அ.சீனிவாசராகவன்
To read the article in English: A.Srinivasa Raghavan.
அ.சீனிவாசராகவன் (அக்டோபர் 23, 1905 - ஜனவரி 5, 1975 ) அசீரா, அ.ஸ்ரீநிவாச ராகவன். தமிழ் எழுத்தாளர், மரபுக்கவிஞர். கம்பராமாயண ஆய்வாளர். மேடைப்பேச்சாளர். கல்வியாளர்.
பிறப்பு, கல்வி
சீனிவாசராகவன் தஞ்சை மாவட்டத்தில் திருவையாறுக்கு அருகேயுள்ள கண்டியூரில் அண்ணாதுரை ஐயங்காருக்கும் - ரங்கநாயகி அம்மாளுக்கும் அக்டோபர் 23, 1905-ல் பிறந்தார். அவருக்கு ஒரு சகோதரர், சகோதரிகள் இருவர். அண்ணாத்துரை ஐயங்கார் மாவட்ட ஆட்சியரின் குமாஸ்தாவாக பணிபுரிந்தார். நாகப்பட்டினத்தில் அவர் பணிமாறுதல் பெற்றதனால் குடும்பம் அங்கே சென்று குடியேறியது. அ.சீனிவாசராகவன் பள்ளிப் படிப்பை நாகப்பட்டினத்தில் முடித்தபின் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றார். அங்கே பணியாற்றிய பேராசிரியர் லீ அ.சீனிவாசராகவனிடம் ஆங்கிலம் முதுகலை படிக்கும்படிச் சொன்னார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் ஆங்கில முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
அ.சீனிவாசராகவன் படிப்பை முடித்தபின் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியிலும் அதன் பிறகு நெல்லை இந்துக் கல்லூரியிலும் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக பணியாற்றினார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றினார். 1951-ல் தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் கல்லூரி தொடங்கப்பட்டபோது அதன் தாளாளர் ஏ.பி.சி.வீரபாகுப் பிள்ளை அழைப்பின் பேரில் முதல்வராக பொறுப்பேற்று 1969 வரை பத்தொன்பது ஆண்டுக்காலம் பணியாற்றினார். தமிழக அரசு மேல்சபை உறுப்பினராகப் பணியாற்றினார். அ.சீனிவாசராகவனின் மனைவி பெயர் ராஜம்.
ஆசிரியர் பணி
அ.சீனிவாசராகவனின் முதன்மைப் பங்களிப்பாக அவருடைய ஆசிரியர் பணியே குறிப்பிடப்படுகிறது. மிகச்சிறந்த ஆங்கில ஆசிரியராகத் திகழ்ந்த அவர் ஆங்கில இலக்கியத்தின் சுவையை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார். நீதிபதி மகராஜன், மீ.ப.சோமு சுந்தா, தொ.மு.சி. ரகுநாதன் போன்ற பலர் அவருடைய மாணவர்களாகத் திகழ்ந்தவர்கள். அவருடைய மாணவர்கள் எழுதிய நினைவுக்குறிப்புகளில் அவர் சிறந்த ஆசிரியராக வெளிப்படுகிறார் (ஆசிரியர்) நெல்லை இந்துக்கல்லூரியில் அவருடன் பேராசிரியர் ஆ. முத்துசிவன் போன்றவர்கள் பணியாற்றினர். அ.சீனிவாசராகவன் ஏழை மாணவர்களை தன் இல்லத்திலேயே தங்கவைத்து கல்விபயிலச் செய்தார். சென்னை பல்கலைக்கழகம் மதுரை (காமராஜர்) பல்கலை கழகம் ஆகியவற்றில் செனெட் உறுப்பினராக பணியாற்றி கல்விக்கொள்கைகளை வடிவமைத்தார்.
இதழியல்
தன் மனைவிக்கு உடல்நலமில்லாமல் போனபோது அ.சீனிவாசராகவன் சென்னையில் சிலகாலம் வசித்தார். அப்போது விவேகானந்தா கல்லூரியில் பணியாற்றினார். சென்னையில் இருந்தபோது 1947 முதல் 1949 வரை சிந்தனை என்னும் இதழை வெளியிட்டார். அதில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.ஸ்ரீ.தேசிகன் ஆகிய அறிஞர்களுடன் ந. பிச்சமூர்த்தி, கரிச்சான்குஞ்சு போன்ற இலக்கியவாதிகளும் எழுதினார்கள். தூத்துக்குடியில் வாழ்கையில் திரிவேணி என்னும் ஆங்கில இதழை ஆசிரியராக இருந்து நடத்தினார். அதில் கம்பராமாயணம், நாலாயிர திவ்விய பிரபந்தம் மற்றும் சங்க இலக்கியங்களில் இருந்து படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.
ஆன்மிகம்
வைணவத்தின் மேல் பற்றுகொண்டிருந்த அ.சீனிவாசராகவன் அனைத்து மதங்களுடனும் இசைவுடன் செல்பவராகவும் இருந்தார். மாறன் செந்தமிழ் மாநாடு என்னும் பெயரில் நம்மாழ்வார் ஆலயம் அமைந்திருக்கும் ஆழ்வார்திருநகரியில் கூட்டிய மாநாட்டில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் மதம் பற்றிப் பேச ஏற்பாடு செய்தார். 1967-ல் போப்பாண்டவரை ரோமில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இசை
அ.சீனிவாசராகவன் சிறந்த பாடகராகவும், வயலின் இசைக்கலைஞராகவும் திகழ்ந்தார். இளமையில் இசைகற்றுக்கொண்டு தன் தங்கை கமலாவுக்கு தானே இசை கற்றுக்கொடுத்தார்.முத்துசாமி தீட்சிதரின் இசைப்பாடல்களில் தனி ஈடுபாடு கொண்டவர். நெல்லையிலும் தூத்துக்குடியிலும் இசைவிழாக்களை நடத்தினார். தமிழிசை இயக்க ஆதரவாளரான அ.சீனிவாசராகவன் கல்கியை வரவழைத்து தமிழிசைக்கான கூட்டங்கள் நடத்தினார். தமிழிசைப் பாடல்கள் எழுதினார்.
இலக்கியவாழ்க்கை
அ.சீனிவாசராகவன் தன் தந்தையிடமிருந்து நாலாயிரத் திவ்யபிரபந்தம், கம்பராமாயணம் ஆகியவற்றைப் பாடம் கேட்டார். திருச்சியில் படிக்கும்போது பேராசிரியராக இருந்த ரெவெ:லீ அவர்களிடமிருந்து ஆங்கில இலக்கிய அறிமுகம் கிடைத்தது. திருச்சியில் வாழ்ந்த திரிலோக சீதாராம் நட்பும் ஏ.எஸ்.ராகவன் , டி.என்.சுகி சுப்ரமணியன் போன்றவர்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பும் இலக்கிய ஆர்வத்தை உருவாக்கின. திருநெல்வேலி வந்தபின் டி.கே.சிதம்பரநாத முதலியா ரின் வீட்டில் நடந்த வட்டத்தொட்டி என்னும் இலக்கியக் கூடுகைக்கு தொடர்ந்து சென்றுவந்தார். அங்கே எஸ். வையாபுரிப் பிள்ளை ,கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் , மீ.ப.சோமு, ஆ. முத்துசிவன், பெ.நா.அப்புசாமி , நீதிபதி மகராஜன், கல்கி ஆகியோருடனான உறவும் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார்ருடன் அடைந்த தொடர்பும் இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபடச் செய்தன.
அ.சீனிவாசராகவன் தூத்துக்குடியில் இருந்த காலகட்டத்தில் நிறைய எழுதினார். கல்கி, கலைமகள் இதழ்களில் அவருடைய கவிதைகளும் கட்டுரைகளும் வெளியாயின. ஆ.முத்துசிவனுடன் நடத்திய உரையாடல்கள் வழியாக தமிழ் இலக்கிய விமர்சனத்திற்கான கொள்கைகளையும் கலைச்சொற்களையும் வடிவமைப்பதில் ஈடுபட்டார். நாணல். வகுளாபரணன், இலக்கிய மதுகரம் ஆகிய பெயர்களில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். திருநெல்வேலியை மையமாக்கி வெளிவந்த கம்பராமாயணம் மர்ரே ராஜம் பதிப்பில் பங்களிப்பாற்றினார்.
அ.சீனிவாசராகவனின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மரபுக்கவிதைகளில்தான். அ.சீனிவாசராகவன் நாமக்கல் கவிஞர் மரபு எனப்படும் பாரதிக்குப்பிந்தைய கவிதை மரபைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுகிறார். எளிமையான யாப்புவடிவில், சந்த ஒழுங்குடன், மக்கள்மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் அவருடையவை. அ.சீனிவாசராகவன் எழுதிய வெள்ளைப் பறவை என்னும் கவிதை தொகுதிக்கு சாகித்ய அக்காதமி விருது கிடைத்தது.
பாரதி கவிதைகள் நாட்டுடைமை
அ.சீனிவாசராகவன், சி.சுப்ரமணிய பாரதியார் குடும்பத்துக்கு அணுக்கமானவர். பாரதி பாடல்களை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஓர் இயக்கத்தை தொடங்கி 1949-ல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரிடம் மனு அளித்தார். பாரதி பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
மொழியாக்கம்
அ.சீனிவாசராகவன் ஆங்கிலம், இந்தியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்துகொண்டே இருந்தார். தாகூரின் கவிதைகளை கவியரசர் கண்ட கவிதை என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார். காளிதாசனின் மேகசந்தேசம், குலசேகரரின் முகுந்தமாலை, ஆதிசங்கரரின் மனீஷாபஞ்சகம் பஜகோவிந்தம், உமர்கய்யாம் பாடல்கள் ஆகியவற்றை மொழியாக்கம் செய்தார். ராபர்ட் பிரௌனிங், வால்ட் விட்மான், டென்னிசன், ராபர்ட் ஃப்ராஸ்ட் ஆகியவர்களின் கவிதைகளை தமிழில் கொண்டுவந்தார்.
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு சங்கப்பாடல்கள், ஆழ்வார்பாடல்களை மொழியாக்கம் செய்தார். Leaves from Kamban என்னும் நூல் கம்பனின் பாடல்களின் மொழியாக்கம். பாரதி பாடல்களின் மொழியாக்கத்தை Voice of a poet என்ற பெயரில் வெளியிட்டார்.
நாடகம்
நாடகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அ.சீனிவாசராகவன் ஷேக்ஸ்பியர் நாடகங்களை மொழியாக்கம் செய்து தன் மாணவர்களைக் கொண்டு மேடையேற்றினார். உதயகன்னி, அவன் அமரன், கௌதமி, மனப்பேய், எல்லையிலே என்னும் நாடகங்களை எழுதியிருக்கிறார்
சொற்பொழிவாளர்
அ.சீனிவாசராகவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த சொற்பொழிவாளர். கம்பராமாயணம், வைணவ இலக்கியங்கள் சார்ந்து அவர் ஆற்றும் உரைகள் புகழ்பெற்றிருந்தன. சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் ஆகியவற்றையும் விரிவாக பேசுபவர். கோலாலம்பூர் உலகத்தமிழ் மாநாடு, இந்தோனேசியாவில் நடந்த சர்வதேச ராமாயண மாநாடு, டெல்லியில் நிகழ்ந்த பயிற்றுமொழி மாநாடு ஆகியவற்றில் அவர் ஆற்றிய உரைகள் புகழ்பெற்றவை. கம்பன் அடிப்பொடி சா.கணேசனின் நண்பராக இருந்த சீனிவாசராகவன் தொடர்ச்சியாக காரைக்குடி கம்பன்விழாவில் பேசிவந்தார்.
இலக்கிய விமர்சனம்
அ.சீனிவாசராகவன் இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள் வழியாக புகழ்பெற்றிருந்தார். கல்கி இதழில் எழுதிய இலக்கியச் செல்வம், குருதேவரின் குரல் என்னும் தொடர்கள் புகழ்பெற்றவை. இலக்கியமலர்கள், காவிய அரங்கில், திருப்பாவையும் திருவெம்பாவையும் போன்ற நூல்கள் புகழ்பெற்றவை.
விருதுகள்
- சாகித்ய அகாதமி விருது (1968)
- செந்தமிழ்ச் செம்மல் விருது (தருமபுரம் ஆதீனம்)
மறைவு
அ.சீனிவாசராகவன் ஜனவரி 5, 1975-ல் மறைந்தார்.
நினைவுநூல்கள், நினைவுச்சின்னங்கள்
- 2005-ல் அவருடைய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன
- இலந்தை சு இராமசாமி 'இலக்கியச்சீனி அ.சீ. ரா - வாழ்வும் வாக்கும்’ வாழ்க்கை வரலாற்று நூல்
இலக்கிய இடம்
அ.சீனிவாசராகவன் கவிதைக்காக சாகித்ய அக்காதமி விருது பெற்றாலும் அக்கவிதைத் தொகுதி சீனப்போர் காலகட்டத்தில் எழுதப்பட்ட மிகையுணர்ச்சி கொண்ட எளிய பிரச்சாரக் கவிதைகளால் ஆனது. கவிஞராக அவர் பொருட்படுத்தப்படுவதில்லை. இலக்கிய அறிமுகத்தை மேடைப்பேச்சு வழியாகவும் இதழியல் கட்டுரைகள் வழியாகவும் நிகழ்த்தியவர் என்பதே அவருடைய இடம். அ.சீனிவாசராகவனின் இலக்கிய ரசனைக் கட்டுரைகள் டி.கே.சிதம்பரநாத முதலியாரின் மரபில் வந்தவை. அவையே அவருடைய இலக்கியப் பங்களிப்பை அடையாளப்படுத்துகின்றன.
நூல்கள்
கட்டுரைகள்
- இலக்கிய மலர்கள்
- இலக்கியச் செல்வம்
- புது மெருகு
- ஒரு நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை
- காவிய அரங்கில்.
- கவியரசர் கண்ட கவிதை
- குருதேவரின் குரல்
- விஸ்வரூபம்
- நம்மாழ்வார்[1]
மொழியாக்கம்
- மேல்காற்று (ஆங்கிலக்கவிதைகள்)
- தாருதத் பாடல்கள்
- மேகசந்தேசம்- காளிதாசர்
- மனீஷா பஞ்சகம் (ஆதிசங்கரர்)
- முகுந்தமாலை (குலசேகரர்)
- பஜகோவிந்தம்(ஆதிசங்கரர்)
கவிதை
- வெள்ளைப்பறவை
நாடகம்
- மனப்பேய்
- எல்லையிலே
- உதயகன்னி
- அவன் அமரன்
- கௌதமி
ஆங்கிலம்
- voice of a poet
- Leaves from kamban
உசாத்துணை
- பேரா.அ.சீனிவாசராகவன்-தென்றல் இதழ் மே,2010
- தீக்கதிர் குறிப்பு
- ஆ.சீ.ரா. எழுத்துக்கள் 2 அ. சீனிவாச ராகவன் A.C.R. Eluthukkal 2 ACR Ezhuthukal 2 A. Srinivasa Raghavan
- பசுபதி பக்கங்கள்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:05:34 IST