under review

வ.ஐ. சுப்பிரமணியம்

From Tamil Wiki

வ. ஐ. சுப்பிரமணியம்(வ.அய். சுப்ரமணியம்; வடசேரி ஐயம்பெருமாள் சுப்பிரமணியம், பிப்ரவரி 18, 1926 - ஜூன் 29, 2009) மொழியியல் அறிஞர், ஆய்வாளர், கல்வியாளர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர். முதல் உலகத் தமிழ் மாநாடு நடக்கவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தார். தென்னிந்திய மொழிகளை திராவிடம் என்னும் ஒற்றைக் கருத்தாக்கத்தின் கீழ் ஆய்வு செய்யும் கருத்தை முன்வைத்து, குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமானவர். தென்னிந்தியப் பண்பாட்டாய்வுக்குப் பெரும் பங்காற்றியவர். அறிவியல்பூர்வமான மொழியியல் ஆய்வின் முன்னோடிகளில் ஒருவர்.

பிறப்பு,கல்வி

வ.ஐ. சுப்பிரமணியம் நாகர்கோயில் அருகில் உள்ள வடசேரியில் பிப்ரவரி 18, 1926 அன்று ஐயம்பெருமாள் - சிவகாமி இணையருக்கு பிறந்தார். வடசேரியிலுள்ள எஸ்.எம். ஆர்.வி. பள்ளியில் பள்ளிக்கவியை முடித்தார். நாகர்கோவில் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் புதுமுக வகுப்பு முடித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியத்தில் இளங்கலைப்(பி.ஏ. ஆனர்ஸ்) பட்டம் பெற்றார் (1946). கேரளப் பல்கலைக்கழகத்தில் எஸ். வையாபுரிப் பிள்ளையிடம் ஆய்வு மாணவராகப் பணியாற்றி அவரது வாரிசு என்ற பெயரைப் பெற்றார். அமெரிக்காவிலுள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் மொழியியலறிஞர் ஹவுஸ் ஹோல்டரின் (House Holder) நெறியாள்கையில் மொழியியலில் 1957-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

வ.ஐ. சுப்ரமணியம் 1946-57 காலகட்டத்தில் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், புது தில்லியில் அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும், கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1958-67 ஆண்டுகளில் கேரளப்பல்கலைக்கழகத்தில் தமிழ், மொழியியல் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றி, பின்னர் 1967 முதல் மொழியியல் துறைத்தலைவராகவும், பேராசிரி யராகவும் பணியைத் தொடர்ந்தார். 1981-86 காலகட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரானார். 1997-2001 குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர், இடைப்பட்ட காலங்களில் பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளியின் மதிப்புறு இயக்குநராகப் பங்காற்றினார்.

வ.ஐ.சுப்ரமணியத்தின் மனைவி இந்திரா. நான்கு மக்கள்.

கல்விப்பணிகள்

வ.ஐ.சுப்பிரமணியம் 1967-ல் கேரளப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையை உருவாக்கி அதன் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியைத் தொடர்ந்தார். புளும்ஃபீல்ட்(Bloomfield), சோம்ஸ்கி(Noam Chomsky) போன்ற நவீன மொழியியல் அறிஞர்களின் கோட்பாடுகளைத் மொழியியல் ஆய்வில் அறிமுகப்படுத்தினார். அவரது மாணவர்கள் சங்க இலக்கியங்களின் சொல்லடைவுகளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றனர்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்

1981-ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனால் அதன் முதல் துணைவேந்தராக வ.ஐ.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். அவரது நிர்வாகக் கட்டமைப்பில் மொழித்துறை, சுவடித்துறை, வளர்தமிழ்துறை, கலைத்துறை, அறிவியல் துறை என ஐந்து பெறும் துறைகளும் அவற்றில் உட்பிரிவுகளும் உருவாகின

  • சுவடித்துறை- ஓலைச்சுவடி, அரிய கையெழுத்துச் சுவடிகள், கல்வெட்டு மற்றும் தமிழரின் கடல்சார் வரலாற்றாய்விற்காக தொல்லியல் நீரகழாய்வு மையம்
  • கலைத்துறை- சிற்பம், இசை, நாடகம்
  • வளர் தமிழ்- அயல்நாட்டு தமிழ்க்கல்வி, மொழிபெயர்ப்பு, அகராதியியல், சமூக அறிவியல், அறிவியல், தமிழ் வளர்ச்சி
  • மொழித்துறை-இலக்கியம், மொழியியல், தத்துவமையம், பழங்குடி மக்கள் ஆய்வுமையம், நாட்டுப்புறவியல் துறை, இந்திய மொழிகள்
  • அறிவியல் -சித்த மருத்துவம், தொல் அறிவியல், நில அறிவியல், கணிப்பொறி அறிவியல், கட்டடக்கலை

தமிழ்ப் பல்கலைக்கழக அமைப்பு சார்ந்து தமிழியல் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. போலந்து, ஜெர்மனி, மலேசியா, சீனா, மொரீசியஸ் எனப் பல நாடுகளைச் சார்ந்தவர்களும், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் வழி செய்தார். அவர் தலைமையில் ஆய்வு செய்த மாணவர்கள் சவெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் இந்தியவியல் துறைகளில் பணிபுரிந்தனர்.

வ.ஐ. சுப்ரமணியத்தின் தலைமையில் பொறியியல், மருத்துவம், இரண்டையும் தமிழ் வழிக் கற்பிக்கும் திட்டத்தில், பாடநூல்களை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 27 நூல்கள் (பொறியியல் 13, மருத்துவம் 14) உருவாக்கப்பட்டு,அவற்றுள் 18 நூல்கள் வெளிவந்துள்ளன. கலைச்சொல் பட்டியல்கள் உருவாக்கப்பட்டு 4 நூல்களாக வெளிவந்தன. தமிழ்ப் பேரகராதி, கலைக் களஞ்சியப் பணிகளைச் செயல்படுத்தினார். பல்கலைக்கழகம் மூலம் பெருஞ்சொல்லகராதிகள் (5 தொகுதிகள்) 2, கலைக்களஞ்சிங்கள் (30 தொகுதிகள்), சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(3), பல துறைசார் கலைச் சொல்லகராதிகள்(12) வெளிவந்தன.

குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் நன்றி:விகடன்
குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம்

வ.ஐ. சுப்பிரமணியம் நான்கு தென் மாநிலங்களிடையே நிலவும் பண்பாட்டு, மொழி ஒற்றுமைகளைக் கருத்தில் கொண்டு அவற்றை திராவிடம் என்னும் ஒற்றைக் கருத்தாகத்தின் கீழ் ஆய்வு செய்வதன் தேவையை வலியுறுத்தி திராவிடப் பல்கலைக்கழகத்தின் கருத்துருவை ஆந்திர அரசின் ஊராட்சி நிர்வாகச் செயலர் காசிப்பாண்டியனுடன் இணைந்து முன்வைத்தார். பல்கலைக்கழகத்தின் அமைப்புக்குழுவில் பங்காற்றி, திராவிடப் பல்கலைக்கழகத்தின் சட்ட வரைவை உருவாக்கினார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படும் குப்பம் நிலப்பகுதியைத் தேர்வு செய்து 1997-ல் அங்கு திராவிடப் பல்கலைக்கழகத்தை உருவாக்கி, நான்கு மொழிகள் இணைந்த ஆய்வை மேற்கொள்ளும் பல்கலைக்கழகமாகக் கட்டமைத்தார். 2001 வரை அதன் இணைவேந்தராகப் பணியாற்றினார்.

மொழியியல்/திராவிடவியல் பணிகள்

வ.ஐ. சுப்ரமணியம் கேரளப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைத் தலைவராக இருந்தபோது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் விரிவான ஆய்வுகள் நடந்தன. இச்சூழலைப் பயன்படுத்தி 1971-ல் திராவிட மொழியியல் கழகத்தை (Dravidian Linguistic Association) கேரள அரசின் துணையோடு திருவனந்தபுரத்தில் உருவாக்கினார். அந்த ஆண்டே திராவிட மொழிகள் ஆய்விற்கான 'International Journal of Dravidian Linguistics' எனும் ஆய்வு இதழை வெளியிட்டார். ஆண்டுதோறும் வெளிவரும் இவ்விதழ் திராவிட மொழியியல் ஆய்வை அறிவியலின் துணை கொண்டு முன்னெடுத்தது. சமஸ்கிருதம், பிராமி மொழிகளிலுள்ள இலக்கணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது போல, திராவிட மொழிகள் சிலவற்றின் இலக்கணமும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள. இந்நிறுவனம் வெளியிட்ட முக்கியமான ஆராய்ச்சி நூல்களில் சில:

  • திராவிடக் களஞ்சியம் -3 தொகுதிகள் (Dravidian Encylopaedia –3 Vol ),
  • திராவிடப் பழங்குடி மக்கள் களஞ்சியம் - 3 தொகுதிகள் ( Encyclopaedia of Dravidian Tribes – 3 Vols ),
  • மேற்கு வங்காளம் - ஒரு கையோடு – 2 தொகுதிகள் ( A handbook of West Bengal 2 Vols),
  • தொல்காப்பிய மூலபாட வேறுபாடுகள் (Textual vanation of Tolkappiyam),
  • தொல்காப்பியச் சொல்லடைவு (Index of Tolkappiyam),
  • தென்னிந்தியாவில் சமணம் ( Jainism of South India ),
  • தெலுங்கு இலக்கணக் கோட்பாடுகள் (Theories of Telugu Grammer),
  • கிரந்த எழுத்துக்கள் (The Grantha Script )
திராவிட மொழியியல் பள்ளி

திராவிட மொழியியல் கழகம் மற்றும் அவ்வமைப்பின் இதழ் வெளியீடு ஆகியவற்றின் தொடர்ச்சியாக ‘பன்னாட்டுத் திராவிட மொழியியல்’ பள்ளியை 1977-ல் திருவனந்தபுரத்தில் உருவாக்கி அதன் மதிப்புறு இயக்குநராக 2001 முதல் 2009 வரை பணியாற்றினார்.

உலகத் தமிழ் மாநாடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

1964 -ல் டெல்லியில் நடைபெற்ற அகில உலக கீழ்த்திசை மாநாட்டில் சேவியர் தனிநாயகம் அடிகளும் வ.ஐ. சுப்பிரமணியமும் உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கான திட்டத்தை முன்வைத்தனர். இதன் விளைவாக 1966 -ல் கோலாலம்பூரில் முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. ஐரோப்பிய, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தமிழ் குறித்த புரிதல், இம்மாநாடுகள் மூலம் ஏற்பட்டது.

உலகிலுள்ள தமிழாராய்ச்சிக்கான மையமாக இயங்கும் ஓர் அமைப்பாக 1968-ல் அண்ணாத்துரை முதல்வராக இருந்தபோது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ அங்கீகாரத்தோடு, தன்னாட்சியாக அந்நிறுவனம் செயல்பட அடிப்படை வரைவுகளை உருவாக்குவதில் வ.ஐ.சுப்ரமணியம் பெரும்பங்கு வகித்தார். 1968 முதல் 1980 வரை அதன் செயலராகவும் பணியாற்றினார். இந்நிறுவனம் உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தி வருகிறது.

தமிழ்வழி அறிவியல் கல்விக்கான போராட்டம்

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஜனவர் 19, 1999-ல் அடுத்த கல்வியாண்டு முதல் (1999-2000) அறிவியல் பாடங்களை தமிழில் கற்பிக்க அரசு ஆணை பிறப்பித்தது. தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளும் பெற்றோர்களும் ஆணையை எதிர்த்து வழக்கிட்டு வென்றனர். கருணாநிதி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது வ.அய். சுப்பிரமணியம் அம்முறையீட்டில் தன்னை அதில் இணைத்துக் கொண்டு தமிழ் கல்விமொழியாக இருக்கவேண்டியதன் காரணங்களை முன்வைத்தார்[1].

விருதுகள், பரிசுகள்

  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசு (2007, மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் வகைப்பாட்டில்)
  • கௌரவ முனைவர் பட்டம் (மொழியியல் துறைப் பங்களிப்புகளுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம்)

மறைவு

வ.ஐ. சுப்பிரமணியம் ஜூன் 29, 2009 அன்று திருவனந்தபுரத்தில் காலமானார்.

வ. ஐ. சுப்பிரமணியத்தின் ஆளுமையின் சாயலையுடைய நாயகனைக் கொண்டு பிரபஞ்சன் காகித மனிதர்கள் எனும் புதினத்தை எழுதினார்.

மதிப்பீடு

வ.ஐ. சுப்பிரமணியம் மொழியியலிலும், தமிழியலிலும் அறிவுபூர்வமான ஆய்வுமுறைகளப் பின்பற்றிய முன்னோடியாக அறியப்படுகிறார். திராவிட மொழியியல் நிறுவனத்தின் மூலமாக அவர் வெளியிட்ட பல்வேறு ஆராய்ச்சி நூல்கள் மிக முக்கியமானவை. கீழைத்தேய மாநாடுகளில் தமிழின் தொன்மைக்கும் விரிவுக்கும் இடமில்லாமையை கண்டு தமிழுக்காக தனி மாநாட்டின் அவசியத்தை வலியுறுத்தி உலகத்தமிழ் மாநாடுகள் நடக்க முக்கியக் காரணமானவர்களில் ஒருவர்.

துணைவேந்தராக தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் குறிப்பிட்ட தேசிய இனத்தின் மொழி, கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு சார்ந்த கூறுகளை தர்க்கப்பூர்வமாக புரிந்து கொள்ளும் கல்வி மற்றும் ஆய்வு முறையின் நிர்வாகக் கட்டமைப்பு தமிழ்க்கல்வித்துறைக்கு அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பு.

ஒரு மொழிக் குடும்பத்திற்காக இந்தியாவில் செயல்படும் ஒரே பல்கலைக்கழகமான குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக இருந்தார். தென்னக இலக்கியங்களை ஒட்டுமொத்தமாக திராவிட இலக்கியமாக அணுகும் அவரது ஆய்வு முறையைக் குறித்து "எங்களூர் பேரறிஞரான வ.ஐ.சுப்ரமணியம் அவர்கள் குப்பம் திராவிடப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அமர்ந்து நடத்தி நெடுந்தொலைவு சென்ற ஆய்வுமுறை அது. இன்றைய தமிழாய்வில் குப்பம் திராவிடப் பல்கலையின் திராவிடவியல் ஆய்வுநூல்களே மிகப்பெரிய சாதனைகள்" என்றும், "வ.ஐ. சுப்ரமணியம் அவர்களின் ஆழமான தமிழ்ப்பற்றுதான் தமிழாய்வுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கச் செய்தது. ஆனால் வ.ஐ.சுப்ரமணியம் அந்த தமிழ்ப்பற்று தன் ஆய்வுக்கு குறுக்கே வர அனுமதித்தவரல்ல. இந்த நடுநிலைமை தமிழாய்வில் என்றும் தேவையாக இருக்கக் கூடிய ஒன்று. தன் மாணவர்களில் அந்த நோக்கை வலியுறுத்தி பயிற்றுவித்தது தமிழில் ஒரு மரபை உருவாக்கியது" என்றும் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

படைப்புகள்

  • புறநானூறு சொல்லடைவு
  • வ. ஐ. சுப்பிரமணியம் கட்டுரைகள் தொகுதி-1 ,மொழியும் பண்பாடும்
  • வ. ஐ. சுப்பிரமணியம் கட்டுரைகள் தொகுதி-2 , இலக்கணமும் ஆளுமைகளும்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page