under review

தேசிகவினாயகம் பிள்ளை

From Tamil Wiki
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
கவிமணி நினைவோடை, சுந்தர ராமசாமி

தேசிக விநாயகம் பிள்ளை (கவிமணி ) (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) (கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை) தமிழறிஞர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கல்வெட்டாய்வாளர். தமிழ் நவீன இலக்கியம் தோன்றிய காலகட்டத்தில் தேசிய இயக்கப் பாடல்கள், பக்திப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள் என பலவகையான பாடல்களை பாடியவர். கவிமணி என்று அழைக்கப்படுகிறார். தமிழகக் கல்வெட்டு ஆய்வின் முன்னோடிகளில் ஒருவர். கவிமணி என்னும் அடைமொழியுடன் அறியப்பட்டார்.

பிறப்பு, கல்வி

கவிமணி, அலுவலகத்தில்

தேசிகவிநாயகம் பிள்ளை என்ற கவிமணி ஜூலை 27, 1876-ல் தென்திருவிதாங்கூரில் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) தேரூர் என்ற ஊரில் சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி இணையருக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பிறகு மூன்றாவது மகனாக பிறந்தார். கவிமணியின் பாட்டனார் மாணிக்கவாசகம் பிள்ளை தமிழறிஞர், காரியந்தாதி என்னும் நூலின் ஆசிரியர். கவிமணியின் தாய்மாமன் சொற்பொழிவாளரான கம்பராமாயணம் பாலசுப்ரமணிய பிள்ளை. கவிமணியின் மனைவியின் தமையன் சங்கரநாராயண பிள்ளையும் கம்பராமாயணச் சொற்பொழிவாளர். கவிமணியின் தந்தை சிவதாணுப்பிள்ளை அழகியபாண்டிபுரம் உப்புப் பண்டகசாலையில் கண்காணிப்பாளராக திருவிதாங்கூர் அரசு ஊழியராகப் பணியாற்றினார். கவிமணியின் அன்னை ஆதிலட்சுமியின் தந்தை மாணிக்கவாசகம் பிள்ளை நாகப்பட்டினத்தில் கப்பல் வணிகம் செய்து வந்தவர்.

கவிமணி இளவயதில் மலையாளம் படித்தாலும் தமிழை கற்றுக் கொண்டார். தேரூர் திருவாவடுதுறை தம்புரானிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். தனது ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். புகுமுக வகுப்பான எஃப்.ஏ. படித்த கவிமணி கல்லூரிப்படிப்பை தொடரவில்லை. பின்னர் ஆசிரியர் பயிற்சி படித்தார். தேரூர் அருகே திருவாவடுதுறை மடத்திற்கு சொந்தமான மடத்தில் தங்கியிருந்த சாந்தலிங்கத் தம்புரான் என்பவரிடம் தமிழ் பக்தி இலக்கியங்களை பாடம் கேட்டார்.

தனிவாழ்க்கை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தான் படித்த கோட்டார் ஆரம்பப்பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். 1901-1902-ல் நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியிலும், 1902-1931-ல் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியிலும் ஆசிரியப்பணி புரிந்தார். அங்கே கல்லூரித்தலைவியாக வந்த ஓர் அம்மையாருடனான கருத்துவேறுபாட்டால் பதவியை துறந்து நாகர்கோயில் திரும்பினார்.

கவிமணி உமையம்மை எனும் பெண்ணை 1901-ல் மணம் முடித்தார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார்.

1931-1954-ம் ஆண்டுகளில் நாஞ்சில் நாட்டுப் புத்தேரியில் வாழ்ந்த காலக்கட்டத்தில் கு. அழகிரிசாமி, டி.கே சாமிநாத சர்மா போன்ற அறிஞர்கள், இராஜாஜி, சிவாஜிகணேசன், என்.எஸ். கிருஷ்ணன், எம்.கே.டி. பாகவதர் என அன்றைய பிரபலங்கள் எல்லோரும் அவரைச் சந்தித்துள்ளனர். அவரது சமகாலக் கவிஞர்களில் மிகவும் மதிக்கப்பட்டதற்கு அவர் சிறந்த உரையாடல்காரர் என்பதும் கூடக் காரணம் என்கிறார் சுந்தர ராமசாமி.

இலக்கிய நண்பர்கள்

கவிமணி ஓர் இலக்கிய மையமாகத் திகழ்ந்தார். எஸ். வையாபுரிப் பிள்ளை, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி , டி.கே.சிதம்பரநாத முதலியார் ,கல்கி , கே.என். சிவராஜ பிள்ளை ஔவை டி.கே.சண்முகம், ப.ஜீவானந்தம் , அ.சீனிவாசராகவன் , பி.ஶ்ரீ.ஆச்சார்யா , மீ.ப. சோமு என அவருடைய நட்புவட்டம் மிகப்பெரியது. கல்வெட்டாய்வு, வரலாற்றாய்வு, இலக்கியம் ஆகிய தளங்களில் அவர் அவர்களுடன் தொடர் உரையாடலில் இருந்தார்.

கவிமணி

இலக்கிய வாழ்க்கை

கவிமணி தன் இருபது வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். ஆரம்ப காலத்தில் கவிமணி எழுதிய கவிதைகள் சிலவும் ஆங்கிலக் கட்டுரைகள் சிலவும் பாதுகாக்கப்படவில்லை. அவர் திருவனந்தபுரத்தில் இருந்தபோது குழந்தைகளுக்காகப் பாடல்களும் கட்டுரைகளும் எழுதினார். இளமையிலேயே நாட்டாரிலக்கியங்களில் கொண்ட ஆர்வம் அவர் கவிதைகளை வடிவமைத்தது. அவர் இயற்றிய பாடல்களில் சிந்து, கும்மி ஆகிய நாட்டார் பாடல் வடிவங்கள் பெருமளவில் பயின்றுவருகின்றன. நாட்டார் பாடல் வடிவங்களான தாலாட்டு, ஒப்பாரி ஆகியனவும் பழமொழிகள், நம்பிக்கைகள், வழக்காறுகள், வாய்மொழி ஆகியனவும் விரவி வருகின்றன. கவிமணி ஆரம்பக்காலத்தில் எழுதியவை பண்டித நடையிலான செய்யுட்களே. பிற்காலத்தில் இவரது நடை சாதாரண வாசகனுக்குப் புரியும்படி ஆகியது. இதற்கு இவரது நாட்டார் வழக்காற்றுச் செல்வாக்கும், கல்வெட்டுப் பயிற்சியும் காரணமாக இருக்கலாம் என்று அ.கா. பெருமாள் கூறுகிறார்.

குழந்தையிலக்கியம்

தமிழின் முதல் குழந்தைக் கவிஞர் என கவிமணி குறிப்பிடப்படுவதுண்டு. 'Baby' என்னும் ஆங்கிலப் பாடல் ஒன்றினைத் தமிழில் 'குழந்தை' என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். ’மலரும் மாலையும்’ தொகுதியில் உள்ள முத்தந்தா, காக்காய், கோழி என எட்டுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் உள்ள பாடல்கள் நாட்டார்க் குழந்தைப் பாடல் வடிவம்கொண்டவை.

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் (1942)

கவிமணியின் முக்கியமான படைப்பாக இன்று கருதப்படுவது நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம். இது தமிழின் முதல் எள்ளல் நூல் என்றும் குமரிமாவட்ட வட்டார வழக்கு இலக்கியத்தின் முன்னோடி நூல் என்றும் கருதப்படுகிறது

ஆசியஜோதி (1941)

எட்வின் ஆர்னால்டின் "Light Of Asia" நூலைத் தழுவி தமிழில் 'ஆசிய ஜோதி' என்ற நூலை கவிமணி எழுதினார். இந்தியா எங்கும் எட்வின் ஆர்னால்டின் கவிதையின் வெவ்வேறு வடிவங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் ஆசியஜோதி முக்கியமானது.

பிறநூல்கள்

ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணிய பிள்ளை என்பவர் கவிமணியின் சில பாடல்களை 1932-ல் வெளியிட்டார். 1938-ல் மு. அருணாசலம் வேறு பாடல்களையும் தொகுத்து மலரும் மாலையும் என்னும் தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டார். கவிமணியின் உரைமணிகள் (1952), தேவியின் கீர்த்தனைகள் (1953) போன்ற நூல்கள் பின்னர் வந்தன. பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி "ரூபாயத்" எனும் தலைப்பில் தமிழில் எழுதினார்.

கவிமணி

ஆய்வுகள்

கவிமணியின் இறுதிக்காலத்தில் அவருடைய ஆர்வம் ஆய்வுகளில் இருந்தது. அவருடைய ஆய்வுகள் இரண்டு களங்களைச் சேர்ந்தவை. அவர் வரலாற்று ஆவணங்களை கண்டெடுத்து பாடபேதம் நோக்கி ஆராய்ச்சி உரைகளுடன் வெளியிட்டார். நாட்டார்ப்பாடல்களையும் நாட்டார் வரலாற்றுச் சான்றுகளையும் தொகுத்து வெளியிட்டார். இலக்கிய நூல்களை ஆய்வுக்குறிப்புகளுடன் விமர்சித்து எழுதினார்.

நாட்டாரியல்
 • கவிமணி ’திவான் வெற்றி’ என்னும் கதைப் பாடல் குறித்து ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தமிழ்க் கதைப்பாடல் பற்றி வெளிவந்த முதல் ஆங்கிலக்கட்டுரை இது.
 • கேரள சொசைட்டி பேப்பர்ஸ் ஆங்கில ஆய்விதழில் இவர் எழுதிய ’வள்ளியூர் மரபுச் செய்திகள்’ என்ற கட்டுரை ஐவர் ’ராசாக்கள் கதைப்பாடல்’ பற்றியது. 1910 அளவில் இதற்காகக் கள ஆய்வு செய்திருக்கிறார் இக்காலத்தில் ஓலையில் எழுதப்பட்ட கதைப்பாடல்களை இவர் சேகரித்திருக்கிறார்.
வரலாற்று ஆய்வு
 • அழகியபாண்டியபுரம் முதலியார் ஓலைகளை கவிமணி ஆய்வுக்குறிப்புகளுடன் பதிப்பித்தார்
கவிமணி மனைவியுடன்
இலக்கிய ஆய்வு
 • 1922-ல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார்.
 • சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார்.
 • கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார்.
கவிமணி- அ.கா.பெருமாள்

கல்வெட்டாய்வு

கவிமணி வரலாற்றாய்வாளர், கல்வெட்டுகளை நுட்பமாக ஆராய்ந்தவர்; ஆங்கிலத்தில் பதினாறுக்கும் மேல் கட்டுரைகள் எழுதியவர். கவிமணியின் "காந்தளூர்சாலை" என்ற ஆங்கிலக் கட்டுரை சான்றாதாரம், பின்னிணைப்பு, வரைபடங்களுடன் வந்திருக்கிறது (1939).

திருவனந்தபுரத்தில் இருந்தபோது (1901-1931) கல்வெட்டாய்வாளராகவும் இருந்தார். இக்காலத்தில் இவர் எழுதிய 28 தமிழ்க் கட்டுரைகள் நூல் வடிவில் வந்துள்ளன. Malabar Quarterly Review, People's Weekly, People's Opinion, The Western Star, Kerala Society Papers இதழ்களில் எழுதிய 19 கட்டுரைகள் நூல் வடிவில் வரவில்லை. இவற்றிலும் 4 கட்டுரைகளை அடையாளங்காண முடியவில்லை.

20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிவந்த கல்வெட்டு மூலப்படிவங்களின் விளக்கங்களில் உள்ள தவறுகளைச் சுட்டிய இவரது கட்டுரைகள் முக்கியமானவை. வரலாற்றுப் பேராசிரியரான கே.கே.பிள்ளை "தொடக்ககாலக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் கே.ஏ. நீலகண்டசாஸ்திரி, வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை" ஆகியோர் என்கிறார்.

ஆன்மிகம்

கவிமணிக்கு மத நம்பிக்கை உண்டு. முந்தைய மதத்திற்கும் சமகால மதத்திற்கும் உள்ள நீண்ட வேறுபாட்டை அனுசரித்து நடக்க வேண்டும் என்பது அவரது கொள்கை (தினமணி ஜூலை 5, 1954). கவிமணியிடம் சடங்குப் பற்று இருந்ததில்லை. மூடநம்பிக்கையை ஆதரிக்கும் பழமை நம்பிக்கையும் கிடையாது. ’கோவில்களில் சாதித் திருத்தங்களைச் செய்ய இயலாவிடில் கோயில்களை ஈ.வே.ராவிடம் ஒப்படைத்துவிடலாம்’ என்று கூறியுள்ளார்.

விருதுகள்

 • டிசம்பர் 24, 1940-ல் தன் 64-ம் வயதில், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்வேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் "கவிமணி" என்ற பட்டம் வழங்கினார்.
 • 1943-ல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அத்தொகையை தான் ஏற்க மறுத்து திருவிதாங்கூர் பல்கலைக்கு அளித்து பி.ஏ. வகுப்பில் தமிழில் முதல்பரிசு பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக அளிக்க ஏற்பாடு செய்தார்.

அறக்கொடைகள்

கவிமணி

கவிமணியின் கட்டுரைகள்

நினைவுநூல்கள், நினைவகங்கள்

நூல்கள்
 • தேசிகவினாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு பண்டித சு.வே.நடராசன் ( இணையநூலகம்)
 • கவிமணி நினைவோடை -சுந்தர ராமசாமி
 • கவிமணி வரலாற்றாய்வாளர்- அ.கா.பெருமாள்
நினைவுச்சின்னஙகள்
 • 1954-ல் கவிமணிக்கு தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.
 • அக்டோபர் 2005-ல் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

மறைவு

கவிமணி இறுதிக்காலம் வரை புத்தேரி என்ற ஊரில் வாழ்ந்தார். செப்டம்பர் 26, 1954-ல் காலமானார்.

அறிவியக்க இடம்

Kavimani.jpg

கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் பங்களிப்பை ஒட்டுமொத்தமாக இலக்கியம், ஆய்வு ஆகிய இருதளங்களில் தொகுத்துக்கொள்ளலாம்

இலக்கியம்
Kavimani1.jpg
 • கவிமணி பாரதிக்குப் பின்னர் உருவான இரண்டு கவிதைமரபுகளில் நாமக்கல் கவிஞர் மரபு என அடையாளப்படுத்தப்படும் மரபைச் சேர்ந்தவர். தேசிய இயக்க பார்வை, எளிய மொழி, எளிய அமைப்பு, நாட்டாரியல் சார்பு கொண்ட கவிதைகள் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை எழுதியவை.
 • கவிமணி தமிழின் முதல் குழந்தைக் கவிஞர். குழந்தைப் பாடல்களுக்குரிய எளிமையான யாப்புமுறையை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இதற்கு தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள ஆசிரியப்பா போன்ற வடிவங்களையும் நாட்டார்ப்பாடல்களின் ஒலியமைவையும் அவர் இணைத்தார். பின்னாளில் எழுதிய அழ.வள்ளியப்பா, பெ.தூரன், பூவண்ணன் போன்றவர்கள் அவருடைய வழிவந்தவர்கள்
 • மொழிபெயர்ப்பாளரான கவிமணி இலக்கியத்தில் முன்னோடி முயற்சிகளைச் செய்தவர். அவருடைய ஆசியஜோதி ஒரு குறிப்பிடத்தக்க ஆக்கம்
 • நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் நாட்டார் பாடல் வடிவில் அமைந்தாலும் சிறந்த புனைவிலக்கியம். தமிழ் வட்டாரப்புனைகதையின் முதல் வடிவங்களில் ஒன்று. சுந்தர ராமசாமி, நாஞ்சில்நாடன் உட்பட பலர் அந்த மரபில் வந்தவர்கள்
ஆய்வு
 • கல்வெட்டாய்வில் கவிமணி முன்னோடியானவர். கல்வெட்டுகளைப் படியெடுத்து, இலக்கியச் சான்றுகளுடன் இணைத்து பொருள்கொள்வதில் அவர் ஆரம்பகால முறைமையை உருவாக்கினார். சோழர்கால கல்வெட்டுக்களை அவர் ஆராய்ந்த முறை கே.கே.பிள்ளை போன்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது
 • கல்வெட்டுச் சான்றுகளை கொண்டு இலக்கியத்தை காலக்கணிப்பு செய்வது, உள்ளடக்கத்தை ஆய்வு செய்வது ஆகியவற்றில் கவிமணி வழிகாட்டியாக அமைந்தார். எஸ்.வையாபுரிப்பிள்ளை, கே.என்.சிவராஜ பிள்ளை, மு.சண்முகம் பிள்ளை, கே.கே.பிள்ளை போன்றவர்கள் அவருடைய வழிவந்தவர்கள்.
 • வரலாற்றாய்வுக்கு நாட்டாரியலை ஆய்வுத்தரவாகக் கொள்ளலாம் என வழிகாட்டியவர் கவிமணி. பின்னாளில் அ.கா.பெருமாள் போன்றவர்கள் அவருடைய வழிமுறைகளை பின்தொடர்ந்தனர்.
நாட்டுடைமை

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் படைப்புகள் 1998-ல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.

நூல்கள்

கவிதை
 • அழகம்மை ஆசிரிய விருத்தம் (கவிமணி இயற்றிய முதல் நூல்)
 • மலரும் மாலையும் (1938)
 • கதர் பிறந்த கதை (1947)
 • தேவியின் கீர்த்தனங்கள்
 • குழந்தைச்செல்வம்
புனைவு
 • நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் (1942)
மொழியாக்கம்
 • உமார் கய்யாம் பாடல்கள் (1945)
 • ஆசிய ஜோதி (1941)
கட்டுரை
 • கவிமணியின் உரைமணிகள்
 • தீண்டாதார் விண்ணப்பம்
 • கவிமணி கட்டுரைகள் (தொகுப்பு: அ.கா. பெருமாள்), காவ்யா பதிப்பகம்
ஆய்வுநூல்
 • காந்தளூர் சாலை

நினைவு நூல்கள்

 • கவிமணி வரலாற்றாய்வாளர், அ.கா. பெருமாள், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:30 IST