under review

தொ.மு.சி. ரகுநாதன்

From Tamil Wiki
தொ. மு. சிதம்பர ரகுநாதன்
பொன்னீலன் நூல்
தொமுசி விழா
தொ.மு.சி. ரகுநாதன் (நன்றி: அழிசி)

தொ.மு.சி. ரகுநாதன் (அக்டோபர் 20, 1923 - டிசம்பர் 31, 2001) 'தொ.மு.சி’ என்று பரவலாக அறியப்பட்டார். சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், ஆய்வாளர், விமர்சகர்.

பிறப்பு, கல்வி

தொண்டைமான் முத்தையாவுக்கும் அவரின் இரண்டாவது மனைவி முத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக அக்டோபர் 20, 1923-ல் திருநெல்வேலியில் பிறந்தார். தொ.மு.சி.ரகுநாதனின் மூத்தவர் தொ.மு பாஸ்கரத் தொண்டைமான் மரபிலக்கிய ஆய்வாளர், பயண இலக்கிய எழுத்தாளர், மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றியவர். அவர் தவிர மூன்று தமக்கையர், ஒரு தங்கை. திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட் வரை படித்தார். தொ.மு.சி.ரகுநாதனின் தாத்தா சிதம்பரத் தொண்டைமான் தமிழறிஞர். அவர் `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை', `நெல்லைப்பள்ளு' போன்ற நூல்களை எழுதியுள்ளார். தொ.மு.சி.ரகுநாதனின் அப்பா தொண்டைமான் முத்தையா ஓவியர்; புகைப்படக் கவிஞர்.

அரசியல் வாழ்க்கை

தொ.மு.சி.ரகுநாதன் தன் தோழர் ராஜரத்தினத்துடன் இணைந்து, 'மார்க்சிஸ்ட் மாணவர் இயக்கம்’ என்ற பெயரில் மார்க்சியக் கருத்துக்களை 'சைக்ளோஸ்’ செய்து, 'ஜவகர் வாலிபர் சங்கம்’ மூலம் பரப்பினார்.

1942-ல் 'வெள்ளையனே வெளியேறு’ எனும் இயக்கம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது. நெல்லையில் கல்லூரி மாணவர்களும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் மீது போலீஸ் கடுமையான தடியடி நடத்தியது. தொ.மு.சி உட்பட பலரும் காயமடைந்தனர். சில நாள் கழித்து ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக அவரைக் கைது செய்து இரண்டு மாதம் சிறையிலடைத்தனர். இதனால், அவர் படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. சில மாதங்கள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ நேர்ந்தது.

இதே காலத்தில் நெல்லை மாவட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பாளராக வந்த வி.பி.சிந்தன் தொ.மு.சி.ரகுநாதனுடன் தொடர்பு கொண்டார். கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினராக ஆன தொ.மு.சி.ரகுநாதன் கட்சி ஆணைப்படி தமிழ்நாடு 'கலை இலக்கியப் பெருமன்றம்’ அமைப்பை தொடங்கியவர்களில் ஒருவர். அதில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் அதில் தலைவரானார். கம்யூனிஸ்ட் கட்சி பிளவுண்டு, உருவான விவாதங்களின்போது 1967-ல் கலையிலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். சோவியத் லான்ட் இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து இறுதிக்காலம் வரை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளராக இருந்த ரகுநாதன் தாமரை உள்ளிட்ட கட்சி இதழ்களில் எழுதினார்.

1992-ல் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சிக்குப்பின் ரகுநாதன் தன் சோஷலிச யதார்த்தவாதம் பற்றிய பார்வையையும், தொழிலாளிவர்க்க சர்வாதிகாரம் பற்றிய பார்வையையும் மாற்றிக்கொண்டார். சோஷலிச யதார்த்தவாதம் பேசியிருக்கக் கூடாது, விமர்சன யதார்த்தவாதம் பேசியிருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். அவற்றை தாமரை போன்ற கட்சியிதழ்களிலேயே எழுதினார். ஆனால் கட்சி விரைவிலேயே அந்த மறுபரிசீலனைகளை ஒதுக்கி இறுக்கமான பழைய பார்வையையே உறுதிசெய்துகொண்டது.

இதழியல்

1944 - 45 ஆண்டுகளில் தினமணி ஆசிரியர் குழுவிலும் 1946 - 47ல் முல்லை இதழின் ஆசிரியராகவும், 1948 - 52 ஆண்டுகளில் சக்தி இதழின் துணை ஆசிரியராகவும், 1954 - 56ல் சாந்தி இதழின் ஆசிரியராகவும் 1967 - 88 வரை சோவியத் நாடுஇதழின் மூத்த ஆசிரியராகவும் பணியாற்றினார். சாந்தி இதழில் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் கி.ராஜநாராயணன் போன்றவர்கள் எழுதினார்கள்.

இலக்கிய வாழ்க்கை

தொ. மு. சிதம்பர ரகுநாதன்

கல்லூரியில் ரகுநாதனின் ஆசிரியர் அ.சீனிவாசராகவன் நவீன இலக்கியத்தையும் பழந்தமிழ் இலக்கியத்தையும் கற்பித்தார். ரகுநாதனின் முதல் சிறுகதை 1941-ல் பிரசண்டவிகடன் இதழில் வெளிந்தது. முதல் நாடகம் சிலைபேசிற்று 1942-ல் வெளிவந்தது. முதல் நாவல் 'புயல்’ 1945-ல் வெளியானது.

1948-ல் இவர் 'சக்தி’ இதழில் பணிக்குச் சேர்ந்தார். கு. அழகிரிசாமியும் இவருடன் இணைந்து பணியாற்றினாா். இவர்கள் இருவரையும் 'இரட்டையர்கள்’ என்று கூறும் அளவுக்கு இவர்களுக்கு இடையே நட்பும் படைப்பு ஒற்றுமையும் காணப்பட்டன.

இவர் 1949-ல் எழுதிய 'முதலிரவு’ என்ற நாவல் 'பாலியல் சார்ந்த விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவதாகவும் ஓரினச் சேர்க்கை குறித்தும் முறை தவறிய உறவுகள் பற்றியும் எழுதப்பட்டதாகவும் கருதப்பட்டு, அன்றைய கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியாரால் தடை செய்யப்பட்டது. இந்தத் தடையாணையை எதிர்த்து இவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தோல்வியடைந்தார். இறுதியில், கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றம் விதித்த அபராதத்தைச் செலுத்தியதால் விடுவிக்கப்பட்டார்.

தமிழகக் கைத்தறி நெசவாளர்களின் துயர வாழ்வையும் அவர்களின் தொழிற்சங்கப்போராட்டத்தையும் விவரிக்கும் 'பஞ்சும் பசியும்’ (1951) இவரது முக்கியமான நாவல். இதனை கமில் சுவலபில் 'செக்’ மொழியில் மொழிபெயர்த்தார். 'தமிழில் இருந்து ஐரோப்பிய மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் நாவல்’ என்று கூறப்படுகிறது. தமிழில் எழுதப்பட்ட முதல் 'சோஷலிச யதார்த்தவாத’ நாவல் என்றும் அடையாளப்படுத்தப்படுகிறது.

நெல்லையில் தி.க.சிவசங்கரன், வல்லிக்கண்ணன் ஆகியோருக்கு அணுக்கமானவராக இருந்தார்.ரகுநாதன் 'திருச்சிற்றம்பலக் கவிராயர்’ என்ற புனைபெயரில் கவிதைகளை எழுதினார். சோவியத் நாடு பதிப்பகம் மூலம் ரஷ்யப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அவற்றில் மாக்ஸிம் கார்க்கியின் தாய் குறிப்பிடத்தக்கது.

புதுமைப்பித்தனும் ரகுநாதனும்

புதுமைப்பித்தனுக்கு ரகுநாதன் அணுக்கமான இளம் நண்பராக இருந்தார். 1948-ல் புதுமைப்பித்தன் இறந்தபின் அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். 1951-ல் புதுமைப்பித்தன் வரலாறு என்னும் நூலை எழுதினார். 1955-ல் சாந்தி இதழில் புதுமைப்பித்தன் மலர் வெளியிட்டார். 1999-ல் புதுமைப்பித்தன் கதைகள் - விமரிசனங்களும் விஷமங்களும் என்ற நூலை வெளியிட்டார். புதுமைப்பித்தன் கதைகளில் பல தழுவல்கள் என சிட்டி (பெ.கோ.சுந்தரராஜன்) முன்வைத்த கருத்துக்கான மறுப்பு அந்நூலில் சொல்லப்பட்டிருந்தது

விருதுகள்

  • சாகித்திய அகாதெமி விருது - 1983 (பாரதி காலமும் கருத்தும்)
  • சோவியத் லேண்ட் நேரு விருது
  • தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் 'தமிழ் அன்னை’ பரிசு
  • பாரதி விருது - 2001

மறைவு

தொ.மு.சி.ரகுநாதன் பாளையங்கோட்டையில் டிசம்பர் 31, 2001 அன்று காலமானார்.

நினைவுகள், வாழ்க்கைவரலாறுகள்

தொ.மு.சி. ரகுநாதன் 80 அகவை நிறைவையொட்டி திருநெல்வேலியில் பாரதிவிழாவில் கௌரவிக்கப்பட்டார்.

தன் வாழ்நாளில் சேமித்திருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களை எட்டையபுரம் பாரதி நினைவகத்துக்கு நன்கொடையாக வழங்கினார். அங்கு செப்டம்பர் 24, 2000-ல் ரகுநாதன் நூலகமும் பாரதி ஆய்வு மையமும் தொடங்கப்பட்டன.

ரகுநாதனின் வாழ்க்கை வரலாற்றை பொன்னீலன் சாகித்ய அக்காதமிக்காக இந்திய இலக்கியச் சிற்பிகள் என்னும் வரிசையில் நூலாக எழுதியிருக்கிறார்

தொ.மு.சி.ரகுநாதன் வாழ்வும் பணியும் என்னும் நூலை பொன்னீலன் எழுதியிருக்கிறார்.

தொ.மு.சி- பொன்னீலன்

இலக்கிய இடம்

தொ.மு.சி.ரகுநாதன் தமிழில் மார்க்சிய சிந்தனையை ஒட்டி எழுதிய முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர். 'பஞ்சும் பசியும்’ நாவல் சோஷலிச யதார்த்தவாத அழகியலின் முதல்நாவல் என கருதப்படுகிறது. தன்னுடைய புனைவுகளிலும் புனைவல்லாத படைப்புகளிலும் வெகுஜன வாசிப்பு அதிர்ச்சியளிக்கும் பல்வேறு கருத்துகளை முன்வைத்து சமூகக் கவனத்தை ஈர்த்தவர். 'இளங்கோ அடிகள் யார்’ என்ற ஆய்வு நூலில், 'இளங்கோ அடிகள் மன்னர் வம்சத்தைச் சேர்ந்தவர் அல்லர்; அவர் ஒரு தன வணிகச் செட்டியார்’ என்று பல்வேறு ஆதாரங்களுடன் வாதிட்டுள்ளார். தொ.மு.சி.ரகுநாதன் தமிழ் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்றாலும் சீண்டும்நோக்கம் மட்டுமே கொண்ட எழுத்துக்களும் ஆய்வுகளும் அவரை முக்கியமான புனைவிலக்கியவாதியாகவோ ஆய்வாளராகவோ மதிப்பிடுவதற்கு தடையாக உள்ளன.

நூல்கள்

தொ.மு.சி.ரகுநாதனின் நூல்கள் 2008-ல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. அவை இணையநூலகத்தில் மின்வடிவமாக சேமிக்கப்பட்டுள்ளன (தொ.மு.சி.ரகுநாதன் நூல்கள். இணைப்பு)

சிறுகதைத் தொகுப்புகள்
  1. நீயும் நானும் -
  2. க்ஷணப்பித்தம் - 1952
  3. சேற்றிலே மலர்ந்த செந்தாமரை - 1955
  4. ரகுநாதன் கதைகள் - 1951
  5. சுதர்மம் - (மீனாட்சி புத்தக நிலையும் 'ரகுநாதன் கதைகள்’ என்ற புத்தகத்தை இரண்டாம் பதிப்பாக 1980இல் வெளியிட்டபோது அதில், 'ஆசிரியரின் பிற படைப்புகள்’ என்ற பகுதியில் இந்தச் சிறுகதைத் தொகுப்பு பற்றித் தெரியவருகிறது.)
கவிதை தொகுப்புகள்
  1. ரகுநாதன் கவிதைகள் - 1957
  2. கவியரங்கக் கவிதைகள் - 1963
  3. காவியப் பரிசு - 1981
நெடுங்கவிதை
  1. 'க. கட்டபொம்மன்’ (விடுதலை வீரர்கள் ஐவர் - 1968)
நாவல்கள்
  1. புயல் - 1945
  2. முதலிரவு - 1949
  3. பஞ்சும் பசியும் - 1951
  4. கன்னிகா -
நாடகங்கள்
  1. சிலை பேசிற்று - 1942
  2. மருது பாண்டியன் -
வாழ்க்கை வரலாறு
  1. புதுமைப்பித்தன் வரலாறு - 1951
ஆய்வு நூல்
  1. இளங்கோ அடிகள் யார்? -
விமர்சன நூல்கள்
  1. இலக்கிய விமர்சனம் - 1948
  2. அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும் - 1977
  3. கங்கையும் காவிரியும் (தாகூரும் பாரதியும்) - 1966
  4. சமுதாய இலக்கியம் - 1964
  5. பாஞ்சாலி சபதம் - உறைபொருளும் மறைபொருளும் - 1987
  6. பாரதி: சில பார்வைகள் - 1982
  7. பாரதியும் ஷெல்லியும் - 1964
  8. பாரதி - காலமும் கருத்தும் -
  9. புதுமைப்பித்தன் கதைகள் - சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் - 1999
  10. சோவியத் ஜனநாயகம் 60 ஆண்டுகள் - 1977
  11. புதுமைப்பித்தன் பற்றி ரகுநாதன் (தொகுப்பாசிரியர்: இளசை மணியன்) - 2005
மொழிபெயர்ப்பு நூல்கள்
  1. இதயத்தின் கட்டளை - (M. Sholokhov - At the Bidding of the Heart ) - 1981
  2. சந்திப்பு - (மாக்ஸிம் கார்க்கி) - 1951
  3. சோவியத் நாட்டுக் கவிதைகள் - (85 கவிதைகள்) - 1965
  4. தந்தையின் காதலி - (மாக்சிம் கார்க்கி) - 1950
  5. தாய் - (மாக்ஸிம் கார்க்கியின் 'தி மதர்’) - 1975
  6. நான் இருவர் (ஆர். எல். ஸ்டீவென்ஸன்) - 1951
  7. லெனின் கவிதாஞ்சலி (Vladimir Mayakosky - Vladimir Ilyich Lenin ) - 1970
  8. வசந்தமே வருக - (Ilya Ehrenburg - The Thaw) 1957
பதிப்பித்த நூல்
  1. அழகிய சொக்கநாத பிள்ளை எழுதிய 'திருநெல்வேலி காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி’ - 1990
இணைந்து எழுதிய நூல்
  1. இவர், 'முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்’ (1994) என்ற புத்தகத்தைப் பொன்னீலனுடன் இணைந்து எழுதியிருக்கிறார். அதில் 'வழிகாட்டி உரை’ என்ற தலைப்பில் முதல் 70 பக்கங்களை எழுதியுள்ளார்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:33 IST