under review

மழைப்பாடல் (வெண்முரசு நாவலின் இரண்டாம் பகுதி)

From Tamil Wiki
மழைப்பாடல் ('வெண்முரசு’ நாவலின் இரண்டாம் பகுதி)

மழைப்பாடல் வெண்முரசு நாவலின் இரண்டாம் நூல் [1]. திருதராஷ்டிரர் காந்தாரியை மணமுடிப்பது, குந்தி பாண்டுவை மணப்பது ஆகியனவற்றை உள்ளடக்கியது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம், மழைபெய்தபடி இருக்கும் புல்வெளியான யாதவர்நாடு. காந்தாரியும் குந்தியும் இருமுனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரும்மாண்டமான சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்தரிக்கிறது. பாண்டுவை மணப்பதற்கு முன் குந்திக்குக் கர்ணன் பிறப்பதும் மணமுடித்த பின்னர் குந்திக்கு யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ஆகியோர் பிறப்பதும் மாத்ரிக்கு நகுல சகதேவர்கள் பிறப்பதும் திருதராஷ்டிரருக்குத் துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் பிறப்பதும் இதில் இடம்பெற்றுள்ளன. பாண்டுவுடன் வனவாசம் சென்ற குந்தி சிறுவர்களான பாண்டவர்களை அழைத்துக்கொண்டு அஸ்தினபுரிக்கு வருவதுடன் 'மழைப்பாடல்’ நிறைவு பெறுகிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் இரண்டாம் பகுதியான 'மழைப்பாடல்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் பிப்ரவரி 24, 2014-ல் முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் என வெளியிடப்பட்டு மே 2014-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

மழைப்பாடலை நற்றிணை பதிப்பகம் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது. பின்னர், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது.

ஆசிரியர்

'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

பீஷ்மர், விதுரன், சகுனி என்ற மூன்று விதமான பேரறிஞர்களின் நுண்ணறிவு முனைகளும் சந்திக்கும் களமாகத்தான் 'மழைப்பாடல்’ நாவல் அமைவு கொண்டுள்ளது. தனக்கான அறத்தோடு திகழும் பீஷ்மரின் அறிவு, உளவியல் நிபுணரைப் போன்ற விதுரனின் அறிவு, சூழ்ச்சிகளாலேயே பின்னப்பட்ட வலையென உருவெடுத்த சகுனியின் அறிவு ஆகியவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு உரசிக்கொள்வது இந்நூலில் விவரிக்கப்படுகிறது.

'அஸ்தினபுரி ஒருபோதும் ஆட்டம் கண்டுவிடக் கூடாது’ என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு பீஷ்மர் தன் தரப்பை முன்வைப்பதும் . 'நீதி சார்ந்தவை மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும்’ என்ற உள்ளார்ந்த நோக்கத்துடன் விதுரன் தன் தரப்பை முன்வைப்பதும் 'தன் திட்டம் செயல்வடிவம் பெற வேண்டும்’ என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு சகுனி அஸ்தினபுரி அரசியலுக்குள் நுழைவதும் இந்த நூலில் விரிவாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த மூன்று அறிவுத்திரள்களின் நடுவில் பேரரசி சத்யவதியும் அரசியர்கள் குந்தியும் காந்தாரியும் செயல்படுவதும் இந்த நாவலின் ஒரு பகுதியாக வருகிறது. பேரரசி சத்யவதி தனக்குத் தேவையான நேரத்தில் பீஷ்மரை அஸ்தினபுரிக்குள் ஏற்பதும் தனக்குத் தேவையில்லாத சமயங்களில் பீஷ்மரை அஸ்தினபுரியைவிட்டு விலக்குவதுமாகத் தொடர்ந்து செயலாற்றுகிறார்.

திருதராஷ்டிரனுக்கு ஆளும் பொறுப்பில் இருக்கவும், காட்டுக்கு தன் மனைவியருடன் செல்லும் பாண்டுக்கு தவக்குடில் வாழ்வும் பிடித்திருக்கிறது. குந்தியின் குழந்தைகளைத் தோளில் ஏற்றிக்கொண்டு, காட்டுக்குள் நடந்து, அலைய அவரால் முடிகிறது. ஆறு ஆண்டுகளில் பாண்டுவின் உடலிலும் உள்ளத்திலும் வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகின்றன.அம்பாலிகையின் கைப்பாவையாக இருந்த பாண்டு, வனத்தில் தன்னை ஆரோக்கியமான மனிதராக உணர்ந்து மகிழ்வதும், செண்பகமலர்கள் சூழ்ந்த நிலத்தில் மாத்ரியுடன் கூடி, முழு மனிதராக மாற முடியாமல், மரணத்தைத் தழுவுவதும் இந்த நாவல் நூலின் முக்கிய நிகழ்வுகள்.

விசித்திரவீரியனை மணந்துகொள்வதற்காகக் கொண்டுவரப்பட்ட அம்பிகையும் அம்பாலிகையும் தாங்கள் சகோதரிகள் என்பதை மறந்து, தாய்-மகள் போல இணைந்து வாழ்வதும் அவர்களுக்குக் குழந்தை பிறந்த பின்னர் அந்தக் குழந்தைகளை முன்னிட்டு ஒருவருக்கொருவர் மனவிலகல் கொண்டு இருபதாண்டுகளாக முகத்துக்கு முகம் பார்த்துக்கொள்ளாமல் இருந்து, பாண்டு இறந்தவுடன் இருவரும் மீண்டும் நல்லுறவு கொண்டு, இணைந்தே வனம் புகுகின்றனர்.

'முதற்கனலி’ன் இறுதியில் அம்பை தன்னை எரித்துக்கொள்கிறாள். 'மழைப்பாடலி’ன் இறுதியில் மாத்ரி எரிபுகுகிறாள்.

கதை மாந்தர்

திருதராஷ்டிரன், பாண்டு, குந்தி, காந்தாரி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் பீஷ்மர், விதுரன், அம்பிகை, அம்பாலிகை, சகுனி, கம்சன், பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page