under review

பெ.சு. மணி

From Tamil Wiki
நன்றி: தமிழ்ஹிந்து
பெ.சு.மணி
பபாசி கலைஞர் விருது
பெ.சு.மணி, வெ.சாமிநாத சர்மா

பெ. சு. மணி (நவம்பர் 2, 1933 – ஏப்ரல் 27, 2021) எழுத்தாளர், தமிழறிஞர், ஆய்வாளர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றை ஆய்வுசெய்த முதன்மை ஆய்வாளர்களில் ஒருவர். எண்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களை எழுதினார். விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு, வ.வே.சு.அய்யரின் கம்பராமாயணக் கட்டுரைகள் போன்ற நூல்களை தொகுத்து பதிப்பித்தார். விடுதலைப் போராட்ட ஆளுமைகள், வேதாந்த-சித்தாந்த ஆளுமைகள், பாரதி, ராமகிருஷ்ண இயக்கம், பிரம்மஞான சங்கம் என தமிழகத்தின் நவீனச் சிந்தனை உருவாகிய காலகட்டத்தின் சித்திரத்தில் ஒரு முக்கியமான பகுதியை எழுதினார். பண்பாட்டு ஆய்வாளர் வெ.சாமிநாத சர்மாவின் மாணவர். பாரதி ஆய்வாளர்.

பிறப்பு,கல்வி

பெ. சு. மணி வட ஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலைக்கு அருகில் கீழ்பெண்ணாத்தூரில் நவம்பர் 2, 1933 அன்று சுந்தரேசன், சேதுலெட்சுமி இணையருக்குப் பிறந்தார். தன் பள்ளிக்கல்வியை கீழ்பெண்ணாத்தூரிலும் சென்னையிலும் பயின்றார். பள்ளிக்காலத்தில் அன்றைய கம்யூனிஸ்டு கட்சியுடனும், செங்கம் பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராமசாமியுடனும் ஏற்பட்ட தொடர்பு அவருக்கு புரட்சி பற்றிய நூல்களையும் வெளியீடுகளையும் படிக்கும் வாய்ப்பைத் தந்தது.

தனி வாழ்க்கை

பெ.சு. மணி 1950-ல் சென்னையில் அஞ்சல்துறையில் பணியில் சேர்ந்தார். சரஸ்வதி அம்மாளை மணம் செய்து கொண்டார். இரு மகள்கள். ம.பொ.சிவஞானத்தின் சொற்பொழிவுகளும், மைய அரசுக்கு உட்பட்ட சுதந்திர, சுயநிர்ணய, சோசலிச தமிழ் குடியரசு என்ற கருத்தாக்கத்தாலும் கவரப்பட்டு ம.பொ.சியின் இறுதிகாலம் வரை அவரது சீடராக இருந்தார். ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். செங்கோல் இதழிலும் இவரது பங்களிப்பு இருந்தது. தமிழறிஞரான வெ.சாமிநாத சர்மாவின் தொடர்பும் கிடைத்தது. இவையனைத்தும் இவரது ஆய்வுப்பணிக்குத் தூண்டுதலாக அமைந்தன.

ஆய்வுப் பணிகள்

பெ.சு. மணி தனது ஆய்வுப் பணிக்காக மீனம்பாக்கம் அஞ்சலகத் துறையில் அஞ்சல் பிரிப்பகத்தில் இரவுப்பணிக்கு மாற்றிக்கொண்டு, மிதிவண்டியில் பகலில் நூலகங்களிலும் ஆவணக்காப்பகங்களிலும் தகவல்களும், தரவுகளும் சேகரித்தார். தமிழ்த் தேசியச் சிந்தனை அடிப்படையைக் கொண்ட அவரது ஆய்வு மார்க்ஸ், பாரதி, விவேகானந்தர் என்ற மூன்று புள்ளிகளில் தொடங்கியது. வள்ளலாருடைய சமரச சன்மார்க்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

இந்திய தேசியத்தைப் பற்றி விரிவான ஆய்வு செய்து 1973-ல் ‘இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலை வெளியிட்டார். கலாச்சாரத் தேசியத்தை அதன் முரண்பாடுகளோடு விளக்கி தமிழ் நாட்டில் ஆன்மீக இயக்கங்கள், தமிழகத்தில் காலூன்றிய ஆன்மீக சிந்தனைகள் குறித்த அவரது இரு ஆய்வு நூல்கள் ‘தமிழகத்தில் பிரம்ம சமாஜம்’, ‘தமிழ்நாட்டில் ராமகிருஷ்ண இயக்கம்’ .

இலங்கை மட்டக்களப்பில், பலநாள் தங்கி சுவாமி விபுலாநந்தரின் வாழ்வையும் பணிகளையும் ஆவணப்படுத்தினார். திருவண்ணாமலை மாவட்டத்தின் விவசாய மக்கள் பிரச்சினை குறித்து விரிவான ஆய்வு அறிக்கையை முதன்முதலில் வெளியிட்டவர் பெ.சு. மணி. பெ.சு.மணி சாகித்திய அகாடமிக்காக 'வாழ்வும் பணியும்' நூல் வரிசையில் ம.பொ.சி. மற்றும் வெ. சாமிநாத சா்மா குறித்து எழுதியுள்ளார்.

தமிழ் இதழியிலின் ஆரம்பகால முன்னோடிகளான ஜி.சுப்பிரமணிய ஐயர், சே.ப.நரசிம்மலு நாயுடு, வ.உசிதம்பரனார், வரதராஜுலு நாயுடு, வ.வேசு.ஐயர் ஆகியோருடன் நீதிகட்சியின் 'திராவிடர்' இதழையும் ஆழமாக ஆய்வு செய்து நூல்கள் எழுதினார். அனதாச்சார்லு, காஜுலு லட்சுமி நரசு, ஜி.ஏ.நடேசன், குத்தி கேசவ பிள்ளை, கிருஷ்ணசாமி சர்மா என இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்த ஆளுமைகளை ஆவணப்படுத்தினார்.

தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் வரலாறு பெ.சு. மணியின் முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. பெ.சு. மணி 80-ற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்

வெ. சாமிநாத சர்மாவின் வழிகாட்டல்

பெ.சு. மணியை ஆய்வுகள் செய்து நூல்களை எழுதும்படி வெ. சாமிநாத சர்மா பெ.சு. மணியை ஊக்குவித்தார். வெ.சாமிநாத சர்மா தன்னுடைய இலக்கிய வாரிசாக பெ.சு.மணியை அறிவித்து அவரது நூல் உரிமையையும் இவருக்கு வழங்க உயில் எழுதி வைத்தார். அதன்படி தமிழக அரசால் வெ.சாமிநாத சர்மாவின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டபோது பரிசுத் தொகை பெ.சு.மணிக்கு வழங்கப்பட்டது.

விருதுகள்

  • பாரதி விருது, தமிழ்நாடு அரசு(2001)
  • கேடயம் , சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்க மாநாடு(2020)
  • தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் சங்கம்“கலைஞர் பொற்கிழி விருது’
  • கோவை பாரதி பாசறை- பாரதி விருது

மறைவு

பெ.சு. மணி ஏப்ரல் 27, 2021 அன்று டெல்லியில் தன் மூத்த மகள் சுஜாதாவின் இல்லத்தில் காலமானார்.

இலக்கிய இடம்

பெ.சு. மணியின் நூல்கள் ஆவண முக்கியத்துவம் வாய்ந்தவை. மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளவை. பாரதியாரின் பாஞ்சாலி சபதம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 'வேணி சம்ஹாரம்' என்ற நூலின் தாக்கத்தால் உருவானது; ஔவையாரின் 55 பாடல்களை ராஜாஜி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் போன்ற அதிகம் அறியாத தகவல்கள் அறியக் கிடைக்கின்றன.

“தேசியம் இருந்திருக்கிறது. ஆனால், அதுவரை தேசியத்தை விளக்கி நூல் விரிவாக தமிழில் வந்ததில்லை. அந்தக் குறையை இந்த நூல் மூலம் போக்கியவர் பெ.சு.மணி” என்று ம.பொ. சி இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்' நூலின் முன்னுரையில் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் உருவான இந்து மத மறுமலர்ச்சி இயக்கம், சமூகசீர்திருத்த இயக்கங்கள், இந்திய தேசியப்போராட்டம் ஆகியவற்றை முறையாக ஆவணப்படுத்தி வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கிய முன்னோடி அறிஞர்களில் ஒருவர் பெ.சு.மணி. பாரதியியல் ஆய்வாளராகவும், நவீனத்தமிழிலக்கியத்தின் தொடக்க கால வரலாற்றை எழுதியவராகவும் அவருக்கு முதன்மையான இடம் உண்டு.

நூல்கள்

  • இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
  • தமிழகத்தில் ராமகிருஷ்ண இயக்கம்
  • பழந்தமிழ் இதழ்கள்
  • வீரமுரசு சுப்ரமணிய சிவா
  • எழுத்திடைச் செழித்த செம்மல் கா.சி.வெங்கடரமணி
  • பாரதியாரின் ஞானரதம் மூலமும் ஆய்வும்
  • பாரதி இலக்கியத்தில் வேத இலக்கியத்தின் தாக்கம்
  • பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள்
  • பாரதி புகழ்பரப்பிய ராஜாஜி
  • தமிழ்ப் புலவர் மரபும் பாரதி மரபும்
  • எழுத்திடைச் செழித்த செம்மல் கா.சி.வேங்கடரமணி
  • சமூகசீர்திருத்த வரலாற்றில் பாரதியார்
  • ம.பொ.சிவஞானம்- வாழ்க்கை வரலாறு
  • ஜி.சுப்பிரமணிய ஐயர்: புதிய விழிப்பின் முன்னோடி
  • வெ.சாமிநாத சர்மா -வாழ்க்கை வரலாறு
  • ஸ்ரீசாரதா தேவி வாழ்க்கை வரலாறு
  • வ.வே.சு. ஐயரின் கட்டுரைக் களஞ்சியம் [தொகுப்புநூல்]
  • வ.வே.சு. ஐயரின் கம்பராமாயணக் கட்டுரைகள் [தொகுப்புநூல்]
  • விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் [பதிப்பு]
  • சுவாமி விபுலானந்தரின் தலையங்க இலக்கியம் [பதிப்பு]
  • நீதிக்கட்சியின் திராவிடம் நாளிதழ்-ஓர் ஆய்வு
  • பெ.சு. மணியின் கட்டுரைக் கொத்து-பாகம் 1
  • பெ.சு. மணியின் கட்டுரைக் கொத்து-பாகம் 2
  • பெ.சு. மணியின் கட்டுரைக் கொத்து-பாகம் 3

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Sep-2023, 11:52:45 IST