under review

ஜெயமோகன்

From Tamil Wiki

To read the article in English: Jeyamohan. ‎

எழுத்தாளர் ஜெயமோகன்
ஜெயமோகன்
ஜெயமோகன்1990

ஜெயமோகன் (ஏப்ரல் 22, 1962) தமிழ் எழுத்தாளர். தமிழில் நாவல்கள், சிறுகதைகள், இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு, பயணக்கட்டுரைகள், பண்பாடு, மரபு, மதம், தத்துவம், என பல தளங்களில் எழுதி வருகிறார். இலக்கியம், தத்துவம், மதம், மரபு என பல தலைப்புகளில் பேருரைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதி வருகிறார். திரைத்துறையில் பணியாற்றுகிறார். ஜெயமோகன் வாசகர்களால் உருவாக்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் அமைப்பு எழுத்தாளர்கள் வரலாற்றாய்வாளர்கள் பற்றிய கருத்தரங்குகள், எழுத்து, வாசிப்பு, விவாதம் பற்றிய பயிற்சிப்பட்டறைகளை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் இலக்கிய விருதுகள் வழங்கி வருகிறது.

பிறப்பு, கல்வி

தன்னுடைய குரு நித்ய சைதன்ய யதியுடன்
ஜெயமோகன்1997

ஜெயமோகனின் தந்தையின் பெற்றோர் திருவரம்பு ஊரைச்சேர்ந்த சங்கரப்பிள்ளையும் திருவட்டாறைச் சேர்ந்த லட்சுமிக்குட்டி அம்மாவும். லட்சுமிக்குட்டியம்மா மரபான சம்ஸ்கிருத, மலையாளக் கல்வி பெற்ற பண்டிதை. ஜெயமோகனின் தாயின் பெற்றோர் நட்டாலம் பரமேஸ்வர பிள்ளையும் பத்மாவதி அம்மாவும். ஜெயமோகனின் தந்தை திருவரம்பு எஸ். பாகுலேயன் பிள்ளை. ஜெயமோகனின் தாய் நட்டாலம் பி.விசாலாட்சியம்மா. ஜெயமோகன் ஏப்ரல் 22, 1962-ல் அருமனை அரசு மருத்துவமனையில் ஜெயமோகன் பிறந்தார். இவர் இரண்டாவது மகன். இலக்கியவாசகியான அன்னையால் ஒரு வங்கநாவலில் இருந்து ஜெயமோகன் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

ஜெயமோகன் பத்மநாபபுரத்தில் ஒன்றாம் வகுப்பு படித்தார். இரண்டாம் வகுப்பை கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் என்ற ஊரில் அரசு தொடக்கப் பள்ளியில் பயின்றார். அதன்பின்னர் முழுக்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை அருமனை [நெடியசாலை] அரசு உயர்நிலைப் பள்ளியில் கற்றார். ஜெயமோகன் 1978-ல் பள்ளிப் படிப்பை முடித்து மார்த்தாண்டம் 1979-ல் (நேசமணி) கிறிஸ்தவக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் வணிகவியல் துறையைத் தேர்ந்தெடுத்து படித்தார். 1980-ல் நாகர்கோவில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். ஜெயமோகன் 1982 வரை கல்லூரியில் பயின்றார். கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யவில்லை.

தனிவாழ்க்கை

ஜெயமோகன் தன் நண்பன் ராதாகிருஷ்ணனின் தற்கொலையினால் உளநெருக்கடிக்கு ஆளாகி, கல்லூரிப்படிப்பை முடிக்காமல் ஊரைவிட்டு கிளம்பிச் சென்றார். திருவண்ணாமலை, பழனி, காசி ஆகிய ஊர்களில் இருந்திருக்கிறார். ஜெயமோகன் 1984 டிசம்பரில் கேரளத்தில் காசர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியில் சேர்ந்தார். 1989 நவம்பர் வரை அங்கு பணியாற்றிவிட்டு தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பணிக்குச் சேர்ந்தார். 1990-ல் தர்மபுரிக்கு மாற்றலானார். ஜெயமோகன் 1998-ல் நாகர்கோயிலுக்கு பணிமாறுதலாகி வந்து 1999 வரை நாகர்கோயிலிலும் 2010 வரை தக்கலையிலும் பணியாற்றினார். 2010-ல் முன்னரே பணி ஓய்வு பெற்றுக்கொண்டார். திரைத்துறையில் பணியாற்றுகிறார்.

ஜெயமோகன் தன் வாசகியாக இருந்த மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவி எஸ். அருண்மொழிநங்கை யை 8 ஆகஸ்ட் 1991-ல் மணம் புரிந்துகொண்டார். இவர்களுக்கு அஜிதன் எனும் மகனும், சைதன்யா என்ற மகளும் உள்ளனர். நாகர்கோயிலில் வசித்து வருகிறார். அஜிதன் நாவலாசிரியர், திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். சைதன்யா தமிழ் விக்கி பொறுப்பாளர்களில் ஒருவர்

அரசியல்

ஜெயமோகன் இளமையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவப் பெரும்பான்மை அமைந்த சூழலில் வளர்ந்தார். ஆர்.எஸ்.எஸ் இயக்க அனுதாபியாக இருந்தார். ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் இதழான விஜயபாரதத்தில் எழுதியிருக்கிறார்.

ஜெயமோகன் 1984 முதல் காசர்கோட்டில் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து தொழிற்சங்கப் பணிகளில் செயல்பட்டார். காசர்கோடு ஊழியர் கம்யூனில் மார்க்சிய வகுப்புகளில் பங்கெடுத்தார். மார்க்ஸியரான ஞானியை தன் ஆசிரியராக ஏற்றுக்கொண்டார். பின்னர் காந்தி மீதான ஈடுபாட்டை மலையாளச் சிந்தனையாளர் எம்.கோவிந்தன், ஜி.குமார பிள்ளை ஆகியோரிடமிருந்து பெற்றார். காந்தியின் ஜனநாயகப் பார்வையிலும், மையத்தை மறுக்கும் தரிசனத்திலும் ஈடுபாடு கொண்டவர். 'இன்றைய காந்தி’ 'உரையாடும் காந்தி’ ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார்.

ஆன்மிகம்

நெருக்கமான நண்பராகிய ராதாகிருஷ்ணனின் மறைவால் உருவான ஆன்மிக நெருக்கடியில் தன் 19 வயதில் வீட்டைவிட்டுச் சென்ற ஜெயமோகன் அதன்பின்னரும் தொடர்ச்சியான ஆன்மிகத்தேடல் கொண்டிருந்தார். துறவுபூண்டு திருவண்ணாமலையிலும் காசியிலும் பழனியிலும் இருந்திருக்கிறார். காஞ்ஞாங்காடு நித்யானந்த குருகுலம் போன்றவற்றுக்குச் சென்றிருக்கிறார். திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்களைச் சந்தித்திருக்கிறார்.

ஜெயமோகன் 1992ல் ஊட்டியில் நாராயணகுரு குலத்தில் குரு நித்ய சைதன்ய யதியைச் சந்தித்து உரையாடி அவரை தன் குருவாகக் கொண்டார். இந்திய மதங்களின் தத்துவ பின்புலங்களைக் கற்றறிந்த ஜெயமோகன், நாராயணகுரு முன்வைத்த தூயவேதாந்தப் பார்வையை தன் ஆன்மிக அணுகுமுறையாகக் கொண்டவர். 'இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்’, ’இந்து மதம் – சில விவாதங்கள்,’ 'இந்திய ஞானம்’ 'கலாச்சார இந்து’ முதலிய நூல்களை எழுதியிருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

எழுத்தாளர் ஜெயமோகனும் எழுத்தாளர் அருண்மொழிநங்கையும்
இலக்கிய அறிமுகம்

ஜெயமோகன் இளமையில் இலக்கிய வாசகியான தன் தாயிடமிருந்து இலக்கிய அறிமுகம் பெற்றார். இவர் இல்லத்திலேயே அன்னை உருவாக்கியிருந்த நூலகம் இருந்தது. தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வாசிப்புடைய ஜெயமோகன் முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ. நூலகம், அருமனை அரசு நூலகம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார். அதன்பின்னர் திருவட்டாறு ஸ்ரீ சித்ரா நூலகத்தில் மலையாள நாவல்களைப் படித்தார்.

தொடக்ககால எழுத்துக்கள்

ஜெயமோகன் பள்ளி நாட்களில் எழுதத் தொடங்கினார். 1975-ல் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ரத்னபாலா என்னும் இதழில் அவரது முதல் சிறுகதை வெளியானது. பள்ளி நாட்களிலும் கல்லூரி நாட்களில் வெவ்வேறு பெயர்களிலும் தன்பெயரிலும் வார இதழ்களில் ஏராளமான கதைகளை எழுதியிருக்கிறார்.

ஜெயமோகன் 1984 முதல் காசர்கோட்டில் பணியாற்றும்போது இடதுசாரி இலக்கியவாதிகளுடன் அறிமுகம் உருவாகியது. 1986ல் சுந்தர ராமசாமியுடன் அணுக்கமானார். 1987ல் மலையாளக் கவிஞர் ஆற்றுர் ரவிவர்மாவும், கேரள வரலாற்றாசிரியரும் நாவலாசிரியருமான பி.கே.பாலகிருஷ்ணனும் அறிமுகமானார்கள். நவீன இலக்கியப் பயிற்சியை அவர்களிடமிருந்து பெற்றார். அவர்களுடன் தொடர் உரையாடலில் இருந்தார்.

ஜெயமோகன் 1987-ல் நதி என்னும் சிறுகதையை கணையாழி இதழில் எழுதினார். கணையாழியின் ஆசிரியர் அசோகமித்திரன் எழுதிய தனிக்குறிப்புடன் அக்கதை வெளியாகியது. இதையே தன் முதல் கதை என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். தொடர்ந்து கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார். தீபம் இதழில் எலிகள், ரோஜா பயிரிடுகிற ஒருவர் ஆகிய கதைகள் 1988ல் வெளியாயின. ’கைதி’ என்ற கவிதை 1987-ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த 'கொல்லிப்பாவை’ இதழில் வெளியாயிற்று.

1988-ல் ஞானி நடத்திய நிகழ் இதழில் ஜெயமோகன் எழுதிய 'படுகை’, 'போதி’ முதலிய கதைகள் வெளிவந்தன. சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு (இதழ்) இதழில் ’திசைகளின் நடுவே’ என்னும் கதை வெளிவந்தது. பொன் விஜயன் நடத்திவந்த புதிய நம்பிக்கை இதழில் ’மாடன்மோட்சம்’ சிறுகதை வெளிவந்தது. இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, அசோகமித்திரன் ஆகியோர் இக்கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தனர். ஜெயமோகன் அக்கதைகளினூடாக இலக்கிய வாசகர்களிடையே பரவலாக அறிமுகமானார்.

ஜெயமோகன் 1988-ல் 'ரப்பர்’ என்ற நாவலை எழுதினார். அதை 1990-ல் அகிலன் நினைவுப் போட்டிக்காகச் சுருக்கி அனுப்பி விருது பெற்றார். தாகம் [தமிழ்ப் புத்தகாலயம்] அதை 1990-ல் வெளியிட்டது. 1991 முதல் சுபமங்களா இதழில் 'ஜகன்மித்யை’ என்னும் சிறுகதை வெளியாகியது. சுபமங்களா இதழில் தொடர்ந்து கதைகள், கட்டுரைகள் எழுதினார். இந்தியா டுடே, கணையாழி உள்ளிட்ட இதழ்களிலும் கதைகள் வெளிவந்தன. 1991ல் ’நாவல்’ என்னும் இலக்கியக் கோட்பாட்டு நூல் வெளிவந்தது. 1992ல் மீரா நடத்திய அன்னம்-அகரம் பதிப்பகம் வெளியீடாக முதல் சிறுகதை தொகுதியான ’திசைகளின் நடுவே’ வெளியானது. 1993-ல் இரண்டாவது சிறுகதை தொகுதியான ’மண்’ சினேகா பதிப்பக வெளியீடாக வந்தது.

முதன்மையான படைப்புகள்
ஜெயமோகன் சுந்தர ராமசாமியுடன்

ஜெயமோகனின் நாவலான 'விஷ்ணுபுரம்’ 1997ல் அகரம் (அன்னம்) பதிப்பக வெளியீடாக வந்தது. நவீனத்துவ பாணி நாவல்கள் வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் மீபுனைவுத் தன்மை கொண்டதும், இந்தியக் காவியமரபின் அழகியலை ஒட்டி எழுதப்பட்டதும், தத்துவ விவாதத்தன்மை கொண்டதுமான விஷ்ணுபுரம் தொடர் விவாதங்களை உருவாக்கி புதிய ஒரு பாதையை திறந்தது. ஜெயமோகன் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியை ஒட்டி தமிழகத்தில் இடதுசாரிச்சூழலில் உருவான கொள்கை நெருக்கடிகளை முன்வைத்து அரசியல் கருத்தியலுக்கும் இலட்சியவாதத்திற்குமான முரண்பாட்டை ஆராய்ந்து எழுதிய பெருநாவலான ’பின்தொடரும் நிழலின் குரல்’ 1999ல் வெளியாகியது. அதைத் தொடர்ந்து ’கன்யாகுமரி’ என்னும் சிறுநாவல் 2000 த்தில் வெளியானது.

2003ல் ஜெயமோகன் எழுதிய ’காடு’, ’ஏழாம் உலகம்’ ஆகிய நாவல்கள் வெளியாயின. காடு நாவல் பசுமைமாறாக் காடு என்னும் உருவகத்தை இளமைக்காதலுக்கு குறியீடாக ஆக்கி, சங்க இலக்கியக் குறிப்புகளுடன் எழுதப்பட்டது. விளிம்புநிலைக்கும் கீழ் வாழும் பிச்சைக்காரர்களின் உலகின் துயரையும், அதை மீறி அவர்கள் அடையும் மானுட இன்பங்களையும், ஆன்மிகத்தையும் பேசும் படைப்பு ’ஏழாம் உலகம்’. 2003ல் ஜெயமோகன் தமிழிலக்கிய முன்னோடிகளைப் பற்றி எழுதிய ஏழு நூல்கள் இலக்கிய முன்னோடிகள் வரிசை என்னும் பெயரில் வெளியிடப்பட்டன. அவை பின்னர் ஒரே நூலாக மறுபதிப்பாயின. எமர்சனின் ’இயற்கையை அறிதல்’ என்னும் கட்டுரையின் மொழியாக்கம் உட்பட பத்து நூல்கள் அக்டோபர் 2003ல் நிகழ்ந்த விழாவில் வெளியிடப்பட்டன.

ஜெயமோகன் விருது.jpg

2005-ல் ஜெயமோகன் சிலப்பதிகாரத்தின் தொன்மத்தை மொத்தத் தமிழ்வாழ்வுக்கும் விரித்து எழுதிய நவீன உரைநடைக்காப்பியமான கொற்றவை வெளியாகியது. தமிழ்மொழியும் தமிழ்த்தெய்வங்களும் தோன்றுவதில் தொடங்கி நவீன காலகட்டத்தில் வந்து முடியும் நாவல் இது. தொடர்ந்து இரவு என்னும் சிறியநாவல் வெளியானது. இரவிலேயே வாழும் ஒரு சமூகம் பற்றிய இந்நாவல் இரவை மனித உள்ளத்தின் ஆழமாக உருவகிக்கிறது.

2010ல் ஜெயமோகன் ஜனவரி 1 முதல் தொடர்ச்சியாக எழுதிய 12 சிறுகதைகள் அறம் என்னும் தொகுப்பாக வெளிவந்தன. இவை உண்மையில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய புனைவுகள். இந்தியாவில் 1870களில் நிகழ்ந்த மாபெரும் பஞ்சத்தின் பின்னணியில் சென்னை நகரில் நிகழ்வதாக எழுதப்பட்ட வெள்ளை யானை நாவல் 2013-ல் வெளிவந்தது.

ஜெயமோகனின் பெரும்படைப்பாகக் கருதப்படும் வெண்முரசு 2014 ஜனவரி முதல் ஏழாண்டுக்காலம் தொடர்ச்சியாக அவருடைய இணையதளத்தில் தினம் ஒரு அத்தியாயம் என்னும் முறையில் வெளியிடப்பட்டது. 26 பகுதிகளையும் 1932 அத்யாயங்களையும் 22,400 பக்கங்களையும் உடைய இந்நாவல் உலகின் நீளமான இலக்கியப் படைப்பு. மகாபாரதத்தை நவீனப் புனைவாக மறுஆக்கம் செய்யப்பட்ட இந்நாவல் மகாபாரதத்தின் சாராம்சமாக வேதாந்தத்தை முன்வைத்து அந்த கோணத்தில் மொத்த இந்தியத் தொன்மங்களையும் மறுபடைப்பு செய்து தொகுக்கிறது.

வெண்முரசு முடிவதற்குள்ளாகவே 17 மார்ச் 2020-ல் கோவிட் தொற்றுநோயின் விளைவாக பொதுஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது ஜெயமோகன் தனிமையின் புனைவுக்களியாட்டு என்னும் பெயரில் நூறு கதைகளை தினம் ஒரு கதையென அவரது தளத்தில் வெளியிட்டார். 10 ஜுன் 2020-ல் மீண்டும் கதைத்திருவிழா என்ற பெயரில் 31 கதைகள் எழுதினார். மொத்தம் 131 கதைகள் வெவ்வேறு கதைக்களன்களும், கதைக்கருக்களும் கொண்டு எழுதப்பட்டன. அவற்றில் பதினைந்த தொகுதிகள் வெளிவந்துள்ளன. ஒரு தொகுதி வெளிவரவுள்ளது.. அவற்றிலுள்ள கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலம் வழியாக சர்வதேச இலக்கிய இதழ்களில் தொடர்ந்து வெளியாகின்றன. மலையாளத்தில் மாயப்பொன் என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது.

இலக்கிய விமர்சனம்

1990-ல் 'ரப்பர்’ நாவல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் 'தமிழ் நாவல்கள் தொடர்கதைகள் அல்லது குறுநாவல்களாக உள்ளன. நாவல்களுக்குச் சிக்கலான ஊடு பிரதித்தன்மையும் தரிசன தளமும் தேவை’ என்று தமிழ் நாவல்களின் போதாமையைப் பற்றியும் அவற்றின் வடிவம் சார்ந்தும் உரையாற்றிய கருத்து பல ஆண்டுகள் நீண்ட விவாதங்களை உருவாக்கியது. அதன் நீட்சியாகவே 1992-ல் 'நாவல்’ என்ற விமர்சன - கோட்பாட்டு நூலை எழுதினார். தமிழ்நாவல் வடிவத்தில் அந்நூல் ஆழ்ந்த செல்வாக்கை செலுத்தியது.

ஜெயமோகன் தொடர்ந்து தமிழிலக்கிய முன்னோடிகள் இருபதுபேரைப் பற்றிய ஏழு விமர்சனநூல்களை எழுதினார். இவை ’இலக்கிய முன்னோடிகள்’ என ஒரே நூலாக தொகுக்கப்பட்டன. ஜெயமோகன் இலங்கை இலக்கியம் பற்றி ’ஈழ இலக்கியம்’ என்னும் நூலையும், கவிதை பற்றி ’உள்ளுணர்வின் தடத்தில்’ என்னும் நூலையும், இந்திய நாவல்கள் பற்றி ’கண்ணீரைப் பின்தொடர்தல்’ என்னும் நூலையும் எழுதினார். இலக்கியத்தின் சாராம்சம் பற்றி ’ஆழ்நதியை தேடி’ என்னும் நூலையும், சமகால இலக்கியம் பற்றி ’புதியகாலம்’ என்னும் நூலையும் எழுதியிருக்கிறார். ஜெயமோகன் 'நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ என்னும் பெயரில் நவீனத் தமிழிலக்கிய வரலாற்றை 2000 வரை தொகுத்து எழுதியிருக்கிறார். தேவதேவன், பூமணி, ஆ.மாதவன், வண்ணதாசன், தேவதச்சன், நாஞ்சில்நாடன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களைப் பற்றி தனியாக விரிவாக எழுதியிருக்கிறார்.

பயண இலக்கியம்

ஜெயமோகன் தொடர் பயணி. இந்தியாவின் தொன்மையான பண்பாட்டை அறியும்பொருட்டு திட்டமிட்ட நீண்ட பயணங்கள் செய்பவர். வெளிநாடுகளுக்கும் பயணம் செய்துகொண்டிருக்கிறார். இந்தியாவின் சமணத் தலங்கள் வழியாக தமிழகம் முதல் ராஜஸ்தான் வரை ஒருமாத காலம் சென்றுவந்த பயணம் ’அருகர்களின் பாதை’ என்னும் நூலாகியது. இந்தியாவிலுள்ள இயற்கைக் குகைகள் வழியாக செய்த பயணம் ’குகைகளின் வழியே’ என்னும் நூல்வடிவில் வெளிவந்தது. காஷ்மீர், சட்டீஸ்கர், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற தீவிரவாதம் பரவியிருந்த இடங்களுக்கு விரிவாக பயணம் செய்து நூல்கள் எழுதியிருக்கிறார். ஜெயமோகன் செய்த ஆஸ்திரேலிய பயணம் ’புல்வெளி தேசம்’ என்னும் பெயரிலும், ஜப்பான் பயணம் ’ஜப்பான் ஒரு கீற்றோவியம்;’ என்ற பெயரிலும் நூல்களாக வெளிவந்துள்ளன.

இதழியல்

ஜெயமோகன் விருது1.jpg

ஜெயமோகன் 'சொல் புதிது’ (1998-2004) என்ற மும்மாத இலக்கிய இதழை தன் நண்பர்களின் உதவியுடன் தொடங்கி அதில் கௌரவ ஆசிரியராகவும் ஆலோசகராகவும் இருந்தார். அது பதினைந்து இதழ்கள் வரை வெளிவந்தது. விரிவான பேட்டிகள், இந்திய மரபு குறித்த கட்டுரைகள், நூல்பகுதிகள் தமிழ்ச் சிற்றிதழ்களில் தமிழ் இசைக்கு ஒரு முக்கியமான தனி இதழ் வெளியிட்டமை போன்றன அதன் தனித்தன்மைகள்.

2004-ல் ஜெயமோகன் 'மருதம்’ என்ற மாதம் இருமுறை இணைய இதழினைத் தன் நண்பர்களின் துணையுடன் தொடங்கினார். அதில் இவர் ஆசிரியராகவும் ஆலோசகராகவும் இருந்தார்.

ஜெயமோகன் 2006ல் தொடங்கப்பட்ட தன் இணையப்பக்கத்தை 2007 முதல் ஓர் இலக்கிய இதழாக மாற்றி நடத்திக்கொண்டிருக்கிறார் www.jeyamohan.in என்னும் இந்த தளம் 2007 முதல் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்பட்டு படைப்புகளையும், விவாதங்களையும், கடிதங்களையும் வெளியிட்டு வருகிறது.

அமைப்புச் செயல்பாடுகள்

ஜெயமோகன் குடும்பம்

ஜெயமோகன் 1994 முதல் ஊட்டி நாராயணகுருகுலத்தில் இலக்கிய முகாம்களை முன்னின்று நடத்தினார். பின்னர் இந்த முகாம்கள் 'குருநித்யா ஆய்வரங்கு’ என்ற பெயரில் மாற்றப்பட்டது. குற்றாலம், ஒகேனேக்கல் ஆகிய இடங்களிலும் ஊட்டியிலுமாக நிகழ்ந்த தமிழ்-மலையாள இலக்கிய சந்திப்புகள் குறிப்பிடத் தக்கவை. ஊட்டி, ஏற்காடு, ஆலப்புழை, கன்யாகுமரி, திற்பரப்பு ஆகிய ஊர்களிலாக இருபத்தைந்து ஆண்டுகளில் இதுவரை(2022) நாற்பத்திரண்டு இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் இரண்டு தலைமுறை தமிழ், மலையாள இலக்கியவாதிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

ஜெயமோகன் 2010-ல் தன் நண்பர்களுடன் இணைந்து தன் புகழ்பெற்ற நாவலான விஷ்ணுபுரம் பெயரில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்பை உருவாக்கினார். இது பொது அமைப்புகளால் புறக்கணிக்கப்பட்ட மூத்த இலக்கியவாதிகளுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கி வருகிறது. 2010-ல் முதல் விருது ஆ.மாதவனுக்கு அளிக்கப்பட்டது. இவ்விருது விழா இரண்டுநாட்கள் நிகழும் இலக்கியவிழாவாகவும் எழுத்தாளர்களைச் சந்திக்கும் நிகழ்வுகளுடனும் நடத்தப்படுகிறது. மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது

2016 முதல் ஜெயமோகன் புதுவாசகர் சந்திப்புகளை கோவை, ஈரோடு, கொல்லிமலை, தஞ்சை போன்ற ஊர்களில் ஆண்டுக்கு மூன்று முறை தொடர்ந்து நடத்தி வருகிறார். ஆறாண்டுகளில் பதினாறு சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொன்றிலும் முப்பது புதியவாசகர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

2022 பெப்ருவரி முதல் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தை தொடங்கி தன் நண்பர்கள் மற்றும் அறிஞர்கள் உதவியுடன் நடத்தி வருகிறார். இது கலையிலக்கியப் பண்பாட்டு கலைக்களஞ்சியம்.தமிழ் விக்கி- தூரன் விருது எனும் இலக்கிய விருது 2022 முதல் வழங்கப்படுகிறது.

சொற்பொழிவுகள்

இலக்கிய விமர்சனம், மரபு, பண்பாடு, மதம், தத்துவம் போன்ற தலைப்புகளில் ஜெயமோகன் உரையாற்றி வருகிறார். அவற்றுள் குறளினிது (ஜனவரி 14, 2017 - ஜனவரி 17, 2017), ஓஷோ மரபும் மீறலும் (மார்ச் 12, 2021 - மார்ச் 14, 2021), கீதை உரை (டிசம்பர் 6, 2015 – டிசம்பர் 9, 2015) ஆகியன தொடர் உரைகள். இது சார்ந்த தலைப்புகளில் கட்டண உரைகளும் நிகழ்த்தியுள்ளார். முதல் கட்டண உரை திருநெல்வேலியில் நடந்தது. பின்னர் கோவை, சென்னை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

ஜெயமோகனின் உரைகள் ’தனிக்குரல்’ ’சொல்முகம்’ 'தன்னுரைகள்’ என்னும் தொகுதிகளாக அச்சில் வெளியாகியிருக்கின்றன.

மலையாளம்

ஜெயமோகன் தன் தாய்மொழியான மலையாளத்தில் குறைவாகவே எழுதியிருக்கிறார். 1987-ல் மலையாளத்தில் ஜெயமோகனின் முதல் படைப்பு ஜெயகேரளம் என்னும் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து மலையாளத்தில் எழுதவில்லை. 1997 முதல் மாத்ருபூமி நாளிதழின் ஞாயிறு பக்கத்தில் தொடர் கட்டுரைகள் எழுதினார். 1999 முதல் பாஷாபோஷிணி மாத இதழிலும் மாத்யமம் வார இதழிலும் தொடர்கட்டுரைகள் எழுதினார். ஜெயமோகனின் கட்டுரைகள் நெடும்பாதையோரம், உறவிடங்கள் ஆகிய தொகுதிகளாக திரிச்சூர் கரண்ட் புக்ஸ், மாத்ருபூமி புக்ஸ் நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. கதைகள் ஆனடோக்டர், நூறு சிம்ஹாசனங்கள், அறம், ஊமைச்செந்நாய் ஆகிய நூல்களாக வெளியாகியிருக்கின்றன.

திரைத்துறையில் பங்களிப்பு

ஜெயமோகன் தமிழ், மலையாளத் திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் உரையாடல்(வசனம்) எழுதியிருக்கிறார். மணிரத்னம், சங்கர், லோஹித தாஸ் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார்.

ஜெயமோகன் கதையை தழுவி எடுக்கப்பட்டதிரைப்படங்கள்
தமிழ்
  • நான் கடவுள் 2009 (ஏழாம் உலகம்)
  • கடல் 2012
  • வெந்து தணிந்தது காடு 2022 (ஐந்து நெருப்பு)
மலையாளம்
  • ஒழிமுறி (2012 இயக்கம் மதுபால்)-திரைக்கதை (நான்கு அனுபவக்கட்டுரைகளின் திரை வடிவம்), வசனம். கேரள திரை விமர்சகர் கூட்டமைப்பின் சிறந்த திரைக்கதைக்கான விருது மற்றும் டி ஏ ஷாகித் திரைக்கதை விருது(2012) பெற்றது

விவாதங்கள்

  • 1990-ல் தமிழில் செவ்வியல் நாவல் வடிவம் இல்லை என்று ஜெயமோகன் கூறிய கருத்துக்கு எதிராக விவாதங்கள் உருவாயின. 1992-ல் அந்த விவாதங்களுக்கு பதிலை 'நாவல் கோட்பாடு’ என்னும் நூலாக எழுதினார்.
  • 2003-ல் மு.கருணாநிதியின் எழுத்து பிரச்சார எழுத்தே ஒழிய நவீன இலக்கியம் அல்ல என்று ஜெயமோகன் கூறியதற்காக விவாதங்கள் உருவாயின.
  • 2007-ல் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்டவர்களைப் பற்றி ஜெயமோகன் எழுதிய பகடிக் கட்டுரைகளை ஆனந்த விகடன் இதழ் அவர்கள் மீதான தாக்குதல் என்ற செய்தியுடன் வெளியிட்டதை ஒட்டி விவாதங்களும் எதிர்ப்புகளும் உருவாயின.
  • 2010-ல் தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதுவது உலகளாவ வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்மொழியை கொண்டுசென்று சேர்க்கும் என்றும், இரண்டு லிபிகள் கற்கும் சுமையில் இருந்து விடுவிக்கப்படுவதனால் மேலும் அதிகமானவர்கள் தமிழை படிப்பார்கள் என்றும், அது பி.ஆர்.அம்பேத்கர் போன்றவர்கள் முன்வைத்த ஆலோசனை என்ற கருத்தை ஜெயமோகன் வெளியிட்ட போதும் ஒரு விவாதம் எழுந்தது.
  • 2010-ல் இன்றைய காந்தி நூலில் ஈ.வெ.ராமசாமி பெரியார் வைக்கம் போராட்டத்தை தொடங்கி நடத்தினார் என தமிழகத்தில் சொல்லப்படுவது மிகை என்றும், அவர் அதை தொடங்கவோ தலைமைதாங்கவோ முடித்துவைக்கவோ இல்லை என்றும், அதில் சில மாதங்கள் பங்குகொண்டார் என்றும் ஜெயமோகன் எழுதியது விவாதத்தை உருவாக்கியது.
  • 2014-ல் ஜெயமோகன் தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்கள் பற்றி பேசும்போது பெரும்பாலானவர்களின் இலக்கியப் படைப்புகள் மிக மேலோட்டமானவை, ஒற்றைப்படையான பிரச்சாரங்கள் என்று சொன்னார். அவர்கள் தங்கள் தனிமனித அடையாளங்களை முன்வைத்தே பேசப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார். பெரும்பாலான பெண் எழுத்தாளர்களின் தன்குறிப்பில் அவர்கள் களச்செயல்பாட்டாளர்கள், பெண்ணியச்செயல்பாட்டாளர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் எந்தக் களச்செயல்பாடும் அவர்கள் ஆற்றுவதில்லை, கவன ஈர்ப்புக்காகப் பேசுவதை மட்டுமே செய்கிறார்கள் என்றார். இது பெண் எழுத்தாளர்களில் ஒரு சாராரை அவர் மேல் சீற்றம் கொள்ளச் செய்தது. அவருக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கையை அவர்கள் வெளியிட்டனர். ஆனால் அதில் தமிழின் முதன்மையான பெண் இலக்கியவாதிகளும், களச்செயல்பாட்டாளர்களும் கலந்துகொள்ளவில்லை.
  • 2022--ல் கீழடி நாகரீகம் என்பது உலகிலேயே தொன்மையான நாகரீகம், இந்தியாவிலேயே தொன்மையான நாகரீகம் என்று சிலர் சொல்வது மிகையானது என்றும்; தொல்லியலாளரின் ஊகத்தை அப்படியே எடுத்துக்கொண்டாலும்கூட அது 2100 ஆண்டுகளுக்கு முந்தியது . சங்ககாலம், நகர நாகரீகம் என்பதற்கான சான்று மட்டுமே என்றும் ஜெயமோகன் குறிப்பிட்டது மொழிசார் அடிப்படைவாதிகளால் விவாதமாக்கப்பட்டது.

இலக்கிய இடம்

எழுத்தாளர் ஜெயமோகன்

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்தபோது அசோகமித்திரன் ’சென்ற நூறாண்டுகளில் தமிழில் செய்யப்பட்ட முதன்மையான இலக்கிய முயற்சி’ என அதை ’தி ஹிண்டு’ ஆங்கில நாளிதழில் எழுதினார். தமிழின் சிறந்த நாவல்களை வெவ்வேறு விமர்சகர்கள் 2000-ம் ஆண்டில் பட்டியலிட்டபோது பெரும்பாலும் அனைவர் பட்டியலிலும் விஷ்ணுபுரம் நாவல் இருந்தது. 'இவரை ஒரு தமிழ் எழுத்தாளராக கொள்ளமுடியாது. பலமொழி அறிவும் விரிந்த புலமையும் கொண்டவர். மலையாளத்திலும் தமிழிலும் எழுதிவருபவர். தமிழில் எழுதும் இந்திய எழுத்தாளர் இவர் என்றே நான் எண்ணுகிறேன். அவரது எழுத்தின் வீச்சும் ஆழமும் மொழி எல்லைகளைக் கடந்தவை’ என்று 2003-ல் ஜெயகாந்தன் குறிப்பிட்டார் [கடவுள் எழுக! ஜெயமோகனின் 8 நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை ].

ஜெயமோகனின் நாவல்கள், சிறுகதைகள், இலக்கிய விமர்சனங்கள், பண்பாட்டு ஆய்வுகள் மிகப்பரவலாக வாசிக்கப்பட்டு எப்போதும் விவாதத்தில் உள்ளன. ’படைப்பும் பண்பாடும் சார்ந்த ஜெயமோகனுடைய கட்டுரை நூல்கள் படைப்பிலக்கிய நூல்களுக்கு இணையான முக்கியத்துவம் கொண்டவை’ என்று பாவண்ணன் குறிப்பிடுகிறார்.

நவீனத் தமிழிலக்கியம் பெரும்பாலும் மிகக்குறைவான வாசகர்கள் கொண்ட சிற்றிதழ்ச் சூழலிலேயே செயல்பட்டுவந்தது. அதை பெருவாரியான மக்கள் அறிமுகம்கூட கொண்டிருக்கவில்லை. 2000- த்துக்குப் பின் இணையம் போன்ற தொடர்புவசதிகள் வந்தபோது ஜெயமோகன் அவற்றை பயன்படுத்தி விரிந்த வாசகப்பரப்பை உருவாக்கியும், தொடர்ந்த விவாதங்கள் வழியாக நவீன இலக்கியத்தின் பார்வையை பொதுச்சூழலில் முன்வைத்தும், கருத்தரங்குகள் பயிற்சி வகுப்புகள் வழியாக இளம் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பயிற்சி அளித்தும், நவீன இலக்கிய முன்னோடிகளுக்கு விருதுகள் அளித்தும் அவர்களைப் பற்றி நூல்கள் எழுதியும் நவீனத்தமிழிலக்கியத்தை ஒரு பொது இயக்கமாக ஆக்கினார்.

நூல்கள், மலர்கள்

விருதுகள்

எழுத்தாளர் ஜெயமோகன்
இயல் விருது - 2014
  • அகிலன் நினைவுப்போட்டிப் பரிசு - 1990
  • கதா விருது - 1992
  • சம்ஸ்கிருதி சம்மான் விருது - 1994
  • பாவலர் வரதராஜன் விருது - 2007
  • முகம் விருது - 2011
  • சிறந்த திரைக்கதைக்கான கேரளா ஃபிலிம் கிரிட்டிக்ஸ் விருது, டீ ஏ ஷாஹித் விருது - 2012
  • இயல் விருது - 2015
  • கோவை கண்ணதாசன் விருது 2014
  • எஸ்.ஆர்.எம் விருது
  • கோவை கொடீஷியா இலக்கிய விருது 2017

படைப்புகள்

ஜெயமோகன்- சன்ஸ்கிருதி சம்மான்
எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்
நாவல்கள்
  • ரப்பர், முதல் பதிப்பு-1990, 'தாகம்’ [தமிழ்ப் புத்தகாலயம்], சென்னை. புதிய பதிப்பு-2005, கவிதா பதிப்பகம், சென்னை.
  • விஷ்ணுபுரம், முதல் பதிப்பு-1997, அகரம் சிவகங்கை. புதிய பதிப்பு-2006, கவிதா பதிப்பகம், சென்னை. மறுபதிப்பு, நற்றிணை பதிப்பகம், சென்னை. மறுபதிப்பு-2022, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • பின்தொடரும் நிழலின் குரல், முதல் பதிப்பு-1999, தமிழினி, சென்னை. மறுபதிப்பு-2022, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • கன்னியாகுமரி, முதல் பதிப்பு-2000, தமிழினி, சென்னை. புதிய பதிப்பு-2006, கவிதா பதிப்பகம்.
  • காடு, முதல் பதிப்பு-2003, தமிழினி, சென்னை. புதிய பதிப்பு-2006, தமிழினி, சென்னை.
  • ஏழாம் உலகம், முதல் பதிப்பு-2003, தமிழினி, சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை. மறுபதிப்பு-2013, நற்றிணை பதிப்பகம், சென்னை.
  • அனல்காற்று, முதல் பதிப்பு-2009, தமிழினி, சென்னை.
  • இரவு, முதல்பதிப்பு-2010, தமிழினி, சென்னை.
  • உலோகம், முதல் பதிப்பு-2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • கன்னிநிலம், கயல்கவின் பதிப்பகம், சென்னை.
  • வெள்ளையானை, எழுத்து பிரசுரம், மதுரை.
  • வெண்முரசு (26 பகுதிகள் - 22,400 பக்கங்கள்) – கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • கதாநாயகி, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • அந்த முகில் இந்த முகில், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • குமரித்துறைவி, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • குகை, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • நான்காவது கொலை, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • ஆலம் , விஷ்ணுபுரம் பதிப்பகம் கோவை
குறுநாவல்கள்
  • ஜெயமோகன் குறுநாவல்கள், முதல் பதிப்பு-2004, உயிர்மை பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
புதுக்காப்பியம்
  • கொற்றவை, முதல் பதிப்பு-2005, தமிழினி, சென்னை. இரண்டாவது பதிப்பு-2011, தமிழினி, சென்னை.
சிறுகதைத் தொகுப்புகள்
  • திசைகளின் நடுவே, முதல் பதிப்பு-1992, அன்னம் சிவகங்கை. புதிய பதிப்பு-2004, கவிதா பதிப்பகம், சென்னை.
  • மண், முதல் பதிப்பு-1993, ஸ்னேகா பதிப்பகம், சென்னை. புதிய பதிப்பு-2004, கவிதா பதிப்பகம், சென்னை.
  • ஆயிரங்கால் மண்டபம், முதல் பதிப்பு-1998, அன்னம், சிவகங்கை. புதிய பதிப்பு, கவிதா பதிப்பகம், சென்னை.
  • கூந்தல், முதல் பதிப்பு-2003, கவிதா பதிப்பகம், கோவை.
  • ஜெயமோகன் சிறுகதைகள், முதல் பதிப்பு-2004, உயிர்மை பதிப்பகம், இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • நிழல்வெளிக்கதைகள் (தேவதைக் கதைகளும் பேய்க்கதைகளும்),முதல் பதிப்பு-2005, உயிர்மை பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • விசும்பு– (அறிவியல் புனைகதைகள்), முதல்பதிப்பு-2006, எனி இண்டியன் பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • ஊமைச்செந்நாய், முதல்பதிப்பு-2008, உயிர்மை பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை. மறுபதிப்பு, நற்றிணை பதிப்பகம், சென்னை.
  • அறம், (சிறுகதைத் தொகுப்பு) முதல் பதிப்பு-2011, வம்சி புத்தகநிலையம், திருவண்ணாமலை.
  • ஈராறுகால்கொண்டெழும் புரவி, சொல்புதிது பதிப்பகம்.
  • வெண்கடல், வம்சி பதிப்பகம், சென்னை.
  • உச்சவழு, முதல் பதிப்பு-ஜூன்2017, நற்றிணை பதிப்பகம், சென்னை.
  • துளிக்கனவு, நற்றிணை பதிப்பகம், சென்னை.
  • பிரதமன், நற்றிணை பதிப்பகம், சென்னை.
  • பத்து லட்சம் காலடிகள், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • ஆயிரம் ஊற்றுகள், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • மலை பூத்தபோது, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • தேவி, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • எழுகதிர், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • ஐந்து நெருப்பு, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • முதுநாவல், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • தங்கப்புத்தகம், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • ஆனையில்லா!, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • பொலிவதும் கலைவதும், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • வான் நெசவு, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • இரு கலைஞர்கள், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • மலர்த்துளி,விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • படையல், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
சிறுகதை
  • யானை டாக்டர், தன்னறம் நூல்வெளி, திருவண்ணாமலை.
ஆன்மிகம்/தத்துவம்
  • இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், முதல் பதிப்பு-2002, தமிழினி பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • இந்தியஞானம், முதல்பதிப்பு-2008, தமிழினி, சென்னை.
  • சிலுவையின் பெயரால், முதல்பதிப்பு உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • இந்துமதம் சில விவாதங்கள், சொல்புதிது பதிப்பகம், கடலூர்.
  • இந்து மெய்மை, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • ஆலயம் எவருடையது?, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • கலாச்சார இந்து, முதல் பதிப்பு-ஜூன் 2017, நற்றிணை பதிப்பகம், சென்னை.
அரசியல்
  • சாட்சிமொழி, முதல்பதிப்பு-2008, உயிர்மை பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • இன்றைய காந்தி, முதல்பதிப்பு-2009, தமிழினி, சென்னை.
  • அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்திய போராட்டம், முதல்பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • ஜனநாயகச் சோதனைச் சாலையில், முதல் பதிப்பு-2016, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டெட், மதுரை.
  • உரையாடும் காந்தி, தன்னறம் நூல்வெளி, திருவண்ணாமலை.
பண்பாடு / வரலாறு
  • பண்படுதல், முதல்பதிப்பு, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • தன்னுரைகள், முதல்பதிப்பு, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • எதிர்முகம், இணைய விவாதங்கள் முதல்பதிப்பு-2006, தமிழினி, சென்னை,
  • கொடுங்கோளூர் கண்ணகி, [மொழியாக்கம்] முதல்பதிப்பு-2005, தமிழினி, சென்னை.
  • பொன்னிறப்பாதை, சொல்புதிது பதிப்பகம், கடலூர்.
  • விதி சமைப்பவர்கள், கயல்கவின் பதிப்பகம், சென்னை.
  • ஆகவே கொலைபுரிக, கயல்கவின் பதிப்பகம், சென்னை.
  • சொல்முகம், நற்றுணை பதிப்பகம், சென்னை.
  • தனிக்குரல், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • தன்மீட்சி, தன்னறம் நூல்வெளி, திருவண்ணாமலை.
  • அபிப்பிராய சிந்தாமணி (நகைச்சுவை கட்டுரைகள்), கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • சாதி: ஓர் உரையாடல், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • ஒருபாலுறவு, விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
  • தன்னைக் கடத்தல், முதல் பதிப்பு-2022, தன்னறம் நூல்வெளி, திருவண்ணாமலை.
வாழ்க்கை வரலாறு
  • சுரா: நினைவின் நதியில், உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • முன்சுவடுகள், உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • கமண்டல நதி (நாஞ்சில்நாடன் படைப்புலகம்), முதல் பதிப்பு-2007, தமிழினி பதிப்பகம், சென்னை.
  • லோகி [லோகிததாஸ் நினைவு], முதல்பதிப்பு-2008, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • கடைத்தெருவின் கலைஞன் [ஆ. மாதவன் பற்றி], முதல்பதிப்பு-2010, தமிழினி, சென்னை.
இலக்கிய அறிமுகம்
  • சங்கச் சித்திரங்கள் (சங்க இலக்கிய அறிமுகம்), முதல் பதிப்பு-2005, கவிதா பதிப்பகம். புதிய பதிப்பு-2011, தமிழினி, சென்னை. மறுபதிப்பு, கிழக்கு பதிப்பகம், மறுபதிப்பு, நற்றிணை பதிப்பகம்.
  • மேற்குச்சாளரம் (மேலை இலக்கிய அறிமுகம்), முதல்பதிப்பு-2008, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • கண்ணீரைப் பின்தொடர்தல் [இருபத்திரண்டு இந்திய நாவல்கள்], முதல் பதிப்பு-2006, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • நாவல் (விமர்சன நூல்), முதல் பதிப்பு-1992, மடல் பதிப்பகம், பெங்களூர், இரண்டாம் பதிப்பு, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • பொன்னிறப்பாதை, சொல்புதிது பதிப்பகம், கடலூர்.
  • விதிசமைப்பவர்கள், கயல்கவின் பதிப்பகம், சென்னை.
  • சொல்முகம், நற்றிணை பதிப்பகம், சென்னை.
  • நவீனத்தமிழிலக்கிய அறிமுகம், முதல்பதிப்பு-1998, காவ்யா, பெங்களூரு. மூன்றாம் பதிப்பு, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • எழுதும்கலை, முதல்பதிப்பு-2008, தமிழினி, சென்னை.
  • எழுதுக, முதல் பதிப்பு-2022, தன்னறம் நூல்வெளி, திருவண்ணாமலை.
இலக்கிய விமர்சனம்
  • ஆழ்நதியை தேடி, முதல் பதிப்பு-2006, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • நவீனத்துவத்துக்குப் பின் தமிழ்க் கவிதை (தேவதேவனை முன்வைத்து), முதல் பதிப்பு-1999, கவிதா பதிப்பகம், கோவை.
  • உள்ளுணர்வின் தடத்தில் [கவிதை விமர்சனம்], முதல் பதிப்பு-2004, தமிழினி, சென்னை.
  • ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப்பார்வை, முதல்பதிப்பு-2006, எனி இண்டியன் பதிப்பகம், சென்னை. மறுபதிப்பு, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • புதியகாலம் [இலக்கிய விமர்சனம்], முதல்பதிப்பு-2009, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • பூக்கும் கருவேலம் (பூமணியின் படைப்புலகம்) தமிழினி, சென்னை.
  • ஒளியாலானது (தேவதேவனின் புனைவுலகம்) சொல்புதிது பதிப்பகம், சென்னை.
  • எழுதியவனைக் கண்டுபிடித்தல் (இலக்கியவிவாதக் கட்டுரைகள்), கயல்கவின் பதிப்பகம், சென்னை.
  • இலக்கிய முன்னோடிகள் வரிசை (ஏழு நூல்கள்: - முதற்சுவடு, கனவுகள் இலட்சியங்கள், சென்றதும் நின்றதும், மண்ணும் மரபும், அமர்தல் அலைதல், நவீனத்துவத்தின் முகங்கள், கரிப்பும் சிரிப்பும்), முதற்பதிப்பு-2003, தமிழினி, சென்னை. முழுத்தொகுப்பாக முதல் பதிப்பு-2018, நற்றிணை பதிப்பகம், சென்னை.
  • நத்தையின் பாதை
  • இலக்கியத்தின் நுழைவாயிலில்
  • வாசிப்பின் வழிகள்
  • வணிக இலக்கியம்
அனுபவம்
  • வாழ்விலே ஒருமுறை, முதல் பதிப்பு, கவிதா பதிப்பகம், கோவை. இரண்டாம் பதிப்பு-2011, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • நிகழ்தல் – (அனுபவக்குறிப்புகள்), முதல்பதிப்பு-2007, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • இன்று பெற்றவை [நாட்குறிப்புகள்], முதல் பதிப்பு-2008, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு, முதல்பதிப்பு-2007, வம்சி புக்ஸ், திருவண்ணாமலை. புதிய பதிப்பு, தன்னறம் நூல்வெளி, திருவண்ணாமலை.
  • நாளும்பொழுதும் [அனுபவக்குறிப்புகள்], நற்றிணை பதிப்பகம், சென்னை.
  • இவர்கள் இருந்தார்கள் (நினைவுக்குறிப்புகள்), முதல் பதிப்பு-2012,நற்றிணை பதிப்பகம், சென்னை.
பயண நூல்கள்
  • புல்வெளிதேசம் (ஆஸ்திரேலிய பயணக்கட்டுரை), முதல்பதிப்பு-2008, உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • இந்தியப் பயணம், முதற்பதிப்பு-2016, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • அருகர்களின் பாதை, முதற்பதிப்பு-2016, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • குகைகளின் வழியே, முதற்பதிப்பு-2017, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • நூறு நிலங்களின் மலை, முதற்பதிப்பு-2017, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • ஜப்பான் ஒரு கீற்றோவியம், முதற்பதிப்பு-2020, கிழக்கு பதிப்பகம், சென்னை.
நாடகம்
  • வடக்குமுகம், முதல் பதிப்பு-2004, தமிழினி, சென்னை.
சிறுவர் இலக்கியம்
  • பனிமனிதன் (சிறுவர் புதினம்), முதல்பதிப்பு-2002, கவிதா, கோவை. இரண்டாம் பதிப்பு, கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • வெள்ளி நிலம் (சிறுவர் புதினம்), முதல் பதிப்பு-2018, விகடன் பிரசுரம், சென்னை.
  • உடையாள் (சிறுவர் புதினம்), விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை.
மொழிபெயர்ப்பு
  • இயற்கையை அறிதல் - ரால்ப் வால்டோ எமர்சன், முதல் பதிப்பு-டிசம்பர் 2002, இளங்கோ நூலகம், விழுப்புரம். மறுபதிப்பு-2012, தமிழினி, சென்னை. விரிவாக்கப்பட்ட பதிப்பு-2017, தமிழினி, சென்னை. விரிவாக்கப்பட்ட மறுபதிப்பு - 2022, தன்னறம் நூல்வெளி, திருவண்ணாமலை.
  • தற்கால மலையாளக் கவிதைகள், முதல் பதிப்பு-1992, ஆல்பா வெளியீடு. இரண்டாம் பதிப்பு-2004, காவ்யா, சென்னை.
  • இன்றைய மலையாளக் கவிதைகள், முதல் பதிப்பு-2002, தமிழினி, சென்னை.
  • சமகால மலையாளக் கவிதைகள், முதல் பதிப்பு-2005, தமிழினி, சென்னை.
  • கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகள் (சொல் புதிது, 2018)
தொகைநூல்கள்
  • அசோகமித்திரன் அறுபதாண்டு நிறைவுவிழா மலர், 1993, கனவு வெளியீடு.
  • சுந்தர ராமசாமி அறுபதாண்டு நிறைவுவிழா மலர், 1994, கனவு வெளியீடு.
  • இலக்கிய உரையாடல்கள் பேட்டிகள், முதல் பதிப்பு-2005, எனி இண்டியன் பதிப்பகம், சென்னை.
மலையாளம்
  • நெடும்பாதையோரம், முதல்பதிப்பு-2002, கரண்ட் புக்ஸ், திரிச்சூர்.
  • உறவிடங்கள், மாத்ருபூமி பதிப்பகம்,
  • நூறு சிம்ஹாசனங்கள், மாத்ருபூமி, கைரளி பதிப்பகங்கள்.
பொது
  • நலம் (ஆரோக்கியக் கட்டுரைகள்), 2008.
  • நலமறிதல், தன்னறம் நூல்வெளி, திருவண்ணாமலை.
ஆங்கிலத்தில் (மொழிபெயாக்கம் வழி)
  • Stories of the True, Translated by Priyamvada, Juggernaut Books (2022). அறம் சிறுகதை தொகுப்பின் ஆங்கில மொழியாக்கம்
  • A Fine Thread and Other Stories. Translated by Jagadeeshkumar (2024) . Ratna Books New Delhi
  • The Abyss, Translated by Suchitra Ramachandran, Juggernaut Books (2023). ஏழாம் உலகம் நாவலின் ஆங்கில மொழியாக்கம்

குறிப்பு - இந்த நெடும்பட்டியல் முழுமையானது அல்ல.

உசாத்துணை

இணைப்புகள்

எழுத்தாளர் ஜெயமோகனின் இணைதளம் - https://www.jeyamohan.in/

ஜெயமோகன் பற்றிய கட்டுரைகள்: சியமந்தகம் இணையதளம்

எழுத்தாளர் ஜெயமோகனின் மேடை உரை காணொலிகள் -

எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகளுக்கான இணைய விவாத தளங்கள் -

அடிக்குறிப்புகள்




✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:35 IST