஸ்வேஸ்வரன், கு.சின்னப்ப பாரதியின் நாவல்கள் உள்படப் பல தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.

ஆசிரியப்பணி

சிட்டி மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இதழியல்

  • சிட்டி 'நூலகம்' பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். பொதுவாக இலக்கியத்துக்கும், சிறப்பாக விமரிசனத்துறைக்கும் முக்கியத்துவம் அளித்தும் இதழ் வெளிவந்தது.
  • அகில இந்திய வானொலி இதழின் பொறுப்பாசிரியர்

இலக்கிய வாழ்க்கை

ஆங்கில இலக்கியத்தில் ஆழ்ந்த அறிவு கொண்டவர். ஆரம்பத்தில் நகைச்சுவைக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார். வ.ரா-வின் தூண்டுதலால் தமிழில் எழுத ஆரம்பித்தார். சற்றேறக்குறைய ஐம்பது சிறுகதைகள் எழுதினார். சிட்டியின் எழுத்துலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நரசய்யா விரிவாக எழுதிய ’சாதாரண மனிதன்’ என்ற நூல் 2002-ல் சென்னை கலைஞன் பதிப்பகம் மூலம் வெளியானது. கதை, கவிதை, நாடகம், வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுதினார். சிட்டி பல இடங்களுக்கும் அலைந்து தகவல்கள் திரட்டி எழுதினார். பல இலக்கிய ஆய்வாளர்களுக்கும் சிட்டியின் தகவல்கள் ஆதாரமாகத் திகழ்ந்தன. இலக்கிய உலகில் வ.ரா, கு.ப.ரா, புதுமைப்பித்தன், சி.சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், சோ.சிவபாதசுந்தரம், சுந்தா சுந்தரலிங்கம் ஆகியோருடனும் நெருக்கமான நட்பை பேணியவர். கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, வெரியர் எல்வின் போன்றோரின் நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தார்.

இணைத்தயாரிப்பு முறை

சிட்டி இணைத்தயாரிப்பு முறையில் எழுதுவதன் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து தமிழின் முதல் கவிதை நாவலான 'ஆதியூர் அவதானி' யை வெளிக்கொணர்ந்தார். தி.ஜானகிராமனுடன் இணைந்து எழுதிய, 'நடந்தாய் வாழி காவேரி' என்ற பயண நூலும் முக்கியமானது. பெ.சு.மணியுடன் சிட்டி 'அதிசயப்பிறவி வ.ரா.' என்னும் நூலை எழுதினார். சிட்டி, சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து 'சிறுகதை வரலாறும், நாவல் வரலாறும்' என்ற நூலை எழுதினார். 1930-களில் எழுந்த 'பாரதி மகாகவியா?' என்ற சர்ச்சைக்கு சிட்டி 'கண்ணன் என் கவி' என்ற பாரதி ஆய்வு நூலை கு.ப.ரா-வுடன் இணைந்து எழுதினார்.

இலக்கியச் செயல்பாடுகள்

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி சென்னை வாசகர் வட்டம் என்ற பதிப்பகத்தை தொடங்கி பல நூல்களை வெளியிடுவதற்கு சிட்டி சுந்தரராஜன் உறுதுணையாக இருந்தார். ஆரம்பத்தில் ஸ்டாலின் சீனிவாசன் வீட்டிலும், பின்னர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வீட்டிலும் மாதம் ஒரு முறை நிகழ்ந்த வெள்ளி வட்டக் கூட்டம் என்னும் இலக்கியக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

கடித இலக்கியம்

சிட்டிக்கு எழுத்தாளர் கிருத்திகாவுடன் நீண்ட கால நட்பு இருந்தது. தில்லியிலும், பல்வேறு நகரங்களிலும் வசித்த கிருத்திகா சிட்டிக்கு எழுதிய கடிதங்களும், சிட்டி அவருக்கு எழுதிய பதில் கடிதங்களும் சிட்டியின் மருமகன் நரசய்யாவின் முன்னுரையுடன் 'Lettered Dialogue' என்ற நூலாக பழனியப்பா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. வெளியீட்டு விழா மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியின் தலைமையில் நடைபெற்றது.

மறைவு

சிட்டி ஜூன் 24, 2006-ல் தன் தொண்ணூற்று ஆறாவது வயதில் காலமானார்.

விருதுகள்

  • சிட்டி, சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து எழுதிய ‘தமிழ்ச் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும்’ என்ற நூலுக்கு ‘இலக்கியச் சிந்தனை’ விருது கிடைத்தது.
  • ஐந்தாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமரால் கௌரவிக்கப்பட்டார்.

இலக்கிய இடம்

சிட்டி தன்னை-' I Am A Chronicler of Literature' – என்றே அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பியவர். ஏன் இவ்வாறு மற்றொருவருடன் இணைந்து சில முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறீர்கள்? என்று நாடகக்கலைஞரும் பொதுஜன ஊடகவியலாளருமான பரீக்ஷா ஞாநி சிட்டியிடம் கேட்டபொழுது, “அதற்குக் காரணம் என் சோம்பல்தான். என்னால் பொறுமையாக உட்கார்ந்து நிறைய எழுத முடியாது. ஆனால் தகவல்களைத் திரட்டுவது ஒழுங்குபடுத்திப் பிரிப்பது பிறகு கோர்வைப்படுத்தி அதன் அடிப்படையில் டிக்டேட் செய்வது எல்லாம் எனக்கு சுலபம்” என சிட்டி சுபமங்களாவிற்கு 1992-ல் அளித்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

சிட்டியின் இலக்கியச் செயல்பாடுகள் முதன்மையானவை. மணிக்கொடி காலகட்டம் உருவாகி வரும்போது அதில் பங்களிப்பாற்றியவர்களில் முக்கியமானவர். ”இவருடைய எழுத்துக்களில் நகைச்சுவையும், கிண்டலும் இருக்கும். நவீனத்துவம் சார்ந்த பார்வை கொண்டவராக புனைவுகளில் வெளிப்பட்டாலும் அவை தட்டையான இயங்குதன்மை கொண்டவையாக இருந்தன. நவீன சிறுகதை மரபின் செழுமைக்குப் பங்களிப்பாற்றியவர்களில் ஒருவர் எனக் கூற இயலாது. ஏனைய மணிக்கொடி எழுத்தாளர்களை ஒப்பிடும்போது தனித்து வித்தியாசமான உலகம் நோக்கி வாசகரை அழைத்துச் செல்லும் பண்புகள் கொண்டவை அல்ல. புதுமைப்பித்தன் மேலான சிட்டியின் விமர்சனம் நேரடித்தன்மை கொண்டதல்ல. சிட்டி இணைத்தயாரிப்பு முயற்சிகள் வழியாக எழுதிய நூல்கள் ஆய்வு, வரலாற்று நோக்கில் கணிப்பு மிக்கவை” என டி. மதுசூதனன் மதிப்பிடுகிறார்.

விவாதம்

புதுமைப்பித்தனின் சில கதைகள் குறித்து சிட்டி சொன்ன கருத்துக்களுக்கு புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரும், புதுமைப்பித்தனின் வரலாற்றை எழுதியவருமான தொ.மு.சி.ரகுநாதன் மிகவும் காட்டமான குரலில் சுபமங்களாவில் அவரைக் கடுமையாக விமர்சித்தார். இது குறித்து 'புதுமைப்பித்தன் – விமர்சனமும் விஷமத்தனங்களும்' என்ற விரிவான நூலையும் எழுதி வெளியிட்டார்.

நூல் பட்டியல்

நாவல்
  • பத்ம சாகஸம் (1936)
சிறுகதைத் தொகுப்பு
  • அந்திமந்தாரை (1945)
  • தாழை பூத்தது
  • மதுவிலக்கு மங்கை (1938)
இணைத்தயாரிப்பு முறை
  • தமிழ்ச் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும் (சோ.சிவபாதசுந்தரத்துடன்)
  • கண்ணன் என் கவி (கு.ப.ரா-வுடன்)
  • நடந்தாய் வாழி காவேரி (தி.ஜானகிராமனுடன்)
பிற
  • சில விஷயங்கள் (நகைச்சுவைக் கட்டுரைகள்)
  • மண்ணாங்கட்டி
மொழியாக்கம்
  • எல்வின் கண்ட பழங்குடி மக்கள்(The Tribal world of Verrier Elwin: an autobiography)
  • தமிழர் பண்பாடும் வரலாறும் (The Culture and History of the Tamils - K.A.Neelakanda Sastri)

மற்றும் சில

ஆங்கிலத்தில்
  • The Life of Satyamurthi (South Asia books, Delhi)
  • Paramacharya

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2024, 17:18:08 IST