under review

கிராதம் (வெண்முரசு நாவலின் பகுதி - 12)

From Tamil Wiki
கிராதம் ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 12)

கிராதம்[1] ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 12) இந்திரனுக்கும் விருத்திரனுக்குமான போரினை ஓர் இழையாகவும் சைவ நெறிகளை மறு இழையாகவும் பின்னுகிறது. அர்ஜுனன் பாசுபதத்தை அடைவதுடன் இது நிறைவு பெறுகிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் 12-வது பகுதியான 'கிராதம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் அக்டோபர் 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜனவரி 2017-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் கிராதத்தை அச்சுப் பதிப்பாக வெளியிட்டது.

ஆசிரியர்

'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

வேதங்களுக்கு மாற்றாகப் புதிய வேதத்தை இளைய யாதவர் நிலைநிறுத்த விரும்புவதையும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்துத் தெய்வங்களும் ஓர் அணியில் திரள்வதையும் மையமாகக் கொண்டுள்ளது 'கிராதம்’. இதில், கிராதனாகச் சிவனும் அவன் மனைவியாகக் காளியும் இந்தக் கிராதத்தில் இடம்பெறுகின்றனர். இந்தக் கிராதத்தில் சிவன் பல்வேறு வடிவங்களில் கிராதனாக வருகிறார்.

கிராதத்தின் கதைப்பின்னல் இரண்டு பெரிய இழைகளைக் கொண்டுள்ளது. முதலாவது, இளைய யாதவருக்கு நிகர் நிற்பதற்காகவே அர்சுனன் நாற்திசைகளை வெற்றிகொண்டு, அதன் வழியாக ஒவ்வொரு திசைத் தெய்வத்திடமிருந்தும் ஒவ்வொரு மெய்மையைப் படைக்கலமாகப் பெற்றுக் கொள்வது. இரண்டாவது, புதிய வேதத்தைத் தடுக்கும்பொருட்டு இளைய யாதவருக்கு எதிராக அர்சுனனைப் போரில் நிறுத்தவே இந்திரன் முதலான அனைத்துத் தெய்வங்களும் பல்வேறு வகையில் முயற்சி செய்வது.

தர்மர் வேதமெய்மையை முற்றறிவதோடு 'சொல்வளர்காடு’ நிறைவு பெறுகிறது. அதனைத் தொடரும் இந்த கிராதத்தில், அர்ஜுனன் வேதமெய்மைகளை படைக்கலங்களாகக் கைக்கொள்ளும் விதம் விரிவாகக் காட்டப்பட்டுள்ளது. சூதர்களின் மொழியாகவும், பாணர்களின் கூற்றாகவும் அர்ஜுனனின் பயணம் நாவலில் நீள்கிறது.அர்ஜுனன் நாற்திசைத் தெய்வங்களையும் வெற்றிகொண்டு, அவற்றைக் கொண்டு போரிட்டும் கிராத சிவனை வெல்ல இயலாமல் கிராத சிவனிடம் பணிந்து திசைகளின் மையமான பாசுபதத்தைப் பெறுமிடத்தில் நாவல் முடிகிறது.

இந்தக் கிராதத்தில், பிச்சாண்டவர், வைசம்பாயனன், மகாகாளர், கண்டன், ஜைமினி, பைலன், பிரசாந்தர், பிரசண்டன் ஆகியோரின் வழிநடைப் பயணத்தின் வழியாகவே எண்ணற்ற கதைகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அவர்களின் பயணத்தில் வழியாக வெவ்வேறு வணிகப்பாதைகள், வணிகக்குழுக்கள், வணிகப் பொருட்கள், பல்வேறு பருவங்களைக் கொண்ட பெருநிலங்கள், அடர்காடுகள், பெருமலைகள் எனப் பலவற்றையும் கிராதம் விரிவாகக் காட்டுகிறது.

ஜாததேவனின் குழந்தையை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக அர்சுனன் யமலோகத்திற்குச் செல்வதும் 28 வாயில்களைக் கொண்ட 'பரிச்சேதம்’ என்பதில் அச்சமின்றி நுழைந்து, மீள்வதும் யமனிடம் இருந்து பரிசாகத் 'தண்டகை’யைப் பெற்றுக்கொள்வதும் ஜாதவேதனின் இறந்த குழந்தையின் உயிருக்கு ஈடாகத் தன் மகனின் உயிரை வைத்து, அந்தக் குழந்தையை உயிர்ப்பிப்பதும் உணர்ச்சிகரமாகக் காட்டப்பட்டுள்ளன.

பின்வரும் கதைநிகழ்வுகள் இந்தக் கிராதத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளன. விஸ்வாமித்திரனின் கொடிவழிவந்த காலவர், தன்னை இழிவு செய்த சித்தரசேனன் என்ற கந்தர்வனைக் கொல்வதற்காக இளைய யாதவரைத் தேர்கிறார். சித்தரசேனனின் மனைவி தன் கணவரைக் காத்துக்கொள்வதற்காக அர்சஜுனனைத் தேர்கிறார். ஆனால், சித்தரசேனனைக் கொல்வதாக இளைய யாதவர் வாக்களித்திருப்பதை அர்சுனன் பின்னரே அறிகிறார். வாக்களித்துவிட்டதால் அர்சஜுனன் இளைய யாதவரை எதிர்கொள்ள விழைகிறார். அஸ்வபகஷத்தில் இளைய யாதவருக்கும் அர்சுனனுக்கும் இடையே கடும்போர் நிகழ்ந்தது. ஆனால், காலவரும் கந்தர்வன் சித்ரதேசனனும் தங்களுக்குள் சமரசமானதால், அந்தப் போர் பாதியிலேயே நின்றுவிடுகிறது.

அர்ஜுனன் தன் தந்தை இந்திரனின் கோரிக்கையைப் புறக்கணித்து, எதை இழந்தாலும் தான் இளைய யாதவனுடனேயே இருப்பேன் என்று கூறுவது, ஊர்வசி தன்னை விலக்கிய அர்சுனனின் மீது தீச்சொல்லிட்டு அவனைப் பெண்ணாக்குவது, பெண்ணுருவை விரும்பி ஏற்ற அர்ஜுனன் மனத்தளவில் ராதையாக மாறி இளைய யாதவருடன் செல்ல நினைப்பது , குழந்தை உக்ரன் தெய்வ அருள்கொண்டு வியாசரின் மனவோட்டத்தில் பேசுவதும் பாடுவதும், அவனை வழிநடைப் பயணிகள் நால்வரும் 'மகாசூதன்’ என்று பாராட்டித் தம்முடன் நடைவழிப் பயணத்திற்கு அழைத்துச் செல்வாடும் என பல தருணங்கள் கிராதம் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளன.

தர்மர் தனக்கான மெய்மையை முற்றறிவதோடு 'சொல்வளர்காடு’ நிறைவு பெறுவதைப் போலவே அர்ஜுனன் தனக்கான மெய்மையை உணரும் பயணமாக கிராதம் நாவல் படைக்கப்பட்டிருக்கிறது.

கதை மாந்தர்

சிவன், இளைய யாதவர், அர்சுனன், இந்திரன், விருத்திரன் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் ஸ்ரீராமர், பாலி, சித்தரசேனன், ஊர்வசி, பார்வதி, விநாயகர்,முருகன், பிச்சாண்டவர், வைசம்பாயனன், மகாகாளர், கண்டன், ஜைமினி, பைலன், பிரசாந்தர், பிரசண்டன் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page