under review

நீர்க்கோலம் (வெண்முரசு நாவலின் பகுதி - 14)

From Tamil Wiki
நீர்க்கோலம் ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 14)

நீர்க்கோலம்[1] ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 14) பாண்டவர்களும் திரௌபதியும் விராட தேசத்தில் தலைமறைவாக வாழ்வதை இந்தப் பகுதி சித்தரிக்கிறது. அந்தத் தலைமறைவு வாழ்க்கைக்கு இணையாக நளன், தமயந்தியின் கதை சொல்லப்படுகிறது. பாண்டவர்களின் தலைமறைவு வாழ்க்கையை முழுமையாக விவரிக்கும் இதில் இடைவெட்டாக, நிஷத இனக்குழு மக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளன.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் 14 பகுதியான 'நீர்க்கோலம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் மே 25, 2017 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 29, 2017-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் நீர்க்கோலத்தின் அச்சுப் பதிப்பினை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

இனக்குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, பேரரசுகளாக எழ முயலும் தன்மையை 'நீர்க்கோலம்’ முழுக்கவே காணமுடிகிறது. குலக்குடிகளின் வரலாறும் பூசலும் நீர்க்கோலத்தில் நிலத்தடி வேராக, ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, முயங்கியுள்ளன.

தர்மரைப் போலவே மன்னர் நளனின் வாழ்க்கையும் அமைந்துவிட்டதை நீர்க்கோலத்தில் இணைப் பிரதியாகவே எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிச் சென்றுள்ளார். திரௌபதியைப் போலவே தமயந்தியின் வாழ்வும் இருந்ததை உணரமுடிகிறது. வெறுமனே பாண்டவர்களைப் பற்றி மட்டும் பேசாமல், நளன்-தமயந்தியின் வழியாக இந்த வாழ்வில் மானுடர்கள் தங்களின் விழைவுகளால் அடையும் நன்மையையும் தீமையையும் பற்றிய பெருஞ்சித்திரத்தை எழுத்தில் வரைந்து காட்டியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

பாண்டவர்கள் தமது தலைமறைவு வாழ்க்கையில் மாற்றுருக்கொண்டு வாழ நேர்கிறது. 'மாற்றுரு’ என்பது, 'உடலையும் உடல்மொழியையும் மாற்றிக்கொள்வது மட்டுமல்ல; உள்ளத்தையும் மாற்றிக்கொண்டு நாம் பிறிதொரு நபராக, முற்றிலும் மாறி வாழ்வதே!’ என்ற கருத்தை நீர்க்கோலத்தில் காணமுடிகிறது. பாண்டவர்கள் இந்தக் கருத்தை அடியொற்றி, தம்மை முற்றிலும் மாற்றிக் கொள்கிறார்கள். புதிய நிலம், புதிய ஆளுமை, புதிய வாழ்க்கை என அவர்கள் தங்களை அகத்திலும் புறத்திலும் மறுபுனைவுசெய்து கொள்கிறார்கள்.

அரண்மனைச் சேடியாகவும் மாயங்கள் பல அறிந்தவளாகவும் சைரந்திரி என்ற பெயரில் திரௌபதியும் சூதாட்டத்தில் வல்லவராகவும் நூல் பலகற்றவராகவும் அறிவார்ந்த சொல்லாளுமை மிக்கவராகவும் குங்கன் என்ற பெயரில் தர்மரும் அடுமனையாளராகவும் மற்போர்வீரராகவும் வலவன் என்ற பெயரில் பீமனும் நாட்டியக் கலையும் போர்க்கலையும் அறிந்த திருநங்கையாகப் பிருகந்நளை என்ற பெயரில் அர்சுனனும் குதிரைகளைப் பழக்கும் நுட்பங்கள் அறிந்த திறமைமிக்க சூதராக கிராந்திகன் என்ற பெயரில் நகுலனும் சமணப்படிவராக அரிஷ்டநேமி என்ற பெயரில் சகதேவனும் மாற்றுருக் கொள்கின்றனர். ஓர் ஆண்டுவரை கலைத்துக்கொள்ள முடியாத மாபெரும் அக, புற ஒப்பனையாகவே அவர்களுக்கு இந்த மாற்றுருக்கள் அமைந்துவிடுகின்றன. தருமர் குங்கனாக மாற்றுருவில் இருக்கும்போது, சகுனியைப் போலவே தோற்றமளிக்கிறார். அவர் உள்ளத்தாலும் சகுனியாகவே தன்னை மாற்றிக்கொள்கிறார். அந்த உளமாற்றம் அவரின் உடலிலும் வெளிப்படத் தொடங்குகிறது. சகுனியின் காலில் ஓநாய் கடித்ததால் புண் ஏற்பட்டு, அவர் காலம் முழுக்கத் தன் காலைத் தாங்கி தாங்கி எடுத்துவைத்து, வலியோடு நடக்கிறார். சகுனியைப் போலவே மனத்தளவில் மாறிவிட்ட தர்மருக்கு இதே வலியும் நிலையும் மனத்தளவில் மட்டும் ஏற்பட்டுவிடுகின்றன. அவை, புறத்தில் ஓர் அசைவாக மட்டுமே பிறருக்குத் தெரிகின்றன.

பெரும் ஆளுமைகொண்ட பெண்களின் விழைவுகள் பெரும்பாலும் ஒரேமாதிரியாகவே இருக்கின்றன. அவர்களின் ஒட்டுமொத்த விழைவுகளின் உச்சம், 'பாரதவர்ஷத்தின் மேல் இடக்காலை வைக்கவேண்டும்’ என்பதாகவே இருக்கிறது. தேவயானி, தமயந்தி, சத்தியவதி, குந்திதேவி, திரௌபதி, மாலினிதேவி வரிசையில் இனி உத்தரையும் வந்து இணைந்துவிடக் கூடும்.

நளன் - புஷ்கரன் சூதாட்ட நிகழ்வுகள் பாண்டவர் - கௌரவர் சூதாட்ட நிகழ்வினை நமக்கு நினைவூட்டிச் செல்கின்றன. நீர்க்கோலத்தில் குருதிப் பூசல் புஷ்கரன், கீசகன், பீமத்துவஜன் ஆகியோரை உள்ளடக்கியே நிகழ்கிறது. உத்தரன் துரியோதனிடமும் கர்ணனிடமும் துச்சாதனனிடமும் எதிர்நின்று அம்பை எய்து, வெற்றி பெறுகிறான்.

பீமன் வலவனாக மாற்றுருவில் இருக்கும்போது, கீசகனால் அழைத்துவரப் பட்ட ஜீமுதனிடம் மற்போரிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதுநாள் வரை களிப்போராக வலவனிடம் மற்போரிட விரும்பிய கீசகன் இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தானே மனத்தளவில் வலவனாக மாறி ஜீமுதனிடமும் பின்பு ஜீமுதனாக மாறி வலவனிடமும் போரிடுகிறான்.

நீர்க்கோலத்தில் நாகமும் நாகவிஷமும் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கதைமாந்தர்களின் உளமாற்றத்தின் போதும் உளமயக்கத்தின் போதும் உருமாற்றத்தின் போதும் (தமயந்தி முதுமையுருவைப் பெறுதல்) நீர்க்கோலத்தின் திருப்புமுனையான காட்சித் தருணங்களிலும் (கரவுக்காட்டுக் காட்சிகள்) நாகங்கள் வருகின்றன. 'கானாடல்’ என்ற தலைப்பில் அமைந்துள்ள பகுதியும் அதனைத் தொடர்ந்து வரும் சில பகுதிகளும் உளமயக்கக் கனவுகளால் மாந்தர்கள் கொள்ளும் அக எழுச்சியை வெளிப்படுத்தியுள்ளன. 'தம் உள்ளத்தின் ஆழத்தில் பதிந்தவரைக் கனவில் சந்தித்தல், விரும்பியேற்றல்’ என்ற நிலையில் அவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

'நடனக்கலை’, 'சமையற்கலை’, 'குதிரை, யானையைப் பழக்குதல் கலை’, 'இசைக்கலை’, 'நிமித்த நூற்கலை’ போன்றவற்றில் உள்ள செய்திகள் நீர்க்கோலத்தில் எழுத்தாளரின் பார்வையிலும் கதைமாந்தர்களின் பார்வையிலும் நீண்ட விவரணைகளோடு இடம்பெற்றுள்ளன.

கதை மாந்தர்

பாண்டவர்கள், திரௌபதி, நளன், தமயந்தி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் புஷ்கரன், கீசகன், பீமத்துவஜன், உத்தரன், உத்தரை ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page