under review

வெண்முரசு

From Tamil Wiki
வெண்முரசு (நாவல்)
வெண்முரசு

வெண்முரசு (2014- 2020) ஜெயமோகன் எழுதிய நாவல் தொடர். வியாசர் எழுதிய ’ஜய’ எனும் பாரதக்கதையையும், அதன் விரிவாக்கங்களையும், இந்திய நிலம் முழுதும் பேசப்படும் மகாபாரதத்தின் பல வடிவங்களையும் எடுத்துக் கொண்டு ஜெயமோகன் தமிழில் மறுஆக்கம் செய்து எழுதிய நவீன இலக்கிய படைப்பு. உலகின் மிகப் பெரிய நாவல் வரிசைகளில் ஒன்று. மொத்தம் 26 பகுதிகளையும் 1932 அத்யாயங்களையும் 22,400 பக்கங்களையும் உடையது. 'வெண்முரசு’ மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்ந்துள்ளது. மகாபாரதத்தில் இடம் பெற்ற சிறிய கதைமாந்தர்களை அவர்களின் செயல்பாடுகள், எண்ணவோட்டங்கள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு விரிவாக்கம் செய்துள்ளது. மானுட பேரறத்தை முதன்மையாகக் கொண்டு, காலவோட்டத்தில் மானுடர் மனத்தில் எழுந்தடங்கும் உணர்ச்சிகளையும் தத்துவ மோதல்களையும் அக தரிசனங்களையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது.

வெளியீடு

இணையப் பதிப்பு

வெண்முரசு 2014 ,ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜெயமோகனின் இணையதளமான www.jeyamohan.in ல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் என வெளியிடப்பட்டது. வெண்முரசுக்கென அமைக்கப்பட்ட venmurasu.in என்னும் இணையதளத்திலும் நாள்தோறும் வெளியாகியது. ஜூலை 16, 2020 -ல் நிறைவு பெற்றது. உலகின் பெரிய நாவல்களுள் 'வெண்முரசு’ நாவல் மட்டுமே இணையத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் மின் பதிப்பாகவும் விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் முதல் நான்கு பகுதிகளை மட்டும் நற்றிணை பதிப்பகம் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது. பின்னர், கிழக்கு பதிப்பகம் 'வெண்முரசு’ நாவலின் பத்தொன்பது பகுதிகளை வெளியிட்டது. எஞ்சிய பகுதிகளை இணைத்து விஷ்ணுபுரம் பதிப்பகம் முழுமையாக வெளியிட்டுள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகன்

பின்புலம்

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இளம் வயதிலேயே மகாபாரதம் அறிமுகமாகியது. மலையாளத்தில் துஞ்சத்து எழுத்தச்சனின் மகாபாரதம் கிளிப்பாட்டை அவரது அம்மா நாள்தோறும் வாசித்து முடித்த முறை, அது சார்ந்த சடங்குகள் ஆகியவற்றை ஜெயமோகன் நேரில் கண்டது ஒரு தொடக்கமாக அவருக்கு அமைந்தன. ஒட்டுமொத்த கதையை அறிந்த பின்னர், கதகளி நிகழ்த்துகலை வழியாக அந்த ஆடுநர்களையே உயிர்ப்புள்ள மகாபாரத மாந்தர்களாக உணர்ந்து கொண்டார். இளமையில் அவர் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றபோது, கன்னியாகுமரியில் தொடங்கி இந்தியாவின் அனைத்து எல்லைகளுக்கும் பயணித்தார். அந்தச் சூழல்களில் இந்திய நிலங்களில் மகாபாரதத்தின் வளர்ச்சிநிலை எவ்வாறெல்லாம் உள்ளது என்பது பற்றி அறிந்துகொண்டார்.

தன்னுடைய குரு நித்ய சைதன்ய யதியின் வழியாக இந்திய தத்துவ மரபுகளையும் அவை சார்ந்த நூல்களையும் ஆழ்ந்து கற்றார். அவை தொடர்பான விரிந்த விவாதங்களில் பங்குகொண்டார். தன்னுடைய புரிதலைப் புனைவில் கலந்து மகாபாரதத்தில் அறம் சார் விவாதங்களை எழுப்பும் மையப்புள்ளிகளின் கூறுகளை மட்டும் விரித்து, சிறுகதைகளாகவும் குறுநாவல்களாகவும் நாடகங்களாகவும் எழுதத் தொடங்கினார்.

இவர் எழுதிய திசைகளின் நடுவே, பத்மவியூகம், நதிக்கரையில், காவியம், இறுதிவிஷம், களம், அதர்வம்,விரித்த கரங்களில் ஆகிய கதைகளும் வடக்குமுகம், பதுமை போன்ற நாடகங்களும் மகாபாரதக் கதைமாந்தர், மகாபாரத சம்பவங்களின் பின்னணியில் அமைந்தவை.

1988-ல் மலையாள எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணனிடம் உரையாடும்போது முழுமகாபாரதத்தையும் திரும்ப எழுதவேண்டும் என்னும் எண்ணம் உருவாகியது என்று கூறுகிறார். அதன்பொருட்டு தொடர்ச்சியாக மகாபாரதம் நிகழ்ந்த நிலங்களுக்கு பல பயணங்கள் மேற்கொண்டார். இமையமலைப்பகுதிகளுக்கும் சென்றுவந்தார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக வெவ்வேறு மகாபாரத பிரதிகளையும், தொன்மையான நெறிநூல்களையும், புராணங்களையும் சேகரித்து ஆய்வுக்குறிப்புகள் எடுத்தார். 1999, 2007 ஆகிய ஆண்டுகளில் இருமுறை பல அத்தியாயங்கள் எழுதிப்பார்த்தாலும் நிறைவு தோன்றாமல் அவற்றை தொடரவில்லை. 2013 டிசம்பர் 25 அன்று உருவான ஓர் அக எழுச்சியால் எழுத தொடங்கினார். எழுத தொடங்கிய பின்னரும் தொடர்ந்து நாவலுக்குத் தொடர்புடைய இடங்களுக்கும், உணர்வுரீதியாக அதனுடன் இணையும் இடங்களுக்கும் பயணம் செய்துகொண்டிருந்தார்.

சுதா ஸ்ரீனிவாசன் தம்பதியருக்கு வாசகர்கள் மரியாதை செய்தபோது

உருவாக்கம்

வெண்முரசு நாவல் எழுதப்பட்ட ஏழாண்டு காலமும் ஒவ்வொரு நாளும் அதை பிழைதிருத்தி, தகவல்களைச் சரிபார்த்து உதவிய சுதா, ஆனந்த் ஸ்ரீனிவாசன் தம்பதிகளை வெண்முரசின் இணையாசிரியர்களாகவே ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

அமைப்பு,நடை

வெண்முரசு மகாபாரதக் கதையின் விரிவாக்கமும் மறுஆக்கமும் ஒருசேர அமைந்த நவீன நாவல்தொடர். நவீன இலக்கியத்திற்குரிய வடிவ உத்திகளையும் மொழிநடையையும் கொண்டு எழுதப்பட்ட படைப்பு இது. வெண்முரசு நாவல் வரிசையின் ஒவ்வொரு நூலுக்கும் அதற்குரிய தனியான நாவல் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ராதையின் வழியாக கிருஷ்ணனின் இளமையைச் சொல்லும் நாவல் நீலம். கிருஷ்ணனின் எட்டு மனைவியரின் கதை என்னும் அமைப்பு கொண்டது இந்திரநீலம். அர்ஜுனன் பாசுபதம் தேடிச்சென்ற பயணத்தின் கதையை வியாசருக்கு மாணவர்களாக செல்லும் நான்குபேர் வழியாக சொல்லும் அமைப்பு கொண்டது கிராதம். பாண்டவர்களின் காட்டுவாழ்க்கை வழியாக உபநிடதங்கள் தோன்றிய களத்தை விவரிப்பது சொல்வளர்காடு. கல்யாண சௌகந்திக மலருக்காக பீமன் செய்யும் பயணம் வழியாக மகாபாரதத்திலுள்ள அனைத்து அரசியரின் கதைகளையும் சொல்லும் கட்டமைப்பு கொண்டது மாமலர்.

இந்நாவல் செவ்வியல்தன்மையை தன் அடிப்படை அழகியலாகக் கொண்டுள்ளது. இருந்தபோதிலும் தர்க்கபூர்வமான யதார்த்தவாதச் சித்தரிப்பை மையப்போக்காகக் கையாண்டிருக்கிறது. கதைமாந்தரின் அகம் செயல்படும் தன்மையும், கதைநிகழ்வுகளும், கதைச்சூழலும் விரிவான யதார்த்தவாத கதைசொல்லல் முறைப்படி கூறப்படுகின்றன. அந்த யதார்த்தப்பரப்பு தொடர்ச்சியாக பாணர்களும், தனிநபர்களும் சொல்லும் ஊடுகதைகள் வழியாக உடைத்து விரிக்கப்பட்டு இதன் செவ்வியல் விரிவு உருவாகிறது. இந்திய மரபிலுள்ள ஏறத்தாழ எல்லா தொன்மங்களும் புராணக்கதைகளும் இந்நாவலில் கவித்துவமாகவும் குறியீட்டு ரீதியிலும் விரிவாக்கமும் மறுஆக்கமும் செய்யப்பட்டு முன்வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பார்வைக்கும் எதிர்பார்வை அளிக்கப்படுகிறது. தொடர்ச்சியான ஒரு அறிவார்ந்த விவாதமும் , கவித்துவமான உள்விரிவும் நிகழ்ந்தபடியே உள்ளது

மகாபாரதத்தில் உள்ள மாயத்தன்மையை இந்நாவல் தவிர்க்கவில்லை. அவை உளமயக்கு நிலைகள், வெவ்வேறு வகையான அகக்காட்சிகள் வழியாக நாவலுக்குள் வருகின்றன. அவை தொன்மையான பண்பாட்டின் வெளிப்பாடுகளாகவும் ஆழ்படிமங்களாகவும் கையாளப்பட்டுள்ளன. கூடவே அதீத மனிதர்கள், பேசும் விலங்குகள், மிகையான சாகசங்கள் ஆகியவற்றைக் கொண்ட புனைவுலகும் இக்கதைப்பரப்புக்குள் ஓடுகிறது. விளைவாக செவ்வியலுக்குரிய கலவையான தொகுப்புவடிவம் இந்நாவலில் உள்ளது.

இந்நாவல்தொடர் முற்றிலும் தனித்தமிழில் எழுதப்பட்டுள்ளது. மிக அரிதாகவே சம்ஸ்கிருதச் சொற்கள் வருகின்றன, ஏராளமான அடிப்படை சம்ஸ்கிருதச் சொற்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. சில சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழ்உச்சரிப்புக்காக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. தனித்தமிழில் எழுதப்பட்ட தமிழ் நூல்களில் இதுவே பெரியது.மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய தமிழ்ச்சொற்கள் மரபில் இருந்து உருவாக்கப்பட்டு இந்நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாவல் பரவலாக வாசிக்கப்பட்டமையால் அவற்றில் பல சொற்களும், சொல்லிணைவுகளும் பொதுமொழியில் கலந்து புழக்கத்திலும் உள்ளன.

வெண்முரசு தனக்கான ஒரு புனைவுநடையை உருவாக்கிக் கொண்டுள்ளது. நாவலின் செவ்வியல்தன்மைக்குரிய அந்த மொழி நீலம் போன்ற நாவல்களில் பாவியல்பு கொண்டதாகவும் மழைப்பாடல் போன்ற நாவல்களில் துல்லியமான புறவுலகச் சித்தரிப்பை அளிப்பதாகவும், சொல்வளர்காடு, இமைக்கணம் போன்ற நாவல்களில் தத்துவ விவாதங்களை நிகழ்த்துவதாகவும், தேவையான இடங்களில் பகடியாகவும் குழந்தைக்கதையாகவும் உருமாறி வருகிறது.

மையப்பார்வை

வரலாறு, தத்துவம் சார்ந்த அனைத்து நாவல்களிலும் சீராக வளர்ந்து விரியும் மையப்பார்வையை இந்நாவல்தொடரும் கொண்டுள்ளது. வரலாற்றுப்பார்வையில் இது பதினாறு ஜனபதங்களாகவும் பின்னர் ஐம்பத்தாறு நாடுகளாகவும் வகுக்கப்பட்டு ஷத்ரிய அரசகுடிகளால் ஆளப்பட்டு வந்த பழைய ஆரியவர்த்தம் என்னும் அரசுகளுக்கும், கடல்வணிகத்தாலும் சாலை வணிகத்தாலும் புதியதாக உருவாகி வந்த துவாரகை முதலிய நாடுகளுக்கும் இடையேயான மோதலின் சித்திரமாக மகாபாரதப் போரை அணுகுகிறது. அசுரர்கள், நிஷாதர்கள் உள்ளிட்ட பழங்குடிகள் முழுக்க யாதவப்பின்புலம் கொண்ட பாண்டவர்கள் பின் அணிவகுக்க ,க்ஷத்ரிய அரசுகள் பெரும்பாலும் கௌரவர்கள் பின் நிலைகொள்ள மகாபாரதப் போர் நிகழ்ந்ததாக விவரிக்கிறது.

தத்துவக் கண்ணோட்டத்தில் இது சடங்குகள் சார்ந்த பழைய வேதமரபுக்கும், அதிலிருந்து கிளைத்து வளர்ந்த அறிவார்ந்த வேதாந்த மரபுக்குமான போராக மகாபாரதக் களத்தைச் சித்தரிக்கிறது. வேதங்கள் சடங்குகள் வழியாக உருவாக்கிய அதிகாரமே பழைய மன்னர்களுடையது. வேதாந்தம் அதன் தத்துவார்த்தமான தொகுப்புத்தன்மை வழியாக இந்தியாவிலுள்ள அனைத்து குடிகளையும் இணைத்து புதிய அதிகாரத்தை உருவாக்குகிறது. இந்தியாவின் அத்தனை மெய்ஞானத்தையும் இணைத்துக்கொண்டு ஒரு புதிய காலகட்டத்தை தொடங்கி வைக்கும் இந்த புதுயுகத்தின் பிறப்பை உருவாக்கியவர் கிருஷ்ணன். மகாபாரதப்போர் பழைய யுகம் முடிந்து புதிய யுகம் பிறப்பதன் விளைவு. அதன்பின்னர் உருவான இந்தியா என்பது வேதாந்தத்தின் மையத்தரிசனத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பலநூறு மெய்யியல்களும் மதவழிபாடுகளும் அடங்கிய பொதுவான அமைப்பு. அதுவே இந்துமதம் எனப்படுகிறது.

இலக்கிய இடம்

இந்தியப் புனைவு இலக்கியங்களில் மகாபாரதம் முதன்மையான கவனம் பெறுவது. வியாசர் எழுதிய ஜய என்னும் காவியம் அவருடைய மாணவர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது. காளிதாசன் தொடங்கி நவீன எழுத்தாளர்கள் வரை மகாபாரதத்தை வெவ்வேறு வடிவில், மொழியில் ஏராளமானவர்கள் எழுதியுள்ளனர். நவீன இலக்கியம் மகாபாரதத்தின் வெவ்வேறு பகுதிகளை எடுத்துக்கொண்டு அவற்றின்மேல் சமகாலம் சார்ந்த ஒழுக்கக் கேள்விகளையோ ,அரசியல் கேள்விகளையோ முன்வைப்பதையே பொதுவாகச் செய்து வருகிறது. மகாபாரதத்தின் கதைமாந்தர்களையே நவீன இலக்கியம் எடுத்துக்கொள்கிறது, அவர்களை நவீனகாலகட்டத்தின் பார்வையில் மறுபுனைவுசெய்கிறது.

வெண்முரசு ஒட்டுமொத்த மகாபாரதத்தையே மறுஆக்கம் செய்கிறது. மகாபாரதம் நிகழ்ந்த வரலாற்றுச் சூழல், மகாபாரதம் நிகழ்ந்த காலகட்டத்தின் நிலவியல், மகாபாரத கால அரசியல் என அனைத்தையும் மிக விரிவாக விவரிக்கிறது. அந்தக் களத்தில் வைத்து மகாபாரதத்தின் அடிப்படையான தத்துவக் கேள்வியை முழுமையாக ஆராய்கிறது. அதற்கு மகாபாரதத்தின் தொன்மங்களையும், ஆழ்படிமங்களையும், குறியீடுகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. மகாபாரதத்திலுள்ள இடைவெளிகளை புனைவால் நிரப்பிக் கொள்கிறது. மகாபாரதத்தின் தத்துவப்பார்வையை உபநிடதங்கள் மற்றும் பிற புராணங்களின் உதவியால் முழுமையாக்கிக்கொள்கிறது. மகாபாரதத்தின் மையம் வேதமரபுக்கும் வேதாந்தத்துக்குமான போராட்டம், அதன் விளைகனியே கீதை என்னும் பார்வையில் ஒட்டுமொத்த மகாபாரதத்தையும் மறுஆக்கம் செய்கிறது.

மகாபாரதத்திலுள்ள அத்தனை கதைமாந்தர்களையும் முழுமைப்படுத்திச் சித்தரிக்கிறது வெண்முரசு. மகாபாரதத்தில் மிகக்குறைவாகவே காட்டப்படும் பாண்டு, விசித்திரவீரியன் போன்ற கதாபாத்திரங்களை முழுமையான ஆளுமைகளாக அவர்களின் குணச்சித்திரச் சிக்கல்களுடன் விவரிக்கிறது. மகாபாரதத்தில் பெயர் மட்டுமே சொல்லப்பட்டுள்ள பெண் கதாபாத்திரங்களை முழுமையாக புனைந்து உருவாக்கி காட்டுகிறது. மகாபாரதம் வீரயுகப் புனைவின் கூறுகளை அதிகமாகக் கொண்டிருப்பது. அதில் பெண்கள், விளிம்புநிலையாளர்கள், தோற்கடிக்கப்பட்டோர் அதிகமாகப் பேசப்படுவதில்லை. வெண்முரசு அவர்கள் அனைவரையும் புனைவுக்குள் நிகரான முக்கியத்துவத்துடன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

வேதங்களின் வேர்கள் கருங்கடல் பகுதியில் தொடங்குவதில் இருந்து, வேதாந்தமரபு உபநிடதங்கள் வழியாக உருவாகி வருவதையும், இணையான முக்கியத்துவத்துடன் இந்தியநிலத்தின் தொன்மையான தரிசனங்களான சைவம் முதலியவை அவற்றுடன் உரையாடி இணைவதையும், சமணம் முதலியவை கிளைத்து உருவாவதையும், பலநூறு பழங்குடி வழிபாடுகள் ஒன்றாக ஆகிக்கொண்டே இருப்பதையும் மிகவிரிந்த களத்தில் வெண்முரசு சித்தரிக்கிறது. புனைவுத்தன்மையுடன் இவை சொல்லப்படுவதனால் முழுமையான ஒரு மொழிக்களமாக, கதைப்பரப்பாக, தத்துவவெளியாக நாவலுக்குரிய வடிவத்தில் வெண்முரசு அமைந்திருக்கிறது .

'வெண்முரசு’ நாவல்- நூல் வரிசைகள்

1. முதற்கனல்

அஸ்தினபுரியின் அரசனாகப் பொறுப்பேற்கவிருக்கும் விசித்திரவீரியனுக்காகக் காசிநாட்டு இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவரையும் பீஷ்மர் சிறையெடுத்து வருகிறார். விசித்திரவீரியனின் இறப்பும் பீஷ்மரை அம்பை சபிப்பதும் அம்பிகைக்குத் திருதராஷ்டிரரும் அம்பாலிகைக்குப் பாண்டுவும் பிறப்பது வரையிலான நிகழ்வுகள் 'முதற்கனல்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் முதல் நூலான முதற்கனலில் இடம்பெறுகின்றன. மகாபாரதப்போர் என்னும் காட்டுநெருப்பின் முதல் தீப்பொறி இந்நாவலில் சொல்லப்படுகிறது.

2. மழைப்பாடல்

திருதராஷ்டிரர் காந்தாரியை மணமுடிப்பதும் குந்தி பாண்டுவை மணப்பதும் இந்த நாவலில் இடம்பெறுகின்றன. பாண்டுவை மணப்பதற்கு முன் குந்திக்கு கர்ணன் பிறப்பதும் மணமுடித்த பின்னர் குந்திக்கு யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ஆகியோர் பிறப்பதும் மாத்ரிக்கு நகுல சகதேவர்கள் பிறப்பதும் திருதராஷ்டிரருக்கு துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் பிறப்பதும் நாவலில் வருகின்றன. பாண்டுவுடன் வனவாசம் சென்ற குந்தி சிறுவர்களான பாண்டவர்களை அழைத்துக்கொண்டு அஸ்தினபுரி வருவதுடன் 'மழைப்பாடல்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் இரண்டாம் பகுதி நிறைவு பெறுகிறது. மகாபாரத கால அரசியலின் அடிப்படைச் சித்திரம் அளிக்கப்படுகிறது.

3. வண்ணக்கடல்

'இளநாகன்’ என்ற தமிழகப் பாணனின் பார்வைக் கோணத்தில் விரிகிறது, 'வெண்முரசு’ நாவலின் மூன்றாம் பகுதியாகிய இந்த 'வண்ணக்கடல்’. இதில் பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகியோரின் இளமைக்காலம் சித்தரிக்கப்பட்டுள்ளது. துரோணரை துருபதன் வஞ்சிக்கிறார். துரோணர் அர்ஜுனனுக்கு ஆசிரியராவதும் கௌரவர்கள் பீமனுக்கு நஞ்சூட்டுவதும் இந்த நாவலில் நிகழ்கின்றன. மகாபாரதப் போரின் அடிப்படையாக அமைந்த பகைமை உணர்வுகள் உருவாகும் புள்ளிகளைப் பேசும் கதைக்களம் இது.

4. நீலம்

'வெண்முரசு’ நாவலின் நான்காம் பகுதியாகிய 'நீலம்’ மகாபாரத வரிசையில் இருந்து விலகி, பாகவத மறு ஆக்கமாக அமைகிறது. கிருஷ்ணனின் இளமைக் காலத்தை ராதையின் வழியாகச் சொல்கிறது. கவித்துமான நடை கொண்ட ஆக்கம். 'ராதாமாதவ’ மனநிலையைக் கொண்டாடும் பகுதி இது.

5. பிரயாகை

துரோணரின் ஆணைக்கிணங்க பாண்டவர்களும் கௌரவர்களும் துருபதனை வென்று, சிறைப்பிடிக்கின்றனர். கிருஷ்ணன் தன் நாட்டினை மீட்பதற்காகத் தன் அத்தையான குந்தியிடம் உதவி கேட்டு வருகிறான். துருபதன் தவம் இயற்றி திரௌபதியைப் பெறுகிறார். பாண்டவர்களை எரித்துக் கொல்ல வாரணவதத்தில் கௌரவர்கள் அரக்கு மாளிகையை அமைக்கின்றனர். அங்கிருந்து தப்பிச்செல்லும் பாண்டவர்கள் இடும்பவனத்திற்குள் நுழைகின்றனர். அங்குப் பீமன் இடும்பியை மணக்கிறான். திரௌபதியைப் பாண்டவர்கள் மணமுடிப்பதுடன் 'பிரயாகை’ என்ற 'வெண்முரசு’ நாவலின் ஐந்தாம் பகுதி நிறைவுறுகிறது. மகாபாரதத்தின் நாயகினான திரௌபதியைக் காட்டும் நாவல்.

6. வெண்முகில் நகரம்

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பகை முற்றுகிறது. அவர்களுக்கு இடையேயான பிரிவினை முற்றி 'இந்திரபிரஸ்தம்’ என்ற நகரை பாண்டவர்கள் அமைக்கின்றனர். அந்த நகரைப் பற்றியும் கிருஷ்ணனின் துவாரகை நகரைக் குறித்தும் 'வெண்முகில் நகரம்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் ஆறாம் பகுதி விரிவாகக் கூறுகிறது. இந்திரப்பிரஸ்தம் உருவாவதும், மகாபாரதத்தின் மோதல் மையம் கொள்வதும் இந்நாவலில் உள்ளது.

7. இந்திரநீலம்

இந்த நாவலும் நீலத்தைப் போலவே மகாபாரதக் கதையின் மையத்தை விட்டு விலகி கிருஷ்ணன் மணமுடிக்கும் எட்டு அரசியர்களைப் பற்றி விரிவாக உரைக்கிறது. வெண்முரசு தொடர் நாவல் முழுவதிலுமே கிருஷ்ணர் (இளைய யாதவர்)தான் மையமாக இருக்கிறார் என்றாலும்கூட 'நீலம்’, 'இந்திரநீலம்’ ஆகிய நாவல்களில் முழுவதுமாக அவரே இருக்கிறார். நீலத்தில் மாய கிருஷ்ணன்; இந்திர நீலத்தில் மானுட கிருஷ்ணன். அந்த வகையில் 'இந்திரநீலம்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் ஏழாம் பகுதி மகாபாரதத்தை எட்டிநின்று தொடுகிறது. மகாபாரதப் போரின் அடிப்படையாக அமைந்தது கிருஷ்ணனின் தொகுப்பு-சமரசப் பார்வைக்கும் பழைய க்ஷத்ரியர்களின் ஆதிக்கப்பார்வைக்குமான முரண்பாடு. கிருஷ்ணன் தன் தொகுப்பு -சமரசப் பார்வையை உருவாக்கிக்கொள்ளும் சித்திரம் இந்நாவலில் உள்ளது.

8. காண்டீபம்

இந்திரபிரஸ்தம் அமைக்கப்பட்ட பின்னர் அர்ஜுனன் யாத்திரை மேற்கொள்வதை 'காண்டீபம்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் எட்டாம் பகுதி விவரிக்கிறது. உலூபி, சித்ராங்கதை ஆகியோரை அர்ஜுனன் மணப்பதையும் கிருஷ்ணனின் தங்கையான சுபத்திரையை மணப்பதையும் விளக்கி நிறைவடைகிறது. சமண சமயத்தின் தோற்றம் குறித்த சித்தரிப்புகள் இந்தப் பகுதியில் உள்ளன. இது மகாபாரதக் காலகட்ட பாரதத்தின் பொதுச்சித்திரத்தை விரிவாகக் காட்டுகிறது

9. வெய்யோன்

கர்ணனின் அங்கதேசத்தையும் அவன் மனைவியருடனான அவல வாழ்வு குறித்தும் 'வெய்யோன்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் ஒன்பதாம் பகுதி பேசுகிறது. துரியோதனன் இந்திரபிரஸ்தத்தின் பளிங்கு மாளிகையில் மனத்தடுமாற்றம் கொள்வதும் அவன் பாண்டவர்களின் மீது வஞ்சம் கொள்வதும் இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன.

10. பன்னிரு படைக்களம்

சேதிநாட்டு அரசன் சிசுபாலன் கிருஷ்ணராலும் மகதத்தின் அரசன் ஜராசந்தன் பீமனாலும் கொல்லப்படுவதைச் சொல்கிறது 'பன்னிரு படைக்களம்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் பத்தாம் பகுதி. யுதிஷ்டிரன் நாற்கள விளையாட்டில் இந்திரபிரஸ்தத்தை இழக்கிறார். திரௌபதியின் துகிலுரிதலுடன் இந்தப் பகுதி நிறைவு பெறுகிறது.

11. சொல்வளர்காடு

பாண்டவர்களின் வனவாசத்தின் தொடக்கத்தைச் சொல்லும் நாவல் இது. நச்சுப் பொய்கையில் நீரருந்தி பாண்டவர்கள் மாண்டு, பிழைப்பது, யுதிஷ்டிரன் தன் மெய்மையைக் கண்டடைவதுடன் 'சொல்வளர்காடு’ என்ற 'வெண்முரசு’ நாவலின் 11-ம் பகுதி நிறைவுகொள்கிறது. உபநிடதங்கள் உருவாகி வந்த சித்திரம் இந்நாவலில் உள்ளது.

12. கிராதம்

இந்திரனுக்கும் விருத்திரனுக்குமான போரினை ஓர் இழையாகவும் சைவ நெறிகளை மறு இழையாகவும் 'கிராதம்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் 12-ம் பகுதி நுட்பமாகப் பின்னுகிறது. அர்ஜுனன் பாசுபதத்தை அடைவதுடன் இந்தப் பகுதி நிறைவு பெறுகிறது. இந்தியாவின் தொல்வழிபாட்டுமுறைகள், சைவம் பற்றி இந்நாவல் பேசுகிறது.

13. மாமலர்

பீமன் திரௌபதிக்காகக் கல்யாண சௌகந்திக மலரைத் தேடிச் செல்லும் பயணம் 'மாமலர்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் 13-ம் பகுதியில் உள்ளது. அந்தப் பயணத்திற்கு இணையாக யயாதியின் கதை தேவயானி, சர்மிஷ்டை ஆகியோரின் வழியாகச் சொல்லப்படுகிறது. மகாபாரதத்தின் முக்கியமான அரசியர் கதைகள் இந்த நாவலில் பேசப்படுகின்றன.

14. நீர்க்கோலம்

பாண்டவர்களும் திரௌபதியும் விராட தேசத்தில் தலைமறைவாக வாழ்வதை இந்தப் பகுதி சித்தரிக்கிறது. அந்தத் தலைமறைவு வாழ்க்கைக்கு இணையாக நளன், தமயந்தியின் கதை சொல்லப்படுகிறது. பக்க எண்ணிக்கையில் 'நீர்க்கோலம்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் 14-ம் பகுதிதான் பெரியது.

15. எழுதழல்

உப பாண்டவர்கள், உப கௌரவர்கள் ஆகியோரைப் பற்றிய சித்தரிப்புகள் 'எழுதழல்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் 15-ம் பகுதியில் இடம்பெறுகின்றன. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமான பகை மிகவும் முற்றிவிடுகிறது. அந்தப் பகை அவர்களைப் போரை நோக்கி, இட்டுச் செல்லும் சூழல்கள் இந்த நாவலில் விவரிக்கப்படுகின்றன.

16. குருதிச்சாரல்

போரினைத் தடுப்பதற்காகப் பாண்டவர்கள் சார்பில் கிருஷ்ணன் (இளைய யாதவர்) துரியோதனனிடம் தூது சென்றதைப் பற்றி விரிவாகக் கூறுகிறது 'குருதிச்சாரல்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் 16-ம் பகுதி. இந்தத் தூதுப் பயணத்தகவல்கள் அனைத்தும் பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகியோரின் மனைவியர் வழியாகவே சொல்லப்படுகின்றன.

17. இமைக்கணம்

'இமைக்கணம்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் 17-ம் பகுதி கீதையின் மறு ஆக்கம். மகாபாரத மாந்தர்கள் ஒவ்வொருவரின் வழியாகக் கீதையின் ஒவ்வொரு யோகங்களும் விவரிக்கப்படுகின்றன. கீதையைப் போலவே இந்த நாவலும் ஒரு மாயவெளியில் நடைபெறுகிறது. புராண மாந்தரும், மகாபாரதத்தின் முதன்மை கதைமாந்தர்களும் இளைய யாதவனான கிருஷ்ணனை தனிமையில் சந்தித்து உரையாடும் விதமாக இந்த நாவல் அமைந்துள்ளது.

18. செந்நா வேங்கை

குருஷேத்திரப்போர் நடைபெறுவது உறுதியான பின்னர், பாண்டவர்களும் கௌரவர்களும் தத்தமது தரப்புக்கு வலுசேர்த்துக் கொள்வதற்காக ஈடுபடும் பேரங்கள் 'செந்நாவேங்கை’ என்ற 'வெண்முரசு’ நாவலின் 18-ம் பகுதியில் இடம்பெறுகின்றன. நாவலின் இறுதியில் குருஷேத்திரப்போர் தொடங்குகிறது.

19. திசைதேர் வெள்ளம்

குருஷேத்திரக் களத்தில் பீஷ்மர் தன் முழுத்திறனையும் வெளிப்படுத்தி, நிகழ்த்தும் அழிவுகளும் அவரது வீழ்ச்சியும் 'திசைதேர்வெள்ளம்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் 19-ம் பகுதியில் இடம்பெறுகின்றன.

20. கார்கடல்

துரோணரின் மரணம் வரையிலான குருக்ஷேத்திரப் போர் 'கார்கடல்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் 20-ம் பகுதியில் இடம்பெறுகிறது.

21. இருட்கனி

துரோணரின் மரணத்துக்குப் பின்னர், கர்ணன் கௌரவரப்படைக்குத் தலைமை ஏற்பதும் கர்ணன் அர்ஜுனனால் கொல்லப்படுவது வரையிலான நிகழ்வுகளும் 'இருட்கனி’ என்ற 'வெண்முரசு’ நாவலின் 21-ம் பகுதியில் இடம்பெறுகின்றன.

22. தீயின் எடை

துரியோதனனின் மரணமும் அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனால் பாண்டவ மைந்தர்கள் தீயிட்டுக் கொல்லப்படுவதும் இந்த நாவலில் சொல்லப்பட்டுள்ளன. 'தீயின் எடை’ என்ற 'வெண்முரசு’ நாவலின் 22-ம் பகுதியுடன் பாரதப்போர் நிறைவடைகிறது.

23. நீர்ச்சுடர்

உப பாண்டவர்கள் இறந்த பின்னர் கௌரவர்களுக்கும் தங்கள் மைந்தர்களுக்கும் நீர்க்கடன் செய்வது வரையிலான நிகழ்வுகள் 'நீர்ச்சுடர்’ என்ற 'வெண்முரசு’ நாவலின் 23-ம் பகுதியில் சொல்லப்பட்டுள்ளன.

24. களிற்றியானைநிரை

பாரதப்போரில் வெற்றிபெற்ற பின்னர் அஸ்தினபுரி மெல்ல மெல்ல தன்னிலைக்குத் திரும்புவதையும் பாரதவர்ஷத்தின் மிகப் பெரிய நாடாக அஸ்தினபுரி உருவெடுப்பதையும் 'களிற்றியானைநிரை’ என்ற 'வெண்முரசு’ நாவலின் 24-ம் பகுதி சித்தரிக்கிறது.

25. கல்பொருசிறுநுரை

கிருஷ்ணனின் மைந்தர்கள் தங்களுக்குள்ளாகப் போரிட்டு அழிவதையும் துவாரகையின் வீழ்ச்சியையும் சொல்கிறது. கிருஷ்ணரின் மரணத்துடன் 'கல்பொருசிறுநுரை’ என்ற 'வெண்முரசு’ நாவலின் 25-ம் பகுதி முடிகிறது.

26. முதலாவிண்

வெண்முரசு நாவலின் இறுதிப் பகுதி 'முதலாவிண்’. பாண்டவர்களின் வானப்பிரஸ்தத்தைச் சித்தரிக்கிறது. பக்க எண்ணிக்கையில் இந்தப் புகுதிதான் சிறியது.

பிற வடிவங்கள்

'வெண்முரசு’ நாவலின் நான்காவது பகுதி 'நீலம்’. சுபஸ்ரீ அதனை முழுவதுமாகத் தன் குரலால் ஒலிப்பதிவு செய்து, ஒலிக்கோப்பாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஷண்முகவேல் ஓவியர்

ஓவியங்கள்

வெண்முரசு ஆவணப்படம் திரையிடல் தொடர்பான விளம்பரம்

'வெண்முரசு’ நாவலின் அத்தியாயத்திற்கு ஓர் ஓவியமென முதல் பதினான்கு நாவல்களுக்கு ஷண்முகவேல் வரைந்த ஐநூறுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் புகழ்பெற்றவை. அவை இன்று இணையத்தில் பலரால் பல்வேறு வடிவங்களில் மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஓவியங்களில் ஷண்முகவேல் கதைமாந்தருக்கு தெளிவான முகங்கள் அளிக்காமல் சூழலை சித்தரிக்கும் யுத்தியை பெருமளவு கையாண்டிருக்கிறார்.

ஏ.வி. மணிகண்டன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் வாசித்து அதற்கு வரைய வேண்டிய தருணத்தை தேர்ந்தெடுத்து கொடுக்க அதை ஷண்முகவேல் ஓவியமாக தீட்டினார்.

ஆவணப்படம்,இசைக்கோவை

'வெண்முரசு’ நாவலுக்காக ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 'ஒரு நாவலுக்காக ஆவணப்படம் தயாரிப்பது’ என்பது, தமிழில் இதுவே முதல்முறை. இந்த ஆவணப்படத்தை அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படம் அமெரிக்காவின் பல நகரங்களிலும் கனடாவிலும் திரையிடப்பட்டது.

'வெண்முரசு’ நாவலுக்காக இசைக்கோவை தயாரிக்கப்பட்டுள்ளது. 'ஒரு நாவலுக்காக இசைக்கோவை தயாரிப்பது’ என்பது, தமிழில் இதுவே முதல்முறை. 'A Musical Tribute to Venmurasu' என்ற இந்த இசைக்கோவையை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்-அமெரிக்க கிளை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் இசையமைத்துள்ளார். இதில் நடிகர் கமல்ஹாசன், பாடகர்கள் ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த இசைக்கோவை வெளியிடும் நிகழ்ச்சி அக்டோபர் 9, 2021-ல் இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த இசைக்கோவையை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி பற்றிய செய்திக்குறிப்புகள் சிகாகோ Daily Herald, பிட்ஸ்பர்க் post-gazette, நியூயார்க் Buffalow News என முக்கிய பத்திரிகைகளில் வெளிவந்தன.

தொடர்பானவை

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2022, 09:25:48 IST