under review

திசைதேர் வெள்ளம் (வெண்முரசு நாவலின் பகுதி - 19)

From Tamil Wiki
திசைதேர் வெள்ளம் ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 19)

திசைதேர் வெள்ளம்[1] ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 19) குருஷேத்திரக் களத்தில் பீஷ்மர் தன் முழுத் திறனையும் வெளிப்படுத்தி, நிகழ்த்தும் அழிவுகளும் அவரது வீழ்ச்சியும் இதில் காட்டப்பட்டுள்ளன.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் 19-வது பகுதியான 'திசைதேர் வெள்ளம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் செப்டம்பர் 2018 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு நவம்பர் 2018-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு
'திசைதேர் வெள்ளம்’கிழக்கு பதிப்பகத்தால் வெளியிட்டது.

ஆசிரியர்

வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

'திசைதேர்வெள்ளம்’ முழுக்கவே குருக்ஷேத்திரப்போரைப் பற்றியதுதான். மகாபாரதப் போரில் பீஷ்மரின் தலைமையில் நிகழும் முதற்பத்துநாட்போர்தான் இதன் களம். பீஷ்மரின் அறமும் அறமீறலும் அவர் அடையும் வியக்கத்தக்க வெற்றிகளும் அவர் அடையும் வெறுக்கத்தக்க பின்னடைவுகளும் இதில் சுட்டப்பட்டுள்ளன. ஒருவகையில் பார்த்தால் திசைதேர்வெள்ளத்தின் ஒட்டுமொத்த நாயகன் 'பீஷ்மர்’ எனச் சொல்லலாம்.

திசைதேர்வெள்ளத்தின் தொடக்கத்திலேயே அம்பையும் கங்காதேவியும் அருவுருவாகப் போர்க்களத்துக்குள் நுழைவதுபோலக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். அம்பை பீஷ்மரைக் கொல்லும் நோக்கோடும் கங்காதேவி தன் மகன் பீஷ்மரைக் காக்கும் நோக்கோடும் ஒருவருக்கொருவர் போட்டியாகச் செயல்படுகின்றனர். பெருவீரர்களின் உள்ளங்களில் நுழைந்து மீள்கிறார்கள். ஒருவருக்கொருவர் சூளுரைக்கிறார்கள்.

பீஷ்மர் தனியொருவராகப் பாண்டவர்படையின் பாதியை அழித்து விடுகிறார். அவர் நடத்தும் கொலைத்தாண்டவத்தைப் பொறுக்க இயலாமல் இளைய யாதவர் தன் படையாழியை எடுக்க முயல்கிறார். அந்த அளவுக்குப் பீஷ்மரின் விற்திறம் மிளிர்கிறது.

'தனக்கு முன் ஆயுதம் ஏந்தி நிற்பவர்கள் எவரானாலும் அவர்கள் தனக்கு எதிரியே!’ என்பதில் துளியும் ஐயமின்றியுள்ளார் பீஷ்மர். அதனால்தான் அவரால் இளையோரையும் முதியோரையும் கொன்று முன்னேற முடிகிறது. இது போர்நெறிதான். பாண்டவர் தரப்பினர் பீஷ்மரின் இந்த ஐயமற்ற போக்கினை எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால், அவர்கள் 'எந்த வகையில் பீஷ்மரைக் கட்டுப்படுத்தலாம்’ என்று சிந்திப்பதிலேயே, திட்டமிடுதலிலேயே பத்துநாட்கள் கடந்துவிடுகின்றன.

பீஷ்மரின் கொலையாடலைக் கண்டு சகிக்காத பீமன் தன்னை அறமிலியாக, காட்டாளனாக அறிவித்துக்கொண்டு, தன் முழுத்திறனைக் கொண்டுக் கௌரவர்களின் படைகளை அழித்தொழிக்க முயற்சிசெய்கிறார். அனைத்து அறங்களையும் மீறி, தன்னால் இயன்றவரை கௌரவர்களையும் உபகௌரவர்களையும் கொன்றொழிக்கிறார். ஆனால், பீமனின் இந்தப் போக்கினைத் தருமர் ஒருபோதும் ஏற்கவில்லை. சிகண்டியை முன்னிறுத்திப் பீஷ்மரைக் கொல்லவேண்டும் என்று இளைய யாதவர் சூழ்ச்சி செய்யும்போது அதற்கு முதல் எதிர்ப்பினைத் தெரிவிப்பவர் பீமன்தான். ஆனால், அதற்கு முதல் ஏற்பினைத் தெரிவிப்பவர் தருமர்தான்.

திசைதேர்வெள்ளத்தில் எண்ணற்ற கொலைகளை நம் கண்முன் காட்டிச்செல்லும் எழுத்தாளர் ஜெயமோகன் அவற்றுக்கு இடைவெட்டாகவும் நாவல் பகுதியின் வாசிப்பு ஒழுக்குக்காகவும் மூன்று மணநிகழ்வுகளையும் பின்கதைச் சுருக்கமாகக் காட்டிச் சென்றுள்ளார். ஒன்று –- கலிங்க அரசியைக் கர்ணனுக்குக் கவர்ந்து வருதல். இரண்டு -– அசங்கன், சௌம்யையின் திருமணவாழ்வு. மூன்று -– கடோத்கஜன், அகிலாவதி திருமணம்.

திசைதேர்வெள்ளத்தில் அபிமன்யூவின் திறமை முழுமுற்றாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இளமைக்கே உரிய எல்லைமீறலையும் எழுத்தாளர் ஜெயமோகன் அபிமன்யூவின் செயல்கள் வழியாகக் காட்டியுள்ளார். சான்றாக, பீஷ்மரிடம் தோற்று அர்சுனன் பின்டையும்போது, அபிமன்யூ பீஷ்மரைத் துரத்திச் சென்று போரிடும் காட்சியைக் குறிப்பிடலாம்.

'பார்பாரிகன் தன்னுடன் இருந்தால் நாலு பீமனைக்கூட வெல்லலாம்’ என்ற வாய்ப்பு இருக்கும்போது, லட்சுமணன் போர்மாண்பைப் பின்பற்றி, அவனைப் போரிலிருந்து விலக்குகிறான்.

இத்தனை அழிவுகளுக்குப் பின்னர் பாண்டவர் தரப்போ அல்லது கௌரவர் தரப்போ சமாதானத்துக்கு முன்வரும் என்று இருதரப்புப் படைவீரர்களும் எதிர்பார்க்கின்றனர். நேரத்துக்கு ஏற்ப அணிமாறும் படையினரையும் அரவணைக்கும் பேருள்ளம் துரியோதனனிடம் இருக்கிறது. ஆனால், பாண்டவர் படையில் சேர்வதற்காகச் செல்லும் க்ஷேமதூர்த்தியைப் பீமன் புறக்கணிக்கிறார்.

திசைதேர்வெள்ளத்தின் இறுதியில் பீஷ்மர் களம் வீழ்கிறார். அம்பை திரௌபதியின் உடலைத் தன் வாகனமாக்கி, அதில் உட்புகுந்து, பீஷ்மரின் களவீழ்ச்சி பற்றிப் பேசுகிறார், கொண்டாடுகிறார். பீஷ்மரின் களவீழ்ச்சி பற்றிய செய்தியை யாதவப்பேரரசிக்கும் (குந்திதேவி) பாஞ்சாலத்து அரசிக்கும் (திரௌபதி) தெரிவிப்பதற்காகத் தூது செல்கிறார் பூரிசிரவஸ்.

சுபாகு தன் மகன் சுஜயனைக் கொன்ற அர்சுனனிடம் 'சுஜயனின் விண்வாழ்வுக்காக வேண்டிக்கொள்க’ எனக் கோருவதும் கௌரவர்கள் தங்களால் களத்தில் பெரும்புண்பட்ட அர்சுனனின் மகன் அபிமன்யூவுக்குத் தங்களின் தரப்பிலிருந்து தென்னக மருத்துவர்குழுவை அனுப்புவதும் போர்க்களத்தின் பாடிவீடுகளில் தங்கியிருக்கும் படைவீரர்களுக்கு இரவில் வந்துபோகும் கொடுங்கனவுகள் பற்றிய சித்திரங்களும் நெகிழ்வான தருணங்களாக உள்ளன.

கதை மாந்தர்

பீஷ்மர் முதன்மைக் கதைமாந்தராகவும் கர்ணன், அம்பை, பூரிசிரவஸ், அர்சுணன், சுபாகு, சுஜயன், பார்பாரிகன், லட்சுமணன், அசங்கன், திரௌபதி ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாக இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Dec-2022, 12:24:29 IST