under review

சாந்தி (இதழ்)

From Tamil Wiki
சாந்தி இதழ்

சாந்தி (1954 ) தமிழில் வெளிவந்த முன்னோடியான முற்போக்கு இதழ். தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்தது.சுந்தர ராமசாமி , ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் ஆகியோர் எழுதிய இதழ்.

தோற்றம்

சாந்தி

1954 டிசம்பரில் சாந்தி இலக்கிய மாத இதழ் தொடங்கப்பட்டது. இவ்விதழ் திருநெல்வேலியில் இருந்து வெளியானது.சாந்தி இதழினை நடத்தியவர்தொ.மு.சி. ரகுநாதன். குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்தபோது தனக்குக் கிடைத்த தொகையைக் கொண்டு "சாந்தி" இதழ் பணிகளை தொ.மு.சி. ரகுநாதன் தொடங்கினார்..

இதழ் நோக்கம்

"சொத்தைக் கருத்துகளும் சொற்சிலம்பங்களும் மிகுந்த இலக்கியப் போலிகளை இனம் காட்டவும், வெள்ளிக் காசுக்கும் விதேசியச் சிறுமைக்கும் இதயத்தையே எடைபோட்டு விற்றுவிட்ட எழுத்துலக துரோகிகளை அம்பலப்படுத்தவும், நமது பண்பாட்டையும் பாஷை வளத்தையும் இழிவுபடுத்தும் நாசக் கற்பனைகளை வேரறுக்கவும், தெம்பும் திராணியும், இளமையும், புதுமையும் நிறைந்த இலக்கிய சிருஷ்டிகளை வரவேற்கவும் வளர்க்கவும் புனித சங்கல்பம் பூண்டு சாந்தி தோன்றுகிறது" என்ற அறிவிப்புடன் சாந்தி இதழ் வெளிவந்தது.

படைப்பாளிகள் மற்றும் படைப்புகள்

  • தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய "நெஞ்சில் இட்ட நெருப்பு" என்ற தொடர்கதை வெளியானது.
  • புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டது. அதில் சுந்தர ராமசாமி எழுதிய "தண்ணீர்" என்ற கதை முதல் பரிசு வென்றது.
  • சுந்தர ராமசாமி, ப. சீனிவாசன், டி. செல்வராஜ் ஆகியோரின் சிறுகதைகள் தொடர்ந்து வெளிவந்தன.
  • பல மலையாளச் சிறுகதைகள் சுந்தர ராமசாமியின் மொழியாக்கத்தில் வெளியாகின.
  • அப்பாஸ், கிருஷ்ணசந்தர், யஷ்பால், முல்கராஜ் ஆனந்த் ஆகியோரின் இந்திச் சிறுகதைகள் வெளியாகின.
  • நா. வானமாமலை, சாமி. சிதம்பரனார், எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கெ)ஆகியோரின் கட்டுரைகள் வெளிவந்தன.
  • கட்டபொம்மு, மருது பாண்டியர் போன்ற நாட்டுப் பாடல்கள் குறித்து தொ.மு.சி. ரகுநாதன் விரிவான கட்டுரைகளை பிரசுரித்தது.
  • தி.க. சிவசங்கரன் எழுதிய "புத்தக விமர்சனம்" இடம்பெற்றது.

சிறப்பிதழ்கள்

புதுமைப்பித்தன் மலர்

'சாந்தி’ 1955, ஜூலை இதழ் புதுமைப்பித்தன் மலராக உருவாக்கம் பெற்றிருந்தது. புதுமைப்பித்தன் குறித்து ரகுநாதன் எழுதிய நீண்ட தலையங்கமும், 'வெட்டரிவாள் பாட்டுண்டு’ கட்டுரையும், வையாபுரிப் பிள்ளை எழுதிய 'புதுமைப்பித்தன்’ கட்டுரையும், 'புதுமைப்பித்தனும் இளம் எழுத்தாளரும்’ என்ற கு.அழகிரிசாமியின் நினைவுக் குறிப்புகளும், எஸ்.சிதம்பரத்தின் 'கடைசி நாட்களில்’ கட்டுரையும், 'பித்தன்’ என்ற தமிழ் ஒளியின் கவிதையும், புதுமைப்பித்தனின் 'அன்னை இட்ட தீ’ நாவலின் முதல் அத்தியாயமும், திருச்சிற்றம்பலக் கவிராயரின் 'உன்னைத்தான் கேட்கிறேன்’ கவிதையும் இவ்விதழிலே இடம்பெற்றிருந்தன.

ஆண்டுமலர்

1955 டிசம்பர் மாதம் சாந்தி இதழின் பனிரெண்டாவது இதழ் "ஆண்டு மலர்" என வெளிவந்தது. ப. ஜீவானந்தம், நா. வானமாமலை, எஸ். ராமகிருஷ்ணன், சாமி சிதம்பரனார், க. கைலாசபதி, எச். என். பி. மொஹிதீன் ஆகியோரின் கட்டுரைகளும், சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன், டி. செல்வராஜ், அகிலன், கி. ராஜநாராயணன், தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோரின் கதைகளும் கே.சி.எஸ். அருணாசலம், குயிலன், திருச் சிற்றம்பலக் கவிராயர் (ரகுநாதன்) ஆகியோரின் கவிதைகளும் தி.க. சிவசங்கரன் எழுதிய நாடகமும், மேலும், கதகளி பற்றி எஸ். சிதம்பரம் எழுதிய நீண்ட கட்டுரையும் இந்த ஆண்டு மலர் இதழில் இடம் பெற்றிருந்தன.

நிறுத்தம்

பொருளாதார பின்னடைவு காரணமாக1956 ஏப்ரல் மாதம் சாந்தி இதழ் நிறுத்தப்பட்டது

மதிப்பீடு

நல்ல முற்போக்கு இலக்கிய இதழ் என்ற பெயரை சாந்தி இதழ் பெற்றதே தவிர எழுத்துலகில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை" என வல்லிக்கண்ணன் குறிப்பிடுகிறார்.முற்போக்கு இலக்கியத்தை தமிழில் உருவாக்கியதில் இவ்விதழுக்கு தொடக்கப் பங்களிப்பு உண்டு.

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Dec-2022, 17:28:53 IST