நா. வானமாமலை (நாட்டாரியல் ஆய்வாளர்)
- வானமாமலை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வானமாமலை (பெயர் பட்டியல்)
To read the article in English: Na. Vanamamalai.
நா. வானமாமலை (டிசம்பர் 07, 1917 - பிப்ரவரி 02, 1980) தமிழின் முன்னோடி நாட்டாரியல் ஆய்வாளர், தமிழறிஞர், வரலாற்றாய்வாளர். முற்போக்கு அழகியலை தமிழில் உருவாக்கிய இலக்கிய விமர்சகர். தமிழில் வழக்கில் இருந்த நாட்டார் பாடல்கள், கதைகள், பழமொழிகள், வழக்கங்களை சேகர்த்துப் பதிப்பித்த முன்னோடி ஆய்வாளர்களுள் ஒருவர்.
பார்க்க :வானமாமலை
பிறப்பு, கல்வி
நா. வானமாமலை டிசம்பர் 7, 1917-ல் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் நாராயணன் தாதர், திருவேங்கடத்தம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் சகோதரி வேங்கடம், சகோதரர் ஆழ்வான். ரஷ்ய புரட்சி நடந்த ஆண்டில் பிறந்ததால் பொது உடைமை இயக்கத்திற்கும் தனக்கும் நெருங்கிய தொடர்புண்டு என நா. வானமாமலை பல சந்தர்ப்பங்களில் சொல்கிறார்.
வானமாமலையின் தந்தை நாங்குனேரி கிராம முன்சீபாக பணியாற்றினார். நாங்குனேரியில் மூத்தவர்களை தாதர் என அழைக்கும் வழக்கம் இருந்ததால், வானமாமலையின் தந்தையை எல்லோரும் முன்சீப் தாதர் என்றழைத்தனர். வானமாமலை பிறந்த வீடு சாத்தாவர் தெரு தென்பகுதியில் ஒரு பெரிய மட்டப்பா வீடாகும்.
பேராசிரியர் வானமாமலை தன் இளமைக் கால கல்வியை நாங்குனேரியிலும், ஏர்வாடியிலும் பயின்றார். உயர்நிலைப் படிப்பை நாங்குனேரி ஜில்லா போர்டு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். நெருக்கடியான பொருளாதார குடும்பசூழலிலும் அவர் திருநெல்வேலி சென்று இண்டர் மீடியட்டும், மதுரை அமெரிக்கன் கலைக் கல்லூரியில் பி.ஏ. இராசயனப் படிப்பையும் முடித்தார். அதன் பின் சென்னை சைதாப்பேட்டை அரசினர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி. என்ற பட்டப் படிப்பையும் முடித்தார். இவை அனைத்தும் அவருடைய இருபது வயதிற்குள்ளாகவே முடியப்பெற்றன.
தனி வாழ்க்கை
குடும்பம்
வானமாமலை பள்ளி பிராயத்திலேயே தன் சொந்த அத்தை மகளான சீதையம்மாள் என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். தென்காசியில் பணிபுரியும் போது அவரது துணைவியான சீதையம்மாள் மரணமடைந்தார். இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் இல்லை. அதன்பின் 1948-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பத்மாவதி என்பவரை மணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கிருஷ்ணமூர்த்தி, கலாவதி, ராமமூர்த்தி, அருணா அம்மணி, நாராயணமூர்த்தி என ஐந்து குழந்தைகள்.
பணி
1942-ம் ஆண்டு மதுராந்தகத்தில் இவருக்கு தற்காலிக ஆசிரியர் பதவி கிடைத்தது. அதன்பின் ஜில்லா போர்ட் உயர்நிலைப் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் பதவி கிடைத்தது. நாங்குனேரி, கோவில்பட்டி, தென்காசி ஆகிய இடங்களில் 1948-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.
வானமாமலையின் பொது வாழ்க்கைக்கு இடைஞ்சலாக ஆசிரியர் பணி இருந்த காரணத்தினால் அவர் தன் ஆசிரியர் பணியை 1947-ம் ஆண்டு இராஜனாமா செய்தார். அதன் மூலம் வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எஸ்.எஸ்.எல்.சி, இண்டர் மீடியட் போன்ற வகுப்புகளில் தவறிய மாணவர்களுக்குத் தனித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கவும், ஒரு சுய வேலைக்காகவும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு ரத வீதியில் பயிற்சி நிலையம் ஒன்றைத் தொடங்கினார். இவருக்குத் துணையாக உடன் கே. சீனிவாசன் இருந்தார். இந்நிறுவனம் சற்று பெரிதானவுடன் வண்ணார்பேட்டையில் ஒரு பெரிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இது "ஸ்டூடன்ஸ் டூடோரியல் இன்ஸ்டிடியூட்" என்ற பெயரில் இயங்கியது. பெண்களுக்கென்று 258, திருச்செந்தூர் ரோடு பாளையங்கோட்டையில் ஒரு கிளை துவங்கப்பட்டது. பின்னர் நாகர்கோவில், தக்கலை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இதற்குக் கிளைகள் தொடங்கப்பட்டன. 1970-ற்குப் பின்னர் இப்பயிற்சிப் பள்ளி சீராக நடைபெறவில்லை.
வானமாமலை பொதுப் பணியில் ஈடுபடுவதற்கும், பின்னாளில் "நெல்லை ஆய்வுக்குழு" தொடங்குவதற்கும் "ஆராய்ச்சி காலாண்டிதழ்" கொண்டுவருவதற்கு இந்நிறுவனம் பொருளாதார பின்புலமாக அமைந்தது.
அரசியல்
நா. வானமாமலை கல்லூரி படிப்பிற்காக 1936-ம் ஆண்டு மதுரை சென்ற போது அவருக்கு தேசிய விடுதலை போராட்டத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. வானமாமலை மாணவராக தேசிய இயக்கத்தில் ஈடுபட்டு பின்னர் அதன் இடதுசாரிக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். 1940 களில் பொது உடைமை இயக்கம் காங்கிரஸ் சோசியலிஸ்ட் கட்சி என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது. இக்கட்சி சார்பாக பல இளைஞர் மன்றங்கள் இயங்கி வந்தன. வானமாமலை தன்னை இந்த இளைஞர் மன்றங்களோடு இணைத்துக் கொண்டார். இச்சங்கங்கள் வானமாமலையின் இளமைக்கால சமூகப் பார்வையை விரிவுபடுத்தின.
விவசாய சங்கம்
1947-ம் ஆண்டு விவசாய சங்கம் சார்பில் நாங்குனேரியில் நடந்த கூட்டத்தை பேராசிரியர் ஆர். நல்லகண்ணு அவர்களுடன் சேர்ந்து முன்னால் நின்று நடத்தினார்.
நகராட்சிப் பதவி
1959-ல் பாளையங்கோட்டை நகராட்சி வாரிய உறுப்பினராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். இவருடன் சு. பாலவினாயகம், பாளை வக்கீல் என். சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பாண்மை இல்லாத காரணத்தினால் சில திட்டங்கள் மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிராக சென்றால், "நான் மக்களிடம் செல்வேன்" என சொல்லி பாளையங்கோட்டை கோபாலசுவாமி கோவில் முன் உள்ள திடலில் பொதுக்கூட்டத்தை சு. பாலவினாயகம், என். சண்முகம் ஆகியோருடன் இணைந்து நடத்தி மக்களிடம் பிரச்சனையை விளக்கி அவர்களின் ஆதரவைத் திரட்டினார். இதன் விளைவாக நகராட்சித் தீர்மானங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்ததாக அவரது மாணவரும் அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான எஸ். தோதாத்ரி குறிப்பிடுகிறார்.1965-க்குப் பின் பாளையங்கோட்டையில் குடும்பத்துடன் குடியேறியதும் வாரிய உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதை நிறுத்திக் கொண்டார்.
மார்க்சியக் கொள்கைப் பரப்பு
வானமாமலை 1954-ம் ஆண்டிற்கு பிறகு தத்துவம், கலை, இலக்கியம் பகுதியில் ஆர்வம் செலுத்தினார். ஆங்காங்கே தனித்தனியாக நடைபெற்று வந்த மார்க்சியப் பணியை ஓர் அமைப்பாக நெல்லை திரட்டினார். ஆர்.கே. கண்ணன் எடுத்த மார்க்சியப் பயிற்சி வகுப்புகளை விரிவாக எடுக்கச் செய்தார். வானமாமலை தன் மார்க்சியப் பணி பற்றி இப்படி எழுதுகிறார்.
"கேரளத் தோழர்கள் தமிழ் நாட்டிற்கு வந்த அரசியல் வகுப்புகள் எடுத்தார்கள். ஆர். கே. கண்ணன் மிகச் சில தோழர்களுக்கு மார்க்சிய - லெனினிய வகுப்புகள் எடுத்திருந்தார். கட்சியின் ஆரம்ப காலத்தில் நெடுங்காடியும், வி. மீனாட்சிநாதனும் சிறுசிறு வகுப்புகள் எடுத்தார்கள். யாவும் தலைமறைவு நிலைமையில் நடந்தன. படிக்கப் புத்தங்கள் கிடையாது. அச்சடிக்கவும் முடியாது. 1923-1946 வரை இலங்கைக்கு வந்து கொண்டிருந்த மார்க்சியத் தத்துவ நூல்களை 'இன்றைய இந்தியா’ போன்ற அரசியல் நூல்களையும் பேட்டையிலிருந்து கொழும்பில் வியாபாரம் செய்து கொண்டிருந்த இடதுசாரி அரசியல்வாதிகள் துரைசாமிச் செட்டியாரும் கபூரும், சாக்குகளிலும், காலி எண்ணெய் டப்பாக்களிலும் கொண்டு வந்து பரப்பினார்கள். "கம்யூனிஸ்ட் அறிக்கை", "மார்க்ஸ்-எங்கல்ஸ் மார்க்சியம் (லெனின்)", "கம்யூனிசம் என்றால் என்ன?" (ரால் ஃபாக்ஸ்), "அரசும் புரட்சியும் (லெனின்)", "அரசியல் பொருளாதாரம்" (லியன் டியேவ்), "இன்றைய இந்தியா (பாமிடட்)", "காந்தியும் லெனினும் (டாங்கே)" முதலிய நூல்கள் தனித்தனியாகக் கொண்டு வரப்பட்டு இம்மாவட்டத்தில் ஆர்வமுடையவர்களுக்குப் பரப்பட்டன." என்கிறார்.
சிறையில் இருந்த போது சண்முகம் பிள்ளையோடு இணைந்து மார்க்சிய-லெனினிய அகராதி ஒன்றைத் தயாரித்தார். அதில் மார்க்சிய-லெனினிய கலைச் சொற்கள் அனைத்தையும் அகர வரிசைப் படுத்தப்பட்டு ஒவ்வொன்றிற்கும் தமிழ் விளக்கம் அளித்திருந்தார். மூன்று நோட்டுப் புத்தங்களில் எழுதப்பட்டு புழங்கிய அந்த அகராதி அச்சில் இல்லை.
நா. வானமாமலை தலைமையில் நாங்குனேரியில் இருந்து துண்டு பிரசுரங்கள் எழுதப்பட்டன. அவை யாவும் பாதுகாக்கப்படாமல் மறைந்துவிட்டதாக ஆர். நல்லகண்ணு குறிப்பிடுகிறார்.
இந்தி எதிர்ப்பு போராட்டம்
1965-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. இதில் கல்வி நிலையங்களில் மும்மொழி கொள்கையை எதிர்த்தது. கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரியில் ஆங்கிலம் இருக்க வேண்டும் என்றும் தமிழில் பயிற்றுவிக்க முடியாது என்றும் தெரிவித்தனார். தமிழில் பயிற்றுவிக்க முடியும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுத்தபோது பேராசிரியர் வானமாமலை அவற்றை விளக்குவதற்கு பல இயக்கங்களை முன்னின்று வழி நடத்தினார்.
1966-ம் ஆண்டு நியூ சென்சுரி புத்தக நிறுவனம் "தமிழில் முடியும்" என்ற நூலை வெளியிட்டது. இந்நூல் வெளிவருவதற்கு காரணமாக வானமாமலை அமைந்தார். மேலும் அந்நூலின் முக்கியத்துவத்தைக் கூறி மோகன் குமார மங்கலம் எழுதிய கடிதத்தை முன்னெடுத்து இதனை நடைமுறைபடுத்த வானமாமலை பல அறிஞர்களின் உதவியை நாடினார். அந்நூலின் முன்னுரையும் இரசாயனம் பற்றிய கட்டுரையும் அவரே எழுதினார்.
சிறை வாழ்க்கை
1948-ம் ஆண்டு நடைபெற்ற நெல்லை சதிவழக்கில் பேராசிரியர் வானமாமலை கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
நில மீட்பு போராட்டத்தில் எஸ். ஏ. முருகானந்தம், ஆர். நல்லகண்ணு ஆகியோருடன் இணைந்து ஈடுபட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தார். சிறையில் பல தோழர்களுக்கு மார்க்சிய வகுப்புகள் எடுத்தார்.
அமைப்புப் பணிகள்
பீப்பிஸ் பப்ளிஷிங் ஹவுஸ்
வானமாமலை 1947-ம் அவர் சங்க உறுப்பினர்களுடன் சேர்ந்து சிறிது பணம் திரட்டி திருநெல்வேலியில் அண்ணாச்சி என்றழைக்கப்பட்ட சிந்துபூந்துறை சோ. சண்முகம் பிள்ளை அவர்களிடமும், சென்னையில் ஜனசக்தி பிரசுலாயத்திடமும் நூல்களை வாங்கி விற்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார். அந்த அமைப்பிற்கு 'பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ்' எனப் பெயரிட்டார். இது பின்னர் பெயர் மாற்றம் பெற்று நெல்லை புத்தக நிலையம் என்று இயங்கி வந்தது.
நெல்லை எழுத்தாளர் சங்கம்
1947-ல் வானமாமலை சோ. சண்முகம் பிள்ளை, தொ.மு.சி. ரகுநாதன், தி.க.சிவசங்கரன் பிள்ளை ஆகியோருடன் இணைந்து "நெல்லை எழுத்தாளர் சங்கம்" என்ற அமைப்பினை உருவாக்கினார்.
கலையிலக்கியப் பெருமன்றம்
ப. ஜீவானந்தம் 1961-ம் ஆண்டு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் என்னும் அமைப்பை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவில் உருவாக்கினார். மே மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூரில் நடந்த விழாவில் அன்றைய கல்வி அமைச்சராக இருந்த சி. சுப்பிரணியம் பங்கேற்றார். இம்மாநாட்டில் பெருமன்றம் செயல்படுவதிற்கான மத்திய குழுவும், பல்வேறு துணைக்குழுக்களும் அமைக்கப்பட்டன. இதில் நா. வானமாமலை மத்திய குழுவின் உறுப்பினராகப் பணியேற்றார். இம்மாநாட்டில் அமைக்கப்பட்ட நாட்டார் இலக்கியத்தின் குழுப்பொறுப்பை வானமாமலை ஏற்றார்.
நெல்லை ஆராய்ச்சி குழு
முதல் உலகத் தமிழ் மாநாடு நடந்து முடிந்ததும் நா.வானமாமலை அதன் உள்ளடக்கம் பற்றிய சிறு நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டிற்கு பின்னர் அது பற்றிய விமர்சன நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார்.
முதல் இரு உலகத் தமிழ் மாநாடுகள் பற்றிய தன் சிறு நூல் மூலம் தமிழ்நாட்டில் ஆராய்ச்சியின் பின் தங்கிய நிலையை உணர்ந்த வானமாமலை அதற்கு ஒரு ஆய்வு அமைப்பு தொடங்க முடிவு செய்தார். தனது ஐம்பதாவது பிறந்தநாளில் பத்துப் பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். துவக்கத்தில் சிறிதாக அமைந்த இக்குழு பின்னாளில் 'நெல்லை ஆராய்ச்சிக் குழு' என்று விரிவடைந்தது. இக்கூட்டங்கள் பேராசிரியரின் தனிப் பயிற்சிக் கல்லூரியின் பெண்கள் கிளையில் வைத்து நடந்தன
இந்த ஆராய்ச்சி வட்டத்தின் செயல்பாடு தி.க.சிவசங்கரன், பொன்னீலன், எஸ். தோத்தாத்ரி, ஆ. சிவசுப்பிரமணியன் போன்ற பல மார்க்ஸிய ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் உருவாக வழியமைத்தது. 1975-ம் ஆண்டில் வானமாமலை ஆராய்ச்சிக் குழுவின் சார்பில் குமரி மாவட்டத்தில் 3 நாட்கள் பயிற்சி முகாம் ஒன்றை ஒருங்கிணைத்தார். இதில் சுமார் பத்து பேர் பங்கு கொண்டு வரலாறு, தத்துவம், இலக்கியம் ஆகியவற்றை விவாதித்தனர். இன்று வரை இந்த முகாம் தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இலக்கிய வாழ்க்கை
இலக்கிய விமர்சனம்
வானமாமலை 1938-1939 காலகட்டத்தில் வெளிவந்த மணிக்கொடி இதழில் 'இலக்கியம்' என்ற தலைப்பில் சிறு கட்டுரை எழுதினார். உரைநடை இலக்கியத்தைப் பற்றி அவர் எழுதிய ஆரம்பகால கட்டுரைகளில் ஒன்று இது.
நில மீட்பு போராட்டத்தின் போது திவான் ஜர்மன் தாஸ் என்பவர் 'மகாராஜா' என்ற நூலை எழுதினார். இது இந்திய சுதேச மன்னர்களது அந்தப்புர வாழ்வைப் பற்றி எழுதப்பட்ட நூல். வானமாமலை இந்நூலைப் பற்றி பல கட்டுரைகள் எழுதி எஸ்.ஏ. முருகானந்தத்தின் சாந்தி இதழில் வெளியிட்டார். இவை பின் சிறு நூலாக்கப் பட்டன.
நா.வானமாமலை எழுத்து இதழில் புதுக்கவிதை அறிமுகமானபோது அதை கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர். ஆனால் 1970-ல் புதுக்கவிதை மரபு குறித்த ஆய்வுக்கட்டுரையை தாமரை இதழில் எழுதினார். புதுக்கவிதையின் இடது சாரி போக்காக வானம்பாடி இயக்கம் தொடங்கப்பட்டதும் அதை வரவேற்று எழுதினார். இந்த கட்டுரைகள் அனைத்தும் "புதுக்கவிதை - முற்போக்கும் பிற்போக்கும்" என்ற சிறு நூலாக பின்னர் வெளிவந்தன.
1978-ம் ஆண்டு பேராசிரியரின் வெளிவராத பல நூல்கள் வெளிவந்தன. 1980-ம் ஆண்டு மத்திய பிரதேசம் செல்லும் முன் சென்னை கிறிஸ்துவ இலக்கியச் சங்கம் அழைப்பின் பெயரில் தமிழ் நாவல் பற்றிய ஒரு கட்டுரை வாசித்தார். இதுவே அவர் எழுதிய கடைசிக் கட்டுரை.
1946-ம் ஆண்டு 'ஒப்பிலாத சமுதாயம்' என்ற சிறிய நூலை ஜன சக்தி பிரசுராலயத்திற்காக எழுதினார்.இந்நூல்கள் வழியாக முற்போக்கு அழகியலையும், சோஷலிச யதார்த்தவாதத்தையும் முன்வைத்தார்.
மொழியாக்கம்
வானமாமலை ஸ்டீபன் ஹெய்ம்(Stefan Heym) எழுதிய 'The Cosmic Age' என்னும் நூலை 'விண்யுகம்' என்ற பெயரில் மொழி பெயர்த்தார். மேலும் அறிவியல் நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார்.
குழந்தை இலக்கியம்
நா. வானமாமலை1962-ம் ஆண்டு 'ரப்பரின் கதை' என்ற சிறிய நூலை வெளியிட்டார். இதன் கூட்டாசிரியராக எஸ். தோதாத்ரி இருந்தார். இந்நூல் 1962-ம் ஆண்டு ஜவகர்லால் நேரு பரிசைப் பெற்றது. இதனை எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை (திருநெல்வேலி) நிறுவனத்தினர் வெளியிட்டனர். இதன் பின் 'இரும்பின் கதை', 'காகிதத்தின் கதை', 'பெட்ரோலியத்தின் கதை' என்று பல புத்தங்கள் வெளிவந்தன.
இதழியல்
ஆராய்ச்சி இதழ்
நா.வானமாமலை 'நெல்லை ஆராய்ச்சி குழு' என்னும் அமைப்பை உருவாக்கி சமூகவியலையும் நாட்டாரியலையும் ஆய்வுசெய்தார். அதன்பொருட்டு ஆராய்ச்சி (இதழ்) என்ற பத்திரிக்கையை தொடங்கினார். இதழை அச்சிடுவதற்கு ஒரு அச்சகத்தை நிறுவினார். பின்னாளில் பண நெருக்கடி காரணமாக அந்த அச்சகத்தை விற்றுவிட்டார்.
தாமரை
நா. வானமாமலை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கலையிலக்கிய இதழான தாமரை இதழில் தொடர்ச்சியாக எழுதினார். அவ்விதழின் அமைப்புப்பணிகளிலும் பங்கேற்றார்.
நாட்டாரியல் ஆய்வு
1955-ம் ஆண்டு மார்க்சிய அறிஞரான பி.சி. ஜோஷி தமிழகத்திற்கு வருகை தந்த போது நா. வானமாமலை அவரை சந்தித்து பேசினார். அப்போது பி.சி. ஜோஷி நாட்டார் வழக்காற்றியல் பற்றி வானமாமலையிடம் உரையாடி அவருக்கு அத்துறையில் நாட்டம் கொள்ளச் செய்தார். இதன் விளைவாக பேராசிரியருக்கு கவனம் கிராமியப் பாடல்கள், கதைகள் பக்கம் திரும்பியது. சரஸ்வதி,தாமரை போன்ற பத்திரிக்கைகளில் சிறு சிறு கட்டுரைகள் எழுதினார்.
1959-ம் ஆண்டு வெளிவந்த தாமரை இதழில் 'சின்னத் தம்பி வில்லுப்பாட்டு' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். சரஸ்வதியில் 'முத்துப்பட்டன் கதை'யை வெளியிட்டார். ஆண்டாள் பாடல்களில் கிராமியப் பண்பாட்டின் கூறுகள் இருப்பதைச் சுட்டிக் காட்டி தாமரையில் 'தொல்குடி மக்களின் உலகக் கண்ணோட்டம்' என்ற கட்டுரையை எழுதினார். தாமரை (1966, 1967) இதழ்களில் 'நாட்டுப் பாடல்கள் விவாதம்'என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதினார்.
'நாட்டுக் கதைப் பாடல்களில் சமூக உள்ளடக்கம்' (தாமரை - பிப்ரவரி 1968), 'கொள்ளைக்காரர்களும் நாட்டுப்பாடல்களும் (தாமரை - ஆகஸ்ட் 1968)', 'வில்லுப்பாட்டுக் கதையும் கதை மாந்தர்களும் (தாமரை - ஏப்ரல் 1974)', 'இராமப்பையன் அம்மானை பாத்திரங்களின் சமூகத் தன்மை '(தாமரை - ஜீன், ஜீலை 1974), 'கன்னட நாட்டுப் பாடல்களின் வீரர் படிமம்' (தாமரை - 1977)".
இக்கட்டுரைகள் மூலம் நாட்டார் வழக்காற்றியல் பணிக்குரிய அடித்தளத்தையும், கோட்பாட்டு அணுகு முறையையும் விளக்கினார். இம்முயற்சியின் விளைவாக 'தமிழ் நாட்டு பாமரர் பாடல்' நூலை1960-ம் ஆண்டு வெளியிட்டார். இந்நூல் வெளிவர உறுதுணையாக இருந்தவர்கள் அப்போது புகழ் பெற்ற வில்லிசைக் கலைஞர்களாக இருந்த கார்க்கி, எஸ். எஸ். போத்தையா, ராமசந்திரன், செல்வி. டி. மங்கை.
தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றம் சார்பில் கு. சின்னப்ப பாரதி, எஸ். எஸ். போத்தையா, சிவகிரி கார்க்கி, வாழப்பாடி இராமச்சந்திரன் அகியோர் உதவியுடன் நா. வானமாமாமலை நாட்டார் பாடல்களைச் சேகரித்து சரி பார்த்து விளக்கக் குறிப்புகள் எழுதி 1964-ம் ஆண்டு 'தமிழர் நாட்டுப்பாடல்கள்' என்ற தலைப்பில் பெரிய நூலாக வெளியிட்டார். இதன் பின் பல்வேறு நாட்டார் பாடல்களை சேகரித்து தனித்தனியாக வெளியிட்டார். இவற்றில் காலத்தால் முன்னர் வெளிவந்தது 'கட்டபொம்மு கதை' (1960).
1975-76-ல் தமிழறிஞர் டாக்டர் வ.ஐ. சுப்பிரமணியம் வழியாக தார்வார் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி இயல் கழகத்தின் சார்பில் பேராய்வாளர் பணி கிடைத்தது. இந்த ஓராண்டு பணியில் நாட்டாரியில் சார்ந்து அவரது பார்வையை தொகுத்து ஒரு ஆய்வேட்டை உருவாக்கினார். இந்த ஆய்வேடு வானமாமலையின் மறைவுக்கு பின் "The Interpretation of the Folk Creations" என்ற தலைப்பில் 1981-ம் ஆண்டு திராவிட மொழி இயல் கழகத்தின் சார்பில் வெளியானது. இந்த நூலின் அடிப்படையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பேராசிரியருக்கு டி.லிட் பட்டம் அவரது மறைவுக்குப் பின் வழங்கியது.
விமர்சனங்கள்
நா.வானமாமலையின் மார்க்ஸிய நோக்கு கொண்ட நாட்டாரியல் தொகுப்பு முறை மீது பிற்காலத்தில் விமர்சனங்கள் உருவாயின. அவர் நாட்டாரியல் கலைகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்கியதும், வசைச்சொற்களை அகற்றிப் பதிப்பித்ததும், மார்க்ஸிய நோக்கில் மூலபாடங்களில் மாற்றங்களை உருவாக்கியதும் பின்னாளைய நாட்டாரியல் ஆய்வாளர்களால் நாட்டாரியல் முறைமைக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டப்பட்டது.
வாழ்க்கை வரலாறுகள், ஆய்வுகள்
- நா. வானமாமலை ஆராய்ச்சித் தடம் -இரா.காமராசு
- நா. வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள் -இரா.காமராசு
- நா.வானமாமலை - எஸ். தோத்தாத்ரி. (சாகித்ய அக்காதமி)
- பண்பாட்டுப் போராளி நா.வானமாமலை- ஆ.சிவசுப்ரமணியன்
வானமாமலை அறுபது
1977-ம் ஆண்டு பேராசிரியர் நா. வானமாமலையின் மாணவர்கள் அவரது 60-வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடினர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் மதுரைத் திரவியம் தாயுமானவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அந்நிகழ்ச்சி நடந்தது. வானமாமலையுடன் தொடர்புடைய 200 பேர் அதில் பங்கேற்றனர். விழாவினை ஒட்டி அடுத்த ஆண்டு மலரை ஒன்றையும் வெளியிட்டனர். "தமிழ் ஆராய்ச்சியின் புதிய எல்லைகள்" என அந்நூலை இரண்டு பாகங்களாக பிரித்து முதல் பாகம் தமிழிலும், இரண்டாம் பாகம் ஆங்கிலத்திலும் வெளியிட்டனர்.
மறைவு
பேராசிரியர் நா.வானமாமலை 1980-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கோர்பா என்ற இடத்திற்கு தன் மகளைக் காண சென்றார். அங்கே பிப்ரவரி 2, 1980 அன்று மூளையில் ஏற்பட்ட இரத்தக் குழாய் வெடிப்பு காரணமாக மறைந்தார். அங்கேயே அவர் உடலும் எரியூட்டப்பட்டது.
நாட்டுடைமை
நா. வானமாமலையின் நூல்கள் 2008-ல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.
இலக்கிய இடம்
தமிழக சமூகவியலை மார்க்ஸிய ஆய்வுமுறைப்படி அணுகிய முன்னோடி ஆய்வாளர் நா.வானமாமலை. தமிழகத்தின் நாட்டார் இலக்கியங்களை மார்க்ஸியப் பார்வையில் ஆய்வு செய்தவர். மார்க்ஸிய சமூகவியலாய்வை நெல்லை ஆராய்ச்சிக்குழு என்னும் அமைப்பு சார்ந்து வளர்த்தெடுத்தார். மார்க்ஸிய அழகியல் சார்ந்த இலக்கிய விமர்சனத்தை உருவாக்கிய தமிழகத்து முன்னோடிகளில் ஒருவர். ஓர் இலக்கிய மையமாகத் திகழ்ந்து பல எழுத்தாளர்கள் உருவாகி வர வழியமைத்தார்.
நூல்கள்
நாட்டார் வழக்காற்றியல்
- தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள், சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1960)
- கட்டபொம்மன் கதைப்பாடல், சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1961)
- தமிழர் நாட்டுப் பாடல்கள் சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1964)
- வீணாதி வீணன் கதை, சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1967)
- Studies in Tamil Folk Literature, Madras N.C.B.H (1969)
- வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப்பாடல், மதுரை பல்கலைக்கழகம், மதுரை (1971)
- முத்துப்பட்டன் கதைப்பாடல், மதுரை பல்கலைக்கழகம், மதுரை (1971)
- காத்தவராயன் கதைப்பாடல், மதுரை பல்கலைக்கழகம், மதுரை (1971)
- கட்டபொம்மு கூத்து, மதுரை பல்கலைக்கழகம், மதுரை (1972)
- கான்சாகிபு சண்டை, மதுரை பல்கலைக்கழகம், மதுரை (1972)
- ஐவர் ராசாக்கள் கதை, மதுரை பல்கலைக்கழகம், மதுரை (1972)
- Interpretation of Tamil Folk Creations, D.L.A. Trivandrum (1981)
வரலாறு
- தமிழர் வரலாறும் பண்பாடும், சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1966)
- வரலாறும் வக்கிரங்களும் ரொமீலாதாப்பர் (மொ. பெ), சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1973)
- வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி, சென்னை மக்கள் வெளியீடு (1980)
- தமிழ்நாட்டில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்கள், சென்னை, மக்கள் வெளியீடு (1980)
பண்பாடு
- தமிழர் பண்பாடும் தத்துவமும், சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1973)
- பழங்கதைகளும், பழமொழிகளும், சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1980)
இலக்கியம்
- பாரதியும் தொழிலாளரும், சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1964)
- இலக்கிய உலகம் எதிர்ப்பதென்ன, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் (1967)
- புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும், சென்னை, மக்கள் வெளியீடு (மார்ச், 1975)
- உரைநடை வளர்ச்சி, சென்னை, மக்கள் வெளியீடு (1978)
குழந்தை இலக்கியம்
- ரப்பரின் கதை, (கூட்டாசிரியர் எஸ். தோத்தாத்ரி), திருநெல்வேலி எஸ். ஆர். சுப்ரமணியபிள்ளை வெளியீடு (ஏப்ரல், 1962)
- இரும்பின் கதை, திருநெல்வேலி எஸ். ஆர். சுப்ரமணியபிள்ளை வெளியீடு (ஜனவரி, 1964)
மொழிபெயர்ப்பு நூல்கள்
- விண்யுகம் (மூலம்: ஸ்டீபன் ஹெய்ம்), நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ் லிமிடெட், திருநெல்வேலி (1960)
- ஆ. தெ. உடலும் உள்ளமும் (மூலம்: பாவ்லோவ்), நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ் லிமிடெட், திருநெல்வேலி (1960)
- ஆ. தெ. உயிரின் தோற்றம் (மூலம்: ஏ.ஐ. ஒபாரின்), சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1960)
- ஆ. தெ. உடலியல் மருத்துவ வரலாறு (கூட்டாசிரியர் எஸ். தோத்தாத்ரி), சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1960)
- வரலாறும் வக்கிரங்களும் (ரொமீலாதாப்பர்), சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1973)
- விஞ்ஞான தொழில் நுட்பப் புரட்சி, சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1983)
தத்துவம்
- பண்டைய வேதத் தத்துவங்களும் வேதமறுப்பு பௌத்தமும், மக்கள் வெளியீடு, சென்னை (மார்ச் 1976)
- மார்க்சிய சமூக இயல் கொள்கை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை (1976)
- மார்க்சிய தத்துவம் இயக்கவியம் பொருள் முதல் வாதம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை (1977)
- மார்க்சிய அறிவுத் தோற்றவியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை (1978)
- மார்க்சிய அழகியல், மக்கள் வெளியீடு, சென்னை (1978)
அரசியல்
- இந்தியர் கண்ட ரஷ்யா, ஜனசக்தி, சென்னை (1951)
- இந்தியக் கல்வித்துறையில் அமெரிக்க டாலர் ஊடுருவல், மக்கள் வெளியீடு, சென்னை (1975)
பதிப்பித்தவை
- தமிழில் முடியும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை (1965)
- மக்களும் மரபுகளும், சாந்தி, தூத்துக்குடி (1977)
- தமிழ் நாவல்கள் ஒரு மதிப்பீடு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை (1977)
நினைவு மலர்
- தமிழ் ஆராய்ச்சியின் புதிய எல்லைகள் (1977 - அறுபது மலர்)
(நன்றி - இரா. காமராசன், எஸ். தோதாத்ரி)
வெளி இணைப்புகள்
உசாத்துணை
- நா. வானமாமலை - இந்திய இலக்கியச் சிற்பிகள், எஸ். தோதாத்ரி
- நா.வானமாமலை கலையிலக்கியப் பெருமன்றம்
- கீற்று இணைய இதழ். நா.வா
- தமிழ் தென்றல் ஆன்லைன் இதழ் நா.வா
- தீக்கதிர் இதழ். எஸ்.ஏ.பெருமாள் நா வா பற்றி
- தமிழ் அறிஞர்கள். எழில் இளங்கோவன்
- மக்களின் பேராசிரியர் நா.வானமாமலை இரா காமராசு
- நா.வானமாமலை தமிழ் உரைநடை வளர்ச்சி இணைய நூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
10-Nov-2023, 09:12:27 IST