under review

சக்தி (இதழ்)

From Tamil Wiki
சக்தி இதழ், 1941

பர்மாவிலிருந்து தமிழகத்துக்கு வந்த வை. கோவிந்தன், 1939, ஆகஸ்ட்டில் தொடங்கிய இதழ் ‘சக்தி.’ மாத இதழாக வெளிவந்த சக்தி, தனது மலிவு விலைப் பிரசுரங்கள் மூலம் தரமான இலக்கிய நூல்கள் பலவற்றைப் பொது மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த இதழுக்கும், சக்தியின் பிற பிரசுரங்களுக்கும் கிடைத்த வரவேற்பால், வை. கோவிந்தன், ‘சக்தி’ வை. கோவிந்தன் என்று அழைக்கப்பட்டார்.

சக்தி இதழ் சின்னம்

பதிப்பு, வெளியீடு

1920-க்குப் பிறகு, காந்தியால் ஏற்பட்ட சுதந்திரத் தாகம் மற்றும் விழிப்புணர்ச்சியால், தமிழகத்தில் பல இடங்களிலும் அச்சுக்கூடங்கள் உருவாகின. பல பத்திரிகைகள் வெளியாக ஆரம்பித்தன. ஆர்வமுள்ள பலர் இதழ்களைத் தோற்றுவித்து வெளியிட முன் வந்தனர். அவர்களில் ஒருவர் 1934-ல் பர்மாவிலிருந்து தமிழகத்துக்கு வந்த வை. கோவிந்தன். அவரால் ஆரம்பிக்கப்பட்ட இதழ்தான் ‘சக்தி.

1939, ஆகஸ்ட்டில், புதுக்கோட்டை ராமச்சந்திரபுரத்தில் தோன்றிய இவ்விதழ், பின்னர் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது. ஆரம்பத்தில் வை . கோவிந்தன் வெளியீட்டாளராகவும், அ . கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராகவும் இருந்தனர்.

இன்றைய ‘மியூசிக் அகாதமி’ இருக்கும் இடத்தில் அந்தக் காலத்தில் ’சக்தி காரியாலயம்’ செயல்பட்டது. சக்தி இதழின் சின்னமாக ‘கலங்கரை விளக்கம்’ இருந்தது. சக்தி நடுவே சில காலம் தொடர்ந்து வெளிவராமல், இடைவெளி விட்டு வெளிவந்தது. மொத்தம் 141 இதழ்களை வெளியிட்டது. பத்திரிகைக் காகிதக் கட்டுப்பாட்டுச் சட்டம் வந்ததை ஒட்டி, சிலகாலம் இதழாக வெளிவராமல் புத்தகமாகவும் வெளிவந்தது.

நல்ல அச்சிலும் அழகான வடிவமைப்பிலும் சக்தி இதழ் பல ஆண்டுகள் வெளிவந்து, இதழுலகில் தனக்கென ஓர் தனி இடத்தைப் பெற்றது.

இதழின் சந்தா விவரம்

இந்தியாவில், ‘சக்தி’ இதழின் தனிப் பிரதி ஒன்றின் விலை நான்கணா. ஆறு மாதச் சந்தா ரூபாய் இரண்டு. வருடச் சந்தா ரூபாய் மூன்று என்று விற்பனை செய்யப்பட்டது. பர்மாவுக்கு ஆறு மாதச் சந்தா, இரண்டு ரூபாய் நான்கணா. வருடச் சந்தா நான்கு ரூபாய். மலேயாவுக்கு ஆறு மாதச் சந்தா இரண்டு ரூபாய் பனிரண்டணா. வருடச் சந்தா ரூபாய் ஐந்து என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

காலமாற்றத்திற்கேற்ப, பிற்காலத்தில் இதன் விலை உயர்த்தப்பட்டது.

இதழின் நோக்கம்

ஆங்கில இதழான டைம்ஸ் இதழைப் போன்று தமிழில் ஓர் இதழைக் கொண்டு வரவேண்டுமென்று விரும்பினார் வை. கோவிந்தன். அதற்காக, ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில், ‘சக்தி காரியாலயம்’ என்பதைத் தோற்றுவித்து அதன் மூலம் சக்தியை வெளியிட்டார். இதற்கு முன் இம்மாதிரி இதழ் வந்ததில்லை” என்று வாசகர்கள் கருதுமளவிற்கு மிகச் சிறப்புடன் வெளிவந்தது சக்தி.

இதழின் தோற்றம் குறித்து சக்தி. வை. கோவிந்தன், “மனித சமுதாயம் பூரணம் பெறுவதற்கு ஆத்ம ஞானமும் வேண்டும்; லௌகீக ஞானமும் வேண்டும். அருளறிவு, பொருளறிவு, கடவுட் கலை, இயற்கலை ஆகியவற்றைச் சக்தி தூண்டுவாள். மடமை, வறுமை, அடிமைத்தனம் இம்மூன்றும் நமது நாட்டைத் துன்புறுத்தும் இடர்களாம். இவற்றை நீக்க அறிவு, தொழில், வீர சுதந்திரம் ஆகிய மூன்று சக்திகள் வேண்டும். நமக்கு இவ்வாறு எத்தனையோ அரும்பணிகள் உள்ளன. காலத்தின் தேவைக்கும், மாறுதலுக்கும் ஏற்றபடி, நாட்டின் புதிய முன்னேற்றத்தைக் கருதிச் சிறந்த அறிவாளிகளின் கூட்டுறவால் சக்தி பல துறைகளிலும் தன்னால் இயன்ற பணி செய்யவே தமிழர் முன் தோன்றுகிறாள்” என்று ஆசிரியர் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். இவ்விதழின் ஆசிரியர் குழுவில் தி. ஜ. ரங்கநாதன், சுப. நாராயணன், ரகுநாதன், கு. அழகிரிசாமி உள்ளிட்டோர் பணிபுரிந்தனர். சுத்தானந்த பாரதியார் , விஜய பாஸ்கரன், தமிழ்வாணன் , ரா.கி. ரங்கராஜன், கண்ணதாசன், சின்ன அண்ணாமலை போன்றோரும் சில காலம் இவ்விதழிலும், இதன் இணைப்பு இதழ்களிலும் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளனர்.

விடுதலை உணர்ச்சியை மக்களிடையே எழுப்புவதையும், காந்தியக் கருத்துக்களை மக்களிடையே பரப்புவதையும் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது சக்தி. முதல் இதழ் தொடங்கி , இறுதி இதழ் வரையிலும் காந்தியின் எழுத்தோ, பேச்சோ அல்லது அவர் பற்றிய செய்தியோ வராத இதழே இல்லை என்று சொல்லும் அளவுக்கு காந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘சக்தி’ இதழ் வெளிவந்தது.

சக்தி இதழின் உள்ளடக்கம்
”பசுவும் கன்றும்” - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

உள்ளடக்கம்

சக்தி இதழின் முகப்பு அட்டையில் காந்தி, நேரு, உ. வே. சாமிநாதையர், திரு. வி. கலியாண சுந்தர முதலியார் போன்ற தேசத் தலைவர்கள், சான்றோர்கள், தமிழறிஞர்களின் படங்கள் இடம் பெற்றன. அவர்களைப் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் இதழின் உள்ளே இடம் பெற்றன.

இதழின் ஆண்டைக் குறிக்க ‘மலர்’ என்பதும், மாதத்தைக் குறிக்க ‘இதழ்’ என்பதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு இதழும் தமிழ் ஆண்டு , தமிழ் மாதங்களின் பெயர்களுடனேயே வெளிவந்தன. பக்கங்கள் இதழ்களைப் பொறுத்து 80-102 வரை கொண்டதாக வெளிவந்தன. பக்கங்களின் எண்கள் கூடத் தமிழிலேயே குறிப்பிடப்பட்டிருந்தன. இரண்டாவது உலகப் போர் நடந்த சமயத்தில் மட்டும் , காகிதப் பற்றாக்குறை காரணமாக இதழ்களின் பக்கங்கள் குறைக்கப்பட்டன.

இதழின் முகப்பில், ‘சக்தி’ என்ற தலைப்பிற்குக் கீழ்,

”அன்பும் அறிவும் அறமும் திருவும் அருளும் ஆற்றலும்

இன்ப வாழ்வும் விளங்கச் சக்தி எழுந்து பொலிகவே” - என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. பிற்காலத்து இதழ்கள் பலவற்றுக்கு முன்னோடியாக இருந்தது சக்தி. அரசியல், இலக்கியம், வரலாறு, கதை, கட்டுரை, ஆராய்ச்சி, அறிவியல் எனப் பல பகுதிகள் இவ்விதழில் இடம்பெற்றன. வெளிநாட்டு எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள் எனப் பலரைத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை சக்திக்கு உண்டு. காந்தியின் கொள்கைகளைப் பரப்பியதில் சக்திக்கு மிக முக்கிய இடமுண்டு. சுத்தானந்த பாரதியின் ‘பாரதசக்தி மஹா காவியம்’ சக்தி இதழில் தான் தொடராக வெளியானது. [[எஸ். வையாபுரிப் பிள்ளை ]]யின் ‘பாரத வெண்பா - ஆராய்ச்சி’ சக்தியில் தான் தொடராக வெளியானது. [[மு. அருணாசலம் |மு. அருணாசல]]த்தின் கட்டுரைகள் இதில் வெளியாகிய பின்னரே நூல் வடிவம் பெற்றன. நல்ல அச்சிலும் அழகான வடிவமைப்பில் சக்தி இதழ் பல ஆண்டுகள் வெளிவந்தது. இதழில் விளம்பரங்களும் இடம் பெற்றுள்ளன. கவிமணியின் புகழ் பெற்ற பாடலான, ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு - அங்கே

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்குது வெள்ளை பசு - உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி ”என்ற பாடல், ‘சக்தி’ இதழில் வெளியாகியுள்ளது.

புதிய எழுத்து - ரோமன் எழுத்தில் தமிழ்
ரோமன் எழுத்துருவில் தமிழ் - வாசகர் கடிதம்

ரோமன் எழுத்துக்களில் தமிழ்

மொழிக் கொள்கையில், தமிழை ரோமன் எழுத்தில் எழுத்துவது குறித்து வலியுறுத்திப் புதிய முறையைக் கொண்டுவர எண்ணியது சக்தி. அது பற்றிய கட்டுரைகள் இதழில் வெளியாகியுள்ளன. ஏப்ரல், 1946-ல், சக்தி இதழில், ‘புதிய எழுத்து’ என்ற தலைப்பில் அக்கட்டுரை வெளியானது.

அக்கட்டுரையில், “உலகத்துப் போக்கையும், நம் நாட்டு அறிஞர் சிலருடைய கொள்கைகளையும் நோக்கும்போது, ரோமன் எழுத்துக்களில் தமிழை எழுதினால் நலம் என்று படுகிறது. இப்போது, தமிழில் டைப் அடிப்பதென்றால் எவ்வளவோ துன்பப்பட வேண்டியிருக்கிறது. அச்சுக் கோப்பதிலும் அளவற்ற இடைஞ்சல்கள் உண்டு. மேலும், நான்கு பக்கம் உள்ள ஆங்கிலக் கட்டுரையைத் தமிழில் மொழி பெயர்த்தால், அது ஆறு பக்கம் வருகிறது. தமிழிலுள்ள எழுத்துக்களின் பெருக்கமும், சங்கடமான எழுத்து முறையுந்தான் இந்தக் கஷ்டங்களுக்குக் காரணமாகின்றன. ரோமன் எழுத்துக்களைக் கையாளுவதாயின், இந்தத் தொந்தரவுகள் நீங்க வழியுண்டு என்று கண்டோம்.

என்னென்ன எழுத்துக்களை எவ்வெவ்வாறு எழுத வேண்டு மென்பதைப் பார்க்கலாம்: ஆங்கிலத்திலுள்ள பெரிய எழுத்து, சின்ன எழுத்து என்ற இரு பிரிவுகளையும் முழுவதாக நாம் ஏற்க வேண்டியதில்லை . ஆங்கிலத்திலுள்ள Q, W, X என்ற மூன்று எழுத்துக்கள் நமக்குத் தேவையில்லை. ள, ண ற, ழ என்ற சிறப்பெழுத்துக்களைக் குறிக்கப் பெரிய ரோமன் எழுத்துக்களான L, N, R, Z என்றவற்றைக் கையாள வேண்டும். உயிர் எழுத்துக்களிலுள்ள குறில், நெடில் வேறுபாட்டை எவ்வாறு காட்டுவதெனக் கேட்கலாம். குறிலுக்குச் சிறிய ரோமன் எழுத்தும், நெடிலுக்குப் பெரிய ரோமன் எழுத்தும் கையாளலாம்”- என்று குறிப்பிட்டுள்ளனர்.

இம்முயற்சியை வரவேற்று மே 1946 சக்தி இதழில் வாசகர்கள் நிறையக் கடிதங்களும் எழுதியுள்ளனர். ’நாங்கள் தயார்’ என்ற தலைப்பில் அது வெளியாகியுள்ளது. இந்த முயற்சிக்கு ஆதரவு இருந்த அதே சமயம் எதிர்ப்பும் இருந்தது.

பங்களிப்பாளர்கள்

கு.ப. ராஜகோபாலன் சுத்தானந்த பாரதியார் டி.கே. சிதம்பரநாத முதலியார் ஏ.கே. செட்டியார் வெ . சாமிநாத சர்மா இரா. ஹாலாஸ்யநாதன்

எம். எஸ். சுப்பிரமணிய ஐயர்

டி.வி. திருவேதி கொத்தமங்கலம் சுப்பு சங்கு சுப்பிரமணியம் சுரபி

ரா. ஸ்ரீ. தேசிகன்

ஸி. ஆர். சரோஜா

செல்லம்மாள் எஸ். விசாலாட்சி பத்மாசினி அம்மாள்

தேசிக விநாயகம் பிள்ளை

பண்டித முத்துசாமி

ஆர். திருஞானசம்பந்தன்

ஸரஸி

டாக்டர் ல. காமேஸ்வர சர்மா

எஸ். வையாபுரிப் பிள்ளை

மு. அருணாசலம்

வி.ஆர்.எம். செட்டியார்

தி.ஜ. ரங்கநாதன்

வே.நாராயணன்

ரா. நாராயணன்

மஞ்சேரி எஸ். ஈஸ்வரன்

கு. அழகிரிசாமி லா.ச. ராமாமிர்தம் தொ.மு.சி. ரகுநாதன்

“இனி நாம் செய்ய வேண்டியது யாது?” - புத்தக விளம்பரம்

‘சக்தி’ மலர்கள்

அரசியல் நூல்கள், வரலாற்று நூல்கள், விவசாய நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் என்று பல தரப்பட்ட நூல்கள் சக்தி காரியாலயம் மூலம், ‘சக்தி மலர்கள்’ என்ற பெயரில் வெளிவந்தன. ரஷ்ய நூல்களை, இலக்கியங்களை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது சக்தி வை. கோவிந்தன் தான். “What’s will we do that?” “இனி நாம் செய்ய வேண்டியது யாது?” என்னும் டால்ஸ்டாய் நூல்தான் சக்தி மலர் வெளியிட்ட முதல் நூல். சக்தி வை கோவிந்தன், காந்தியவாதி. ஆனால், அவர் காரல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் வெளியிட்டார். செல்லம்மா பாரதி எழுதிய, ‘பாரதியார் சரித்திரம்’, வ.ரா. எழுதிய மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு போன்ற நூல்களை வெளியிட்டதும் ‘சக்தி’ தான்.

சக்தி காரியாலயம் கடைசியாக வெளியிட்டது தினமணி ஆசிரியர் சொக்கலிங்கம் மொழிபெயர்த்த ‘வார் அண்ட் பீஸ்’ நூல். மொத்தம் 45 மலர்களை சக்தி காரியாலயம் வெளியிட்டுள்ளது.

’சக்தி’ இதழ் மூலமும், ‘சக்தி மலர்கள்’ மூலமும், தமிழ் நூல் வெளியீட்டில் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்ந்தார் சக்தி. வை. கோவிந்தன்.

மங்கை இதழ்

மங்கை

பெண்கல்வி, ஆண்-பெண் சமத்துவம், பெண்களுக்கு சொத்துரிமை, பொருளாதாரச் சுதந்திரம் எனப் பெண்ணியக் கருத்துகள் பலவற்றைக் கொண்ட ‘மங்கை’ என்ற பெண்களுக்கான இதழையும் சக்தி காரியாலயம் வெளியிட்டது. குகப்ரியை அதன் ஆசிரியராக இருந்தார்.

அணில்

சிறார்களுக்கான மாய, மந்திர ஜாலங்கள் நிறைந்த கதைகளை வெளியிடுவதற்காக ‘அணில்’ என்ற இதழ், 1947-ல், வை. கோவிந்தனால் தொடங்கப்பட்டது. வை. கோவிந்தனே முதலில் ஆசிரியராக இருந்தார். ‘அணில் அண்ணா’ என்ற பெயரில் குழந்தைகளுக்கான கதைகளையும் அவ்விதழில் அவர் எழுதி வந்தார். வை. கோவிந்தன் ஒரு கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், ‘சக்தி’யில் பணியாற்றிக் கொண்டிருந்த தமிழ்வாணன், அணிலின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

வை.கோவிந்தன் அணில் இதழின் ஆசிரியராய் இருந்த போது, இதழ்கள் ஐயாயிரம் பிரதிகள் விற்றன. தமிழ்வாணன் ஆசிரியராய் பொறுப்பேற்று அணில் இதழின் விற்பனையை இருபத்தி ஐயாயிரமாக உயர்த்தினார்.

நிறுத்தம்

சக்தி இதழ் 1954-ம் ஆண்டோடு நிறுத்தப்பட்டது.

ஆவணம்

சக்தி இதழ்களின் பல பிரதிகள் தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. சக்தி இதழில் வெளியான சில படைப்புகள் தொகுக்கப்பட்டு ‘சக்தி களஞ்சியம்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

வரலாற்று இடம்/மதிப்பீடு

இலக்கிய இதழ்களில் தனித்துவம் மிக்க இதழாக வெளிவந்தது சக்தி. அரசியல் சித்தாந்தங்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் தந்ததும், வெளிநாட்டு நூல்கள் பலவற்றை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதும், பாரதியார் பாடல்கள், திருக்குறள் போன்றவற்றை மலிவு விலைப் பிரசுரங்களாக வெளியிட்டு அனைவரது கைக்கும் அந்த நூல்கள் கிடைக்கும்படிச் செய்தததும் சக்தியின் மிக முக்கியச் சாதனையாகும்.

எளியவர்களிடமும் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்த முதன்மையான இதழாக சக்தியை மதிப்பிடலாம்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Mar-2023, 06:56:34 IST