சுவாமி விபுலானந்தர்
- சுவாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுவாமி (பெயர் பட்டியல்)
To read the article in English: Swami Vipulananda.
சுவாமி விபுலானந்தர் (மார்ச் 27, 1892 – ஜூலை 19, 1947) (சுவாமி விபுலாநந்தர், விபுலாநந்த அடிகள்,விபுலானந்த அடிகள்) இசைத்தமிழறிஞர், பேராசிரியர், துறவி. இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை என பல துறைகளில் இயங்கியவர். இசைத்தமிழ் ஆய்வு, இலக்கிய ஆய்வு, நாடகத்தமிழ் ஆய்வு, மொழியியல் என ஆய்வுப்பணிகளை விரித்துக் கொண்டவர். யாழ் நூல் என்ற இசைவரலாற்று நூலும், மதங்க சூளாமணி என்ற நாடக ஆய்வு நூலும் இவருடைய முக்கியமான படைப்புகள். முதன்மையாக தமிழிசை வரலாற்றில் மூலநூல்களில் ஒன்று என கருதப்படும் யாழ்நூல் இயற்றியவர் என அறியப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
விபுலானந்தர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் மார்ச் 27, 1892 அன்று சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிக்குப் பிறந்தார். மயில்வாகனன் என்பது இயற்பெயர். 1921-ல் ராமகிருஷ்ண மடத்தில் இணைந்து பிரபோத சைதன்யர் ஆக பெயர் மாற்றம் பெற்றார். 1921-ல் விபுலானந்தர் என்று பெயர் பெற்று துறவறம் மேற்கொண்டார்.
திண்ணைப் பள்ளியில் குஞ்சித்தம்பி என்பவரிடம் எழுத்தறிவிப்பு பெற்றார். ஆங்கிலக் கல்வி கற்கையில் கூடவே பருத்தித்துறை காரைத்தீவு பிள்ளையார் கோயில் பூசகராக இருந்த வைத்தியநாத தேசிகரிடம் சம்ஸ்கிருதமும் தமிழும் பயின்றார்.
ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்ட் ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியிலும் பயின்றார். அங்கே பிரான்ஸ் நாட்டவரான ரெவெ போனேல் என்பவர் விபுலானந்தருக்கு கணிதத்தில் ஆர்வத்தை உருவாக்கினார். தன் 16-வது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) சோதனையில் வென்ற பின்னர் புனித மைக்கேல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணிபுரிந்தார்.
விபுலானந்தர் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார். காரைதீவு வைத்திலிங்க தேசிகர், தென்கோவை கந்தையா பண்டிதர், கயிலாயபிள்ளை ஆகியோர் விபுலானந்தரின் தமிழாசிரியராக குறிப்பிடப்படுகிறார்கள். மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதலில் பெற்றவர் சுவாமி விபுலானந்தரே.
1915-ல் கொழும்பு அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916-ல் அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்தார். 1919-ல் லண்டன் பி.எஸ்.ஸி தேர்விலும் வென்றார்
விபுலாந்தரினால் ஆளுமையை உருவாக்கிய முக்கிய பின்னணிகளாக ஐந்தைக் குறிப்பிடலாம். அவையாவன:
- மரபு வழித் தமிழ்க்கல்வி
- ஆங்கிலக் கல்வி.
- விஞ்ஞான கணித அறிவு
- வடமொழி அறிவு
- இராமகிருஷ்ண மடத்தொடர்பு
- பன்மொழி அறிவு.
என்று சி.மௌனகுரு குறிப்பிடுகிறார். (சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும். முன்னுரை)
தனிவாழ்க்கை
- 1912-ல் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.
- கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
- 1917-ம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றினார்.
- வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
- திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில், 1925-ம் ஆண்டிலிருந்து முகாமையாளராகப் பணியாற்றினார்
- 1928-ல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்.
- 1926-1930 வரை திருகோணமலையில் இருந்தபடியே யாழ்ப்பாணம் இராமகிருஷ்ண மிஷன் வைத்தீசுவர வித்தியாலயத்தின் முகாமையாளராகவும் பணியாற்றினார்.
ஆசிரியப்பணி
- அர்ச்சம் பந்திராசரியர் கல்லூரி (1919)
- மானிப்பாய் இந்துக் கல்லூரி (1920)
- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1931-1933)
துறவறம்
1916-ல் யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் தன் வீட்டில் விவேகானந்த சபையை கலைப்புலவர் நவரத்தினம், செ.மயில்வாகனம், சி.முத்துக்குமாரு ஆகியோரின் உதவியுடன் தொடங்கினார். 1917-ல் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் சர்வானந்தர் இலங்கை வந்தபோது இந்த அமைப்பு அவருக்கான வரவேற்புப் பணிகளைச் செய்தது. இச்சபையின் தூண்டுதலால் ராமகிருஷ்ணமடம் யாழ்ப்பாணத்தில் நலிவுற்ற நிலையில் இருந்த வைத்தீஸ்வர வித்யாலயத்தை ஏற்றுக்கொண்டு நடத்தலாயிற்று. மானிப்பாயில் பணியாற்றுகையில் யோகசுவாமிகள் என்னும் துறவியிடமிருந்து சில யோகப்பயிற்சிகளைப் பெற்றார்.
ஆசிரியப் பதவியைத் துறந்து 1922-ல் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்தார். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சர்வானந்தரால் பிரபோத சைதன்யர் என்னும் பெயருடன் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டது. இரண்டு வருடங்கள் அங்கு பயின்றார். 1924-ம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் விவேகானந்தரின் மாணவர் சுவாமி சிவானந்தரிடம் இருந்து துறவு பெற்றுக்கொண்டார். சிவானந்தரால் சுவாமி விபுலானந்தர் என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார். ஆரம்பக்காலத்தில் சைவசித்தாந்தியாக இருந்தவர் பிற்காலத்தில் முழு வேதாந்தி ஆனார். தான் பயிற்றுவித்த வகுப்புகளில் அனைவருக்கும் ஒரே உணவு, ஒரே இருக்கை என்பதை நடைமுறையில் கொண்டு வந்தார்.
1927-ல் இலங்கை வந்த காந்தியை வரவேற்கும் யாழ்ப்பாண இளைஞர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தார். 1931-ல் அண்ணாமலைப் பல்கலை தொடங்கப்பட்டது. ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அழைப்புக்கு இணங்க சிதம்பரம் சென்று அப்பதவியை ஏற்றார். 1933-ம் ஆண்டில் ராமகிருஷ்ண நிறுவனங்களை பேணும் பொருட்டு மீண்டும் இலங்கைக்கே திரும்பினார். 1937-ம் ஆண்டு திருக்கைலாய பயணம் சென்று வந்தார். 1939-ம் ஆண்டு ராமகிருஷ்ணமடத்தின் பிரபுத்த பாரதம் ஆங்கில இதழின் ஆசிரியராக இமயமலை அடிவாரத்தில் இருந்த அல்மோராவில் மாயாவதி ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கே யாழ்நூல் பணியை தொடங்கினார். (விபுலானந்தரின் அணுக்க உதவியாளராக இருந்த ச.அம்பிகைபாகன் கட்டுரையை ஒட்டி எழுதப்பட்டது. அடிகளார் படிவமலர். [1])
இதழியல்
விபுலானந்தர்
- வேதாந்த கேசரி (ஆங்கிலம்),
- பிரபுத்த பாரதா (ஆங்கிலம்)
- இராமகிருஷ்ண விஜயம் (தமிழ்)
போன்ற பத்திரிகைகளில் பொறுப்பாசிரியராக இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
இராமகிருஷ்ண மிஷன் நடத்திய ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ் இதழுக்கும்,வேதாந்த கேசரி (Vedanta Kesari) என்ற ஆங்கில இதழுக்கும் ஆசிரியராக இருந்து கட்டுரைகளை எழுதினார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வின் தேர்வுத்தலைவராக நியமிக்கப்பட்டார். மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழ் எனும் இதழில் இலக்கியக் கட்டுரைகளை எழுதினார்.
இலக்கியத் திறனாய்வு
விபுலானந்தர் தமிழில் இலக்கியத் திறனாய்வு தொடங்கிய காலகட்டத்தில் எழுதியவர். மரபிலக்கியம் நவீன இலக்கியம் ஆகிய இரண்டு போக்குகளையும் இணைத்து ஆராய்வதற்கான கோட்பாடுகளை உருவாக்க அவர் முயன்றார். நாகரிக வரலாறு, எகிப்திய நாகரிகம். யவனபுரக்கலைச் செல்வம் , மேற்றிசைச் செல்வம் , ஐயமும் அழகும் ,உண்மையும் வடிவும் ,. நிலவும் பொழிலும், மலையும் கடலும், கவியும் சால்பும், நாடும் நகரும் ஆகிய அவருடைய கட்டுரைகள் முக்கியமானவை. இலக்கியத்தை ஒட்டுமொத்த தமிழ் நாகரீகத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும், உலக நாகரீகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், பிறகலைகளுடன் இணைத்து ஆராயவேண்டும் என்னும் கொள்கை கொண்டிருந்தார்.
மொழியாக்கம்
ஆங்கிலவாணி என்னும் தலைப்பில் உள்ள தொகுப்பில் விபுலானந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகள் உள்ளன. வால்டர் ஸ்காட் (நீர் நிலைக் கன்னி), டென்னிசன் (இரங்கற்பா), மில்டன், வேர்ட்ஸ்ஒ ர்த், கீட்ஸ் ஆகியோரின் கவிதைகள் அதில் முக்கியமானவை. ஷேக்ஸ்பியர் நாடகங்களை விபுலானந்தர் மதங்க சூளாமணி என்னும் நூலுக்காக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
கலைச்சொல்லாக்கம்
சுவாமி விபுலானந்தரின் தலைமையில் கலைச் சொல்லாக்க கழகம் 1934-ல் அமைக்கப்பட்டு 'கலைச்சொற்கள்' என்னும் அகராதி நூல் 1938-ல் சென்னைத் தமிழ்ச்சங்கத்தினால் வெளியிடப்பட்டது. தமிழில் கலைச்சொற்களை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் ஒரே பொருளுடன் தொடர்புடைய ஒவ்வோர் ஆங்கிலச் சொல்லுக்கும் தமிழில் தனிச் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதையும் கவனப்படுத்தினார். (Mirror = கண்ணாடி, Glass = படிகம்) மொழிபெயர்ப்பு பற்றிய அவரது கருத்து நெகிழ்ச்சியானது. மூலத்தின் பொருளிலிருந்து விலகாமல் இருப்பது முக்கியம் என்பது அவரது மொழிபெயர்ப்பியல் கருத்தாக்கம்.
சுவாமி விபுலானந்தர் தலைமையேற்று நடத்திய தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாடு 1936 செப்டம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழகம், இலங்கை அரசாங்கம், தென்னிந்திய ஆசிரியர் சங்கம், தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் ஆகியன அறிஞர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பியிருந்தன. சுவாமி விபுலானந்தர் கலைசொல்லாக்கக் குழுவின் தலைவராகவும், வேதியியல் கலைச்சொல் நூற் குழுவின் தலைவராகவும் இருந்து செயற்பட்டார். 1936 செப்டம்பர் 27 அன்று சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்ற போது, அவருடைய கலைச்சொல்லாக்க முயற்சிகளைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இசை ஆராய்ச்சி
சுவாமி விபுலானந்தருக்கு முன்னரே தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தொடங்கி வைத்த தமிழிசை இயக்கம் உருவாகியிருந்தது. சுவாமி விபுலானந்தர் 1931-ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக ஆனபோது தொல்தமிழர் இசை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934-ல் இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள அல்மோரா(Almorah) என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்த போது 'யாழ் நூல்' என்னும் ஆய்வுநூலை எழுத தொடங்கினார். பின்னர் இலங்கையில் பணியாற்றுகையில் எழுதி முடித்தார். (பார்க்க யாழ்நூல்)
நாடக ஆராய்ச்சி
சுவாமி விபுலானந்தரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அவர் நாடகவியலுக்கு நவீன இலக்கணம் ஒன்றை அமைக்க முயன்றது. அவர் தமிழ் இலக்கியங்கள் கூறும் நாடகவியல்செய்திகளை ஒட்டி ஷேக்ஸ்பியர் நாடகங்களை எடுத்துக்கொண்டு மதங்கசூளாமணி என்னும் நாடகநூலை இயற்றினார். ( பார்க்க மதங்க சூளாமணி)
ஆன்மிகம்
சுவாமி விபுலானந்தர் ராமகிருஷ்ண இயக்கத்தின்பால் ஈர்ப்பு கொண்டு அதில் இணைந்து பணியாற்றி நிறைவடைந்தவர். அவருடைய ஆன்மிகப் பரிணாமம் பற்றிப் பேசும் சி.மௌனகுரு "ஆரம்பத்தில் சித்தாந்தியாகக் காணப்பட்ட சுவாமிகள் பின்னாளில் பழுத்த வேதாந்தியாகக் காட்சி தருகிறார்" என்று வரையறை செய்கிறார். கலாநிதி அருணாசலம் விபுலானந்தரின் சமயப்பார்வை சைவம், வேதாந்தம் ஆகியவற்றை தழுவியதும் அனைத்து மதங்களையும் இணைத்துநோக்கும் சமரசத்தன்மை கொண்டதும் ஆகும் என வரையறை செய்கிறார்(சுவாமி விவேகானந்தரின் சமயச்சிந்தனைகள்)
விபுலானந்தர் பற்றிய ஆக்கங்கள்
மரபிலக்கியம்
விபுலானந்தர் பற்றி ஏ. பெரியதம்பிப்பிள்ளை "யாழ்நூல் தந்தோன்", "விபுலானந்த மீட்சிப் பத்து" ஆகிய நூல்களை இயற்றினார். இவற்றில் விபுலானந்த மீட்சிப் பத்து என்னும் நூல் 1944ல் விபுலானந்தர் சன்னிபாத சுரத்தில் (டைபாயிடு) இருந்து மீண்டபோது பாடியது.
நினைவுகள்
- அடிகளார் படிவமலர்[2] - ம. சற்குணம்
- விபுலானந்தர் இமயம் - மட்டக்களப்புத் தமிழ் சங்கம்
- விபுலானந்தர் காவியம் - சுப்பிரமணியம் சிவலிங்கம்
- சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும் - சி. மௌனகுரு[3]
- சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள்[4] - கா. சிவத்தம்பி
- யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும்[5] - அ. கௌரிகாந்தன்
- சுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்படம்[6]
- விபுலம், விபுலானந்த அடிகள் மலர்[7]
- சுவாமி விபுலானந்தரின் சமயச்சிந்தனைகள் கலாநிதி அருணாச்சலம்[8]
- உள்ளக் கமலம்- சுவாமி விபுலானந்தர் மலர் வவுனியா இணைய நூலகம்
- சிறுவருக்கு சுவாமி விபுலானந்தர் - ச.அருளானந்தம்
விருதுகள்
- ஈழத்து மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கை அரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைச் சேர்த்துள்ளது.
- இலங்கை பாடசாலைகளில் கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் இவரது மறைவு நாளான அன்றே கொண்டாடப்படுகின்றது.
மறைவு
யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். ஜூலை 19, 1947-ல் காலமானார். அவரது உடல், அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
விபுலானந்தர் சிலை
விபுலானந்தர் பிறந்த காரைதீவில் அவர் மறைந்து 22 வருடங்களின் பின்னர் பிரதான வீதியிலுள்ள விபுலாநந்த பொது நூலகத்தின் முன்னால் அவருடைய சிலை டாக்டர் மா.பரசுராமன் தலைமையில் நிறுவப்பட்டது. இந்தியாவிலிருந்து வருகை தந்த குன்றக்குடி அடிகளாரால் அச்சிலை அக்டோபர் 08, 1969-ல் திறந்து வைக்கப்பட்டது. அப்போது எழுத்தாளர் மா.சற்குணம் எம்.ஏ. தொகுத்த 'அடிகளார் படிவமலர்' எனும் சிலை திறப்பு விழாமலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. அச்சிலை 1990-ல் இனவன்செயலின் போது உடைத்தெறியப்பட்டது.
1999-ல் விபுலானந்தர் பிறந்த வீட்டிற்கு அருகில், அதாவது மணிமண்டபச் சூழலில் மற்றுமொரு சிலை வெ.ஜெயநாதன் தலைமையில் நிர்மாணிக்கப்பட்டது. அதனை இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மானந்த மஹராஜ் ஜூன் 26, 1999-ல் திறந்து வைத்தார். ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா தொகுத்த 'அடிகளார் நினைவாலய மலர்' எனும் சிலை திறப்பு விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ்விரு சிலைகளையும் சிற்பி மட்டக்களப்பு, புல்லுமலையைச் சேர்ந்த நல்லரெத்தினம் வடித்திருந்தார்.
2016 சித்ரா பௌர்ணமியன்று விபுலானந்தர் மறைந்து 69 வருடங்களின் பின்னர் காரைதீவின் பிரதான முச்சந்தியில், விபுலாநந்த சதுக்கத்தில் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.அச்சிலையைஇந்துமத அலுவல்கள், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திறந்து வைத்தார்[9].
இலக்கிய இடம்
சுவாமி விபுலானந்தர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சியை உருவாக்கிய முன்னோடி ஆளுமைகளில் ஒருவர். காலத்தால் திரிபடைந்தும் மறைந்தும் போயிருந்த தமிழ்நூல்களை மீட்டெடுத்துப் பதிப்பித்தல் தமிழ் மறுமலர்ச்சியின் முதல்கட்டச் செயல்பாடாக இருந்தது. அந்த நூல்களில் இருந்து தமிழ் வரலாற்றையும், தமிழ்ப்பண்பாட்டின் தொன்மையான அடிப்படைகளையும் வாசித்தெடுத்து முழுமைப்படுத்துவது இரண்டாம் கட்டச்செயல்பாடு. இந்த இரண்டாம் கட்டச் செயல்பாட்டின் முதன்மை முகம் என சுவாமி விபுலானந்தரைச் சொல்லலாம்.
விபுலானந்தரின் பங்களிப்புகள் மூன்று தளங்களில் நிகழ்ந்தன. தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தில் அவர் குறிப்பிடத்தக்க கொடை புரிந்திருக்கிறார். கலைச்சொல்லாக்கம் என்பது ஒரு கருத்துருவை மொழியில் ஒரு சொல்வழியாக நிலைநிறுத்துவதாகும். அச்சொல்லை மொழிமரபின் வேரில் இருந்து கண்டடைந்து, அதை மறுஆக்கம் செய்து நிலைநாட்டுவதன் வழியாக பண்பாட்டில் ஒரு கருத்துருவம் வேர்கொள்கிறது. அக்கருத்துருவம் வளர்கையில் அக்கலைச்சொல் மேலும் விரிவாகிறது. விபுலானந்தரின் கலைச்சொல்லாக்கங்கள் தமிழ்ப் பண்பாட்டுக்களத்திலும், இலக்கிய ஆய்வுக்களத்திலும் அடிப்படையாக அமைந்தவை.
சுவாமி விபுலானந்தரின் பங்களிப்புகளில் மதங்க சூளாமணி என்னும் நாடகவியல் நூல் முக்கியமானது. தமிழுக்கான ஒரு நாடகவியல் இலக்கணத்தை மரபுசார்ந்தும், நவீன நாடகக்களம் சார்ந்தும் உருவாக்கிய நூல் அது. அத்துடன், நாடகவியல் என்பது மெய்ப்பாடுகள் மற்றும் கருத்துக்கள் சார்ந்து அது உருவாக்கும் வரையறைகள் வழியாக இலக்கியத்தையும் பண்பாட்டையும் வகுத்துரைக்கும் தன்மை கொண்டது. விபுலானந்தரின் மதங்க சூளாமணி அத்தகைய மூலநூல்.
தமிழிசைமரபை மீட்டெடுத்ததில் விபுலானந்தரின் பங்களிப்பு மிக அடிப்படையான ஒன்று. யாழ்நூல் தமிழிசையின் அடிப்படைச் செவ்வியல் படைப்பாகக் கருதப்படுகிறது. இசையை மட்டுமல்ல, இசையுடன் இணைந்த தமிழ்ப்பண்பாட்டுச் சித்திரத்தையே அந்நூல் உருவாக்குகிறது. தமிழ் இலக்கியங்கள் பற்றிய வாசிப்பை மேம்படுத்தும் தன்மை கொண்டது.
விபுலானந்தரின் பங்களிப்பை மதிப்பிடும் சி.மௌனகுரு "அனைத்திலும் சமரசம் கண்டு நல்லன கொள்ளும் இவர் போக்கினை இலக்கியத்திலும் காண்கிறோம். மனிதரில் வேற்றுமை காணாதது போல பழைய இலக்கியமே நன்று. புதிய இலக்கியம் இலக்கணத்துள் அடங்காதது எனவே அது தீது என்றோ, செந்தமிழில் எழுதும் இலக்கியமே இலக்கியம் ஏனையவை இலக்கியமல்ல என்றோ தமிழ் இலக்கியமே சிறந்தது ஏனையவற்றுள் ஒன்றுமில்லை என்றோ இருமுறைச் சிந்தனை கொண்டவரல்லர் அடிகளார். இரண்டிலுமுள்ள நல்லனவற்றைக் கண்டு அதற்குள் சமரசம் செய்து அதன் மூலம் சிறந்த உணர்ச்சியைக் காட்டியவர்" என்கிறார்.
நூல்கள் பட்டியல்
இசை
- வங்கியம் (1942)
- சங்கீத பாரிஜாதம் (1942)
- பாரிஜாத வீணை (1944)
- யாழ்நூல்
பிற
- மதங்க சூளாமணி
- சுவாமி விபுலானந்தரின் ஆக்கங்கள் (127 கட்டுரைகளின் தொகுப்பு, 3 பாகங்கள், 1997)
- விபுலானந்தர் இலக்கியம் (தொகுப்பு)
கட்டுரைகள்
- பயனற்ற கல்வி (குமரன் 1934)
- பயனுள்ள கல்வி (குமரன் 1934)
- புதிய கல்வித் திட்டத்திற்கு ஆதரவு (1938)
- லகர எழுத்து (தமிழ்ப் பொழில்)
- சோழ மண்டலமும் ஈழ மண்டலமும் (கலைமகள்)
- கலைச்சொல்லாக்கம் (பச்சையப்பன் கல்லூரி மலர்)
- யவனபுரத்துக் கலைச் செல்வம்
- ஐயமும் அழகும்
- இலக்கியச் சுவை
சிறு பிரபந்தங்கள்
- கணேச தோத்திர பதிகம்
- மாணிக்க பிள்ளையார் இரட்டைமணி மாலை
- சுப்பிரமணிய இரட்டை மணி மாலை
- குமரவேள் நவமணிமாலை
பக்திநூல்கள்
- நடராஜ வடிவம்
- தில்லைத் திருநடனம்
ஆங்கிலக் கட்டுரைகள்
- The Phonetics of Tamil
- The Gift of Tongues
- An Essay on the Study of Language
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலவாணி (கவிதைகள்)
- சாரல் மழை (ஷேக்ஸ்பியரின் Tempest)
உசாத்துணை
- அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்
- இசைத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் (kanaga_sritharan.tripod.com)
- சுவாமி விபுலானந்த அடிகளார் | பேராசிரியர் மௌனகுரு (arayampathy.lk)
- அவர் ஜாஃப்னா இணையப்பக்கம்
- விபுலானந்தர் யார்ல் இணையப்பக்கம்
- சுவாமி விபுலானந்தர் ஆவணப்படம் - YouTube
- ஆவணப்படம் பற்றி மு. இளங்கோவன்
- அடிகளார் படிவமலர் - இணையநூலகம்
- விபுலானந்தர் சிலை அமைப்பு வரலாறு
- சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும் மௌனகுரு முழுநூலும் இணையநூலகத்தில்
- "மடத்துவாசல் பிள்ளையாரடி": விபுலாநந்த விலாசம் (madathuvaasal.com)
- விபுலானந்தர் பற்றி ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
- விபுலம் விபுலானந்தர் மலர், இணைய நூலகத்தில்
- சுவாமி விபுலானந்தர் - Thinakaran Vaaramanjari (archives.thinakaran.lk)
- ஆய்வுக்கட்டுரை- சுவாமி விபுலானந்தர் - Karaitivunews.com
- சுவாமி விபுலானந்தரின் சமயச்சிந்தனைகள் கலாநிதி அருணாச்சலம் - இணையநூலகம்
- உள்ளக் கமலம்- சுவாமி விபுலானந்தர் மலர் வவுனியா இணையநூலகம்
- விபுலானந்தர் வாழ்க்கை. மயிலை சீனி வேங்கடசாமி.இணையநூலகம்
அடிக்குறிப்புகள்
- ↑ அடிகளார் படிவ மலர் 1969 - நூலகம் (noolaham.org)
- ↑ அடிகளார் படிவ மலர் 1969 - நூலகம் (noolaham.org)
- ↑ சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும் - நூலகம் (noolaham.org)
- ↑ https://noolaham.net/project/01/58/58.htm
- ↑ https://ezhunaonline.com/books/yaalpana-samuha-uruvakkamum-vibulanantharum/
- ↑ முனைவர் இளங்கோவனின் சுவாமி விபுலானந்தர் ஆவணப்படம் - YouTube
- ↑ விபுலம்: சுவாமி விபுலாநந்தர் நினைவு விழாச் சிறப்பு மலர் 2003 - நூலகம் (noolaham.org)
- ↑ https://noolaham.net/project/684/68394/68394.pdf
- ↑ முத்தமிழ் வித்தகருக்கு காரைதீவில் உருவச் சிலை (srilanka-botschaft.de)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:08 IST