அஜிதன்
அஜிதன் (பிறப்பு: பிப்ரவரி 28, 1993) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், நாவலாசிரியர், உதவி இயக்குனர். மேலையிசை, தத்துவம் ஆகியவற்றை கற்பிப்பவர்.
பிறப்பு, கல்வி
அஜிதன் தர்மபுரியில் பிப்ரவரி 28, 1993-ல் எழுத்தாளர்கள் ஜெயமோகன், அருண்மொழிநங்கை இணையருக்குப் பிறந்தார். தங்கை சைதன்யா. சேதுலட்சுமிபாய் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு பயின்றார். பெங்களூர், புனித ஜோசஃப் கல்லூரியில் இளங்கலை பட்டம்(சுற்றுசூழல் அறிவியல்) பெற்றார். கேரளா, காலடியிலுள்ள ஸ்ரீ சங்கரா பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
அஜிதன் தன் வாசகியாக அறிமுகமான தன்யாவை பிப்ரவரி 19, 2024-ல் திருமணம் செய்துகொண்டார். தன்யா கோவையைச் சேர்ந்தவர், கணக்கியல் துறையில் பணியில் இருக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
அஜிதனின் முதல் நாவல் 'மைத்ரி’ ஜூன் 2022-ல் வெளியானது. ஜனவரி 2023-ல் அஜிதனின் முதல் சிறுகதை ‘ஜஸ்டினும் நியாத்தீர்ப்பும்’ வல்லினம் ஜனவரி 1, 2023 இதழில் வெளியானது. தன்னுடைய ஆதர்ச எழுத்தாளர்களாக டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், பஷீர், ஜெயமோகனை குறிப்பிடுகிறார். அஜிதனின் இரண்டாவது நாவல் 'அல் கிஸா' ஜூலை 2023-ல் வெளியாகியது.
ஆவணப்படம்
- அஜிதன் எழுத்தாளர் ஜெயமோகனுக்கான 'நீர், நிலம், நெருப்பு' ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டார்.
திரைப்படம்
2017-ல் 'காப்பன்' என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இயக்குனர் மணிரத்னத்திடம் ’ஓ காதல் கண்மணி’, ’காற்று வெளியிடை’ திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். 'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குரல்பதிவு மேற்பார்வையாளராக பணியாற்றினார். சினிமாவில் ஆதர்ச இயக்குனர்களாக டெரன்ஸ் மாலிக், வெர்னர் ஹெர்சாக், ராபர்ட் ஆல்ட்மன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். வாக்னர், பீத்தோவன், மாஹ்லர் ஆதர்ச இசைக்கலைஞர்கள்.
நூல்கள்
நாவல்
- மைத்ரி[1] (2022)
- அல் கிஸா (2023)
சிறுகதைத் தொகுப்பு
- மருபூமி (2023)
இணைப்புகள்
- மைத்ரி: வலைதளம்
- காப்பான்: குறும்படம்: Youtube
- ஜெயமோகன் ஆவணப்படம்: நீர், நிலம், நெருப்பு
- பற்றுக பற்று விடற்கு: அஜிதன்: ஜெ60: சியமந்தகம் கட்டுரை
- மைத்ரி: அ.முத்துலிங்கம்: மதிப்புரை
- மைத்ரி: இயற்கையின் தெய்வீகம்: சுசித்ரா
- மைத்ரி: பேரிழிலின் சங்கமங்கள், கமலதேவி
- பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம், நவின். ஜி.எஸ்.எஸ்.வி
- பேரருளாளனின் கருணை எனும் கிஸா - நவின். ஜி.எஸ்.எஸ்.வி
- அஜிதன் ஏற்புரை: மைத்ரி
- அஜிதன் ஏற்புரை | 'மருபூமி' சிறுகதை தொகுப்பு வெளியீடு
- கொட்டுக்காளி திரைப்படம் விமர்சனம்: அஜிதன்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Sep-2022, 21:00:40 IST