under review

களிற்றியானை நிரை (வெண்முரசு நாவலின் பகுதி - 24)

From Tamil Wiki
களிற்றியானை நிரை ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 24)

களிற்றியானை நிரை[1] ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 24) பாரதப்போரில் வெற்றிபெற்ற பின்னர் அஸ்தினபுரி மெல்ல மெல்ல தன்னிலைக்குத் திரும்புவதையும் பாரதவர்ஷத்தின் மிகப் பெரிய நாடாக அஸ்தினபுரி உருவெடுப்பதையும் இந்தப் பகுதி சித்தரிக்கிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் 24-ம் பகுதியான களிற்றியானை நிரை எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் டிசம்பர் 2019 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு பிப்ரவரி 2020-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

ஆசிரியர்

'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

குருஷேத்திரப் போரில் பாண்டவர் – கெளரவர் தரப்பில் முற்றழிவு ஏற்பட்ட பின்னர், அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் மக்கள் யாருமின்றி வெறும் நிலங்களாக மாறின. கைவிடப்பட்ட கோட்டை, மிகக் குறைந்த பாதுகாப்பு என அந்த இரண்டு பெருநகரங்களும் பாழ்நிலங்களுக்கு ஒப்பாக மாறியிருந்தன. அவற்றை மீண்டும் பழையநிலைக்கு, பழையநிலையைவிட மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்காகப் பாண்டவர் தரப்பு முனைகிறது. பொதுமக்கள் அற்ற, பொலிவிழந்த பெருநகரைத் தொடக்கத்திலிருந்து மறுகட்டுமானம் செய்வது எப்படி? என்பதை விரிவாகக் கூறுகிறது இந்தக் களிற்றியானை நிரை. மக்கள் இன்றி நாடில்லை. பேரரசுகளுக்கு யானைகளே வலிமையான கோட்டையும் படைக்கலமுமாகும். மக்களும் யானைகளும் இல்லாத அஸ்தினபுரியை எவ்வாறு மீட்டெடுப்பது?. 'சம்வகை’ என்ற பெண்ணின் நுண்ணறிவால் அது சாத்தியமாகிறது.

நான்காம் குலத்தைச் சார்ந்த சம்வகைக்குப் பெருவாய்ப்பு கிடைக்கிறது. அவள் அஸ்தினபுரி கோட்டைக் காவல் தலைவியாகப் பொறுப்பேற்கிறாள். அஸ்தினபுரிக்குள் நுழையும் தர்மரை எதிர்கொண்டு, வாள்தாழ்த்தி வரவேற்கும் சடங்குக்கு அவளை நியமிக்கின்றனர். அஸ்தினபுரி வரலாற்றில் இந்தச் சடங்கினைச் செய்ய ஷத்ரிய பெண்களுக்குக்கூட அனுமதி அளிக்கப்பட்ட தில்லை. அந்த நிலையில், நான்காம் குலத்தைச் சார்ந்த சம்வகைக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுவது ஒரு வரலாற்றத் தருணமே என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்தக் களிற்றியானை நிரையில் சம்வகை தன் அழகால் நிமிர்வைப் பெறவில்லை. தன்னுடைய அறிவாலும் ஆளுமைத் திறத்தாலுமே நிமிர்வைப் பெற்று, உயர்ப் பதவியை அடைகிறாள். அவளை யுயுத்ஸு விரும்புவதும் அவளின் இந்த நிமிர்வைப் பார்த்துத்தான்.

அஸ்தினபுரியிலிருந்து மக்கள் புலம்பெயர்தலும் பிற நாடுகளிலிருந்தும் ஊர்களிலிருந்தும் அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்துக்கும் மக்கள் குடியேறுதலும் மக்களைக் கட்டாயக் குடியேற்றம் செய்வதும் அவர்களை அந்த நிலத்தில் நிலைத்திருக்கச் செய்ய பல்வேறு திட்டங்களை உருவாக்குதலுமாக நீள்கிறது இந்தக் 'களிற்றியானை நிரை’.

அவற்றின் ஊடாகவே, அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் மீண்டும் பழைய உருவினை அடைகின்றன. மற்றொருபுறம் அவற்றின் பழைய உருவினை முற்றிலும் மாற்றும் வகையிலும் சில திருத்தங்களைச் செய்கின்றனர். குருஷேத்திரப் போர் பற்றிய நினைவுகள் அனைத்தும் மக்களின் ஆழ்மனத்திலிருந்து அழிவதற்குரிய செயல்களையும் செய்கின்றனர். புலம்பெயர்தலும் குடியேற்றமும் இதில் அடிப்படைக் கதைத்தளமாக அமைந்துவிட்டன. குறிப்பாக, புலம்பெயர் மக்களின் மனநிலை இதில் விரிவாகக் காணமுடிகிறது.

இந்தக் களிற்றியானை நிரையில் ஆதனும் அழிசியும் நெடும்பயணிகளாக இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு அஸ்தினபுரி ஒரு பெருங்கனவு. அந்தக் கனவு நகருக்குச் செல்லும் அவர்களின் நெடும் பயணத்தின் வழியாக இந்தக் களிற்றியானை நிரை அஸ்தினபுரியின் இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து இணைத்துக் கூறியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

அஸ்தினபுரியை மீட்டெடுக்கவே அஸ்வமேதமும் ராஜசூயமும் தர்மருக்குத் தேவையாக உள்ளன. ஆட்சி, அரசியல் மாற்றங்கள் வணிக, பொருளாதார மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைகின்றன. அவற்றைப் பல்வேறு காட்சிச்சித்தரிப்புகளின் வழியாக எழுத்தாளர் இந்தக் களிற்றியானை நிரையில் கட்டியுள்ளார். மிக விரைவாகவே அஸ்தினபுரி மீண்டெழுகிறது.

பாரதவர்ஷத்தின் அதிகார மையமாக அஸ்தினபுரியை நிலைநிறுத்துவதே பாண்டவர் தரப்பினருக்கு விடுக்கப்பட்ட முதல் அறைகூவல். அதை நோக்கியே பாண்டவர்கள் முனைப்புடன் செயலாற்றுகிறார்கள். அஸ்வமேத யாகத்தின் பொருட்டு, திசைக்கு ஒருவராக நான்கு திசைகளுக்கும் வேள்விக்குதிரைகளைப் பின்தொடர்ந்து செல்கின்றனர் பாண்டவர்கள். வேள்விக்குதிரைகளைப் பின்தொடர்ந்து சென்ற தர்மரின் தம்பியர் நால்வரும் தன் அண்ணன் தர்மருக்கு நான்கு திசைகளிலிருந்தும், நான்கு விதமான அரிய பரிசுப் பொருட்களைக் கொண்டுவருகிறார்கள். அந்தப் பொருட்கள் தருமரின் அகவயமான அறஊசலாட்டத்தை மேலும் மேலும் மிகுவிக்கின்றன.

இந்தக் களிற்றியானை நிரையில் சத்யபாமையின் ஆளுமை மிகக் கூர்மையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் எடுக்கும் முன்முடிவுகள் அனைத்தும் தேர்ந்த ராஜதந்திரிக்குரியனவாகவே இருக்கின்றன. அபிமன்யூவின் மகனைக் காக்கும் பொறுப்பில் அவர் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்பாடுகளும் அவரை நம் மனத்தில் உயர்த்தி நிறுத்துகின்றன. அதனால்தான் சாரிகர் நிகரற்ற பேரரசிகளின் வரிசையில் சத்யபாமையை நிறுத்துகிறார்.

அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் மெல்ல மெல்ல தன்னுடைய பழைய உருவினை அடைகின்றன.

கதை மாந்தர்

சம்வகை, சத்தியபாமை ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் யுயுத்ஸு, தர்மர், துச்சளை ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாவும் இடம்பெற்றுள்ளனர். ஆதனும் அழிசியும் ஆகியோர் நெடும் பயணியர்களாக இதில் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் பயணத்தின் வழியாக அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் மீண்டெழுதல் பற்றி வாசகருக்குக் காட்டப்படுகிறது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page