under review

காண்டீபம் (வெண்முரசு நாவலின் எட்டாம் பகுதி)

From Tamil Wiki
காண்டீபம் ('வெண்முரசு’ நாவலின் எட்டாம் பகுதி)

காண்டீபம்[1] ('வெண்முரசு’ நாவலின் எட்டாம் பகுதி) இந்திரபிரஸ்தம் அமைக்கப்பட்ட பின்னர் அர்ஜுனன் யாத்திரை மேற்கொள்வதை விவரிக்கிறது. அர்ஜுனன் வென்று மணந்தவர்கள் நால்வர். திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவர். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தைப் பிறிதொன்றாக உணர்கிறான். மகாபாரத அர்ஜுனன் வெறும் வில்லேந்தி அல்லன் ஞானமுழுமை அவனுக்கே சொல்லப்பட்டது. அந்த அருந்ததவத்தான் பயணத்தின் தொடக்கத்தைச் சித்தரிக்கிறது இந்த நாவல். மகாபாரதத்தின் திருப்புமுனைத் தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் தருவாயில் இந்த நாவல் நிகழ்கிறது. சமண சமயத்தின் தோற்றம் குறித்த சித்தரிப்புகள் இதில் உள்ளன.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் எட்டாம் பகுதியான 'காண்டீபம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் செப்டம்பர் 2015 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு நவம்பர் 2015-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

காண்டீபத்தைக் கிழக்கு பதிப்பகம் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது.

ஆசிரியர்

'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

கட்டமைப்பில் அர்ஜுனனுக்கும் எளிய தாசியான சுபகைக்கும் இடையிலான உறவிலிருந்து 'காண்டீபம்’ தொடக்கம் பெறுகிறது. 'காண்டீபம்’ முழுக்க முழுக்க அர்சுனனின் ஆளுமைத்திறன், அரிய மகளிரை தடைகளைக் கடந்து அவன் அடையும் விதம் ஆகியவை பற்றிப் பேசுகிறது. இதன் அமைப்பு ’வீரனின் சாகசப்பயணம்’ என்னும் செவ்வியல் கதைகளை ஒட்டியது. நாவலில் அந்தப் பயணம் வீரச்செயல்களாகவும் குறியீட்டு ரீதியிலான அகப்பயணமாகவும் ஒரே சமயத்தில் அமைந்துள்ளது.

அர்ஜுனன்-உலூபிக்கு அரவான் பிறப்பது, அர்ஜுனன் ஃபல்குனையாக மாறி சித்ராங்கதையை அடைவது, பப்ருவாகனன் கருவில் உருவாவது, சுபத்ரையை அர்ஜுனன் துவாரகையில் புகுந்து தூக்கிச் சென்று மணப்பது ஆகிய நிகழ்வுகள் இந்நாவலில் உள்ளன. அருக மதத்தின் தீர்த்தங்காரரான நேமிநாதர் இந்நாவலில் ஒரு கதைமாந்தராக வருகிறார்.

கதை மாந்தர்

அர்ஜுனன் முதன்மைக் கதைமாந்தராகவும் இளைய யாதவர், திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை, அரிஷ்டநேமி, சுபகை ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page