under review

செந்நா வேங்கை (வெண்முரசு நாவலின் பகுதி - 18)

From Tamil Wiki
செந்நா வேங்கை ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 18)

செந்நா வேங்கை[1] ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 18) குருஷேத்திரப்போர் நடைபெறுவது உறுதியான பின்னர், பாண்டவர்களும் கௌரவர்களும் தத்தமது தரப்புக்கு வலுசேர்த்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் செயல்பாடுகள் பற்றி விளக்குகிறது. இறுதியில் குருஷேத்திரப்போர் தொடங்குகிறது. 'அறநிலை’ என்று அறியப்பட்ட 'குருஷேத்திரம்’, குருதிகுடிக்கும் செந்நா வேங்கையெனக் காத்திருக்கிறது. வீரர்கள் 'தாம் இறப்போம்’ என்று எண்ணியும் துணிந்துமே அந்தப் போர்க்களத்தை நோக்கிச் செல்கின்றனர்.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் 18-வது பகுதியான 'செந்நா வேங்கை’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜூன் 2018 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் என வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 2018-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

'செந்நா வேங்கை’யைக் கிழக்கு பதிப்பகம் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது.

ஆசிரியர்

'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

கௌரவர்களின் தரப்பில் இணைந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தாம் 'அறத்திற்கு எதிராக நிற்கிறோம்’ என்பது தெரிந்திருக்கிறது. ஆனாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட காரணம் இருக்கத்தான் செய்கிறது.

துரியோதனனுடன் 'செஞ்சோற்றுக்கடன்’ என்றும் 'தோழமை’ என்றும் கர்ணனும் பூரிசிரவஸ் இணைந்திருக்க, 'அஸ்தினபுரியின் அரியணையைக் காப்பவன்’ என்ற கடமை உணர்ச்சியில் பிதாமகர் பீஷ்மரும் துரியோதனனுடன் நிலைகொள்கிறார். பிதாமகரின் வழியினைப் பின்பற்றுபவர்களாகத் துரோணரும் கிருபரும் நின்றுகொள்கிறார்கள். 'வேதத்தைக் காப்பவர்கள்’ என்ற பெயரிலும் 'இளைய யாதவர் நிலைநிறுத்த விரும்பிய புதிய வேத மெய்மையைப் புறக்கணிப்பவர்கள்’ என்ற பெயரிலும் பிற ஷத்ரியர்களும் சல்லியரும் துரியோதனனுடன் இணைந்து நிற்கிறார்கள். 'உடன்பிறந்தோர்’ என்ற நிலையில் குண்டாசி, விகர்ணன் உள்பட கௌரவர்கள் நூற்றுவரும் துரியோதனனுக்கு நிழலாகின்றனர்.

திருதராஷ்டிரருக்கும் பிரகதிக்கும் பிறந்த யுயுத்ஸு மட்டுமே இளைய யாதவர் இருக்கும் தரப்பே 'அறத்தின் தரப்பு’ என்பதை நன்கு புரிந்துகொண்டவன். அவனால் மட்டுமே முழுத் தெளிவுடன், திடமான முடிவினை எடுக்க முடிகிறது. அவன் துரியோதனனிடம் நேரடியாகவே பேசி, பாண்டவர்களின் அணியில் சேர்ந்துகொள்ள அனுமதிகேட்கிறான். அவனுக்கு உரிய அஸ்தினபுரியின் பங்கினை வழங்கி, அவனை வழியனுப்பி வைக்கவே துரியோதனன் விரும்புகிறான். துரியோதனனின் அளவற்ற பெருந்தன்மைக்கு இது ஓர் அத்தாட்சி. என்றுதான்படுகிறது.

பாண்டவர்களின் அணியில் இணைந்துள்ள நிஷாதர்களும் கிராதர்களும் அசுரர்களும் மலைக்குடிகளும் இன்னபிற குடியினர் அனைவரும் 'பெண்பழி’க்கு நிகர்செய்யவே போருக்கு வந்தவர்கள். உண்மையில், அவர்களுக்குள்தான் 'அறம்’ குருதியாக ஓடுகிறது.

அஸ்தினபுரியின் பேரமைச்சர் விதுரர் அறத்துக்கும் அறமின்மைக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில், ஏறத்தாழ துலாக்கோலின் முள்ளெனத் தன் நிலைப்பாட்டினை நிறுத்தி, இந்தப் போரை விலகியிருந்து காண்கிறார். இந்த நிலைப்பாட்டினை எடுக்க அவர் தன்னை வெறும் 'சூத குடியினன்’ என்றே கருதிக் கொள்கிறார். திருதராஷ்டிரர் தன் தம்பி விதுரரைப் போலவே இந்தப் போரிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறார். காந்தாரிக்கும் இந்தப் போரில் துளியும் விருப்பம் இல்லை. ஆனாலும், திருதராஷ்டிரர் குருஷேத்திரத்துக்குச் செல்கிறார். அங்குச் சஞ்சயனின் உதவியுடன் போர்க்காட்சிகளைக் கேட்டறிந்து, தன் உள்ளத்தால் அவற்றைக் காட்சியாக்கிக்கொள்கிறார்.

120 ஆண்டுகளுக்குப் பின்னர் பாரதவர்ஷத்தில் நிகழும் பெரும்போர் இது. ஏறத்தாழ நான்கு தலைமுறையினர். நான்கு தலைமுறையினரின் நேரடிப் பிரதிநிதியாகப் பிதாமகர் மூத்த பால்ஹிகர் வந்துநிற்கிறார். ஆண்கள் மிகுந்த பொறாமைப்படும் ஒரு கதைமாந்தராக மூத்த பால்ஹிகர் திகழ்கிறார். தன் முதுமையை மீண்டும் மீண்டும் வெல்கிறார். உடற்திறனை மீட்டெடுக்கிறார். புதிய புதிய மணவுறவுகளின் வழியாகத் தன் தலைமுறையினரைப் பெருக்குகிறார். இறுதியில் அஸ்தினபுரியில் ஹஸ்தியின் மணிமுடியை அணிகிறார். நான்கு தலைமுறையினரின் நினைவுப்பெருக்கில் திளைக்கிறார். முக்காலத்தையும் அழித்து நம் கண்முன் நிஜத்தில் நிற்கும் வாழும்தொன்மமாக இருக்கிறார் அவர்.

இந்தப் போரைத் தலைமையேற்று நடத்தும் இருபெருந்தலைவர்கள் தருமரும் துரியோதனனும் ஆவர். இருவருமே தங்களின் முதுமையை நெருங்கியவர்கள் தான். ஒவ்வொரு நாளும் இந்தப் பெரும்போருக்காகக் காத்திருந்தவர்கள்தான். ஆனால், தங்களால் முடிந்தவரைக்கும் போருக்கான நாளைத் தள்ளிவைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஒவ்வொரு நாளும் அந்தப் போரை வெவ்வேறு வகைகளில் தங்களின் ஆழ்மனத்திற்குள் நிகழ்த்திக்கொண்டே இருந்தார்கள்.

பாரதவர்ஷத்தில் வாழும் ஒவ்வொரு ஷத்ரியரும் இந்தப் போருக்காகக் காத்திருந்தனர். இந்தப் போரில் பங்கெடுக்கவும் போருக்குப் பின்னர் தங்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவும் திட்டமிட்டிருந்தனர்.

இந்தப் போர், 'பேரறத்தை நிலைநாட்டுவதற்கான போர்’ என்றே எல்லாத் தரப்பினராலும் நம்பப்பட்டது. எல்லாவகையிலும் இந்தப் போர் அதை நோக்கியே நகரத் தொடங்கியது. அதனால்தான் காந்தாரி தம் மைந்தர்களை வாழ்த்தும்போது, "அறம் வெல்க!" என்று மட்டுமே வாழ்த்துகிறார். போர்க்களத்தில் தன்னிடம் வந்து வாழ்த்துபெறும் தருமனைப் பிதாமகர் பீஷ்மர் "அறம் வெல்க!" என்றே வாழ்த்துகிறார்.

'பாரதவர்ஷத்தில் அறத்தை நிலைநாட்ட எழுந்த பெரும்போர்’ என்ற வகையில் இந்தப்போர் முக்கியத்துவம் கொள்கிறது. அதனால்தான் இந்தப் போருக்கான ஒருக்கத்தைப் பற்றி மட்டுமே எழுத்தாளர் ஜெயமோகன் இந்தச் 'செந்நா வேங்கை’யில் எழுதியுள்ளார்.

பிற மகாபாரதப் பிரதிகளில் இடம்பெற்றிருப்பதுபோல, 'ஞானக்கண் ’கொண்டு சஞ்சயன் போர்க்காட்சியைக் கண்டு, திருதராஷ்டிரருக்கு உரைப்பதுபோல இந்த 'வெண்முரசு’ நாவலில் காட்சியை அமைக்காமல், பகுத்தறிவோடு இந்தக் கதைநிகழ்வினைக் கையாண்டுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

பீதர்களிடம் பெற்ற இரண்டு ஆடிகளை ஒருங்கிணைத்து (துல்லியமான தொலைநோக்கி) வெகுதொலைவில் நடைபெறும் போர்க்காட்சியைச் சஞ்சயன் மிகத் துல்லியமாகக் கண்டு, அவற்றைத் தன் சொற்களில் தொகுத்து, திருதராஷ்டிரருக்கு உரைப்பதுபோலக் காட்சிப்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

'வெண்முரசு’ நாவல் பகுதிகளில் ஒன்றான வெண்முகில் நகரத்தில் அறிமுகமான பூரிசிரவஸ் பின்னாளில் அஸ்தினபுரியின் தூதனாகவே பாரதவர்ஷம் முழுவதும் அலைகிறான். எல்லாவிதமான இளிவரல்களுக்கும் அவன் இலக்காகிறான். ஆனாலும் அவன் மனங்கலங்குவதில்லை.

வாள்வீச்சும் சொல்வீச்சும் கொண்ட இனிய இளைஞனாகவும் (வயதானாலும்கூட) தன்குலத்தை வரலாற்றில் நிலைநிறுத்தும் வகையில் எதிர்காலவியல்நோக்கோடு செயல்புரிபவனாகவும் திகழ்கிறான். தனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் வசதிகளையும் முற்றிலும் தன்குடியினரின் பெருவளர்ச்சிக்கே செலவிடுகிறான். அவனின் உண்மை நோக்கம் இந்தச் செந்நா வேங்கையில்தான் எழுத்தாளர் ஜெயமோகனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகளாக அஸ்தினபுரியோடு நெருங்கிய தொடர்பிலிருந்த அவன் தன்னுடைய மலைநாடான, மிகச் சிறிய சிற்றரசான, பாரதவர்ஷத்தின் கண்களுக்குத் தெரியாமலிருந்த பால்ஹிக நாட்டை பெருஞ்சாலைகளை உடைய, நாகரிகம் மிக்க ஒரு வணிக நாடாக மாற்றிவிடுகிறான்.

நிகழவுள்ள பெரும்போருக்கான படைஒருக்கத்தில் தனக்கு உதவியெனத் தன்னுடைய கொடிவழியினரை அழைத்துவந்து, அவர்களுக்குப் படை யொருக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறான். பின்னர் அவர்களைப் பாதுகாப்பாகத் தன் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவைக்கிறான். தன்னுடைய மலைநாட்டின் எதிர்காலத்தைத் தன் வாழ்நாளிலேயே மாற்றியமைத்து விடுகிறான். மூத்த பால்ஹிகரை அழைத்துவந்து கௌரவப் படையினருக்குப் புத்தூக்கம் கொடுக்கிறான். உண்மையில் அவன் தன் வாழ்நாளில் பயனுறுதிகொண்ட ஒன்றைத்தான் மிகச் சரியாகச் செய்திருக்கிறான்.

அவனுடைய நோக்கங்களும் திட்டங்களும் செயல்பாடுகளும் துரியோதனனுக்குத் தெரிந்தே இருக்கின்றன. துரியோதனன் மனம் உவந்து அவற்றையெல்லாம் ஏற்கிறான். அவற்றின் பின்விளைவுகள் அனைத்தையும் அவனுக்கு அஸ்தினபுரியின் கொடையாகவே அளிக்கிறான். துரியோதனனின் விரிந்த உள்ளத்துக்குச் சான்றாகப் பால்ஹிகபுரியின் பெருவளர்ச்சியையும் நாம் சுட்டிக்காட்டலாம். துரியோதனன் தோழமையைப் பேணுபவன். அவனுக்கு மிக அருகில் இருக்கும் இரண்டு தோழமைகளுள் ஒருவர் கர்ணன்; மற்றவன் பூரிசிரவஸ்.

துரியோதனனால் பூரிசிரவஸ் நிமிர்வு கொள்வதைப் போலவே திரௌபதியால் சாத்யகி நிமிர்வுகொள்கிறார். சாத்யகியின் மகன் அசங்கனுக்குத் திருஷ்டத்யும்னனின் மகள் சௌம்யையைத் திருமணம் செய்து வைக்கிறார் திரௌபதி. ஷத்ரியகுடியில் மணவுறவு ஏற்படுகிறது. அதுவும் அரசரின் மகளோடு மணவுறவு. இதன் வழியாகச் சாத்யகியின் தலைமுறை புதிய வெளிச்சத்தை நோக்கி முன்னெட்டு வைக்கிறது. சாத்யகிக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையே உள்ள தோழமையும் இதற்கு ஒரு காரணம் எனலாம்.

இந்தச் 'செந்நா வேங்கை’ முழுவதும் போருக்கான இறுதி ஒருக்கத்தைப் பற்றியே பேசுகிறது. முதல்நாள் போரின் அழிவைப் பற்றிப் பேசி நிறைவுகொள்கிறது. போருக்கான முன்திட்டமிடல்கள், படைநகர்வுகள், பாசறை அமைப்புகள், போர் அடுமனை முதல் போர் இடுகாடு வரை அனைத்தைப் பற்றியும் மிக மிக விரிவாகவும் தெளிவாகவும் இந்தச் 'செந்நா வேங்கை’ பேசுகிறது.

கதை மாந்தர்

தர்மர், துரியோதனன், பிதாமகர் மூத்த பால்ஹிகர் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தகர்களாக இடம்பெற்றுள்ளனர். திருதராஷ்டிரர், விதுரர், சாத்யகி, பூரிசிரவஸ், திருஷ்டத்யும்னன், திரௌபதி ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாக இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page