வெ. சாமிநாத சர்மா
- சர்மா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சர்மா (பெயர் பட்டியல்)
- சாமிநாதன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சாமிநாதன் (பெயர் பட்டியல்)
வெ. சாமிநாத சர்மா (வெங்களத்தூர் சாமிநாத சர்மா: செப்டம்பர் 17,1895- ஜனவரி 7, 1978) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பல களங்களில் செயல்பட்டவர். தமிழில் உலக நாடுகள், தலைவர்கள் பற்றியும், உலக இலக்கியங்கள் பற்றியும் வாசகர்களுக்கு விரிவாக அறிமுகம் செய்தவர்.
பிறப்பு, கல்வி
வெ. சாமிநாத சர்மா, செப்டம்பர் 17, 1895-ல், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெங்களத்தூர் என்னும் ஊரில், முத்துசாமி ஐயர்-பார்வதி அம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். குடும்பமே பாரம்பரியமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி, சமஸ்கிருதம் எனப் பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றது என்பதால், சாமிநாத சர்மாவும் இயல்பிலேயே பன்மொழி ஆற்றல் உடையவராய் விளங்கினார். பள்ளிப் படிப்பை செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். ஆனால் குடும்பச் சூழ்நிலையால் உயர்நிலைப் பள்ளியோடு சர்மாவின் கல்வி முற்றுப் பெற்றது. தாமாகவே பயின்று தனது தகுதிகளை வளர்த்துக் கொண்டார்.
தனி வாழ்க்கை
சுருக்கெழுத்தாளர், ஆயுள் காப்பீட்டுக் கழகப் பணியாளர், கூட்டுறவுத்துறை ஊழியர் என பல பணிகளை மேற்கொண்டார் வெ. சாமிநாத சர்மா. ஜூலை 13, 1914-ல் வெ.சாமிநாத சர்மா பதினான்கு வயதான மங்களம் என்பவரை மணந்தார்.சாமிநாத சர்மா -மங்களம் இணையருக்கு குழந்தைகள் இல்லை. மங்களம் பிப்ரவரி 13, 1956-ல் மறைந்தார்.
பர்மா வாழ்க்கை
1917 முதல் இதழாளராக இருந்த சாமிநாத சர்மா 1926-1927 ஆண்டுகளில்ல் மைசூரில் பணியாற்றினார். மே, 1932-ல் பணி வாய்ப்புக்காக தனது மனைவி மங்களத்துடன் பர்மாவுக்குச் சென்றார் வெ.சாமிநாத சர்மா. ’பாரத பந்தர்’ என்ற பெயரில் பர்மாவில் கடை ஒன்றை அமைத்து நிர்வகித்தார். அதில், வாசனைப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், சுதேசிப் பொருட்கள், கதர் பொருட்கள் போன்றவற்றை இந்தியாவில் இருந்து வரவழைத்து விற்பனை செய்தார். கூடவே பாரதியார், உ.வே.சாமிநாதையர், திரு.வி.க., பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் போன்றோரது நூல்களையும் விற்பனை செய்து வந்தார்.இரண்டாம் உலகப்போர் தீவிரமானதால் 21 பிப்ரவரி 1942ல் சாமிநாத சர்மா இந்தியவுக்கு கோஹிமா வழியாக நடந்தே திரும்பி ஏப்ரல் 24, 1942-ல் கல்கத்தா வந்தடைந்தார்.
சென்னையில் தி.நகர் உஸ்மான் சாலையில் வெ.சாமிநாத சர்மாவின் வீடு இருந்ததாக கு. அழகிரிசாமி அவருடைய நான் கண்ட எழுத்தாளர்கள் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்
இலக்கிய வாழ்க்கை
சாமிநாத சர்மாவின் முதல் கட்டுரை அக்காலத்தில் இலக்கிய இதழாக விளங்கிய இந்துநேசனில் வெளியானது. தொடர்ந்து மைசூர் சமஸ்தானம் உருவானதை பற்றிய மற்றொரு கட்டுரை 'பிழைக்கும் வழி’ என்ற இதழில் வெளியானது. அந்த ஊக்கத்தால் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். 1912-ல் 'ஹேமாங்கி' என்னும் ஆங்கில நாடகத்தை எழுதினார், அது வெளிவரவில்லை.
தமது எழுத்துக்களை வெளியிடுவதற்கென்றே ஓர் பிரசுர நிறுவனத்தை ஆரம்பித்தார் வெ. சாமிநாதசர்மா. 'செந்தமிழ்ச்சங்கம்' என்னும் அமைப்பை நிறுவிய இவர், அதன் மூலம் 'கௌரீமணி- ஓர் இனிய தமிழ்க்கதை' என்னும் நூலை எழுதி வெளியிட்டார். திருவிளையாடற் புராணத்தில் இடம் பெற்றுள்ள 'கௌரிமணி’ யின் கதையை அடிப்படையாக வைத்து அந்தக் கதையை எழுதியிருந்தார். 1914-ல் வெளியான அதுதான் சாமிநாத சர்மாவின் முதல் படைப்பு. கண. முத்தையா நடத்தி வந்த புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகம் சர்மாவின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டது. மின்னொளி பிரசுரங்கள், அறிவுச்சுடர் பதிப்பகங்கள் சார்பிலும் சர்மாவின் சில நூல்கள், சிறு பிரசுரங்கள் பர்மாவில் வெளியாகின.
பிரபஞ்சஜோதி பதிப்பகம்
தனவணிகன் இதழில் வெளியான வெ.சாமிநாத சர்மாவின் கட்டுரைகளை வாசித்து, அதன் மொழிநடையால் ஈர்க்கப்பட்டார், அரு. சொக்கலிங்கம் செட்டியார். இவர், சாமிநாத சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே 'பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்’ என்னும் ஒரு பதிப்பகத்தை பர்மாவில் (அன்றைய ரங்கூன்) நிறுவினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. சர்மாவின் 52 புத்தகங்கள் அப்பதிப்பகம் மூலம் வெளியாகின. சாமிநாத சர்மாவின் நூலைத் தவிர வேறெதையுமே தனது பதிப்பகம் மூலம் சொக்கலிங்கம் செட்டியார் வெளியிடவில்லை
படைப்புகள்
கதை, நாடகம், அரசியல், வரலாறு, கட்டுரை இலக்கியம், வாழ்க்கை வரலாறு, கடிதங்கள், பயண இலக்கியம், மொழிபெயர்ப்பு என சுமார் 78 நூல்களை வெ.சாமிநாத சர்மா எழுதியிருக்கிறார்.
பொதுஅறிவு நூல்கள்
தமிழில் மொழியாக்கங்கள் மற்றும் விளக்கநூல்கள் வழியாக அரசியல் - தத்துவம் ஆகிய துறைகளில் ஒரு தொடக்கத்தை'பிளாட்டோவின் அரசியல்’, 'ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் 'சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் 'மனிதன் கடமை’, இங்கர்சாலின் 'மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் 'சுதந்திரத்தின் தேவைகள் யாவை?’ போன்றவை சர்மாவின் நூல்களில் முக்கியமானவை.
நாடகங்கள்
சாமிநாத சர்மா எழுதிய நாடகங்களில் 'பாணபுரத்து வீரன்' குறிப்பிடத்தக்கது. அதன் வசனங்கள் மக்களிடையே தேசிய எழுச்சியைத் தூண்டும் என்றஞ்சிய ஆங்கிலேய அரசு அதற்குத் தடை விதித்தது. பின்னர் வசனங்களில் மாற்றம் செய்யப்பட்டு டி.கே.எஸ் சகோதரர்கள் அதனை நாடகமாக அரங்கேற்றினர். 'ஜீவபாலன்', 'மனோதர்மம்', 'பீஷ்மன்', 'லட்சுமி காந்தம்', 'லவகுசன்', 'உத்யோகம்', 'அபிமன்யு', 'பசிக்கொடுமை', 'வாடகைக்கு இடம்' போன்ற நாடகங்களையும் எழுதியிருக்கிறார்.
வாழ்க்கை வரலாறு
தமிழில் 'காரல் மார்க்ஸ்’ வாழ்க்கை வரலாறு பற்றி முதன் முதலாக எழுதியவர் வெ.சாமிநாத சர்மா தான். உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள், அறிவியல் அறிஞர்கள் எனப் பலரது வாழ்க்கையை மிக விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார் வெ.சாமிநாத சர்மா.நான் கண்ட நால்வர்’ என்ற வெ.சாமிநாத சர்மாவின் நூலும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. சுப்பிரமணிய பாரதியார் திரு.வி.க., வ.வே.சு.ஐயர், சுப்பிரமணிய சிவா போன்றோரைப் பற்றிய அரிய செய்திகளைக் கொண்ட நூல் இது.
தன் வரலாறு
அவரது பயண அனுபவம் பிற்காலத்தில் 'எனது பர்மாவழி நடைப் பயணம்’ என்னும் தலைப்பில் நூலாக வெளியானது. மனைவியின் பிரிவு சாமிநாதசர்மாவை மிகவும் வாட்டியது. தனது எண்ணங்களை, மனக்குமுறல்களை அவர் அரு. சொக்கலிங்கம் செட்டியாருக்குக் கடிதங்களாக எழுதினார். அதுவே பின்னர் 'அவள் பிரிவு’ என்ற தலைப்பில் நூலாக வெளியானது.
இதழியல்
தொடக்கம்
வெ.சாமிநாத சர்மாவுக்கு, டிசம்பர் 7,1917-ல், திரு.வி.க. ஆசிரியராக இருந்த 'தேசபக்தன்’ இதழில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. அங்கு துணையாசிரியராகச் சேர்ந்தார். பின் அக்டோபர் 22, 1922-ல் திரு.வி.க. ’நவசக்தி’ இதழைத் தொடங்கியபோது அதிலும் துணையாசிரியராகப் பணி புரிந்தார். 'ஸ்வராஜ்யா' நாளிதழிலும் இரு ஆண்டுகள் (1924-1926) துணையாசிரியராகப் பணியாற்றினார். சில காலம் இதழியல் துறையிலிருந்து விலகி மைசூரில் பணியாற்றிய வெ.சாமிநாத சர்மா, பின் 1930-31-ல் அடையாறு பிரம்மஞான சபை நூல் வெளியீட்டுத் துறையில் பணி புரிந்தார். அதனைத் தொடர்ந்து தனது பெயரை வெளியிட்டுக் கொள்ளாமல் சுமார் ஆறுமாத காலம் விவேகபோதினி இதழின் ஆசிரியராக இருந்தார்.
தனவணிகன்
பர்மாவில் கடை தன் ’பாரத பந்தர்’ கடைக்கு வருகை புரிந்த நண்பர்கள் மூலம் நகரத்தார்கள் நடத்தி வந்த 'தன வணிகன்’ இதழுக்கு ஆசிரியரானார்.
ஜோதி
1937-ல் 'ஜோதி' இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார் சாமிநாத சர்மா. அவரது ஆசிரியத்துவத்தில் இதழ் நன்கு விற்பனையாகி அவருக்கு நற்பெயரைத் தேடிக் கொடுத்தது. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலர் 'ஜோதி’யில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்களே. புதுமைப்பித்தனின் 'விபரீத ஆசை’ முதலான கதைகள் 'ஜோதி’யில் வெளிவந்தவை. லட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி இதழாக ஜோதியை நடத்தினார் சாமிநாத சர்மா.
'மௌத்கல்யன்’, 'தேவதேவன்’, 'வ.பார்த்தசாரதி’, 'வருணன்’, 'சரித்திரக்காரன்’ என பல புனை பெயர்களில் அவ்விதழில் எழுதினார். இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942-ல் இவ்விதழ் நின்றுபோனது.
இந்திய இதழ்கள்
வெ. சாமிநாத சர்மா பர்மாவில் இருந்து சென்னை திரும்பியதும் சக்தி வை. கோவிந்தன் நடத்தி வந்த 'சக்தி'யில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். சக்தியில் பல கட்டுரைகளை எழுதியுடன் மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டார்.
1945 முதல் 1946 வரை ஏ.கே. செட்டியார் நடத்திய 'குமரிமலர் மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1953-ல் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட 'பாரதி' இதழிலும் ஓராண்டு காலம் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
அமைப்புப்பணிகள்
வெ.சாமிநாத சர்மா 1956-ல் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
மறைவு
தம் இறுதிக் காலத்தில் 1971 முதல் ஏழாண்டுகள் சென்னை கலாஷேத்ராவின் குடில் ஒன்றில் தனியாக வசித்து வந்தார் வெ.சாமிநாத சர்மா. தம் நூல்கள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எழுத்தாளரும், ஆய்வாளருமான பெ.சு. மணியிடம் கையளித்தார். அதன் பிறகு அவர் எதுவுமே எழுதவில்லை. இதழியல் துறையில் இருந்தும் படைப்பிலக்கியத் துறையிலிருந்தும் முற்றிலுமாக ஒதுங்கி இருந்தார்.
ஜனவரி 7, 1978-ல் வெ.சாமிநாத சர்மா காலமானார்.
பாராட்டுகள்
வெ.சாமிநாத சர்மாவுக்கு பிப்ரவரி 6, 1954-ல் தமிழ் எழுத்தாளர் சங்கம் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார் தலைமையில் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது..
ஆவணம்
வெ. சாமிநாத சர்மாவின் நூல்களை 2000-ல் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. அவரது நூல்களில் சிலவற்றை தமிழ் இணைய நூலகம் ஆவணப்படுத்தியுள்ளது. தமிழ்மண் பதிப்பகம் , வெ.சாமிநாத சர்மாவின் நூல்களை 31 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.
வெ.சாமிநாத சர்மாவின் வாழ்க்கையை சாகித்ய அகாதமிக்காக பெ.சு.மணி ஆவணப்படுத்தியுள்ளார்.
இலக்கிய இடம்
இந்தியாவில் தேசியக் கல்வி இயக்கம் 1920-களில் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து தேசிய இயக்கம் வலுப்பெற்றது. தொடர்ந்து இடதுசாரி அரசியல் இங்கே தொடங்கியது. விளைவாக இந்தியமக்களிடையே உலக சிந்தனைகளையும், அயல்நாடுகளையும் அறியும் ஆர்வம் உருவாகியது. இரண்டு உலகப்போர்களும் பொது அறிவுநாட்டத்தை வலுப்படுத்தின. இந்தியாவெங்கும் ஓர் அறிவியக்கம் உருவாகியது. தமிழில் அந்த அறிவியக்கத்தை முன்னெடுத்த அறிஞர்களில் முதன்மையானவர் வெ.சாமிநாத சர்மா. ஐரோப்பிய சிந்தனைகளையும் ஆளுமைகளையும், தேசியத்தலைவர்களையும் தமிழில் அறிமுகம் செய்யும் அவருடைய நூல்கள் தமிழில் ஓர் அலையை உருவாக்கியவை. முதன்மையாக தமிழின் முன்னோடி அறிவியக்கவாதியாக சாமிநாத சர்மா மதிக்கப்படுகிறார். பெ.நா. அப்புசாமி ஐயர், டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றவர்கள் அவ்வாறு குறிப்பிடப்படும் பிறர்.
நூல்கள்
வாழ்க்கை வரலாறுகள்
- லோகமான்ய திலகர்
- ரமண மகரிஷி
- பண்டிட் மோதிலால் நேரு
- முஸோலினி
- அபிசீனிய சக்கரவர்த்தி
- ஹிட்லர்
- காந்தியும் - ஜவஹரும்
- காந்தியும் விவேகானந்தரும்
- சார்லஸ் டார்வின்
- ஸர். ஐசக் நியூட்டன்
- ஸர். ஜகதீச சந்திரபோஸ்
- தாமஸ் எடிசன்
- ஸர். பிரபுல்ல சந்திரரே
- ஸர். சி. வி. ராமன்
- கமால் அத்தாதுர்க்
- ரூஸ்ஸோ
- கார்ல் மார்க்ஸ்
- ராமகிருஷ்ணர் ஒரு தீர்க்கதரிசி
- மாஜினி
- ஸன்யாட்சென்
- நான் கண்ட நாவலர்
- சமுதாயச் சிற்பிகள்
மொழிபெயர்ப்புகள்
- மானிட ஜாதியின் சுதந்திரம்
- மனோ தர்மம்
- மகாத்மா காந்தி
- மாஜினியின் மனிதன் கடமை
- சமுதாய ஒப்பந்தம்
- பிளேட்டோவின் அரசியல்
- ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்
- சுதந்திரத்தின் தேவைகள் யாவை?
- பிளேட்டோவின் கடிதங்கள்
அரசியல் நூல்கள்
- ஏப்ரல் 1919 அல்லது பஞ்சாப் படுகொலை
- பிரிக்கப்பட்ட பர்மா
- பெடரல் இந்தியா
- சமஸ்தான இந்தியா
- உலகக் கண்ணாடி
- ஸ்பெய்ன் குழப்பம்
- செக்கோஸ்லோவேகியா
- பாலஸ்தீனம்
- அரசியல் வரலாறு
- ஆசியாவும் உலக சமாதானமும்
- ஐக்கிய தேசஸ்தாபனம்
- அரசாங்கத்தின் பிறப்பு
- பிரஜைகளின் உரிமைகளும், கடமைகளும்
- அரசியல் கட்சிகள்
- நமது தேசியக் கொடி
- பார்லிமெண்ட்
- புராதன இந்தியாவின் அரசியல்
கட்டுரை இலக்கியம்
- காந்தி யார்?
- நமது பிற்போக்கு
- எப்படி வாழ வேண்டும்?
- மனிதன் யார்?
- பெண்மையிலேதான் வாழ்வு
- இக்கரையும் அக்கரையும்
- காந்தியடிகளும் கிராம வாழ்க்கையும்
- நகைத்தல் நல்லது
- நாடும் மொழியும்
- சுதந்திரமும் சீர்திருத்தமும்
கடித இலக்கியம்
- மகனே உனக்காக
- அவள் பிரிவு
- வரலாறு கண்ட கடிதங்கள்
பயண இலக்கியம்
- எனது பர்மா வழி நடைப் பயணம்
தேச வரலாறுகள்
- நமது ஆர்யாவர்த்தம்
- ருஷ்யாவின் வரலாறு
- சீனாவின் வரலாறு
- கிரீஸ் வாழ்ந்த வரலாறு
- புதிய சீனா
சிறுகதை நூல்கள்
- கௌரீ மணி
- தலை தீபாவளி
நாடகங்கள்
- லெட்சுமிநாதன்
- உத்தியோகம்
- பாணபுரத்து வீரன்
- அபிமன்யு
- உலகம் பலவிதம் (நாடகங்களின் தொகுப்பு)
மணிமொழிகள்
- சுதந்திர முழக்கம்
- மாஜினியின் மணிமொழிகள்
- இந்தியாவின் தேவைகள் யாவை?
ஆங்கில நூல்
- Essential Of Gandhism
உசாத்துணை
- இந்திய இலக்கியச் சிற்பிகள் - வெ.சாமிநாத சர்மா - ஆர்கைவ் இணைய தளம்
- வெ.சாமிநாத சர்மாவின் நூல்கள்: தமிழ் இணைய நூலகம்
- சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் வெ.சாமிநாத சர்மா பற்றிய கட்டுரை
- வெ.சாமிநாத சர்மா -கீற்று
- வெ.சாமிநாத சர்மா - துறவிக்கு வேந்தன் துரும்பு
- வெ.சாமிநாத சர்மா பசுபதி தொகுப்பு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Jun-2023, 03:43:55 IST